Vetri Muzhakkam (Uthayanan Kadhai)

வெற்றி முழக்கம் (உதயணன் கதை)

வெற்றி முழக்கம் ஓர் அழகிய பெருங்காப்பியத்தின் உரைநடைக் கதை. ஒரு நாவலைப் போன்ற சுவையான அமைப்பும், கதை நிகழ்ச்சிகளின் திருப்பமும், இந்நெடுங்கதை எந்த மூலத்திலிருந்து உரைநடை யாக்கப்பட்டதோ அந்த மூலக் காப்பியத்திலேயே செம்மையாக அமைந்துள்ளன. நான் செய்ததெல்லாம் அவற்றை நல்ல உரை நடையில் கதையாக்கிய வேலை ஒன்று மட்டும் தான். பாஸ கவியின் சொப்பன வாசவதத்தா, கொங்கு வேளின் பெருங்கதை ஆகிய காவியங்கள் இந்தச் சுவையான கதையைக் கவிதையில் கூறுகின்றன.

- நா. பார்த்தசாரதி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

முன்னுரை

வெற்றி முழக்கம் ஓர் அழகிய பெருங்காப்பியத்தின் உரைநடைக் கதை. ஒரு நாவலைப் போன்ற சுவையான அமைப்பும், கதை நிகழ்ச்சிகளின் திருப்பமும், இந்நெடுங்கதை எந்த மூலத்திலிருந்து உரைநடை யாக்கப்பட்டதோ அந்த மூலக் காப்பியத்திலேயே செம்மையாக அமைந்துள்ளன. நான் செய்ததெல்லாம் அவற்றை நல்ல உரை நடையில் கதையாக்கிய வேலை ஒன்று மட்டும் தான்.

பாஸ கவியின் சொப்பன வாசவதத்தா, கொங்கு வேளின் பெருங்கதை ஆகிய காவியங்கள் இந்தச் சுவையான கதையைக் கவிதையில் கூறுகின்றன. இவற்றில் தமிழிலுள்ள பெருங்கதை பிற்பகுதியில் சரியாக விளக்கம் பெறாததால் டாக்டர் உ.வே.சா. ஐயரவர்கள் எழுதியுள்ள உதயணன் சரிதச் சுருக்கத்திலிருந்து குறிப்பிட்ட பகுதிக்கான கதையை, நடை மாறாமல் அப்படியே இங்கு எடுத்து அளிக்க நேர்ந்தது.

இந்தக் கதையை 'உதயணன் - வாசவதத்தை' கதை என்ற பெயரில் சொன்னால் எல்லோருக்கும் புரியும். இதில் வருகிற யூகி, உருமண்ணுவா போன்ற உதயணனின் அமைச்சர்கள் புரிந்த அரசியல் சூழ்ச்சிகள் வியப்பையும், திகைப்பையும் ஊட்டுகின்றன. யூகியின் செயல்களையும் திட்டங்களையும் இந்தக் காவியக் கதையில் படிக்கும் போது சாணக்கியனை நினைவு கூர்கிறோம். வாசவதத்தை, பதுமாபதி, மதன மஞ்சிகை முதலான சிறந்த கதைத் தலைவியர்களை இந்தப் பெருங்கதையில் கண்டு மகிழ்கிறோம். கொங்குவேள் இயற்றிய காப்பியப் பெருங்கதையில் அழகும் ஆழமும் பொருந்திய நயமான உவமைகள் நிறைய வருகின்றன. அந்த உவமைகள் யாவும் உரைநடைக் கதையான இதிலும் உரிய பகுதிகளில் இணைக்கப்பட்டிருக்கின்றன. பிற்பகுதி விளக்கமான கதை அமைப்போடு இல்லாமைக்கு மூலக் காப்பியமே காரணம். சில ஆண்டுகளுக்கு முன்பு யான் இலங்கை வார இதழ் ஒன்றில் இக் காப்பியக் கதையை உரைநடையில் எழுதி வந்தேன். இப்போது உரிய மாறுதல்களுடன் 'வெற்றி முழக்க'மாக வெளிவருகிறது.

இக் கதையின் தலைவன் உதயணனும் அவன் மகனாகிய நரவாணதத்தனும் தங்கள் வாழ்க்கையின் இறுதி நாள்களிலே போர்க்களங்களையும், எதிரிகளையும் வென்று வாகை சூடியதை மட்டும் வெற்றியாகக் கருதவில்லை. ஆனால், ஒரு காலத்தில் அந்த வெற்றிகள் தாம் ஓர் அரசனுடைய வாழ்க்கைக்குத் தேவையுள்ள மெய்யான வெற்றி என்று அவர்களும் எண்ணினார்கள்.

உலக வாழ்க்கையில் பற்றுகள் குறைந்து, மனத்தையும் ஆசைகளையும் வெற்றி கொள்வதுதான் மெய்யான வெற்றி என்று அவர்கள் இந்தக் காப்பியத்தின் இறுதியில் உணர்வதாக வருகிறது. இந்த இரண்டு வகை நோக்கிலும் இந்நூலுக்கு, 'வெற்றி முழக்கம்' என்று பேர் வைத்தது பொருத்தமானதுதான். மூன்றாவதாக இந்தக் கதையில் வரும் அரசியல் வல்லுநனாகிய யூகி, எல்லாப் பிரச்சினைகளையும் மனத்தினாலேயே வென்று நிற்கிறான் என்பதும் ஒன்று.

மிகப் பழைய காப்பியக் கதை ஒன்றினை உரைநடையில் வழங்கினோம் என்ற பெருமை, அல்லது பணிக்காக உழைக்க வாய்ப்புக் கிடைத்ததுதான் இதை எழுதியதனால் எனக்கு உண்டான பயன்.

சுவை நிறைந்த இக் காப்பியக் கதையை வாசிக்கும் பயன் பெறுகிறவர்களுக்கு வணக்கமும் அன்பும் செலுத்தி விடைபெறுகிறேன்.

நா. பார்த்தசாரதி

சென்னை

20.12.1961

1. மாய யானை

சதானிகன் கௌசாம்பி நகரத்து அரசன். வைசாலி நகரத்து அரசனாகிய சேடகராசனின் புதல்வி மிருகாபதியைச் சதானிகன் மணம் புரிந்து கொண்டான். மகளுக்கு மணம் முடித்துக் கொடுத்ததிலிருந்தே சேடகராசனுக்கு மறக்கள வேள்வியில் மனம் விருப்புக்குன்றி, அறக்கள வேள்வியில் ஆர்வம் கொண்டது. என்றும் நிலைக்கப் போகிற உண்மை, நிலையாமை ஒன்றுதான் என்பது அவன் நினைவுகளில் அடிக்கடி தோன்றிக் கொண்டே இருந்தது. அரண்மனை மேல் மாடத்தில் நின்று மேகங்கள் தவழும் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே உலாவிய மாலை நேரமொன்றில் அந்த மேகங்கள் நிலையின்றிக் கூடுவதையும், கலைவதையும் எண்ணி அவற்றைத் தன்னோடு ஒப்பிட்டுக் கொண்டான் சேடகராசன். இப்படி எதைப் பார்த்தாலும் எதைச் சிந்தித்தாலும் அதிலிருந்து நிலையாமையே அவனுக்குத் தோன்றியது. கடைசியில் ஒரு நாள், அவனுடைய மனமும் உணர்வுகளும் காம்பிலிருந்து பிரியும் வெள்ளரிப் பழம் போலப் பற்றுகளிலிருந்து கழன்றன. தன் மகளுக்குத் திருமணம் முடித்த சில ஆண்டுகளில் மன்னர் மன்னனான சேடகராசனுக்கு வாழ்க்கையின் இந்த நிலையாமை புலனாகியதனால் அவன் உள்ளம் துறவை நாடிற்று. தன் புதல்வர் பதின்மரையும் அழைத்து, ஒவ்வொருவருக்கும் தன் விருப்பத்தைக் கூறி, வைசாலி நகர ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி சேடகராசன் வேண்டினான். அவர்களுள் ஒன்பது புதல்வர்கள், தாமும் அவனைப் போலவே துறவு நாடுதலைக் கூறி ஆட்சியை மேற்கொள்ள மறுத்து விட்டனர். இறுதியில் பத்தாவது முதல்வனாகிய விக்கிரனை வற்புறுத்தி ஆட்சியை அவனிடம் ஒப்படைத்துவிட்டு, விபுமலைச் சாரலிற் சென்று சேடகராசன் துறவு பூண்டு, தவம் செய்வானாயினான். தந்தை சென்ற பின் விக்கிரன் வைசாலி நகர ஆட்சியை நடத்தத் தொடங்கினான்.

சேடக ராசன் துறந்த செய்தி, கௌசாம்பி நகரில் கணவனோடு இருந்த அவன் மகள் மிருகாபதிக்கு எட்டிற்று. அவள் தந்தையின் துறவு கேட்டு வருந்தினாள். அவள் கணவனாகிய சதானிகன் அவளைத் தேற்றினான். அப்போது மிருகாபதி (உதயணனை) கருக் கொண்டிருந்தாள். ஒருநாள் நிலா முற்றத்திலே செந்நிற மஞ்சத்தில் முற்றிலும் செந்நிறமான பூக்களால் செய்த அலங்காரத்தோடு அவள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அந் நேரத்தில், நிலா முற்றத்திற்கு மேலே வான் வழியாகப் பறந்து கொண்டிருந்த ஆற்றல் மிக்க சரபப் பரவையொன்று உறங்கும் மிருகாபதியைக் குருதி தோய்ந்த சதைத் தொகுதி என்று கருதி உணவாகுமெனத் தூக்கிச் சென்றுவிட்டது. தூக்கிச் சென்ற பறவை நல்வினை வயத்தால் சேடக முனிவர் தவம் செய்யும் விபுல மலைச் சாரலில் அவருடைய தவப்பள்ளியின் பக்கத்தில் மிருகாபதியை இறக்கி வைத்துத் தசையென்று உண்ணத் தொடங்கியது. மிருகாபதி விழித்துக் கொண்டாள். பறவை அஞ்சி ஓடிப்போயிற்று. விழித்ததும் தான் முற்றிலும் புதிய வேறு ஓர் இடத்தில் இருப்பது கண்டு திகைப்பும் வியப்பும் கொண்டு, அச்சமுற்றாள் மிருகாபதி. வான்வழியே பறவையால் தூக்கப்பெற்று வந்த களைப்பாலும் அச்சத்தாலும் வயிற்றில் கரு வேதனை மிகுதியாயிற்று. இந் நிலையில் இரவு மெல்ல கழிந்து கொண்டிருந்தது. உருக்கி வார்த்த தங்கத் திகிரி போலக் கீழ்வானில் இளங் கதிரவன் உதயமாயினான். அத்தகைய இன்ப மயமான சூரியோதய நேரத்தில் மிருகாபதி ஓர் ஆண் மகவைப் பெற்று மகிழ்ந்தாள். காலைக் கடன்களை முடிக்கத் தவப்பள்ளியிலிருந்து வெளியேறிய சேடகர் மிருகாபதியையும் குழந்தையையும் சந்திக்க நேர்ந்தது. அவள் தன் மகள் என்றுணர்ந்து, அவர் வியப்போடு அருகிற் சென்று உதவினார். அப்பால் தன் தந்தையாகிய சேடக முனிவரோடு மிருகாபதி குழந்தையுடனே வசிக்கலாயினாள். கையிற் குழந்தையோடும், கருத்தீர்ந்த உடலோய்வுடனும் இருந்த அவளுக்குச் சேடக முனிவரின் நண்பரான பிரமசுந்திர முனிவரும் அவர் மனைவி பரம சுந்தரியும் உதவி செய்து அன்புடன் பேணி வந்தனர். சூரியன் உதயமாகும் நல்ல பொழுதில் பிறந்ததால் அந்தக் குழந்தைக்கு உதயணன் என்று பெயரிட்டார் சேடகர். அவன் தன்னிகரில்லாத பெருந்தலைவனாக வளர்வான். ஆகையினால் அவனது வரலாறு வேறு பலருடைய வரலாற்றுக்கும் காரணமாக விளங்குமென்றார் சேடகர். பலருடைய வரலாற்றையும் - புகழையும் உதிக்கச் செய்வதற்கு அவன் காரணமாயிருப்பானென்றதாலும், உதயணன் என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமாயிற்றென்றார் முனிவர்.

விபுமலைச் சாரலில் அத் தவத்தோர் சூழலில் உதயணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து தக்க பருவத்தை அடைந்தான். உதயணனுக்குச் சம வயதினனாக, யூகி என்னும் புதல்வன் ஒருவன் பிரமசுந்திர முனிவருக்கு இருந்தான். உதயணனும் அவனும் இணைபிரியாத உயிர்த்தோழர்களாகி இருபெரு முனிவர்களிடமும் பல அருங்கலைகளைக் கற்றுத் தேர்ந்தனர். இருவருக்கும் வாலிபப் பருவம் வந்தது. உதயணனின் கலைத் திறனையும் மதி நுட்பத்தையும் கண்டு அவன்பால் தனி அன்பு கொண்ட பிரமசுந்திர முனிவர், அவனுக்கு இசைக் கலையின் நுட்பங்கள் பலவற்றையும் கற்பித்ததோடு, யானையின் மதத்தை அடக்கி ஆளுதற்குரிய மந்திரத்தையும் விந்தைமிக்க 'கோடபதி' என்னும் யாழையும் கொடுத்தருளினார். கோடபதியை வாசித்தால் யானை முதலிய விலங்குகள் யாவும் வாசிப்பவர் வயப்பட்டு அடங்கி, அவரிட்ட ஏவல்களைச் செய்யும். பின்பு பிரமசுந்திர முனிவர் உதயணனை வாழ்த்தித் தம் புதல்வனாகிய யூகியையும் அவனுக்கு அடைக்கலமாக அளித்துப் பயன் பெறும்படி செய்தார். யூகியும் உதயணனும் நட்பில் ஈருடலும் ஓருயிருமாயினர். இவ்வாறு இருக்கையில் ஒருநாள் காடு சென்ற உதயணனுக்குக் கோடபதி யாழால் தெய்வீக யானை ஒன்று வசப்பட்டு ஏவல் செய்யலாயிற்று. தான் அவனை விட்டு நீங்காதிருக்கக் கருதினால் மூன்று நிபந்தனைகளை மேற்கொள்ள வேண்டுமென்று ஒரு நாள் இரவு அவன் கனவில் தோன்றி அந்த யானை கூறியது. "என் மேல் பாகர்களை ஏற்றக்கூடாது. நான் உண்ணுமுன் நீ உண்ணக்கூடாது. தோல் கயிற்றைக் கொண்டு என்னைக் கட்டக்கூடாது" என்பவையே யானையின் நிபந்தனைகள்.

இங்கு இப்படி இருக்குங்கால் அரசாட்சியில் மனம் பற்றாது துறவு நெறியிற் செல்ல விரும்பிய உதயணனுடைய தாய்மாமனாகிய விக்கிரன் விபுலமலைச் சாரலுக்கு வந்தான். சேடக முனிவர் மிருகாபதி அங்கு வந்து சேர்ந்தது முதல் நிகழ்ந்தவற்றையெல்லாம் கூறி, உதயணனை விக்கிரனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சில நாள்கள் சென்றபின் விக்கிரன் முனிவர் அனுமதி பெற்று மிருகாபதி, உதயணன், யூகி இவர்களுடன் வைசாலிக்குச் சென்று உதயணனுக்கு முடி சூட்டிவிட்டுத் துறவு பூண்டான்.

இதற்குள் கௌசாம்பி நகரத்திலே நிலா முற்றத்தில் துயின்ற மனைவியைக் காணாமல் சதானிகன் பலவிடங்களிலும் தேடிப் பல்லாண்டுகளாக அவளைப் பற்றி ஒரு விவரமும் அறியாமல் குழம்பிக் கிடந்தான். இறுதியில் இரு முனிவரை அடைந்து அவர் வாயிலாக நடந்தவை எல்லாம் கேட்டு நன்கு தெளிந்தனன். அதன் பின் வைசாலி நகர் சென்று தன் புதல்வனைக் கண்டு மகிழ்ந்து, தன் மனைவியோடு இன்புற்று உறைந்தனன். மீண்டும் கௌசாம்பி சென்று சில காலம் ஆட்சி புரிந்தான். இடையிடையே உதயணனும் கௌசாம்பி போய் வருவதுண்டு. இத் தருணத்தில் உதயணனுக்குப் பிங்கலன், கடகன் என்னும் இரண்டு தம்பிகள் பிறந்தனர். சதானிகனும் வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து துறவு நிலைக்குச் செல்லவே, கௌசாம்பி நகரின் ஆட்சிப் பொறுப்பும் உதயணனுக்கு ஏற்பட்டது. உடனே உதயணன் வைசாலியின் அரசாட்சியை யூகியிடம் ஒப்பித்துவிட்டுத் தான் கௌசாம்பி சென்று ஆளுவானாயினன். தெய்வ யானையும் அவனுடைய யாழ் வாசிப்பினுக்கு அடங்கி அவனோடு சென்று இருந்து ஏவல் செய்தது. இப்போது வயந்தகன், உருமண்ணுவா, இடவகன் என்னும் வினைத்திட்பமும் மனத்திட்பமும் சிறந்த மந்திரிகள் மூவரும் உதயணனுக்கு ஏற்பட்டனர். உதயணன் புகழ் உதய சூரியனின் ஒளிபோலப் பரந்தது. மக்கள் அவனைப் போற்றிப் புகழ்ந்தனர்.

உதயணன் தன் மந்திரிகளுடனும் வீரர் சிலருடனும் ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாடும் விருப்பினனாகச் சென்றான். வேட்டையாடி முடிந்த பின் நீர் வேட்கை மிகவே அக்கம் பக்கம் உண்ண நீர் காணாது தவித்தான் உதயணன். வழி காணாது திகைத்து நீர் விடாயால் வாட்டமும் எய்தித் தெய்வமே துணை என்று ஒரு மரத்தடியில் அவனும் நண்பர்களும் சோர்ந்து விழுந்தார்கள். அப்போது குபேரனுக்குத் தொண்டு செய்யும் இயக்கர்களில் ஒருவனாகிய 'நஞ்சுகன்' என்னும் இளைஞன் தோன்றி, இனிய நீர் கொண்டு வந்து கொடுத்து அவர்களை உயிர்ப்பித்தான். அவர்கள் நீர் வேட்கை தணித்த பின், "இது போல் நீங்கள் வேண்டும் போது எல்லாம் வந்து யான் உங்கள் துயர் களைவேன்! என்னை நினைக்க ஒரு மந்திரம் உண்டு" என்று சொல்லி, அந்த மந்திரத்தை உருமண்ணுவாவிடம் கூறிவிட்டு, இயக்கன் விடைபெற்றுச் சென்றான். உதயணன் முதலியோர் அவன் செய்த உதவிக்கு நன்றி பாராட்டிவிட்டுத் திரும்பி நகரடைந்தனர். இவ்வாறிருக்கையில் ஒரு நாள் உதயணன் இசை, நாடகம், முதலிய கலைகளை அரண்மனையில் நுகர்ந்துவிட்டுப் பசி மிகுதியால் யானைக்கு உணவளிக்காது மறந்து தான் உண்டுவிட்டான். முன் யானை அவனிடம் வேண்டிய நிபந்தனைகள் 'என் மேற் பாகரை ஏற்றக்கூடாது. தோல் கயிற்றைக் கொண்டு கட்டக் கூடாது. நான் உண்ணும் முன் நீ உண்ணக்கூடாது' என்பன. இவற்றுள் ஒரு நிபந்தனையை உதயணன் கைவிட்டதால் யானை அவனை நீங்கிற்று. வழக்கம் போல் யாழ் வாசிக்கும் போது யானை வராமை கண்டு கலங்கிய உதயணனுக்குத் தன் தவறு புரிந்தது. பல இடங்களிலும் வீரர்களை அனுப்பி யானையைத் தேடினான். கோடபதி என்னும் யாழும் கையுமாகக் காடுகளில் தானே தனியாக அதனைத் தேடி அலைவானாயினான். யானையின் பிரிவு அவனை ஒரு நிலை கொள்ளும்படி விடவில்லை.

இவ்வாறு உதயணன் காடுகளில் தனியே திரியும் செய்தி உச்சயினியைத் தலைநகராகக் கொண்டு அவந்தி நாட்டை ஆண்டு வந்த பிரச்சோதன மன்னனுக்கு எட்டியது. பிரச்சோதன மன்னனுக்கு வாசவதத்தை என்ற ஒரு பெண்ணும், பாலகன் முதலிய புதல்வர் மூவரும் இருந்தனர். யானை இலக்கணத்தில் குறைபாடு இல்லாத நளகிரி என்ற பட்டத்து யானை ஒன்றை அவன் பெற்றிருந்தான். தனக்கு செலுத்த வேண்டிய கப்பத்தை ஏனைய அரசர்களெல்லாம் மறவாது செலுத்தி வரும்போது உதயணன் மாத்திரம் செலுத்தாமையைத் தன் மந்திரி சாலங்காயன் மூலம் அறிந்த பிரச்சோதனன், உதயணன்பால் பெரும்பகை கொண்டிருந்தான். அவனைச் சிறைகொள்ள ஏற்ற சமயம் எதிர் பார்த்துக் கொண்டும் இருந்தான். அப்படி இருந்த பிரச்சோதனனுக்கு உதயணன் காடுகளில் தனியே திரியும் இந்த நிலை ஒரு நல்ல வாய்ப்பல்லவா? இந்த வாய்ப்பைத் தப்பாமல் பயன்படுத்திக் கொள்ள மந்திரியோடு கலந்தாலோசித்த பிரச்சோதனன் ஒரு தந்திரமான வேலையைச் செய்தான். உண்மை யானையைப் போல் தோன்றும்படி ஒரு எந்திர யானையை மரச்சட்டம், துணி, அரக்கு முதலியவற்றால் உருவாக்கினான். அந்த எந்திர யானைக்குள் பிரச்சோதனனுடைய வீரர்கள் ஆயுதங்களணிந்து ஒளிந்திருந்தனர். யானையின் உடலுக்குள்ளும் வேறு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. காட்டில் தனியே திரியும் உதயணனுக்கு யூகி உதவி செய்ய வருவதைத் தடுப்பதற்காக, முன்னேற்பாட்டுடன் வைசாலிக்கும் ஒரு படையை அனுப்பினான் பிரச்சோதனன். படை வைசாலி நகரையடைந்ததும் யூகியோடு பெரும் போர் நிகழ்த்தியது. யூகியின் கவனம் காட்டுக்குப் போன உதயணன் பக்கம் திரும்பாமலிருக்கவே இந்தப் போர் ஏற்பாடு. பிரச்சோதனனுடைய சூழ்ச்சியில் உருவானப் போலி யானை, வீரர்களையும் வெம்படைகளையும் உட்கரந்து உதயணன் அலைந்து கொண்டிருந்த காட்டிற்கு வந்து சேர்ந்தது. அதைக் கண்ட காட்டு வேடர்கள், அதுதான் உதயணனை நீங்கிச் சென்ற தெய்வ யானையாக இருக்க வேண்டுமென்று எண்ணி உதயணனிடம் வந்து கூறினார்கள். உதயணன் அதைக் கேட்டு யாழுடன் ஓடி வந்தான். வருகையில் தீய நிமித்தங்கள் தென்பட்டதைக் கூட அவன் கவனிக்கவில்லை. போலி யானையின் முன்னின்று கோடபதியை வாசித்தான். யானை அவன் வாசிப்பதற்கு வயப்படுவது போல் பக்கத்தில் நெருங்கிற்று. உதயணன் தன்னை மறந்த பரவசத்துடன் யாழிலே ஈடுபட்ட போது யானையின் உடல் சரிந்தது. உள்ளிருந்து போர் வீரர்கள் வெளிப்பட்டனர். போர் நடந்தது. அவர்களது சூழ்ச்சிச் செயல் கண்டு உதயணன் ஏளனப் புன்முறுவல் செய்தான். உதயணனுக்கு இவ்வாறு ஏதேனும் ஆபத்து வரக்கூடாது என்று முன்பே எண்ணிப் படையுடன் மறைவாக இருந்த வயந்தகன் உதவிக்கு வந்தான். வயந்தகன் படையொடு வருதலையறிந்து யானையைப் பின் தொடர்ந்து பெரும் படையுடன் மறைந்து வந்திருந்த அவந்தி நாட்டு மந்திரி சாலங்காயன் வெளிப்பட்டான். இருவருக்கும் போர் பெரிதாயிற்று. உதயணன் அவனை வாள்முனையில் வரவேற்றான். ஆனால் மந்திரியைக் கொல்லுதல் அறமன்று என்பதற்காக அவனை விட்டுவிட்டான். இறுதியில் ஒரு யானையின் கொம்பில் பட்டு உதயணன் போரிட்ட வாள் ஒடிந்து விட்டது. அதுதான் சமயம் என்று சாலங்காயன் அவனைக் கைது செய்துவிட்டான்.

கைதான உதயணன் தந்திரமாகப் பிறர் அறியாதபடி, நிகழ்ந்தவற்றை ஓர் ஓலையில் விவரமாக எழுதி வயந்தகன் மூலமாக யூகிக்கு அனுப்பிவிட்டுப் பகையரசன் நாட்டிற்குச் சிறைப்பட்டுக் கைதியாகச் சென்றான். அரசன் பிரச்சோதனனின் ஆணைப்படி அங்கே ஓர் இருட்சிறையில் உதயணன் அடைக்கப்பட்டான். வயந்தகன் மூலமாக உதயணன் நிலையறிந்த யூகி பெருஞ்சினங் கொண்டான். சீறியெழுந்த யூகியின் சினம் ஒரு சபதமாக வெளிப்பட்டது. "தன் போலி யானையால் எங்கள் உதயணனை அகப்படுத்திய பிரச்சோதன நகரை ஓர் உண்மை யானையாலேயே அழிப்பேன். உஞ்சை நகரத்தை நெருப்பில் ஆழ்த்திவிட்டு உதயணனை மீட்பேன். உதயணனைக் கொண்டே அந்த வஞ்சக மன்னன் மகள் வாசவதத்தையை வலிந்து இங்கே கொண்டு வரச் செய்து அவனுக்கே மணம் முடிப்பேன்" என்று யூகி சபதம் செய்தான். பிறகு யூகி உதயணன் பிரிவைப் பொறுக்காமல் தான் இறந்து போயினதாக ஒரு பொய்ச் செய்தியை எங்கும் பரப்பினான். வைசாலி நகரத்தைத் தன் ஆட்களில் சிலரையும், கௌசாம்பி நகரத்தைப் பாதுகாக்க பிங்கல கடகர்களையும், ஏற்பாடு செய்தான். தான் இறந்து விட்டதாகக் கிளம்பிய பொய்யை யாவரும் நம்புவதற்காகத் தன்னைப் போல் வேடமிட்ட ஒருவனை எரித்து, அவன் பிணத்தின் எரிந்த கோலத்தைச் சுடுகாட்டிலிட்டு எல்லோரும் காணச் செய்தான். எல்லோரும் யூகி இறந்து விட்டான் என்றே நம்பி வருந்தினார்கள். யூகி தன் தோழர்கள் சிலருடன் உஞ்சை நகரத்தை அடைந்தான். தன் தோழர்களில் பலரை மாறு வேடத்துடன் பிரச்சோதனனுடைய அரண்மனையில் வேலை பார்த்து வரும்படி ஏற்பாடு செய்தான். அவர்களுக்குத் தான் செய்திருக்கும் ஏற்பாடுகளை விவரித்திருந்தான். உஞ்சை நகரத்தின் புறத்தேயிருந்த ஆள் நடமாட்டமற்ற காளிகோவில் ஒன்றில் யூகி வசித்து வந்தான். அவனுடைய திட்டங்களும் தனிமையான சிந்தனையில் அங்கேதான் உருவாயின.

யூகி இறந்தான் என்பதைக் கேட்ட பிரச்சோதனனும் அதனை உண்மை என்று நம்பி வைசாலிக்கு அனுப்பிய தன் படையை மீண்டும் வரும்படி கட்டளையிட்டான். இனிமேல் தன்னை ஏன் என்று கேட்பாரில்லை என்ற இறுமாப்பில் உதயணனுடைய நாடுகளிற் சிலவற்றையும் கைப்பற்றி ஆளத் தொடங்கினான். யூகியின் பிரிவு பிங்கல கடகர்களுக்குப் பெரிதும் துயர் கொடுத்தது.

யூகியின் சூழ்ச்சி வெற்றி பெறுவதற்கான வேலைகள் விரைவாக நிகழ்ந்தன. காளிகோவில் ஊரையொட்டி இருந்ததால் ஏதேனும் ஆபத்து வரலாம் என்று கருதிய யூகி, சற்றுத் தொலைவிலுள்ள பாகம் என்ற சிற்றூரை அடைந்து ஒரு பாழ்வீட்டில் தங்கி, வயந்தகன் முதலிய நண்பர்களோடு கலந்து ஆலோசித்தான். அந்த ஆலோசனையின் விளைவாகச் சிலர், பல்வேறு மொழிகளைக் கற்று உஞ்சை நகரக் கடை வீதிகளில் வாணிகர்களாக நடித்து ஒற்றறிந்தனர். வயந்தகன் பிரச்சோதனனுடைய குமாரர்களோடு நட்புப்பூண்டு, அவர்களோடு கல்வி கற்று வந்தான். யூகியின் ஆட்களிற் சிலர் ஊமையாகவும், செவிடாகவும் நடித்து அரண்மனையில் வேலை பார்த்து வரலாயினர். இரவு நடுயாமத்தில் வந்து யாவரும் ஒன்று கூடுவார்கள். ஏதாவது ஒரு பாழ்மண்டபம் அல்லது இடிந்து போன காளி கோவில் அவர்கள் கூடும் இடமாக அமையும். நண்பர்கள் கூடும் போதும் பிரியும் போதும் இரகசியமான சில அடையாளங்களும் சங்கேதங்களும் நடக்கும். அவரவரறிந்தவற்றை அன்றன்று வெளிப்படுத்துவார்கள். அடுத்து நடத்த வேண்டிய திட்டங்கள் உருவாகும். நண்பர் பிரிவர்.

உஞ்சையில் இவர்கள் இங்ஙனம் இருக்குங்கால், பாஞ்சால நாட்டு அரசனாகிய ஆருணி, பிங்கல கடகர்களை வென்று கௌசாம்பியைக் கைப்பற்றி ஆள ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு அஞ்சி ஓடிய பிங்கல கடகர்கள், சில வீரர்களுடன் மறைந்து வாழ்ந்தனர். ஆருணி ஏற்கனவே உதயணனின் பகைவன். அவனது சோர்வை எதிர்பார்த்து காத்திருந்தவன். அந்தச் சந்தர்ப்பம் இப்போது வகையாக வாய்த்ததால் பயன்படுத்திக் கொண்டுவிட்டான்.

உஞ்சை நகரத்தில் யூகி, உதயணனைச் சிறை மீட்பதற்காக வேண்டிய ஏற்பாடுகளை மறைமுகமாக நடத்திக் கொண்டிருந்தான். உதயணனைச் சிறையிற் போய்ச் சந்திப்பதற்காக யூகி ஒரு நாடகத்தைத் துணிந்து நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தலையில் நீர்க் கரகம், நோயுற்றவன் போன்ற தோற்றம், தெய்வ அருள் பெற்றவன் போன்ற பேச்சு, பித்தனின் கோலம் ஆகியவற்றோடு ஆடிப் பாடிக் கொண்டு நகர வீதிகளின் வழியே சென்றான் யூகி. "வானுலகிலிருந்து தேவன் ஒருவன் இந் நகருக்கு வந்துள்ளான். அவனைப் பின் தொடர்ந்து வந்த தொண்டன் யான். இவ்வூரரசன் ஐந்தலை நாகமொன்றைச் சிறை செய்திருக்கிறான். எங்கே அந்தச் சிறை?" என்று பலவகையாகப் பிதற்றிக் கொண்டு பல மக்கள் தன்னைச் சூழ்ந்து வர உதயணன் இருந்த சிறையை யூகி அணுகினான். உதயணன் தன்னை அறிந்து கொள்வதற்காக அவனும் தானும் மட்டும் அறிந்த ஒரு பாட்டை யூகி பாட, யூகி வந்துள்ளான் என உதயணன் உய்த்துணர்ந்து, ஒரு புல்லாங்குழலை ஊதித் தான் அந்தச் சிறையில் இருப்பதை யூகிக்கு அறிவித்து விட்டு, வேடிக்கைப் பார்ப்பவன் போல் சிறைக் காவலரை ஏமாற்றிவிட்டு வெளியே வந்தான். நண்பர்கள் சந்தித்தனர். குறிப்பால் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். நேரமிகுவது ஆபத்து என்பதை அறிந்த யூகி, உதயணனிடம் விடை பெற்று ஒரு பயங்கரப் பேயைப் போல நடித்து யாவரையும் அஞ்ச வைத்துத் தன் இருப்பிடம் சென்றான்.

உதயணனும் யூகியும் குறிப்பால் ஏதேதோ பேசிக் கொள்வதை நுட்பமாகக் கவனித்த சிறைக்காவலன் ஒருவனுக்குச் சந்தேகம் தோன்றியது. அவன் தன் சந்தேகத்தை அரசனிடம் தெரிவித்தான். அப்போது அரசனுக்கு அருகில் இருந்த சாலங்காயன், "ஒருவேளை வந்தவன் யூகியாக இருக்கலாம். யூகியின் மார்பில் யானைக் கொம்பு குத்திய வடு ஒன்றுண்டு. அதைக் கொண்டு உண்மையை அறியவேண்டும்" என்றான். பிரச்சோதனன் அதை அறிய வேண்டிய ஏற்பாடுகள் செய்தான். ஆனால், அரண்மனையில் நடந்த இந்த நிகழ்ச்சியையும் சாலங்காயனுடைய சந்தேகத்தையும் அங்கிருந்து ஊமைபோல் நடித்த யூகியின் ஒற்றனொருவன் உடனே யூகிக்கு தெரியச் செய்துவிட்டான். யூகி விழித்துக் கொண்டான். அன்றிலிருந்து தன் மார்பிலிருந்த வடு தெரியாதபடி மறைத்துக் கொண்டு உஞ்சையில் நடமாடத் தொடங்கினான் யூகி. ஒருநாள் நள்ளிரவு யூகி, அஞ்சத்தக்கதொரு பேய் வடிவங்கொண்டு நகருட் புகுந்து, அரசனுடைய பட்டத்து யானையான நளகிரி இருக்கும் கொட்டிலுக்குச் சென்று, ஒரு மருந்தைக் கொடுத்து, அதை மிகப் பெரிய மதவெறியடையச் செய்துவிட்டுத் திரும்பினான். மறுநாள் பொழுது விடிந்தது. நளகிரி உஞ்சை நகருக்கு நமனாயிற்று. அதன் மதத்தால் ஊர் அழிபட்டது. எதிர்ப்பட்ட மக்களைத் தன்னுடைய கொம்பில் குத்தி மாலை தொடுத்தது நளகிரி. பாகர்களால் யானையை அடக்க முடியவில்லை. இன்னும் இப்படியே சிறிது நேரம் பொறுத்தாலோ ஊர் சுடுகாடாகிப் போகும். பிரச்சோதனன் செய்வதறியாது திகைத்துப் போனான். இந்தத் தருவாயில் மந்திரி சாலங்காயன், அரசனிடம் உதயணன் பால் உள்ள கோடபதி என்னும் யாழின் சிறப்பையும், உதயணன் ஒருவனே யாழை வாசித்து நளகிரியை அடக்க முடியும் என்பதையும் கூறினான். "வஞ்சனையாற் கைப்பற்றி வன்சிறையில் அடைத்தேன். அவனிடம் போய் நான் உதவி கேட்பது எவ்வாறு?" பிரச்சோதனன் இவ்வாறு கூறி நாணினான். பின் அரசன் சம்மதம் பெற்றுச் சிவேதன் என்னும் மந்திரி, உதயணனிடம் சென்று எல்லா விவரங்களையும் கூறிப் பகைமை பாராட்டாமல் உஞ்சை நகரை யானை வாயிலிருந்து காத்தளிக்குமாறு வேண்டினான். உதயணன் அதற்கு உடன்பட்டு வெளியே வந்தான். கோடபதியின் கோலாகலமான இசை வெள்ளம், நளகிரியின் மதத்தைப் போக்கி அதனை உதயணன் அடிமையாக்கிற்று. நளகிரியின் மேலேறி மன்னன் துயர் போக்கி வந்தான் உதயணன். பிரச்சோதனன் தன் துயர் தீர்த்த தகைசால் வள்ளல் உதயணனைக் காணத் தேவியரோடும் புதல்வி வாசவதத்தையோடும் அரண்மனை முன்புறம் புலிமுக மாடத்துக்கு வந்தான்.

2. கண்கள் பேசின

உதயணன் நளகிரியை அடக்கி அதன்மேல் ஏறிக் கொண்டு தன்னைப் பார்க்க விரும்பிய பிரச்சோதனனைக் காண வந்தான். பிரச்சோதனன் உதயணன் வரவிற்காகப் புலிமுக மாடத்தில் தேவியரோடு காத்திருந்தான். அப்போது அரசிளங் குமரியாகிய வாசவதத்தையும் அங்கு இருந்தாள். யானை மேல் வந்த உதயணனை மாடத்திலிருந்து இறங்கி வந்து பிரச்சோதனன் வரவேற்றான். உதயணனும் பகைமை பாராட்டாமல் வெளிப்படையாக அவன் வரவேற்பை ஏற்றுக் கொண்டு நன்றி செலுத்தினான். பிரச்சோதனன் மனத்தில் உதயணனைப் பற்றி முன்பு இருந்த தவறான எண்ணம் மாறியது. அதற்குப் பதிலாக அந்த இடத்தில் அன்பும் இரக்கமும் குடிகொண்டன. "நளகிரியின் திடீர் மதத்திற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்?" என்று பிரச்சோதனன் வினவினான். உதயணன் அக்காரணத்தை யானை மருத்துவ நூல் முறைப்படி விரிவாக விளக்கிக் கூறினான். பிறகு பேச்சு வேறு விதமாகத் திரும்பியது. உதயணன் சமயம், கலை முதலியவைகளைப் பற்றிப் பிரச்சோதனனுக்கு ஒரு பெரிய விரிவுரையைக் நடத்த வேண்டி இருந்தது. உதயணனுடைய விரிவுரையைக் கேட்ட அவந்தி வேந்தன் மனத்துள் அவன் பருவ இளமையையும் அறிவின் முதிர்ச்சியையும் நிறுத்துப் பார்த்து மகிழ்ந்தான். உதயணன் திறமையைக் கண்டு வியந்தவன், தன் புதல்வர்களுக்கு உதயணனை வணங்கி அவனுக்குக் குற்றேவல் செய்து அவன்பாலுள்ள கலைகளைக் கற்குமாறு ஆணையிட்டான். பிரச்சோதனனுடைய கண்கள் உதயணனைப் பார்த்துக் கொண்டு இருந்த போது உதயணன் வேறு கண்கள் இரண்டின் பால் தன் கண்களைத் தூது போக்கிக் கொண்டிருந்தான். பிரச்சோதனன் யானையை அடக்கியது பற்றியும் மதத்தின் காரணம் பற்றியும் கேட்ட போது தற்செயலாக நிமிர்ந்த உதயணன், முன்பே தன் கண்களைப் புலிமுக மாடத்திலிருந்து இரண்டு கயல்விழிகள் ஆராய்வதைக் கண்டு கொண்டான். அப்போது இரண்டு பேருடைய கண்கள் சூழ்நிலையை மறந்து தமக்குள் ஏதோ பேசின. ஒன்றையொன்று ஊடுருவி நோக்கும் அந்த நான்கு கண்களிலும் காதல் களித்து விளையாடியது. தென்கடலில் இட்டகழி ஒன்று, வடகடலில் இட்ட நுகம் ஒன்றின் துளை ஒன்றில் பொருந்தினாற் போல, ஊழி வினையாகிய விதி ஒன்று சேர்த்தது. ஒன்று சேர்க்க வேண்டிய பொறுப்பைத் தன் தலையில் ஏற்றுக்கொண்டு திரியும் விதி ஏமாற்றமடைய விரும்பவில்லை. சிறைக் கைதியாக உதயணனை உச்சயினிக்கு அனுப்பிய விதி, யானையை அடக்கியதால் அரசனின் நண்பனாகச் செய்து வாசவதத்தையோடு சேர்க்கவும் திட்டமிட்டிருந்தது போலும்! வெஞ்சுடர்க் கதிரவனும், தன் கதிர் மதியும், ஒன்று கூடிக் கடற்பரப்பின் மேற் சந்தித்தாற் போலப் புலிமுக மாடத்தில் ஆயத்தார்களுக்கிடையே நின்ற வாசவதத்தையும், கீழே யானையின் மேலே எழிலே உருவாக வீற்றிருந்த உதயணனும் கண்களே வாய்களாகக் கடந்த பிறவியிற் பிரிந்து போய் மீண்டும் சந்தித்தாற் போலப் பேசினர். காதலுலகத்தில் பேச்சே பெரும்பாலும் கண்களில் தானே ஆரம்பமாகிறது! அதுதான் இங்கேயும் நடந்தது.

நூலும் பஞ்சும் போலப் பிரிக்க முடியாத உறுதி வாய்ந்தது என்று கூறும்படி அமைந்தது தத்தை உதயணன் காதல். நூழிற்கொடி ஒன்றோடொன்று முறுக்குண்டு தேனும் பாலும் விளைக்கும் தீஞ்சுவையினும் சிறந்த ஒன்று அந்தக் காதலின் சுவையே. குலமும் குணமும் கூடிய, அன்பும் இனமும் பிறவும் இசைந்து பொருந்தி இணைந்த ஒன்றாகும் அவ்விருவர் தொடர்பு. இத்தகைய தொடர்பு இயற்கையாக அமைவது அருமையினும் அருமை.

இறுதியில் சூழ்நிலையை உணர்ந்து சமாளித்துக் கொண்ட உதயணன், தத்தையின் பாலிருந்த கண்களை வாங்கிக் கொண்டு அரசன் கேட்ட கேள்விக்கு விடை கூறினான். மன்னனோ, ஆயத்தார்களோ, இந்தக் காதல் நாடகத்தை உற்றுக் கவனிப்பதற்குள் தத்தை, உதயணன் இருவருமே தத்தம் நிலையை உணர்ந்து கொண்டனர். கண்கள் திரும்பினவே யொழிய ஒருவர் மனம் மற்றொருவரிடமிருந்து திரும்பவில்லை. திருப்பவும் முடியவில்லை. உதயணன் மனம் தத்தையிடம் உறவு கொண்டு திரும்ப மறுத்துவிட்டது. தத்தையின் மனமோ அவளுடைய தாபத்தைச் சிறிதும் பொருட்படுத்தாது உதயணனிடமே தங்கி விட்டது. தத்தையும் உதயணனும் பிரிந்தனர். தனிமை அவர்களுக்குத் தந்த பரிசு வேதனை.

உதயணன் பால் அன்பும் இரக்கமும் பூண்ட பிரச்சோதனனின் உள்ளம், இப்போது அவனைக் கைதியாகவோ பகைவனாகவோ கருத மறுத்தது. அவன் உதயணனுக்காகப் புதிய அரணமனையொன்று அமைக்கச் செய்தான். அஃது அழகிலும் அமைப்பிலும் சிறந்து விளங்கியது. அரண்மனை யானைகளைக் கட்டும் குஞ்சரச் சேரிக்கு அருகில் கம்பீரமாகத் தோற்றமளித்த அந்த அரண்மனையில் ஓர் இளவரசனுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளை யெல்லாம் உதயணனுக்குக் குறைவர அமையும்படி செய்தது, அவந்தியர் கோமான் ஆணை. ஆத்திரம் அன்பாக மாறிவிட்டால் அதற்கு அழிக்க முடியாத வன்மை தோன்றிவிடுகிறது. தனக்கு மாற்றவனாகிய உதயணனை எந்திர யானையால் ஏமாற்றிப் பிடிப்பது போலப் பிடித்து வந்து இருட்சிறையில் அடைத்தான் பிரச்சோதனன். நளகிரி மதமுற்ற போது யாராலும் அடக்க முடியாத இறுதி நிலையில் உதயணனுக்கு மட்டும் அந்த யானையை அடக்கும் ஆற்றல் உள்ளது என்னும் செய்தியைச் சாலங்காயன் மூலமாக அறிந்த பிரச்சோதனன், உதயணன் முகத்தில் விழித்து அந்த உதவியைக் கேட்பதற்கே நாணினான். பிறகு சிவேதன் திறனால் உதயணன் அந்த உதவி செய்ய நேர்ந்தது. இப்போது உதயணனைத் தன் மூத்த அரசிளங்குமரன் போன்று போற்றும் மனநிலை, முன்பு மாற்றானாக இருந்த பிரச்சோதனனுக்கு ஏற்பட்டுவிட்டது. மனம் நடிப்புத் திறன் வாய்ந்த ஒரு நடிகன். சூழ்நிலை அதற்கு ஏதேதோ பற்பல வேடங்களை கொடுக்கிறது. மாற்றத்திற்கு நொடிப் பொழுது வேண்டியதில்லை. ஏற்ற வேடம் தயாராகிவிடும். பிரச்சோதனன் மனமும் மனித மனந்தானே! அதனுடன் பண்பட்ட இயல்பும் தனி அமைப்பாக அதற்குண்டு. அந்த அமைப்புத்தான் தன் புதல்வர்களை உதயணனுக்குக் குற்றேவல் செய்யப் பணித்தும், அவன் தம்பியர் போல் இருக்குமாறு வேண்டியும், கலைகள் கற்க ஆணையிட்டும், பிரச்சோதனனை உதயணனுக்கு மதிப்பளிக்கும்படி செய்தது.

தன்னுடைய முதுமைக்கும் அதன் காரணமாகத் தான் பெற்றுள்ள அறிவு அநுபவங்கட்கும் ஒருபடி மேலாகவே உதயணன் பெற்ற அறிவும் அனுபவமும் இருப்பது கண்டு பிரச்சோதனன் வியந்து அவனை விரும்பினான்.

இவ்வளவு எளிதில் பிரச்சோதனன் தன்னைப் பற்றிய கருத்தை மாற்றிக் கொண்டு, தனக்கு அரண்மனை இயற்றி, அரசகுமாரருக்கு ஆசிரியனாக்கியது உதயணனுக்குப் பெரிய சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது. 'இதுவும் ஒரு சூழ்ச்சியோ?' என்று எண்ணினான் உதயணன். பாண்டவர்க்கு நூற்றுவர் அரக்கில் அமைத்தது போலத் தனக்கெனப் பிரச்சோதனன் சமைத்த மாளிகையில் ஏதேனும் சூழ்ச்சி இருக்குமோ என்று ஆராய்ந்து முடிவில் ஒருவாரு ஐயம் நீங்கலாயினான்.

ஐயம் தீர்ந்த பிறகு தனக்கு அமைத்த அந்தப் புது மாளிகையின் இயற்கை வளங்களைக் கண்டு மகிழ்ந்த வண்ணம் அங்கிருந்தான் உதயணன். இவ்வாறு தன் புது அரண்மனையின் காட்சி இன்பத்தில் உதயணன் திளைத்துக் கொண்டு இருக்கும் போது, கதிரவன் தன் ஆட்சியை முடித்துக் கிளம்பினான். மாலைப் பொழுது வந்தது. மாற்றான் போற்றியதை நினைத்த மனத்தில் மெல்லத் தத்தையின் காதல் நினைவு தலை காட்டியது. கண்களால் பேசிய காதல் பேச்சை இப்போது மனம் பேசத் தொடங்கியது. ஆனால் மனத்தின் இந்தப் பேச்சு நிறைவடையவில்லை. இதற்குப் பதில் சொல்ல இன்னொருத்தி வேண்டியிருந்தது.

3. விதி வென்றது

மனத்தை மையல் செய்யும் மாலை நேரம். குஞ்சரச்சேரி மாளிகையின் அழகிய சோலையில் உதயணன் உலாவிக் கொண்டிருந்தான். அந்த அழகிய பெரிய சோலையில் சந்தன மரங்களை வேலியாக எடுத்த சண்பகத் தோட்டமொன்று உட்பகுதியாக அமைந்திருந்தது. சண்பக மரங்களுக்கிடையே வேங்கை மரமொன்று இயற்கையாக உண்டாகியிருந்தது. இந்த வேங்கை மரத்தின் கிளையில் ஓர் ஊஞ்சல். அதில் ஆடுவதற்கும் ஆட்டுவதற்கும் போட்டியிட்டனர் அங்கிருந்த சின்னஞ்சிறு பெண்கள். அப்பெண்கள் பாடிய ஊஞ்சல் பாட்டிற்குத் தகுந்தபடியாக அங்கிருந்த மயில் தோகை விரித்து அபிநயத்துடன் ஆடத் தொடங்கியது. இந்த ஆடல் பாடல்களைக் கேட்டுப் பக்கத்திலிருந்த வெயில் நுழைவறியாத புதரில் உள்ள தும்பியும் வண்டும் ஒன்றையொன்று மருட்டின. கொம்பிலிருந்த மணிநிற இருங்குயில் பேடை தன் அன்புச் சேவலை அகவி அகவி அழைத்தது. கமுக மரத்தில் தன் சேவலைக் காணாத அன்னப்பேடை பாளையைக் கண்டு சேவல் அதில் மறைந்து விட்டதோ என ஐயுற்றது. உதயணன் இவற்றையெல்லாம் கண்டான். கண்ட காட்சிகள் அவன் தனிமையை அவனுக்கு உணர்த்தின. தத்தையின் மேற்சென்ற நினைவோடு, ஒரு புறமாகச் சுற்றிக் கொண்டிருந்த உதயணன் தனிமை வேதனையால் சூழப்பட்டான். அப்போது கதிரவன் பழுக்கக் காய்ச்சிய பொன் வட்டத்தைப் போல் மேலே மலை மீதில் மறைந்து கொண்டிருந்தான். விலங்குகளும் பறவைகளும் தனித்திருக்கும் தத்தம் துணைகளை நோக்கிச் சென்றன. ஒரு பெரிய சக்கரவர்த்தி வாழும் வரையிலும் அவனுக்குட்பட்டிருந்து, அவன் மறையும் போது மெல்ல வெளிக் கிளம்பித் தம்முருக் காட்டி ஆட்சி செலுத்த முயலும் பல பகைக் குறுநில மன்னர்களைப் போல், சூரியன் மறைந்ததும் வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறுசிறு விண்மீன்கள் தலையை வெளியே நீட்டின. தாய்ப்பால் உண்ணும் பருவத்தில் தலைமை பூண்டு, அரசாள வந்த மிகவும் இளம் பருவத்து அரசன் போல வானிற் பிறைமதி தோன்றியது.

மாலை முற்றி இரவு தோன்றும்படியான அழகிய நேரம். மகளிர் சந்தனத்தின் ஈரம் புலர்த்தும் அகிற்புகை எங்கும் பரந்தது. தத்தம் குழந்தைகளை உறங்கச் செய்வதற்காக மகளிர் கூறும் பொய் கதைகளின் ஒலி ஒரு புறம். எங்கும், இடை இடையே ஒளிபரப்பும் பாண்டில் விளக்குகள் ஏற்றப்பட்டன. உதயணன் நேரமாகிவிட்டதை உணர்ந்து அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். இரவு உணவு முடிந்த பின் தனக்கென அமைக்கப்பட்ட மணிக்கால் அமளியில் துயிலச் சென்றான். தூக்கம் எங்கிருந்து வரும்? தூக்கம் வருவதற்குப் பதில் வாசவதத்தையின் கவின்முகம் மானசீகமான உருவெளியில் தோன்றி அருகே வந்தது. அழகு என்பது இவ்வாறு இருக்க வேண்டும் எனத் தேவர்கள் ஒன்றுக்கூடித் தீட்டிய தெய்வ ஓவியம் போன்ற தத்தையின் உருவைத் தன் மனத்தில் அழியாமல் எழுதிவிட முயன்றான் உதயணன். 'அன்று புலிமுக மாடத்தில் தன் வேல் விழியைக் கருவியாக் கொண்டு என் உள்ளங் கவர்ந்த கள்ளியிடமிருந்து உள்ளத்தோடு அவள் பாற் சென்ற என் ஆண்மையை நான் பெற முடியுமோ?' என்று மாணிக்கப் படுக்கை மேல் தூக்கமின்றித் தனிமைத் துன்பம் வாட்ட அதற்கு ஆளாகிய உதயணன் ஒன்றும் புரியாது அமர்ந்திருந்தான்.

உதயணன் மட்டுமா இத்துயருக்கு ஆளானான்? இல்லை! இல்லை! இப்போது வாசவதத்தையின் கன்னி மாடத்திற்கு வருவோம். இதோ அவளும் காதல் காரணமாக விளைந்த தனிமைத் துன்பத்துக்கு இலக்காகத் தவறவில்லை என்று அவள் தோற்றத்தைக் கண்டே அறிந்து கொள்ளலாம். உதயகிரியின் உச்சியில் தோன்றும் இளங்கதிரவன் போல நளகிரியின் மேலமர்ந்திருந்த உதயணனைக் கண்டதும் அவள் நெஞ்சு அவன் பால் அடைக்கலம் புகுந்து விட்டது. நெஞ்சை உதயணனிடம் பறிகொடுத்துவிட்ட அவள் கன்னிமாடத்திற்குத் திரும்பியதும் ஆயத்தார்களை நீக்கித் திருமணி மாடத்தின் பகுதியில் ஓர் ஒதுக்குப் புறமாக அமர்ந்து உதயணனை நினைக்கத் தொடங்கினாள்.

உதயணனைப் பற்றியும் அவன் பேரழகைப் பற்றியும் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருந்த வாசவதத்தைக்குத் தன் தந்தையாகிய பிரச்சோதனன் மேற்கூடக் கோபம் வந்துவிட்டது. 'வேற்று நாட்டிலிருந்து தன் கிளைஞரைப் பிரிந்து சிறைப்பட்டவன், தனியானவன் என்பதை எல்லாம் சற்றும் சிந்தியாது, 'யாழொடு சென்று மத யானையை அடக்கு' என்று அவருக்கு ஆணையிட்டாரே நம் தந்தை? அவருக்குக் கண்களே இல்லையோ? ஒரு வேளை அவர் கண்கள் மரத்தாலாகிய உணர்ச்சியற்ற கண்களோ?' என்று எண்ணினாள் தத்தை. அவள் மனதில் உதயணன் மேலெழுந்த காதல், பெற்ற தந்தையையும் பழிக்கும்படி செய்கிறது என்றால் அதன் விந்தையை எவ்வாறு விளக்க முடியும்!

தத்தை உதயணனையே எண்ணித் தாபமுற்று அமர்ந்திருக்கையில் பிரிந்திருந்த அவள் ஆயத்தார் வந்து சேர்ந்தனர். தத்தையின் மேனியில் வாட்டம், குழைவு முதலியன கண்டு பரபரப்படைந்து பலவகையாகப் பேணி அதைத் தீர்க்கும் முயற்சியில் ஆயம், செவிலி முதலியோருடன் ஈடுபட்டது. தத்தையின் தாபம் அதிகமாகியதே ஒழியக் குறையவில்லை. குளிருக்குச் சந்தனம் பூசினாற் போலாயிற்று. இரவு ஒரு வழியாக முடிந்தது. காலைப் பொழுது நன்கு விடிந்தது.

நல்லதானாலும் சரி கெட்டதானாலும் சரி, விதி எப்போதுமே தோல்வியடைவது இல்லை. விதி என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட நியதியாக இருக்கும் போது அதை மனிதன் எவ்வளவு தான் முயன்றாலும் தோல்வி அடையச் செய்துவிட முடியுமா என்ன? உதயணன் வாசவதத்தை காதல் விதியின் கூட்டுறவு என்பது போல அமைந்து விட்டது. அப்படியானால் அதன் வெற்றிக்கும் விதிதானே பொறுப்பாளி?

மறுநாள் காலை பிரச்சோதனனின் அரசவை கூடியது. பிரச்சோதனனுடைய அரசவை மிகப்பெரியது. அவனுடைய அவையின் கண்ணுள்ள மந்திரச் சுற்றத்தினர் விதியொன்றொழியப் பிறவற்றிற்குக் கட்டுப்படுதலை அறியார். கூற்றுவனையும் மாற்றும் ஆற்றல் படைத்தவர். முற்றுந் துறந்த முனிவர்கள் பலர் அதில் இருந்தனர். அவர்களுக்கெல்லாம் வணக்கம் செய்த வண்ணம் அவையிற் புகுந்தான் பிரச்சோதனன். அவையில் பலவகை அறிவு நூல்களின் நயங்கள் ஆராயப்பட்டன. அறிஞர் பலர் உரையாடினர். அவ்வகையாகக் கிடைத்த கேள்வியின்பத்தில் சிறிது நேரம் ஈடுபட்டான் அரசன். அப்போது உதயணன் நினைவு அவனுக்கு வந்தது. உதயணனை அழைத்து வரச் சொல்ல வேண்டுமென அவன் எண்ணினான். இதற்குள் அன்றைய அவை ஒருவாறு முடிந்தது. உதயணனை அழைத்து வருமாறு ஓர் ஏவலாளனை அனுப்பினான். அவை முடிந்து விட்டமையால் அரசன் உதயணனுக்காகத் தன் கோயிலுள்ளே காத்திருந்தான். உதயணன் நன்றாக அலங்கரிக்கப்பட்ட பெண் யானை ஒன்றின் மேல் அமர்ந்து வந்து சேர்ந்தான். மணல் முற்றத்தில் யானை மேலிருந்து இறங்கிய அவனைப் பிரச்சோதனன் எதிரே சென்று வரவேற்றான். தன்னோடு சமமான ஆசனத்தில் உதயணனை அமர்த்திக் கொண்டு பலவிதமான உபசாரங்களை அவனுக்குச் செய்தான். "இதை உன் சொந்த அரண்மனையைப் போல் நினைத்துக் கொள்ளுதல் வேண்டும். நமக்குள் வேறுபாடு வேண்டாம்" என்றான். அப்போது பணிப்பெண் ஒருத்தி பவழத்தட்டில் தாம்பூலம் கொணர்ந்து அளித்தனள். அதை இருவரும் தரித்துக் கொண்டனர். சற்று நேரம் மன மகிழ உரையாடிய பின் உதயணனை அங்கே சிறிது பொழுது இருக்கும்படியாகக் கூறிவிட்டுப் பிரச்சோதன மன்னன் அரண்மனையின் உட்புறஞ் சென்றான். உட்புறத்திலிருந்து சிவேதன் மன்னனை வணங்கி வரவேற்றான். அரசன் சிவேதனைக் கொண்டே உதயணனிடம் தன் வேண்டுகோளைத் தெரிவிக்க விரும்பினான். "சிவேதா! உதயணன் யாழ் வாசிப்பதில் வல்லவன் என்பதை நீயும் கேள்விப்பட்டிருப்பாய்! அன்று உன்னாலே தான் நளகிரியின் மதத்தை உதயணன் அடக்கினான். இன்று உன்னால் தான் என் வேண்டுகோளை உதயணன் ஒப்புக்கொள்ள வேண்டும். தத்தைக்கு வீணை கற்பிக்க ஏற்ற ஆசிரியன் அகப்படாமல் யானும் அவள் தாயும் பல நாள்கள் வருந்தியதுண்டு. அந்த வருத்தம் இனி உதயணனால் தீர்ந்து போகும் என்று நம்புகிறேன். என் நம்பிக்கையின் வெற்றியும் தோல்வியும், நீ உதயணனிடம் பேசி அவனைச் சம்மதிக்கச் செய்வதைப் பொறுத்தது! உதயணன் ஒரு பேரரசன் மகனாயினும், என் பொருட்டு இதை நிறைவேற்றுவதில் இழுக்கு நோக்க மாட்டான் என்று எண்ணுகிறேன். நீதான் இதை அவனிடமுரைத்து உடன்பாடு பெற்று வரவேண்டும்" என்று தன் மந்திரிகளுள் ஒருவனாகிய சிவேதனைப் பிரச்சோதனன் வேண்டிக் கொண்டான். இவ்வாறு கருதி வேண்டிய பிரச்சோதனன் உள்ளூற வேறோர் எண்ணத்துடன் இதைச் செய்தான். உதயணனை மீண்டும் கௌசாம்பி நகரமோ, வைசாலி நகரமோ செல்லவிடாமல் உச்சயினியிலேயே இருக்கச் செய்து விடவேண்டும் என்பது தான் அந்த எண்ணம். இத்தகைய அருங்கலைச் செல்வனொருவனை வெளியே விட்டுவிட அவனுக்கு விருப்பமில்லை. தத்தைக்கு வீணை கற்பிக்குமுகமாக உதயணனை உச்சயினியிலேயே மடக்கிவிடலாம் என்று தீர்மானம் செய்தான். அந்தத் தீர்மானமே இந்த வேண்டுகோள் வடிவாக வெளிப்பட்டது.

அரண்மனையில் பிரச்சோதனன் போன பின்பும் காத்திருந்த உதயணனன், சிவேதன் உட்புறமிருந்து வருவதைக் கண்டு வரவேற்றான். இருவரும் தத்தம் நலங்களைப் பற்றியறிந்து அளவளாவி முடிந்த பின் உதயணனிடம் சிவேதன் தன்னுடைய அரசனின் விருப்பத்தை மெல்லத் தெரிவிக்க ஆரம்பித்தான். சிவேதன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உதயணனை வேதனை செய்தது. பிரச்சோதன மன்னனின் வேண்டுகோளைப் புரிந்து கொள்ளாமல் அவன் தவித்தான். தானும் ஓரரசன் என்றறிந்தும் பணியாளனாக அமர்த்திக் கொள்வது போல மகளுக்கு வீணை கற்பிக்க வேண்டுகிறானே என்ற கவலை ஒருபுறம் உதயணனை வாட்டியது. உதயணன் அந்த வேண்டுகோளை ஆராய்வதன் மூலமாகப் பிரச்சோதனனுடைய உள்ளத்தையே ஒருமுறை ஊடுருவிப் பார்த்தான். ஒரு நிலையான காரணம் அவனுக்குத் தென்படவில்லை. 'என்னுடைய குடி ஒழுக்கம் எத்தகையது என்பதை அறிந்து கொள்ளவா? அல்லது என் கலைவன்மையைப் புகழ் பெறாதபடி ஒடுக்க வேண்டிச் செய்த செயலா? இல்லை என் மேல் இரக்கமுற்றுச் செய்த காரியந்தானா? மனத்தில் எண்ணியது சரியா, தவறா என்று ஆராயாமல் எண்ணியதை எண்ணியபடியே செய்வது தான் பேரரசர்களுடைய இயல்போ? எதற்காக இவன் எனக்கு இந்த ஆணையிடுகிறான்? இவன் மகளுக்கு நான் ஆசிரியனாக இருந்து யாழ் கற்பிக்க வேண்டுமாமே? யார் அந்தப் புண்ணியவதி? ஒருவேளை அன்று நாம் புலிமுக மாடத்தில் கண்ட காரிகை தானோ? இல்லை இவனுடைய பல பெண்களில் வேறொரு பெண்ணாகவும் இருக்கலாம். இந்தச் சிவேதனிடம் இதை வாய்விட்டுக் கேட்பது நாகரிகமல்ல. எப்படியாயினும் இங்கு யாழ் கற்பிப்பது மூலமாக அவளை நான் சந்திக்க ஒரு வாய்ப்பையாவது ஏற்படுத்திக் கொள்ளலாம். என்னிடம் யாழ் கற்கப் போவது யாராயினும் என் உள்ளங்கவர்ந்த அந்தப் பெண் அங்கே எப்போதாவது தட்டுப்படாமலா போய்விடுவாள்? அவளை மீண்டும் சந்திக்காமல் என்னால் உயிர்வாழ முடியாது. அவளை சந்திக்க வேண்டுமானால் இதற்கு ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். உயிர் கெடவிருக்கும் நிலையில் ஒழுக்கம் பார்த்துக் கொண்டிருப்பது தகாது. நான் எப்படியும் இதற்கு உடன்பட்டே ஆகவேண்டும்!' இவ்வாறு உதயணன் மனத்தில் எண்ணங்கள் விரைந்து எழுந்தன. உதயணன் சிவேதனிடம் யாழ் கற்பிக்க உடன்பட்டான். சிவேதன் நன்றியோடு விடைபெற்றுச் சென்று உதயணன் யாழ் கற்பிக்க இணங்கிய செய்தியை அரசனுக்கு உரைத்தான்.

அரசன் வாசவதத்தையை மனத்திற் கருதியே உதயணனை யாழ் கற்பிக்க அழைத்தான். எனினும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. எனவே தன்னுடைய பல தேவியர்கள் பெற்ற, பேதைப் பருவத்து மகளிர் எல்லோரையும் தன்பால் வரவழைத்து அவருள் யாவர் உதயணனிடம் யாழ் கற்கத் தகுந்தவர் என ஆராய்வது போல் ஆராய்ந்து, வாசவதத்தையே தக்கவள் எனத் தேர்ந்தெடுத்தான். விதி முழுவதும் வென்றது. உதயணனுக்குச் சாதகமாகவே வென்றது. உதயணன் எவளைச் சந்திக்கலாம் என்பதற்காக யாழ் கற்பிக்க இணங்கினானோ, அவளே யாழ் கற்பவளாக வாய்த்திருப்பது அவனுக்குத் தெரியவில்லை.

4. திரை விலகியது

தத்தை யாழ் கற்க வேண்டிய நல்ல நாள் விரைவிற் குறிப்பிடப் பெற்றது. தன்னுடைய பிற புதல்வியருக்கு ஏற்ற பரிசுகளைக் கொடுத்து வருந்தாதபடி செய்தான் பிரச்சோதனன். உதயணனிடம் வீணை கற்கும் பேறு தத்தைக்கே தக்கதெனப் பலரும் பாராட்டி மகிழ்ந்தனர். யாழ் கற்க ஏற்ற கீதா சாலை கட்டி அலங்கரிக்கப்பட்டது. தத்தையின் கலைக் கல்விக்கு வேண்டிய வசதிகள் யாவும் செய்யப்பட்டன. குறித்த மங்கல நன்னாள் வந்து சேர்ந்தது. வாசவதத்தையை அவளுடைய ஆயத்தார் நன்றாக அலங்கரித்தனர். கலைமகளைக் கற்று அறியத் திருமகள் செல்வது போல, அவளைக் கீதசாலைக்கு உதயணனிடம் யாழ் கற்க அழைத்துச் சென்றனர் தோழியர். காதில் குண்டலம் அசையக் காலிற் சிலம்பொலிப்பக் கீதாசாலையுள் சென்றாள் தத்தை. கீதசாலையில் யாழ் கற்பிக்க வேண்டிய மேடையில் ஆசிரியனிருந்து கற்பிப்பதற்கும், அதற்கு எதிரே கற்பவள் அமர்ந்து கற்பதற்குமாக இரண்டு இருக்கைகள் பொன்னிலும் மணியிலும் இழைத்துச் செய்யப்பட்டிருந்தன. இரண்டிற்கும் இடையே ஓர் அலங்காரமான மெல்லிய பட்டுத் திரைச்சீலை ஒளிவீசிக் கொண்டிருந்தது. அதனால் கற்பவளும் கற்பிப்பவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள முடியாதிருந்தது. தத்தை, திரைக்குப் பின்னாலே கற்பவள் அமரவேண்டிய இருக்கையில் அமர்த்தப்பட்டாள். கற்கின்ற முதல் நாள் இப்படித் திரையிட்டு அதை விலக்கியபின், கற்பார் ஆசிரியனை வணங்கிப் பெரிதும் பயபக்தியுடன் கற்றல் கலைமரபு. இதற்குள் சிலர் சென்று, கற்பிக்கும் ஆசிரியனாகிய உதயணனை மரியாதைகளுடன் அழைத்து வந்தனர். உதயணன் திரைக்கு இந்தப் புறம் ஆசிரியருக்கென இடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான். திரை இரண்டு உள்ளங்களின் வேகத்தைத் தாங்கிக் கொண்டு இடையே நின்றது. தனக்கு யாழ் கற்பிக்க இருப்பவன், அன்று புலிமுக மாடத்திலிருந்து தான் யானை மேற்கண்ட இளைஞனே எனத் தத்தை அறியாள். தான் கற்பிக்க வேண்டியவள், அன்று தன் உள்ளங்கவர்ந்த கன்னியாகவே இருப்பாள் என்று உதயணனும் அறியான். இருவர் அறியாமையையும் உந்தி நிற்கும் ஆவலின் தாக்குதலை அந்த மெல்லிய பட்டுத்திரை எவ்வளவு நேரந்தான் தாங்கும்? ஆசிரியனையும் மாணவியையும் அதிக நேரம் சோதனை செய்வதற்குத் தத்தையின் தோழிகளே விரும்பவில்லை போலும்.

'ஆசிரியனிடம் கற்பதற்கு முன் அவனை மனப்பூர்வமாக வணங்க வேண்டியது மாணவர் கடமை. அதை மறவாது நீயும் செய்க' என்று கூறித் தோழியர் திரையை விலக்கினர். தன் காந்தள் போன்ற மெல்லிய விரல்களைக் கமலமலர் குவிந்தது போலக் கூப்பி வணங்கிவிட்டுத் தலை நிமிர்ந்தாள் தத்தை. எதிரே அன்று நெஞ்சைக் கவர்ந்து சென்ற கள்வன் வியப்புடன் தன்னையே கண்களால் பருகிவிடுவது போலப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவள் தலை குனிந்தாள். முதலில் விலகியது பட்டுத்திரை. இப்போது இரண்டு உள்ளங்களிலுமிருந்த சந்தேகத்திரைகளும் விலகின. தத்தையாக அவளை அறிந்தான் உதயணன். உதயணனாக அவனை அறிந்தாள் தத்தை. இருவருக்கும் இடையிலிருந்த யாழினின்றும் இன்னும் இசை எழவில்லை. இருவர் மன யாழிலிருந்தும் இனிய அன்புப் பண் ஒலிப்பதை இருவருமே தடுக்கமுடியவில்லை. இருவரின் அறிமுகத்தால் ஏற்பட்ட வியப்பு நாடகம், சில கணங்களில் முடிந்தது.

ஆசிரியனாகவும், மாணவியாகவும் சூழ்நிலையை வெளிப்படையாக ஆக்கி வைத்திருக்கும் போது இருவரும் இந்தக் காதல் நாடகம் நடிக்க முடியாதல்லவா? உதயணன் யாழைக் கையிலெடுத்துக் கற்பிக்க ஆரம்பித்தான். தத்தை மீண்டும் முறைக்காக அவனை வணங்கிக் கற்க ஆரம்பித்தாள். தத்தையின் ஆயம் அவளைச் சூழக் காவலாக இருந்து கொண்டு கவனித்தது. மாறன் மலர்க்கணைகள் முழுவதையும் தத்தையிடம் எய்து பழிதீர்த்துக் கொண்ட போது, மனம் யாழில் போகுமா? முதல் நாளாகையாலும் உதயணன் மன நிலையிலும் ஏறக்குறைய அதே மனவேதனை ஏற்பட்டிருந்ததாலும், விரைவாக யாழ் கற்பிப்பதை முடித்துவிட்டு பிரியாமற் பிரிந்தான் அவன். சந்தேகத்திரை விலகப் பெற்ற இருவரும், மறுபடி தாபத்திரை மூடப் பெற்றுப் பிரிந்து சென்றனர்.

உதயணன் தத்தைக்குத் தொடர்ந்து யாழ் கற்பித்து வந்தான். அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு அவர்களுடைய கண்கள் காதல் கற்பனையை வளர்த்து வந்தன. பிரச்சோதனன் செய்த இந்த ஏற்பாடு, ஊரார் தங்களுக்குள் கூடிக்கூடி பழிமொழி பேசும்படி செய்துவிட்டது. ஆனால் அவற்றை அரசன் அறியாதபடி அஞ்சி முணுமுணுக்கத் தொடங்கியது ஊர். 'சிறை செய்யப்பட்டு வந்த பகையரசன் உதயணன், வாலிப வயதினனுங் கூட. அவனைக் கொண்டு பருவம் வந்த தன் மகளுக்கு நம்பிக்கையுடன் யாழ் கற்பிக்கச் செய்த மன்னனுக்கு அறிவு மங்கி விட்டதோ? பகைவனை நம்பிப் பெற்ற மகளை ஒப்புவிக்கிறானே?' என்னும் பழிமொழி ஊரெங்கணும் எழுந்தது. ஆனால் அரசன் ஆணைக்கு அஞ்சி மறைவாகப் பரவி வந்தது இந்தப் பழிமொழி.

வேந்தன் அறியின் வெஞ்சினம் கொள்வான்; ஆகையால் வாய் திறந்து பேசாமல் நகரில் காதும் காதும் வைத்தாற் போலப் பெருகிப் பரவியது இந்தப் பேச்சு. 'ஆசிரியனாக வந்த உதயணனும் அரசன். கற்பவளாகிய வாசவதத்தையும் அரசன் மகள். இருவரும் திருமணப் பருவத்தினர். இதன் முடிவு என்ன ஆகும்?' இப்படியும் ஒரு சிலர் பேசிக் கொண்டனர்.

இஃது இவ்வாறிருக்க, உதயணன் தத்தையின் மேலெழுந்த வேட்கையை அடக்க முடியாது தவித்தான். அஃது அவன் உடல்நலத்தையே ஓரளவு பாதித்திருந்தது. இருந்தபோதிலும் தத்தைக்கு யாழும் அரசகுமாரர்க்கு வில் முதலிய கலைகளும் கற்பிப்பதை நிறுத்தவில்லை. உடல் நலிவோ நாளுக்கு நாள் காண்போர் சந்தேகமுறும் அளவுக்கு நிலை முற்றிவிட்டது. இந்நிலையில் ஏற்ற உதவியாக வயந்தகன் வந்தான். அவனைக் கண்டவுடன் உதயணனுக்கு ஆறுதல் உண்டாயிற்று.

5. வயந்தகன் வந்தான்

யூகியோடு உஞ்சை நகர் வந்திருந்த வயந்தகன் மாறு வேடத்துடனே பிரச்சோதனனுடைய புதல்வர்களாகிய பாலகுமரன் முதலியோருக்கு உற்ற நண்பனாகி அரண்மனையில் வசித்து வந்தான். அங்ஙனம் வசிந்து வருங்காலையில் ஒருநாள் பாலகுமரனுக்காக உதயணனிடம் வயந்தகன் சென்று வர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதைத் தானே வயந்தகனும் ஆவலாக எதிர்பார்த்திருந்தான். பாலகுமரன், உதயணனுடைய மாணவனல்லவா? அதனால் மலர் மாலைகள், சந்தன பேழைகள், தங்க நிறக் கலிங்கங்கள் (பட்டாடைகள்) முதலிய பொருள்களைக் கொண்ட காணிக்கையுடன் வயந்தகனை அவன் உதயணனிடம் அனுப்பி வைத்தான். வயந்தகன், பாலகுமரனது காணிக்கையோடு குஞ்சரச்சேரியிலுள்ள உதயணனின் மாளிகை சென்றடைந்தான். உதயணனைக் காணத் தன்னை இளவரசன் அனுப்பியுள்ளமையை அங்குள்ள காவலன் மூலமாக அவனுக்குக் கூறியனுப்பினான். பாலகுமரனின் காணிக்கையோடு காண வந்திருக்கும் மாறுவேடத்திலுள்ள வயந்தகனை உள்ளிருந்து வெளியே வந்த உதயணன் நன்றாகக் கூர்ந்து நோக்கினான். உதயணனுக்கு அந்த முகத்தை அடிக்கடி பார்த்துப் பழகியிருப்பது போலத் தோன்றியது. சிந்தித்த வண்ணம் அந்த முகத்தை ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருந்த உதயணனன் பக்கத்தில் நிற்கும் காவலனை மறந்து "இவனை எங்கேயோ பார்த்துப் பழகினாற் போல இருக்கிறதே" என்று வாய்விட்டுக் கூறிவிட்டான். கூறிய தோடல்லாமல் வியப்புமிக்க பார்வையுடன் வயந்தகனை மெல்ல நெருங்கினான். காவலன் வேற்றவனாக இடையிலிருப்பதை உணர்ந்து கொண்ட வயந்தகன், தன் மாற்று வேடம் அம்பலமாகிவிடக் கூடாது என்பதற்காக, "இல்லை அரசே! தாங்கள் என்னை அறிந்திருக்க நியாயமில்லை" என்று கூறி மழுப்பினான். உடனே உதயணன் அந்த ஆராய்ச்சியிலிருந்து மீண்டான். வயந்தகனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது. காவலன் இப்போது வெளியேறினான். காவலன் போனானோ இல்லையோ, வயந்தகன் ஒரே தாவாகத் தாவி, உதயணனைத் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தான். நண்பர்கள் நிகழ்ந்தவற்றை எல்லாம் விரிவாகப் பேசிக் கொண்டனர். யூகியின் திட்டங்களை எல்லாம் உதயணனுக்கு வயந்தகன் கூறினான். பாலகுமரனுக்கு நண்பனாகத் தான் அரண்மனையில் இருப்பதையும் உதயணனிடம் கூறினான். உடனே உதயணன் தன் மாணவனாகிய பாலகுமரனுக்கு ஓர் ஓலையை எழுதி, (மாறு வேடத்திலுள்ள வயந்தகனை) அவனுடைய நண்பனைத் தனக்கு உதவி செய்யும் பணியாளனாகத் தன் மாளிகையில் அமர்த்திக் கொண்டதாக அதில் குறிப்பிட்டு அனுப்பிவிட்டான். அதன் விளைவாக வயந்தகனும் உதயணனும் ஒன்று சேர்ந்தனர். வயந்தகன் உதயணனோடேயே இருந்தான்.

தத்தையின் நினைவால் உதயணன் வாட்டமுற்றிருந்த காட்சி இரக்கத்தக்கதாயிருந்தது. கள்ளுண்டவன் வெறியுற்றது போலத் தத்தையைக் கண்ட நாளையே நினைத்து ஏங்கினான் உதயணன். தீமுகத்தில் இட்ட மெழுகு போலக் கரைந்தது அவன் உடல் கட்டு. தாய் முகங்காணாது பிரிவுத் துயருழக்கும் கன்றைப் போல வாசவதத்தையின் பிரிவினால் அவன் வாடினான். உய்வதற்கு அரிய துன்பம் அவனைப் பிடித்து அலைத்து ஒரு நிலையின்றிச் செய்தது. இந்த நிலையில் முன்பு தன் உடற்கட்டைக் கண்டவர்கள் தன்னைக் காணநேரின் ஐயமுறவும் கூடும். ஆகவே இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்ற பயம் வேறு அவனை அலைத்தது. வயந்தகனின் உதவியை நாடினான் உதயணன்.

இத் தருணத்தில் வயந்தகன் வெளியே சென்று, அரண்மனை மதிலோரத்தில் வேற்றுருவில் இருந்த யூகியின் ஒற்றர்களைக் கண்டு நிகழ்ந்தவற்றை யெல்லாம் கூறிவிட்டு மாளிகைக்குத் திரும்பினான். கோட்டைக் காவலர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மதிலோரத்தில் பதுங்கியிருந்த அந்த ஒற்றர்கள் செய்திகளை அறிந்து கொண்டு யூகி இருக்குமிடம் சென்றனர். திரும்பி வந்த வயந்தகனிடம் உதயணன் தன் நிலையை வெளிப்படையாகக் கூறி, அதற்கு ஒரு வழி சொல்லுமாறு வேண்டிக் கொண்டான். வயந்தகனும் உதயணன் நிலையைப் புரிந்து கொண்டான். இருவரும் கூடிச் சிந்தித்தனர். முடிவில் ஒரு வழி புலப்பட்டது. 'உதயணனுடைய இந்த வாட்டம் வாசவதத்தை காரணமாக ஏற்பட்டதன்று; வேறொரு பெண் காரணமாக ஏற்பட்டது' என்று மற்றவர்கள் எண்ணும்படியாகச் செய்து விட வேண்டும். வாசவதத்தை காரணமாக ஏற்பட்டது என்ற உண்மை வெளிப்பட்டால்தானே ஆபத்து? அதை வெளிப்படாதபடி செய்யவே இந்தச் சூழ்ச்சியைக் கண்டுபிடித்தனர் நண்பர்கள். இந்த சூழ்ச்சி நாடகத்தை வெற்றிகரமாக நடித்து உதயணன் தப்புவதற்கு இப்போது ஒரு கணிகை மகள் தேவைப்பட்டாள். அத்தகைய ஒருத்தியை அறிந்து அழைத்து வர வயந்தகன் அனுப்பப்பட்டான். வயந்தகன் அதற்காக உஞ்சை நகருக்குள் சென்றான். உஞ்சை நகரத்துக் கணிகையருள் தலை சிறந்தவளும் தலைகோற் பட்டம் பெற்றவளுமாகிய நருமதை என்னும் நாடகக் கணிகையை இதற்கு ஏற்றவளாகக் கருதி முடிவு செய்தான் வயந்தகன். இந்த முடிவுடன் கணிகையர் சேரிக்குச் சென்ற அவன் நருமதையைச் சூழ்ச்சியிற் சிக்க வைப்பதற்காக ஒரு பொய்க் கதையைக் கட்டிவிட்டான். 'அன்றொரு நாள் உதயணன் யானையின் மதத்தை அடக்கிவிட்டு வீதி வழியாக வரும் போது அவனை எதிர்ப்பட்டு அவன் மேல் அளவிலா வேட்கை கொண்டரற்றும் நருமதையின் வீடு யாது?' என்று அந்தக் கற்பனைச் சரட்டுடன் அவள் வீட்டை அறிந்து கொள்ளும் வினாவையும் முடித்துவிட்டான். அந்த வினாவால் அங்குள்ளவர்களிடம் அவளுடைய வீட்டை அறிந்து கொண்டு நூற்றொரு பொன் மாசைகளை எடுத்துக் கொண்டு (மாசை - ஒருவகை நாணயம்) அவள் வீட்டினுள் நுழைந்தான். இவ்வாறு நுழைந்த வயந்தகனை நருமதையின் நற்றாய் வரவேற்று உபசரித்து இருக்கையில் அமரச் செய்தாள். வயந்தகன் வந்த காரியத்தை அவளிடம் கூறினான். அவள் அதற்காக மிகவும் மகிழ்ந்தாள்.

6. நருமதையின் மறுப்பு

வயந்தகன் கூறியதைக் கேட்ட நருமதையின் நற்றாய், "உதயணன் மனத்துள் என் மகள் விரும்பப் பெற்றாள் என்றால் அது எங்களுக்கு மிகச் சிறந்த பேறாகும். அதனால் நாங்கள் பெருமைப்பட வேண்டும்" என்று உதயணனைப் பிணித்தற்குரிய மொழிகளைத் தூண்டியில் நுனியில் இரைகோத்து அதனால் மீனைப் பிடிப்பதைப் போலக் கருதிக் கூறினாள். உதயணன் இவ்வாறு தங்களுக்குப் பெருமை கொடுத்தும் தங்கள் வீடு தேடி வராதது ஒரு சிறு குறை என்ற கருத்தும் அவளுக்குச் சிறிதுண்டு. இவர்கள் இவ்வாறு இங்கே உரையாடிக்கொண்டிருக்கும் போது நருமதையும் உள்ளிருந்து வந்து சேர்ந்தாள். உடனே நருமதையின் தாய் அவளுக்கு உதயணன் பெருமைகளை எடுத்துரைக்கலாயினாள். "பரத்தையர் ஒழுக்கத்தை நினைத்தும் அறியாதவன் அவன். இழுக்கற்ற தூய வாழ்க்கையை உடையவன். சூது முதலியவைகளைக் கனவிலும் நினைப்பது இல்லாதவன். கொடையுள்ளம் படைத்தவன். அப்படிப்பட்டவன் உன்னை விரும்புகிறான் என்றால் அது உன் நல்வினைப் பயனே ஆகும். இதோ உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கும் இவருடன் (வயந்தகன்) உதயணன் பாற் சென்று சேர்ந்து அவன் விருப்பத்தை நிறைவேற்றுவாயாக!" - என்று நற்றாய் நருமதையை நோக்கிக் கூறினாள். நருமதையின் முகம் சிவந்தது. புருவங்கள் நெரிந்தன. கண்கள் செவிகள் வரை நீண்டு அணவு செய்து விட்டு மீண்டன. முன்னே வைக்கப்பட்டிருந்த பொன் மாசைகளைத் தன் சினத்தில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் அவள் தாறுமாறாக எடுத்துச் சிதறினாள். வயந்தகனும் தன் தாயும் கேட்கும்படியாகக் கொடிய மொழிகளால் மறுப்பைக் கூறத் தொடங்கினாள். "சிறைப்பட்டுக் கைதியாக எங்கள் நாட்டுக்கு வந்த அந்தக் குறுநில மன்னனை, அவன் வீடு தேடிச் சென்று விரும்பியதைச் செய்து நான் மகிழ்ச்சியூட்டுவேன் என்று நினைப்பது கூட முடியாது. இதற்கு ஒரு பொழுதும் சம்மதிக்கவே மாட்டேன்" என்று தன் குலத்திற்குச் சிறிதும் பொருந்தாத மொழிகளைக் கூறத் தொடங்கி இகழ்ந்தாள்.

நருமதையின் தாய் எவ்வளவோ சொல்லியும் அவள் கண்டிப்பாக மறுத்துவிட்டாள். நருமதையின் தாயப் பெண்டிர் அவளுக்குப் பலவகைக் காரணங்களை எடுத்துக் காட்டி உதயணனை மறுப்பது சரியல்ல என்பதைக் கூறினர். "தவவினை நன்றான காலத்துத் திருமகள் குடூமாறு போலப் பொருள் கிடைத்த விடத்துக் கூடியும், தவ வினை தீதாகி நல்வினை நீங்கிய காலத்துத் திருமகள் நீங்குமாறு போல் பொருள் இல்லாவிடத்து நீங்கியும் இட்டதையுண்ணும் நிலம் போல நம்மைச் சேர்ந்தோர் பொருளையுண்டும் அவர் வயமாய் ஒழுக வேண்டிய நமக்கு மறுத்தல் வெறுத்தல் முதலியவை தகாதன" என்று பலவிதமாகக் கூறியும் நருமதை வயந்தகனுடன் போக மறுத்தாள். நருமதையின் தாய்க்கு இது அளவு கடந்த கோபத்தை உண்டாக்கிவிட்டது. வயந்தகனை நோக்கி, "நருமதையை நினது அடிமை போலக் கருதி வலிதில் தேர்மிசைக் கொண்டு உதயணனிடம் செல்க. அவள் இறுமாப்பை அடக்க அதுதான் சரியன வழி" என்று அவள் வெகுளியுடன் கூறினாள். வயந்தகன் அவ்வாறே அவளைப் பலவந்தமாகக் கைப்பற்றித் தேர்மேலேற்றி ஊரறிய பெரிய வீதிகள் வழியாக உதயணன் மாளிகைக்குக் கொண்டு சென்றான். நருமதை தெருவில் போவோர் வருவோரை நோக்கி, "உதயணன் என்னை வலிதிற்க் கொண்டு செல்கிறான். இந்த அநியாயத்தைக் கேட்போரில்லையா?" என்று கதறிக் கொண்டே சென்றாள். போகும் வழியெல்லாம் பெருங் கூட்டம் கூடி வேடிக்கைப் பார்த்தது. நருமதை உதயணன் பெயரைச் சொல்லிப் பழிப்பதையும் எல்லாரும் கேட்டனர்.

நருமதையின் அரற்றுரைகளைக் கேட்ட மக்களிற் சிலர் அவளுக்கு இரங்கி உதயணனைப் பழித்தனர். வேறு சிலர், 'இவள் எதற்கு இந்த வேஷம் போடுகிறாள்?' என்று நருமதையைப் பழித்தனர். 'அழகிற் சிறந்த உதயணனால் விரும்பப்பட இவள் முற்பிறப்பில் தவன் செய்திருந்தாலும் முடியாது. அப்பேறு எளிதில் எய்தப் பெற்ற இவளுக்கு ஏன் துயர்? ஒருவேளை இவள் பெண் தன்மையே இல்லாதவளோ?' என்ரு மற்றொரு சாரார் பேசினர். உதயணன் குல ஒழுக்கம் கெட்டதென்றனர் நல்லோர். பலரும் பலவிதமாக வம்பளந்தனர். எங்கும் இந்தச் செய்தி பரவிவிட்டது. உதயணனைப் பற்றிய நல்லெண்ணம் பலருக்கு மாறியது. விரைவில் வயந்தகன் தேரில் நருமதையுடன் உதயணனை அடைந்தான். ஊர் முழுவதும் உதயணனைப் பற்றிய வம்பு மொழிகள் கிளம்பின. திருமகள், மழை, மகளிர் மனம் இந்த மூன்று பொருள்களும் ஒரு நிலையில் நில்லாதன என்ற உண்மையைப் பிரத்யட்சமாகப் பலர் கண்டு அறிந்து கொண்டார்கள்.

உதயணனும் வயந்தகனும் சேர்ந்து செய்த சூழ்ச்சி வெற்றி பெற்றது. எந்தப் பழிமொழி எழவேண்டும் என்று அவர்கள் சூழ்ச்சியிலே நினைத்தார்களோ, அதுவே எழுந்தது. அதனால் வாசவதத்தைக்கும் அவனுக்குமிடையே ஏற்படவிருந்த பெரும் பழி நீங்கிற்று. ஒரு பழியை நீக்க வேறு ஒரு பெரும் பழியை மேற்கொண்டான் உதயணன். தத்தைக்காகவும் தன்னைப் பிறர் சந்தேகிக்காமல் இருப்பதற்காகவும் உதயணன் இந்தத் தியாகத்தைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மறுநாள் பொழுது விடிந்ததும் ஒரு துன்பமின்றி நருமதை திருப்பி அனுப்பப்பட்டாள். உதயணன் மாளிகையில் ஓரிரவு அவள் தங்கினாள். ஆனாலும் உதயணன் அவளிருந்த பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. ஊரிலே தன்னைப் பற்றிய பழியான மொழிகள் பரவுவதை அறிந்து உதயணன், மயிர் நீப்பின் வாழாக் கவிரிமான் போன்ற மனவுணர்ச்சியை அடைந்தான். எனினும் தத்தை பொருட்டு அதைப் பொறுத்தான் உதயணன். இதற்குள் அவன் எதிர்பார்த்தபடி இந்த விவரம் ஒற்றர்களால் பிரச்சோதன மன்னனுக்கும் அறிவிக்கப்பட்டது.

7. பழி கூறாப் பண்பு

நருமதைக்கும் உதயணனுக்கும் ஏற்பட்ட சம்பந்தம் பற்றி ஊரில் எழுந்த மறைவான பழிச் செய்திகளை ஒற்றர்கள் மூலம் அறிந்தான் பிரச்சோதனன். மெல்லிய நாணங் கலந்த புன்முறுவல் ஒன்று அவன் இதழ்களில் தோன்றி மறைந்தது. உதயணன் செயலுக்காகப் பிரச்சோதனன் அவனைப் பழிக்கவில்லை; வியப்படையவுமில்லை. இது இளமைப் பருவத்தின் இயல்பு என்ற முடிவிற்கு வந்தான் பிரச்சோதனன்.

மாற்றான் செய்த சிறு செயலைத் தூற்றி இழித்துப் பேசித் துணிந்து மகிழ்ச்சி அடைய வேண்டிய பிரச்சோதனன் மன்னன் 'பருவம் செய்த வேலை' என உணர்ந்து, உதயணனை மன்னிக்கும் நாகரிகப் பண்பு மிக உயர்ந்ததல்லவா?

உதயணன் நருமதையை விரும்பியதும், அவளோடு விளையாடியதும் தவறென்று பிரச்சோதனன் நினைக்கவில்லை. உதயணனால் விரும்பப்படுகின்ற அளவிற்குத் தகுதி கொண்ட நருமதைக்குப் பல சிறப்புக்களை அவன் செய்தான். பொன்னிலும் மணியிலும் ஆகிய சிவிகைகள், பொற் பேழைகள் முதலியவற்றை அவளுக்கு அன்பளிப்பாக அளித்தான். புனலாட்டு விழா, தெய்வ விழா முதலிய விழாக்கள் நிகழுகிற காலத்தும், நருமதை நகர் கடந்து சென்று அவற்றில் பங்கு கொள்ள வேண்டாமென்றும் பொது மக்கட்குரிய பிற நிகழ்ச்சிகளையும் அவள் நீக்கிவிட வேண்டுமென்றும் பிரச்சோதனன் ஆணையிட்டான். அரண்மனைக் கூத்திலிருந்தும் அவளுக்கு விடுதலை கிடைத்தது.

இஃது இவ்வாறு இருக்கும் போது, வாசவதத்தையின் யாழ் வித்தகம், எழில் நலம் முதலியவற்றைக் கேள்வியுற்ற ஏனை நாட்டு அரசர் அவளை மணந்து கொள்ள மணத் தூதனுப்பினர். தூது மேற்கொண்டு வந்த அவர்களிடம், பிரசோதன மன்னன் நடந்து கொண்ட முறை நாகரிகப் பண்பின் உச்ச நிலையில் அவனை நமக்குக் காட்டுகிறது. தூதர்கள் மூலம் பிற அரசர் அனுப்பிய திருமண ஓலைகளையும் செய்திகளையும் நுணுக்கமாக ஆராய்ந்தான். மரங்களில் ஏறித்திரியும் குரங்கு தன் குட்டியையும் பற்றிக் கொண்டு கிளைகளையும் விடாமல் ஏறுதல் போல வாசவதத்தையை இவர்களுக்குக் கொடுத்தல் தகுதியில்லை என்ற எண்ணத்தையும் உறுதியாகக் கொண்டான். அதே சமயத்தில் தூதர்களையும் விருப்பமாக நடத்தினான். அவர்கள் திருமண ஓலையைக் கண்டு நன்று நன்றென்று பாராட்டவுமில்லை. வெகுண்டு சீறவுமில்லை. நொதுமற் பாங்குடன் இருந்தான்.

மேலே கூறிய நிலையில் தூதுவர்களை வரவேற்று, இருக்கச் செய்து, சாதுரியமாகச் சில நாள்களில் திருப்பி அனுப்பிவிட்டான் பிரச்சோதனன். இவ்வாறு மணம் வேண்டி வேற்றரசர் தூதனுப்பிய செய்தியை வாசவதத்தையின் செவிலித்தாயாகிய சாங்கியத் தாய், அவள் கருத்தறிய அவளிடம் கூறினாள். தத்தை உதயணனிடம் அளப்பரிய காதல் கொண்டுள்ளாள் என்பதை வெளிப்படையாக அறிந்து கொள்ள வேண்டுமென்பதே சாங்கியத் தாயின் ஆவல். சாங்கியத் தாய் கூறியவற்றைக் கேட்ட தத்தை, இயக்கும் பொறியை இழந்த மயக்குறு நல்லெழிற் புதுமரப் பாவை போலத் துயர் நடுக்க முற்றாள். தான் உதயணனையன்றி மற்றொருவனை மணக்கும்படியே நியதி விதித்திருக்குமானால் அதைத் தன் உயிரைக் கொடுத்தாவது அவள் தடுத்துக் கொள்ள விரும்பினாள். தன்னுடைய தந்தை தன்னை வேறோர் அரசனுக்கு மணமுடிக்க இசைவாரா என்பதைப் பற்றி நினைக்கும் போது அவளால் பொறுக்கவே முடியவில்லை. தத்தையின் இணை விழிகள் முத்தைப் படைத்தன. ஆம்! துயர் கண்ணீர்த் துளிகளாகத் தோன்றின. கலகலவென வளையல்கள் இசைபாடும் கைகளை நெரித்தாள். முகத்தில் துயரின் சாயை மெல்லப் படர்ந்தது தெரிந்தது. துயர் சோர்வாக உருக்கொண்டது. 'அணியும் கலிங்கத்தாற் சுருக்கிட்டுக் கொண்டு சாகவாவது செய்வேனே ஒழிய, மற்றொருவன் மாலை சூட இசையேன்' என்ற துணிவு கொண்டாள் தத்தை. 'மற்றவன் மாலை சூடுவதற்கு என் தந்தை ஒப்புவாராயின் என் எலும்புகள் தான் அவர் காணக் கிடைக்கும்' என்று எண்ணி வருந்தினாள் தத்தை. துயரம் முன்பின் அறியாத இடத்தில் தோன்றினால், அது பயங்கர எண்ணங்களுக்கு அடிப்படை செய்யத் தவறுவதில்லை. தத்தையைப் பொறுத்த வரையில் அது உண்மையாயிற்று.

தத்தை துயரமடைவதைக் கண்டு, அவளுக்கு உதயணன் பாலுள்ள மெய்க் காதலைச் சாங்கியத் தாய் அறிந்து கொண்டாள். செவிலித் தாயாகிய தான் அவளைத் தேற்ற வேண்டிய கடமையையும் உணர்ந்தாள். தத்தையைத் தழுவிக் கொண்டு அவளுக்கு ஆறுதல் கூறத் தொடங்கினாள். தத்தையின் கண்ணீரைத் துடைத்துவிட்டுச் செவிலி பேசினாள்: "உன் கருத்துக்கு மாறாகத் தந்தை உனக்கு மணம் புரியமாட்டார். நீ வீணே கவலைப்பட வேண்டா. அங்ஙனமின்றி நின் தந்தை மாறுபடின், உன் நற்றாயும் யானும் எவ்வாறேனும் முயன்று அதைத் தடுக்கத் தயங்கமாட்டோம்" என்று அவள் தேற்றுரைகளும் தத்தையை ஆற்றவில்லை. வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை நன்றாக உணர்ந்து அனுபவித்த முதுமகளாகிய சாங்கியத் தாய் உடனே ஒரு சூழ்ச்சியை மேற்கொண்டாள்.

திடீரென்று தன்னை நோக்கி விழுந்து விழுந்து சிரித்த செவிலியைப் பார்த்ததும் வாசவதத்தைக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் செவிலியைச் சினத்துடன் நோக்கினாள். "தத்தை! நான் இதுவரை கூறியதெல்லாம் உண்மை என்று தானே நம்பினாய்? அதுதான் இல்லை. இது உன் பொறுமைக்கு நான் வைத்த பரீட்சை. அவ்வளவுதான் எல்லாம் பொய்." செவிலி மீண்டும் பலமாக நகைத்தாள். தத்தை ஆறுதல் பெற்றுவிட்டாள். செவிலியின் சூழ்ச்சி வெற்றியைப் பெற்றுவிட்டது. சற்றே ஆறுதல் பெற்ற தத்தையின் தலையை மெல்லக் கோதிக் கொண்டே செவிலி சொல்லத் தொடங்கினாள். "நீ நினைக்கிறபடி உன் தந்தை உன்னை வேறோர் அரசனுக்கு மணம் முடிப்பதற்கு முடியாது. தன் தகுதிக்கு ஏற்ற தகுதி வாய்ந்த மணமகனையே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்த தகுதி அநேகமாக உதயணனிடம் தான் உள்ளது. இளமை, வனப்பு, இல்லொடு வரவு, வளமை, தறுகண், வரம்பில் கல்வி, தேசத்தமைதி, மாசில் சூழ்ச்சி என்ற எட்டுவகைத் தகுதிகளும் குறைவற நிறைந்த மன்ன குமரனுக்கே நின்னை நின் தந்தை மணமுடித்தல் கூடும். இவ்வெண் வகைத் தகுதிகளும் உதயணனிடம் நிறைந்துள்ளன. ஆகையால் மதிநலஞ் சிறந்த உன் தந்தை உனக்கேற்ற நாயகனாக உதயணனைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்." செவிலியின் இத்தேற்றுரைகள் தத்தையின் துயருக்குச் சற்றே ஆறுதலளித்தன. இந்த ஆறுதலால் தத்தைக்குப் புதிய ஊக்கம் பிறந்தது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். 'நான் உதயணனுக்கே உரியவள் என்னும் விதியை மாறுகொண்டு எந்தை தவறுவராயின் மறுபிறவியிலாவது உதயணனை அடையலாமென்னும் கருத்துடன் இப் பிறவியில் உயிர் விடுவேனேயன்றி இன்னொருவனுக்கு மனம் இணங்கி ஒப்பேன்' என்று எண்ணினாள். தத்தை வெறும் பெண் மகள் மட்டுமல்லள். அவள் தெய்வீகக் காதல் உலகின் ஒரு தனிச் செல்வி. வாழ்ந்தால் காதலுக்காகவே வாழவேண்டுமென்று நினைப்பவள். அந்தச் சிறப்பியல்தான் அவளை இத்தகைய மனத்திட்பம் கொள்ளத் தூண்டியது.

தத்தை கூறிய மொழிகள், ஏற்ற முன்கையில் தொடி வீழ்ந்தாற் போல் அமைந்தன சாங்கியத் தாய்க்கு. உதயணனுக்கு ஏற்ற மறுமொழியையே தத்தையிடம் எதிர்பார்த்த அவளுக்கு அப்படியே கிடைத்தது. 'பிச்சை யிடுக' என்று நீட்டிய கையில் பிச்சையிடுபவனுடைய கொடுக்கும் கரத்திலுள்ள பொன் வளையல் இயல்பாக நழுவி விழுந்தாற் போல் உதயணனுக்கு ஏற்ற மாற்றம் கோரும் செவிலிக்கு, அதுவே சிறந்த முறையில் வாய்த்துவிட்டது. செவிலி தன் தேற்றுரையின் பயனாக எதிர்பார்த்ததும் அதுதானே? பின்பு வாசவதத்தைக்குத் துணையாகத் தோழிப் பெண் காஞ்சன மாலையைக் காவல் வைத்துவிட்டு உதயணனைக் காணப் புறப்பட்டாள் செவிலித் தாயான சாங்கியத் தாய்.

8. சாங்கியத் தாயின் கதை

காஞ்சன மாலையைக் காவல் வைத்துவிட்டுக் கிளம்பிய செவிலி, வேல்முற்றத்தையும் மயிலாடு முன்றிலையும் கடந்து சென்று தத்தை யாழ்கற்கும் இடத்துக்கு அருகில் தகுந்த நேரத்தையறிந்து கீதசாலையின் ஒரு புறத்தே காத்திருந்தாள். உதயணன் யாழ் கற்பிக்கும் நேரமாகியதறிந்து அப்போது அங்கே வந்து சேர்ந்தான். வந்தவனைச் செவிலி குறிப்பாகச் சில சொல்லி மணல் முற்றத்திற்கப்பாலுள்ள மாதவிப் பந்தரைச் சார்ந்த புன்கமர மொன்றின் கீழ் அழைத்துச் சென்று இருக்கச் செய்தாள். சுற்றும் முற்றும் பார்த்துத் தங்கள் தனிமையை உறுதி செய்து கொண்டு, கண்ணினும் செவியினும் நண்ணியறியும் ஒற்றர்கள் யாருமில்லாமை யறிந்து சாங்கியத் தாய் அவனிடம் கூறுவாளானாள்; "நற்குடியிலே தோன்றிய அரசிளங்குமரனே! நின் போன்றோர் நருமதை போன்ற பெண்களின் விஷயத்தில் ஈடுபட்டுக் குடிவடுப்படுதல் என்னால் பொறுக்க முடியாது." செவிலியினுடைய கண்களில் கண்ணீர் துளித்து விட்டது. அன்பு உள்ளத்தோடு இயைந்த பாசம் என்பது சாதாரண சித்தாந்தம். சாங்கியத் தாயின் நிலையிலிருந்த அது உடலுக்கும் இயைபு தருகிறது.

அன்பு தன்னால் தொடர்புற்றார் துன்பங் கண்டபோது கண்ணீராய்த் தோற்றமளிக்கிறது. தான் கண் கலங்கும்படி தனக்கு முன் நின்று கூறும் செய்திகளைக் கேட்டு, 'இவள் யார்?' என்னும் ஐயக்குறி முகத்தில் தோன்ற உதயணன் வாளாவிருப்பதைக் கண்ட சாங்கியத் தாய் தன் வரலாற்றையும் தனக்கும் உதயணனுக்குமுள்ள தொடர்பையும் கூறுகின்றாள்: "யான் யார் என ஐயுற்று நோக்கும் அரசிளங்குமர! நீ சிறிதும் ஐயுறல் வேண்டா. நின்னால் வாழ்வு பெற்றவள் யான். அதை நீ விளக்கமாக அறியுமாறு இப்போது கூறுகிறேன் கேள். கௌசாம்பி நகரத்தைச் சேர்ந்த யான் ஒரு பார்ப்பனி. திருமணமாகிய சில நாள்களில், கணவன் என் இளமை நலமும் இன்பச் செவ்வியும் நோக்காது என்னைப் பிரிந்து நுந்தையின் அவைக் களத்தையடைந்து, புகழ் மிகப் பெற்று, வேற்று நாடுகள் சென்று, தன் கலைநிலை நாட்டுவானாயினன். பருவம் என்னைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டது. மகளிர்க்குப் பொற்பினுட் பொற்பாய், புகழ் தரும் கற்பை இழந்துவிட்டேன். யான் வழி தவறியதை அறம் கூறும் அவையும் அறிய நேர்ந்தது. செய்த குற்றத்திற்கு ஏற்ற தண்டனையும் விதித்தது. மணற் குடத்தோடு பிணித்து என்னை யமுனை யாற்றில் வீழ்த்தி விடும்படி தண்டனை கிடைத்தது. குற்றம் தலை மேலிருக்கும் போது உற்றதை மறுக்கவும் இயலவில்லை. ஒப்புக்கொண்டேன். இத் தண்டனை அடைந்தார்க்குச் செய்யும் வழக்கப்படி, என் தலையில் செங்கற்பொடியைத் தூவிப் பறையறைந்து, நகரறிய என் பிழை கூறி யமுனை ஆற்றிற்கு என்னை அழைத்துச் சென்றான் தண்டனையை நிறைவேற்ற வேண்டிய புலையனொருவன். அப்போது நீ, நின் இளம் நண்பர்களுடன் யமுனை நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தாய். என்னை நதியில் வீழ்த்துவதற்காகப் படகேற்றி நடு ஆற்றிற்குக் கொண்டு போயினர். நடப்பதென்ன என்றறியும் ஆவலினால் நீ என் செய்தியைக் கேள்விப்பட்டு ஓடோடியும் வந்து, என்னை மீண்டும் கரைக்குக் கொண்டு வரும்படி ஆணை தந்தாய். நின் ஆணைப்படி யான் கரைக்குக் கொண்டு வரப்பட்டேன். என்னை விரைவாகத் தோணியிலிருந்து இறக்கும் போது தோணியோட்டும் புலையனுடைய துடுப்பு என் நெற்றியில் வடுப்படுத்திவிட்டது. அந்த வடு இதோ இருக்கிறது" சாங்கியத்தாய் நெற்றியில் சுருண்டு படிந்திருந்த கூந்தலை விலக்கி வடுவைக் காட்டினாள். உதயணன் கூர்ந்து நோக்கினான். "யான் கரையில் இறக்கப்பட்டதும் நடந்த யாவற்றையும் விசாரித்தறிந்து கொண்டு நீ 'இவள் செய்தது மன்னிக்க முடியாத குற்றமேயானாலும், அதற்காக இவளுக்கு விதிக்கப்பட்ட இத்தண்டனை மிகுதியானது' என்று உரைத்தாய். ஏற்ற தண்டனையொன்றை யுரைக்கும்படி அருகே நின்ற அறிஞர்களைக் கேட்டாய். பலர் பலவாறு கூறினர். 'தாம் மேற்கொண்ட நெறியைப் பிழைத்தவர்கள், கைக்கொள்வதற்குரிய விரதமே இவளுக்கும் ஏற்ற தண்ட்னை' என்று அணித்தே நின்ற ஒரு குறிக்கோளான் கூறினான். அது ஏற்றதாக நினக்குப் படாமையால் மீண்டும் கேட்டாய். அது கேட்டு உன் அருகே நின்ற கோசிகன் என்னும் சேனைக் கணிமகன், 'இளமையில் கணவனைப் பிரிந்தமை காரணமாக நெறிக்கடந்தொழுகிய இவள் தவத்துறையிற் செல்லுதற்குரியள். இவளைக் கொல்லுதல் பாவமாகும். தவநெறியில் சில நாள் ஆழ்ந்திருந்து பின்னர் ஓரரசன் மேற்பார்வையில் அவன் அந்தப்புர மகளிர்க்கு அறநெறி புகட்டும் முதுமகளாக இவள் ஆவாள்' என்று கூறினான். அதுவே நினக்கும் பொருந்திய நெறியாகப் புலப்பட்டது. என்னை அவ்வாறே செய்யுமாறு கூறி அக்கொடுமையிலிருந்து விடுவித்தாய்" என்று சொல்லி நிறுத்தினாள் சாங்கியத் தாய். உதயணன் அவள் வாழ்விலே அதற்குப் பின்பு நடந்த நிகழ்ச்சிகளையும் தான் அறிய வேண்டுமென்று கூறவே அவள் மேலும் கூறுவாளாயினள்: "அங்கிருந்து சென்று கங்கைக்கரையை அடைந்த யான் வைர வியாபாரிகளுடன் வட தேசத்திற்குச் செல்லலானேன். வழியில் யான், தன் சீடர்களுடன் யாத்திரை செல்லும் சாங்கிய முனிவன் ஒருவனைச் சந்தித்தேன். அவனை அடிபணிந்து வணங்கிச் சாங்கிய மதத்திற் சேர்ந்து அவனோடு சென்றேன்.

நாளடைவில் சாங்கிய மத உண்மைகளை அந்த முனிவரிடமிருந்து நன்கு கற்றறிந்து சமயவாதம் புரிவதில் தேர்ச்சியடைந்தேன். இமயமலையிலுள்ள சாங்கியர் ஆசிரமத்தில் இரண்டாண்டுகள் தங்கினேன். பின்னர் சாங்கிய முனிவர், தம் சீடர்களுடன் தெற்கே குமரியில் நீராடப் போந்தார். யானும் அவருடன் புறப்பட்டேன். இடையே இந்நகரத்தின் பாலுள்ள காள வனத்தைச் சார்ந்த ஓர் தவப்பள்ளியில் சில நாள்கள் தங்கினார். பிரச்சோதனனுடைய அவையிலுள்ள பல சமயவாதிகளை வென்று புகழ்க்கொடி நாட்டும் பேறு அப்போது என் ஆசிரியனுக்குக் கிட்டியது. மன்னன் என் ஆசிரியன்பாற் பெருமதிப்புக் கொண்டான். யானும் பிரச்சோதனனுடைய அரண்மனையில் நெருங்கிப் பழகினேன். அரசமாதேவி என்னை மிக்க அன்புடன் போற்றி, என்பால் அறங்கேட்க ஆவல் கொண்டாள். எனவே நான் இங்கேயே தங்கிவிட்டேன். ஆசிரியர் முதலியோர் குமரியாடச் சென்றுவிட்டனர். அரண்மனையில் நிலையாகத் தங்கி அரசமாதேவிக்கு அறநெறி விளக்கி வருங்கால், சிறுமியாக இருந்த வாசவதத்தை என்னைப் பெரு விருப்புடன் பார்த்து மகிழ்ச்சியாகப் பழகுவாள். பழக்கம் வளர்ச்சியடைய அடைய நற்றாய்க்கு அடுத்த நிலையிலிருந்து அவளை யான் காக்க வேண்டியதாயிற்று. அரசமாதேவியும் அவ்வாறே காக்குமாறு வேண்டிக் கொண்டாள். ஆகவே யான் தத்தையின் செவிலித் தாயானேன்." சாங்கியத் தாய் இவ்வாறு தன் வரலாற்றை உதயணனுக்குக் கூறி முடித்தாள்.

சாங்கியத் தாயின் வாழ்க்கைக் கதையில் தானும் பெருமைக்குரியதொரு பங்கு பெற்றிருப்பதை அறிந்த உதயணனுக்கு அவளிடம் பேரன்பு உண்டாயிற்று. அவளை மதித்து வணங்கினான் அவன்.

9. பொருந்தா ஆசை

உதயணனிடம் மீண்டும் கேட்டாள் சாங்கியத் தாய்: "ஒழுக்கம் நிறைந்த நீ, ஆசைப்படத்தகாத சாதாரணக் கணிகையின் மேல் ஆசைப்பட்டாய் என்பது பொருத்தமில்லாமல் இருக்கிறது. இது உனக்குத் தகுமா?" உதயணன் உள்ளம் ஊசலாடியது. 'உண்மையை இவளிடம் சொல்லி விடலாமா? கூடாதா?'

உதயணன் உள்ளம் ஒரு சுழற்சி நிலையை அடைந்தது. முன்பு தெரிந்தவளாயிருந்தாலும் இப்போது, இவளிருப்பது பகைவன் நிலம். பகைவனுடைய அரண்மனையில் செவிலித் தாயாகப் பணிபுரிகிறாள் இவள். இவளை நம்பி உண்மையை வெளியிட்டு விடுதல் அவ்வளவு நல்லதன்று என்று உள்ளத்தை அடக்கினான் உதயணன். அடக்கியும் பயனில்லை. இறுதி வெற்றி உள்ளத்துக்குத்தான் கிடைத்தது. சாங்கியத் தாயையும் கைவிட்டு விட்டால் இதற்கு உதவி செய்ய வேறு வழியே இல்லை என்ற எண்ணம், அவளிடம் அவனை உண்மைக் காரணத்தைக் கூற வைத்துவிட்டது. 'நருமதை சம்பந்தம் ஏற்படக் காரணமென்ன? வாசவதத்தையை உதயணன் எந்த அளவு காதலிக்கிறான்? அந்தக் காதல் நோய் மறைய ஒரு திரையே நருமதை சம்பந்தம்' என்பதெல்லாம் உதயணன் கூற்றிலிருந்து செவிலிக்கு நன்றாக விளங்கிவிட்டன. மனம் விட்டுப் பேசினான் மன்ன குமரன். உருக்கமாக யாவற்றையும் கேட்டாள், சாங்கியத் தாய். உதயணன் பேச்சில் அவள் வெறும் வார்த்தைகளை மட்டும் கேட்கவில்லை. அதில் அவனுடைய சிறந்த உள்ளத்தையும், தத்தையின் பால் அவன் கொண்டுள்ள தெய்வீகக் காதலையும் கண்டு உளம் மகிழ்ந்தாள். உதயணனின் காதலைத் தத்தையிடம் சென்று கூறினால் அவள் தாபம் தணியுமென்பதைச் சாங்கியத் தாய் அறிவாள்.

உதயணன் கூற்று முழுவதையும் கேட்டறிந்து கொண்ட சாங்கியத் தாய், தத்தையின் காதல் துயர் நிலையை அவனும் அறிந்து கொள்ள வேண்டுமென்று அவனுக்குக் கூறத் தொடங்கினாள். தன் காதலியும் தன்னைப் போலவே பிரிவுத் துயரால் வாடுகிறாள் என்பதை அறிவது, அன்புலகில் ஒரு திருப்தியாகுமல்லவா? அது தெரிந்த செவிலி, உதயணன் உள்ளத்திற்கு அந்தத் திருப்தியை அளிக்க இதைத் தக்க இடத்தில் தக்க நேரத்தில் கூறவேண்டியவள் ஆகிறாள். "வேற்றரசர் மணத்தூது விடுத்தார்களென்றறிந்து தன் தந்தையோடு முனிவு கொண்டிருக்கிறாள் நின் தத்தை! நீ மணந்தால் வாழ்வு, கூடாதேல் சாவு - இந்த முடிவிற்கு வந்துவிட்டாள் அவள். 'பிற அரசர் மணத்தூது விட்டமையால் அவருள் சிறந்த பேரரசன் ஒருவனுக்கு நுத்தை நின்னை அளிப்பார்' என்றேன். அதைக் கேட்ட வாசவதத்தை நடுங்கித் துயருற்றாள். காவலாட்டியர் நாவிலெழுந்த விளையாட்டுப் பேச்சுக்களையும் அவ்வாறே வேம்பென வெறுத்தாள். 'தன் மேல் ஐயுற்ற இராமன் இரங்கி வருந்தும்படியாக மண்மகளே இடந்தா என வேண்டி உள்ளே மறைந்த சீதை போல யானும் செய்வேன்' என்கிறாள். நீ பிரிய நேர்ந்தாள் அவள் நெஞ்சு பொறுக்காது; அது நீறுபூத்துவிடும்" என்றிவ்வாறு தத்தையின் நிலையை உதயணனுக்குச் செவிலி விளக்கினாள்.

சாங்கியத் தாய் உதயணன் உள்ளத்துக்குத் திருப்தியை அளித்தாள். அதே பொருளைத் தத்தைக்காக அவனிடமிருந்தும் பெற்றுக் கொண்டாள். விடைபெற்றுச் சென்றாள். தனியே நின்ற உதயணனிடம் காஞ்சனமாலை வந்து, "இன்று யாழ் கற்கும் நேரம் கழிந்தது, நீங்கள் சென்று வரலாம்" என்று கூறிவிட்டுப் போனாள்.

உதயணன் அவளிடம் தத்தை அன்று செய்ய வேண்டிய யாழ்ப் பயிற்சி முறைகளை விவரித்து விட்டுச் சென்றான். இளவரசர்கள் யாவரும் தத்தம் துறையிற் தேர்ந்தனராகையால் விரைவில் அரங்கேற்றம் நடைபெறும். அப்போது வாசவதத்தையின் யாழ் அரங்கேற்றமும் நடைபெறுமென்று அறிந்தே உதயணன் இவ்வாறு கூறினான். காஞ்சன மாலை கன்னிமாடம் நோக்கி நடந்தாள். உதயணன் தன் மாளிகைக்குத் திரும்பினான்.

10. கலை அரங்கேற்றம்

அரங்கேற்றத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் விரைவாக நடந்தன. தத்தையின் யாழரங்கேற்றம் மட்டுமல்ல; மன்னகுமரர் உதயணனிடம் கற்ற கலையரங்கேற்றமும் உடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் அரசிளங்குமரர் போர்த்துறைக் கலைகள், பின்னர் யாழிசை வித்தகி தத்தையின் தேனிசை விருந்து, இவ்வாறு அரங்கேற்ரம் முறை செய்யப்பட்டிருந்தது. அரசகுமரர் மேடைக்கு வந்தனர். பிரச்சோதனன் அரியணைமேல் அமர்ந்திருந்தான். அருகே உதயணன் ஆசிரியன் என்ற முறையில் வீற்றிருந்தான். அவைக் களம் அறிஞர்களால் நிறைந்திருந்தது. தாம் கற்ற பலவகை நுண்கலைகளையும் யானையேற்றம், குதிரையேற்றம், வாட்போர், விற்போர் முதலிய போர்களையும், அவையினர் மகிழ வெளிக்காட்டினர் அரசிளங்குமரர். அறிஞர் புகழ்ந்தனர். அவையோர் பாராட்டினர். உதயணன் தானே அவற்றுக்கு ஆசிரியனென்ற எண்ணத்தால் இறும்பூது அடைந்தான். பிரச்சோதனன் மனைவி தன் குமாரரை ஈன்ற பொழுதிலும் பெரிதுவந்தாள். அந்த உவகையில் வேறோர் வியப்பும் கலந்திருந்தது. 'பகைவனாக இருந்து வந்த உதயணனல்லவா நம் புதல்வர்களைக் குலவிளக்காக்கி இருக்கிறான். என்னே அவன் பண்பு!' என்பது தான் அவளுடைய வியப்பு. அவையோர் அறியும்படி உதயணனை வாயாரப் புகழத் தொடங்கினான் பிரச்சோதன மன்னன். பாராட்டியும் பரிசு நல்கியும் நன்றி சொல்லிய பின்னர், மனம் விரும்பி உதயணனை விடுதலை செய்து அவன் நாட்டிற்கு அனுப்பிவிடுவதாகத் தான் கருதியிருப்பதையும் தன் அவைக்குக் கூறினான் பிரச்சோதனன். உதயணனுக்கு அளவிடற்கரிய பல சிறப்புகள் செய்யப் பெற்றன. பிரச்சோதனன் அவை முடிந்ததும் அந்தப்புரத்திற்குச் சென்றான். அப்போது தத்தையின் கலையையும் இப்போதே அரங்கேற்றச் செய்யலாம் என்று உதயணன் ஒரு தூதுவன் மூலம் பிரச்சோதன மன்னனுக்குக் கூறியனுப்பியிருந்தான். அந்தத் தூதுவன் கூறிய செய்தியைக் கேட்டு, மன்னன் முன்னிலும் மும்மடங்கு மகிழ்ச்சியுற்றான். அதோடு தத்தை யாழரங்கேற்றத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளையும், விரைவாகச் செய்யும்படி வினைவலார்க்கு ஆணையிட்டான். ஏற்பாடுகள் நடந்தன. வயிரியர், கூத்தர் முதலிய இசையோடுபட்ட பல் துறைக் கலைஞர்களும் பார்வையாளராக அழைக்கப் பெற்றனர். அரங்கில் எங்கும் அகிற்புகை மணம் எழும்பியது. அரங்கு எழில் நிலையமாக அலங்கரிக்கப் பெற்று விளங்கியது. மேடையை மறைத்து ஒரு மெல்லிய திரைச்சீலை தொங்கியது. அரங்கேற்றற்குரிய நாளில் அதற்கெனக் குறித்த போது கொண்டாட்டத்துடன் வந்து சேர்ந்தது. தத்தை ஆயமகளிர் புடைசூழ அழகுப் பாவையாக அரங்கினுட் புகுந்தாள். மன்னர் அவையின் நடு நாயகமாக விளங்கினார். அது மட்டுமல்ல. தத்தையின் தந்தை என்ற பாசமும் ஆவலுருவாக அவரிடம் விளங்கியது. அவைக்களம் கலைக்களமாகப் பொலிந்தது. அரசன் பக்கலில் அமைதியே வடிவாக அமர்ந்து கொண்டிருந்தான் வத்தவர் கோனாகிய உதயணன். திரை விலக்கப் பெற்றது. தெய்வமொன்று கையில் யாழேந்தினாற் போலக் கலைமகளோவெனக் கண்டார் ஐயுறும் வண்ணம் காட்சியளித்தாள் வாசவதத்தை. சாங்கியத்தாய், தந்தையாகிய பிரச்சோதனனை வணங்கிவிட்டு யாழ்கற்ற திறனைப் பின்னர் வெளிக்காட்டுமாறு தத்தையிடம் கூறினாள். அவ்வாறே தத்தை தந்தையை வணங்கி யாழ் நரம்புகளை மீட்ட ஆரம்பித்தாள். நால்வகைப் பண்ணும் எழுவகைப் பாலையும் நன்கறிந்த கலை நலங்கண்டு கலைத்துறை வாணரெல்லாரும் வியந்தனர். மூவேழ்திறமும் முற்ற விளங்கியது அவள் நல்லிசை. அவை முழுவதும், அந்த இசை நலத்தில் மயங்கியது. 'தத்தை தெய்வகன்னி' என்றார் சிலர். 'இன்னிசைச் செல்வியாகிய மாதங்கி இவளே' என்றார் பலர். பாராட்டுபவர் பலரானால் பாராட்டுகின்ற முறையும் பலவாகத்தானே இருக்கும்? வேறு சிலர், இதற்கு முழுமுதற் காரணனான உதயணனை வாயாறப் புகழ்ந்து வாழ்த்தினர். அரங்கேற்றம் வெற்றிகரமாக முடிந்தது. தான் வாசித்த யாழைத் தோழி காஞ்சனமாலையின் கையில் அளித்துவிட்டு மீண்டும் தந்தையை வணங்கி எழுந்தாள் தத்தை. வணங்கிய மகளை எழுப்பித் தழுவிக் கொண்டு பலபடப் பாராட்டி அவள் தாயினிடம் அனுப்பினான் மன்னன். வாசவதத்தையின் நற்றாய் மட்டுமல்ல மகளிர் எல்லோருமே அவளைத் தழுவி பாராட்டினர்.

முன்னர், மன்ன குமரர் கலை நலங்கண்டு உதயணனை பேரளவாகப் புகழ்ந்திருந்தான் பிரச்சோதனன். தத்தை யாழரங்கேற்றம் முடிந்ததும் உதயணனுடைய தனிமையின் முழு உருவமும் அவனுக்குத் தெரிந்தது. அதைக் கண்டுணர்ந்த மனோபாவம் வெளியாகும்படியாக அமைகிறது பிரச்சோதனன் பாராட்டு. "மருந்துக்கு பயன்படும் மரமொன்றை அது சாயும் வண்ணம் வெட்டியும் செதுக்கியும் உலகினர் பயன் கொள்ளுதல் போல, என்குடி பயனுறல் வேண்டி உதயணன் குடிக்கு யான் ஊறு செய்து விட்டேன். பகைவன் மக்களென மாறாது, உண்மையோடும் நம்பிக்கையோடும் என் மக்களுக்குப் பல்கலையும் புகட்டினான். அவந்தி நாடும் கௌசாம்பி நாடும் இனி ஒரு நாளும் பகை நினைவு கொள்ளக் கூடாது. ஒன்றுக்கொன்று உதவி வாழ வேண்டும். உதயணன் என்னால் சிறை செய்யப்பட்ட சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவன் நாட்டை வென்று கைக்கொண்ட ஆருணி அரசன், அதை உதயணனுக்கே அளித்துவிட்டு தன் நாடு செல்வதுதான் தக்கது. ஆருணி மறுத்தால், உதயணன் தலைமையில் என்குமரன் பாலகன் நடத்தும் பெரும்படை இன்றே புறப்படும்" என்று மாற்றவனாகிய ஆருணிக்கு ஓலை போக்கும்படி உத்தரவிட்டான். அரசனுடைய கட்டளைப்படி ஓலை எழுதுபவன் ஓலையை எழுதி அதற்கு அரக்குப் பொறியிட்டு அனுப்பினான். அரசன் பிரச்சோதனன் உதயணனுக்கு அரச மரியாதைகள் பலவற்றைச் செய்தான். நாடக மகளிரும் நுண்கலைப் பொருட்களும் நூலாகக் கலிங்கமும் தந்தப் பேழையும் யந்திரப் பொறிகளும் வேண்டிய மட்டும் அளித்தான். 'கைது செய்த உதயணனுக்கு இந்நிலையா என அவை வியந்துவிடுமோ?' என்று பிரச்சோதனனுக்கு ஐயம். அதை வெளிப்படையாகப் போக்க நினைத்து, "அவையோர்களே! முன்பு யான் இதே உதயணனைப் பல வகையிலும் துன்புறுத்த நினைத்தேன். இன்றோ பலவகையிலும் இவனுக்கு நன்மை செய்யவே விரும்புகிறேன். ஒருவருடைய நலன்களைப் புரிந்து கொண்ட பின் மனம் மாறி நன்மை செய்வது முரண்பாடு அன்று" என்று தன் செயல்களுக்கு விளக்கம் கூறினான். உதயணனை விடுதலை செய்து தக்க சிறப்புக்களுடன் வத்தவ நாட்டிற்கு அரசனாக அனுப்பிவிடக் கருதினான் மன்னன். அதற்கு ஆனவற்றை விரைவில் செய்யவும் தொடங்கினான். உதயணன் விடுதலை பெற்று ஊர் திரும்ப வேண்டிய நல்ல நாள் நெருங்கி வந்தது. அரசன் இவ்வாறு உதயணனை நகரனுப்ப ஏற்பாடு செய்து வந்ததைத் தன்னுடைய ஒற்றர் மூலம் யூகி அறிந்து கொண்டான். பிரச்சோதனன் ஏற்பாட்டின்படி உதயணன் கௌசாம்பி திரும்பி விடுவானாயின் யூகியின் சாபம் பொய்யாகிப் போகும். தன் சபதத்தை மெய்யாக்க வேண்டிய தருணத்தில் இத்தகைய இடையூறு வந்து சேர்ந்ததை யூகியாற் பொறுக்க முடியவில்லை. எப்படியும் சபதம் நிறைவேறியாக வேண்டும். யூகியின் மூளை வேகமாக வேலை செய்தது. முடிவில் ஒரு சூழ்ச்சித் திட்டம் தோன்றிவிட்டது. யூகி தனக்கு வேண்டியவளான பாகீரதி என்னும் பெண்ணைத் தெய்வாவேசம் கொண்டவள் போல் வேடமுறச் செய்து, நீர்விழாக் கொண்டாடும் படியாக நகர மக்களைத் தூண்டும்படி அனுப்பினான். கரிய உடையணிந்து பிளந்த வாயுடன் பைத்தியம் கொண்டவள் போல் சிரித்தும் பேசியும் ஆடியும் பாடியும் நகர வீதிகளில் திரிந்து கொண்டே நீர்விழாக் கொண்டாடும்படி மக்களை வற்புறுத்திப் பயமுறுத்தினாள் பாகீரதி. "யான் முன்னர் நளகிரியை மதங்கொள்ளச் செய்த தெய்வம். சென்ற ஆண்டும் நீராட்டு விழா நிகழவில்லை. இந்த ஆண்டும் நீராட்டு விழா நிகழாதாயின் யான் மீண்டும் நளகிரி மதங்கொள்ளச் செய்வேன். நினைவிருக்கட்டும். நீராட்டு விழாவை மறந்து விடாதீர்கள்" என்று கூறிக் கொண்டே பாகீரதி உஞ்சை நகரத்துத் தெருக்களில் சென்றாள். தோள்வரை தொங்கும் அவள் காதணிகளையும் விரித்த கருங்குழலையும் வீசி நடக்கும் கரங்களையும் இடிபோன்ற பேச்சுக் குரலையும் கண்டு நகர மக்கள் அவளைத் தெய்வமென்றே நம்பினர். அந்த நம்பிக்கையால் மீண்டும் நளகிரியின் அழிப்பு வேலை ஆரம்பமாகி விடுமோ? என்ற அச்சமும் எழுந்தது. நளகிரியை நினைக்கும் போதே நடுங்கினர் மக்கள். கரிய நிறமுள்ள கொழுத்த பன்றியால் முன்பு எப்போதோ துரத்தப் பெற்ற நாய், பின்பு கரியேறிய சோற்றுப் பானையைக் கண்டதும், 'இது அந்தப் பன்றிதானோ!' என்று எண்ணி ஓடுவது போல ஏற்கனவே நளகிரியால் துன்பமுற்றிருந்த மக்களுக்குப் பாகீரதி கூற்று முழுதும் அதே அச்சத்தை உண்டாக்கியது. நகரின் பெரிய மனிதர்கள் நாடு காவலனைத் தேடி ஓடினர். தெய்வ ஆவேசத்தில் கேட்ட செய்தியைப் பரபரப்புடன் கூறினர். அரசன் சிந்தித்துப் பார்த்தான். நீர்விழாவிற்கு உடன்பாடு தந்தான்.

11. உவகைத் திருவிழா

அரசன் உடன்பாடு பெற்ற பின் சேனாபதி நீராட்டு விழாவிற்குரிய நாளைக் குறிப்பிட வேண்டியவனானான். மறுநாள் நீராட்டுக்கு ஏற்றதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது. முரசெறி வள்ளுவன் நகர் முழுதும் நாளை நீராட்டு விழா நிகழுமென்பதை அறிவித்தான். நகர் முழுவதும் ஒரே ஆரவாரமயம். விடிந்தால் திருவிழா. விறுவிறுப்புக்குக் கேட்கவா வேண்டும்? ஊர்திகளை ஏற்பாடு செய்வதில் சிலர் ஈடுபட்டனர். ஆடல் விழாவிற்கு வேண்டிய அலங்காரப் பொருள்களைச் சேகரிப்பது பலருடைய வேலையாயிற்று. இளமகளிர் வளைக்கரம் இசை முழங்க, வாசனைச் சுண்ணங்கள் இடித்தனர். தோணிகளும் படகுகளும் துறைதோறும் குழுமின. வான் கிளர்ந்தது போல வனப்பொடு பொலிந்தது அவ் வளநகர். நாளைக்கு நீராட்டு விழா நெருக்கடியில் தான் யூகியின் சபதம் நிறைவேற வேண்டும். விழா ஆரவாரத்தில் மக்களும் அரசரும் தம்மை மறந்திருப்பர். நகரில் ஈ காக்கை இராது. யாவரும் நீர்த் துறை சென்றிருப்பர். அந்நேரத்தில் நகர்க்குத் தீ மூட்டிவிட்டு நீர்த்துறையிலுள்ள உதயணனைத் தத்தையுடன் நாடு கடத்திவிடுவது என்பதுதான் யூகி போட்டிருந்த திட்டம்.

விழா வெறும் நீராட்டு விழாவாக மட்டும் வரவில்லை. உவகைத் திருவிழாவாக வந்தது. ஊர் களிக்கும் பெரு விழாவாக வந்தது. விழா யாத்திரை தொடங்கியது. யாழுங் குழலும் நல்லிசை எழுப்ப, முரசும் முழவும் ஒலி வளர்க்க, ஆரவார யாத்திரை ஆரம்பமாகிவிட்டது. ஆடவர், பெண்டிர், சிறார் அனைவரும் விழா யாத்திரையிற் கலந்து கொண்டனர். குதிரையேறிச் செல்வோரும், யானையேறிச் செல்வோரும், கொல்லப் பண்டிகளிற் செல்வோரும், பல்லக்குகளிற் செல்வோருமாகப் பரவச யாத்திரையை நடத்தினர். ஊரின் கட்டளை வாயிலைக் கடந்து சென்ற மக்கள் கூட்டம் கடல் போல விளங்கிற்று.

மக்கள் ஆற்றங்கரையை அடைந்தனர். ஆற்றின் இரு கரையிலும் அசோக மரங்களும் இளங் கமுக மரங்களும் செறிந்து விளங்கின. பல சோலைகளில் மயிலும் கிளியும் மந்தியும் குயிலும் பயின்று விளையாடின. தோட்டத்திலுள்ள பெரிய மரங்கள் தோறும் அழகிய ஊஞ்சல்கள் (ஊசல்கள்) தொங்கின. ஊசல்களிலெல்லாம் ஆடும் மக்களின் கூட்டம் நிறைந்திருந்தது. அக் காட்சி காணக் கவின் மிகுந்து விளங்கிற்று. நீரங்காடிக்குச் சமீபத்தில் பலபல கலைப் பொருள்களை விற்கும் வாணிகர் கடைகள் அமைத்தனர்.

நீரங்காடியைச் சூழ இருந்த கடைகளில் மதுவும் கத்தூரியும் மண்கலன்களும் உடை வகைகளும் விற்கப் பெற்றன. நீராடு விழாவிற்காக வந்த மக்கள் மணற் பரப்பிலே தத்தம் இருக்கைகளைச் சமைத்துக் கொண்டனர். பந்தரும் படப்பும் கலிங்கம் தோய்ந்த காசு பொதி சிற்றில்களும் சமைக்கப் பெற்றன. அந்த அவசரத் தேவையை உத்தேசித்தெழுந்த வீடுகளிலும் அவர்களுடைய அலங்காரக் கலையின் நுண்ணியத்திறன் தோன்றியது. நதிக்கரையை ஒட்டி நீரிலே பாய்ந்து விளையாடுதற்கு உரிய நீர் மாடங்களை அமைத்தனர். ஆற்றைச் சூழ எங்கும் விழாக் கோளாளர் மொய்த்துச் சூழ்ந்தனர். நீராட்டு விழா மன்னவன் பணியை எதிர்நோக்கிக் காத்திருந்தது. நல்ல நாளிலே எல்லோரும் ஒன்று கூடி நல்லதைப் பகுத்து கொண்டு மகிழ்வது நம்மவர்களுடைய தலை சிறந்த பண்பாடு. இதை நன்குணர்ந்த பிரச்சோதனன், எத்தகைய குற்றம் செய்தவர்களாயினும் இவ்விழா மகிழ்ச்சியிற் பங்கு கொள்ள வேண்டும் என்று அறிவிக்கச் செய்தான்.

இவ்வாறு முரசெறி வள்ளுவ முதுமகன் அரசுரை ஆணையை நகரறியப் பரப்பினான். விழா நிகழும் இருபத்தொரு நாளும் மெய்காவலர்களன்றிப் பிறபடைகளை நீக்கித் தனியாக இருப்பான் மன்னவன். அழகிற் சிறந்த பெண்யானை ஒன்றின் மேலேறிப் பிரச்சோதன மன்னன் விழாவிற்குப் புறப்பட்டான். அரசமாதேவி முதலியோர் யானைத் தந்தங்களால் இயற்றப் பெற்று வலிய எருதுகள் பூட்டிய பாண்டியங்களில் சென்றனர். நீராட்டிற்கு வேண்டிய பலவகைப் பொருள்களையும் அரசமாதேவியருக்குரிய குற்றிள மகளிர் பின்னே கொண்டு சென்றனர். சேனாபதி மகளைத் தத்தை அலங்கரித்தாள். காஞ்சனமாலை தத்தையை அலங்கரித்து நீராட்டிற்குப் புறப்பட ஏற்பாடு செய்தாள். தத்தை ஒருவையப் பண்டியில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டாள். வண்டி புறப்படும் போது காளையின் குளம்பு வழுக்கவே பாகன் அவ் வண்டியை நீக்கிவிட்டு மல்லர் தூக்கும் மாடச் சிவிகை ஒன்றில் அவளை ஏற்றினன். தத்தை ஆயமகளிர் சூழ விழாவிற்குப் புறப்பட்டாள். இதற்குள் சிவேதன் மூலமாகப் 'பத்திராபதி' என்ற இலக்கணக் குறைவில்லாத பெண் யானையை உதயணனுக்கு அனுப்பி அதிலேறி வருமாறு பிரச்சோதனன் சொல்லிவிட்டிருந்தான். உதயணனுடன் வயந்தகனும் வர, இருவருமாக நீர் விழாவிற்குப் புறப்பட்டுச் சென்றனர். நகர நம்பியர் மன்னவன் தங்கியிருந்த சோலையில் கூடி ஆரவாரம் செய்தனர். நீராடுவதற்கு முன் அரசன் பலவகைத் தானங்களைச் செய்தான். பொன்னும் மணியும் முத்தும் வாரி வாரி வழங்கப் பெற்றன. நீராட்டு ஆரம்பமாகியது. உதயணன் தன் பொறுப்பிலிருந்த அரசகுமரரை மனம் விரும்பிய இடங்களிற் சென்று ஆடுமாறு கூறிவிட்டுத் தான் ஓர் பாங்கரிற் சென்றான். மன்னவன் தலைப்புனல் ஆடியபின், மக்கள் நீராடத் துறைகளில் இறங்கினர். அரசனைப் போல் மக்களும், 'ஏழைகளே இல்லாமல் செய்து விடுவோம்' என உறுதி கொண்டாரோ என ஐயுறும் வண்ணம் கொடைத் தொழில் புரிந்தனர். கொடுப்போர் தொகை பெருகிற்றே ஒழியக் கொள்வோர் யாருமில்லை. ஏனென்றால் கூடியிருந்த எல்லோருமே கொடுக்கும் ஆற்றலுடையோரே அன்றி, வாங்கும் ஏழ்மையுடையோர் எவரும் இல்லை.

நீராட்டு விழாவின் ஆரவாரக் காட்சிகள் காணுமிடமெல்லாம் தென்பட்டன. யானைகளும் குதிரைகளும் நெருங்கின.

ஏற்றி வந்த மகளிர் அஞ்சி ஓட, தான் மதங்கொண்டு பொய்கையொன்றில் வீழ்ந்து கலக்கியது ஓர் களிறு. நீராடுங்கால், பொன்னரிமாலை தன் முதுகிற் புடைப்பக் கணவன் தட்டி அழைக்கின்றான் என்று திரும்பி நோக்கி ஏமாந்தாள் ஓர் இளநங்கை. கள் விற்கும் வாணிக மகள் ஒருத்தி தனது வெள்ளி வள்ளத்தை ஒரு புறம் வைத்துவிட்டு ஏதோ கவனமாக இருந்தாள். அப்போது ஒரு குரங்கு அதை எடுத்துக் கொண்டு மரக்கலத்தின் கூம்பில் ஏறியது. அது சந்திரனைக் கைப்பற்றிக் கொண்டு வானில் ஏறும் தெய்வ மகளிர் தோற்றம் போலிருந்தது. தன் எதிரே வந்த அந்தணன் ஒருவனை, 'மதுவுண்பதிலுள்ள இழிவென்ன? நீ ஏன் அதை உண்ண மாட்டேனென்கிறாய்? தக்க காரணம் கூறு. இல்லையானால் நின்னைத் தொட்டு விடுவேன்' என்று மிரட்டினான் ஒரு குடியன். எட்டி குமரன், ஒருவன் இன்னிசை வீணை வாசித்தான். மயிலொன்று தோகை விரித்தாடியது. அறச்சாலைகளில் அந்தணர் உண்டி நுகர்ந்தும் நுகர்வித்தும் அறநெறி பேணினர். மகளிர் குரவையொலி ஒருபுறம் இனிமை செய்தது. தன் மெல்லிய வெண்பட்டாடையை நீரிற் பறிகொடுத்த பெண்ணொருத்தி நுரையை ஆடையென்று கையால் அரித்து, அஃது ஆடையின்மையின் வெட்கிதலை குனிந்தாள். கள் குடியன் ஒருவனும் அவன் காதலியும் ஒருபுறம் ஊடல் நாடகம் நடத்தி ஊர் சிரிக்கச் செய்து கொண்டிருந்தனர். சேனை வாணிகன் மகள் அணிந்திருந்த பொன்னரி மாலை நீரோடு போயிற்று. அதை அவளருகில் நீராடிக் கொண்டிருந்த மைத்துன முறைமையனான மன்னன் கைப்பற்றி, அவளை மெல்லத் தழுவி அம்மாலையை எடுத்துக் கொணர்ந்து அணியத் தலைப்பட்டான். அவள் நாணி விலகினள். அது கண்டு அவன் 'நீ விலகினால் மாலையைத் தொலைத்த செய்தியை எல்லோரிடமும் கூறிவிடுவேன்' என்று பயமுறுத்தி அவளை இசையச் செய்தான். இவ்வாறு பல்வகை இன்ப நிகழ்ச்சிகளுடன் நீராட்டு விழா இனிது நடந்து கொண்டிருந்தது. தோணியேறி நதியினிடையே சென்று நகர நம்பியரும் நங்கையரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து விழாவிற்கு ஒரு தனி அழகைக் கொடுத்தனர். பேதை முதல் பேரிளம் பெண்டிர் ஈறாக எழுபருவ மகளிரும் நீராட்டின்பந் திளைத்தனர். இதழ்கள் சூழ்ந்த அல்லிக் கொட்டை போல ஆயமகளிர் புடைசூழத் தத்தை நீராடத் துறை சேர்ந்தாள். அவளுடைய நீராடல் தொடங்கியது.

12. தலைநகர் தீப்பற்றியது

வாசவதத்தையின் நீராடல் முடிந்த பிறகு செவிலியர் முதலியோர் அவளை அலங்கரித்தனர். இதற்கிடையில் உதயணன், பத்திராபதியின் மேலேறித் தத்தை இருந்த துறைக்கும் பக்கத்தில் வந்து சேர்ந்தான். சூர் தடிந்த பிறகு பிணிமுகம் என்ற யானையிலேறி முருகக் கடவுள் தோன்றியது போல உதயணன் அப்போது விளங்கினான். ஏறக்குறைய இதே சமயத்தில் யூகியின் திட்டம் நடைபெற வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. விழா ஆரவாரம் அதற்கு ஏற்ற வாய்ப்பாயிற்று.

பத்திராபதியின் மேல் அமர்ந்திருந்த உதயணன் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்தான். அவன் உள்ளத்தின் அடித்தளத்தில் சிறு பொறாமைக் கனல் தெறித்து விழுந்தது. காரணம் வேறொன்றும் இல்லை. அந்நிகழ்ச்சிகள் யாவும் மாற்றவனாகிய பிரச்சோதனனுடைய செல்வப் பெருக்கத்தைக் காட்டுவன வாயிருந்தமைதான் மெய்க் காரணமாம். தன்னை அவன் செய்த இழிவும் அப்போது அவன் நினைவில் தோன்றி மறைந்தது. நிறைய நன்மை செய்திருந்தாலும் பிரச்சோதனன் செய்த சிறு இழிவே அவன் மனத்தில் கனலாக உறைத்தது. கனல் சற்றே மனத்தில் பரவியது. அதை அவிக்க வேண்டுமானால் பிரச்சோதனன் செய்கைக்குச் சரியான பழிவாங்குவதுதான் வழி. அதை அவிக்கும் தண்ணீர் கூட அதுவாகத்தான் அமையும்.

பாம்பின் மேல் சட்டை சூழ்ந்தாற் போலத் தன்னைச் சுற்றி வெளியே பிறரறியப் புலப்படாமல் சூழ்ந்திருக்கும் படையுடன் காத்திருந்த உதயணன் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். பிரச்சோதனன் பண்பட்ட மனோபாவமுடைய மன்னன் என்பதை உதயணன் பின்னால் பலவாறு அறிந்திருந்தும் கூட, அவன் தன் பகைவன் என்ற உணர்ச்சி மனத்தில் ஒரு மூலையில் நிரந்தரமாக இருந்தே வந்தது. அந்தப் பழிவாங்கும் எண்ணத்திற்கு யூகி திட்டம் தீட்டிக் கொடுத்திருந்தான். காலம் அதற்கு வாய்ப்பை வரவேற்றுக் கொண்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் மனத்தில் பொறாமைக் கனல் மூளவேண்டிய அவசியம் நேர்வது இயற்கை தானே. கத்திமுனையில் பழிவாங்க விரும்பவில்லையாயினும் தான் அவமானப் படுத்தப் பட்டது போல் பகைவனையும் அவமானப்படுத்திவிட வேண்டுமென்பது தான் உதயணன் கருத்து. அதில் அவனுடைய காதலும் கலந்திருந்தது.

மாற்றான் செல்வ வளங்கண்டு மனங்கனன்று புகைய, வாசவதத்தை நீராடிக் கொண்டிருந்த துறையருகே பத்திராபதியின் மேலமர்ந்து, சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளைக் கண்டு கொண்டிருந்தான் உதயணன். அப்போது வயந்தகன் அங்கே விரைவாக வந்தான். வந்தவன் நேரே உதயணன் அருகிற் சென்று காதோடு காதாக ஏதோ கூறினான். யூகியின் திட்டங்கள் வயந்தகனால் உதயணனுக்கு விவரிக்கப் பெற்றன. பிரயாணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் இரகசியமாகக் குறைவறச் செய்துவிட்டு வந்திருந்த வயந்தகன், உதயணனை நோக்கிக் கூறுகின்றான்: "யானை தனக்குத் தீங்கிழைத்தவனை ஒரு போதும் மறப்பதில்லை. உற்ற காலம் வந்த போது பழிவாங்கவும் தவறாது. அந்த நிலையில் தான் நீயும் பிரச்சோதனனை இப்போது பழிவாங்க வேண்டியிருக்கிறது. நம்மைச் சூழ்ச்சிக்கு உட்படுத்தியவனை நாமும் சூழ்ச்சிக்கு உட்படுத்துவதில் குற்றமொன்றும் இல்லை. யூகி இதை உன்னிடம் நன்கு வற்புறுத்திச் சொல்லும்படி கூறினான். நீயோ இப்போது பத்திராபதியின் மேலே அமர்ந்திருக்கிறாய். இடமோ தத்தை நீராடும் துறைக்கு வெகு சமீபம் தான். ஏற்கனவே யூகியால் நகருள் அனுப்பப் பெற்றிருக்கும் கள்ள மகளிர், தலை நகருக்குத் தீயிட்டுவிடுவர். அங்கே தலை நகரில் அவரிட்ட தீப்புகையை மேலே வானிற் கண்டதும் தத்தையைக் கைப்பற்றிப் பத்திராபதியின் மேல் ஏற்றிக் கொண்டு நீ புறப்பட்டு விடு. அவ்வாறு நீ தத்தையை யானைப் பிடரியின் மேல் ஏற்றிக் கொண்டதும், அங்கங்கே ஒளிந்திருக்கும் நம்முடைய வீரர்கள் வெளிப்பட்டு 'உதயணன் வாழ்க' என்ற வாழ்த்தொலியுடன் நின்னை சூழக் காவலாகத் தொடர்வர். எதிர்த்தோர் தலைகளை அவர்கள் வாள்கள் குருதி சுவைத்துவிடும். நீ தத்தையுடன் பிடிமேலிருந்து அதனை வேகமாக நின் நாட்டிற்குச் செலுத்து; பிடி இங்கிருந்து ஐந்நூறு காதமுள்ள நம் நாடுவரை ஓடாதாயினும், நானூறு காதமாவது நிச்சயமாகச் செல்லும். அதற்குப் பின்பு பிடி வீழ்ந்திடினும் கவலை இல்லை. குறும்பரும் வேடர்களும் நிறைந்த எஞ்சிய நாட்டுப்புற வழியில் நமக்குத் துன்பம் நேருமாயினும் அவற்றை ஒருவாறு நீக்கி நாடு சென்றடைய முடியும். இவற்றை நீ உறுதியாகச் செய்து வெற்றிபெற வேண்டுமென்று யூகி உன்பாற் கூறும்படி சொன்னான். நின் வெற்றியை எதிர் நோக்கியே யூகி இத்திட்டங்களை வகுத்துள்ளான்" என்று வயந்தகன் கூறி முடித்தான். உதயணன் ஆழ்ந்து சிந்தனை செய்தபின் தலைநிமிர்ந்து வயந்தகனை நோக்கினான். "யானும் யூகியும் தீதில்லாது உயிர் வாழும்வரை வெற்றிக்கு அழிவே இல்லை. வானகமாயினும் அடிபணியச் செய்வோம். அவ்வாறிருக்க இஃது என்ன பெரிய செயல்? இதை எளிதில் வெற்றி கொள்ளலாம்" என்று கூறி, ஓர் குறுநகை புரிந்தான் உதயணன். வயந்தகன் விடை பெற்று மீண்டும் உடனே வருவதாகக் கூறிவிட்டுச் சென்றான்.

நீராட்டு விழா அழகை விரும்பிப் பார்ப்பவன் போலத் தத்தை நீராடும் துறைக்கு மிகவும் அண்மையில் அகலாமலும் அணுகாமலும் பத்திராபதியின் மேல் வந்து நின்று கொண்டான் உதயணன். அப்போது காற்றும் மழையுமாகத் திடீரென்று பெரிய புயலொன்று வீச ஆரம்பித்தது. மறைந்து ஓரிடத்தே இருந்த யூகி அங்கே புயலெழுந்தது கண்டு கனவில் வந்த செல்வத்தை நனவிற் பெற்றாற் போன்ற மகிழ்ச்சியுடன், தமர் அறியக் குறிப்பாகப் பெருமுரசு ஒன்றைக் கொட்டினான். யூகி முரசு கொட்டியதும் அங்கங்கே ஒளிந்திருந்த வீரர்கள் 'உதயணன் வாழ்க' என்ற ஆரவாரத்துடன் எழுந்தனர். அதே சமயத்தில் நகருள் யூகியால் ஏவப்பட்ட கள்ள மகளிர் ஊருக்குத் தீயிட்டனர். எங்கும் எழுந்தது பெருந்தீ. மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. குழந்தைகளும் முதியோரும் கன்று கறவைகளுமாக நகரில் பலர் தீக்கிரையாகி விடுவார்களே என்று கவலைப்பட்டு அரற்றினார்கள். நீராடு துறையிலிருந்த மக்கள், நீராடுதலையும் விடமுடியாமல் நெருப்புப் பற்றியிருக்கும் நகருக்குள்ளும் போக முடியாமல் இருதலை கொள்ளி எறும்பு போல மக்கள் திணறிய போது யூகியின் கலகமும் தொடங்கிற்று. இதைக் கண்டு மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. "நீர்விழா என நேரம் தெரிந்து பகைவர் படையெடுத்தனரோ? நளகிரிக்கு மீண்டும் மதம் மூண்டு விட்டதோ?" என்று பலர் பலவாறு கூறினர். நீராட்டு விழாவின் குதூகலம் ஒரே கூக்குரலாகவும் அழுகுரலாகவும் மாறியது. ஒன்றும் புரியாது அங்குமிங்கும் ஓடி உலைந்தது மக்கள் கூட்டம். நகரினின்றும் செந்தீ நாக்குகள் மேல் நோக்கி எழுந்தன. புயலோடு புயலாக முழங்கிய மேகங்களின் இடி முழக்கைப் பகை யானைகளின் முழக்கென்று அஞ்சி அங்கிருந்த யானைகள் நிலைகெட்டு ஓடின. ஒன்றும் புரியாத மயக்கத்தில் ஆழ்ந்த பிரச்சோதன மன்னன், யானைகளால் அரண் ஒன்று அமைத்து, அதன் நடுவே உரிமை மகளிரையும் சுற்றத்தினரையும் பாதுகாப்பாக இருக்கச் செய்தான். இருந்தும் புதிதாகப் பிடித்து வரப்பெற்ற யானைகள், தம் போக்கில் தறிகெட்டுச் செல்வதைத் தடுக்க இயலவில்லை. நளகிரியும் மதங்கொண்டது. எதிரே தோன்றிய பகை வீரர்களை வாளிற்கு இரையாக்கித் திரிந்து கொண்டிருந்தனர் உதயணன் வீரர். எங்கும் அச்சமும் வியப்பும் கலந்த ஆரவார வேதனை. நீராட்டு விழா போராட்ட விழாவாக முடிந்தது.

13. காப்பது என் கடன்

எங்கும் கலவரம் மிகுந்து காணப்பட்ட அத்தருணத்தில் வாசவதத்தையின் நினைவு வரப்பெற்ற பிரச்சோதனன் திடுக்கிட்டு, 'யாது செய்வது' எனத் திகைத்தான். உடனே உதயணனைப் பற்றிய கருத்து எழுந்தது. தன் மாணாக்கியாகிய தத்தையைக் காப்பது உதயணன் கடனெனச் சிலர் மூலம் அவனுக்குச் செய்தி சொல்லி அனுப்பினான் பிரச்சோதன மன்னன். பிரச்சோதனன் தனக்கு அனுப்பிய செய்தி கேட்டு, கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததென மகிழ்ந்தான் உதயணன். தத்தையைக் கைப்பற்றத் தானே அவன் அங்கே நிற்கிறான்? தக்க செய்தியை மன்னனும் அனுப்பிவிட்டான். இனிச் சற்றளவு தடையும் இருக்க நியாயமில்லை. 'வானவெளி இடிந்து வீழினும் வீழ்க, மன்னர் தத்தையைப் பற்றிச் சிறிதும் கலங்க வேண்டா. அவளைக் காப்பது என் கடன்' என்று மறுமொழி கூறி அனுப்பிவிட்டுத் தத்தை நீராடும் துறை நோக்கிப் பத்திராபதியை விரைவாகச் செலுத்தினான் உதயணன்.

தத்தை நீராடும் துறையை அடைந்த உதயணன், "இனி இவள் இங்கே சிறிது நேரமும் தங்குதல் நன்றன்று. என்னுடன் வருக! பிடியேற்றிச் சென்று தத்தையைக் காப்பது என் கடனென ஆணையிட்டிருக்கிறார் அரசர்" என்று அவள் ஆயத்தாரை நோக்கிக் கூறினான். அதைக் கேட்ட வாசவதத்தை நாணமும் மகிழ்ச்சியும் கலந்து கால் நிலங்கிளைப்பக் காதலுணர்வு மேலிடத் தலைகுனிந்து நின்றாள். நிறைக்கும் நாணத்திற்கும் அவளுள்ளே ஒரு பூசல் நடந்த வண்ணமிருந்தது. உதயணனை நினைத்தாலோ நெஞ்சம் உருகியது.

ஆனால் அவனோடு எப்படி யானையில் ஏறிப் போவதென நாணம் தடுத்தது. காஞ்சனமாலை என்ற தோழி தத்தையைத் தன் கைகளால் தாங்கிய வண்ணம் பிடியின் மீது ஏற்ற அருகே அழைத்து வந்தனள். தத்தையைக் கைகொடுத்து யானை மேலே தூக்கிப் பிடரியின் மீது ஏற்றிக் கொண்டான் உதயணன். ஒருவரை ஒருவர் கைப்பற்றிய போது அவர்களுக்குள் ஏதோ புரிய முடியாத இன்ப மயக்கம் புகுந்து விளையாடியது. பூங்கொடி ஒன்றை மேலே தூக்குவது போன்ற பொலிவையும் மென்மையையும் உதயணன் உணர்ந்தான். மனத்திலே கோயில் கொண்ட காதலனின் கரங்கள் மேலே எடுத்தணைப்பதைத் தத்தை உணர்ந்தாள். பிடியானை நடந்தது. உதயணன் ஊறேதுமின்றி வெற்றியுற்ற பெருமிதம் கொண்டான்.

தத்தைக்குத் துணையாகக் காஞ்சனமாலையும் பிடியில் ஏறிக் கொண்டாள். அப்போது வயந்தகன் தன் கையில் கோடபதி என்ற யாழுடன் வந்து நின்றான். தத்தை உதயணன் வடிவழகை நோக்கி வியந்த வண்ணம் இருந்தாள். அப்போது தத்தையைக் கண்டு பேச வருபவள் போல சாங்கியத் தாய் அங்கே வந்தாள். யூகியின் அங்க அடையாளங்களை அவள் பால் விவரித்து, மேலே நிகழ வேண்டிய திட்டங்களை விரிவாக எழுதியுள்ள ஓலையொன்றை யூகியிடம் அளிக்குமாறு அவளிடம் உதயணன் தந்தான். இது மிக மறைமுகமாக நடந்தது. பிறரறியாதபடி ஓலையைப் பிடியின் மேலிருந்து கீழே நழுவவிட்டான் உதயணன். வயந்தகன் சாங்கியத் தாயிடம் அதை எடுத்துச் சேர்ப்பித்தான். சாங்கியத் தாய் யூகிக்கான திட்டங்களும் சூழ்ச்சியும் அடங்கிய ஓலையைக் கொண்டு சென்று மறைந்தாள். செல்லும் போது தத்தையிடம் கண்கள் நீர் பெருக்க அவள் விடை பெற்றுக் கொண்ட காட்சி மறக்க முடியாதது. வயந்தகனும் ஏறிக் கொண்ட பின் பிடியைத் தன் நாடு செல்லும் பெருவழி நோக்கி விரைவாக நடத்தினன் உதயணன். இதுவரை ஒன்றும் புரியாமல் அரசனாணையால் தத்தையை உதயணன் காத்தற்காகப் பிடியேற்றுகிறான் என்று எண்ணியிருந்த பிரச்சோதனனின் வீரர் இப்போது திகைப்புடன் திடுக்கிட்டனர். யூகியின் வீரர்களுக்கும் உதயணன் போக்கைத் தடுக்க முன் வந்த உச்சயினி வீரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. போராகவும் மாறி நிகழ்ந்தது. பிடியின் மேல் தத்தை, காஞ்சனமாலை, வயந்தகன் இவர்களுடன் விரைவிற் சென்று கொண்டிருந்த உதயணனின் முன்னே வராகனென்ற பிரச்சோதனனுடைய வீரன் எதிர்ப்பட்டான். அவ்வீரன் தன்மேல் சந்தேகமுற்று ஏதேனும் ஊறு செய்தலும் கூடும் என்றெண்ணி உதயணன் அவனை நோக்கி, "வராக! நம்மைச் சுற்றிப் போரிட்டுக் கலகம் விளைவிப்பவர்கள் மாறுவேடத்திலுள்ள திருடர்களாகவும் இருக்கலாம். எதற்கும் நீ என்னுடன் ஆயுதபாணியாகப் பிடியின் மேல் வருவது நல்லது" என்றான். உதயணன் கூறியவற்றை உண்மை என்று நம்பிய வராகன் பிடி மீதேறுவதற்காகத் தன் வில்லையும் அம்பையும் உதயணனிடம் கொடுத்துவிட்டு நெருங்கினான். வில்லும் அன்பும் தன் கைக்கு வரப்பெற்ற உதயணன், 'இனி இவனாற் பயமில்லை!' என்று ஏறவந்த வராகனுக்கு இடங்கொடாமற் பிடியை வேகமாகச் செலுத்திக் கொண்டு போய்விட்டான். வராகனும் வீரர்கள் சிலரும் உதயணன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டனர். அவந்தியர் வேந்தனாகிய பிரச்சோதனன் திரு முன்னர்ப் போய் யாது கூறுவது என்றஞ்சி மயங்கினர். இரு படைக்கும் இடையே போர் நடந்தது. கொற்றவன் ஆணை தப்பிய கொடுமைக்கு மிகவும் வெருவிய அவந்தி வீரர் ஒன்று கூடி, உதயணன் செல்லும் பிடியைப் பின்பற்றி ஓடினர். அவ்வாறு ஓடினவர்களை வத்தவ நாட்டு வித்தக வீரர், வாள் கொண்டு எதிர்த்தனர். 'வத்தவன் வழிப்பட்டனள் தத்தை என்ற செய்தியை மன்னன் அறியின் என் செய்வானோ?' என நடுங்கிய வீரர், இப்போரில் உயிரே போயினும் கவலை இல்லை எனத் துணிந்து முன் வந்தனர்.

முன்னேற்பாட்டுடன் அங்கங்கே ஒளிந்திருந்த யூகியின் வீரர்கள் ஐந்நூற்றுக்கு மேற்பட்டவர் வெளிவந்து பிரச்சோதனன் ஆட்களோடு போரிட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் போர் நிகழ்ந்தது. யூகியின் படையினர் வீசிய வாள்களில் பகைவர் சிரங்கள் பனங்கனிக் குலையிலிருந்து உதிர்வது போல உதிர்ந்தன. குருதி வெள்ளம் ஆறெனப் பரந்தது. அப்போது யூகி தன் வாளுடன் அங்கே தோன்றி உதயணனைச் சந்தித்தான். பிடி மீது விரைவாகச் சென்று கொண்டிருந்த உதயணன் பிடியை நிறுத்தி யூகியை வரவேற்றான். உதயணனுக்கு இறுதி வரை வெற்றியை அளிக்குமாறு அவன் ஏறிக் கொண்டிருந்த யானையாகிய பத்திராபதியை வாழ்த்தினான் யூகி. நண்பர்கள் மேலே நடக்க வேண்டிய திட்டங்களை ஒருவருக்கொருவர் அறிவித்துக் கொண்டனர். சாங்கியத் தாயைப் பற்றி யூகிக்கு விரிவாகக் கூறி, அவளை மேல் நடக்கும் வினைகளில் நம்பிப் பயன் கொள்ளலாம் என்றான் உதயணன். அவளைப் பற்றிய விவரங்கள் யாவும் அடங்கிய ஓலையொன்றையும் உதயணனிடமிருந்து யூகி பெற்றுக் கொண்டான். பின்னே துரத்தி வரும் படை நெருங்கி விடவே யூகியிடம் விடைபெற்றுப் பிடியை விரைவாகச் செலுத்தினான் உதயணன். யூகி மக்கள் கூட்டத்தில் கலந்து மறைந்தான். முன்னர் ஏமாற்றப்பட்ட வராகன் இப்போது உதயணனைப் பின் தொடர்ந்த படையினர் முன்னணியில் நின்றான். போகின்ற போக்கில் உதயணன், "பிரச்சோதனனிடம் இதுவரை நான் சிறைப்பட்டிருந்தேன். இழிவு கருதாத என்னைத் தன் மகட்கு யாழ் கற்பிக்கச் செய்தான். கற்பித்தேன். இவள் மேற் காதல் கொள்ள நேர்ந்தது. இன்று அவன் வாயாலேயே இவளைக் காக்குமாறு கூறினான். இவளை என் நாடு கொண்டு சென்று மணக்கக் கருதினேன். அம் மன்னனுக்கு என் வணக்கத்தைக் கூறுக" என்று இவ்வாறு வராகனுக்குக் கேட்கும்படி உரைத்து விட்டுச் சென்றான் உதயணன். வராகனுக்கு உதயணனாற் கூறப்பெற்ற இம் மறுமொழி கேட்டுத் தத்தை சற்றே சினங்கொண்டாள். காஞ்சனமாலையைக் 'கீழே இறங்கி விடுக' என்னும் குறிப்புத் தோன்ற நோக்கினாள். அக் குறிப்பை அறிந்து கொண்ட காஞ்சனமாலை, "கொடியூசலில் தோழியர் கைகோத்தாடினும் குரவைக் கூத்து ஆடினும் எம் தலைவி நடுங்குவாள். சூறாவளிக் காற்றெனச் சுழன்று ஓடும் பிடியால் அவளுக்கு அச்ச முண்டாகிறது. பின் தொடரும் எங்கள் படையை ஒரு பொருட்டாக மதியாமல் நீவிர் பிடியை இத்துணை விரைவிற் செலுத்துவது என் கருதியோ? எங்கள் மனம் பயப்படுகிறது" என வணங்கிய கையுடன் உதயணனைக் கேட்டாள். அவர்களுடைய சந்தேகம் உதயணனுக்கும் புரிந்தது.

காஞ்சனமாலையின் வினாவுக்கு ஏற்ற விடை கூறித் தேற்றினான் உதயணன். "அரசன் தத்தையைக் காக்குமாறு என்னைப் பணித்த செய்தியை அறியாது இந்த வீரர்கள் சந்தேகமுற்றுப் போருக்கு வருகின்றனர். இவர்களை வென்று மேற்செல்லுதல் எனக்கு அரிய வினையன்று. எனவே நீங்கள் இருவரும் சிறிதும் அஞல் வேண்டா" என்றான் உதயணன். இவ்வாறு கூறிய மொழிகளைக் காஞ்சனை தத்தைக்கு உரைத்து ஆறுதல் கொள்ளுமாறு செய்தாள். தத்தையின் ஆயத்தைச் சேர்ந்த கொட்டந்தாங்கிய பணிப்பெண்கள், அடைப்பை மகளிர், சுவரி மகளிர், பணிசெய்கூனர், தோழியர், செவிலித்தாயார், சஞ்சுகிமுதியர் முதலியோர் யாது செய்வதென்றறியாது அலமரல் எய்திப் புலம்பினர். நீராட வந்த மக்கள் கூட்டம் துயராடித் துன்பத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தது. இஃது இவ்வாறு இருக்க உதயணனிடம் ஓலை பெற்றுச் சென்ற சாங்கியத் தாய் பெரிய படைப் பரப்பின் நடுவே மாறுவேடத்துடன் திரிகின்ற யூகியை அவன் உடல் அடையாளங்களாற் கண்டு அறிந்தாள். தன்னை அறிந்து நிற்கும் சாங்கியத் தாயைக் கூர்ந்து நோக்கிய யூகி உதயணன் கூறியிருந்த விவரங்களால் அவளை அறிந்து கொண்டான். மேலே நிகழ இருக்கும் திட்டங்களைப் பற்றி முடிவு செய்வதற்காக அருகில் இருந்த ஒரு குயவன் மனையில் மறைந்து இருவரும் ஆலோசித்தனர். ஆலோசனை முடிந்த பின் மீண்டும் தாம் சந்திக்கும் காலத்தை ஒருவருக்கொருவர் அறிவித்துக் கொண்டு பிரிந்து சென்றனர்.

14. சினமும் சிந்தனையும்

தத்தையை உதயணன் தன் நாடு நோக்கிப் பிடிமேல் கொண்டு செல்வதை அறிந்தும் அதைப் பிரச்சோதனனிடம் கூற அஞ்சினர், காவல்வீரர். காவல்வீரர் பலரும் இவ்வாறு அஞ்சி என் செய்வதென்று அறியாமல் திகைத்திருந்த போது வில்லும் அம்பும் உதயணனிடம் பறிகொடுத்துவிட்டு அவனிடமிருந்து மன்னனுக்குச் செய்தி கேட்டு வந்த வராகன் படமாடக் கோவிலில் இருந்த அரசனைக் காணக் கடுகி ஓடினன். "அரசர் பெருமானைக் கண்டு சில அவசரச் செய்திகளைக் கூறவேண்டும். சமயமறிந்து வருக" என்று வாயிற் காவலனிடம் கூறியனுப்பிவிட்டு, ஓடி வந்த இளைப்பால் மேல் மூச்சு வாங்க வாயிற்கடையில் நின்றான் வராகன். காவலன் உள்ளே சென்றான். அரசன் படமாடக் கோவிலுள்ளே அப்போது ஒரு நிமித்திகனுடன் பேசிக் கொண்டிருந்தான். 'காற்றும் மழையுமாக எழுந்த நிலை ஊருக்கு முதலில் மிக்க துயரத்தையும் பின்னர் நினக்கு இன்பத்தையும் தரும்' என்று நிமித்திகன் அரசனுக்குக் கூறினான். இவ்வாறு குறிப்பாகக் கூறிய நிமித்திகனிடம் பிரச்சோதனன் இக்கூற்றைத் தனக்கு நன்றாக விளக்கி உரைக்கும்படி வேண்டினான்.

அப்போது வாயிற்காவலன் பரபரப்பும் அவசரமும் தோன்ற வணங்கியவாறு உள்ளே வந்தான். வந்தவன் முகத்தில் தோன்றும் பரபரப்பைக் கண்ட மன்னன் "வந்த காரியம் யாது?" என அவனிடம் வினவினான். வாயிற் காவலன் பணிந்த குரலில், "வாசவதத்தைக்குக் காவல்வீரராக உள்ளவர்களில் ஒருவனாகிய வராகன் வாயிலிலே நிற்கிறான். அவன் தங்களிடம் உடன் கூறத்தக்க செய்திகள் சில உளவாம்" என்றான். அரசியல் உண்மைகளை அந்தரங்கமாக ஆராயும் போதும் மகளாகிய தத்தையைப் பற்றிய செய்தி என்றால் கேட்டுவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான் பிரச்சோதன மன்னன். தத்தையினிடம் அவனுக்கு உள்ள அன்பு அத்தகையது. ஆகவே நிமித்திகனோடு உரையாடிக் கொண்டிருந்தாலும், "வராகனை உடனே வரச் சொல்" என்று கூறிக் காவலனை அனுப்பினான். காவலன், அரசனுக்குப் பல்லாண்டு கூறி வாழ்த்தும் வணக்கமும் அளித்துச் சென்றான். காவலன் சென்ற சிறிது நேரத்திற்குள் வராகன் நடுக்கங்கலந்த அச்சமும் பரபரப்பும் உள்ளவனாய் உள்ளே வந்தான். வந்தவன் அரசனுக்கு ஏழுகோல் எல்லை தள்ளி மரியாதையாக நின்று வணங்கினான். அவன் முகத்தோற்றத்தையும், நடுக்கத்தையும் கண்ட மன்னன், 'இவன் கூற வந்திருக்கும் செய்தி துயரம் விளைவிக்கக் கூடியதாய் இருக்க வேண்டும்' என்று எண்ணி அவனைத் தனக்கு மிகப் பக்கத்தில் இரு கோல் எல்லையுள் அழைத்தான். வராகன் நெருங்கி வந்ததும், "வந்தது யாது கூறவோ? அதனை விரைவில் கூறு" என்று ஆணை பிறந்தது.

தரையில் முடிதோய மன்னனை வணங்கி எழுந்த வராகன், தயங்கித் தயங்கி நின்றானே ஒழிய வாய்திறந்து நடந்ததைக் கூற அஞ்சினான். "நெஞ்சில் அஞ்சாது நிகழ்ந்ததைக் கூறு" என்று இடிமுழக்கம் போன்ற குரலில் மீண்டும் ஆணையிட்டான் பிரச்சோதனன். இப்போது வராகனுக்குச் சிறிது துணிவு பிறந்தது. அரசன் தன் உயிருக்கு அபயமளிப்பான் என்ற நம்பிக்கையும் தோன்றியது.

நிகழ்ந்தவற்றை ஒவ்வொன்றாகக் கூறினான்: "உதயணன் தத்தையுடன் பிடியேறித் தன் நாடு நோக்கிச் செல்கிறான். பின்பற்றிச் சென்ற நம் படை மாற்றார் படையால் அழிந்து தடையுற்றது. யான் விரைந்து பிடியைப் பின்பற்றி நெருங்கினேன். 'தத்தையை என்பால் அடைக்கலம் அளித்த உங்கள் வேந்தர்பிரானுக்கு என் வணக்கத்தைக் கூறுக' என்று கைகூப்பி விட்டுக் காற்றென விரைவுடன் பிடியைச் செலுத்தி மறைந்தான் உதயணன்" என்று வராகன் கூறியதும் பிரச்சோதனனுடைய விரிந்த மலர்விழிகள் சிவந்தன. புருவங்கள் நெரிந்தன. முகத்தில் சினத்தீ எழுந்து பரவிப் படர்வது தெரிந்தது. உதயணன் துரோகம் செய்துவிட்டான் என்பது அவனுக்கு விளங்கிற்று.

"உதயணனை எதிர்த்து உடனே நம்படை புறப்படட்டும்! எள்ளி விளையாடுகிறது போலும் இளமை. நல்ல பண்புள்ளவன் என நம்பினேன். நம்பிக்கையைச் சிதைத்து விட்டான் வத்தவர் கோன். நான் யாரென அறியான் போலும். செல்லட்டும் நம் படை அந்தச் சிறு மன்னனைப் பிடித்து இழுத்து வாருங்கள்." இவ்வாறு சினங்கொண்டு முழங்கினான் பிரச்சோதனன்.

சினம் என்பது வேகமாகப் பற்றிப் பரவும் காட்டுத் தீயைப் போன்றது. பண்பட்ட உள்ளம் படைத்தவர்கள் கூட அதற்கு மிகவிரைவில் உட்பட்டு விடுகின்றார்கள். பிரச்சோதன மன்னன் மிகச்சிறந்த நாகரிகப் பண்புடையவனாக இருந்தும் ஒரு நொடியில் தன்னை இழந்து சினத்திற்கு அடிமைப்பட்டு விட்டான். அரசன் நிலையையும் அப்போது அவனுக்கு இருந்த சினத்தினால் ஏற்பட இருக்கும் விளைவுகளையும் நன்கு அறிந்து கொண்ட அவனுடைய முதன் மந்திரி சாலங்காயனன், அமைதியாகச் சில அறிவுரைகளைக் கூறினான். "உதயணன் செய்தது என்னவோ தவறுதான்! அதற்காக அவனைச் சிறை செய்தலும் கிளைஞரிடமிருந்து பிரித்தலும் பெரிய காரியமல்ல. அவைகளை நீ விரும்பின் நின்னால் எளிதிற் செய்ய முடியும். ஒன்று நீ சிந்திக்க வேண்டும். ஆராய்ந்து பார்த்தால் வாசவதத்தைக்கு உதயணன் எவ்விதத்திலும் குறைந்தவன் ஆகான். குலம், குணம், நட்பு, நிலம் முதலியவற்றாலும் அவன் நின்னையொத்த அரசனே. அவன் தத்தையைக் கொண்டு சென்று மணந்து கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. ஊழ்வினை அவ்வாறு அமையும் போது அதனைப் பழிப்பதிலும் பயன் இல்லை. எனவே சினங்கொண்டு படையெழுப்புதல் சிறந்த வழி அன்று. மனத்தில் பகை இருக்குமானால் இப்போது அதை வெளிக்காட்டல் வேண்டா. பின்பு வேறு வழியாகத் தத்தையுடன் உதயணனை மீட்க முயல வேண்டும். உடனடியாக இவ்வாறு போர் மேற்கொள்வது அறிவுக்கு ஏற்றது அன்று" என்று விரிவகவும் கருத்துள்ளடங்கியதுமாகச் சாலங்காயனன் கூறிய ஆறுதல் பிரச்சோதனன் மனத்தில் அழுத்தமாகப் படிந்துவிட்டது. அமைச்சன் கூறிய ஆறுதலால் மனந்தேறிய பிரச்சோதன மன்னன், தன் கோப்பெருந்தேவிக்கு இச்செய்தி மற்றவர்களால் அறிவிக்கப்படு முன் பக்குவமாகத் தானே சென்று அறிவிக்க விரைந்தான்.

இவ்வளவும் நதிக்கரையில் அரசனுக்கென அமைக்கப்பட்டிருந்த படமாடக் கோவிலில் நடந்தன. தேவியைக் காணப் போகுமுன் முரசறையும் வள்ளுவனைக் கூப்பிடச் செய்து மழைப்பொழுதாகவும் பனி பொருந்தியதாயும் உள்ள இம்மாலையில் தீர்த்தத் துறையிலிருந்து நகர் செல்ல வேண்டாவென மக்கள் யாவர்க்கும் முரசறைந்து அறிவிக்கவும், காலையில் நகர் போகவேண்டுமென்று பணிக்கவும் செய்யுமாறு கூறிச் சென்றான். சென்றவன் நேரே திருமாதேவியின் சிங்காரப் பள்ளியறையுள் நுழைந்தான். நீர்த்துறையில் அரசன் விடுதிக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த அச்சிங்கார மாளிகை பலவகை அணிகளுங் கொண்டு பார்ப்போர்க்குக் கவின் கொடுத்து விளங்கியது. மன்னன் வரவறிந்து எதிர்கொள்ள அந்த பெருந்தேவியின் மனமோ, கலவரமும் திருப்தியும் கலந்து ஒரு நிலையில் நில்லாமல் சுழன்று கொண்டிருந்தது. உதயணனே காப்பாற்றுவதனால், தன் மகள் தத்தைக்குத் தீது நேராது என்ற திருப்தி இருந்தது. ஆனால் உதயணன் தத்தையைத் தன் நாடு கொண்டு ஏகுவான் என்ற நினைவே கனவில் கூடத் தேவிக்கு இல்லை.

பலவித எண்ணங்களுடன் தேவி மன்னனை வரவேற்றாள். உணவு முடிந்த பின் வந்த செய்தியை விரிவாகக் கூறக் கருதினான் பிரச்சோதனன். அன்று உணவே வேண்டியிருக்கவில்லை மன்னனுக்கு. இருந்தாலும் தான் உண்ண மறுத்தால் திருமாதேவி ஐயுற நேரும் என்பதற்காக ஏதோ ஒருவாறு உணவை முடித்தான். இருவரும் பள்ளி மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். சிந்தனையைப் பொறுத்தவரையில் இருவருக்கும் ஒன்றும் புரியாத கலவரமொன்று உள்ளே குழம்பிக் கொண்டிருந்தது. தான் சொல்ல வந்ததைப் பக்குவமின்றி எடுத்த எடுப்பில், 'உதயணன் தத்தையைக் கொண்டு ஓடிவிட்டான்' என்று கூறிவிட்டால் தேவிக்கு என்ன நேருமோ என்று அஞ்சிய மன்னன் மிகவும் நயமான ஒரு வழியைப் பின்பற்றி அதை அவளுக்குக் கூற முடிவு செய்தான். "தத்தையை உதயணன் மணப்பது பற்றித் தேவியின் கருத்து யாது?" என முன்பின் தொடர்பில்லாத ஒரு கேள்வியைத் திடீரென அவளிடம் கேட்டான் அரசன்.

இந்தக் கேள்வியினால் கோப்பெருந்தேவியின் திருவுளக் குறிப்பை அறிய விரும்பிய பிரச்சோதன மன்னன், அவள் மறுமொழிக் கூறாமலிருப்பது கண்டு இன்னும் தெளிவாக, "தத்தைக்கு யாழ் கற்பித்த பெருந்தகையன் உதயணனுக்கே அவளை மணம் செய்து கொடுத்து அவன் நாட்டிற்கு அனுப்பலாம் என்று கருதுகிறேன். நீ யாது கருதியிருக்கிறாய்? இது நினக்கு மகிழ்ச்சியைத் தரும் செய்திதானா?" என்று மீண்டும் கேட்டான். இக் கேள்வி மூலமே அவள் விருப்பத்தை அறியத் திட்டமிட்டிருந்தான் அவன். தேவி இது கேட்டு முகமலர்ந்தாள். அவள் உடன்பாடு அரசனுக்கு அம்மலர்ச்சியினாலேயே புலனாயிற்று.

"யானையை மதமடக்கி வந்த அன்று, முதன் முதலாக அவனைக் கண்டபோதே, அவன் இளமை பொலிவு என் மனத்திற் பதிந்துவிட்டது. அன்றே அவன் தத்தைக்கு ஏற்ற கொழுநனெனக் கருதினேன் யான். குற்றமற்ற அரசர் குடியிலே தோன்றிய கோக்குமரன் ஆதலின், அவனுக்குத் தத்தையை ஏற்கும் தகுதியிலும் குறைபாடில்லை" என்று மறுமொழி கூறினாள் கோப்பெருந்தேவி. 'அவள் மனம் உதயணன் தத்தைக்குரியவனாவதைத் தடுக்கும் நிலையில் இல்லை. மகிழவே செய்கிறது' என்று தெரிந்த பின் பிரச்சோதன மன்னன் அன்று நடந்ததைக் கூறத் தொடங்கினான். "தத்தை வத்தவ குமரனொடு அவன் நாடு சென்றுவிட்டாள்" என்று மன்னன் கூறிய மொழிகள் திருமாதேவியின் செவிகளிலே நெருப்பென நுழைந்தன. பெண்ணைப் பிரிந்த பெற்றவள் பெருந் துயரங் கொண்டாள். ஆவி பதைத்து அழுதாள். ஆறாகத் துயரம் அவலமாக உருக்கொள்ள அரற்றினாள். தத்தையின் பிரிவு அவளை வாட்டியது.

அசுணம் என்ற விலங்கு இசையைக் கேட்டு இன்புறும்; பறையொலி கேட்டுத் துன்புறும். தத்தையை உதயணனுக்கு மண முடிக்கலாம் என்ற செய்தி கேட்டின்புற்ற தேவி, அடுத்து அவள் வத்தவ குமரனுடன் அவன் நாடு சென்றனள் என்பது கேட்டு அளவிட இயலாத துயரம் கொண்டாள். கூற்றுவனின் கொடும்பாசத்தால் தான் கட்டப்பட்டது போன்ற பயங்கரப் பிரிவுணர்ச்சி தத்தையின் பிரிவுச் செய்தி கேட்ட போது அவளுக்கு உண்டாயிற்று. பெற்றவள் அவ்வாறு துயர் கொண்டது பெருவியப்புக்குரியது அல்லவே? ஆயினும் பிரச்சோதனன் மகளைப் பிரிந்த மனத் துயரம் தீர அவளைத் தேற்றினான்.

"தாம் வேண்டும் காதற் கொழுநனோடு செல்லாது பெற்றோரிடத்துத் தங்கியிருக்கும் மகளிர் உலகில் எவ்விடத்தும் இலர். கடலில் பிறந்த முத்து அணிவோர்க்கு அல்லாமல் கடலுக்கு ஒரு போதும் பயன்படுவது இல்லை. தத்தையும் நமக்கு அப்படிப்பட்ட உரிமை மட்டும் உடையவள் தானே? இதற்காக நீ மிகவுங்கவலுதல் தகுதியுடைய செயல் அன்று" என்று அவன் கூறிய தேற்றுரைகள் தேவிக்கு ஒருவாறு ஆறுதல் அளித்தன. துயர் சற்றே விலகியது.

வான்மதி இழந்த மீனினம் போல, வாசவதத்தை இல்லாத துயரம் பெற்றவளை மட்டுமன்று, அந்தப் பெருநகர் முழுவதையும் பற்றி வாட்டியது. நீராடும் துறையில் காலையில் இருந்த ஆரவாரம் இப்போது போன இடம் தெரியவில்லை. ஒரே சூனிய அமைதி குடிகொண்டிருந்தது. தூரத்தே அங்கொன்றும் இங்கொன்றுமாக நகரில் தெரிந்த புகைப் படலங்கள் மேகத்தோடு கலந்து கொண்டிருந்தன. காற்றும் குளிரும் சூழப் பெய்து கொண்டிருந்த சிறு மழை கூட வான்மகள், தத்தையின் பிரிவுத்துயர் பொறாது கண்ணீர் பெருக்குவது போலிருந்தது. மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்ட வான அரங்கின் வட்ட வடிவமான கருநீலப் பெருவெளி எங்கும் துயர் நிறைந்து தோன்றியது அந்த நகருக்கு. மன்னனும் திருமாதேவியும் கூட ஒருவாரு தத்தம் துயர வெள்ளத்தை மறந்துவிட்டனர்.

நீராட்டு விழா இன்பமயமாக ஆரம்பித்துத் துன்பமயமாக முடிந்துவிட்டது. முதலில் இன்பம் நடுவும் இறுதியும் துன்பம்.

15. பகை நடுவே பயணம்

யூகியிடம் விடைபெற்றுக் கொண்டு, பின் தொடருகின்ற வராகன் முதலியோர் அடங்கிய படைக்குத் தப்பிச் சென்ற உதயணன் வேகமாக மேலே போக முடிந்தாலும் அந்நிலை நீடிக்கவில்லை. விரைவில் வேறோர் பெரும்படை தன்னைத் துரத்திப் பின்பற்றுவதை அவன் கண்டான். உதயணனிடமிருந்து செய்தி பெற்றுச் சென்ற வராகன் அரசனிடம் கூறினான் என்பது மேலே விவரிக்கப்பெற்றது. அவன் கூறியது கேட்ட பிரச்சோதனன், சினங்கொண்டதும் சாலங்காயனன் அவனை அடக்கியதும் கண்டோம். பிரச்சோதனன், சாலங்காயனன் உரையில் ஆறுதல் பெறுவதற்கு முன்பு செய்த சினக் கலவரத்தைக் கண்ட வராகன், பலர் குழுமிய ஒரு பெரும் படையுடன் மீண்டும் உதயணனைத் துரத்தினான். அதுதான் உதயணன் இப்போது கண்ட படை. இவ்வாறு தத்தையுடனே ஒருங்கமர்ந்து செல்லும் அந்த இன்பப் பயணமும் பகை சூழ்ந்த பயணமாகியது. நொடிக்கு நொடி அவன் சென்ற பிடியின் வேகம் அதிகமாகியது. அதை எவ்வளவு துரிதமாகச் செலுத்த முடியுமோ அவ்வளவு துரிதமாகச் செலுத்தினான் உதயணன். தேரும் யானையுமாகத் திரண்ட வெம்படை தன்னை மிகமிக நெருங்கி வருவதை உதயணன் உணர்ந்தான். அந்த நேரத்தில் சமயத்திற் கிடைத்த சஞ்சீவிபோல அங்கே தனித்தனியே மறைந்திருந்த யூகியின் படைவீரர் வெளிப்பட்டு உதயணனைத் துரத்தி வரும் படையை எதிர்த்தனர். உதயணன் இதற்காக யூகியை மனமாற வாழ்த்தினான். யூகியின் ஆட்களுக்கு வருகிற படைவீரர் களைப்பதற்குள் தான் முன்னேறிப் போய்விட வேண்டும் என்பது உதயணன் கருத்தாயிருந்தது. அதனால் தான் அவன் யானையை வேகமாக நடத்தினான். வந்த படை யூகியின் வீரரால் எதிர்க்கப்பட்டு புறங்காட்டி ஓடியது. உதயணன் பிடி உஞ்சேனை நகருக்கு அப்பால் இரண்டு காத தூரம் கடந்து விட்டது. அந்த நேரத்தில் கதிரவன் மெல்ல மலை முகட்டில் மேற்கே மறைந்து கொண்டிருந்தான். இருள் தொடங்கியது. பகை நடுவே பயணம் நடத்துகின்ற உதயணனை மற்றவர்கள் காணின் துன்பம் நேரும் என்று கருதியவன் போல விரைவில் இருள் வருவதற்காகக் குடகடல் குளித்துக் குடமலை மறைந்தான் கதிரவன்.

சுற்றிப் பகைவர் இருப்பாரோ என்ற ஐயம் இருப்பினும் இருளும் ஒளியும் கலந்து மயங்கும் அந்த மாலை நேரம் மிகவும் இரம்மியமாக இருந்தது. மருத நிலங்கள் சூழ்ந்த வழியின் அழகில் தங்களையே மறந்து இன்பவெள்ளத்தில் மிதப்பது போன்ற களிப்புணர்ச்சியோடு சென்றனர் அவர்கள். பொய்கைகள் தோறும் நீலம், கழுநீர், நெய்தல் முதலிய பூக்கள் மலர்ந்த நிலைமாறி, 'உதயணன் இன்பமாக நகர் சென்றடைக' என்று கைகூப்பி வேண்டிக் கொள்ளுவது போலக் குறுந்தொடி மகளிர் கூப்பிய கரமெனக் குவிந்தன. வான வெளி எங்கும் பறந்து திரிந்த பறவைக் கூட்டங்கள் பலவகை ஒலிகளுடன் தத்தம் கூடுகளை அடைந்தன. பகலின் வெம்மை தணிந்து இரவின் மென்குளிர் எங்கும் பரவியது. மாலைப்பொழுது, உலகை இன்ப மயக்கம் செய்துவிட்டு விடைபெறத் தொடங்கியது. இரவுக் கன்னி நீலக்கரும்பட்டாடை போர்த்து வந்தாள். அவர்களுடைய பயணம் தொடர்ந்தது. பகைவர்களைப் பற்றிய கவலையும் மெல்ல மெல்ல மறைந்தது. சூழ்நிலையும் நேரமும் ஒன்று கூடும் போது பற்றி நிற்கும் தொல்லைகளை மறந்து சுற்றியுள்ள அழகை இரசிக்க ஆரம்பித்தல் மனித இயல்பு. உதயணனும் வாசவதத்தையும் காஞ்சனையும் வயந்தகனும் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன? பகை பின்பற்றித் துரத்தியது உதயணனை. அவனோ தன் பயணத்தைச் சூழ்நிலை அழகில் முழுக்க முழுக்க ஈடுபடுத்திக் கொண்டே நடத்துகிறான்.

"நாளை எப்படியும் தத்தையைக் கோசாம்பி நகரில் உதயணனுடைய அரண்மனை ஆயமகளிர் எதிர்கொண்டழைக்கும்படிக் கோசாம்பி சென்றடைவேன்" என்ற உறுதியை மேற்கொண்டது போல விரைந்து சென்றது பத்திராபதி என்னும் அந்த யானை. இவ்வாறு விரைந்து ஓடிய பிடியின் ஓட்டம் மென்மையை அன்றி வேறு உணர்வுகளைப் பயின்று அறியாத தத்தைக்குத் துன்பம் கொடுத்தது. பிடி ஒவ்வோர் அடிவைக்கும் போதும் பூவினும் மெல்லிய அவள் உடல் குலுங்கி ஆடியது. அந்த ஆட்டம் உடல் வலியை உண்டாக்கிற்று. அது பொறாமல் நெட்டுயிர்ந்து விம்மினாள் வாசவதத்தை. பிடியின் புயல் வேகம் மெல்லியல் மகளாகிய தத்தைக்குச் சோகம் விளைத்தது. அடிக்கடி நெட்டுயிர்த்த தத்தையைக் காஞ்சனமாலை தழுவிக் கொண்டாள். அடிக்கடி பிடி குலுங்கிய வேகத்தில் தத்தை, உதயணனைத் தீண்ட நேர்ந்தது. ஆடவர் உடலைத் தீண்டியறியாத கன்னி பயிர்ப்பு எய்தினாள். உடல் வலியால் விளைந்த சோகம் ஒருபுறம் உதயணனைத் தீண்டும் இன்பங்கலந்த சோகம் ஒரு புறம்.

தத்தையின் சினக்குறிப்பை, அவள் கூறாமலே தெரிந்து கொண்ட காஞ்சனமாலை, அவளைத் தாங்கிய வண்ணமே சில செய்திகளை மெல்ல அவளுக்குக் கூறினாள்: "உதயணன் உன்னை இன்னும் முறைப்படி நாடறிய நன்மணம் செய்து கொள்ளவில்லை. ஆனாலும் அவன் உனக்கு யாழ் கற்பித்த ஆசிரியன். ஆசிரியனாக இருந்ததுடன் உன் மனத்தைக் கவர்ந்தக் காதற் கள்வனுங்கூட. உனக்குப் பயிர்ப்பு ஏற்பட வேண்டிய அவசியமில்லை. உன் தந்தை தன் கைப்பட நின்னை உதயணனுக்கு மணம் செய்து கொடுக்கவில்லையே என்பதுதான் குறை. ஆயினும் உன்னை அவன் தானாகவே அடைந்துவிட்டான். 'ஒத்த தகுதியுள்ள இருவர் ஆசிரியனும் மாணாக்கியுமாக இருப்பின் மணத்திலேயே அந்தக் கலை நிறைவுறும்' என்ற பெரியோர் வாக்கு, உங்கள் வரையில் மற்றற்ற உண்மையாக மிளிர்கிறது. உனக்கு மயக்கத்தை உண்டுபண்ணும் பிடியின் வேகத்தில் சோகப் படாமல் தப்ப ஒரு வழி கூறுவேன்" என்றிவ்வாறு காஞ்சனை தத்தைக்கு உரைத்துப் பிடிசெல்லும் வேகத்தில் மேலும் கீழும் முன்னும் பின்னுமாகச் சுற்றியுள்ள பொருள்கள் சுழலுவதைக் காணாமல் கண்ணை மூடிக் கொள்ளுமாறு வேண்டினாள். அப்படிக் கண்களை மூடிக் கொண்டால் மயக்கம் ஏற்படாது என்றும் கூறினாள்.

பத்திராபதி ஓடிய வேகத்தில் சுற்றியிருந்த மரங்கள் பின்னோக்கிச் செல்வன போலவும் எதிரே எழுந்து வருவன போலவும் திசைகள் சுழற்சி எய்தின. அவற்றைக் கண்டால் தலைசுற்றி மயக்கம் கொள்ள நேருமாகையால் கண்களை மூடிக்கொண்டால் மயக்கம் தெரியாதென்று அவள் தோழி கூறியிருந்தாள். பத்திராபதியின் வேகத்தில் உடலாட்டங் கண்ட தத்தைக்கு நெற்றியில் முத்து முத்தாக அரும்பியிருந்த வேர்வைத் துளிகளைத் துடைத்தாள் காஞ்சனை. உடல் சோர்ந்து காணப்பட்ட தத்தையை மெல்ல உதயணனின் பரந்த மார்பிற் சார்த்தினாள், காஞ்சனை. கருடப் பறவையின் சிறகுகள் ஒலிப்பதைப் போலப் பிடி ஒவ்வொரு அடியைத் தரையில் வைக்கும் போதும் மேலே உட்கார்ந்திருந்தவர்களுக்குத் திடும் திடும் என்ற ஒலி கேட்டு அதிர்ச்சி செய்தது. அந்த ஒலி வாசவதத்தையின் காதுகளில் விழாதபடி அவள் காதுகளில் பஞ்சு அடைத்துக் காவல் கொண்டாள் காஞ்சனமாலை. எவ்வளவு பேணியும் தத்தைக்கு அந்த வேகம் சோகத்தையே மேன்மேலும் கொடுத்துக் கொண்டிருந்தது. அது கண்ட காஞ்சனை தத்தையிடம் உதயணனைப் பற்றிக் கொண்டிருக்குமாறு கூறிவிட்டுத் திரும்பி உதயணனைப் பார்த்து, வேகத்தைச் சிறிது தணிக்குமாறு வேண்டினாள். அவனும் அது கேட்டு வேகத்தைச் சற்றுக் குறைத்தான். வாசவதத்தையின் துவண்ட பூவுடல் பரந்த மார்புக்கு இட்டமாலைபோல் அவன் மேல் மெல்ல சாய்ந்தது.

16. வேகத்தில் விளைந்த சோகம்

அழகிய பெருவயல்களிலே கொட்டும் பறையொலிக்குப் பயந்த பசிய கண்களையுடைய எருமை தன் கன்றை நினைந்து மடி நிறைந்த இனிய பாலை, தாமரைப் பொய்கையின் விரிந்த இலைகளில், எழில் இள அன்னங்களோடு நாரைக் குஞ்சுகளும் உண்ண எழுந்து வருமாறு சொரிந்தன. பெரிய பெரிய பாத்திகளில் ஓங்கி வளர்ந்த கரும்பின் மடல்களிலே கட்டப்பட்ட செறிந்த இனிய தேன் கூட்டில் இருந்து ஒழுகும் செந்தேன், கீழே பக்கத்தில் கவின் பெறக் காட்சி தரும் தாமரைச் செம்மலரில் தீயை வளர்ப்பதற்குச் செய்யும் ஆகுதி போலப் பொழிந்தது. இடமகன்ற சோலைகளிலே வெள்ளிக் கும்பமெனக் குலைதள்ளிய பாளைக் கமுகும், பச்செனப் பருத்த மூங்கிலும், பழுத்த கதலி கொத்துக் கொத்தாக மரங்களும், குலைத் தள்ளிய தென்னை மரக்கூட்டமும், இனிய தீம் பலாவும், தே மாமரங்களும், புன்னையும், செவந்தியும், பொன்னென இணர்ந்த பூங்குவை ஞாழலும், இன்னும் பலபல மரங்கொடி செடிகளின் ஈட்டமும் கலந்த தோற்றம் எழுமையும் நுகர அரிய இன்பக் காட்சியாக விளங்கின. பகற்போதிலே கதிரவன் கிரணங்களும் உள் நுழைய இயலாத செறிவு, பொருந்தி இருண்டவை, அச்சோலைகள். கழனிகள் தோறும் முற்றிச் சாய்ந்திருந்த விளை நெற்கதிர்கள் காற்றோடு அசைந்தாடின. அங்கங்கே உழவர் கூட்டம் செய்யும் ஆரவாரமும், களங்களில் நெல்லடிப்போர் செய்யும் களிச் செயல்களும் காட்சியளித்தன. வேளாள மகளிர் வளர்க்கும் இல்லுறை கிளிகளின் மழலைச் சொல் விருந்து ஒரு புறம்; தண்ணுமையும் தடாரியுமாக முழவுடன் முழக்கும் ஆடவர் நாதவெள்ளம் ஒருபுறம்; களை கட்டும் கடைசியர்கள் வரிப் பாடல் பாடும் இசை விருந்து இன்னொரு புறம். இத்தகைய மருத நிலப் பெருவழியில் பத்திராபதி உதயணன் முதலியோரைச் சுமந்து விரைவாகச் சென்று கொண்டிருந்தது.

அவர்கள் அப்போது அருட்ட நகரத்தை அணுகிக் கொண்டிருந்தனர். எதிரே பெரிய கோட்டை கொத்தளங்களும் வானளாவிய கொடி மதில்களுமாகத் தெரிந்த அருட்ட நகரத்தின் புறக்காட்சி ஒரு தனி அழகுடன் விளங்கியது. தான் செல்வது அக்கம் பக்கத்திலுள்ளோர் அறிதற்கு அந்த இரவில் ஏதுவாகி விடக் கூடாது என்பதற்காக அருட்ட நகரத்தை அணுகும்போது, பத்திராபதி அணிந்திருந்த மணியை ஒலிக்காதபடி செய்து நீக்கினான் உதயணன். தத்தையும் காஞ்சனையும் அணிந்திருந்த கிண்கிணிச் சிலம்புகளின் கீத ஒலியைக் கூடத் தடுக்குமாறு கூறினான். இருள் நேரமாகையால் ஏனையோர் ஐயுற நேரும். அதனால் யாது விளையினும் விளையும் என்று கருதியே உதயணன் இவ்வாறு செய்தான். அருட்ட நகரத்தை நெருங்கியதும் நகரின் வலப்பக்கமாக ஒரு பெருவழி சற்று ஒதுங்கிச் சென்றது. இடப்புறம் நகரை ஒட்டி அதே போல் ஒரு வழி அமைந்திருந்தது. உடன் இருந்த வயந்தகன் உதயணன் நோக்கி, "இடப் பக்கமாகச் சென்றால் அருட்ட நகரத்தார் நம்முடைய செலவை அறிய நேரிடும். அதனால் நமக்குத் துன்பம் வரலாம். ஆகையால் ஒலிகளின்றி அமைதியாக வலப்புறம் செல்லும் பெருவழியிலே பிடியைச் செலுத்துக" என்றான். அங்கொன்றும் இங்கொன்றுமாக மினுக்கிக் கொண்டிருந்த நகரின் மாடப் பெருவிளக்குகள் இருளிடையே தெரிந்தன. கணீரென்று தேவ கோட்டங்களில் இருந்து மணியொலி எழுந்து பரவிய வண்ணமிருந்தது. உதயணன் வயந்தகன் கூறியவாறே பத்திராபதியை மெல்ல வலப் பக்கத்து வழியிற் செலுத்தினான். இடையிடையே வயந்தகன் அங்குள்ள வழிகளைப் பற்றிய விரிவான செய்திகளை உதயணனுக்கு விளக்கிக் கூறினான். வழிகள் இரண்டாகப் பிரிவது மன ஒருமையில்லாதவர்களுடைய நிலையை ஒத்திருந்தது. வயந்தகன் துணை வழி காட்டும் பெருந்துணையாக ஒளிகாட்டி அமைந்தது உதயணனுக்கு. நெடுநேரம் பயணம் செய்து கழிந்த பின் முல்லை நிலமொன்று எதிர்ப்பட்டது.

முல்லைக் கொடிகள், முல்லை நில மகளிர் இடைபோலக் கொடி பரப்பி, நகை போல மலர்ந்து விளங்கின. குரவு, தளவு, குருந்தம் முதலியன மெல்ல மலர்ந்து தோன்றின. அவைகள் மலரும் செவ்வி நோக்கிக் காத்திருந்த வண்டுகள், மகிழ்ந்து தேன் விருந்துண்ணப் புறப்பட்டன. தினையும் சோளமும் வித்திட்டு விளைக்கும் முல்லை நில மக்கள் அவற்றை வரியாகப் பயிரிட்டிருந்த காட்சி கவின் செறிந்து தோன்றியது. அந்நிலத்தில் விளையத்தக்க வேறு சில பல தானியங்களையும் பயிரிட்டிருந்தனர். முல்லை நில மக்கள் முயற்சி மிக்க பண்பினர் என்பதை அது விளக்கியது. கொல்லைப் புறங்களிலே மேய்ந்து கொண்டிருந்த முல்லை நிலத்துப் பசுக்கள் மடிநிறைந்த பாலைச் சேற்று நிலத்தில் பொழிந்தன. இரலையும் பிணையுமாகிய மான்கள் முசுண்டைக் கொடியின் பசிய தழையை மேய்ந்த வண்ணம் திரிந்தன. காயாம் பூவும் கொன்றையும் கவினிப் பூத்து விளங்கும் பொழில்களில் இடைஇடையே சிறுசிறு தோட்ட வீடுகள் விளங்கின. குற்றமற்ற வாழ்க்கை கோவலர் வாழ்க்கை. பசுக்களைக் காத்து ஓம்பிப் பயன்பெறும் வாழ்க்கை அல்லவா அது? அத்தகைய நல்வாழ்வு படைத்த முல்லை நிலத்தைக் கடந்து குறிஞ்சி நிலப் பகுதியை அடைந்தது பிடி.

மலைச்சாரலை நெருங்கி விட்டதற்கு அறிகுறியாகச் 'சோ'வென்று வீழும் அருவிகளின் இன்னிசை செவிகளுக்கு விருந்து செய்தது. அங்குமிங்குமாகத் தாவி ஓடும் கவரிமான்களின் காட்சியில் மிக்க அழகைக் கண்டார்கள். செண்பகமும் அசோகமும் செறிந்து வளர்ந்திருந்தன. குறிஞ்சியும் வேங்கையும் குளிரப் பூத்திருந்தன. எங்கும் பூமணம், காற்றில் கலந்து வீசிற்று. அகில் சந்தனம் முதலிய மரங்கள் நன்றாக முற்றி வெடித்திருந்ததனால், அவற்றின் மணம் வேறு தம்மை நுகரச் செய்தன. எங்கு நோக்கினும் தீஞ்சுனைகள். மலையில் சிற்சில இடங்களில் வேடர் இட்டிருந்த தீ அந்தக் கங்குல்யாமத்தில் தோன்றிய புதியதொரு கதிரவன் என விளங்கியது. இவ்வளவு வளம் பொருந்திய குறிஞ்சி நிலத்தை நூற்றிருபத்தைந்து காத எல்லையும் கடந்து மேற்சென்றது பத்திராபதி. எதிரே அகன்ற பெருங்கரைகள் இரண்டிற்கும் நடுவே கலகலவென்ற ஒலியுடன் நருமதையாறு ஓடிக்கொண்டிருந்தது. நடுவில் இடைவெளியின்றி இருமருங்கும் நீர் நிரம்பிக் கொண்டிருந்த நருமதை நதி, பலவகை வளங்களும் பொருந்தியது. பல வளங்களையும் அந்தப் பிரதேசத்திற்கு அளிக்கக் கூடியதும் கூட. அதன் இரு கரைகளிலும் அடர்ந்த மரக் கூட்டங்கள் அணிவகுத்து நிற்பனபோல அமைந்திருந்தன. அந்தக் கரைகளில் எப்போதும் ஆரவாரத்துக்குப் பஞ்சமிருக்காது. நீர்த் துறைப் பரதவர் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பறவைகளின் குரல்கள் போட்டி போடும் இடம் அது. நறுமணம் பொருந்திய மலர்ச் சோலைகள் பலவற்றைக் கடந்து நருமதைக் கரையை அடைந்ததும் பின்புறமாக அமர்ந்திருந்த வயந்தகன் பிடியிலிருந்து கீழே இறங்கினான். நதியைப் பார்த்த வயந்தகன் தண்ணீர் அப்போது மிகுதியாக ஓடுகிறது என்பதை அறிந்து கொண்டான். பொய் மணலால் உள்ளே ஆழ்த்திவிடாததும் சற்று ஆழம் குறைவானதுமான ஒரு பகுதியில் இறங்கி வயந்தகன் முன்னே வழிகாட்டி நீந்திச் சென்றான். பின்னே பிடி சென்றது. தூக்க மயக்கத்தில் இருந்த வாசவதத்தையைக் கீழே நழுவவிடாதபடி இறுகத் தழுவிக் கொண்டு பிடியைக் கவனமாக ஆற்றில் செலுத்தினான் உதயணன். காஞ்சனை பின்புறமாகத் தத்தையைத் தாங்கிக் கொண்டாள். பிடி மெல்லக் கரையேறியது.

நருமதையின் அக் கரையை அடைந்ததும் வயந்தகன் நீரில் நனைந்திருந்த தனது உடலைத் துவட்டிக் கொண்டு பிடி மீது ஏறிக் கொண்டான். வானத்தில் விளங்கிய நட்சத்திரங்களைக் கூர்ந்து நோக்கிய பின் அப்போது இரவு எவ்வளவு நேரமாகி இருக்கும் என்பதைக் கணக்கிட்டுக் கூறினான் வயந்தகன். பிடியின் நிலையும் அது கடந்த ஆற்றின் அளவும் இவையாவும் சேர்ந்து, வயந்தகனுக்கு ஓருண்மையைப் புலப்படுத்தின. எப்படியும் பத்திராபதி இன்னும் ஓரிரண்டு காதம் செல்வதற்குள் தங்களைக் கைவிட்டுவிடும் என்பதுதான் அந்த உண்மை. நருமதை யாற்றிற்கு அப்பால் ஒரு பெரிய பாலைவனம், சற்றுத் தொலைவில் இருந்தது. அந்தப் பாலை நிலம் பயங்கரத்திற்குப் பேர் பெற்றது. அங்கங்கே தோன்றிய பருக்கைக் கற்களின் கரடுமுரடான தோற்றமும் ஒரே மணற் பெருவெளியும் அந்தப் பாலைவனத்திற்கு வந்துவிட்டோம் என்பதை வயந்தகனுக்கு அறிவுறுத்தின. அவன் மனத்திற் சில அச்சங்கள் எழுந்தன. 'சுமந்து வந்த யானை விரைவில் சோந்துவிடும்' என்பதைத் தவிர, அந்தப் பாலை நிலவழியின் பயங்கரமும் வயந்தகனுக்கு நினைவு வந்தது.

கொடுமை, கொலை, கொள்ளை இவைகளுக்கு அந்தப் பாலை நிலவழி இருப்பிடம். அங்கே வசிக்கும் ஆறலை களவர் ஈவிரக்கமற்ற கொலைஞர். வழி ஓரமாக அமைந்திருந்த பாழடைந்த துர்க்கை கோயிலில் பதுங்கியிருந்து வழியில் வருவோர் போவோரைக் கொள்ளையடித்துத் துன்புறுத்துவது அவர்கள் வழக்கம். கொல்லப்பட்ட உடல்களைப் பருக்கைக் கற்களால் மூடிவிடுவார்கள். வெட்டுண்ட உடல்களைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவர். அந்த வறண்டு போன பாலை நிலத்தைப் போன்றதுதான் அவர்கள் உள்ளமும். கள்ளி, முள்ளி முதலிய பாலை நிலத்து மரங்கள் இடையிடையே வளர்ந்திருந்தன. குளிர் பருவத்திலும் வெப்பக் கொடுமை தாங்க முடியாத இடம் அது. இத்தகைய துன்பங்கள் நிறைந்தது ஆகையால் பொழுது புலர்வதற்குள் நல்ல இருளிலேயே அதைக் கடந்துவிட வேண்டுமென்று கூறினான் வயந்தகன். அதைக் கேட்ட உதயணன் பத்திராபதியை முன்னிலும் விரைவாக முடிக்கினான். பிடி காரெனக் கடிது சென்றது. அதன் அசுர வேகத்தில் வயந்தகன் கையிலிருந்த கோடபதி என்ற யாழ் கீழே வீழ்ந்து மூங்கிற் புதர் ஒன்றிலே சிக்கிக் கொண்டது. யாழ் விழுந்ததை வயந்தகன் உதயணனிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே, பிடி நூறு விற்கிடை தூரம் முன்னால் கடந்து சென்றுவிட்டது. பிரமசுந்தர முனிவரால் தனக்கு அளிக்கப்பட்ட அற்புதமான தெய்வீக யாழாகிய கோடபதியை உதயணன் இழந்துவிட்டான்.

யாழைத் தவறவிட்ட இடத்தைக் கடந்து மிக்க தொலைவு வந்து விட்டதை அறிந்த உதயணன், "தந்த தெய்வம் தானே தரும்! அதற்காக மீண்டும் வழியில் திரும்ப முடியாது" என்றுரைத்து விட்டுத் தயங்காமல் மேலே பத்திராபதியைச் செலுத்தினான். கோடபதிதான் உதயணனுக்குத் தெய்வ யானையைப் பணிபுரியச் செய்தது. நளகிரியின் மதத்தை அடக்கிப் பிரச்சோதனனிடம் நன்மதிப்புப் பெறவும், தத்தைக்கு யாழ் கற்பித்துக் காதல் கொள்ளவும் செய்தது. அந்த அரும் பொருள் கெட்டுப் போய் விட்டது. ஆனாலும் உதயணன் மனங் கலங்கினானில்லை. சிறு துயருக்கு வருந்திப் பெருந் துயரத்திற்கு நடுவே அகப்பட்டுக் கொள்ளக் கூடாதல்லவா? எனவே மனந்தேறி மேலே சென்றனர். வேகத்தில் விளைந்த சோகங்களை வேகத்தாலேயே மறக்க முயன்றான் உதயணன்.

17. பிடியின் வீழ்ச்சி

கோடபதியை இழந்த துயரத்தை மறக்க அவர்கள் முயன்று கொண்டிருக்கும் போது வேறோர் புதிய துயரம் புகுந்து வாட்டியது. எண்பதெல்லை அளவு ஓடிய பின் வேகம் மெலிவடைந்து தளர்ந்தது, பிடியின் நடையில் வேகம் குறைந்தது. கால்களும் துதிக்கையும் விதிர் விதிர்ப்பத் தள்ளாடியது பத்திராபதி. அதன் நிலையை உய்த்துணர்ந்த உதயணன் பாலை நிலத்தில் எஞ்சியுள்ள இருபது எல்லைத் தொலைவும் எப்படியாவது அதைக் கொண்டே கடந்து விட வேண்டும் என்று எண்ணித் துரிதப்படுத்தினான். இப்போதோ, இன்னும் சற்று நேரத்திலோ பிடி இறந்து போவது உறுதி என்பதையும் அங்கை நெல்லியென அவன் அறிந்தான்.

யானைகளின் இயல்பைப் பல நூல்களின் வாயிலாகத் தேர்ந்திருந்த உதயணன், இந்த உண்மையை அறிந்திருந்தது வியப்பிற்குரிய செய்தி அல்ல. ஆனால், செத்துக் கொண்டிருக்கும் அந்தப் பிடியின் துணைகொண்டே பாலை நிலத்தையும் கடந்து பிரச்சோதனனுடைய நாட்டு எல்லையையும் நீங்கியதுதான் வியப்பிற்குரியது. பிடியைப் பற்றியிருந்த நோய் 'காலகூடம்' என்னும் சுடுநோயாகையால் இனிமேல் அது பிழைக்க எவ்வகையிலும் வழியே இல்லை. பிரச்சோதனனுடைய நாடாகிய ஐந்நூற்றெல்லை நில அளவையும் கடந்து நோயின் கடுமை மிகுந்த பிடி, 'யான் இனி உயிர்விடுவேன். நின்னுயிர்க்கு ஏதும் துன்பம் நேராமல் காத்துக் கொணர்ந்து விட்டேன். சுகமாக நீ இனி மேலே செல்லலாம்' என்று கூறுவது போலத் தன் உடல் வெடவெடக்கச் சோர்வு எய்தி நின்றது.

ஏற்கனவே பிடியின் நிலையை நருமதையாற்றங் கரையில் தீர்மானித்திருந்த வயந்தகன் என் செய்வது என்னும் குறிப்புத் தோன்ற உதயணன் முகத்தைப் பார்த்தான். "பிடி நம்மை விரைவிற் கைவிட்டுவிடும் போலிருக்கிறது" என்றான் உதயணன். "தெப்பத்திலே நீரிடைச் செல்வோரை அது கவிழ்ந்து இடையிலேயே கைவிடுவது போல ஆயிற்று நம் கதியும்" என்று உதயணன், வயந்தகனை நோக்கி மேலும் கூறிவிட்டுக் காஞ்சனையை விரைவிற் பிடியின் பின்புறமாக இறங்கும்படி வேண்டினான். வயந்தகன் முன்பே இறங்கிவிட்டான். தன் வில்லையும் அம்பறாத் தூணியையும் இறுக்கிக் கட்டிக் கொண்டு மற்றொரு கையால் சோர்ந்த நிலையிலிருந்த வாசவதத்தையை மார்புறத் தழுவிக் கொண்டே கீழே இறங்கினான் உதயணன். அக்காட்சி, கரிய மலையொன்றிலிருந்து நிலத்திலே அர்த்தநாரீசுவரனாகச் சிவபெருமான் இறங்கி வருவது போலிருந்தது. அப்போது உமாதேவியாரை ஒரு புறத்தே கொண்டு தோன்றும் முக்கட் கடவுள் போலக் காட்சி கொடுத்தான் உதயணன்.

இவர்கள் இவ்வாறு இறங்கியதும், பிடி மெல்லக் கீழே வீழ்ந்தது. பக்கத்து விலாப்புறம் தரையிலே படும்படி சாய்ந்து வீழின், அங்கே நின்று கொண்டிருக்கும் உதயணன் முதலியோருக்குத் துன்பம் வருமென்றெண்ணிக் கால்களைத் தரையில் பாவி அமர்வது போல வீழ்ந்தது. அது உதயணனுக்குப் பக்கத்தில் சாய்ந்து வீழ்ந்தது, அவனை வணங்குவது போலவும் விடை பெற்றுக் கொள்வது போலவும் இருந்தது. நீண்ட கரிய பெரும் பட்டுப்பை ஒன்றிலிருந்து பவழத்தைக் கொட்டுவது போல அதன் துதிக்கையில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. பிடி வீழ்ந்த வகையும் திசையும் கொண்டு, தனக்கு முதலில் தன் நாடு செல்லும் வழியில், துன்பம் வந்து பின் நீங்குமென்று உதயணன் அறிந்தான். அதன் சாவு உறுதி என்று தெரிந்து கொண்டதும், அது அணிந்திருந்த மணி, புரோசைக் கயிறு, முதுகிலிட்டிருந்த மெத்தை, மேற்போர்த்த பட்டுக்கலிங்கம் இவைகளை உதயணன், வயந்தகன் இருவருமாகக் களைந்தனர். அப்படிக் களையும் போது, மிகுந்த அன்புடன் அதன் மத்தகத்தைக் கைகுளிரத் தடவிக் கொடுத்தான் உதயணன். அப்போது கீழ் வானத்தில் விடிவெள்ளி மேலே எழுந்து தோன்றிக் கொண்டிருந்தது. விடிவதற்கு இன்னும் இரண்டு நாழிகைப் பொழுது இருக்கும். தத்தையும் காஞ்சனமாலையும் துயிலின்றி மிகச் சோர்வாகக் காணப்பட்டனர். "அவர்கள் இருவரையும் இங்கே பக்கத்தில் எங்காவது ஓரிடத்தில் துயிலச் செய்து நீ காவல் புரிக" என்று வயந்தகனுக்கு ஆணையிட்டுவிட்டு இறந்த பத்திராபதி நற்கதி அடைதற் பொருட்டுச் செய்யவேண்டிய கடன்களைச் செய்யலானான் உதயணன். பக்கத்திலே இருந்த நீர் நிறைந்த அழகிய தாமரைப் பொய்கையொன்றில் போய் நீராடினான். நீராடிய பின் தூய உள்ளத்தோடு தன் வழிபடு தெய்வத்தைக் கருதி நீர்க்கடனையும் நியமக்கிரியைகளையும் செய்து முடித்தான். பின்னர் வயந்தகன் இருக்குமிடம் சென்று தத்தை, காஞ்சனை இவர்களோடு பகற்பொழுதில் மறைந்து வசிப்பதற்கு உரிய ஓர் இடத்தைக் காண வேண்டுமென்று அவனுடன் கலந்து ஆலோசித்தான். உதயணனுடைய இன்ப துன்பங்களில் வயந்தகனுக்கு முற்றிலும் பங்கு உண்டு. அவர்களிடையே இருந்த நட்பு அவ்வளவிற்கு உயர்ந்தது.

உதயணன் கூறியதைக் கேட்ட வயந்தகன், அந்த இடத்தினுடைய நிலையையும் அங்கிருந்து தாங்கள் உடனே புறப்பட்டுச் செல்ல வேண்டிய அவசியத்தையும் விவரமாகக் கூறினான். "மனநெகிழ்ச்சி என்பது சற்றளவுமில்லாத கொடுவினை வாழ்க்கையை உடைய வேடர்கள் பயிலும் இடம் இது. அன்றியும் இரண்டு நாடுகள் சந்திக்கும் எல்லைத்தானமாகிய இங்கிருப்பது துன்பத்தை வலிதின் அழைப்பது போலாகும். வாசவதத்தை வருந்தினாலும் துன்பத்தைப் பொருட்படுத்தாது மேலே நடத்தலே சரி" என்று வயந்தகன் சொல்லி முடித்தான். உதயணன் காஞ்சனையிடம் அதைக் கூறி நடந்து புறப்படுமாறு வேண்டினான். வாசவதத்தையின் நிலையோ எழுந்திருந்து மேலே காலை ஓர் அடிகூட எடுத்து வைக்க ஏற்றதாக இல்லை. நடைப் பழக்கமே அறியாத பூங்கொடி தத்தை காதலன் மனக் கருத்தறிந்து நடக்க உடன்பட்டு எழுந்தாள்.

தனது பஞ்சினும் மெல்லிய மலரடிகள் சிவப்பத் தத்தை காஞ்சனையைக் கைபற்றிக் கொண்டு துவளத் துவள மெல்ல நடந்தாள். வயந்தகன் வழிகாட்ட உதயணன் முன் சென்றான். நடக்க நடக்கத் தத்தையின் மெலிவு அதிகப்படுவது கண்ட உதயணன், வயந்தகனை உடனடியாக அங்கே தங்குவதற்கு ஓரிடம் பார்க்கப் பணித்தான். வயந்தகன் சுற்றும் முற்றும் பார்த்த வண்ணம் ஓரிடம் தேடினான். வாசவதத்தை சோர்ந்து உட்கார்ந்து விட்டாள். பொழுது விடிந்து வெயிலும் ஏறத் தொடங்கியிருந்தது.

பக்கத்தில் பாறை பாறையாகக் கிடந்த கல் பகுதியினிடையே ஒரு நீர்ப் பொய்கை இருந்தது. அதன் கரையை ஒட்டிக் கோங்கிலவ மரங்கள் சில அடர்த்தியாக வளர்ந்திருந்தன. புதர்போலச் செறிந்து விளங்கிய அந்த இலவமரக்கூட்டம், வயந்தகன் நோக்கில் விழுந்தது. 'மறைவாகத் தங்கியிருப்பதற்கு ஏற்ற இடம் அதுதான்' என்று தீர்மானம் செய்து கொண்டவனாய் அவன் அதை நெருங்கினான். மரங்களின் மேலே செந்நிறப் பட்டால் கூடாரம் அமைத்தது போலச் சிவந்த இலவம்பூ கொத்துக் கொத்தாகப் பூத்திருந்தது. புதருக்கு உட்புறம் ஒரு குகை போல, இருப்பதற்கு வசதியாக அமைந்துள்ளமையைக் கண்ட வயந்தகன், அங்கே உதிர்ந்திருந்த சருகுகளையும் முள் பொருந்திய கிளைகளையும் ஒருபுறமாக ஒதுக்கிவிட்டுப் பசிய இலைகளைக் கொண்டு தைத்து ஆக்கப்பட்ட விரிப்பு ஒன்றைத் தரையில் விரித்தான். அதற்குள் உதயணனும் தத்தை, காஞ்சனை இவர்களும் அங்கே வந்தனர். யாவரும் அந்த நாளின் நண்பகற் பொழுதை மறைவான அவ்விடத்தில் கழிக்க விரும்பினர். பக்கத்திலிருந்த பொய்கையின் குளிர்ச்சி அங்கே அவர்களுக்குச் சற்றே சோர்வை நீக்கி இன்பம் அளித்தது.

18. நெருங்கிய துன்பம்

பகற் பொழுது ஒரு வழியாகப் பொய்கைக் கரையில் அந்த இலவம் புதரிடையே கழிந்துவிட்டது. அழற்குழம்பென மேல்வானம் சிவப்புற அந்திப் பொழுது மெல்ல வந்தது. பறவைகளெல்லாம் பல்வேறு ஒலிகளைச் செய்து கொண்டே தத்தம் கூடுகளை அடைந்தன. பக்கத்துப் பொய்கையில் கதிரவனுக்கு கைகூப்பி விடை கொடுப்பன போல மலர்கள் குவிந்தன. வயந்தகன், உதயணனை நோக்கி மேலே என்ன செய்யலாம் என்பது பற்றிச் சில விவரங்களைக் கூறினான். "இருட்போது வந்துவிட்டதால், அந்தக் காட்டை அடுத்திருக்கும் உருமண்ணுவாவினால் ஆளப்படும் சயந்தி நகரத்துக்குக் கூடப் போவதற்கில்லை. இருளைப் பொருட்படுத்தாது சென்றால் பல துன்பங்கள் நேரும். தத்தையோ மிகவும் வலுவிழந்து காணப்படுகிறாள். ஆகையால் இப்போது செல்லுதல் நன்றன்று. யான் நம் நண்பனாகிய இடவகனால் ஆளப்படும் புட்பக நகரம் சென்று, நமது உதவிக்கு ஒரு படையும் பிற வசதிகளும் பெற்றுக் காலையில் வருவேன். அதுவரை நீ இவர்களோடு இங்கேயே இரு" என்று வயந்தகன் கூறிவிட்டுச் சென்றான்.

புட்பக நகரம் புறப்படத் தன்னிடம் விடைப் பெற்றுக் கொண்ட வயந்தகனை நோக்கி உதயணன் சில கூறினான். "இடவகனும் யானுமே அறிந்த அடையாளச் செய்தி ஒன்று உண்டு. அதைக் கூறினாலொழிய நின்னை அவன் நம்பமாட்டான். நீ நம் நிலையையும் நிகழ்ந்த யாவற்றையும் இடவகனிடம் கூறிப் படையுதவியும் பிறவும் பெற்று வரல் வேண்டும். இந் நேரத்தில் நாம் உறுதியாக நாடு திரும்புவது இடவகனிடம் நீ பெற்று வரும் உதவியைப் பொருத்தே இருக்கிறது" என்று இவ்வாறு உரைத்து, வயந்தகனிடம் அந்த அடையாளச் செய்தியையும் கூறினான் உதயணன். வயந்தகன் உதயணனை வணங்கிவிட்டு புட்பக நகரம் புறப்பட்டுச் சென்றான்.

வயந்தகன் புறப்படும் போது இரவு நேரம் ஆரம்பமாகி விட்டது. வயந்தகனை அனுப்பியபின் உதயணன் தத்தையையும் காஞ்சனையையும் இலவம் புதரின் உட்பகுதியில் நிம்மதியாகத் தூங்குமாறு கூறிவிட்டுத் தான் வெளிப்புறம் காவலாக நின்று கொண்டான். உள்ளே துயிலும் தத்தையின் எழிற் காட்சியில் தன்னுடைய துன்பங்களையெல்லாம் மறந்தவனாகி இருந்தான் உதயணன். நீண்ட அந்த இரவு முழுதும் அவன் தூங்கவே இல்லை. வலக்கரத்தில் ஏந்திய வாளுடனே பொழுது புலரும் வரை காக்க வேண்டிய கடமை அவனுக்கு இருந்தது. பொழுது ஒருவாறு புலர்ந்தது. இலவமரத்துக் கிளையொன்றிலிருந்த மயில் பச்சோந்தி யொன்று தன்மேல் வாலைச் சுழற்றிக் கொண்டு வருவது கண்டு கதறுவது போலக் கத்திக் கொண்டிருந்தது. கிழக்கே அடிவானம் சிவந்தது. உதயணன் கண்கள் தூக்கத்தால் சுழன்றன. தூக்கத்தை விடுத்துப் பொய்கையில் நீராடிக் காலைக் கடன்களைச் செய்யத் தொடங்கினான் அவன்.

காலைக் கடன்களை முடித்துவிட்டுத் தன் தனிமை நிலையையும் தனக்கு வரிசையாக நேரிம் துன்பங்களையும் எண்ணியவாறே புட்பகநகர் போன வயந்தகனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் உதயணன். தத்தையின் சோர்ந்த நிலை கண்டு அவளைத் தேற்றிப் பேணுமாறு காஞ்சனைக்குக் கூறிவிட்டு, வழியோரமாக நகர்ந்து சற்றுத் தொலைவிலிருந்து எங்காவது வயந்தகனது படை வருகிறதா என்று பார்க்கப் புறப்பட்ட உதயணனை ஒரு தீய நிமித்தம் தடை செய்தது. இலவ மரத்தின் உச்சியிலே அமர்ந்திருந்த வயவன் என்னும் பறவையொன்று பலமுறை கத்தியது. அது குரல் கொடுத்ததிலிருந்து விரைவில் எவரோ பகைவர் படை தன்னை நெருங்க இருக்கிறது என்றறிந்தான் உதயணன். முதன் முதலில் தான் பிரச்சோதனனால் வஞ்சக யானையின் மூலம் சிறைப் பிடிக்கப்படுவதற்கு முன்புங்கூட இதே பறவை கத்திய நிமித்தம் அவனுக்கு நினைவில் எழுந்தது. எதற்கும் முன்னேற்பாடாக இருக்க வேண்டுமென்ற கருத்தினனாய் வில்லைத் திருத்தி அதிற் பொருந்திய அம்புடன் இலவம் புதரின் முன்பு நின்று கொண்டான் உதயணன்.

இஃது இவ்வாறு இருக்கப் பத்திராபதி முன்பு இறந்து விழுந்து கிடந்த வழியோரமாக வந்த கொள்ளையடித்துத் துன்புறுத்தும் தொழிலையுடைய வேடர் சிலர் சந்தேகமுற்று நின்றனர். அந்தப் பகுதியில் மறைந்து வாழ்பவர்களாகிய அவர்கள் வழியிற் செல்லும் வணிகர் கூட்டங்களைக் கொள்ளையடிப்பதும் கொலை செய்வதுமே தொழிலாக உடையவர்கள். சவரர், புளிஞர் என்ற அந்த இருவகை இனத்து வேடர்களும் அன்று காலையில் பத்திராபதியின் அடிச்சுவடி கண்டு, அதைப் பின்பற்றியே பதுங்கிப் பதுங்கி வந்தனர். அடிச்சுவடு கண்டதும் அது ஏதோ ஒரு நாட்டுப் பிடியினுடைய அடிச்சுவடு என்பதும் அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. அதில் சென்றோர் செல்வமிக்கவராக இருக்க வேண்டுமென்றும் அனுமானித்தனர். சுவடு பற்றி வந்த அவர்கள் பத்திராபதி வீழ்ந்து கிடந்த இடத்திற்கே வந்து சேர்ந்தனர். அங்கே ஆடவர் பெண்டிர் கால் அடிகளின் அடையாளங்களையும் கண்ட அவர்கள் சந்தேகம் உறுதிப் பட்டது. அங்ஙனம் சந்தேகந் தோன்றினாலும் யானையில் வந்தவர்கள் இதற்குள் வெகு தொலைவு சென்றிருக்க வேண்டும். ஆகையால் அவர்களிடம் கொள்ளை அடிப்பதற்கு இயலாமற் போயிற்றே என்று வேடர் வருந்தி உரைத்தனர். அவர்கள் கூற்றை மறுத்து முதிய வேடனாகிய நிமித்திகன் ஒருவன், பறவை ஒன்றின் ஒலி நிமித்தத்தைக் கேட்டு, "நீங்கள் நினைப்பது தவறு. இப்பிடியில் வந்தோர் இங்கேதான் பக்கத்தே ஓரிடத்திலே தங்கியிருக்க வேண்டும். நாம் விரைந்து சென்றால் அவர்களைக் காணலாம். பெரும் பொருள் கொள்ளையாகக் கிட்டும். ஆனால் வீரம் மிக்க ஆண்மகன் ஒருவனுடன் கடினமாகப் போரிட்டே அப் பொருளை நாம் அடையமுடியும்" என்று கூறினான். அவ்வாறு கூறி முடிக்கவும் நெஞ்சில் ஈவிரக்கமற்ற அந்த வஞ்சகர் கூட்டம் ஒன்று கூடி எழுந்துவிட்டது. பிடி வீழ்ந்த இடத்திலிருந்து செல்லும் ஆடவர் பெண்டிர் அடிச்சுவடுகளை இடைவிடாமல் பின்பற்றிய வேடர் இலவம் புதரை நெருங்கிவிட்டனர். அங்கே சுற்றிச் சுற்றித் தேடினர். அப்போது பொய்கைக்கு எதிரே இலவம் புதரின் வாயிலில் நின்று கொண்டிருந்த உதயணனைச் சிலர் பார்த்துவிட்டனர். "அதோ அதோ, அகப்பட்டுக் கொண்டான்" என்று கூக்குரலுடன் இலவம் புதரைச் சூழ்ந்து கொண்டு தாக்க ஆரம்பித்தனர் வேடர். உதயணன் தன்னை எதிர்த்துச் சூழும் பகைவரை வில் முனையில் அம்பு மழை பொழிந்து விரட்ட ஆரம்பிக்கும் முன் புதருக்குள் ஒரு முறை திரும்பிப் பார்த்தான். ஒன்றும் புரியாத கலவரத்துடனே கண்களில் அச்சம் ஒளிர நடுக்கத்தோடு வெளியே நோக்கிக் கொண்டிருந்த தத்தையைக் காக்கும்படி, உள்ளே உடனிருந்த காஞ்சனைக்குக் கூறிவிட்டு வில்லை வளைத்தான் உதயணன்.

எதிர்த்த வேடர், இது கண்டு திகைத்து நின்றனர். திகைப்பு ஒருபுறம் இருந்தாலும் எளிதாகக் கையில் சிக்கிய கொள்ளையை விட்டுவிட அவர்கள் விரும்பவும் இல்லை. தனியொருவனாக நின்ற உதயணனை நெருங்கி எதிர்த்து வெற்றி கொள்ள முயன்றார்கள். "யானை இறந்து போனதும் இங்கிருந்து தப்பி நாடு சென்றுவிடலாம் என்று கருதினாய் போலும்! நீ எப்படிப் போய்விட முடியும்? உன் உயிரை உண்ணாமல் உன்னை விட்டு விட மாட்டோம். மரியாதையாக நீ யார் என்பதைச் சொல்லிவிடு" என்று கூறிக் கொண்டே அவனை வாட்ட ஆரம்பித்தது வேட்டுவர் கூட்டம்.

அவர்கள் செய்த வெந்துயர்களுக்கும் கேட்ட கேள்விகளுக்கும் உதயணன் வாய் திறந்து பதில் சொல்லவே இல்லை. அவன் கையிலிருந்த வில்லே விடை கூறிக் கொண்டிருந்தது. அந்த வீர வில்லிலிருந்து நொடிக்கு நொடி பறந்து கொண்டிருந்த அம்புகள் வேடரில் பலரை விண்ணுக்கு அனுப்பி வைத்தன. சமயமும் சூழ்நிலையும் எதிர்பாராத துன்பங்களைத் தரும்போது, எதிர்பாராத துணிவையும் மனிதனுக்குக் கொடுத்து விடுகின்றன. கொலைக் கொடுமைகளுக்குத் தன்நிகரற்ற காட்டு வேடர்களை, ஒற்றை மனிதனாக நின்று எதிர்க்கும் ஆற்றலும் உதயணனுக்கு அப்படித்தான் ஏற்பட்டது. சுற்றி வளைக்கும் பலர்க்கு இடையில் உதயணன் ஒருவனே பலராக நின்று, பலரோடும் போரிட்ட விந்தையை நினைக்க நினைக்க எதிரிகளுக்கே வியப்பூட்டியது. தங்கள் சாமர்த்தியத்தைத் தவிரப் பிறர் திறமையை வியப்பதை வாழ்க்கையில் இழிந்த பண்பாகக் கருதுபவர் அக்காட்டு வேடர். ஆனால், உதயணனைக் கண்ட பின்னர், அந்தக் கொள்கையைத் தாங்களாகவே அவர்கள் மாற்றிக் கொள்ள நேர்ந்தது. 'இவன் வெறும் மனிதன் தானா? அல்லது கூற்றுவனின் வேற்றுருவமோ?' என்று ஐயுறவு கொண்டனர். வில்லையும் அம்பையும் அவன் பயன்படுத்தும் முறைகளில் புதிய புதிய நுணுக்கங்கள் அவர்களுக்குப் புலப்பட்டன. ஒரு நொடியில் சூழ்ந்துள்ள பலர்க்கும் அதிர்ச்சி உண்டாகும் வண்ணம் கணைகள் சுற்றிச் சுற்றிச் சுழன்று பறக்கும்படியாக அவைகளை உதயணன் எய்த முறையை வியவாத வேடர் இல்லை. உள்ளே தத்தை முதன் முதலாக உதயணனின் போர்த்திறத்தைக் கண்டு காதல் உரிமை கலந்த மகிழ்ச்சியோடு வியந்து கொண்டிருந்தாள். போரின் அவசியமே தன் பொருட்டென்ற துக்கமும் அவளுக்கு இருந்தது.

வேடர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைக் கோபமாக மாற்றிக் கொண்டு, புள்நிமித்தம் கூறிய முதிய வேடன் மேல் அதைச் செலுத்தினார்கள். பகைவனிடத்தில் அரும்பெரும் திறனைக் காண்கின்ற ஒவ்வொருவனும் அதை அதிக நேரம் வியக்க முடியாது. சற்று நேரம் தன்னை மறந்த நிலையில் தோன்றும் அந்த வியப்புணர்ச்சி வெகுவிரைவில் மிகப்பெரிய அசூயையோடு கூடிய பொறாமையாக உருப்பெற்று விடும். இது உலக இயற்கை! மனித சுபாவமுங்கூட! இந்த இயற்கைக்கு அக்காட்டு வேடர்கள் விதிவிலக்கா என்ன? இல்லையே! மிக விரைவில் தங்களை உணர்ந்து சமாளித்துக் கொண்ட வேடர்கள் புள்நிமித்தம் சொல்லியவனை வைதுகொண்டே தாக்குதலை வலுப்படுத்துவதற்கு அறிகுறியாக உதயணனை மிக அண்மையில் நெருங்கி வளைத்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

19. வேடர் கேடுகள்

மற்றவர்கள் தன்னைத் திட்டுவதிலிருந்து தப்ப ஒரு வழி கண்ட நிமித்திகன், அதைக் கூறினான். மிக நெருக்கமாக வளைத்துக் கொண்டு தாக்கியதனால், இலவம் புதருக்குள்ளே மறைந்து இருந்த தத்தையும் காஞ்சனையும் வேடர்கள் கண்களுக்குத் தெரிந்து விட்டனர். அப்படித் தெரிந்து கொண்டவர்களில் அந்த முதிய நிமித்திகனும் ஒருவன். "புதருக்குத் தீமூட்டி விட்டால் இவன் போரை நிறுத்திவிடுவான்" என்று உதயணனைச் சுட்டிக் காட்டிக் கூறினான் அந்த முதிய நிமித்திகன். தன்னை வைதவர்களிடமிருந்து தப்ப அந்த உபாயம் தான் அவனுக்கு வாய்த்தது. அந்த முடிவை யாவரும் ஏற்றுக் கொண்டனர்.

புதருக்குத் தீ வைக்குமாறு கூறிய நிமித்திகன் கூற்றை, வேடர் யாவரும் வரவேற்றனர். ஆனால் நிமித்திகன் அதனை விளங்கக் கூறுகின்றவரை அவர்கள் செயற்பட்டார்களில்லை. ஏற்கனவே உதயணன் தங்களை அம்புகளால் வாட்டியதனை நினைக்க நினைக்க அந்த நிமித்திகன் மேல் அவர்களுக்குச் சற்றே வெறுப்புணர்ச்சி தோன்றியிருந்தது. நிமித்திகன் தன் கூற்றை விவரிக்கத் தொடங்கினான். "இலவம் புதரைச் சுற்றித் தீ மூட்டிவிட்டால், உள்ளிருப்பவர்கள் எவ்வாறேனும் வெளிப்பட்டுத்தான் ஆகவேண்டும். அங்ஙனம் வெளிப்படுங்கால் நாம் அவர்களைச் சூழ்ந்து கொண்டு துன்புறுத்த முடியும்" என்று கூறிய பின்பே, நிமித்திகன் சொல்லில் அவர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. கையிலிருந்த அரணிக் கோல்களைக் கடைந்து தீ மூட்ட முற்பட்டனர் காட்டு வேடர். காய்ந்து பஞ்சு போலிருந்த பூளைப் பூக்களை இடைமடுத்து, அரணிக் கோல்களை உரசிப் பழக்கமுள்ள அவர்கள் தீ உண்டாக்க வெகு நேரமாகவில்லை. "என் புள்நிமித்தம் ஒரு போதும் பொய்யாகாது" என்று சிறிது துணிவுடன் நிமித்திகன் இப்போது வாய்விட்டுச் சொன்னான்.

மூட்டிய தீயை புதரைச் சுற்றிலும் இட்டனர் வேடர். 'தங்களை வேண்டிச் சரணடைய வேண்டும்; அல்லது வைதவண்ணம் உயிர்விட வேண்டும். இவ்விரண்டொழிய புதரிலுள்ளோர் வேறெதுவும் செய்வதற்கியலாது' என்று நினைத்தவாறே சிங்கத்தை வளைக்கும் சிறுநரிக் கூட்டம் போலப் புதரை வளைத்துக் கொண்டு வேடர் துன்புறுத்தலாயினர். தீப்புகை சூழ்ந்து புதரினுள்ளே மூச்சுவிடவும் இயலாது போயிற்று. தழைத்துக் கொழித்துப் பூத்து விளங்கிய பூம்புதர் புகைப் படலங்களில் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது. உள்ளே தத்தை காட்டுத் தீயினால் எழுந்த புகையில் அகப்பட்டுக் கொண்டு திக்குமுக்காடும் பெண்மானைப் போல வருந்தினாள். உதயணனின் தனிமை அவள் உள்ளத்தைச் சுட்டது. தன் பொருட்டு அவன் படும் துயரங்களின் மிகுதியை அவளால் நினைக்கவும் முடியவில்லை. உள்ளே துயரலைகள் பொங்கி மோதிக் கொண்டிருந்தன. அவள் பெண்மை அவ்வளவு துன்ப மிகுதியைத் தாங்கும் அனுபவத்தைக் கூடப் பெற்றிருக்கவில்லை. தத்தையின் நிலையை அவள் கூறாமலே உணர்ந்து கொண்ட உதயணன், அவளருகில் வந்து அவிழ்ந்து கிடந்த கூந்தலை மெல்லக் கோதியவாறு திருத்தினான். அவள் துயர் தணியச் சில கூறிக் காஞ்சனமாலைக்கு ஒரு பொறுப்பை அளித்தான். "யான் வெளிப்புறஞ் சென்று போர் செய்து வெற்றியுடன் மீண்டு வருகிறேன். அதற்குள் நீங்கள் இருவரும் தீப்பற்றாத ஒரு புறமாக இங்கிருந்து வெளியேறிச் சென்று எங்கேனும் ஓரிடத்தில் ஒளிந்திருங்கள். இவர்களை வெற்றி கொண்ட பிறகு யானும் நீங்களிருக்குமிடம் வந்து சேர்ந்து கொள்வேன்" என்று உரைத்துத் தத்தையைக் காஞ்சனமாலையிடம் அடைக்கலம் போல அளித்தான். ஆனால் இந்த ஆணையைக் காஞ்சனைக்கு இட்டு விட்டு இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு வெளிப்போந்த உதயணன், இதற்கு அவசியமே இல்லாது போயினதை உணர்ந்தான். அவன் வில்லும் கையுமாக வெளிவந்த வேகத்தைக் கண்ணுற்ற வேடர் இனம், யாளியைக் கண்ட யானை இனம் போலச் சிதறி ஓடிவிட்டது. எனவே, உதயணன் தன் திட்டத்தை மாற்றிக் கொண்டான். விரைவாக உள்ளே சென்று தீப்பற்றாத ஒரு சிறு முடுக்கின் வழியே புறப்பட்டுக் கொண்டிருந்த தத்தையையும் காஞ்சனையையும் தானே அழைத்துக் கொண்டு புதரின் வாயிற் புறமாகவே வெளியேறினான் உதயணன்.

தத்தை, காஞ்சனை இவர்களுடன் அவன் புதருக்கு வெளியே சிறிது தொலைவு தான் நடந்திருப்பான். திடுமென்று முன்னேற் பாட்டுடன் பதுங்கியிருந்து தந்திரமாகச் சூழ்வது போல் வந்து வளைத்தது வேடர் படை. அப்போது தான் உதயணனுக்கு அவர்கள் சூழ்ச்சி நன்கு புரிந்தது. புதரிலிருந்து தன்னை வெளிப்படுத்துவதற்காகவே அவர்கள் அஞ்சியது போல நடித்து விலகியிருக்க வேண்டுமென்று அவன் உணர்ந்தான். முன்னும் பின்னும் பக்கமும் எங்குமே நெருங்கி வளைத்திருந்த படையையும் தன் வில்லையும் மாறி மாறிப் பார்த்தான் அவன். உதயணன் இவ்வாறு பார்த்த குறிப்பைப் புரிந்து கொண்ட வேடர்களில் ஒருவன் மிக்க மதியுள்ளவன். உடனே தன் வில்லில் அம்பு தொடுத்துச் சரியாகக் குறி வைத்து உதயணன் வில்லின் நாணை அறுத்து இரண்டாகத் துண்டித்துவிட்டான். கலைவல்லுநர் பலர் தம் கைத்திறம் விளங்கச் சமைத்த அந்த வலிய வில், நாண் அறுந்து தொங்கியது. சமயமறிந்து செய்த அந்த வேடனின் செயல் உதயணனைத் திகைக்கச் செய்தது. மேலே என்ன செய்வதென்று புரியாது திகைப்புடன் நின்றுக் கொண்டிருந்தான் உதயணன். வலையில் வீழ்ந்து கட்டுண்ட சிங்கம்போல இருந்தது அவன் நிலை. பாரதப் போரில் அபிமன்யுவைப் போலத் தனியாக நின்று தன் துயர் நினைந்திருந்தான் அவன்.

துன்பங்கள் தொடர்ச்சியாக நெருங்கி வரும் போது ஆண்மையாளனுக்கு ஓர் அசாதாரணமான துணிவும் ஏற்பட்டு விடுகிறது. சுற்றி நிற்பவர்களோ ஈவிரக்கமற்ற பகைவர்கள். கையில் இருப்பதோ நாண் அறுந்து போன வெறும் வில் தண்டு. அச்சமும் வியப்பும் தோன்ற இனம் புரியாத துயரத்துடன் தத்தையும் காஞ்சனையும் அணித்தே நின்றனர். 'கையில் படையேதும் அற்றவன்' என்ற போர் அறமும் கருதாது கணைகளைத் தொடுத்த வண்ணமிருந்தனர் வேடர். வெற்று வில்லொன்றே துணையாக, அவர்கள் கணைமாரியைத் தன்னிலிருந்து சிறிது நேரம் விலக்கினான் உதயணன். அவனுடைய இந்த நிலையைக் கண்ட தத்தை தன் மனத்தில் துயரத் துடிப்புடன் 'உள்ளங்கவர்ந்த கள்வன் உடலைத் துளைக்குமோ' என்று அஞ்சும்படி வேடர் அம்புகளால் தாக்குகின்ற நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவித்தாள். ஏதோ நினைவு வந்தவள் போலத் தன் முன் கைகளையும் கழுத்தையும் பார்த்தாள். அவள் முகத்தில் நம்பிக்கை சிறிது மலர்ந்தது. தான் அணிந்திருந்த நகைகள் யாவற்றையும் கழற்றினாள். காஞ்சனையை அருகிலழைத்து அவற்றை உதயணன் மூலம் வேடர்கட்கு அளித்து அவர்களுடைய போரை நிறுத்துமாறு வேண்டிக் கொள்ளச் சொன்னாள். காஞ்சனை சற்றுத் தயங்கிய பின் மறுமொழி கூறாமல் அவற்றை வாங்கிச் சென்று உதயணன் கையில் கொடுத்தாள்.

காஞ்சனை விலை மதிப்புமிக்க அணிகலன்களை உதயணன் கையிற் கொடுப்பதையும் அவன் ஒன்றும் புரியாது திகைத்துத் தத்தையிருந்த பக்கம் திரும்பி நோக்குவதையும் கண்ட வேடர் அணிகளுக்கு ஆசைப்பட்டுப் போரைச் சிறிது தளர்த்தினர். தத்தையின் நடுக்கமும் துயர மனநிலையும் உதயணனுக்கு மிக விரைவிற் புலப்பட்டு விட்டன. நொடிக்கு நொடி துன்பம் மிகுந்து நெருக்கும் போது, நினைவுக்கு அளவு கடந்த நுண்மையும், வேகமும், கூர்மையும் எங்கிருந்தோ கிடைத்து விடுகின்றன. உதயணன் நினைவில் சிறியதோர் சூழ்ச்சி மிக விரைவில் உருவாகி விட்டது. அச்சூழ்ச்சியின் திட்டப்படி நடக்க அவன் தயாரானான். தான் இன்னான் என்பதை உரையாமல் வேடர்களை நோக்கிக் கூறலானான்: "காட்டு முழைகளிலுறையும் வலிய தோளையுடைய வேடர்களே, சற்று அருகே வந்து யான் கூறப்போவதைக் கேளுங்கள். பல பெரிய அணிகளப் பொருள்களை முயற்சியால் ஈட்டிப் பிடிமீது கொண்டு, இவ்வழியே வந்த யாங்கள் வணிகர்கள். வரும்போது இவ்விடத்திற்குச் சிறிது தொலைவில் எங்கள் பிடி நோயால் வீழ்ந்து இறந்துவிட்டது. பின்னர் யாங்கள் மிகவும் மனங்கவன்று பெரும் பொருள்களையும் அணிகலன்களையும் ஓரிடத்தில் புதைத்து வைத்திருக்கிறோம். நீங்கள் போரை நிறுத்துவீர்களாயின் பொருளைப் புதைத்த இடத்தை உங்கட்குக் காட்டுகின்றோம். அவைகளை நீங்களே அடையலாம்" என்று கூறி முடித்தான்.

உதயணன் கூற்றைச் செவியுற்ற வேடர் போரை நிறுத்தினர். சுற்றி வளைத்திருந்த வேடர்களை விலக்கிவிட்டு அவர்கள் தலைவன் முன் வந்தான். உதயணனை நெருங்கிய வேடர் தலைவன், "நீ யார் என்பதை எமக்கு விளக்கமாகக் கூறவேண்டும்" என்று மிரட்டினான். இந்த வினாவைக் கேட்ட உதயணன் ஒரு கணம் திகைப்பு அடைந்தான். ஆனால் உறுதியைக் கடைப் பிடித்தால் ஒழியத் தன் சூழ்ச்சி உடனே வெற்றி பெறாதென்பதை உணர்ந்து, "யாம் உதயணனுடைய வணிகர். பெரும் பொருளுடன் பிடியில் வந்தோம். இடையில் பிடி வீழ்ந்து விட்டது. பொருளை வழிக்கு அப்பால் ஒரு பொழிலில் புதைத்து வைத்தோம்" என்று முன் சொன்னதையே மறுபடியும் பொய் கலந்து விளக்கமாக உரைத்தான். தனது இந்த விடையில் வேடர் தலைவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதை அவன் முகக் குறிப்பிலிருந்து உதயணன் அறிந்து கொண்டான். தத்தை கழற்றியளித்த நகைகளையும் அவர்களுக்கு அளித்தானில்லை உதயணன். வயந்தகன், இடவகனுடைய படைகளுடன் துணைக்கு வந்து சேரும் வரை தனக்கும் தத்தை, காஞ்சனை இவர்களுக்கும் வேடர்களால் பெருந்துன்பம் நேராதவாறு பேச்சினாலேயே தடுத்துக் கொள்ளவே உதயணன் இவ்வாறு ஒரு முழுப் பொய்யைச் சொல்ல நேர்ந்தது. அது கருதி உதயணன் செய்த இச் சூழ்ச்சி தக்க பயனை அளித்தது. 'அவர்கள் வத்தவ நாட்டு மன்னன் உதயணனின் வணிகர்கள்' என்ற கூற்றைக் கேட்டு சற்று மரியாதை கொண்டு, வேடர்கள் துன்புறுத்துவதை முற்றிலும் நீக்கிவிட்டனர். ஆயினும் புதைத்து வைத்துள்ள பொருட் குவையை எவ்வாறேனும் பறித்துக் கொள்ளவே விரும்பினர். பறித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் சிறிது மகிழ்ச்சியும் அடைந்தனர். வேடர் தலைவன், உதயணனை நெருங்கி அவன் மேலாடையாலேயே அவனுடைய இரு கைகளையும் பிணித்துப் "பெரும் பொருளைப் புதைத்த இடத்தைக் காட்டுக" என்று கூறினான். தங்களிடம் உதயணன் சரணடைந்து விட்டமைக்கு அறிகுறியாகவே மேலாடையால் உதயணனைப் பிணித்தான் எயினர் தலைவன். உதயணனும் தன் சூழ்ச்சி வெற்றியுறும் என்ற நம்பிக்கையில் அதனைப் பொறுத்துக் கொண்டான். உதயணன் மௌனமாயிருக்கவே நகைகளைப் புதைத்த இடத்தைக் காட்டுமாறு மீண்டும் அவனைத் தூண்டினான் வேடர் தலைவன். உதயணன் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தான். "நீங்கள் இட்ட நெருப்பின் நடுவே இருந்ததால் மிகவும் வருந்தியுள்ளோம். உடல் முழுதும் காந்துகிறது. நாங்கள் முன்பு தங்கியிருந்த பொழிலில் ஏதோ ஒரு பகுதியிலே பொருள்களைப் புதைத்தோம். தீயால் சிதைவுபட்டுத் தோன்றுகின்ற இங்கே, இப்போது அப்பகுதி எது என்று குறிப்பாகத் தெரியவில்லை. இதுவும் உங்கள் தீயினால் வந்த வினை தான். எனவே அந்த நெருப்பின் வேகம் சற்றுத் தணிந்து ஆறட்டும். ஆறியபின் நாங்கள் புதைத்த இடத்தைக் காட்டுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்" என்று தன்னைக் கூர்ந்து நோக்கும் வேடர் தலைவனின், கழுகுக் கண்களை ஊடுருவியவாறே தலைநிமிர்ந்து மறுமொழி கூறினான் உதயணன். அதற்கு உடன்பட்ட வேடர் தலைவன், "அழல் ஆறியபின் பொருள் புதைத்த இடத்தை நீ காட்டவில்லையானால் கட்டப்பட்ட உன் கரங்கள் வெட்டப்படுவது உறுதி" என்று உதயணனிடம் கடுமையாக மொழிந்தான்.

வேடர் தலைவன் இவ்வாறு கூறியதைக் கேட்ட தத்தை தீயில் விழுந்த இளந்தளிரென மனவாட்டங் கொண்டு உருகினாள். உதயணன் துயர் சூழ நிற்கிறானே என்ற நினைவில் கண்ணீரைத் துளித்தன அவள் கயல் விழிகள். காஞ்சனை, தத்தையைத் தழுவிக் கொண்டவாறே, "உதயணன் துயரை நின் துயராக எண்ணுபவள் நீ! அவனுடைய உயிர்க்கு ஊறு வரின் நீ இறத்தல் ஒருதலை. தந்தையையும் அவன் பெருஞ்செல்வத்தையும் நீக்கிக் காதலனைப் பின்பற்றி வந்த உன்னை விதி இப்படித்தான் நடத்தும் போலும்" என்று இரங்கிக் கூறினாள். இவர்கள் இவ்வாறு துயரில் அழுந்துவதைக் கண்ட உதயணன் இவர்களுக்கு ஆறுதல் கூற விரும்பினான். உடனே அவன் வேடர் தலைவனையும் மற்றவர்களையும் நோக்கி, "உங்கள் விருப்பத்துக்கு மாறாகாமல் வருந்தந்தவிர்த்து யாங்கள் புதைத்த பொருள்களைக் காட்ட வேண்டுமென்று கருதினால் இப்போதைக்கு என் கைக்கட்டை அவிழ்த்து விடுங்கள். பின்பு வேண்டுமானால் மீண்டும் கட்டிக் கொள்ளுங்கள். அதில் எனக்கு மறுப்பில்லை. இவளுடைய துயரத்தைத் தேற்றிய பின், தீப்புகை ஆறியதும் பொருள்களைப் புதைத்த இடத்தைக் காட்டுவேன்" என்றனன். அதைக் கேட்ட வேடர்கள் முதலில் மறுப்பது போன்று கடுமையாக நடந்து கொண்டாலும் இறுதியில், 'இவன் நம் கையிற் சிறைப்பட்டவன். பொய் சொல்லித் தப்ப எண்ணி இவ்வாறு கூறியிருப்பானாயின் இவனை உயிரோடு விடமாட்டோம். எனவே இப்போதைக்கு இவன் சொல்வதையெல்லாம் செய்துதான் வைப்போமே' என்று கருதிக் கைக்கட்டை அவிழ்த்து விட்டனர். வலையிலிருந்து விடுபட்டுப் பிணையை நோக்கி ஓடும் கலைமானைப் போலத் தத்தையை நோக்கிச் சென்றான் உதயணன்.

20. படை வந்தது!

அரண்மனைப் பஞ்சணைகளில் பூவனைய மஞ்சங்களிலே துயின்ற வாசவதத்தை, அன்று அங்கே அந்தப் பாலை மணலிலே தளர்ந்து சோர்ந்த வண்ணம் காஞ்சனையின் மடியில் படுத்திருந்தது உதயணனை என்னவோ செய்தது. வேடர்களிடமிருந்து உதயணன் கைக்கட்டை அவிழ்த்துக் கொண்டு தன்னை நோக்கி வருவது கண்ட தத்தை எழுந்தாள். காஞ்சனை விலகி நின்று கொண்டாள். தீப் புகையினாலும் நடந்த இளைப்பினாலும் வாடியிருந்த தத்தையின் முகத்தில் நாணங் கலந்த மலர்ச்சி பிறந்தது. அவளைத் தன் நீண்ட கைகளால் மெல்ல தழுவிக் கொண்டே ஆறுதல் கூறினான் உதயணன். குவளை மலர்களிலிருந்து முத்துதிர்வது போலத் தத்தையின் கண்களிலிருந்து சொரிந்த நீர் முத்துக்கள், உதயணனைத் தீண்டியதால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் விளைவாகத்தான் இருக்க வேண்டும். எப்போதும் மிகுந்த துன்பத்திற்கு இடையில் தோன்றும் மின்னல் நேர மகிழ்ச்சியில் தான் இன்பம் மிகுதி. கைகெட்டுகின்ற மல்லிகைப் பூவைக் காட்டிலும் நச்சுப் பாம்புகள் சூழ்ந்து வசிக்கும் இடத்திலுள்ள மனோரஞ்சித மலருக்கு மணம் அதிகமல்லவா? இங்கே இவர்கள் நிலை இவ்வாறிருக்கப் புட்பக நகரம் சென்ற வயந்தகன் நிலையை அறிய அவனைப் பின்பற்றுவோம்.

'ஆருயிர் நண்பனும் அரசகுமாரனுமாகிய உதயணனைத் துன்பத்திற்குரிய சூழ்நிலையில் தனித்திருக்கச் செய்துவிட்டு வந்திருக்கிறோமே' என்ற கவலை ஒருபுறம். எதிரே மைக்குழம்பெனக் குவிந்து கிடந்த இருளில் புட்பக நகரத்தின் பாதை தெரியாது போயின துயரம் ஒருபுறம். விரைவில் இடவகனைச் சந்தித்துப் படையுடன் திரும்ப வேண்டுமென்ற பரபரப்பு ஒருபுறம். இவ்வளவும் சேர இருளைக் கிழித்து ஓடும் மின்னல் போல் முன்னேறிச் சென்றான் வயந்தகன். எதிரே புட்பக நகரத்தின் மாடமாளிகைகளில் ஒளி செய்த விளக்குகளும் பிறவும் தன்னுடைய கண்ணுக்குத் தெரிகின்ற அளவு நகரை நெருங்கிய பிறகுதான் வயந்தகனுக்கு உயிர் வந்தது. அப்போதுதான் பூத்த மல்லிகை போலக் கீழ் வானிலும் கருமை நீங்கி வெள்ளி உதயமாகிக் கொண்டிருந்தது. வயந்தகன் புட்பக நகருள் நுழைந்து அரண்மனையின் கொடிமதிற் புறத்தை அடைந்தான். காவலர் அனுமதி பெற்று இடவகனைக் காண உள்ளே சென்ற வயந்தகன், ஒற்றன் ஒருவனிடம் ஏதோ தனித்துப் பேசிக் கொண்டிருந்த நிலையில் அங்கே இடவகனைக் கண்டான். வயந்தகனைக் கண்ட இடவகன், ஒற்றனை அப்படியே விட்டுவிட்டு ஆவலோடு முன்வந்து வரவேற்றான். தன்னை வரவேற்ற இடவகன் முகத்தில் தோன்றிய கலக்கமும் துயரமும், எது காரணமாக விளைந்தவை என்று வயந்தகனுக்குப் புலப்படவில்லை. உதயணனுடைய நலத்தை விசாரித்த இடவகன் முகத்தில் பரபரப்புத் தோன்றியதும், உதயணன் நலமென்பதை அறிந்தவுடன் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்ததும் வயந்தகனுக்குப் புதிராகவே இருந்தன. அந்தப் புதிரை இடவகன் அவிழ்த்த போது வயந்தகனும் அவனோடு சேர்ந்து சிரிக்க நேர்ந்தது. 'உதயணனுடைய ஊக்கம், உயர்ச்சி, ஒழுக்கம், கலைநலம் இவைகளை எல்லாம் கண்டு பொறாமை கொண்ட பிரச்சோதன மன்னன், உள்ளே ஈட்டி, வேல் முதலிய ஆயுதங்களைக் குத்திட்டு நிறுத்திய பொய்ந்நிலம் ஒன்றை அமைத்து, வஞ்சகமாக அதிலே வீழ்த்தி உதயணனைக் கொன்றுவிட்டான்' என்று காட்டு வேடர் மூலமாகத் தான் கேள்வியுற்றதாகவும் அச்செய்தியே தன் துயரத்துக்கும் பரபரப்பிற்கும் காரணமென்றும் இடவகன் சொன்னபோது வயந்தகன் வாய்விட்டுச் சிரித்தான். பொய் சொல்லுகிறவர்கள் எவ்வளவு அழகாக அதற்குக் கைகால்களை ஒட்ட வைத்து உண்மையைப் போல உருவாக்கி விடுகிறார்கள் என்பதை நினைக்கும் போது வயந்தகனுக்கு வியப்பாயிருந்தது. தனது காரியத்தின் துரிதத்தை நினைவிற் கொண்டு வந்தவனாய், உதயணனுடைய அப்போதைய நிலையை அவந்தியிலிருந்து புறப்பட்டது தொடங்கி இலவம் புதரில் தங்கியிருப்பது வரை விரிவாகக் கூறி, உடனே படையுதவி தேவைப்படுவதையும் விளக்கினான் வயந்தகன். அதோடு தன்னை நம்புவதற்காக உதயணன் கூறிய அடையாள மொழியையும் வயந்தகன் இடவகனிடம் அறிவித்தான்.

இடவகன் உடனே தன் படைகளைப் புறப்படுமாறு ஆணையிட்டான். படைகள் எழுந்தன. இடவகனும் வயந்தகனும் முன் சென்றனர். படை பின் தொடர்ந்தது. இடவகன் ஆணைப்படி படைகளுக்குப் பின் வாசவதத்தைக்கும் உதயணனுக்கும் உரியவாகப் பலவகை அலங்காரப் பொருள்கள் சுமந்து கொண்டு வரப்பெற்றன. அணிகலன்களும் பரிவாரமும் பணிப்பெண்களுமாக அக்கூட்டம் படைக்குப்பின் அமைதியாகச் சென்றது.

படை காட்டுள்ளே வந்துவிட்டது. முன் சென்ற வயந்தகனும் இடவகனும் இலவம் புதரை அடைந்தனர். அங்கே அவர்களுக்குப் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. புதர் எரியும் புதையுமாகத் தீப்பட்டுக் கொண்டிருந்தது. புதருக்கு எதிரே உதயணின் அம்புக்கு இலக்காகிய வேடர்கள் சிந்திய குருதியும் நிணமும் பரந்திருந்தன. மேலே இந்த நிணவிருந்தை எதிர்நோக்கிக் கழுகுகளும் காக்கைகளும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. எரிந்து கொண்டிருந்த இலவம் புதரும் எதிரே தெரிந்த குருதிப் பரப்பும் கண்ட அவர்கள் உதயணனுக்கும் காட்டிலுள்ள வேடர்களுக்கும் ஏதோ போர் நடந்திருக்க வேண்டுமென்று உய்த்துணர்ந்தனர். ஆனால் உதயணனும், தத்தை, காஞ்சனை ஆகியோர்களும் தங்கியிருந்த இலவம் புதர் தீப்பட்டு எரிந்து கொண்டிருந்ததுதான் வயந்தகன் ஐயப்படக் காரணமாகியது. 'ஒருவேளை உதயணன் தத்தை முதலியவர்கள் நெருப்பில் அழிந்து போயிருக்கக் கூடுமோ?' என்பதற்குமேல் வயந்தகனால் நினைக்கவே முடியவில்லை. அவன் வாய்விட்டு அழுதேவிட்டான். மேலே என்ன செய்வதென்று அறியாமல் அவர்கள் அங்கேயே அயர்ந்துபோய் அமர்ந்து விட்டனர். உதயணன் முதலியவர்களுக்கு ஏதேனும் துயர் நேர்ந்திருந்தால் தாங்களும் நட்பை நிலைநாட்ட உயிர் விடுவதாகவே முடிவு செய்தனர், இடவகனும் வயந்தகனும். இதற்குள் பின் தொடர்ந்த படையும் அங்கே வந்து சேர்ந்தது.

பெருந்துயருடன் அமர்ந்திருந்த தங்கள் அரசனையும் வயந்தகனையும் கண்ணுற்ற படைத்தலைவர்கள் வருந்தத்தக்க ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டுமென்று அனுமானித்துக் கொண்டனர். வயந்தகன் வாயிலாக நடந்தவற்றை அறிந்த பின் அவர்கள் "தாங்கள் கருதுவது போல உதயணன் முதலியோருக்குத் துயரம் எதுவும் நேர்ந்திருக்காது. இதோ புற்பரப்பின் இடையே தெரியும் அடிச்சுவடுகள் வேடர்களுடையன. இச் சுவடிகளைப் பின்பற்றிச் சென்றால் உதயணன் முதலியோரைச் சந்தித்தாலும் சந்திக்கலாம்" என்று உறுதி கூறி, இடவகனுக்குத் தைரிய மூட்டினர். படைத்தலைவர் கூற்றில் சற்றே நம்பிக்கை வரப்பெற்றவராய் வயந்தகனும் இடவகனும் எழுந்து அந்த அடிச்சுவடிகளின் வழியே பின்பற்றி நடந்தனர். ஏனையோரும் பின் தொடர்ந்தனர். சற்றுத் தொலைவு சென்றதும் மலைச் சரிவின் கீழே சிறுசிறு உருவிலே எறும்புக் கூட்டம் போலத் தோன்றிய வேடர் கூட்டம் புல்வெளியில் நடுவே தெரிந்தது. அந்தக் கூட்டத்தைப் படையுடன் நெருங்கிய அவர்கள், வேடர்களுக்கு இடையே உதயணன், தத்தை, காஞ்சனை இவர்களுடன் நிற்பதைக் கண்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர்.

இடவகனுடைய படைகள் வேடரை வளைத்துக் கொண்டன. சுற்றிக் கருங்குவளை மலர் பூத்த பொய்கையுள் நடு மையத்தில் ஒரே ஒரு தாமரை பூத்தாற் போல நின்றான் உதயணன். சுற்றி வளைத்துத் துன்புறுத்திக் கொண்டிருந்த வேடர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பக்கத்தில் கருங்காலி மரத்தின் மேலிருந்த பறவையொன்று ஒருமுறை கத்தியது. அதைக் கேட்ட நிமித்திகன், "இனி நமக்குத் துன்பம் நேரும். நாம் இவ்விடத்தை விட்டு ஓடிவிடுதல் நல்லது" என்று வேடர்களை நோக்கிக் கூறினான். அவர்கள் யாவரும் அவனை வெறுப்புடன் எரித்துவிடுவது போலப் பார்த்தனர். நாற்புறமும் சிதறி ஓடுவதற்குத் தொடங்கிய வேடர்கள், இறுதி முறையாக உதயணனை நெருங்கித் துன்பறுத்தலாயினர். அதைக் கண்ட இடவகன் படையினர், விரைவில் வந்து வேடர்களை வில்லும் வாளும் வேலும் கொண்டு எதிர்த்தனர். இது உதயணனுக்கு ஏற்படுத்திய நிலை, இருதலைக் கொள்ளி போல இருந்தது. இப்புறம் வேடர்கள் துயரம் பொறுக்க முடியவில்லை. வந்திருக்கும் படையினர் தனக்கு வேண்டியவர்கள் என்று தெரிந்துவிட்டால், போகின்ற போக்கில் சினந்தீர ஏதாவது செய்துவிட வேடர்கள் தயங்கமாட்டார்கள். இதற்காக வந்திருப்பவர் எவரென்பதையே அறிந்த கொள்ள விரும்பாதவன் போல உதயணன் நடிக்க நேர்ந்தது. "வந்திருக்கின்ற படையினர் உங்களைச் சேர்ந்தவர்களா? பிறரா? இவர்களால் நமக்கு ஏதேனும் துன்பம் நேருமாயின் எங்களை இங்கே எங்காவது மறைந்திருக்கச் செய்யுங்கள்" என்று வேடர்களை நோக்கிக் கூறி ஏமாற்றினான் உதயணன்.

அதற்கு வேடர்கள், "இது உதயணனின் மந்திரிகளாகிய இடவகன் படை. உயிர் தப்ப விரும்பினாயாயின் எங்களோடு ஓடி வருக" என்று மறுமொழி கூறிவிட்டுத் தாங்கள் தப்ப வழி தேடி, விரும்பிய திசைகளில் ஓடலாயினர். சிலர் புற்புதர்களில் ஒளிந்து ஓடினர். பதுக்கைக் கற்களின் இடையிலே பதுங்கியவாறு விரைந்தனர் வேறு சிலர். எஞ்சியவர்கள் இடவகன் படை வீரருடைய வாளுக்கு இரையாயினர். படைவீரர் வியக்க, வேட்டுவப் போர்த்திறங்காட்டிப் போரிட்டனர் சிலர். வயந்தகனும் இடவகனும் கூடப் போரில் ஈடுபட்டிருந்தனர் போலும். வேட்டுவர்களில் பெரும்பாலோர் ஓடி விட்டார்களேனும், எஞ்சியவராய் நின்று போரிட்ட சிலருக்கே இடவகன் படைவீரர்கள் முற்றிலும் முயன்று விடைகூற வேண்டியிருந்தது. இந்நிலையில் உதயணன், தத்தை, காஞ்சனை இவர்களுடனே சிறிது விலகி ஒதுக்குப் புறமாக ஓரிடத்தில் மறைந்திருக்க விரும்பினான். அதற்கு வேறோர் காரணமும் இருந்தது. தானும், தத்தை, காஞ்சனை இவர்களும் இருந்த இடம் இரண்டு தரத்துப் படையினருக்கும் இடையில் அமைந்திருந்தது. 'அவர்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் அம்புகள் வேல்கள் முதலியன இடையிலிருக்கும் தங்களுக்கு ஏதேனும் ஊறு செய்தலும் கூடும்' என்று கருதிப் பக்கத்தில் மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த ஓரிடத்தில் தத்தை, காஞ்சனை இவர்களுடன் மறைவாகச் சென்று உதயணன் இருந்து கொண்டான்.

போர் ஒரு வழியாக முடிந்தது. சீறி எழுந்த பாம்பின் முன் எலிக்கணம் போல மறைந்த சுவடு தெரியாதபடி ஆகிவிட்டது வேடர் படை. உதயணன் வெளியே வந்தான். வயந்தகன், இடவகன் முதலியோரும் படைத் தலைவர்களும் அளப்பரிய மனமகிழ்ச்சியுடன் திங்களைச் சூழ்ந்த விண்மீனினம் போல உதயணனைச் சூழ்ந்து கொண்டு வெற்றிக் களிப்பு விளங்க ஆரவாரம் செய்தனர். பிரிந்த நண்பர்கள் கூடினர். பேசரிய மனநிறைவை அடைந்தனர். இடவகன், உதயணனைத் தழுவிக் கொண்டு கண்ணீர் விட்ட காட்சி, கூடியிருந்தவர்களை உருக்கியது. அல்லல் அகன்ற மகிழ்ச்சியில் தத்தையும் காஞ்சனையும் வெளிவந்து ஒருபுறமாக நின்று கொண்டனர். 'அடுக்கடுக்காக எழுந்து வந்த துன்பங்களை அரிய துணையாக நின்று போக்கிய வயந்தகன் இப்போது இடவகன் துணையுடன் தக்க தருணத்தில் வந்து உதவியிராவிட்டால் தன் கதி என்ன ஆகும்?' என்று சென்ற உதயணன் மன எண்ணங்கள் சட்டென்று தடைப்பட்டன. எதிரே வயந்தகன் வந்து நின்றான். அப்போது அவனை உதயணன் பார்த்த கனிந்த பார்வையில் நன்றியறிவு பூரணமாகக் கனிந்து தெரிந்தது.

அப்போதைக்குப் பக்கத்திலிருந்த சிறு சோலை ஒன்றில் யாவரும் தங்கினர். வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கின்றார்களாகையால் இடவகனும் உதயணனும் இடைவிடாது பேசிக் கொண்டிருந்தனர். வயந்தகன் பக்கத்தில் அமர்ந்திருந்தான். "துன்பப் பெருங்கடலைக் கடக்க இன்பப் புணையாக வந்துதவினீர்கள்" என்று அவர்களிடம் மீண்டும் நாதழுதழுக்க நன்றி கூறினான் உதயணன்.

21. மலைச்சாரலிலே

சோலையில் தங்கி உதயணன் முதலியவர்கள் அளவளாவிக் கொண்டிருந்த போது இடவகனின் படைவீரர்கள் பக்கத்திலே இருந்த சயந்தி நகரத்தைச் சார்ந்த மலைச்சாரலில், உதயணன் தத்தை முதலியோர் தங்குவதற்கேற்ற பட மாடங்களையும் ஏனையோர்க்குரிய படை வீடுகளையும் அமைத்துக் கொண்டிருந்தனர். மறுகும் முற்றமும் முன்றிலுமாக வகுத்து அமைக்கப்பட்டிருந்த அந்தப் பாடி வீடுகளின் தோற்றங்கள் மலைச்சாரலில் தனி அழகுடனே தோன்றின. தூயவெண்பட்டுக்களால் இயற்றப்பட்ட பட மாடங்கள் தொலைவிலிருந்து காண்பதற்கு விசும்பிலே கட்டிய கண்ணாடி நகர் போலத் தெரிந்தன. வாசவதத்தைக்கு இயற்றிய பாடி வீட்டில் பள்ளிமாடம், அன்றில், விளையாடு முன்றில் முதலியவற்றை அழகுறச் சமைத்திருந்தனர். சந்தனப் பலகை, மணிக்கலப் பேழை, இருக்கைக் கட்டில், ஆலவட்டம் முதலிய அலங்காரப் பொருள் அதில் நிரம்பியிருந்தன. உதயணனுக்குரிய படமாடக் கோவிலிலும் ஒரு சிறந்த அரசனுக்கு வேண்டிய அணிகலன்களும் பொருள்களும் மிகுந்திருக்குமாறு இயற்றப்பட்டிருந்தது. பலவகைக் குற்றளையோர் ஆடவரும் மகளிருமாகப் பணி செய்யக் காத்திருந்தனர். ஒருவருமே அற்ற சூனியப் பிரதேசமாகிய அந்தக் காட்டில் மலைச்சாரலில் இயற்றப்பட்ட நகரில் இவ்வளவு பேர் தோன்றியது புற்றிலிருந்து ஈசல் புறப்பட்டது போலிருந்தது. நல்ல நேரம் பார்த்து உதயணன் முதலிய யாவரும் சோலை நீங்கி மலைச்சாரலில் அமைக்கப் பெற்ற நகரில் குடிபுகுந்தனர். பெண் யானையின் மீது வேகமாக வந்த உடல் நோவு தீர மருத்துவ முறைப்படி உணவு சமைக்கப்பட்டது. நாழிகைக் கணக்கர் உண்ண வேண்டிய பொழுதறிந்து கூறினர். இரவும் பகலுமாக விடாது பயணம் செய்த அலுப்பு உதயணனைச் சோர்வு கொள்ளச் செய்திருந்தது. வேடர்களோடு போர் செய்த களைப்பு வேறு அவனை வருத்தியது.

உடல் அலுப்பு நீங்க எண்ணெய் பூசி நீராடிவிட்டுப் பின்பு உண்ணலாம் என்று கருதினான். உடல் ஒளி குறைந்து வாட்டங் கண்டிருந்தது. வல்லவன் வகுத்த வாசனை பொருந்திய எண்ணெயைப் பூசிக் கொண்டு குளிர்ந்த நீரில் மனம் விரும்பி வெகு நேரம் உடல் குளிர ஆடினான் உதயணன். நீராடி முடித்த பின் நண்பர்கள் ஒன்றாக உண்ண அமர்ந்தனர். வெகு நாள்களுக்குப் பிறகு நேர்ந்த இந்த அரிய அமைதியான வாய்ப்பு மூவர் மனத்திலும் மகிழ்ச்சியை நிறையச் செய்திருந்தது. மகிழ்ச்சி நிறைவோடு உதயணன், வயந்தகன், இடவகன் மூவரும் உண்டனர். சிரிப்பும் விளையாட்டுமாக உண்டு முடிக்க நேரமாய்விட்டாலும் உவகை மிகுதியில் பொழுது போனதே தெரியவில்லை நண்பர்களுக்கு. பிடியில் வழிப்பயணம் செய்த இளைப்பு, உறக்கமின்றிப் பல இரவுகளைக் கழித்தமை, வேடர்கள் தொல்லை, தீயினால் ஏற்பட்ட வேதனை, இவ்வளவும் தீர நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டான் உதயணன்.

வாசவதத்தையை ஆயமகளிர் நன்கு நீராட்டினர். அழகிய கற்சுனையின் நடுவே பொற்பாவை போல நின்று, காண்போர் மகிழ நறுநீராடினாள் தத்தை. நீராடிய பின் பசி தீர அமுதம் போன்ற உணவை உண்ணச் செய்தனர். இரண்டு நாட்களாக உண்ணாமலிருந்த பசி மிகுந்திருந்த தத்தை நன்கு உண்டாள். சுவைமிக்கதாகச் சமைக்கப்பட்டிருந்தது அந்த நல்லுணவு. உணவு முடிந்த பின் தோழிப் பெண்கள் துயர் தீரப் பல பணிவிடைகள் செய்தனர். யாவரும் ஓய்வு கொண்டனர். அப்போது மலைச்சாரலில் நகரின் அமைதியான தோற்றம் அழகின் எல்லையாக விளங்கியது. படையோடு வந்திருந்த குதிரைகள், யானைகள் இவை யாவும் பெரிய பெரிய மரங்களிலே கட்டப்பட்டிருந்தன. நகரின் அமைதியைக் கலைத்துக் கொண்டு யானைகளின் முழக்கம் மலைச்சாரலில் கேட்டுக் கொண்டிருந்தது. போக பூமியைக் காட்டிலும் சிறந்து விளங்கிய அந்தச் செயற்கை நகரின் நூல்வெண்மாடங்கள் பாற்கடலின் அலைகளைப் போலக் காட்சியளித்தன. மொய்த்துக் கிடந்த படை வீரர்கள் கூட்டங் கூட்டமாக ஓய்வு பெற்றுக் கொண்டிருந்தனர்.

உதயணன் முதலியோர் இளைப்பாறி எழுந்ததும் பக்கத்திலுள்ள சயந்தி நகரத்திற்குச் செல்லுவதற்குத் திட்டமிட்டனர். மேருமலை மேல் எழுந்த செங்கதிர்ச் செல்வன் போல அழகிற் சிறந்த யானை ஒன்றின் மீது ஏறி அமர்ந்தான் உதயணன். வயந்தகனும் இடவகனும் பக்கத்தே வேறு யானைகளின் மீது ஏறி வரலாயினர். இருபுறமும் யானைகள் சூழ நடுவில் உதயணன் இருந்த தோற்றம், சுற்றிலும் கருமுகில் இருப்ப நடுவே சுடர் இருந்ததென விளங்கிற்று. அவன் தலைக்குமேல் நிழல் செய்து கொண்டிருந்த வெண்கொற்றக்குடை, தண்மதி போலத் தெரிந்தது.

நிரை நிரையாக வில்லும் வாளும் வேலும் கேடயமும் ஏந்திப் படைகள் பின் சென்றன. யானை புரவி தேர் முதலியன வரிசையாகப் பின்பற்றிப் போயின. பொதியிற் சந்தனமும் விந்தியத்து யானைக் கொம்புகளும் மேருமலைப் பொன்னும் குடகடலிற் பிறந்த படர்கொடிப் பவழமும் தென்கடற் பிறந்த மின்னொளி முத்தும் ஈழத்துச் செப்பும் இமயத்து வயிரமும் ஆகிய அலங்காரப் பொருள் பல ஏந்திய ஏவலிளையர் அவர்களுக்குப் பின்னே சென்றனர். யவனத்துத் தச்சரும் அவந்தி நாட்டுக் கொல்லரும் மகதநாட்டு மணிவினைஞரும் பாடலி நாட்டுப் பொற்றொழிலாளரும் வண்ணக்கம்மரும் ஆகிய தொழிற்செல்வர்களின் கலைக்கூட்டம் அப்பால் போயிற்று. காட்டில் உதயணனுக்கு உதவவே இடவகன் வந்தான் எனினும் தனக்குப் பேரரசனாகிய உதயணனை அவன் அமைச்சருள் ஒருவனாகிய தான் காணச் செல்லும்போது தக்க மரியாதைகளுடன் செல்ல வேண்டும். அன்றியும் உதயணனை மணஞ் செய்து கொள்ள அவன் ஆருயிர்க் காதலி தத்தையும் உடன் வந்திருப்பதால் ஏற்ற அலங்காரப் பொருள்களுடனும் எதிர்க் கொள்ள வேண்டும் என்று கருதியே இவ்வாறு பல்பொருளும் பல வினைஞரும் கொண்டு வந்திருந்தான் இடவகன். வாசவதத்தை கொல்லப்பண்டி (ஒருவகை சித்திரச் சிவிகை) ஒன்றில் காஞ்சனை துணை நின்று ஏற்ற ஏறிக் கொண்டாள். கூடியிருந்த மக்கள் கூட்டத்தை விலக்கக் கைக்கோற் சிலதர் குரலிட்ட ஒலிகளுக்கிடையே புறப்பாட்டுக்கு அறிகுறியான முரச ஒலியும் கலந்தொலித்தது.

மலைச்சாரலிலுள்ள சிற்றூர்களில் வாழும் குறுநில மக்களாகிய குறும்பர்களும் அவர்களின் தலைவர்களும் முன்னரே இடவகன் மூலம் உதயணனுடைய வரவு குறித்து ஓலைச் செய்தி பெற்றிருந்தனர். அங்கங்கே கூடி நின்று உதயணனுடைய அடையாள இலச்சினையை மரியாதையுடன் கண்டுணர்ந்து பல்வகைத் திறைப் பொருள்களுடன் சந்தித்தனர். குறும்பர் மக்கள், அவர்கள் தலைவர் முதலியோர், யானைத் தந்தமும் மலைத்தேனும் பல கனி வகைகளும் வீணை செய்வதற்கேற்ற மரத் தண்டுகளும் மூங்கிலில் வினைந்த முத்துக்களும் அகிலும் புலித்தோலும் ஆகிய பல பொருள்களை அன்புடன் கையுறையாகக் கொடுத்தனர்; 'எக்காலத்தும் நின் குடியினராக வாழும் பேறு எமக்குக் கிட்டுக' என்ற அவர்கள் வேண்டுகோளை உதயணன் மகிழ்ச்சியோடு வரவேற்று மிக்க நன்றி செலுத்திய பின், அவர்களிடம் விடைபெற்று மேற் சென்றான். அப்பால் இவ்வாறே பல சிறுசிறு மலைகளையும், காடுகளையும், சிற்றூர்களையும் கடந்து பயணத்தைத் தொடர்ந்தனர். இடைஇடையே தன் கீழ் வாழும் குடி மக்களின் அன்பு கனிந்த வரவேற்பு உதயணனுக்கு மனமகிழ்வை அளித்தது. நிகழ்ந்த துன்பங்களை மறப்பதற்கு இது நல்ல வாய்ப்பாகவும் அமைந்தது. மலைப் பகுதிகளிலும் காட்டுப் புறங்களிலும் வாழும் அம்மக்கள் கள்ளங்கபடம் அற்றவர்கள். அவர்கள் அன்பு வஞ்சனை கலவாத தூய்மை வாய்ந்தது. அதில் தங்கள் அரசன் என்ற முறையில் மதிப்பும் கலந்திருந்தது. பொழுது சாயும் நேரம் யாவரும் சயந்தி நகரத்தை நெருங்கினர். அழகிற் சிறந்த சயந்தி நகரம் மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் பொன் மயமாகக் காட்சி அளித்தது. தேவகோட்டத்து மணியோசை வருவோரெல்லாம் வருக என்று அழைப்பது போல் ஒலித்துக் கொண்டிருந்தது. சயந்தி நகரை உதயணனுடைய அமைச்சர்களில் ஒருவனாகிய உருமண்ணுவா ஆண்டு வந்தான். சயந்தி நகரம் உதயணன் ஆட்சிக்கு உட்பட்டதாயின், அவன் ஆணையின்மேல் உருமண்ணுவா ஆண்டு வந்தான். சயந்தி நாற்புறமும் இயற்கை வளமிக்க மலைகள் சூழ்ந்த நகர். என்றும் குன்றாத எழில் வளமும் சார்ந்தது.

அந்த நகரத்திற்குள் தத்தை, காஞ்சனை, வயந்தகன், இடவகன் இவர்கள் புடைசூழ மிக்க விருப்பத்துடன் உதயணன் புகுந்தனன். படைகள் யாவும் புறநகரிலே தங்கிவிட்டன. உதயணன வரவு முன்பே ஓலைச் செய்தி மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததனால் நகரில் எங்கும் களிப்புடன் கூடிய ஆரவாரம் மிகுந்து காணப்பட்டது. பூரண விளக்கு, தோரண மாலைகளும், சுடரொளி விதானங்களுமாகப் பொலிவும் புதுமையும் பெற்று விளங்கின, நகரப் பெரு வீதிகள் யாவும். அவற்றை மகிழ்ச்சியுடன் நோக்கியவாறே இவர்கள் சென்றனர்.

22. சயந்தி நகரில் திருமணம்

கதிரவனுடைய வெம்மையை ஆற்றிச் சயந்தி நகருக்கு நிழலளிப்பவன் போல விரித்த பூங்கொடிகள் பல தோன்றின. பெரிய முரசங்களின் கடல் போன்ற ஒலிக்கு இடையே, குடமுழாக்களின் கிண்கிணி இசையும் ஒலித்தது. இருவினைப் பழந்துயர்களை வென்ற அருகனதேவனுக்கு இந்திர உலகம் வரவேற்பளித்தது போல, உதயணன் தத்தை முதலியோரை மகளிரும் மைந்தருமாகக் கூடிச் சயந்தி நகரத்தினர் மங்கல நிறை குடங்களுடன் எதிர்கொண்டு வரவேற்றனர். 'இருள் கடிந்து தோன்றும் இளஞாயிறு போலத் துயர் கடிந்து பொலியும் தோன்றலே வருக' என்றார் சிலர். சயந்தி நகரினர் தம் அன்பு நிறைவை எல்லாம் உதயணன் வரவேற்பில் காட்டினர்.

"யானையை மீண்டும் பெறக் கானிற் சென்ற போது பகை மன்னனால் பற்றிக் கொள்ளப்பட்டாய்! இப்போது வெற்றியையும் அதன் சின்னமாக வாசவதத்தையையும் உடன் கொண்டு வந்திருக்கிறாய்! உனக்குப் புதல்வர் போன்ற உன் குடிகளை இனித் துன்பம் நீங்க ஆளவேண்டியது உன் கடமை!" என்று முதுமக்கள் வாழ்த்தினர். அரசன், குடிகள் என்ற உயர்வு தாழ்வு அன்பு வாழ்த்துக்கு ஏது? "திருமால் மார்பில் திருமகள் போல எங்கள் மன்னன் நெஞ்சில் இடைவிடாது உறையும் பேறு உனக்கு எய்துக! நீ வரக்காண யாங்கள் முற்பிறவியில் நல்வினை மிகுதியாகச் செய்திருந்தோம் போலும். பிரச்சோதனனுடைய மகள் மிகச் சிறந்த அழகியெனக் கேள்வியுற்றதுண்டு. அந்த அழகை நேரிலேயே கண்குளிரக் காணச் செய்த எம் அரசன் வாழ்க!" என்று தத்தையைப் பலர் வாழ்த்தினர். 'அந்த வாழ்த்தில் அவள் தங்கள் நாட்டரசனுக்கு விரைவில் கோப்பெருந்தேவி என்ற மதிப்பிற்குரியவள் ஆவாள்' என்னும் பெருமையும் கலந்திருந்தது. வேறு சிலர், இவ்வளவு நற்செயல்களும் பிழைபடாமல் நிகழ்வதற்கு இன்றியமையாதவனாய் இருந்தவன் யூகி என்பதைக் கேள்வியுற்று, அவனை வாயாற வாழ்த்தினர். "நன்றாக வந்த ஒரு பொருள், உலகில் ஒருவர்க்குத் தீதாய் முடிந்தாலும், வியப்பதற்கு இல்லை. தீதாய் வந்த ஒரு பொருள் நன்றாய் முடிந்து நலம் பயத்தலும், அத்தகையதுதான். மாய யானையால் நம் மன்னனை வஞ்சகமாகச் சிறைசெய்த பிரச்சோதனனுடைய தீமை, நம் மன்னனுக்கு நலமாய் முடிந்ததோடு அல்லாமல், அழகிற் சிறந்த நங்கை தத்தையையும் அளித்திருக்கிறது. மகளைக் கொடுப்போர் முதலில் தீது போற் காட்டிப் பின்பு செய்யும் நலம் இவ்வாறு குறிப்பாகவே இருக்குமோ?"

இப்படிப் பலப்பல எண்ணினர் சயந்தி நகரக் குடிமக்கள். இத்தகைய பல்வகையான ஆரவாரங்களுக்கும் இடையே அமராபதியிற் புகும் இந்திரனைப் போலத் தத்தை முதலியோர் பின் தொடர உதயணன் அரண்மனையுள் புகுந்தான்.

உதயணன் சயந்தி நகருக்கு வந்தபின் சில நாள்கள் அமைதியாகவும் இன்பமாகவும் கழிந்தன. உறவும் சுற்றமும் ஒன்று கூடிடக் கழிந்த அந்த நாள்கள், மறக்க முடியாதன. அந்நாள்களிடையே ஒருநாள் வாசவதத்தையின் திருமண நினைவை அம்மணத்தைச் செய்து கொள்வதற்கு உரியவனான உதயணனுக்கு நண்பர்கள் உண்டாக்கினர். அதன் பயனாக அரண்மனைக் கணியன் ஒரு மங்கல நாளை மணத்திற்கு ஏற்றதென்று வகுத்துக் கொடுத்தான். சோதிட நூற் பொருளும் தருக்க நூற்பொருளும் நன்கு அறிந்து தேர்ந்தவன் அந்தக் கணி. அரண்மனையில் அவனுக்குப் பலவகை மரியாதைகள் உண்டு. அவன் கூறிய நாளை நாடறிய எடுத்துரைக்குமாறு வள்ளுவர்கள் ஆணை பெற்றனர். வேற்று நாட்டு மன்னர்களுக்குத் தக்க தூதுவர்கள் மூலமாகத் திருமண ஓலைகள் அனுப்பப்பட்டன. முரசுக் கொட்டிலுள் தெய்வ வழிபாட்டுடனும் அருமையுடனும் பேணப்பெற்று வந்த பெரிய பெரிய முரசங்களைத் திருநாட்காலங்களில் யானை மேலேற்றி ஊரறிய ஒலிக்கச் செய்து கொண்டே செய்தி கூறுவது வள்ளுவர் வழக்கம். முரசை நீராட்டிச் சந்தனம் பூசி மாலையணிந்து யானை மேலேற்றிக் கொண்டு உதயணன் திருமணநாளை அறிவிப்பதற்கு வள்ளுவர் பல திசைகளிலும் சென்றனர்.

மன்னன் திருமணச் செய்தி கேட்ட குடிமக்கள் நகரைப் பலவகையாலும் அலங்கரிக்கத் தொடங்கினர். பொன்னிலும் முத்திலும் மணியிலும் பல்வகைத் தோரணங்கள் செய்து பெருவீதிகள் தோறும் கட்டினர். வீடுகள், பெரு வாயில், வீதித் தொடக்கங்கள், முதலிய இடங்களிலெல்லாம் வாழை மரமும், பாக்கு மரமுமாகக் கட்டி அழகு செய்தனர். நகரிலுள்ள அறச் சாலைகள் எல்லாவற்றிலும் வந்தவர்களுக்கெல்லாம் உணவளிக்கும்படி ஏற்பாடு செய்தனர். இளநங்கையர்களும் ஏவல் மகளிரும் குங்குமம் முதலியவற்றைக் குழைத்து அழகிய வேறு பல வண்ணக் குழம்புகளையும் கொண்டு தெருக்களில் கவர்ச்சியான கோலங்களை இட்டனர். கோவில்களிலும் கோட்டங்களிலும் வழிபாடுகள் நிகழ்த்தப்பெற்றன. பலவகையிலும் தங்கள் அரசர் திருமண நிகழ்ச்சியிற் பங்கு கொண்டவர் போல நகரை அழகிற்கு மேல் அழகு செய்து மகிழ்ந்தனர் மக்கள். திருமண நன்னாள் வந்தது. நகரெங்கும் ஆரவாரமும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்பட்டன. பல நாடுகளின் அரசரும் வந்திருந்தனர். திருமண நீராட்டுவதற்காக அழகிற் சிறந்த கன்னி மகளிர் மஞ்சன நீர் கொண்டு வரப் புறப்பட்டனர். சிலம்புகள் காலில் ஒலி செய்யக் கொடி இடையில் குடத்து நீர் சலசலக்க மஞ்சன நீர் கொண்டு வந்ததற்குப் பிற்கு, அவர்கள் நல்ல நாழிகை நோக்கி நீராட்டக் காத்திருந்தனர். நாழிகை நோக்கி இருந்த நாழிகைக் கணக்கர், ஏற்ற நேரம் வந்ததும் கூறினர். தீ வேட்டு மணம் நிகழ்த்த வேண்டிய பொழுதும் வந்து சேர்ந்தது.

முறைப்படி அமைக்கப்பட்டிருந்த திருமணப் பந்தரில் நடுவே மறைவலாளர் மந்திரம் ஓத, மண வேள்வி செய்தான் உதயணன். பக்கத்திலே தத்தை மணக்கோலத்தில் எழுதி வைத்த சித்திரப் பொற்பாவை போல அமர்ந்திருந்தாள். காமனும் இரதியும் அடுத்தடுத்து அமர்ந்திருந்தது போலக் காண்போர்க்குத் தோன்றியது இக்காட்சி. இடையே அவன் தத்தையைக் கைப்பிடித்து அருந்ததி காட்டிய தோற்றம், காண மகிழ்ச்சி அளிப்பதாய் இருந்தது. அருந்ததி காட்டி, வசிட்டனை வழிபட்டு, நான்முகக் கடவுளை வேள்விக் குழியில் அவனுக்குரிய திசையில் வணங்கினான் உதயணன். தெய்வ நிவேதனங்கள் செய்தவாறே மணச் சடங்குகளை அடுத்தடுத்து இயற்றினான் மணமகனாகிய அவன்.

மணமாகாத கன்னிப் பெண்கள் பலர் உழுந்து, நெல், உப்பு, மலர், வெற்றிலைச் சுருள், சந்தனம் முதலிய மங்கலப் பொருள்களைத் தத்தையின் கையில் அளித்து, ஏழு முறை கணவனைக் கைகூப்பி வணங்கும்படி வேண்டிக் கொண்டனர். காஞ்சனை, தத்தைக்குப் பக்கத்தில் இருந்து, அவள் நாணம் அடையா வண்ணம் உதயணனோடு நெருங்கி உட்காருமாறு செய்தாள். அவளுடைய மெல்லிய மலரை ஒத்த அடிகளைத் தன் கையால் பற்றி அம்மி மேல் வைத்த போதும், அவள் பூக்கரங்களில் பொரி சிந்தி வேள்விக்கு இடுமாறு செய்த போதும் இன்ப உணர்ச்சியால் புல்லரிப்பு ஏற்பட்டது உதயணனுக்கு. மணச் சடங்குகள் எல்லாம் முடிந்த பின் தத்தையின் வலக்கையைப் பற்றிக் கொண்டு தீ வலம் வந்தான் உதயணன். முதியோர்கள் நல்லாசி கூறினர். அவளைக் கைப்பற்றி நடந்த போது, மெல்ல அடி பெயர்த்து வைத்தது, தந்தை, தாய், உறவினரற்ற அந்த இடத்தில் வலிய தன் காதலனை மணம் செய்து கொண்டதை எண்ணி, அவள் தளர்ச்சியடைந்து விட்டாளோ என்று உதயணனுக்குத் தோன்றியது. பலவிதச் சிறப்புக்களுடன் எழில்மிக்கதாக அலங்கரிக்கப்பட்டிருந்த மணவறைப் பள்ளிக்கட்டிலில் ஏறும்போது, இருவருக்குமே எந்தவிதமான தளர்வுமில்லை. நன்றாக அலங்காரம் செய்து தத்தையை உதயணனுடன் அனுப்பிய காஞ்சனை, இதழ்க்கடையில் ஒரு குறும்புப் புன்னகையை நெளியவிட்டுக் கொண்டே நகர்ந்தாள். தலை குனிந்தவாறே உதயணனுடன் பள்ளியறையை நோக்கி நடந்தாள் வாசவதத்தை. இதன் பிறகு ஆறு திங்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் சென்றது. உருமண்ணுவாவின் பொறுப்பில் விட்டுச் சென்றிருந்த சயந்தி நகர ஆட்சி எப்போதும் போலக் குடிகள் மகிழ ஆளப்பட்டு வந்தது. உதயணன் அங்கிருந்தும், அப்போதுதான் திருமணமாகியிருந்த அவனுக்கு ஆட்சிப் பொறுப்புக்களைச் செய்தலினால் செயல் மிகுந்து சோர்வு தோன்றும் என்று கருதி, உருமண்ணுவாவே அவ்வாட்சிப் பொறுப்பை மேற்பார்த்து வந்தான். யாவும் இனிதே நிகழ்ந்து வந்தன. திருமணமான பின்பு ஆறாவது திங்களில் செய்வதற்கு உரிய உடன் மயிர் களைதல் என்றோர் சடங்குக்கு ஏற்ற நல்ல நாள் வந்தது. சிறப்பாக அச்சடங்கு நிகழ்ந்து முடிந்த பின், எண்ணெய் நீராட்டுப் பெறுதல் மரபு. ஆயிரத்தெட்டுப் பொற்குடங்களில் மஞ்சன நீர் கொண்டு வரப்பெற்றது. உதயணனுக்கு ஆடவரும் தத்தைக்கு ஆயத்துப் பெண்டிரும் எண்ணெய் அணிந்தனர். 'மனையறம் சிறக்குமாறு கற்பால் மாட்சி பெறுக' என்று வாழ்த்தியவாறே ஆயமகளிர் நெய்யணிந்தனர்.

நெய்யணி நீராட்டு முதலிய யாவும் முடிந்த பின்னர் அறிஞர்களாகிய பெரியோர் பலர், "இச் சடங்குகளெல்லாம் ஆனதும், வழக்கமாகச் செய்வதற்குரிய குலதெய்வ வழிபாட்டையும் நீ செய்தல் வேண்டும்" என்று உதயணனுக்கு எடுத்துக் கூறினர். தெய்வ வணக்கத்திற்குப் பின்னர் நகர் வலம் செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் உதயணனுக்கு நினைவூட்டினர். உதயணன் அவர் கூற்றை மனமுவந்து ஏற்றுக் கொண்டு அவ்வாறு செய்ய முன் வந்தான். சிவனாலயத்தில் கோவில் கொண்டிருக்கும் சின தேவனாகிய அருகக் கடவுளைத் தத்தையோடு சென்று வணங்கினான். தெய்வ வணக்கத்திற்குப் பின் இருவரும் மணக்காலத்துக் கொண்ட அதே மணக்கோலம் பூண்டு அரச சின்னங்கள் புடைசூழப் பெருஞ்சிறப்புடன் நகர்வலஞ் செய்தனர். மாடங்களிலும் மாளிகைகளிலும் ஆவண மறுகுகளிலும் சந்திகளிலும் நகர் வலங் காண்பதற்குப் பலர் கூடியிருந்தனர். தத்தையை மணக்கோலத்தோடு பார்க்க வீடுகளின் மேல் மாடங்களில் பெண்கள் பலர் கூடி நின்று கொண்டிருந்தனர். நகரம் முழுவதும் தங்கள் மன்னன் மணக்கோலத்தில் வலம் வருவதைக் கண்டு மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்ந்தது. நகர்வலம் முடிந்த பின்னும் வழக்கமாகச் செய்யும் எண்ணெய் நீராட்டுக்குப் பின் இருவரும் மணவின்பத்தின் நுகர்ச்சியில் திளைத்தனர். நாள் எல்லாம் உவகை நிறையச் சென்றன. உவகையெல்லாம் உலகில் அவர்களிருவருக்கே உரிமையாயிற்று.

23. யூகியின் பயணம்

இங்கே சயந்தி நகரில் உதயணன் வாசவதத்தை முதலியோர் இவ்வாறு மகிழ்ச்சியோடு இருக்கும் வேளையில் இவர்களைப் பிடியேற்றி அனுப்பிய பிறகு அங்கே உஞ்சை நகரில் யூகி என்ன செய்தான் என்பதைக் காண்போம். உதயணனைப் பிடியில் ஏற்றி அனுப்பிய பின்பு யூகி, சாதகன் என்னும் குயவனின் குடிலில் சாங்கியத்தாயைச் சந்தித்து மேலே நிகழ்த்த வேண்டிய சில திட்டங்களைப் பற்றிச் சிந்தித்தான் என்பது முன்பே கூறப்பட்டது. உதயணன் நலமாக வாசவதத்தையுடன் நகர் அடைந்திருப்பான் என்பது தெரியினும், இங்கே உஞ்சை நகரில் தன்னையும் உதயணனையும் தன்னோடு தொடர்புடைய மற்றவர்களையும் பற்றித் தவறாக எண்ணிக் கொள்ளாதபடி சில பொய்ச் செய்திகளைப் பரப்பிவிட்டுப் பின்புதான் நகர் திரும்ப வேண்டுமென்று கருதினான் யூகி. மலையில் ஓரிடத்தில் ஒரு மரக்கிளையில் விளைந்த தேனும் நாட்டில் ஓரிடத்தில் ஒரு பசுவினிடம் கறந்த பாலும் வேறு வேறு இடங்களில் தோன்றிய பொருள்கள் தாம். ஆனால் அவை ஒன்றுபட்டாலும் பிரிந்திருந்தாலும் ஒரே இன்சுவை உடையவையாகவே இருக்கின்றன. யூகியைப் பொறுத்தவரையில் தனக்கும் உதயணனுக்கும் உள்ள நட்பை, அத்தகையதாகவே எண்ணியிருந்தான். அரசியல் தொடர்புள்ள செயல்களிலும் சூழ்ச்சியோடு கூடியவற்றை மாறுபடாமல் செய்து முடிப்பதிலும் முற்றித் தேர்ந்த யூகி, நட்புணர்ச்சியில் இவ்வளவு அருமையான பிணைப்பு உடையவன்.

பாழ்பட்டு இடிந்து சில பகுதிகள் மட்டுமே எஞ்சியிருந்த மாகாள வனத்துக் காளி கோயிலைத் தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் மறைவான வாழ்விடமாகக் கொண்டிருந்த யூகி, மாறுவேடங் கொண்டு உஞ்சை நகரக் கோட்டை வாயிலுக்குள் சென்று நகரில் புகுந்தான். அங்கே பற்பல இடங்களில் பலரும் அறியும்படியாகத் தான் கூறக் கருதியிருந்த பொய்ச் செய்திகளைப் பரப்பினான். "பிரச்சோதன மன்னன், உண்மையான அன்பு பூண்டு உதயணனைத் தன் மகள் தத்தைக்கு யாழ் கற்பிக்கச் செய்தான். புதல்வர்களுக்கும் அவனைக் கொண்டு படைக்கலப் பயிற்சி அளித்தான். உதயணனை விரும்பி அவனுக்குத் தன் மகளை மனமாற அளித்தே பிரச்சோதன மன்னன் இருவரையும் பிடியேற்றி அனுப்பினான். தத்தையும் உதயணன் மேல் மிக்க காதல் கொண்டே அவனுடன் சென்றனள். பிரச்சோதனன் வெகுண்டெழுந்து படையோடு உதயணனைப் பின்பற்றாதிருத்தலே இதற்குச் சான்று" என்று யூகி ஏற்ற காரணத்தோடு இணைய செய்திகளைப் பலரும் அறியப் பொது இடங்களில் எடுத்து உரைத்தான்.

'பிரச்சோதனன், சாலங்காயனுடைய அறிவுரையாலும் தன் மன அமைதியாலும், உதயணனைப் பற்றி அவ்வளவாகச் சினங் கொண்டிருக்க மாட்டான்' என்ற முடிவு யூகிக்கு அப்போது நன்றாகத் தெரிந்திருந்தது. ஆகவே தான் இந்தப் பொய்ச் செய்திகளைச் சில சிறிய உண்மைக் கலப்புடன் முற்றும் மெய்யே போலப் பரப்புவதில் அவனுக்குத் தடைகள் எவையும் ஏற்படவில்லை. பொது மன்றங்கள், கோயில் முன்றில்கள், யானைச்சோரிகள், படைஞர் வீதிகள், பெருந்தெருக்கள் எங்கும் அறியப் பரவிவிட்டது யூகியின் செய்தி. அங்கங்கே அறிந்த பலர், அறியாத சிலருக்குத் தாமே எடுத்துரைத்தனர். உஞ்சை நகரில் யூகி செய்ய வேண்டிய வேலை அநேகமாக நிறைவேறியது. அன்றிரவு மாகாள வனத்துக் காளிகோயில் அதுவரை காணாத பலரைக் கண்டது.

உஞ்சை நகருக்கு அப்பால் வெளியே அமைந்துள்ள பயங்கரமான அந்தக் காளிகோயிலின் சிதைந்துபோன சுவர்களுக்கு நடுவே பலர் கூடியிருந்தனர். இடிந்து போன சுவர் ஒன்றின் மீது பெரிய தீவட்டி ஒன்று எரிந்து கொண்டிருந்தது. யூகி அவர்களுக்கு முன் நின்று மனம் உருகும் வகையில் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். தீவட்டியின் மங்கலான ஒளியில், கோவிலின் சிதையாமலிருந்த உட்புறத்தில் காளிதேவியின் பயங்கரமான பெரிய சிலை தெரிந்து கொண்டிருந்தது. ஏறக்குறையக் கற்பனை உயரம் அமைந்திருந்த பிரம்மாண்டமான அந்தக் காளிதேவியின் சிலைக்கு முன்னால் நின்றுதான் யூகி பேசிக் கொண்டிருந்தான். கூடியிருந்தவர்கள் அதுவரை உஞ்சை நகரில் அவன் செய்த பல சூழ்ச்சி மிக்க செயல்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மாறுவேடத்தோடு கூடிய அவன் மனிதர்கள். உதயணன், பிரச்சோதனனாற் சிறைப்பட்டது கேட்டு, தான் இறந்ததாகப் பொய்யைப் பரப்பிவிட்டு உஞ்சைக்கு மாறு வேடத்தில் யூகி வந்த போது அவனுடன் வந்தவர்கள் தாம் அத்தனை பேரும்.

உதயணன் பிடியில் ஏறித் தத்தையுடன் தப்பிச் செல்லுகிற வரை யூகிக்கு வெற்றிகரமான செயலாற்றல் ஏற்பட ஒவ்வொரு நொடியும் உதவி புரிந்த பெருமை அவர்களுக்கே உரியது ஆகும். அவர்களிற் பலர் அரண்மனையில் மாறு வேடத்தோடு பணிபுரிந்து அவ்வப்போது வேண்டிய செய்திகளை யூகிக்கு அனுப்பியவர். வேறு சிலர் வாணிகர்களாக வேடம் பூண்டு தக்க உதவிகளைச் செய்தவர். இன்னும் சிலர் முனிவர் போல அமைதியாக இருந்து சமயங்களில் வேண்டிய வேலைகளைச் செய்தவர். இறுதியில் உதயணன் புறப்பட்டுச் சென்ற போது அத்தனை பேரும் படை வீரராக மாறி, எதிர்த்தோரைப் போரில் வென்று உதயணனை நலமாகச் செல்லவிட்ட செயல் என்றும் மறக்க முடியாத நன்றிக்குரியது. அந்த நன்றியையும் ஊருக்குத் திரும்பிச் செல்லும் முறையையும் பற்றித்தான் யூகி அப்போது அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். "நம்முடைய அரசன் சென்ற வழியிலேயே எல்லோரும் கூட்டமாகக் கூடி நாடு செல்லுதல், பிறர் ஐயப்படுவதற்கு ஏதுவாகும். நாட்டு வழியாகவோ, காட்டு வழியாகவோ, மலை வழியாகவோ பலப்பல மாறுவேடங்களில் தனித்தனியே பிரிந்து நாடு செல்லுங்கள். உஞ்சை நகரில் இது காறும் உலாவிய இன்னார் இன்னாரை இன்று காணோம். திடீரென்று அவர்கள் அத்தனை பேரும் மாயமாக எங்கே மறைந்தனர் என்ற ஐயப்பாடு இங்கே யாருக்கும் எழாதபடி சிறிது சிறிதாக உங்கள் செலவு அமையவேண்டும். இயல்பினாலும் குணத்தினாலும் உருவினாலும் வேறுபட்ட மனிதர்களைப் போன்ற நடிப்போடு நம் மன்னவன் உள்ள இடம் சென்று அடையுங்கள்" என்று கூறிவிட்டுத் தான் அங்கே சில வேலைகளைச் செய்து முடித்த பின் அவர்களைப் பின் தொடர்ந்து வருவதாகச் சொன்னான் யூகி. கூட்டத்தினர் கலைந்து விடைபெற்றனர்.

ஊர் திரும்புகிற நண்பர்களுக்கு நன்றி கூறிய பின் அறிய வேண்டிய வேறு சில செய்திகளையும் கூறி அனுப்பிவிட்டு முனிவர் தவப்பள்ளிகள் இருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டான் யூகி. சில பல தவப்பள்ளிகளில் முனிவர்களாகவும் முனிவர்களுக்குப் பணிவிடை புரிபவர்களாகவும் இருந்த தன்னைச் சேர்ந்தவர்களுக்குக் கூற வேண்டியவற்றையெல்லாம் குறிப்பாகக் கூறிவிட்டு, அங்கே இருந்த முற்றுந்துறந்த தூய முனிவர்களிடம் சமயங்களைப் பற்றிப் பேசிவிட்டுப் புறப்பட்டால் தன்னைப் பற்றி அவர்கள் ஐயுற இடமிருக்காது என்றெண்ணினான் யூகி. மனம், வாக்கு, காயம் என்ற மூன்று காரணங்களாலும் பரிசுத்தமான அவர்கள் உள்ளத்தில் ஐயமுறச் செய்வது துன்பத்தை வலிய தேடிக் கொள்வது போலாகும். ஆகையால் அவர்களோடு அன்றைய நேரத்தையும் மறுநாள் பகற்பொழுதையும் சமய விசாரம் செய்து கழித்தான் யூகி. பின்னே எப்போதும் அறிமுகமே இல்லாத வேற்று மனிதர்களைப் போல் மீண்டும் தமக்குள் குறிப்பால் பேசிக் கொண்டனர் யூகியும், நண்பரும். அதற்கு அப்பால் மாலையில் யூகி, சாதகன் என்னும் குயவன் வீட்டிற்குச் சென்றான்.

உதயணன்பால் மெய்யன்பு கொண்ட சாதகன், அவனை மீட்க உதவி புரிவதற்காகவே யூகியோடு உஞ்சை நகருக்கு வந்தவன். அன்பும் நன்றியும் உள்ளவன். பரம்பரை பரம்பரையாக உதயணனுடைய நாட்டில் முன்பே அரண்மனைக் குயவராக இருந்தவர்களைப் பெற்ற குடியில் தோன்றியவன் சாதகன். கோசாம்பி நகரத்துக் குயக்குடியிலேயே, அவர்கள் குடி உயர்ந்த குடி. அரண்மனைக் குயவனாக இருந்ததனால் மட்டுமல்ல; இயற்கையிலேயே நாகரிகப் பண்புகள் படைத்தவன் சாதகன். உதயணன் சிறைப்பட்டது அறிந்து, வைசாலி நகரத்தில் இருந்த யூகி உஞ்சைக்குப் புறப்பட்ட போது, உதயணனுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் வலியத் தானே வந்து யூகியுடன் சேர்ந்து கொண்டான், நன்றி மிக்க அந்தக் குயமகன். உஞ்சை நகரில் கோட்டைப் புறத்தில் ஒரு குயவனாகக் குடியேறிச் சிறு வீடு ஒன்றில் வாழ்ந்து வந்த அவன், அந்த வாழ்க்கை முழுவதையுமே உதயணன் நலத்திற்காகப் பயன்படுத்தியதை யூகி நன்கு அறிவான். நகரின் கோட்டைப் புறத்தில் அவன் இருந்ததால் யூகியின் சூழ்ச்சித் திறத்தில் உருவாகிய எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்ற எவ்வளவோ வசதியாக இருந்தது. முன்னொரு முறை இதே குயவன் வீட்டில் தான் உதயணனை நகருக்கனுப்பிய பின் சாங்கியத்தாயை யூகி சந்தித்துப் பேசினான். நகரின் உள்ளே இருந்து செய்திகளை அறிந்து யூகிக்குத் தெரிவிக்கவும், யூகி கூறிய செய்திகளை நகருக்கு உள்ளே தக்கவருக்குச் சொல்லி அனுப்பவும் அவன் செய்த உதவி அளக்க முடியாதது.

யூகிக்கு அவ்வப்போது மந்திராலோசனைக் கூடமாகவும் பயன்பட்டிருக்கிறது அவன் மனை. அத்தகைய குயவனுடைய வீட்டிற்குத்தான் தவப் பள்ளியிலிருந்து யூகி வந்து சேர்ந்தான் இப்போது. அங்கே அவன் எதிர்பார்த்தது போலவே சாங்கியத் தாய் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அவளை வரவேற்று முகவன் கூறிய பின் யூகி நிகழ்ந்தவற்றை அவளுக்கு விரிவாகச் சொன்னான். அவளும் நகர் திரும்ப விரும்புவதாகக் கூறினாள். பசியையும் வெம்மையையும் போக்கும் மருந்துக் கலப்புடன் கூடிய ஒருவகை அவற் பொதியையும் நீருண்பதற்கு நீர்க்கரகத்தையும் ஏற்பாடு செய்து கொள்ளுமாறு அதற்குரிய விவரங்களை யூகி அவளுக்குக் கூறினான். சாங்கியத்தாய் அவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டாள். தாங்கள் புறப்பட வேண்டிய நாளையும் அதற்கான ஏற்பாடுகளையும் கூட யூகி விவரித்தான். சாதகனும் சாங்கியத்தாயும் மதிநுட்பத்தை வியந்தவறே கேட்டனர். யூகி, சாங்கியத்தாய், சாதகன் மூவருமே உதயணன்பால் நன்றி மிக்கவர் தாம். ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாக அதை வெளிக்காட்ட முடிந்தது. வெற்றி பெற்ற உதவி, மன நிறைவை அளித்திட அவர்கள் புறப்பட முற்பட்டார்கள்.

சாதகன் மனையில் சாங்கியத் தாயிடமும் சாதகனிடமும் விடை பெற்றுக் கொண்டு நேரே யவனப்பாடியை நோக்கிச் சென்றான் யூகி. சாதகனைப் போலவே உதயணன் பால் நன்றியுணர்வு மிக்கவனாகிய ஒருவன் யூகியோடு வந்திருந்து, யவனக் கம்மியர்கள் நிறைந்த யவனப்பாடியில் தங்கி வேலை பார்ப்பவன் போல நடித்து, அவசியமான போது யூகிக்கு உதவி செய்து வந்தான். அவனைக் காணவே யூகி சாதகன் மனையிலிருந்து யவனப்பாடி சென்றான். அவனைச் சந்தித்து தான் சாங்கியத் தாயுடன் நகருக்குச் செல்வதை அவனுக்குக் கூறி, தம்மவரில் அங்கேயிருந்து புறப்பட வேண்டியவர்கள் எல்லோரையும் அனுப்பிய பின்னே அவன் அங்கிருந்து புறப்பட வேண்டும் என்பதையும் அவனுக்குத் தெளிவு செய்தான் யூகி. பூட்டி இழுக்க எருதுகளின் உதவியில்லாமலே, முற்றிலும் பொறிகளினால் இயக்கவல்ல ஓர் எந்திர வண்டியை, யவனப்பாடி நண்பன் யூகிக்கு அளித்தான். யூகி அதைப் பெற்றுக் கொண்டு அவனைப் பாராட்டி வாழ்த்திவிட்டு, அங்கிருந்து புறப்பட்டான். சாங்கியத் தாயை அந்த எந்திர ஊர்தியில் புட்பக நகர எல்லைவரை அழைத்துப் போகலாம் என்று கருதினான் யூகி. சாதகனை வேறு வழியாக நடந்து வருமாறு கூறியிருந்தான். அவற்பொதியுடனும் நீர்க்கரகத்துடனும் குறித்த இடத்தில் சாங்கியத் தாயை அந்த எந்திர வண்டியின் உட்புறத்திற் அமரச் செய்து, அதைச் செலுத்தினான் யூகி.

அந்திமயங்கும் மாலை நேரமாகி இருந்தது அப்போது. வானத்திலிருந்து இறங்கிப் பூமியின் மேல் ஓடும் ஒரு வையமேறிச் செல்ல விரும்பி அவ்வாறே ஏறிச்செல்லும் இந்திரகுமரன் போல யூகி சென்றான். எந்திர வையம் சற்று நேரத்தில் புறநகரத்தைக் கடந்தது. பூந்துறைகள், பொய்கைகள் இவைகளையெல்லாம் கடந்து வண்டி வேகமாகச் சென்றது. நகர எல்லை முடிந்தது. கான்யாறுகளும் மணல்வெளிகளும் உயர்ந்த மலைச்சரிவுகளுமாகத் தோன்றிய புட்பக நகரத்திற்குச் செல்லும் வழியில் அவர்கள் இப்போது சென்று கொண்டிருந்தனர். நாட்டு வழியும் வளமிக்க காட்டு வழியுமாக மாறிமாறிப் பயணம் நடந்து கொண்டிருந்தது. மக்கள் நடையாற்றலற்ற, சிள்வண்டுகள் அரற்றும் காட்டுப் பாதையாகச் சில போதும், குறும்பர்கள் வாழும் வழியிற் சில போதுமாக வையம் சென்றது. புட்பக நகர எல்லைக்கு இப்பால் ஒரு சிற்றூரில் சாங்கியத் தாயை இறக்கி வழி விவரங்களைத் தெளிவாகக் கூறிய யூகி, அவளை அங்கிருந்தே பிரிந்து செல்லுமாறு அனுப்பிவிட்டான். தான் மட்டும் தனியாக வையத்தில் பயணம் செய்தபடியே புட்பக நகரத்திற்கு நானூற்று நாற்பது எல்லைத் தொலைவிற் சென்று, எந்திர வண்டியை ஓரிடத்தில் ஒளித்து வைத்து விட்டு நடந்தே புட்பக நகருக்குள்ளே போனான். முதல் நாள் உஞ்சையிலிருந்து புறப்பட்ட அதே இருள் படரும் அந்தி மாலை நேரத்தில் இன்று புட்பகத்தின் கோட்டை வாயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தான் அவன். அரண்மனைக்குள் தன்னை இன்னாரென்று கூறியனுப்பிய யூகியைக் காவலர்கள் திரும்பி வந்து மரியாதையோடு உள்ளே அழைத்துச் சென்றனர்.

24. நண்பர் சூழ்ச்சி

யூகியைக் கண்டதும் இடவகன் நட்புணர்ச்சியோடு தழுவிக் கொண்டான். வெகு நாட்களுக்குப் பின் இப்போது தான் யூகியும் இடவகனும் ஒருவரையொருவர் காண்கின்றனர். ஒருவருக்கொருவர் நலன் அறிந்தனர். யூகி உதயணன் நலத்தைக் கூறுமாறு இடவகனைக் கேட்டான். இடவகன் 'உதயணன் நலம்' என்று மறுமொழி கூறிப் பின்பு விவரமாக உரைப்பதாகச் சொல்லி விட்டு, 'உதயணனை யூகி எவ்வாறு உஞ்சையிலிருந்து மீட்டான்' என்பதைத் தான் முதலில் அறிய விரும்புவதாகச் சொன்னான். இருவரும் உணவு முதலியவற்றை முடித்துக் கொண்டு காவல் மிக்க மந்திர மாடமொன்றை அடைந்து அங்கு அமர்ந்து உரையாடலாயினர்.

யூகி உஞ்சைக்குத் தான் சென்ற பின் நிகழ்ந்த யாவற்றையும் தொகுத்து இடவகனுக்குக் கூறினான். யாவற்றையும் கேட்ட இடவகன், யூகியின் ஆழமான நட்புத் திறத்தைப் போற்றினான். உதயணன் மீட்சிக்காக யூகி ஏற்றிருக்கும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்பது அப்போதுதான் இடவகனுக்குப் புலப்பட்டது. உதயணன் தன் உயிரினுமினிய நண்பன் என்ற முறையில், அவனுக்கும் தனக்கும் அத்தகைய நண்பனேயாகிய யூகியை வாய்விட்டுப் பாராட்டினான் இடவகன். தன்னைப் பாராட்டும் இடவகனை இடைமறித்து, "அது இருக்கட்டும் உதயணனைப் பற்றி மேல் நிகழ்ச்சிகளை நான் அறிந்து கொள்ளல் வேண்டாமா? அதை இப்போது கூறு இடவாகா!" என்று வேண்டிக் கொண்டான் யூகி. இடவகன், உதயணன் உஞ்சையிலிருந்து புறப்பட்டது தொடங்கி, இடையே பிடி வீழ்ந்ததையும் சவரபுளிஞர் வளைத்துக் கொண்டதையும் வயந்தகன் தன்னிடம் வந்து தனக்குச் செய்தி கூறிப் படையுடன் தன்னைக் கூட்டிச் சென்று வேடர்களிடமிருந்து உதயணன் முதலியோரை மீட்டதையும், சயந்தி மலைச் சாரலில் தங்கிவிட்டுச் சயந்தி நகருக்குப் புறப்பட்டதையும் விவரித்துரைத்தான். இடவகன் அவ்வாறு கூறிக் கொண்டே வரும் பொழுது யூகிக்கு உதயணன் பாலுள்ள உயிர் நட்பை அறிந்து கொள்ளத்தக்க நிகழ்ச்சி ஒன்று அங்கே அப்போது நடந்தது.

உதயணன், தத்தை முதலியோர் தங்கியிருந்த இலவம் புதருக்கு வேடர்கள் நெருப்பிட்டு விட்டனர் என்று இடவகன் கூறிக் கொண்டே வரும் பொழுது, தன்னை மறந்த நிலையில் கேட்டு வந்த யூகி, 'ஆ! அப்படியா? ஐயோ!' என்று கூறிக் கொண்டே அலறி மயங்கி வீழ்ந்துவிட்டான். உடனே இடவகன் தான் திடீரென்று அவ்வாறு கூறியதற்காகத் தன்னைக் கடிந்து கொண்டே குளிர்ந்த சந்தனங் கலந்த நீரை அவன் மேல் முகத்திலும் உடலிலுமாகத் தெளித்து, அவன் மயக்கத்தைத் தெளியச் செய்தான். மூர்ச்சை தெளிந்த யூகி, உதயணன் நலமே என்பதை முன்பே சுருக்கமாகக் கேள்விப்பட்டிருந்தும், தான் அவ்வாறு மூர்ச்சித்ததற்காக நாணுபவன் போலச் சற்றே தலை குனிந்தான். பின்னர் மேலே நிகழ்ந்தவற்றை இடவகன் கூறத் தொடங்கவே அதைக் கேட்கலானான். உருமண்ணுவாவின் பொறுப்பிலிருந்த தன் ஆளுகைக்குட்பட்ட சயந்தி நகரை அடைந்த உதயணன் தத்தையைத் திருமணம் செய்து கொண்டதையும் பிறவற்றையும் இடவகன் இறுதியாகக் கூறிய போது, யூகி மனமகிழ்ச்சி எய்தினான். ஆனால் அதையடுத்து இடவகன் சொன்ன செய்தி அவனைக் கலகக்கத்தில் ஆழ்த்தியது.

"தனக்குரிய கோசாம்பி நாட்டை ஆருணி அரசன் ஆள்வதையும் உதயணன் அறியான். அரசாட்சிப் பொறுப்பையும் மேற்கொள்ளவில்லை. கோசாம்பியிலிருந்து ஓடி ஒளிந்து வாழ்கின்ற தம் தம்பியர் துயரையும் நினைத்துப் பார்க்கின்றானில்லை. உதயணன் எப்போதும் தத்தையோடு தன் நேரம் முழுமையையுமே செலவிடுகிறான். இன்னும் சில நாள் இப்படியே கழிந்தால், உதயணனுடைய திறமை, ஒழுக்கம், பெருமிதம் முதலிய யாவும் குன்றி வீரவுணர்ச்சியற்ற வெற்றுச் சிற்றின்ப மனிதனாகி விடுவான் அவன். 'நம்முடைய தலைவன் என்ற உயர்நிலையில் அவன் இருக்கும் போது அவனை நாம் எப்படித் திருத்தி வழிக்குக் கொண்டு வரமுடியும்' என்ற இந்த நினைவுடனேயே, 'மேலே என்ன செய்வது?' என்பது அறியாமல் நான், உருமண்ணுவா, வயந்தகன் யாவருமே ஒன்றும் புரியாமல் இருக்கிறோம்" என்று இடவகன் கூறி முடித்தான். யூகி உடனே அவனுக்கு மறுமொழி கூறாமல், ஓர் ஆளை வரவழைத்துப் புட்பக நகர எல்லையில் தான் விட்டு வந்த சாங்கியத் தாயின் அடையாளங்களைச் சொல்லி, அங்கிருந்து சயந்தி நகர் போகும் வழியிலே அவள் எங்கே அகப்பட்டாலும் தேடித் தன்னிடம் கொணருமாறு கூறி அனுப்பினான். அவனை அனுப்பிவிட்டு இடவகனிடம் உதயணனைத் தன் நிலை உணரச் செய்வதற்காக என்னென்ன வழிகளைக் கையாளலாம் என்பது பற்றிச் சிறிது நேரம் பேசினான். அவ்வளவில் இருவரும் துயிலச் சென்றனர்.

மறுநாள் எதிர்ப்பார்த்ததைக் காட்டிலும் வெகு விரைவிலேயே, போன ஆள் சாங்கியத் தாயோடு திரும்பி வந்து விட்டான். சாங்கியத் தாயை மற்றவர்கள் இல்லாத ஒரு மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று, இடவகன் மூலமாகத் தான் கேள்வியுற்றவற்றை யூகி அவளுக்குக் கூறினான். அப்பால், உதயணனைச் சீர்திருத்துவதற்கும் அவள் துணையே அவனுக்கு வேண்டியிருந்தது. நல்ல வேளையாகச் சாங்கியத் தாய் சயந்தி நகரத்தை அடைவதற்குள்ளேயே அவளைக் கூட்டி வந்திருந்தான் போன ஆள். யூகியின் திட்டத்திற்கு அதுவும் ஓர் உதவியாயிற்று.

அவளுக்குத் தன் ஏற்பாடுகளையும் விளக்கலானான் யூகி. "இன்பத்தையே கதி என்று கொண்டு தன்னைச் சுற்றி இருக்கும் துன்பங்களையும் பொறுப்புக்களையும் மறந்துவிட்ட உதயணனை, அந்த மயக்கத்திலிருந்து மீட்கவும் நாம் தான் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். உஞ்சையிலிருந்து தத்தையுடன் பிடியேறி வருவதற்கு அப்போது உதவினோம். இப்போது செய்ய வேண்டிய உதவியோ அதனினும் இன்றியமையாததாக இருக்கிறது. அந்த உதவியைச் செய்து நிறைவேற்ற எவ்வளவோ சூழ்ச்சிகளையும் திட்டங்களையும் வகுத்திருந்தோம். இப்போதும் சில சூழ்ச்சிகளும் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டியிருக்கின்றன. உதயணனுக்குத் தாயாரைப் போன்ற வயது உடைய நீங்கள், முன் போலவே இதற்கு உதவுதல் வேண்டும்" என்று கூறிய யூகி, தன் திட்டங்களையும் மேலே சொல்லலானான். "சயந்தி நகரத்திலுள்ள உதயணன், தத்தை முதலியோரை ஒருநாள் இலாவாண நகரையடுத்த மலைச்சாரலில் உள்ள சோலையில் உண்டாட்டு விழாக் கொண்டாடச் செய்ய வேண்டும். தொடர்ந்து நிகழும் அவ் உண்டாட்டு விழா நாள்களில் ஒருநாள், வாசவதத்தையை அவனிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்று அவள் தங்கியிருந்த படமாடக் கோவிலைத் தீக்கிரையாக்கி, அவள் இறந்துவிட்டதாக உதயணன் கருதும்படி செய்ய வேண்டும். அங்ஙனம் பிரித்து அழைத்து வந்த தத்தையை, என்னிடம் (யூகியிடம்) கொண்டு வந்து விட்டுவிட வேண்டும். அதற்குப் பின்னர் உஞ்சை நகரிலிருந்து வரும் வழியில் பசி மிகுதியால் அவலை உண்டு, அவல் விக்கி யூகியாகிய நான் இறந்துவிட்டேன் என்று உதயணன் அறியுமாறு அவனுக்கு ஒரு பொய்யைக் கூற வேண்டும். இவ்வளவு செயல்களையும் பிறழாமற் செய்து பெருமிதக் குறைவுபட்ட உதயணனை வருத்திப் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டியது உங்கள் கடமை" என்று யூகி சாங்கியத் தாய்க்குச் சொன்னான்.

பின்னர் உருமண்ணுவா, வயந்தகன், இடவகன் முதலியோரையும் தன்பால் வரவழைத்து அவர்களுக்கும் தன் திட்டங்களைக் கூறி, அதன்படி உதயணனை நல்வழிக்குக் கொணர ஒத்துழைக்குமாறு வேண்டினான். அவர்கள் உவகையோடு உடன்பட்டனர். இறுதியாகச் சாங்கியத் தாய்க்குத் தன்னை எங்கே, எந் நேரத்தில், எப்படிச் சந்திக்கலாம், அடிக்கடி நடத்த வேண்டிய வேலைகளைப் பற்றி எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என்பதையெல்லாம் யூகி தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தான்.

அடுத்த நாள், யூகி யாத்திரைக்காகக் கொண்டு வந்த அவலை உண்கையில் விக்கி இறந்து போனான் என்ற செய்தி ஊரெங்கும் பரவியது. கையும் காலும் ஒட்ட வைத்துப் பொய்யாக உருவாக்கப்பட்ட அந்தச் செய்தியை எல்லோரும் நம்புவதற்குரிய சூழ்நிலையை யூகியின் நண்பர்கள் உண்டாக்கியிருந்தனர். அந் நண்பர்கள் கூடியழுத காட்சியும் உளங்குமைந்து இரங்கிய நிலையும் செயற்கைச் செய்தியாகிய அதை, உண்மையாகக் காட்டின. யூகி தலைமறைவாக ஓரிடத்தில் வசித்து வந்தான். அவன் உடல் போல ஓருடலை யூகியின் பிணமென்று காட்டி, அதனைத் தீ மூட்ட விரும்பாது கங்கையில் நீர்ப்படை செய்யப் போவதாகக் கூறிக்கொண்டு திரிந்தனர் அவன் நண்பர். புட்பக நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலுமே இந்தச் செய்தி எட்டவில்லை. யூகி தான் வரும் போது வெகு அமைதியாக வந்திருந்ததனால் அவன் உயிரோடு வந்து இருப்பதாக யாரும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதற்குள் சாங்கிய தாய் சயந்தி நகருக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தாள். யூகியின் திறமையும் சூழ்ச்சியும் மிக்க திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, கடமை எல்லாம் அவளைச் சார்ந்திருந்தன. வயந்தகன் முதலியோர் அதற்கு வெறும் உறுதியாளர்கள் தாம். உதயணன் நலனுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் 'தன்னை கொன்று கொள்ள'த் துணிந்திருந்த யூகியின் தியாகம், வேடிக்கை நிறைந்ததாகவும், அதே சமயம் நட்பின் உயிர் இயைபுக்கு விளக்கமாகவும் தோன்றியது அவளுக்கு. வழி முழுவதுமே இதே சிந்தனைதான். சயந்தி நகரை அடைந்த அவள், மீண்டும் ஒரு முறை தான் செய்ய வேண்டியவற்றை வரிசையாக நினைத்துப் பார்த்துக் கொண்டாள். சயந்தி நகரத்து அரண்மனையை அடைந்த சாங்கியத் தாய் அங்கே உதயணனைச் சந்தித்தாள். தாயைக் கண்ட கன்று போல் அவளை வரவேற்றான் உதயணன். இருவரும் முகமன் கூறிக் கொண்ட பின் சித்திரகம்மத்தில் ஓர் இருக்கை தந்து அதில் அவளை அமரச் செய்து எதிரே தானும் அமர்ந்து கொண்டான் உதயணன்.

25. சோகமும் அசோகமும்

உஞ்சை நகரத்து நதிக்கரையிலிருந்து பத்திராபதியில் உதயணன் தத்தை முதலியவர்களுடன் ஏறிப் புறப்பட்ட பின் நிகழ்ந்தவற்றை அவனிடம் கேட்டறிந்தாள் சாங்கியத்தாய். அவற்றோடு உதயணன் சந்திப்பை முடித்துக் கொண்டு தத்தையைக் காணச் செல்லலாம் என்று எழுந்த அவளை, உதயணன் கேட்ட அந்தக் கேள்வி திகைக்கச் செய்து விட்டது. "ஆமாம்! யூகியும் உங்களோடு உஞ்சையிலிருந்து திரும்பி வந்திருக்க வேண்டுமே? எங்கே அவன்? நலமாகத்தானே இருக்கிறான்?" இந்தக் கேள்வி சாங்கியத் தாயால் விடை கூற முடியாதது அல்ல. ஆனால் இதற்கு அவள் கூற வேண்டிய விடை இன்னும் சில திட்டங்கள் முடிந்த பின் சொல்லக் கூடியதாக இருந்தது. என்ன சொல்லவேண்டும் என்பதைத் தான் யூகி முன்பே கூறியிருந்தானே? அதை இவ்வளவு விரைவாக வெளிப்படுத்த நேருமென்று அவள் எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் என்ன கூறுவது என்ற திகைப்பும் சிந்தனையும் அவளுக்கு ஏற்பட்டன. உடனடியாக உதயணனுக்கு அவள் விடை கூறவில்லை. சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்த பின் யூகியைப் பற்றிய வேறு சில செய்திகளை விவரித்துக் கொண்டே பொழுதைக் கழித்தாள். 'யூகி தன்னுடன் வந்தானா? அவன் நலமா? இல்லையா?' என்ற விவரங்கள் எதுவுமே இல்லாமல் சென்றது அவள் பேச்சு. "விரைவிற் சென்று நம் அரசனை அடையுங்கள்" என்று எனக்கும் ஏனையோர்க்கும் கூறிவிட்டுத் தான் பின்னால் வந்து சேர்வதாக யூகி கூறினான், எனச் சாங்கியத் தாய் இறுதியாகச் சொல்லி முடித்தாள். அதைக் கூறியதும் யூகி கூறிய பொய்ச் செய்தியைப் பின்பு கூறலாமென்ற கருத்துடன் வாசவதத்தையைப் பார்க்க அவனிடம் விடைகொண்டு எழுந்தாள்.

தளர்நடைப் பருவம் முதல், உஞ்சை நகரில் உதயணனனோடு பிடியேறி வந்தது முடியத் தத்தை தன் நெஞ்சைத் திறந்து பேசுவதற்கு ஏற்ற ஒரே ஒருத்தியான செவிலித் தாயாக இருந்தவள் சாங்கியத் தாய்தான். அவளைக் கண்டவுடன் அப்படியே தன் மெல்லிய இடை வளைய இறுகத் தழுவிக் கொண்டாள் வாசவதத்தை. திடீரெனச் சந்தித்த சந்திப்பின் இன்ப மிகுதியால் இருவருக்குமே கண்ணில் நீரும் துளித்தது. உஞ்சை நகரிலிருந்து வாசவதத்தை வந்த பிறகு அரண்மனையில் தந்தை தாய் முதலியோர் அடைந்த நிலையை அவள் கேட்கவே, சாங்கியத் தாய் அவற்றைக் கூறினாள். அப்போதுதான் தாய் தந்தையரையும் ஏனைச் சுற்றத்தினரையும் எண்ணிப் புலம்பினாள் வாசவதத்தை. அவளைத் தேற்றி ஆறுதல் கூறிய சாங்கியத் தாய், "திருமணமான மங்கல மகளிர், இவ்வாறு பெற்றோரை எண்ணி வருந்துதல் கூடாது" என்று அவளுக்குக் கூறி அரண்மனைப் பூங்காவிலிருக்கும் மிக உயர்ந்த செய்குன்று ஒன்றிற்கு அவளை அழைத்துச் சென்றாள். அந்தச் செய்குன்றிலிருந்து உஞ்சை நகரத்தைத் திசை சுட்டிக் காட்டித் தத்தையினுடைய மனக் கலக்கம் தீருமாறு மேலும் பல தேற்றுரைகளைக் கூறினாள் சாங்கியத் தாய். தத்தை மனந்தேறிய பின் உருமண்ணுவா, வயந்தகன், எல்லோரும் யூகியோடு கூடிச் செய்திருக்கும் திட்டங்களை அவள் துணுக்குறாதபடி மெல்லக் கூறினாள். எல்லாவற்றையும் கேட்டு முதலில் திகைத்த வாசவதத்தை, இறுதியில் உதயணன் நலங்கருதி யூகியின் திட்டப்படி நடக்க ஒப்புக் கொண்டாள். உறுதிப் பொருளை விளக்கும் நன்னெறி நூல்களை முயன்று கற்று வருந்தித் தவம் செய்வோன் பின்னர் நற்பயன் பெறுவது போல, யூகியின் திட்டத்தால் வருத்தமடைவதற்குரிய பல நிலைகள் நேரிடுமாயினும் பின்னால் நலமே விளையும் என்று தத்தை மனந்தெளிந்தாள். அந்தத் திட்டப்படி தானும் ஒத்துழைப்பதாக ஒப்புக் கொண்டாள் அவள்.

தத்தையின் இசைவு பெற்ற சாங்கியத் தாய் அவளை மீண்டும் விரைவில் சந்திப்பதாகக் கூறி விடைபெற்றுக் கொண்டு யூகி தன்னிடம் குறிப்பிட்டிருந்தபடி, அவன் ஒளிந்து வாழும் மறைவிடத்துக்குச் சென்றாள். உதயணனைக் கண்டதையும் அவன் கேட்ட கேள்விகளையும் வாசவதத்தை தங்கள் திட்டத்திற்கு இசைந்ததையும் யூகியிடம் சாங்கியத் தாய் விளக்கமாகக் கூறினாள். அவற்றைக் கேட்ட யூகி, தான் இறந்துவிட்டதாக எழுப்பிய செய்தியைக் குறிப்பாகச் சாங்கியத் தாய் மூலம் உதயணனுக்கு அனுப்பத் தீர்மானித்தான். சித்திரம் வரைவதற்கு ஏற்ற பலகை ஒன்றில் உதயணனுடைய உருவத்தை வரைந்து, அந்த ஓவியத்தை யூகி, வயந்தகன், இடவகன், உருமண்ணுவா என்ற நான்கு நண்பர்களையும் நான்கு கண்களாக உருவகப்படுத்தி, மேற்கண்ணாகிய யூகி அழிந்து போனதற்கு அறிகுறியாக அக்கண்ணை ஒளி மழுங்கிப் போனதாக அமைத்து, உதயணனிடம் அப்படத்தைக் காட்டுமாறு சாங்கியத் தாயிடம் கொடுத்து அனுப்பினான். படத்தைக் கண்டவுடன் குறிப்பைத் தெரிந்து கொண்டு உதயணன் வினாவினால் செய்தியைச் சொல்லி விடுமாறும் சாங்கியத் தாய்க்குக் கூறினான். அவள் அந்தப் படத்தைப் பெற்றுக் கொண்டு சயந்தி நகர் சென்றாள்.

சாங்கியத் தாய் படத்தோடு நகர அரண்மனையை அடைந்தாள். உதயணனும் வாசவதத்தையும் ஒருங்கே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில் படத்தை உதயணனிடம் அளித்துக் காணும்படி வேண்டிக்கொண்டாள். ஓவியக்கலை நுட்பங்களை நன்கு உணர்ந்தவனாகிய உதயணன் படத்தை எழுதியவன் செய்திருக்கும் உருவகங்களையும் மேற்கண் ஒளி மழுங்கி இருந்த குறிப்பால் தோன்றும் செய்திகளையும் புரிந்து கொண்டான். யூகிக்கு ஏதோ துயரப்பொறை அவன் உள்ளத்தை அழுத்தியது! ஒன்றும் புரியாமல் கையில் அந்த ஓவியத்துடன் அப்படியே மலைத்துப் போய் உட்கார்ந்து விட்டான் உதயணன். அப்போது யூகியின் ஓவியக் குறிப்பை உதயணன் ஓரளவு அறிந்து கொண்டிருக்கிறான் என்ற செய்தி எதிரே அமர்ந்திருந்த சாங்கியத் தாய்க்குத் தெரிந்தது. உடனே அவள், "யூகி உஞ்சையிலிருந்து வரும் வழியில், அவல் விக்கி இறந்து போனான்" என்று கூறிவிட்டாள். அதைக் கேட்ட அக்கணத்தில் இயக்கும் பொறி இழந்த எந்திரப் பாவை போலச் சோர்ந்து கீழே வீழ்ந்தான் உதயணன். வாசவதத்தையும் அச்செய்தி கேட்டுத் துடிதுடித்தாள். முதல் நாள் எல்லாத் திட்டங்களையும் கேட்டிருந்தும் இப்போது பெண்மைக்குரிய பேதைமையால் இப் போலிச் செய்தியை உண்மையென நம்பி அவள் அழுவதைக் கண்ட சாங்கியத் தாய் கள்ளமற்ற அவள் உள்ள நிலையை விளங்கிக் கொண்டாள். நண்பர்கள் ஓடோடி வந்து உதயணன் மயக்கத்தைத் தீர்த்தனர். மயக்கம் தெளிந்த உதயணன், யூகி தனக்குச் செய்த பேருதவிகளைச் சொல்லிப் புலம்பினான். இளமையில் தானும் யூகியும் பழகிய உழுவலன்பு முறையைக் கூறிக் கதறினான். உருமண்ணுவா மெல்ல உதயணனை நெருங்கி ஆறுதல் கூறி அவனைத் தேற்றத் தொடங்கினான்.

யூகி இறந்தான் என்ற செய்தி அறிந்த பின்னர், உருமண்ணுவா எவ்வளவோ தேறுதல் கூறியும் உதயணன் ஆறாமல் எப்போதும் யூகியின் நினைவாகவே புலம்பிக் கொண்டிருந்தான். நாள்தோறும் தேய்பிறையைப் போலத் துயரால் வாடிவரும் உதயணனை, எவ்வாறு துன்பத்தை மறக்கச் செய்வது என்று உயிர் நண்பர் ஏதும் புரியாமல் இருந்தனர். அமைச்சரையும் மந்திரச் சுற்றத்தினரையும் கூட்டி அரசனின் அவலந்தீர என்ன செய்வது எனச் சிந்தித்தனர். உதயணன், யூகி இறந்த துன்பத்தைப் பொறுக்க முடியாமல் அரை உடலாக இளைத்துப் போய்விட்டான்.

கடைசியில் நண்பர் யாவரும் சேர்ந்து அவனுடைய துயர் தீர்க்கும் அந்தப் பொறுப்பும் உருமண்ணுவாவினாலேயே நிறைவேற்றப்பட வேண்டுமென்று அவனை வேண்டிக் கொண்டனர். உருமண்ணுவாவும் ஒப்புக் கொண்டனன். பலவகை இன்ப நுகர்ச்சிகள், பகை மன்னர்களோடு போர் புரிந்து வென்று அவர்கள் முடி வணங்கச் செய்தல், சிற்றரசர்களைத் திறை இடச் செய்தல், காடு செய்து விலங்குகளை வேட்டையாடுதல், இத்தகைய நிகழ்ச்சிகளில் சில திங்கள் இடைவிடாமல் உதயணனை ஈடுபடுத்தி யூகி இறந்த துயரை ஒருவாறு அவன் மறக்கும்படி செய்து வந்தான் உருமண்ணுவா. சில முறை வாசவதத்தையோடு உதயணனையும் பக்கத்திலுள்ள மலைச்சாரல் ஒன்றில் பொழில் விளையாட்டுக்கு அழைத்துச் சென்றும் வேறு பல நுகர்ச்சிகளில் ஈடுபாடு கொள்ளச் செய்தும் துயர் மறக்கச் செய்துவிட்டான். இதன் பின்னர் உருமண்ணுவா, உதயணனுக்கு யூகியைப் பற்றிய நம்பிக்கை ஒன்றையும் உண்டாக்கிவிட வேண்டுமென்று கருதித் தோழர்களோடு கலந்து சிந்தித்துப் பின்வரும் முடிவுக்கு வந்தான். உதயணனையும் ஏனையோரையும் இலாவாண மலைச்சாரலில் உண்டாட்டு விழாவிற்காக அழைத்துச் சென்று, அங்குள்ள முக்கால நிகழ்ச்சிகளையும் அறிந்து சொல்லவல்ல முனிவரொருவர் மூலம் அவனுடைய வாழ்வில் இதுவரை நடந்தவற்றையும், இனி நடக்கப் போவனவற்றையும் அவனுக்குக் கூறச் செய்து, இடையே யூகி எப்படியும் உயிர்பெற்று வருவான் என்பதைப் போன்ற ஒருவகை நம்பிக்கையையும் அம் முனிவர் வாயிலாகவே அவனுக்கு ஏற்படுத்தி விட வேண்டும் என்பது தான் உருமண்ணுவாவின் அந்த முடிவு. அதற்கு மற்றவர்களும் இசைவு தெரிவித்தனர். தோழர்கள் சம்மதம் பெற்ற உருமண்ணுவா, உதயணனை அணுகி இதனை உரைத்தான். உதயணன் முதலில் "அப்படி முக்காலமும் அறிந்து கூறும் முனிவர்களும் இருக்கிறார்களா?" என்று சந்தேகப்பட்டு வினாவினான். 'அவனுக்கு நம்பிக்கை ஏற்படும்படியாக அந்த வினாவுக்கு விடை கூறவேண்டும்' என்று நினைத்த உருமண்ணுவா, "நீயும் உன் தாயும் விபுலமலைச் சாரலில் சேரக முனிவரிடம் வாழ்ந்து வந்ததையும் பின் உன் மாமனுக்குரிய ஆயர்குலத்து ஆட்சி பெற்று இருந்ததையும் முதலில் அறிய முடியாதபடி உன் தந்தை சதானிகன் துன்புற்றார். கோசாம்பியிலிருந்து சதானிக மன்னர் இப்படி ஒரு முனிவனை அடைந்து, வனத்தில் அவனிடம் கேட்டுத்தான் முக்கால நிகழ்ச்சிகளையும் அறிந்து கொண்டார். அதுவும் அல்லாமல், யூகி இறந்ததாக எழுந்த செய்தி ஒருவேளை பொய்யாகவும் இருக்கலாம். அதனால் எதற்கும் இலாவாண மலைச்சாரலில் உண்டாட்டு விழாவிற்காகத் தங்கி அப்படியே அந்த முனிவரையும் பார்த்து வரலாம்" என்று கூறினான். உருமண்ணுவா தக்க முறையில் கூறிய இந்த விடை உதயணன் உண்டாட்டு விழாவிற்கு உடன்படச் செய்தது.

இலாவாண மலைச்சாரலில் உண்டாட்டு விழா நடைபெறப் போவதை நகரமெங்கும் அறிவிக்கச் செய்தனர். உண்டாட்டு விழாவிற்கு உதயணன் உடன்பட்டால், யூகியின் இரண்டாவது சூழ்ச்சியாகிய வாசவதத்தையை உதயணனிடமிருந்து பிரிக்கும் செயலும் அந்த விழாவிலேயே எளிதில் முடியுமென்று நண்பர்கள் மகிழ்ந்தனர். விழாவிற்குத் தேவையான நுகர் பொருள்களைச் சேகரித்தார்கள். விழாச் செய்தி அறிந்த நகர மக்கள் களிப்பில் ஆழ்ந்தனர். இயற்கை அழகு இலாவாண நகர மலைச் சாரலுக்கே தனி உரிமை உடையது என்று சொல்லும் படியாக இருக்கும் அதன் நிகரற்ற வனப்பு.

இலாவாணத்தின் சாரலிலே இனிய நீர்ச்சுனைகளும் கலகலவென்ற ஒலி பரப்பிப்பாயும் கான்யாறுகளும் சோவென்ற போரொலியும் கறங்கிவீழும் அருவிகளும் நிறைந்திருக்கும். புகுந்தவர் திரும்ப விரும்பாத பேரெழில் வளம் படைத்தது அது. பலவகை மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப் பசுமை கொழிக்கும், நறுமண மிக்க ஒருவகைக் கத்தூரி விளையும் தகர மரம் என்னும் விருட்சங்கள் எங்கும் நாசிக்கு மண விருந்து நல்கும். அந்த மலைச்சாரலில் தக்க முனிவர் வாழும் தாபதப் பள்ளியும் கற்றோர் வாழும் கடவுட் கோட்டங்களும் எங்கும் நிறைய உண்டு.

இத்தகைய பெரு வனப்பு வாய்ந்த இலாவண மலைச் சாரலில் சயந்தி நகரப் பெருமக்கள் கூடிக் குழுமினர். தேரும் வையமும் சிவிகையும் வண்டியும் ஆகிய பலவகை ஊர்திகளில் ஏறி வந்திருந்தனர் அவர்கள். நகர், மக்களை முற்றிலும் இழந்து தனிமையுற்றது என்னும்படியாக அவ்வளவு மக்களும் மகளிரும் மைந்தருமாக மலைச்சாரலுக்கு வந்திருந்தனர் என்றால் அது மிகையாகாது. பாடி வீடுகள் பல அமைக்கப் பெற்றன. மலைச் சாரலில் உள்ள சோலைகள் தோறும் அங்கங்கே பல வெண்ணிறத் துணிகளில் அமைத்த பாடி வீடுகள் முழு நிலவு போலத் தோன்றின.

சுனையிலுள்ள குவளை மலர்களைக் கொய்து மகிழ்ந்தனர் சில மகளிர். தத்தம் கை விரல்களைச் செம்மை நிறத்தால் தோல்வியுறச் செய்வன போல முறுக்கேறிச் சிவந்திருந்த காந்தள் மொட்டுக்களைப் பறித்து அழகு பார்த்தனர் வேறு சில மகளிர். பொன் போன்ற நிறத்துடன் பூத்துக் குலுங்கும் வேங்கை மலர்களைப் பறித்துத் தம் காதல் மகளிர்க்கு விரும்பி அளித்தனர் சில ஆடவர். பின்பு ஆடவரும் மகளிருமாகப் பல்வகை விளையாட்டுக்களை ஆடினர். ஊசலாடுவோரும் பூக்களிற் செய்த பந்தை அடித்து விளையாடுவோருமாகப் பலர் பல விளையாடல்களை மேற்கொண்டனர். மயிலும் கிளியும் குயிலும் பயிலும் சோலைகளில் தழை கொடிகளால் கயிறிட்டு ஊஞ்சலாடிய காட்சி எழில் மிகுந்து விளங்கியது. வளம் பொருந்திய மலையில் வாழும் வளம் பொருந்திய மக்கள் இன்னும் எண்ணற்ற இன்பங்களை நுகர்ந்தனர். வேனிற் காலத்தில் பொழில்களில் வாழும் வாழ்க்கையின் அருமையைப் 'பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை' என்று புகழ்ந்து கூறியுள்ளனர். அத்தகைய பேரெழில் வாழ்க்கையாகத்தான் இவர்களுடைய வாழ்வு அமைந்தது.

மக்கள் மலைச் சாரலில் இவ்வாறிருக்க உதயணன் அவன் நண்பர், வாசவதத்தை முதலியோர் பரிவாரங்கள் புடைசூழ மிக்க ஆரவாரத்துடன் மலைச் சாரலிலுள்ள ஒரு பெரிய வனத்தில் வந்து தங்கினர். அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு எதிரே ஒரு தவப்பள்ளி இருந்தது. அதில் பேராற்றல் மிக்க சிறந்த முனிவரொருவர் வாழ்ந்து வந்தார். உதயணன் அந்த முனிவரைக் கண்டு தான் குறிகேட்க விரும்புவதாகத் தக்கவர்கள் மூலம் அவருக்குக் கூறி அனுப்பினான். முனிவர் மகிழ்ந்து குறி கூற உடன்பட்டவுடன் உதயணன் அங்கே சென்றான். அந்த முனிவரின் தவப்பள்ளிக்குச் செல்லும் வாயிலில் மணல் முற்றத்தின் மேல் அழகாகத் தழைத்து வளர்ந்திருந்த அசோக மரம் ஒன்று விளங்கியது. அந்த அசோக மரத்தின் நிழலில் அவனை எதிர் கொண்டு இருக்கச் செய்தார் முனிவர். சோகம் நிறைந்த உதயணன் அசோக மரத்தின் கீழே அமர்ந்திருந்தான்.

அப்போது உதயணன் கையில் வைத்துக் கொண்டிருந்த வெள்ளிய இதழ்களையுடைய நறுமண மலர் ஒன்று கையிலிருந்து நழுவிக் காலடியில் வீழ்ந்தது. அவன் பசுமையான மரத்தின் அடியில் இருப்பதையும் மலர் வீழ்வதையும் உற்று நோக்கித் தமக்குள் ஏதோ முடிவு செய்தவர் போலக் காணப்பட்டார் முனிவர். முனிவர் என்ன கூறப் போகிறார் என்று எதிர்பார்த்து அமைதியாக உட்கார்ந்திருந்தான் உதயணன். யூகியைப் பறி அவர் கூறும் செய்தி நலம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதே அவனுடைய மனத்தினுள் இருந்த ஒரே எண்ணமாகும். அவன் மனக் கருத்தையும் முகக் குறிப்பையும் பிறவற்றையும் ஊடுருவித் தெரிந்து கொண்ட பின் முனிவர் அவனிடம் கூறத் தொடங்கினார்.

"நீ இப்பொழுது பசுமரம் ஒன்றை அடைந்து அதன் அடியில் வீற்றிருக்கிறாய். ஆகையால் உன்னோடு உயிர் நட்புப் பூண்ட ஒருவன் கருதுவது போல் இறந்துவிடவில்லை. உண்மையில் அவன் உயிரோடு இருக்கிறான். ஆனாலும் வேறோர் துயர் இப்போது உனக்கு நேர இருக்கிறது. உன் கையிலிருந்த வெண்மலர் நழுவிக் கீழே விழுந்ததால் உனக்கு அளவற்ற இன்பமளித்து வரும் ஒரு பொருள் உன்னிடமிருந்து விலகி மறைந்துவிடும். மலர் உன் காலடியிலேயே வீழ்ந்திருத்தலினால் அதை நீ எடுத்துக் கொள்ளவும் முடியும். அது போல இழந்த அந்தப் பொருள்களையும் பின்பு நீ விரைவில் அடைந்து விடலாம். நின் ஆட்சிக்குரிய தலைநகரையடைந்து பேரரசனாக வாழும் ஆட்சிப்பேறு உன்னை நோக்கி விரைவில் வந்து சேரும்" என்று அந்த முனிவர் உதயணனுக்கு விவரமாகச் சொன்னார். சாரணர் தரும உபதேசத்தையும் அவனுக்கு உள்ள வாழ்நாள் அளவையும் அதற்குள் அவனடையக் கூடிய பேறுகளையும் மேலும் அந்த முனிவர் அவனுக்குக் கூறினார். அவற்றை எல்லாம் கேட்ட உதயணன் யூகியை அப்போதே உயிருடன் காண முடிந்தது போல மகிழ்ந்தான். முனிவரைப் பாராடிக் கொண்டாடி அவருக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்தான். யூகியைப் பற்றியும் ஏனையச் செய்திகளைப் பற்றியும் தனக்கிருந்த மனக் கவலையின் சுமை, முனிவர் கூற்றுக்குப் பிறகு கழிந்து போனது போன்ற உணர்வு அப்போது அவனுக்கு ஏற்பட்டது.

அவன் ஓரளவு நிம்மதியடைந்தான். பழைய கவலைகள் நீங்கின. கவலை நீங்கவே முழு மகிழ்ச்சியுடன் உண்டாட்டு விழாவில் கலந்து கொண்டு அதைச் சிறப்புற நிகழ்த்தலாயினான். நண்பரும் துயர் நீங்கி உவகை பெற்றனர். இலாவாண மலைச் சாரலில் பொழுது இன்பமாகக் கழிந்து கொண்டிருந்தது.

மலைச்சாரலில் அங்கங்கே இருந்த சுனைகளில் நீராடியும் சுவையுணவுண்டும் பூப் பல கொய்தும் பொழுதைக் கழித்தனர். மூங்கில் வெடித்ததனால் வீழ்ந்த முத்துக்களை பதித்துச் சிற்றில் இழைத்து விளையாடினர் சிறுமகளிர். குரவம் பூவைக் கொய்து, பாவை விளையாட்டும் விளையாடினர். அம்மானைப் பாடலும் வள்ளைப் பாடலும் பாடிச் சிலர் ஆடிப் பலர் கண்டுங் கேட்டும் மகிழ்ந்தனர். காதலர் இருதலைப் புள்ளின் ஓருயிர்போல இணைபிரியாத உண்டாட்டு அயர்ந்து உவந்தனர். இவ்வாறு உண்டாட்டு விழா நிகழ்ந்து வரும் நாள்களில் ஒருநாள் மலைச்சாரல் வழியாகத் தன் போக்கில் உலவச் சென்ற உதயணன் மிக்க அழகான இயற்கைச் சூழ்நிலையில் அமைந்திருந்த ஒரு தவப்பள்ளியை அடைந்தான். அவ்வாறு உலாவிய வண்ணம் சென்று கொண்டிருந்த அவனோடு இடையிலே தத்தை, காஞ்சனமாலை, வயந்தகன் முதலியோரும் வந்து சேர்ந்து கொண்டனர். மிக்க எழிலோடு கூடிய பல சோலைகளை அந்த ஆசிரமத்தைச் சுற்றிக் கண்ட வாசவதத்தையும் காஞ்சனையும் உதயணனிடம் கூறிவிட்டுச் சோலைகளின் வளங்காணச் சென்று விட்டனர். உதயணன் வயந்தகனுடனே அங்கிருந்த பெரிய அசோக மரமொன்றின் நிழலில் அமர்ந்தான். உடன் வந்த இரண்டோர் படை வீரர்களும் தனியே அகன்று போயிருந்தனர். மலைச் சாரலின் அழகைக் கண்டு மகிழ்வதற்கு வாய்த்த அந்த இனிய சூழ்நிலையில் அங்கே தனியாக உதயணன் அமர்ந்திருந்தான். சோகங்கள் நீங்கப் பெற்றவன் அப்போது அசோக மரத்தடியிலே அமர்ந்தது மிகவும் பொருத்தமாக இருந்தது.

26. விரிசிகையின் பேதைமை

அப்போது உதயணன் அமர்ந்த இடத்தருகில் உள்ள அந்த ஆசிரமத்தில் கோப்பெருந்தேவியுடன் அரசாட்சியைத் துறந்து முதுபருவத்தினனான ஓர் அரசனும் அவன் தேவியும் தவம் இயற்றிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு விரிசிகை என்னும் பெயருடன் கூடிய அழகு மிக்க மகள் ஒருத்தி உண்டு. விரிசிகை கன்னிப் பருவத்தினள். அவளும் தன் பெற்றோருடன் அதே ஆசிரமத்தில் வசித்து வந்தாள். இயற்கை வனப்புள்ள அந்த மலைச் சாரலில் வளர்ந்ததனால் விரிசிகை கள்ளங் கபடமற்ற தூய உள்ளமுடையவளாக இருந்தாள். ஆசிரமத்திலுள்ள பூஞ்செடிகளின் மீது அவளுக்குக் கொள்ளை அன்பு. அவைகளில் பூக்கும் மலர்களைக் கண்டு மகிழ்வதிலும் கொய்வதிலும் விரிசிகைக்குத் தனி இன்பம்.

இயற்கையின் நடுவிலேயே பிறந்து வளர்ந்ததனாலோ என்னவோ அங்குள்ள இயற்கைக் காட்சிகளின் ஒவ்வோர் வனப்பும் அவளிடமும் பூரணமாகக் காணப்பட்டன. தவ ஒழுக்கமுடைய ஆடவர்களை ஒழிய வேறு ஆடவர்களையோ இளைஞர்களையோ அதுவரை அவள் தன்முன் அங்கே கண்டதே இல்லை. ஆசிரமத்திற்குரிய சோலையில் மாலை தொடுக்க ஏற்ற பல வகை மலர்களையும் தழைகளையும் முற்றிய அரும்புகளையும் கொய்து வரலாம் என்ற கருத்துடன் அன்று அங்கு வந்த விரிசிகை, அசோக மரத்தடியில் அழகே வடிவாக அமர்ந்திருக்கும் உதயணனைக் கண்டாள். இப்போது வயந்தகன் கூட அவனுடன் இல்லை. எங்கோ பக்கத்திற்கு சென்றிருந்தான். 'காமன் காமன் என்று எல்லோரும் அழகிற் சிறந்தவனாகக் குறிப்பிடுகின்றார்களே? அது இதோ அமர்ந்திருக்கும் இந்த நம்பிதானோ' என்று விரிசிகை நினைத்தாள். அவன் மேல் இன்னதென்று புரியாத ஒரு விதமான பற்று அவளையறியாமலே அவளுக்கு ஏற்பட்டது. எல்லோரும் அறிந்த மொழியில் கூறினால் மையல் என்று அதற்குப் பெயர்.

கையிலிருந்த பவழத்தினாலாகிய பாவை பந்து முதலிய விளையாடற் கருவிகளை ஓரிடத்தில் வைத்துவிட்டுச் சோலை சென்று, போதும் மலரும் பூந்தழையுமாக விரிசிகை விரவிற் கொய்யத் தொடங்கினாள். கொய்து முடித்த பின் கொய்த மலர்களை இரண்டு உள்ளங்கைகள் நிறைய ஏந்திக் கொண்டு நேரே உதயணனிடம் வந்தாள். காலடியோசை கேட்டுத் தலை நிமிர்ந்தான் உதயணன். எதிரே திருமகள் போல நின்று கொண்டிருந்தாள் விரிசிகை. அப்போது அவள், அவனைப் பார்த்த மிரண்ட விழிநோக்கின் மருட்சியிலும் ஒரு தனி அழகு நிழலிட்டது. "நானும் என் பாவையும் சூடிக் கொள்ள மாலை வேண்டும். இவைகளை மாலையாகத் தொடுத்துக் கொடுங்கள்". தேனினும் இனிய குரலில் இவ்வாறு கூறிக்கொண்டே, உள்ளங்கைகள் நிறைய இருந்த மலரையும் அரும்பையும் தழைகளையும் விரிசிகை அவனுக்கு முன்னே குவித்தாள். உதயணனுக்கு ஒரே வியப்பாயிருந்தது. 'நாணமும் பயமுமில்லாமல் ஓர் ஆண்மகனிடம் வந்து, 'எனக்குப் பூத்தொடுத்துக் கொடுக்க வேண்டும்' என்று கேட்கிற பெண்ணும் இருக்க முடியுமா?' என்று இந்த நிலையை வியந்தான் அவன்.

மலரை எடுத்து, அவள் கொடுத்த நார்ச் சுருளை வாங்கி மாலை கட்டத் தொடங்கிய போது, அவள் அணிவதற்காக என்று அந்த மாலையை உருவாக்குகிறோம் என்ற இன்ப உணர்வு உதயணனுக்கு ஏற்பட்டது. மாலை மிக அழகாகவும் அமைந்தது. பாவைக்காகத் தனியே சிறிய மாலை ஒன்றும் அவன் தொடுத்திருந்தான். அவன் கைகள் விரைவாக மாலை தொடுப்பதைப் பார்த்து விரிசிகை வியந்து கொண்டிருந்தாள். அப்படித் தன்னை நோக்கிக் கொண்டிருந்த அவளை நன்றாகப் பார்த்து, அவள் ஓர் அரசகுமாரி போலத் தோன்றுவதையும் பிற இலட்சணங்களையும் கொண்டு அரசர் குடிப்பிறந்தவள் என்றே தேர்ந்தான் உதயணன். மாலைகளைத் தன் மேலாடையிலிருந்து எடுத்துப் புன்முறுவலுடன் விரிசிகை கையில் அளித்தான். மாலைகளைப் பெற்றுக் கொண்ட விரிசிகை, அவற்றை அணிந்து கொள்ள அறியாமல் பூக்கள் உதிரும்படி சிதைப்பது கண்டு, அவளுக்கு மாலை அணிந்து காட்ட விரும்பினான் உதயணன். அவளைத் தன் பக்கத்தில் அழைத்து மடிமேல் இருத்தி, நீண்ட கூந்தலில் வட்ட வடிவாக அந்த மாலையைச் சூட்டி அழகு செய்த பின் "மெல்ல செல்க" என்று கூறி அவளை அனுப்பினான். கள்ளமற்ற அந்தக் கன்னிப் பெண்ணும் அவன் மடியில் அமர்ந்ததனால் புதிய களிப்பு மிக்கதொரு உணர்வைப் பெற்றது போலிருந்தது. கொடிபோல வளர்ந்து பருவ வனப்பு நிறைந்து விளங்கிய விரிசிகை, மலைப் பகுதியில் வசிப்போர், அணியும் எளிய சிறிய உடையே அணிந்திருந்தாள். பருவ வளம் ஒவ்வோர் அங்கங்களிலும் பொலிவுற்றுத் தோன்றிய அவளை மடியில் இருத்திக் கொண்டிருந்த அந்தச் சிறுபொழுது, உதயணனுக்கு மறக்க முடியாதபடி நினைவில் நின்றுவிட்டது.

உதயணன் தன் மடியிலிருந்து விரிசிகையை எழச் சொல்லிய அதே நேரத்தில், காஞ்சனை பின் தொடரப் பல நிறப் பூக்களைக் கொய்து கொண்டு அங்கே வந்து சேர்ந்தாள் வாசவதத்தை. உதயணன் மடியில் அழகான இளம் பெண் ஒருத்தி கூந்தலில் மாலை சூடிய வண்ணம் அமர்ந்திருந்து விட்டு எழுவதைக் கண்ட தத்தைக்கு ஒரு விநாடி உள்ளமே துடிப்பற்று நின்றுவிடும் போலிருந்தது. யார் யாரோ வருவதைக் கண்ட விரிசிகை ஒன்றும் புரியாது எழுந்து பயந்து கொண்டே ஆசிரமத்தின் உள்ளே ஓடிவிட்டாள். தத்தை கண்கள் சிவக்க உதடுகள் துடிதுடிக்கச் சினத்துடன் உதயணனை நெருங்கினாள்.

பக்கத்திலிருந்த காஞ்சனமாலையிடம் தத்தை சீற்றத்தோடு கூறிய சொற்கள் உதயணன் காதில் விழுந்தன. "காஞ்சனை என்னை இப்போதே என் தந்தையின் நகருக்குக் கொண்டு போய் விட்டுவிடச் சொல்! தனக்கு மிகப் பக்கத்தில் உள்ள தாமரைப் பொய்கையிற் பொழுதோடு மலர்ந்து புதுமைச் செவ்வியோடு விளங்கும் தாமரை மலரிலுள்ள தேனை உண்ணாது, தொலைவிலிருக்கும் நெய்தற் பூவில் தேனுண்ண விரும்பி அதனை நாடிச் செல்லும் வண்டு போன்றவர்கள் ஆடவர். இவ்வுண்மையை யான் இன்று அறிந்தேன்" என்று இவ்வாறு கூறிவிட்டு உதயணனை அணுகவும் விரும்பாதவள் போலப் பக்கத்திலுள்ள ஒரு பொழிலில் கோபத்தோடு புகுந்தனள் வாசவதத்தை. தத்தையின் ஊடற்குறிப்பை உதயனனுக்கு அறிவிப்பவள் போல அவனை ஏறிட்டுப் பார்த்தாள் காஞ்சனமாலை. கீழே கோபமிகுதியால் தத்தை அங்குமிங்குமாகச் சிதறிவிட்டுச் சென்ற பூக்கள் விழுந்து கிடந்தன. அவளுடைய ஊடற்சினத்தின் அளவைச் சிதறப்பட்டுக் கிடந்த அந்த மலர்களும் ஒருவாறு எடுத்துக் காட்டின. இந் நிகழ்ச்சி நடக்கும் போது மலைச் சாரலுக்கு விழாவிற்காக வந்திருந்த சாங்கியத் தாயும் தற்செயலாக அங்கே வந்து சேர்ந்தாள். அவளைக் கண்ட தத்தை, தான் ஒதுங்கிச் சென்ற பொழிலில் இருந்து தன்னைத் தன் தந்தையிடம் கொண்டு போய் விடுமாறும், உதயணன் இயல்பு இவ்வளவு இழிவாக இருக்கும் என்று தான் கருதவில்லை என்றும் வருந்திக் கூறிக் கொண்டிருந்தாள். இதைக் கேட்ட சாங்கியத் தாய் அவள் சினத்தை எவ்வாறு தணிப்பது என்று சிந்தித்த வண்ணம் இருந்தாள். தத்தைக்கும் உதயணனுக்கும் வேண்டியவளாகிய சாங்கியத் தாய் இப்போது இருவரில் யாரை முதலில் சமாதானப்படுத்துவதெனத் தயங்கினாள்.

அப்போது உதயணன் அவள் ஊடலைத் தணிக்கக் கருதி எழுந்தான். 'கள் உண்ண வேண்டும் என்று எழுந்த வேட்கை நோயை அதை உண்டுதானே தீர்த்துக் கொள்ள வேண்டும்? அதுபோலத் தன் காரணமாக உண்டான ஊடலை தான் தானே தீர்க்க வேண்டும்' என்று இந்த நினைவுடன் தத்தை சினத்துடன் புகுந்த சோலைக்குள் உதயணனும் புகுந்தான். அவனைக் கண்டதும் தத்தை வேறொரு புறமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். உதயணன் அவளைப் பலவாறு இரந்து இனிய மொழிகளால் வேண்டினான். அவளை மெல்ல நெருங்கிக் கலைந்திருந்த கூந்தலைத் திருத்திக் கொண்டே சினத்தைத் தணிக்க முயன்றான். தத்தையோ அவனை வெறுப்பவள் போல ஒதுங்கிச் சென்றாள். அவள் ஊடலைத் தணிப்பது அவ்வளவு எளிதாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. அபோது தத்தையின் ஊடல் தானாகத் தணிவதற்கு ஏற்ற நிகழ்ச்சி ஒன்று தற்செயலாக நடந்தது. மலைச்சாரலில் இருந்த வளர்த்தியான மரமொன்றிலிருந்து ஒரு பெரிய குரங்கு திடீரென்று அங்கே தத்தையின் அருகில் குதித்து வந்தது. காண்பதற்கு அஞ்சத்தக்க தோற்றமுடைய அக் குரங்கு திடுதிப்பென்று குதித்தது கண்டு பயந்து நடுங்கிய தத்தை, தன் ஊடலை மறந்து உதயணனைக் கட்டித் தழுவிக் கொண்டாள். அச்சத்தினால் ஏற்பட்ட இந்தத் தழுவுதலினால் உதயணன் மேல் தான் கொண்ட சினத்தையும் ஊடலையும் தத்தை மறந்துவிட்டாள்.

தத்தையின் எழிலும் இன்பமுமே உதயணனை அரசியலையும் தன் ஆண்மையையும் இழக்கச் செய்திருந்தன என்பதை நன்கு உணர்ந்திருந்த உதயணனுடைய உயிர்த்தோழர்கள், ஏற்கெனவே யூகி இட்டிருந்த திட்டப்படி அவளை அவனிடமிருந்து பிரித்து, யூகியின் ஆதரவில் சில காலம் மறைவாகத் தங்கியிருக்கும்படி செய்யக் கருதினர். உண்டாட்டுவிழா ஒருவாறு முடிவுற்றது. மக்கள் நகர் மீண்டனர். உதயணனையும் தத்தையையும் மலைச்சாரலுக்குப் பக்கத்தில் உள்ள இலாவாண நகரத்து அரண்மனையில் சில நாள் தங்கி வாழும்படி ஏற்பாடு செய்திருந்தனர். தன் திட்டம் நிறைவேற யூகி அந்த ஏற்பாட்டை நண்பர்கள் மூலமாகச் செய்வித்திருந்தான்.

27. நலம் நாடிய சூழ்ச்சிகள்

ஏற்பாட்டின்படி வாசவதத்தையும் உதயணனும் இலாவாண நகரத்து அரண்மனையில் தங்கி வாழ்ந்து வந்தனர். அங்ஙனம் அவர்கள் வாழ்ந்து வரும் போது ஒருநாள், "இப்படி முயற்சியின்றி வீணே இருந்து வருதல் அரசர் குடிப் பிறந்தோர்க்கு அழகன்று. ஆகையால் நீ உன் கீழுள்ள குறுநில மன்னர்களையும் பிறரையும் கண்டு, அவர்கள் செவ்வன ஆட்சி நடத்துகின்றனரா என்று கவனிக்கப் போய் வருதல் வேண்டும்" என நண்பர் அவனுக்குக் கூறினர். உதயணன், வாசவதத்தையைப் பிரிய நேரிடுமே என்று கருதி அதற்கு மறுத்துவிட்டான். நண்பர்கள் அவன் நிலைக்கு வருந்தி, ஒன்றும் செய்ய இயலாமல் வறிதே இருக்க நேர்ந்தது. இது நிகழ்ந்து முடிந்த சில நாள்கள் சென்ற பின் வாசவதத்தையே உதயணனிடம் வேட்டையாடும் நிமித்தமாகக் காடு சென்று விட்டுத் திரும்பி வரும் போது பல பூக்களாலும் தழைகளாலும் அழகிய மாலை தொடுத்துத் தனக்குக் கொண்டு வருமாறு வேண்டிக் கொண்டாள்.

தத்தையின் வேண்டுகோளை மறுக்க முடியாத உதயணன், வேகமாகச் செல்லவல்ல குதிரை ஒன்றின் மீது ஏறிக் காடு சென்றான். இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தத்தையை உதயணனிடமிருந்து பிரிக்க விரும்பினர் நண்பர். 'அரசன் இன்ப நுகர்ச்சியில் ஆழ்ந்து பிறவற்றை நோக்கானாயினன்' என்று காட்டு வேடர்கள் வந்து அரண்மனைக்குத் தீயிட்டுவிடப் போவதாக எங்கும் செய்தியைப் பரப்பினர். தாங்களே சில ஏவலாளர்களை விட்டு தத்தை இருந்த அரண்மனையைத் தீக்கு இரையாக்கிவிட்டு, உள்ளிருந்த தத்தையையும் சாங்கியத் தாயையும் அரண்மனையின் அடிப்பகுதி மூலம் யூகி வசிக்கும் இடத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருந்த சுரங்க வழியாக அங்கே அனுப்பிவிட்டனர். எரிந்து போன அரண்மனையில் தத்தையின் அணிகலன்களை அங்கும் இங்குமாகச் சிதறி அவளும் எரிபட்டு இறந்தனள் என்று உதயணன் நம்புமாறு செய்து வைத்தனர். திட்டத்தில் முழுப்பங்கு கொண்டு உதயணன் நலத்திற்காக உழைக்கும் முக்கிய நண்பர்களைத் தவிர வேறு எவரும், 'தத்தை, சாங்கியத் தாயுடன் உயிரோடு சுரங்க வழியாகத் தப்பிச் சென்று யூகியிடம் உள்ளனள்' என்பதை அறியவில்லை.

இலாவாண நகர அரண்மனை இவ்வாறு தீப்பட்டு எரிந்து போன அளவிலே தப்பிச் சென்ற சாங்கியத் தாயும் வாசவதத்தையும் யூகியிருக்கும் இடத்தைச் சென்று அடைந்தனர். முன் பின் தெரியாத அங்கே, சாங்கியத் தாயுடன் ஓடி வந்திருந்த தத்தை சிறிது கலங்கினாள். அப்போது சாங்கியத் தாய், "உன் காதற் கணவன் அரசியல் வாழ்வில் உயர்வு பெறவே இத்தகையதொரு சூழ்ச்சி செய்யப்படுகிறதே ஒழிய வேறில்லை" என்று கூறித் தேற்றினாள். அதற்குள் யூகியே வாசவதத்தையின் முன் வந்து அவளுக்குப் பல ஆறுதல் உரைகளைக் கூறி, "இவை யாவும் உன் கணவன் தன்னை உணர்ந்து கொள்ளவும் பிறரால் ஆளப்பட்டு வரும் தன் நாட்டை மீட்கும் உணர்வு பெறவும் பிங்கல கடகர்களாகிய தன் தம்பியர் துயர் போக்க வேண்டுமென்ற கருத்துக் கொள்ளவுமே செய்யப்பட்ட சூழ்ச்சி இது. இந்தச் சூழ்ச்சி நிறைவேற வேண்டி என் பொருட்டும் உன் கணவன் பொருட்டும் சில நாள் நீ இந்தப் பிரிவைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அருள் கூர்ந்து நீ எனக்கு இவ் வரத்தை அளிப்பாயாக" என்று யூகி தத்தையை வேண்டிக் கொண்டான். அந்த உருக்கமான வேண்டுகோள் தத்தையின் மனத்தையும் கவர்ந்துவிட்டது. இதுவரை தன்னிடம் பேசுபவன் யூகி என்றே அவள் எண்ணவில்லை. சாங்கியத்தாய், படத்தைக் கொண்டு வந்து உதயணனிடம் காட்டிய பின் இறந்துவிட்டான் என்றே எண்ணி வந்தாள் அந்தப் பேதை பெண். இதுவரை யூகியை அவள் நேரிற் கண்டதும் இல்லை. இப்போது தன்னிடம் பேசுபவன் உதயணனுக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவனாக இருக்க வேண்டுமென்றே அவள் எண்ணினாள். சாங்கியத் தாய் அவளுடைய சந்தேகத்தைப் புரிந்து கொண்டவள் போல, அவனே யூகி என்பதையும் அவன் இறந்ததாக உருவகம் செய்யப்பட்ட படம் வெறும் கற்பனை என்பதையும் மீண்டும் அவளுக்கு விளக்கமாகக் கூறினாள். அது கேட்ட தத்தை நம்பிக்கையுடன் "முன்பு உஞ்சையில் சிறை நீங்க உதவிய நீர், என் கணவனுக்கு இன்றும் நலமே நாடுவீர். எனவே நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்து அரசனை வழிக்குக் கொணர்க" என்று கூறி அவர்கள் திட்டத்துக்குத் தானும் ஒத்துழைப்பதாக வாக்குக் கொடுத்தாள் வாசவதத்தை. யூகி மனம் மகிழ்ந்து, இனி உதயணன் பழைய துன்பங்கள் நீங்கி நலமுறல் நிச்சயம் என நினைத்தான். வாசவதத்தையும் ஒத்துழைப்பதாக ஒப்புக் கொண்டது யூகிக்கு மேலும் நம்பிக்கை அளிப்பதாயிருந்தது.

காடு சென்றிருந்த உதயணன் இலாவாண மலைச் சாரலிலுள்ள வளம் மிகுந்த பூங்காக்களில் தத்தைக்கு வேண்டிய நறுமண மலர்களையும் தழைகளையும் சேகரித்துக் கொண்டு அதை அவளுக்கு அளிக்கும் ஆவலோடு திரும்பி, விரைவாக நகருக்குப் புறப்பட்டான். தத்தையின் சிறு பிரிவைக் கூட அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தன்னுடைய ஒரே கன்றை நினைத்து மேய்தல் வெளியிலிருந்து ஆர்வத்தோடு திரும்பும் தாய்ப் பசுவின் மனநிலையை ஒத்திருந்தான் அப்போது அவன். உதயணனோடு காட்டுக்கு உடன் வந்திருந்த குதிரைப் பாகன், மரத்தடியில் கட்டப் பெற்றிருந்த இரண்டு குதிரைகளில் அரசனுக்குரிய உயர்ந்த சாதிக் குதிரையைச் சேணம் பூட்டிக் கொண்டு வந்து நிறுத்தினான். பாகன் கையிலிருந்து கடிவாளத்தை வாங்கிக் கொண்டு தாவி ஏறினான் உதயணன். பாகன் கை கூப்பியவாறே அரசனை வணங்கி விலகி நின்று கொண்டான். குதிரை முன் கால்களைக் கொண்டு தாவிப் பாய்ந்தது. காற்றிலும் கடுகிச் சென்ற குதிரையின் குளம்பொலி மலைச் சிகரங்களில் பயங்கரமாக எதிரொலித்த வண்ணம் இருந்தது. பாகனுடைய குதிரையும் உதயணனைப் பின் தொடர்ந்தது. குதிரை மலை நடுவிலுள்ள வழியைக் கடந்து நகரை அணுகிய போது உதயணனுக்குச் சில தீய நிமித்தங்கள் ஏற்பட்டன. இடது புறத்துக் கண்ணும் தோளும் துடித்தன. சில பறவைகளின் குரல்கள் தீமைக்கு அறிகுறியாக ஒலித்தன. இத்தகைய தீக் குறிகளால் மனங் கலங்கியவாறே குதிரை மேல் வந்து கொண்டிருந்த அவன், தொலைவில் நகரினுள்ளே அரண்மனைப் பக்கமாகத் தெரியும் புகைப் படலங்களைக் கண்டான். இந்தக் காட்சி அவன் கலக்கத்தை மேலும் அதிகப்படுத்தியது.

வழியில் ஏற்பட்ட துர்நிமித்தங்களும் புகைக் காட்சியுமாகச் சேர்ந்து 'ஆருயிர்க் காதலி வாசவதத்தைக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்திருக்குமோ? அவள் நம்மைப் பிரிந்தனளோ?' என்ற அச்சத்தையும் துயரத்தையும் அவனுக்கு ஏற்படுத்தின. இதற்குள் குதிரை நகரின் தலைக்கோட்டை வாயிலை அடைந்துவிட்டது. அவன் மனத்தில் அடக்க முடியாத பரபரப்பு வளர்ந்தது. அருகில் நெருங்கியதும் அரண்மனை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததைக் கண்டான் உதயணன். 'காட்டு வேடர்தாம் அரண்மனைக்கு தீக் கொளுத்தினர்' என்று ஒரு பொய்யை மெய்போலச் செய்வதற்காகச் சில காட்டு வேடர்களை அடித்துத் துரத்துவது போலத் துரத்திக் கொண்டே வயந்தகனும் உருமண்ணுவாவும் அங்கே வந்தனர். எதிர்ப்புறமிருந்து குதிரை மீது வரும் உதயணன் நகரிற் புகை கண்டு துயரத்தால் மயங்கிவிடாமல் அவனை ஆற்றக் கருதிய அவர்கள், தலைக்கோட்டை வாசலிலேயே அவனை எதிர்கொண்டு நின்றனர். உதயணன் தான் கொண்டு வந்த மலர்களையும் அரும்புகளையும் சிதறிவிட்டுத் துயரத்தினால் தாக்குண்டு தோன்றினான். அவர்களுக்கு அப்பால் சற்றுத் தொலைவில் வாசவதத்தையின் தோழியாகிய காஞ்சனமாலை அழுது புலம்பி அரற்றிக் கொண்டிருந்தாள். தீ நாக்குகள் போன்ற பேரிதழ்களோடு கூடிய செந்தாமரை மலர்கள் செறிந்து பூத்திருக்கும் ஒரு பொய்கையில், அன்னமொன்று தன் சேவலைத் தேடி அலமரல் போல இருந்தது காஞ்சனயின் அப்போதைய நிலை. புன்சொற் கேட்ட பெரியோர் போலக் கருதி வாடியிருந்தது அவள் பொன்மேனி. தன் தலைவியான வாசவதத்தையைப் பற்றிக் கூறி அரற்றியவாறே, அவள் அவலமே உருவாய் நின்று அங்கே அழுது கொண்டிருந்தாள்.

இவ்வாறு வாசவதத்தையை முன்னிலைப் படுத்தி அரற்றிக் கொண்டிருந்த காஞ்சனையின் மொழிகள் அப்போதுதான் குதிரையில் வந்து அங்கே நின்ற உதயணன், செவியில் பட்டன. ஏற்கனவே கலக்கமும் பயங்கரமான சந்தேகமும் கொண்டு வந்திருக்கும் உதயணன், காஞ்சனையின் இந்த அரற்றலையும், வயந்தகனும் உருமண்ணுவாவும் கையைப் பிசைந்து கொண்டு கவலை தோன்ற நிற்பதையும் கண்டான். அடுத்த கணம் வாசவதத்தைக்கு என்ன நேர்ந்ததோ என்ற திகைப்பில் குதிரையிலிருந்தே மயங்கிச் சாய்ந்தது அவன் உடல். வயந்தகனும் உருமண்ணுவாவும் பதறி ஓடி தரையில் விழ இருந்த உதயணனுடலைக் குதிரையிலிருந்தே தாங்கியவாறு எடுத்தனர். உடனே பக்கத்திலிருந்த ஏவலாளன் ஒருவன் ஓடோடியும் சென்று மயக்கத்தை நீக்கும் தன்மை வாய்ந்த கடுங்கூட்டு என்னும் அரிய மருந்தைக் கொண்டு வந்தான். அந்த மருந்தை அளித்து மார்பிற் குளிர்ந்த சந்தனத்தையும் பூசினர். பின் பெரிய ஆலவட்டம் ஒன்றைக் கொணர்ந்து தூய காற்று அவன் உடலிற் படும்படியாக வீசினர். சிறிது நேரத்தில், "வாசவதத்தை! என் உயிரே, நீ எங்குற்றனை?" என்று அரற்றிக் கொண்டே கனவிலிருந்து விழிப்பவன் போலக் கண்விழித்தான் உதயணன். சுற்றியிருந்த நண்பர்கள் சற்றே முகம் மலர்ந்தனர். மெல்ல மயக்கம் தெளிந்தான் அரசன். விழித்தவுடன், "வாசவதத்தைக்கு என்ன நேர்ந்தது?" என்ற கேள்விதான் அவனிடமிருந்து துயரம் தோய்ந்து ஒலித்தது. வாசவதத்தைக்கு நேர்ந்ததை அவனிடம் எப்படி விவரிப்பதென நண்பர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தயங்கினர்.

28. துயர வெள்ளம்

நண்பர்கள் நீண்ட நேரச் சிந்தனைக்குப் பின் நடந்த துன்பங்களைப் படிப்படியாக உதயணனுக்குக் கூறினர். வாசவதத்தைக்கு நேர்ந்த அவலம் அறிந்ததும் உதயணன் ஒரேயடியாகக் கதறினான். ஆருயிர் நண்பர் ஆறுதல் மொழி கூறினர். அதையும் பொருட்படுத்தாமல் எரிந்து கொண்டிருந்த அரண்மனையின் அந்தப்புர மாடங்களின் தீயிடையே தானும் குதித்து விடுவான் போல எழுந்து ஓடினான் உதயணன். "தத்தை இறந்தது இந்தத் தீயிலேதானே? நானும் இதிலேயே மூழ்கி இறக்கிறேன்" என்று கூறிக் கொண்டே ஓடிய அவனை நண்பர் தடுத்து நிறுத்துவதற்குப் பெரும்பாடுபட வேண்டியிருந்தது. அவனுடைய துயரம் சமாதானப்படுத்த இயலாத மிகப்பெரிய துயரமாயிருந்தது.

"நண்பனே! துன்பப் பொறை சுமக்கலாற்றாது நீ இங்ஙனம் தீப்புகுதல் உன் பகைவர் மகிழ்ச்சி அடைவதற்குரிய செயலாகும். அன்றியும், 'யூகியை இழந்த பின் வத்தவகுமரன் தனக்கெனச் சொந்த ஆற்றல் இல்லாது போயினமையால், தத்தையின் பிரிவுத் துயரை வாயிலாகக் கொண்டு கோழையாக மாறித் தானே இறந்து போனான்' என்று பிறர் உன்னை இகழவும் இடந்தரும் இச் செயல். ஏற்கனவே, 'யூகி இறந்த பின் நீ ஏதும் செய்ய இயலாதவன் ஆயினை!' என்று உன் பகைவர் எள்ளி நகையாடி உரைத்து வருகின்றனர். ஆகவே கலங்காமல் இரு" எனக் கூறி நண்பர் அவனைத் தீப்புகாமல் தடுத்து நிறுத்தினர். உதயணன் நலத்திற்காக நடிக்கப்பட்ட ஒரு போலி நாடகத்தை அவன் நம்பித் திருந்தவே, நண்பர்கள் இந்த ஏற்பாடு செய்திருந்தனர்.

புற்றிலிருந்து பாம்பை வெளியேற்றிச் சினமூட்டுவதற்காகப் புற்றின் வாயிலில் இட்ட நெருப்பைக் கண்டு, பாம்பு வெளியே போந்ததுமன்றிச் சிலரைத் தீண்டவும் தலைப்பட்டுவிட்டது போல உதயணன் அதை நம்பியதோடன்றித் தன் உயிரையும் மாய்த்துக் கொள்ள முற்பட்டுவிட்டது கண்டு அவர்கள் திடுக்கிட்டனர். முதலுக்கே மோசம் வந்துவிடும் போலிருந்தது. எவர் வேடிக்கை பார்க்கப் பாம்பை உள்ளேயிருந்து நெருப்பிட்டு வெளியேற்றினாரோ அவரையே அது கடித்துவிட்டால் என் செய்வது? அரிதின் முயன்று நிலை கொள்ளாமல் தடுமாறி உழன்று சுழலும் உதயணனைத் தேற்றினர் அவனுடைய தோழர்கள். காரிய நாடகத்தை அவன் மெய்யென நம்பியது அவர்களுக்கு மகிழ்ச்சியே தந்தது.

எல்லையற்ற நீர்ப்பெரும் பரப்பை உடையதாக இருந்தாலும் கடலுக்கும் கரை உண்டல்லவா? அதைக் கடந்து அப்பால் போய்விட முடியாதே? தன் தோழர்களின் சொல்லைக் கடந்தறியாத உதயணன் ஒருவாறு மனந்தேறி தானும் தீயிற்புகுந்து உயிர்விடும் எண்ணத்தைக் கைவிட்டான். 'சுற்றித் தீப்பற்றிய போது அஞ்சி நடுங்கிச் செய்வதறியாது குகையில் சிக்கிவிட்ட மயிலைப் போலத் தன் இன்னுயிராகிய என்னை நினைந்து தத்தை எப்படிப் பரிதவித்தாளோ' என்று நினைத்துப் பார்த்தபோது உதயணனுக்குத் தன் உடலில் உயிர்ப்பே நின்றுவிடும் போலிருந்தது. அவலத்தின் உணர்வுச் சுமைகள் அவன் நெஞ்சைப் பிடித்துத் தாழ்த்தின. பறி கொடுக்கக் கூடாதது என்றும் பறி கொடுப்பதற்கு அரியதுமான ஒன்றைப் பறிகொடுத்து விட்டவன் போல மயங்கிச் சோர்ந்தான் உதயணன். எரிந்து போன தத்தையின் பொன்னுடலையாவது ஒரு முறை கண்குளிரக் காணவேண்டும் போலிருந்தது அவனுக்கு. கண்டால் தான் தன்னிடம் கொந்தளிக்கும் சோகவெள்ளம் வடியும் என்று அவன் உள் உணர்வு பேசிற்று. "அரை குறையாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை அவித்து விட்டு எரிந்து போன அவள் பொன்னுடலையாவது எனக்குக் காட்டுங்கள்" என்று உதயணன் கேட்ட போது நண்பர்களுக்கு பகீரென்றது.

தத்தையின் பிணத்தைக் காணவேண்டும் என்று உதயணன் கேட்பான் என அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நெருக்கடியான நிலை ஏற்பட்டது அவர்களுக்கு. இப்பொழுது அவன் கேட்ட கேள்வியால் தங்கள் குட்டு உடைப்பட்டு நாடகம் அம்பலமாகிவிடுமோ என்று அவர்கள் உள்ளூற நடுக்கமும் அடைந்தார்கள். எல்லாம் உதயணன் நன்மைக்காகவே செய்திருந்தார்கள் என்றாலும் பொய் பொய்தானே? 'எரிந்து போன கரிப்பிணத்தை அரசர்கள் காண்பது வழக்கமில்லை. அது அவர்கள் மங்கலத்திற்குத் தகாது' என்று தங்களைச் சமாளித்துக் கொண்டு ஒரு பொய்யைச் சாமர்த்தியமும் சாதுரியமும் தோன்ற வெளியிட்டு உதயணனை நம்ப வைத்தார்கள். முதலில் அதற்கு இணங்கிய உதயணன் பின்பு மனம் மாறிவிட்டான். கண்டிப்பாக எரிந்து போன தத்தையின் உடலைக் காணத்தான் வேண்டுமென்று பிடிவாதத்தோடு ஒற்றைக் காலில் நின்றான். அவனுடைய பிடிவாதத்தைத் தளர்த்துவது கடினமாயிருக்குமெனத் தோன்றியது.

உதயணன் துயரத்தையும் அந்த துயர வேகத்தில் நொடிக்கு நொடி அதிகமாகி வரும் அவனுடைய பிடிவாதத்தையும் கவனித்த உருமண்ணுவா, அதைத் தீர்க்கும் வழி நாடிச் சற்றே நுணுக்கமாகச் சிந்தித்துப் பார்த்தான். இந்த நிலையில் உதயணனுடடய பிடிவாதத்தை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்தினால் என்ன நிகழும் என்பதையும் உருமண்ணுவா அநுமானம் செய்தான். 'தத்தை தீப்பட்டு இறந்து போனது உண்மையாயின் இவர்கள் பிணத்தைக் காட்ட மறுப்பானேன்? ஒரு வேளை இதில் ஏதாவது சூழ்ச்சி இருக்குமோ? எனக்கு உயிர் நண்பர்களாகிய இவர்கள் இத்தனை பேர் இங்கிருந்துமா தத்தையை இறந்து போக விட்டிருப்பார்கள்? இல்லை! இல்லை! ஒரு போதும் இருக்காது. தத்தை இறந்திருக்க மாட்டாள். வேண்டுமென்றே ஏதோ காரணம் பற்றித்தான் இவர்கள் இப்படிக் கூறியிருக்க வேண்டும்' என்று இந்த விதமாக உதயணன் சந்தேகமுற்று நினைத்து விடுவானானால் பின் மேலே நடக்க வேண்டிய அருமையான திட்டங்கள் அவ்வளவும் சரிந்து போகும். உதயணன் மனம் எவ்வளவு கூர்மையானது என்பதை நன்றாக அறிந்திருந்த உருமண்ணுவா இமைப் பொழுதில் தங்கள் நெருக்கடியை உணர்ந்து கொண்டான். நல்ல வேளையாக வாசவதத்தையின் பள்ளியறைப் பக்கத்தில் முன்பே இரண்டு வேடர்களைத் தத்தை சாங்கியத்தாய் ஆகிய இருவருடைய அணி ஆடைகளுடன் நெருப்பில் தள்ளி வைத்திருந்தனர். 'இப்பொழுது கரிந்து அடையாளங் கண்டு கொள்ள முடியாமல் இருக்கும் அவர்கள் பிணங்களை அருகில் போக விடாமல் தூரத்திலிருந்தே காட்டி, உதயணனைத் திருப்தி செய்து விடலாம் என்ற முடிவுடன், உதயணனுக்குப் பிணத்தைக் காட்ட ஒப்புக் கொண்டு அவனை அழைத்துச் சென்றான் உருமண்ணுவா. உதயணனோடு தான் அங்கே புறப்படுவதற்கு முன்பாக, உருமண்ணுவா வேறு ஒரு முக்கியமான காட்சியை உதயணன் கண்களிலிருந்து மறைக்க வேண்டியதாயிற்று.

உதயணன் பிணத்தைப் பார்வையிட வேண்டிய இடத்திற்கு அருகில் தான் தத்தையும் சாங்கியத் தாயும், யூகி இருக்குமிடத்திற்குத் தப்பிச் சென்ற சுரங்க வழி திறந்து கிடந்தது. உருமண்ணுவா முன்னேற்பாட்டுடன் தந்திரமாக ஓர் ஏவலன் மூலம் அந்தக் கதவை அடைத்து எரிந்து போன நீற்றையும் கட்டைகளையும் கொண்டு மூடிச் சுரங்க வழியை மறைத்து விடுமாறு சொல்லி அனுப்பியிருந்தான். போன ஏவலனிடமிருந்து காரியம் முடிந்ததாகத் தகுந்த குறிப்புக் கிடைத்த பின்னே உதயணனை அழைத்துக் கொண்டு எரிந்து போன பள்ளியறைக்குள் நுழைந்தான் உருமண்ணுவா. சற்று விலகியிருந்தபடியே தத்தை, சாங்கியத் தாய் இவர்களின் எல்லா அணிகளும், பூட்டப் பெற்று உருத் தெரியாமற் கரிந்து போயிருந்த போலிப் பிணங்களை உதயணனுக்குக் காட்டி, இருவரும் இறந்தது பொய்யில்லை என்பதை அவன் நம்பும்படி செய்தான். உதயணனும் அதை அப்படியே நம்புவதற்குச் சந்தர்ப்பம் துணை செய்தது.

பிணத்தின் மேலும் வேறு சில இடங்களிலும் சிதறிக் கிடந்த தத்தையின் அணிகலன்கள் ஏவலரால் ஓரிடத்தில் கொண்டு வந்து குவிக்கப்பெற்றன. அவை பெரும்பாலும் சிதைந்து போயிருந்தன. அந்த நகைகளுக்கு முன் அமர்ந்து உதயணன் கண்ணீர் விட்டுக் கதறிய காட்சி உண்மை தெரிந்த உருமண்ணுவா முதலியோரைக் கூட மனம் உருக்கி வருத்தத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு பொன்னகையும் தத்தையின் செவ்விதழ்களுக்கு நடுவே தோன்றிய புன்னகையை உதயணனுக்கு நினைவூட்டின. முத்து வடமும், சித்திர உத்தியும் நித்திலத் தாமமும், நெற்றிச் சுட்டியும், கழுத்தணி கண்டிகையும் என்று சொல்லில் அடங்காத பல அணிகலன்களில் அவள் சௌந்தரியப் புன்முறுவல் நிச்சயம் அவனுக்குத் தெரிந்துதான் இருக்க வேண்டும். ஒவ்வோரணிகலனும் தத்தையின் உடலில் அழிந்து போன ஒவ்வோர் அங்க வனப்பையும் அவனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தது; நினைவூட்டிக் கொண்டிருந்தது. அவன் கண் கலங்கினான்.

கடகங்கள் தந்தத்தில் செதுக்கி வைத்தாற்போல் இருந்த அவள் முன் கையை நினைவில் கொண்டு வந்து காட்டின. பல நிற வைரக் கற்கள் பொருத்தப் பெற்ற மோதிரங்கள் தாமரையின் நீண்ட இதழ்களைச் சுருட்டியது போல் காட்சியளித்த அவள் விரல்களின் நளினத்தை எண்ணச் செய்தன. தோளணிகள் மழுமழுவென்று முற்றி இழைத்த சந்தனக்கட்டைகள் போன்ற, ஆனால் பஞ்சு போல் மெல்லியனவாகிய அவள் தோள்களை அறிமுகம் செய்தன. பவழமும் காசும் கோத்துச் செய்யப்பட்ட பாண்டில் என்னும் இடுப்பணியும் எட்டுவடங்களாகக் கோத்த விரிசிகை என்னும் மேகலையும் தத்தையின் இடையழகைத் தாமும் உதயணனுமுமே அறிய முடிந்த பெருமையை இழந்துவிட்டது போல அவனை நோக்கி அல்லல் காட்டின. கிண்கிணிச் சிலம்பு முதலிய காலணிகள் என்றோ செய்த இன்ப ஒலிகளை அவன் நினைவிற் படரச் செய்தன. "தாரும் தாழையும் கண்ணியும் மாலையும் கொண்டு உன்னை அழகு செய்ய வந்தேன். நீயோ உனக்கு முன்புள்ள அணிகலன்களையே விட்டுச் சென்று விட்டாய்" என்று பலவாறு பிதற்றி வாசவதத்தையைப் பற்றிய பழைய நினைவுகளில் ஆழ்ந்து கிடந்தான் உதயணன். யானை பிடிப்போர் இட்ட குழியில் தன் பெண் யானையைப் பறி கொடுத்த களிற்றைப் போல நீங்காச் சோகம் அவனை நிலையாக வாட்டிய வண்ணமிருந்தது. வாசவதத்தையின் அழகிய உடலை இழந்துவிட்ட உதயணன் அவளுடைய அணிகலன்களிலிருந்து அவை முன்பு அணி செய்த ஒவ்வோர் அங்கமாக நினைத்துக் கூட்டி கற்பனையில் அவளை உருவாக்க முயன்றான்.

29. துன்பத்தில் விளைந்த துணிவு

இந்த நிலையில் உதயணனுடைய சோர்வு நோக்கி, அவன் நாட்டின் மேல் படையெடுத்து வரக் காத்திருக்கும் பகைவர்கள் கொண்டாட்டம் அடைந்தனர். 'பகைகள் நம்மைச் சுற்றி நிலவுகிறபோது இவ்வாறிருப்பது நன்றன்று' என்று கூறினர் நண்பர். ஆருணி அரசன் இந்த நிலையில் படையெடுத்து வந்தாலும் வரலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் படைகளை நாற்புறமும் திரட்டி முன்னேற்பாடாக வைத்தனர் உதயணன் நண்பர். இவ்வாறு கூறிய அவர்கள் கூற்றும் ஆருணி அரசனைப் பற்றிய எச்சரிக்கையும் உதயணன் சற்றே துயரத்தை மறந்து அரசகுமாரனுக்குரிய வீர விழிப்பையும் துணிவையும் பெறச் செய்திருந்தன. இதைக் கண்ட நண்பர்கள் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து முதிர்ந்திருந்த சில அமைச்சர்களைக் கொண்டு, காமத்தின் இழிவையும் கேவலம் ஒரு பெண்மகளை இழந்ததற்காக அவன் இவ்வாறு பெருமிதமிழந்து பேதுறுவது தகுதி இல்லை என்பதையும் அவன் மனத்தில் பதியும் படியாக எடுத்துரைக்கச் செய்தனர். சொல்வன்மை தேர்ந்த அவர்கள் அறிவுமொழி, உதயணன் தன் பெருமிதத்தை உணரும்படி செய்தது. நண்பர்கள் வெற்றி பெற்றனர். உதயணன் துணிவு பெற்றான்.

தத்தையின் பொன்னகையிற் புன்னகை கண்டு பிதற்றிய உதயணன், இப்போது தன் ஆண்மையைப் பற்றி உணரத் தொடங்கிவிட்டான். அது நண்பர்க்கு முழு வெற்றியாக வாய்த்தது. வீரவிளைவுகள் இனி அவனிடமிருந்து நிகழுமென நண்பர்கள் எதிர்பார்த்தனர். இங்கே இவ்வாறு முதலில் உதயணன் துயர் பொறாமல் உயிர் நீக்கத் துணிந்ததும், பிறகு நண்பர்களாலும் அமைச்சராலும் தேறுதல் பெற்று நலத்துடன் இருப்பதும் மறைவிடத்தில் வசிக்கும் யூகி, தத்தை முதலியோருக்குத் தக்கோர் மூலம் அவ்வப்போது மறைமுகமாக அறிவிக்கப்பட்டன. உடனே யூகி, தத்தை முதலியோரை அழைத்துக்கொண்டு தான் வேறிடத்திற்குச் செல்லக் கருதினான். வாசவதத்தைக்கும் சாங்கியத் தாய்க்கும் நிலைமையை விளக்கி அங்கிருந்து தாங்கள் வேறிடம் செல்ல வேண்டியிருப்பதன் அவசியத்தையும் கூறினான். அவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டனர். உண்ட அளவில் தோற்றமும் மேனி நிறமும் வேற்றுருவமும் அளிக்கும் மாய மருந்து ஒன்றை யூகி, தானும் உண்டு அவர்களுக்கும் உண்ணக் கொடுத்தான்.

மூவரும் நிறம் மாறிய வேற்றுருவத்தோடு சுரங்க வழியாக அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் தாங்கள் அடைந்த வேற்றுருவத்தை, அந்தணர்களுக்கு உரிய கோலங்களோடு மேலும் புனைந்து மாற்றிக் கொண்டனர். சுரங்கம் அடர்ந்து வளர்ந்திருந்த சந்தன மரக்கூட்டங்கள் செறிந்த ஓர் மலைச் சாரலில் அவர்களைக் கொணர்ந்து விட்டது. ஆருயிர்க் காதலனுடைய மனநிலையைச் சீர்திருத்துவது ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட வாசவதத்தை, அதற்காக எவ்விதமான இன்னல்களையும் ஏற்றுப் பொறுத்துக் கொண்டு யூகியைப் பின்பற்றினாள். அவளுடன் துணையாகச் சாங்கியத் தாயும் இருந்தாள். நடந்து சென்று விரைவில் வழிமேல் சிவனாலயத்தோடு கூடிய பெரியமலை ஒன்றை அடைந்த அவர்கள் அங்கே ஒரு தவப் பள்ளியையும் கண்டு மகிழ்ந்தனர். பூத்த குவளை மலர்களோடு கூடிய புதுநீர்ப் பொய்கைகளும், ஏரிமலர்ந்தாற் போன்ற பூக்கள் விரித்த வேங்கை மரங்களுமாக அழகிய சூழ்நிலையோடு அமைந்திருந்தது அந்தத் தவப்பள்ளி. ஆசிரமத்தின் முன்புறத்தில் மா, பலா, வாழை, நாவல் மாதுளை முதலிய மரங்கள் செழித்து வளர்ந்து பசுமை நல்கின. மணல் முற்றத்தில் முனிவர்களும் தபாத மகளிர்களுமாகத் தோற்றமளித்த அந்தத் தவப் பள்ளியை நாடிச் சென்றனர் அவர்கள்.

அங்கே தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்களில் ஒருவர் உருமண்ணுவாவின் தந்தை என்பது யூகிக்குத் தெரியும். ஆயினும் மூவரும் முனிவரிடம் தாம் யாரென்பதை விவரிக்காமல் சில நாள் அங்கே தங்கியிருக்க வேண்டிய காரியத்தை மட்டுமே கூறினர். முனிவர் மறுக்காமல் ஒப்புக் கொண்டு இடமளித்தார். யூகி, தத்தை, சாங்கியத் தாய் ஆகியவர்கள் மாய மருந்தினால் பெற்ற மாற்றுருவோடு அங்கே மறைவாக வாழ்ந்து வந்தனர். அகலாமலும் அணுகாமலும் ஒட்டியும் ஒட்டாமலும் தவப் பள்ளியில் அவர்கள் பழகி வந்தனர். எப்போதாவது தங்களைப் பற்றித் துருவித் துருவித் தெரிந்து கொண்டு விட வேண்டும் என்ற ஆவலோடு கேட்டவர்களுக்குச் சாங்கியத் தாய் ஒரு சிறிய பொய்க் கதையைக் கூறி வந்தாள்: "எங்களுடைய தவப் பள்ளியும் சொந்த ஊரும் இங்கிருந்து வெகு தொலைவிலிருக்கின்றன. நாங்கள் மூவரும் உடன் பிறந்தோர். அவன் (யூகி) என் தம்பி. இவள் (தத்தை) என் தங்கை. எங்கள் தாய் தன் முதுமையை நினைத்து தவவொழுக்கம் மேற்கொண்டு எங்களைப் பிரிந்து சென்றனள். இவளை (தத்தையை) மணந்து கொண்ட கணவன் குமரியில் நீராடச் சென்றிருக்கிறான்" என்று சாங்கியத் தாய் மற்றவர் சற்றும் ஐயுறாதவாறு இந்தக் கதையைக் கூறி வந்தாள். யூகி அந்தண ஆடவன் உருவிலும், தத்தை இளம் அந்தண நங்கை உருவிலும் இருந்ததால் அவள் சொல்லை எல்லாரும் ஏற்று நம்பவும் முடிந்தது.

இதற்குள் யூகி, உருமண்ணுவா முதலியோருக்குத் தங்கள் புதிய இடத்தை அறிவித்தான். இங்கே அரண்மனையில் உதயணனை நண்பர்கள் தேற்றிவிட்டனர். ஆனால் வாசவதத்தையின் தோழியாகிய காஞ்சனமாலை உதயணனைக் காட்டிலும் அதிகத் துயரில் மீளாமல் ஆழ்ந்துவிட்டாள். உதயணனைப் போலத் தத்தை உண்மையாக இறந்துவிட்டாள் என்றே அவளும் நம்பி ஏங்கி அழுது கொண்டிருந்தாள். உதயணன் ஆறுதல் அடைந்து விட்டான். இவளை யாராலும் ஆற்ற முடியவில்லை. நெருங்கிப் பழகி நெஞ்சுவிட்டு உறவாடிய பெண் மனம் அல்லவா? அதன் துயர் விரைவில் எப்படி ஆறிவிடும்? ஒரு நாள் அவள் அலறலைச் சகிக்க முடியாமல், உருமண்ணுவா உண்மையைக் குறிப்பாக அவளுக்கு உரைத்து, யூகி இருக்கும் இடத்திற்கே அழைத்து வந்து அங்கே உயிருடனிருக்கும் தத்தையைக் காட்டிவிட்டான். அப்போதுதான் தோழி காஞ்சன மாலையின் துயரம் தணிந்தது. தத்தைக்கு உதவியாக அவளிடமிருக்குமாறு கூறிக் காஞ்சனையை அங்கேயே விட்டுவிட்டு யூகியிடம் விடைப் பெற்ற பின் உருமண்ணுவா மீண்டும் தலைநகர் திரும்பினான். காஞ்சனை, தத்தை முதலியவர்களோடு தானும் மாறுவேடத்தில் வசிக்கலானான்.

உருமண்ணுவாவை யூகி அனுப்பிவிட்டு, அங்கிருந்து தாங்களும் சில நாள்களில் புதிதாக வேறோர் இடம் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தான். அங்கிருந்து மிக அண்மையில், உருமண்ணுவாவின் தந்தைக்கு நெருங்கிய தோழனாகிய உக்கிர குலவேந்தன் விசயவரனால் ஆளப்படும் சண்பை என்னும் வளம்மிக்க நகரம் இருப்பது அப்போது அவன் நினைவிற்கு வந்தது. கங்கை நதி பாயும் சண்பை நகரம் எங்குமே தனக்கு நிகரில்லாதது. அந் நகரத்து மதில் போல அமைப்பும் தலையழகும் பொருந்திய அகழியோடு கூடிய மதிலரண் பிற இடங்களில் எங்குமே காண்பது அரிது. மதில் வாயில்களைத் தோற்றுவாயாகக் கொண்ட அந் நகர வீதிகள் வனப்பு மிக்கன. அந் நகரில் யூகிக்கு நெருங்கிய நண்பனாகிய மித்திரகாமன் என்னும் வணிகன் இருந்தான். அந்த நகரில் எவருக்கும் தத்தையையும், சாங்கியத் தாயையும் தெரிந்திருக்கக் காரணமில்லை. அநேகமாக மித்திரகாமனைத் தவிர ஏனையோருக்கு யூகியைக் கூடத் தெரிந்திருக்காது. எனவே அங்கே சென்று, மறைந்து மறைந்து ஒடுங்கும் இடரின்றிச் சுய உருவிலேயே சிறிது காலம் வசிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தான் யூகி. மித்தரகாமனோ மிகப்பெரிய செல்வன். முட்டில்லாத வளமான வாழ்க்கை அவனுடைய வாழ்க்கை.

சண்பையின் புறநகரில் அவன் வீடு மிகப்பெரியது. பார்க்க எடுப்பும் கவினும் நிறைந்த தோற்றமுடையது. தத்தை, சாங்கியத் தாய் இவர்களோடு சண்பை நகர் சென்றான் யூகி. மித்திரகாமன் அவர்களைப் போற்றி வரவேற்றான். அவன் மனையை அடைந்து அங்கே நலமாகத் தங்கியிருந்தனர் யூகி முதலியவர்கள். எனினும், உதயணனைப் பிரிந்திருப்பது தத்தைக்கு துயரளித்தது. காஞ்சனையும் சாங்கியத் தாயும் தத்தையின் சோர்வு நீக்கி நல்ல மொழிகளை ஆறுதலாகக் கூறிக் கொண்டிருந்தனர். யூகி அமைதியாக மேலே வகுக்க வேண்டிய திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தான். சாங்கியத் தாய் புதுப் பொய்க் கதைகளைக் கற்பனை செய்து கூறவேண்டிய அவசியம் இங்கே ஏற்படவில்லை.

30. மகத யாத்திரை

யூகி முதலிய மூவரும் சண்பை நகரில் இவ்வாறு ஒடுங்கி இருக்கும் போது இப்பால் இலாவாண நகரில் அறிஞர்களும் நண்பர்களும் கூறிய ஆறுதலுரையாலும் அறிவுரையாலும் உதயணன் தனது மனத் துன்பத்தை மறந்திருந்தான். அந்த மறதி தான் அவனுக்குப் பகைவர்களைப் பற்றிய நினைவு தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது. தன் பகைவர்களுள் வலிய பகைவனாகிய பாஞ்சால நாட்டு ஆருணியை எண்ணிக் கனன்றது அவன் உள்ளம். 'எரிந்து கொண்டிருந்த விளக்கு அணையும் நேரம் நோக்கிப் பரவக் காத்துக் கொண்டிருக்கும் இருள் போல, ஏயர் குலத்தின் பலவீனம் நோக்கிப் புகுந்த பகைவனே அந்த ஆருணி. குலப்பகைவனாக விளங்கி வரும் இவன் கோசாம்பி நகரத்தைப் பற்றிக் கொள்ளும் நீங்காத ஆசையுடையவன். என்னுடைய வன்மை மேன்மை நிலைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் சூழ்ச்சிப் புரியும் கொடிய இயல்பினன். பிரச்சோதன மன்னனின் பெரிய படைகளையும் சிறிது பொது நிலை கலங்கச் செய்தவன். இப்போது தத்தையை உடன் கொணர்ந்த செய்தியையும் பிறவற்றையும் கேள்விப்பட்டு அறிந்திருப்பான். யூகி உயிரோடு இருந்தாலும் ஆருணிக்கு என் மேல் அச்சமுண்டு. யூகி என்ற பெயரில் அவனுக்கு நடுக்கமும் தளர்ச்சியும் தோன்றும். இப்போது யூகியும் இல்லை என்ற என் தற்போதைய பலவீன நிலையை ஆருணி அறிந்தால் அவனுக்குக் கொண்டாட்டமாகப் போகும்' என்று இங்ஙனம் பலவாறு எண்ணி மனங்குமைந்து கொண்டிருந்த உதயணன் உடற் சோர்வும் உள்ளச் சோர்வும் தீர அமைதியை நாடி மலர்ச்சோலைப் பக்கமாக உலாவுவதற்குச் செல்லலானான். அளவு கடந்த துன்பப் பொறையினால் மனமானது ஆழ்த்தப்படும் போது, அதிலிருந்து மீள்வதற்காக அமைதியை நாடுவது அதனியற்கை.

உதயணனின் இத்தகைய மன நிலையை அமைச்சர்களும் வரவேற்று எதிர்பார்த்தே இருந்தனர். தகுந்த ஒற்றர்கள் மூலம் பாஞ்சால அரசனான ஆருணியின் அப்போதைய உட்கருத்தையும் உணர்ந்திருந்தனர். 'யூகியோ இறந்து போனான். ஏற்கனவே உதயணன் பலவிதத் துயரங்களாலும் நலிவடைந்துள்ளான். இனி எனக்கு எந்தவிதமான பகையும் இருக்க முடியாது' என்று கருதி ஏற்பாடு செய்திருந்த கோட்டைக் காவல் முறைகளை நீக்கிவிட்டு மகிழ்ச்சியோடு இருந்தான் ஆருணியரசன். இவற்றையும் பிற சூழ்ச்சி நிலைகளையும் நன்கு அறிந்திருந்த உதயணனுடைய தோழர்களும் அமைச்சர்களும் ஏற்ற செவ்வி நோக்கி உதயணனுக்கு இவற்றை விவரித்துக் கூறக் காத்திருந்தனர். சமயமும் வாய்த்தது. "ஆருணி தன்னை எதிர்ப்பாரில்லை என்ற செருக்குடன் இருக்கிறான். இந்நிலையில் நாமே தனியாக அவனை வெற்றி கொள்வது என்பதும் இயலாத செயலே. எனவே, மகத நாட்டரசன் தொடர்பை இப்போது நாம் பெற்றுக் கொள்வது அவசியம். மகத வேந்தன் படைப்பலம் மிக்கவன். நாடுபெற வழியின்றி மறைந்து திரியும் நின் தம்பியர்களாகிய பிங்கல கடகர் துணையையும் நாம் இதற்கு எதிர்பார்க்கலாம். ஒடுங்கி நின்று, பின் வலிமை தோன்ற முன் வந்து போரிடும் ஆட்டுக்கிடாய் போல நாம் ஆருணியைத் தாக்க வேண்டும். புதிதாகப் பிடித்து வந்த யானையைப் பணி செய்யப் பழக்கும் பாகர் போல இந்தச் சூழ்ச்சித் திட்டத்தில் துணிவும், அச்சமும் நமக்கு ஒரு வரையறைக்கு உட்பட்டு இருக்க வேண்டும். சூழத் துயரமே கண்டு நிற்கும் நாம், மேலும் இவ்வாறே வீணாக இருப்பது தகாது. அன்றியும் இந்நிலை, பகைவர் பெருமிதத்தை மேலும் மேலும் வளர்த்து வருவதற்கு ஏதுவாகும்" என்று நண்பரும் அமைச்சரும் உதயணனுக்குக் கூறினர். படையெடுக்கவும் தூண்டினர்.

ஆனால், சோர்ந்த நிலையிலிருந்த உதயணன் அப்போது கூறிய விடை அவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அந்த விடையால் உதயணன் மனத்தில் விரக்தியுணர்வு எவ்வளவு ஆழமாகப் பதிந்து விட்டிருக்கிறது என்பதையே அவர்கள் அறிய முடிந்தது. வெள்ளம் ஓடிய பின் சூனிய அமைதியுடன் காணும் மேட்டிலிருந்து பள்ளம் நோக்கிப் பாயும் காட்டாறு போல இருந்தது உதயணனுடைய அப்போதைய உள்ளத்தின் நிலை.

"வெள்ளத்தில் ஆழ்ந்து அழிய இருக்கும் போது உதவும் அரும்புனை போல எனக்குத் துன்பம் வந்தபோதெல்லாம் உதவி, அதனால் தான் வருத்தமுற நேரிட்டாலும் வருந்தாத உயிர் நண்பன் யூகி இப்போது இல்லை. தாமரை மலரின் உள்ளிதழ் போலச் சிறந்தவளும் அவ்விதழ் போலச் செவ்வரி, கருவரி பரந்த நயனங்களை யுடையவளுமாகிய காதல் மனைவி வாசவதத்தையும் இப்போது இல்லை. முன் எப்பொழுதோ ஒரு முறை மனமிரங்கிச் செய்த உதவியை நினைந்து என் மேல் நன்றி மறவாமல் எனக்கு வேண்டும் போதெல்லாம் உதவிய சாங்கியத் தாயும் தத்தையோடு தீப்பட்டு இறந்து போனாள். இம்மூவரையும் இழந்த நான், அறம், பொருள், இன்பம் என்ற மூன்று உறுதிப் பொருள்களையுமே இழந்தவன் போல ஆகின்றேன். இனி நான் அரசாட்சி பூண்டு வாழ்தலினும் இறந்து போதலே சிறந்தது" என்று இவ்வாறு விரக்தியுணர்ச்சியில் உதயணனுடைய மறுமொழிகள் ஆக்கமின்றியும் ஆர்வமின்றியும் வெளிப்பட்டன. ஆறுதல் மொழிகளால் அடக்க முயன்றும் அடங்காத உதயணனிடம் துன்பங்கண்ட நண்பர், பழைய வரலாறு ஒன்றைக் கூறி அதனாலும் அவனைத் தேற்ற முற்பட்டனர்.

"பல கலைகளிலும் முற்றித் துறை போகிய 'இலாமயன்' என்னும் முனிவர் காள வனத்தில் தமது ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். அந்தக் காள வனத்தில் தீப்பற்றிய போது தவ ஆற்றல் மிகுந்த அவருடைய ஆசிரமம் கூட எரிந்து அழிந்து போனது. ஆதலால் எத்தகையோர்க்கும் துன்பம் நேர்தல் இயற்கையே. அதற்காக ஊக்கமிழந்து தளர்ச்சி அடைதல் கூடாது" என்று கூறி முடித்தனர் நண்பர். அந்தப் பழங்கதையினாலாவது உதயணன் மனம் ஆறாதா என்பதே அவர்கள் ஆசை! உதயணன் மனத்தில் பற்றியிருந்த விரக்தியின் பிடிப்பு இதனால் சற்றே தளர்ந்து வாழ்க்கையில் ஆசை தோன்றும் என்பது அவர்கள் நம்பிக்கை ஆகும். எந்த ஆசையை அவனிடமிருந்து அழித்தால் வீரம் பிறக்கும் என்று கருதினார்களோ, அதே ஆசையோடு வீரமும் பணிந்து போனதைப் பார்த்த போது மேலும் அவர்களுக்கு வருத்தமாக இருந்தது. நம்பிக்கையை மேலும் தூண்டுவதற்காக உதயணனின் பார்ப்பனத் தோழனாகிய இசைச்சன் அவனுக்குச் சில உறுதிமொழிகளைக் கூறலானான்.

"மந்திர வித்தைகளால் முடியாத விழுமிய செயல்கள் என எவையுமே இல்லை. சாதாரண மக்கள் இதனை நம்புவதில்லை என்றாலும் காரியத்தை முடிக்குந் திறன் இவைகளுக்கு உண்டு. நாமும் இந்த வழிகளில் முயன்று வெற்றி எய்தலாம். சாதனைக்குரிய முயற்சியில் ஈடுபட்டு, பின் அது நிறைவேறாது என்ற நிலை வந்தாலும் அதனைச் சால்புடையோர் பழிக்க மாட்டார்கள். வாசவதத்தை இறந்து போனாள். ஆனால் அவள் எப்படியும் வேறோர் உருவில் பிறந்துதான் இருக்க வேண்டும். அந்த உருவத்திலிருந்து மாற்றி வாசவதத்தை உருவிலேயே அவளைத் தோன்றச் செய்யும் ஆற்றல் படைத்த வித்தை ஒன்று உண்டு. அதில் கற்றுத் தேர்ந்த அந்தண முனிவர் ஒருவர் மகத நாட்டின் தலைநகராகிய இராசகிரிய நகரத்தில் வாழ்ந்து வருகிறார். அங்கே நாம் சென்று அந்த முனிவரைச் சந்தித்து அவரை வழிபாடு செய்த பின் விச்சையினால் யூகியையும் தத்தையையும் அவர்களுடைய பழைய தோற்றத்துடனேயே அடையலாம். அதனுடன் அவ்வரிய மந்திர வித்தையையும் கற்றுக் கொண்டு விடலாம்" என்று இசைச்சன் கூறிய மொழிகளை உதயணன் முற்றிலும் விருப்பத்தோடு கேட்டான். கேட்டு முடித்தவுடன் "அத்தகைய வித்தையும் உலகில் உண்டோ? மெய்யாகவா?" என்று வியப்புத் தாங்காமல் இசைச்சனை நோக்கிக் கேட்டான் உதயணன். உடனே இசைச்சன் அவ்வித்தைக்குரிய முதனூலில் இருந்து இரண்டோர் செய்திகளை உதயணனுக்குக் கூறி அது மெய்யே என்று உறுதியாகச் சொன்னான். அதைச் செவியுற்ற அளவில், "அப்படியானால் இப்பொழுதே அங்கே புறப்படுவோம்" என்று உதயணன் கூறவும் நண்பர் மகிழ்ந்தனர். உதயணன் மகத யாத்திரை போவதற்குரிய ஏற்பாடு உறுதியாயிற்று. இசைச்சன் கூற்றில் உதயணன் கொண்ட நம்பிக்கையே இதற்குக் காரணம். வாசவதத்தையையும் யூகியையும் உதயணன் உயிரோடு காண விரும்பிய தவிப்பும் ஒரு காரணம்.

ஏற்பாட்டின்படி உதயணனோடு மகதநாட்டுக்குப் புறப்படுவதற்கு ஆற்றலிற் சிறந்த வீரர் நூற்றுவர் முன் வந்தனர். அவர்கள் வேற்றவர் போல அந்தணராக மாறுவேடம் பூண்டு புறப்பட வேண்டுமென்பது திட்டம். நூறு வீரரும் ஏற்ற தோற்றங்களுடன் தனித்தனியே முன்னும் பின்னுமாகத் தொடர உதயணன், நண்பர் ஆகியோர் அந்தணர்களுக்குரிய தூய உருக்கொண்டு மகதநாடு சென்றனர். இடையில், புன்னாளகம் என்னும் நாட்டையும், காள வனத்தையும் கடந்து கருப்பாசயம் என்ற காட்டாற்றையும் தெப்பங்களைக் கொண்டு கடந்து மேற்போயினர். அதற்கு அப்பால் ஆறுகளும் சாலைகளும் இடையிடையே உள்ள ஒரு நீண்ட காட்டில் அவர்கள் நடந்து சென்றனர். இவ் வழியில் உதயணன் பல காட்சிகளைக் கண்டான். அவன் கண்ட ஒவ்வோர் காட்சியும் அவனுக்குத் தத்தையின் நினைவையும் யூகியின் நினைவையும் அதையொட்டிய துயரத்தையுமே உண்டாக்கின.

31. இராசகிரிய நகரம்

இன்பச் சூழ்நிலையாக இயற்கை காட்டும் எழிற் காட்சிகளைத் துன்பத்தில் ஆழ்ந்து போனவன் கண்டால் அவை அவனுக்குத் துன்பத்தையே மிகுதியாகக் கொடுக்கும். அந்த நிலையில் தான் உதயணன் அப்போது இருந்தான். காண நேர்ந்த காட்சிகள் எல்லாம் அவனைப் பித்தனாக்கி விட்டன. ஏதோ வாய்க்கு வந்ததையெல்லாம் அரற்றிக் கொண்டு வந்தான். ஆண் மான் காவல் செய்யக் குட்டிகளைத் தழுவிக் கொண்டு திரியும் பெண் மானைக் கண்டு தவித்து, தத்தையின் விழிகளை நினைவு கூறுவான். உடனே அப்பெண் மானை நோக்கித் "தத்தை சென்ற உலகை நீ அறிவாயோ? அறிந்தால் எனக்கும் கூறு; யானும் அங்கே செல்வேன்" என்பான்.

"அழகிய தோகை விரித்தாடும் ஆண்மயில்கள் பக்கத்தே இருக்க, நடைபழகிக் கற்கும் மயிற் பேடைகளே! இறந்து போன தத்தை எங்கே? அவள் எவ்வாறு மாறிப் பிறப்பு எய்தியிருக்கிறாள்? இதை நீங்கள் ஆராய்ந்து கூறினால் உங்களுக்குக் குற்றமும் உண்டோ?" என்று மயில்களை நோக்கிக் கேட்பான். வெண் சிறகுகளையும், சிவந்த சிறுகால்களையும், நுண்ணிய புள்ளிகளையும் உடைய அழகிய ஆண்புறாக்களைக் கண்டு, "தத்தை இருக்கும் இடத்தைச் சொன்னால் நான் எனது ஆசை தீர அங்கே செல்வேன். சொல்லவில்லையானால் உங்கள் பேடையுடன் சேரப்பெறாத துன்பத்தை நீங்களும் அடைவீர்களாக!" என்று கூறுவான். "தத்தை இருக்கும் இடத்தை அறிந்தால், மலர்கள் பொருந்திய அவள் கூந்தலில் உங்களுக்குத் தேன் விருந்து கிடைக்கும். எனக்கும் இன்ப விருந்து கிடைக்கும். நீங்கள் அதைச் செய்தால் அது எனக்குக் கைமாறு நிகராகாத பேருதவியாக அமையும்!" என்று வண்டுகளைப் பார்த்து இரங்கிக் கூறுவான். "முகிற் கணங்கள் தழுவி விளையாடும் பொதிகை மலையில் பிறந்து நறுமண மலர்களை மலரச் செய்து உலா தொடங்கும் தென்றலே! நீ என் மேனியைத் தீண்டிச் சென்ற இதே உணர்ச்சியுடன் தத்தை உள்ள இடத்தை நாடிச் சென்று அவள் பொன்மேனியையும் தீண்டுவாயாயின் அது நின் பெருந்தகைமையைக் காட்டும்" என்று வீசும் தென்றற்காற்றை விளித்துப் பேசுவான்.

இவ்வாறே மகதநாடு செல்லும் வழியில் அங்கங்கே கண்ட தோற்றங்களால் துயர் நிறைந்த சித்தப் பிரமையடைந்து மேற்கண்டவாறு பேசாதவற்றோடு எல்லாம் பேசிக் கொண்டு பிதற்றியவாறே சென்றான் உதயணன். மகத நாட்டு எல்லையை அவர்கள் நெருங்கிக் கொண்டிருந்தனர். உதயணனை இனியும் அவ்வாறு பிதற்ற விடுவது கொண்டிருக்கும் மாறுவேடத்திற்கும் காண்போர்க்கும் பொருந்தாது என்பதை உணர்ந்த நண்பர், அவனை ஆற்றித் தக்க நிலைக்குக் கொணர்ந்தனர். உதயணனும் தன் நிலையுணர்ந்து, துயரங்களை அடக்கிக் கொள்ள முயன்றான். சூழ்ந்திருந்த இடம் அவனை அவ்வாறு செய்யத் தூண்டியது.

மகத நாட்டின் எல்லைக்குள் புகுந்த பின் உதயணன் முதலியோர் எல்லோரும் கூட்டமாக ஒரே வழியிற் செல்லாது தனித்தனியே பிரிந்து சென்றனர். முடுக்கு வழிகளில் மறைந்து செல்வது ஐயப்படுவதற்குரிய செயலாகும் என்றுணர்ந்து அவர்கள் அகன்ற பெருஞ்சாலைகளின் வழியாகவே நடந்து போயினர். அங்ஙனம் போகும் போது இடையிடையே உதயணனைத் தேற்றுவதற்காக எவ்வளவோ கற்பனைகளைக் கூறி நாடகமாக நடித்து அவனைத் தளர்வடையாமல் அழைத்துச் சென்றனர் நண்பர்கள். மகத நாடு இயற்கை வளஞ் சிறந்தது. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைக்குரிய நிலங்களும் அங்குண்டு. வீட்டுலகத்தைப் போன்ற பழமையும் சிறப்பும் பொருந்திய மகதநாடு, ஒழுக்கத்தால் மேம்பட்ட தவத்தோர் பலரையுடையது, என்றும் குன்றாத புகழும் பெருமையும் படைத்தது, உலகிற்கு ஒரு திலகம் போன்றது என அதனைப் புகழ்ந்து கூறுவது வழக்கம். அந்நாட்டில் செல்வக் குடிகள் மிகுந்திருந்தன. வறுமையாளரைத் தேடினாலும் அங்கே காணமுடியாது. இத்தகைய மகதநாட்டிற்குத் தலைநகரமாக விளங்கியது இராசகிரிய நகரம். ஆறும் குளமும் பொய்கையும் அருமையான பூஞ்சோலைகளுமாகக் காணப் பசுமை கொழித்து விளங்கியது இராசகிரிய நகரம். பல விண்மீன்களுக்கு நடுவே திங்களைப் போல மகத நாட்டிலுள்ள மற்ற ஊர்களுக்கெல்லாம் நடுமையாக நின்று முதன்மை வகித்தது அந் நகரம்.

காவல்முறை வழக்கப்படி ஒரு நாட்டின் தலைநகருக்குத் தேவையான எல்லா இலட்சணங்களும் அதற்கு இருந்தன. தெருக்கள், வீதிகள், ஆகியவற்றின் அமைப்பு பல பேரிதழ்களையும் சிற்றிதழ்களையும் கொண்ட ஒரு மலர் போலக் காட்சி அளித்தது. கோட்டை மதில், படைச்சேரி, கணிகையர் தெரு, வேளாளர் தெரு, வாணிகர் தெரு, அந்தணர் தெரு, அமைச்சர் தெரு, என இவை முறையே வட்ட வட்டமாகச் சுற்றியிருக்க அரசர் அரண்மனை இவற்றிற்கு நடுமையாக அமைந்திருந்தது. இதனால் இத்தகைய அமைப்பு இந்திரனின் அமரர்பதிக்கும் கிடையாது என்று எட்டுதிசையும் தன்னைப் போற்றுமாறு பிராபல்யம் அடைந்திருந்தது அந்த நகரம். மகத நாட்டின் கோநகரமாகிய அதற்குள் புகுந்த போது உதயணனும் நண்பரும் வியந்தனர். ஆனால் உதயணன் மனத்தில் ஏற்பட்ட வியப்பு மீண்டும் மீண்டும் துயர நினைவுகளையே அடையச் செய்தது. வாசவதத்தையின் இதயத்தோடு கலந்து பழகிய அவன் காதல் உள்ளம் அவ்வளவு எளிதாக அவளை மற்ற நினைவுகளில் மறந்து விட முடியவில்லை. உஞ்சை நகரில் புனலொடு துறையிலிருந்து தத்தையோடு தன் நாடு மீண்ட அன்று, அவள் யானை மேல் தன் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்த இதே நிலையில் அரிட்ட நகரத்தைக் கண்டு வியந்த வியப்பும் அந்த அவசர மயமான இன்ப நினைவும், அவன் மனத்தில் தோன்றிவிட்டன போலும்! இடைவிடாமல் பற்றி வாட்டும் அந்தப் பழைய எண்ணங்களில் துயரமிருந்தாலும் மற்றோர் புறம் துயரத்தோடு கலந்த ஒரு வகையான இன்பமும் தோன்றி மறைந்து கொண்டு தானிருந்தது. மற்றவர்கள் இராசகிரிய நகரின் அழகான காட்சிகளில் இலயித்து வியந்து கொண்டிருந்த போது உதயணன் உள்ளம் மட்டும் இப்படி ஓர் இன்னல் மண்டிய நிலையில் அவனைக் கடந்த காலத்திற்கு இழுத்துச் சென்றது. மீண்டும் மீண்டும் வாசவதத்தையையே நினைக்கச் செய்தது.

திட்டமிட்டுக் கருதியவாறு மகத நாட்டிற்கு வந்து இராசகிரிய நகரத்தையும் அடைந்தாயிற்று. நண்பர் இதுவரை உதயணனைத் தங்கள் நாடகத்திற்கு ஏற்றவாறு நடிக்கச் செய்து ஆறுதலளித்து விட்டனர். மகத நாட்டிற்கு வந்து அதன் தலைநகராகிய இராசகிரிய நகரத்தை அடைந்துவிட்டாலும், அங்கே யாரும் ஐயம் கொள்ளாத வகையில் தாம் தங்குவதற்கு ஏற்ற இடம் தேடும் கவலை இப்போது நண்பர்களுக்கு ஏற்பட்டது. பல்வேறு வகை நாட்டினரும், குடியினரும், தொழிலினரும் தனித்தனியே வசிக்கும் அநேகக் குடியிருப்புகள் நிறைந்தது இராசகிரிய நகரம்.

படைவீரர்களும் யவன நாட்டு வீரக்குடி மக்களும் குடியேறி வசிக்கும் தனித்தனிச் சேரிகளே நூற்றுக்கணக்கில் அங்கே இருந்தன. சித்திர சாலைகளும் கட்டடக் கலைஞர் வாழும் இடமும் அறவுரை மன்றங்களும், புதிதாகப் பிடித்து வந்த யானைகளைப் பயிற்றும் பயிற்சி வெளியும், வருவோர்க்கு வரையாது சோறிட்டு மகிழும் அட்டிற்சாலைகளும், இன்னும் எண்ணற்ற பல பொது இடங்களும் அந்நகரில் பார்க்க உண்டு. தேவகோட்டங்களும், கடவுட்பள்ளிகளும் மிகுந்து விளங்கின. பூங்காக்கள் சூழ நடுநடுவே அலங்கார மேடைகளும், சிறுசிறு பூம்பொய்கைகளும் சுற்றி அழகு செய்யத் தோன்றும் காமன் கோவில்தான் அந்த நகரிலேயே அதிக எழில் அமைந்தது. இந்தக் காமன் கோவில் புறநகரில் இடம் பெற்றிருந்தது. இதன் வடபுறம் பூஞ்சோலையை ஒட்டிப் படியும் துறைகளுமாகக் கவின்கொண்டு காணும் கட்டுக் குளம் ஒன்றுண்டு. அதற்கு அப்பால் பசும் போர்வை போர்த்த நிலமகள் மேனிபோலப் பரந்த வயல்வெளி காணப்படும். இக் குளத்தின் கரையில் முனிவர்களும் அந்தணர்களும் தங்கி வாழும் தாபதப் பள்ளி ஒன்றும் அமைந்திருந்தது.

காமதேவன் கோவிலும் தாபதப் பள்ளியும் ஒன்றுக்கொன்று மிகச் சமீபத்திலேயே இருந்தன. இரண்டையும் இணைக்கும் சோலைக்கு நடுவே போய் வருவதற்கு ஏற்ற விரிந்த வழியும் உண்டு. அங்கங்கே புன்னை, கமுகு, தென்னை முதலிய வளர்ந்த மரவகைகளும், நிலத்தில் தங்கியுள்ள நீரின்மேல் நெருப்பே மலராக விரிந்தது போலத் தாமரைத் தடாகங்களும், வயல் வெளியில் மேலே வெண்பட்டுக் கொடிகள் போலப் பறந்து செல்லும் நாரைக் கூட்டங்களுமாக, இவ்விரண்டும் அமைந்திருந்த சூழ்நிலை மனத்தைக் கவரக் கூடியதாக இருந்தது. எனவே உதயணனும் நண்பர்களும், ஊருக்கு ஒதுங்கிப் புறநகரில் ஒரு பகுதியாக அமைந்திருந்த இந்தத் தாபதப் பள்ளியைத் தாம் வசிப்பதற்கு ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். தங்குமிடம் பற்றிய கவலை அவர்களுக்கு இப்போது நீங்கிற்று. அங்கும் கூட மற்றவர்களிடையே பழக்கம் மிகுதியாக இல்லாத ஒரு பகுதியையே தங்களுக்கு உரிய இடமாக அமைத்துக் கொண்டனர். இங்கே தங்கிய பின்பும் உதயணனின் துயர வேகம் தணிந்தபாடில்லை. இசைச்சன் கூறிய வார்த்தைகளை எண்ணி அவற்றில் அவன் நம்பிக்கை வைத்திருந்ததால், அந்த நம்பிக்கை அழிந்துவிடாமல் இருப்பதற்காகவாவது நண்பர்கள் சூழ்ச்சி செய்ய வேண்டியிருந்தது.

தவ ஒழுக்கத்தால் தெய்வீக ஒளிபெற்று அழகுடனே விளங்கும், 'காகதுண்டக முனிவர்' என்னும் முனிவரிடம் தங்கள் நிலையை எடுத்துரைத்துத் தாங்கள் செய்திருக்கும் தந்திரத்துக்கு ஏற்ப உதயணனிடம் நடந்து கொண்டு அவனுக்கு நம்பிக்கையூட்டுமாறு நண்பர் வேண்டிக் கொண்டனர். அதன்படியே அந்த முனிவர் உதயணன் பால் வந்து, "இரண்டு மாத காலம் விரத ஒழுக்கத்தை மேற்கொண்டு தத்தையைப் பற்றித் துயர நினைவுகள் மனத்தில் எழவும் செய்யாதபடி, ஐம்புலன்களையும் காத்து ஒழுகினால் இறந்து போன அவளை நீ பெறுவது எளிது" என்று வற்புறுத்திக் கூறிவிட்டுச் சென்றார். அவர் சென்ற பிறகு உருமண்ணுவா முதலிய நண்பர், "எத்தனையோ பல அருஞ்செயல்களை மந்திர வலிமையால் செய்து காட்டுபவர்களைக் கண்டும் கேட்டும் இருக்கிறோம். ஆனால் செத்தவர்களை உயிர்ப்பிக்கும் வித்தையை மந்திரத்தால் நிகழ்த்துவோரைக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. ஏதோ நம்முடைய புண்ணியவசத்தாலோ என்னவோ? இம்முனிவர் நமக்குக் கிடைத்தார். நிச்சயமாக இவர் தத்தையை உயிருடன் அளிப்பார் போலத் தெரிகிறது" என்றனர். இவ்வாறு கூறி ஆறுதலை வலுப்படுத்தினர். நண்பர்கள் திட்டம் உதயணனை ஏற்றபடி தேற்றி எவ்வாறேனும் மகத நாட்டின் கோ நகரில் இன்னும் பல நாள் தங்கச் செய்து அதன் மூலமாக மகத நாட்டுப் பேரரசனாகிய தருசகனுக்கு மிகவும் வேண்டிய உறவினனாக்கி விடுதல் வேண்டும் என்பதே. இதற்காகவே உதயணனை அவன் போக்கில் செல்லவிட்டுச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிப் புறநகரில் ஒதுக்கமான பகுதியாகிய அத் தவப்பள்ளியில் அவர்கள் வசித்து வரலாயினர்.

32. பதுமாபதி வருகை

உதயணன் முதலியோர் இவ்வாறு இராசகிரிய நகரத்தில் இருந்து வருகையில் இராசகிரிய நகரத்தார் காமதேவனுக்கு விழாக் கொண்டாடும் நன்னாள். காமன் கோவிலில் நடைபெறும் இந்த விழா ஏழு நாள்கள் தொடர்ந்து நிகழும். இராசகிரிய நகரத்து தெருக்கள் தோறும் புதுமணல் பரப்பிக் கைவன்மை மிக்க ஓவியர் தீட்டிய விழாக் கொடிகளை ஏற்றினர் நகர மாந்தர். விழாவுக்குரிய மகிழ்ச்சியும் களிப்பும் நகரின் எல்லாப் பகுதிகளிலும் தொடங்கியது. மகத அரசன் தருசகனுடைய தங்கை பதுமாபதி கன்னிப் பருவத்தின் கட்டழகு மிக்க தோற்றம் படைத்தவள். ஒரு பெரிய மகா காவியத்தின் தலைவிக்கு உரிதாகக் கவிகள் புனைந்து பேசும் எல்லாவித வனப்புகளும் பொருந்திய எழில் செல்வியாக விளங்குபவள். நாட்டியம், இசை முதலாகிய பல கலைகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றவள். சற்றிச் சுற்றி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிராமல் ஒரு படியாகச் செல்வமும் கல்வியும் மிக்க அவளுடைய அழகை உவமை கூறப் புகுந்தால் அதற்கு அதுவேதான் நிகர். நகரில் இந்தக் காமன் திருவிழா நடக்கும் ஏழு நாள்களும் காமதேவன் கோட்டத்திற்குச் சென்று வழிபாடுகள் செய்துவிட்டுத் திரும்புவது பதுமாபதியின் வழக்கம். இந்த ஆண்டிலும் காமன் விழாவில் பதுமாபதி காமன் தோட்டத்திற்கு வரப்போவதைத் தெரிவிப்பதற்காக முரசறையும் வள்ளுவ முதுமகன் அதை நகரத்தார்க்கு உரைத்துச் சென்றான்.

ஆயமகளிரும் தாயத்தாரும் புடைசூழ முதல் நாள் விழாவிற்குக் காமன் வழிபாடு செய்யப் புறப்பட்டாள் பதுமாபதி. தெய்வ வழிபாட்டிற்குச் செல்லுகின்றாள். ஆகையால் சிறப்பான அலங்காரங்கள் செய்யப்பெற்றுத் தேவகன்னிகைபோல அவள் தோன்றினாள். பாண்டில் வையம் என்னும் வகையைச் சேர்ந்த வண்டிகள் அவள் புறப்படும் வாகனங்களாக இருந்தன. பந்து, பாவை, கழங்கு, சிறுகலசங்கள், பூஞ்செப்புக்கள் முதலிய வழிபாட்டுப் பொருள்கள் ஏந்திக் குற்றேவல் மகளிர் உடன் செல்வதற்குக் காத்திருந்தனர். பதுமாபதி அவள் செல்வதற்கென அழகு செய்யப்பட்டு நின்ற வையத்தில் ஏறிக்கொண்டாள். சேவகர்கள் பலர் காவலாகத் தொடர வண்டி புறப்பட்டது. பதுமாபதிக்குத் துணையாக அவளிருந்த வண்டியில் செவிலித்தாயும் உடன் அமர்ந்து கொண்டாள். பிறர் தமக்கு ஏற்ற வாகனங்களில் உடன் வந்தனர். பணிப்பெண்கள் பலவகைப் பொருள்களைச் சுமந்து கொண்டு நடந்து வந்தனர். பதுமாபதி ஏறியிருக்கும் வண்டியின் பாகன் ஆண்மகனாயிருத்தலைக் கண்ட அவளுடைய தோழியாகிய அயிராபதி, அவனைக் கீழிறக்கிவிட்டுத் தானே கோலேந்திப் பாகன் வேலையைச் செய்வாளாயினள். "வண்டி செல்லும் வீதிகளில் அப்போது எதிரே குதிரை, யானை முதலிய விலங்குகளை எவரும் ஓட்டி வருதல் கூடாது" என வீரர் அரசனுடைய ஆணையைத் தெரிவித்தனர். விரைவில் காமன் தோட்டத்தை அடைந்தது பதுமாபதியின் வண்டி. கோவிலில் முன்னேற்பாடாகக் கூட்டம் விலக்கப்பட்டிருந்ததனால் அமைதி நிலவியது. பதுமாபதி இறங்கிக் கோவில் வாயிற் புகுந்து உள்ளே சென்றாள்.

அப்படிப் பதுமாபதி வண்டியிலிருந்து இறங்கும் போது ஓர் அற்புதம் நடந்தது. சித்திர வையத்தை மேற்பார்வை செய்யும் பணியாளன் கோவில் வந்துவிட்டத்தைக் கண்டு வண்டியை நிறுத்தச் செய்தான். காமன் கோட்டத்திற்குள் இருந்த தாபதப் பள்ளிக்குச் செல்லும் சோலை வழியிலுள்ள ஒரு புன்னை மரத்திற்குப் பக்கத்தில் வண்டி நின்றது. வாசவதத்தையின் நினைவால் மனங்கலங்கி உதயணன் அந்த மரத்தடியில் தன்னை மறந்து, சுற்றுப்புறத்தை மறந்து பித்தன் போல நின்று கொண்டிருந்தான். பதுமாபதி வண்டியிலிருந்து இறங்கும் வழி அவனுக்கு நேர் எதிரே இருந்தது. வெண்முகில் போன்று ஒரு மெல்லிய வெண்பட்டுத் திரைச் சீலை வண்டியின் இறங்கும் வழியை மறைத்து இடப்பட்டிருந்தது. பதுமை இறங்குவதற்கு இருந்தாள். உடனிருந்தவள் திரைச் சீலையை விலக்கிப் பதுமைக்கு வழிவிடுவதற்கு முன்பு தற்செயலாகக் காற்று கொஞ்சம் பலமாக அடித்தது. திரைச்சீலை தானாக விலகிற்று.

புன்னை மரத்தடியில் தன்னை மறந்து நின்ற உதயணனின் கையில், பக்கத்திலுள்ள மாதவிக் கொடி ஒன்றிலிருந்து கிள்ளிய தளிர்க்கொத்து ஒன்று இருந்தது. அப்போது காவலர்கள் அக்கம் பக்கத்திலிருந்தவர்களை விலகிச் செல்லுமாறு குரல் கொடுத்தனர். அக்குரல் உதயணன் காதிலும் விழுந்தது. 'நேற்றுவரை பிறர் இவ்வாறு விலகிச் செல்ல, நான் அரசமரியாதைகளுடன் போதல் வருதல் பெற்றேன். இன்றோ, மற்றவர் வரவிற்காக விலக்கப்படுகிறவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன். சக்கரம் கீழ் மேலாகச் சுற்றுவது போல் மனித வாழ்வும் இவ்வாறு தான் ஆக்கமும் கேடும் மாறிமாறி வருவது போலும்' என்று தன் மனத்தில் நினைத்துக் கொண்டே உதயணன் அங்கிருந்து விலகிச் செல்லப் புறப்பட்டான். இப்படி அவன் புறப்படுவதற்காகத் திரும்பிய அதே நேரத்தில்தான் அவன் பார்வைக்கு நேரே இருந்த வண்டியின் திரைச்சீலை விலகிற்று. உதயணன் பார்வை வண்டிக்குள் விழுந்தது. அதிலிருந்த பெண்ணைப் பார்த்ததும் வாசவதத்தையே உயிரோடு வண்டிக்குள் அமர்ந்திருப்பது போல் தோன்றியது உதயணனுக்கு. 'ஒருவேளை காகதுண்டகன் எனும் விசித்திர முனிவன் விரைவிலேயே தன் மந்திர வலிமையால் தத்தையை உயிர்ப்பித்து அனுப்பி விட்டானோ?' என்று எண்ணி, வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் உதயணன். அவனுடைய கால்கள் அவளை நோக்கி விரையத் துடித்தன.

தத்தையின் நினைவிலே ஆழ்ந்திருந்த அவனுக்குப் பதுமாபதியே இப்படித் தத்தையாக மாறி உருவிலும் நிறத்திலும் வேற்றுமையின்றித் தோன்றியது வியப்புக்குரியதன்று. இப்படி இமையாமல் மலர்ந்த வண்ணமே நோக்கும் உதயணனுடைய நெடுங்கண்களில், கண்டவரை கவரும் ஒரு விதமான அழகு இருந்தது. அந்த அழகு பதுமாபதியை மயக்கம் கொள்ளச் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவள் வண்டியிலிருந்து இறங்க வேண்டியதையும் மறந்து, பதிலுக்கு அவனை அப்படிக் கண்களால் பருகிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லையே! கரை கடந்து வந்து ஒன்றுபடும் இரண்டு மகா சமுத்திரங்களின் சங்கமம் போல் இருந்தது இவர்கள் காமன் கோட்டத்திலே சந்தித்த சந்திப்பு.

'என் நெஞ்சத்து நிறையை அளந்து பர்ப்பதற்காகக் காமன் என்ற தேவனே இவ்வாறு புன்னை மரத்தடியில் தோன்றி என்னைச் சோதிக்கின்றானோ! அதற்காகத்தான் இப்படி அந்தண இளைஞன் போல் மாறி உருக்கொண்டானோ?' என்று எண்ணி மனம் கட்டழிந்து மயங்கினாள் பதுமை. அவள் நெஞ்சில் புகுந்து நிலைத்தான் அவன். மெல்ல மெல்ல தன் சூழ்நிலையை உணர்ந்த பதுமை இந்த உலகிற்கு வந்தாள். "மேல் நடக்க வேண்டியவற்றைக் கவனியுங்கள்" என்று தன் கட்டளை விளங்கும்படியாக ஆலயத்தைச் சேர்ந்த பணி மகளிர்களை நீண்ட விழிகளால் ஒரு முறை நோக்கினாள் பதுமை. பின்பு வண்டியிலிருந்து இறங்கிக் கோவிலை வலஞ் செய்யப் புறப்பட்டாள். அவளிடம் இப்போது எவ்வளவோ மாறுபாடுகள் தெரிந்தன. நளினமான காதல் மயக்கம் அவளைக் கட்டுப்படுத்தியிருந்தது. அன்னங்கள் நாணமடையும்படியான பதுமை தோழியரோடு கோவிலை வலஞ்செய்யும் அழகை உதயணன் தொலைவில் நின்று கண் இமையாமல் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான். 'வனப்பு என்னும் தெய்வீக வடிவமோ இது!' என்று அவன் எண்ணினான்.

கோவிலை வலஞ் செய்து முடிந்தவுடன் பதுமை வழக்கப்படி அந்தணர்க்குரிய பலவகைத் தானங்களைச் செய்ய ஆரம்பித்தாள். முதிய அந்தணர் பலர் விருப்பமுடன் அழைக்கப்பட்டுத் தானங்கள் செய்யப் பெற்றனர். அன்று முதல்நாள் விழாவாகையால் தானங்களைச் சிறப்பாகச் செய்தாள் பதுமை. அப்போது ஆலயத்தைச் சேர்ந்த நடுத்தரப் பருவத்தினளான மங்கை ஒருத்தி, பதுமையின் பெருமைகளை இனிய பாடலாக இசையுடன் பாட ஆரம்பித்தாள். அவள் பாடிய புகழுரைப் பாடல்களில் பதுமாபதியின் அழகு மற்ற சிறப்பியல்புகள் ஆகியவற்றைப் பாராட்டியும், அவளுக்குக் கணவனாதற்குரியவன் வத்தவ நாட்டரசன் உதயணனைப் போன்ற தகுதி வாய்ந்தவனாக இருக்க வேண்டுமென்றும் கருத்துக்கள் அமைந்திருந்தன. உதயணன் காலத்தில் அவன் அழகுக்கு நிகரற்ற ஆதர்சபுருஷனாக விளங்கினமையால் கன்னி மகளிர் எவரை யார் வாழ்த்தினாலும் இப்படிக் கூறி வாழ்த்துவது வழக்கமாக இருந்தது. அங்கு நின்ற உதயணன் இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டான். அவ்வளவில் முதல் நாள் வழிபாடு நிறைவேறியது. பதுமாபதி முதலியோர் காமன் கோவிலிலிருந்து அரண்மனை திரும்பினர். பதுமை வண்டியிலேறிய போது தன்னுள்ளம் அங்கு உதயணனிடம் நிற்க, தான் மட்டும் புறப்பட்டுப் போனாள்.

'சூரியன் மறைவதற்குள் அரண்மனை சென்றுவிட வேண்டும்' என்று உடன் வந்தோர் அவசரப்படுத்தியதன் காரணமாகத்தான் பதுமாபதி அவ்வளவு விரைவில் புறப்பட நேர்ந்தது. 'இவள் தத்தையை போலிருக்கிறாளே? உறுதியாகத் தத்தைதான் என்று துணியவும் முடியவில்லையே' என்றெண்ணி மயக்கத்தோடு நின்று கொண்டிருந்த உதயணன், கடைசியாக வண்டியைப் பின்பற்றிப் போகும் 'அயிராபதி' என்னும் தோழியை வினாவக் கருதிச் சென்றான். "இந்நங்கை யார்? உனக்கு வேறு அவசரமான காரியங்கள் இருப்பினும் இதற்கு நீ என்பால் அன்பு கூர்ந்து அவசியம் மறுமொழிக் கூறிவிட்டுச் செல்" என்று அவளை வினவினான் உதயணன்.

33. நளின நினைவுகள்

தன்னை நோக்கியப் பதுமாபதி யார்? என்று இராசகிரிய நகரத்தில் இருந்துகொண்டே வினாவிய அந்தண இளைஞனுக்குரிய புனைகோலத்தை அயிராபதி ஒரு கணம் ஏற இறங்கப் பார்த்தாள். அவ்வாறு பார்த்தபின், 'யாரோ ஓர் அந்தண இளைஞன் தானம் பெறும் வேட்கையால் வந்திருக்கிறான் போலும்' என்று மனத்திற்குள் கருதியவாறே அவனுக்கு மறுமொழி கூறலானாள்: "இவள் இந் நகரத்து அரசன் தருசகனுடைய தங்கை. காசியரசன் புதல்வி. தருசகனின் சிற்றன்னையாகிய உதையையோடை என்பவள் இவளுடைய தாய். இவளுக்கு இதுகாறும் திருமணம் ஆகவில்லை. இப்போது காமன் திருவிழாவாகிய வசந்த விழாக் காலமாகையினால் ஏழு நாளும் இவள் இங்கே வழிபாடு செய்வதற்கு வந்து போவாள். விழா முடியும் இறுதி நாளன்று இவள் கையால் அந்தணர்களுக்கு மிகுந்த தானங்களைச் செய்வார்கள். நீயும் இருந்து உனக்கு வேண்டிய தானங்களைப் பெற்றுச் செல்வாயாக" என்று கூறி முடித்தாள் அயிராபதி. வண்டியில் வந்தவள் தத்தை அல்ல என்று உதயணன் மயக்கம் தெளிந்தான். உதயணனுக்கு மேற்கண்டவாறு மறுமொழி கூறிய அயிராபதி என்ன நினைத்துக் கொண்டாளோ, திரும்பிச் செல்லப் புறப்பட்டவள் உதயணனை நோக்கி, "உங்களைப் பார்த்தால் இந்த நாட்டைச் சேர்ந்தவர் போலத் தெரியவில்லையே! நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? எவ்வூரினர்? உங்கள் பெயர் யாது? யான் இவற்றை அறிந்து கொள்ளலாமோ?" என்று ஐயத்தோடு கேட்டாள்.

இந்தக் கேள்விகளால் உதயணன் விழித்துக் கொண்டான். ஒரு நொடியில் தன்னைச் சமாளித்துக் கொண்டு அவளுக்குக் கூற வேண்டிய விடையையும் கற்பனை செய்துவிட்டான். "யான் காந்தார நாட்டைச் சேர்ந்த இரத்தினபுரி என்னும் ஊரினன். அவ்வூரிலுள்ள சாண்டியன் என்னும் அந்தண வேதியர் புதல்வன். என் பெயர் மாணகன் என்பது. இந் நாட்டிலுள்ள எழில்வளங்காணும் ஆசையால் இங்கு வந்தேன்" என்று அவன் கூறிய விடையைக் கேட்டுத் திருப்தியடைந்த அயிராபதி, "நல்லது, நான் வருகிறேன்," என்று கூறி அவனிடம் விடைபெற்றுச் சென்றாள். மாலை நேரம் கழித்துச் சுற்றி இருள்படர ஆரம்பித்தது. கதிரவன் மேல் வானின் செம்மை வெளியில் மூழ்கிக் கொண்டிருந்தான். இங்கே உதயணன் மனம் பதுமையிடம் சென்று இருந்து கொண்டு அவளிடமிருந்து வர மறுத்தது. அவன் அவளைப் பற்றி எண்ணித் தாப நினைவுகளால் வாடித் தவித்தான்.

மரத்தின் உயர்ந்த கிளையில் தான் நிற்க ஒரு கொம்பை ஆதாரமாகப் பிடித்துக் கொண்டிருந்தவன், பிடி நழுவிக் கீழே விழும் நிலை ஏற்பட்டால், வேறு எந்தக் கொம்பு அவசரத்தில் கைக்கு அகப்படுகிறதோ அதை முன்னிலும் அழுத்தமான ஆசையோடு இறுகப் பற்றிக் கொள்வான். தத்தையும் யூகியும் மறைந்த துன்பங்களைப் பதுமையைக் கண்ட போதிலிருந்து உதயணன் மறந்துவிட்டான். 'அவள் தத்தை அல்லள், பதுமாபதி' என்று அயிராபதி கூற அறிந்து கொண்ட பின்னும் உதயணன் மனம் அவளை விட்டுப் பிரிய மறுத்தது. பதுமையின் தெய்வீக வனப்பே இதற்குக் காரணம் எனலாம். இந்தக் காதல் மயக்கத்துடனே அந்தி இருள் சூழத் தொடங்கிய நேரத்தில், காமன் கோட்டத்திலிருந்து தவப்பளிக்குப் புறப்பட்டான் அவன்.

'ஆடவர் பொருள் தேடிப் பிரியும்போது, அந்தப் பிரிவைப் பொறுத்துக் கொள்ளுதல் மனைப் பெண்டிர் கடமை. வினை காரணமாகவோ, பொருட்குறைபாடு காரணமாகவோ பிரிவதற்கு எல்லை இது' என்றெல்லாம் மகளிர்க்குக் கூறுவது போலச் சோலையில் அப்போது முல்லை அரும்புகள் முறுக்கவிழ்ந்தன. இரவலர்க்கும் அறிஞர்க்கும் பொருள் வழங்காது மறுத்துக் கண் கவிழ்ந்து கதவடைக்கும் மன்னர்போலப் பொய்கையில் தாமரைகள் கூம்பின. முகமலர்ந்து பிறர்க்கும் அளித்துத் தாமும் உண்டு மகிழ்வோர் போல மலர்ந்த மல்லிகைப் பூக்களில் வண்டுகள் விரும்பி நாட்டம் கொண்டன. இப்படிப்பட்ட அழகிய மாலைக் காட்சிகளையும் செந்நிறத்தில் விரித்த பட்டுப் பெருங்கம்பளம் போலத் தோன்றும் மேல் வானப் பரப்பையும் கண்டு மனம் இன்ப வேதனையில் ஆழ, உதயணன் தவப்பள்ளிக்குச் சென்றான். பதுமை தனக்குக் கழுநீர்மாலை கொடுப்பதுபோல ஒரு காட்சியும் அவனுடைய கனவு வெளியில் தோன்றியது. வெண்மேகக் கற்றைகளுக்கு நடுவே மதிமுகம் ஒளிரத் திகழும் வானவ மகளிர் போல வெண்பட்டுத் திரை காற்றில் விலக, அங்கே காட்சியளித்த பதுமையின் தோற்றத்தை மீண்டும் மானசீகமாகக் கண்முன் கொணர முயன்றான் உதயணன். வெங்கனலில் வீழ்ந்த வெண்ணெய்த் திரள் போலக் கலங்கிப் பேதுற்றது அவன் நெஞ்சம். பதுமாபதி அவன் நினைவுகளாகவும், நினைவுகளின் இலட்சியமாகவும் இருந்தாள்.

மாலை நேரம் அவனுடைய வாட்டத்தை வளர்த்தது. உதயணனின் நிலை இவ்வாறிருக்க அங்கே இராசகிரிய நகரத்து அரண்மனையில் பதுமாபதியின் நிலையும் காதல் வேதனை சூழவே இருந்தது. புன்னை மரத்தடியில் மாதவிக் கொடியினைக் கையில் ஏந்தி நின்ற உதயணன் தோற்றம் அவள் கண்களை விட்டு அகலவே இல்லை. அவன் தன்னைத் தழுவிக் கொள்வதாகவும் பேசி மகிழ்வதாகவும் அவளுடைய கனவு வெளியில் காட்சிகள் தோன்றித் தோன்றி இன்பமுறச் செய்து கொண்டிருந்தன. இவ்வாறாகக் காதல் நோக்கத்தோடு ஒருவரை ஒருவர் கண்ட பின்பு இருவரும் கலக்கமடைந்து இருந்தனர். அவர்கள் கலக்கம், காதலோடு கூடிய கலக்கம்! கண்ட காட்சியால் தோன்றிய இந்தக் கலக்கம் தீர்வதென்பது, திருப்திக்குப் பின்பு தானென்று இருவரும் நம்பினர்.

அன்று இரவு முழுவதும் இதே துயருடன் கழிந்தது. உலகிற்கு எல்லாம் குளிர் நிலவு பொழிந்து காக்கும் சந்திரன், அன்று இவர்கள் இருவருக்கும் உறக்கம் இல்லாமற் செய்த பாவத்தைப் பெற்றவனாக மறைந்தான். பொழுது விடியத் தொடங்கியது. அன்று காலை விடிந்த போது உலகிற்கெல்லாம் விடிந்தது போல இன்பமாக உதயணனுக்கும் பதுமாபதிக்கும் விடியவில்லை. நெருப்பினால் புண்பட்ட இடத்திற் சந்தனக் குழம்பை ஊற்றியது போல் இரவுபட்ட கலக்கந் தீர ஒருவரை ஒருவர் காணலாம் என்ற ஆசையோடு காலை விடிந்தது.

காதல் மனோபாவம் என்பது மட்டுமே உலகளாவிய தனிப் பெருங்காயம் போன்றது. அதில் ஊடுருவித் தோன்றும் பல்வேறு விதமான இன்ப துன்ப உணர்ச்சிகளில் ஒரு வகையான சௌந்தரியமும் கவர்ச்சியும் உண்டு. உதயணன் பதுமாபதி சந்திப்பிலும், அதன் பின்னர் வரும் கலக்கத்திலும் மேற்கூறிய காவிய அழகு தோன்றுகிறது.

தன் உள்ளங் கவர்ந்த கள்வனை அன்று காமன் கோவிலில் எவ்வாறேனும் காணலாம் என்ற ஆசையுடன் தூக்கம் இல்லாமையால் கலங்கியிருந்த கண்களைக் கழுவியபின், தெய்வத்தை வழிபட்டாள் பதுமாபதி. முதல் நாள் முழுவதும் இரவு உறக்கம் இழந்து சோர்ந்து போயிருந்த பதுமையை அந் நிலையிற் கண்ட தோழியரும் செவிலி முதலிய தாயர்களும் ஆதுரத்தோடு வினாவினர். "நேற்று வண்டியில் செல்லும் போது உடல் வருந்திய வருத்தமோ? காமன் கோவிலில் வேறு ஏதாவது துஷ்ட தெய்வங்கள் தீண்டி விட்டனவோ? கோவிலில் மாடத்தை வலம் வரும் போது கால் கொப்புளங் கொண்டதோ? பொய்கையில் நெடுநேரம் நீராடியதினால் கண்கள் சிவப்பேறித் தோள்கள் சோர்வடைந்தனவோ? நீ இவ்வாறு தளர்ந்திருக்க காரணம் யாது? இந் நிலையில் இன்றும் வண்டியில் ஏறிக் காமன் கோட்டம் செல்ல இயலுமா?" என்று அவர்கள் பதுமையைக் கேட்டனர்.

"விழா முடிகின்றவரை அரசனே மறுத்தாலும் நாம் கோவிலுக்குச் சென்று வரவேண்டுவது அவசியம்! இதை நீங்கள் என்னிடம் கேட்கவே வேண்டாம்! இன்றும் விழாவுக்குச் செல்ல வண்டியைக் கொண்டு வருக" என்று பதுமை மறுமொழி கூறவும் விரைவாக வண்டியைக் கொணர்ந்து வாயிலில் நிறுத்தினர்.

உடனே முதல் நாள் போலவே தோழியர் புடைசூழப் பதுமாபதி வண்டியில் வந்து ஏறிக் கொண்டாள். ஆனால் இன்றைக்கு அவளிடம் தென்பட்ட அவசரத்தில் ஏதோ ஒரு பொருளைத் தேடும் ஆர்வம் இருந்தது. அப்படித் தேடிய பொருள் உதயணனின் அழகிய முகமாக இருந்தது.

34. சிந்தை புகுந்த செல்வன்

பதுமாபதியின் ஆர்வமும் அவசரமும் தூண்ட அரண்மனையை விட்டுப் புறப்பட்ட வண்டி அவள் மனத்தைப் போலவே காமன் கோவிலை நோக்கி வேகமாகச் சென்றமையால் சற்றைக்கெல்லாம் அங்கே போய்விட்டது. சித்திரமாடத்தைக் கடந்து காமன் கோவிற் பூங்காவினுள் சென்று வண்டி நிற்கவும் பதுமை இறங்கினாள். அவளுடைய இணை விழிகள் புன்னை மரத்தடியில் அவனைத் தேடின. அப்படித் தேடி விரைந்த அவள் பார்வை மரத்தடிக்குச் செல்லு முன்பே நடுவில் அங்கிருந்து வந்த அவன் பார்வையைச் சந்தித்தது. ஆம்! உதயணன் அங்கே புன்னை மரத்தடியில் முதல் நாளைப் போலவே இவள் வரவு நோக்கிக் காத்துக் கொண்டிருந்தான். இரண்டும் இரண்டும் நான்கு கண்கள் கலந்து உறவாடிக் காதல் கதைகள் பேசின. தன் விருப்பத்தை அவனுக்குக் குறிப்பினால் வெளிப்படுத்த எண்ணிய பதுமை, புன்னை மரத்திற்கு எதிரே இருந்த ஒரு சிறு மண்டபத்தில் தன் தோழி அயிராபதியுடன் ஏறி அவள் கழுத்தைத் தன் கைகளால் வளைத்துக் கட்டித் தழுவிக் கொள்வது போலப் பாவனை செய்தாள். குறிப்பாகக் கூறிய இந்தப் பாவனையின் உட்பொருளை உணர்ந்து கொண்ட உதயணன், தன் பக்கத்திலிருந்த வயந்தகனுடைய பரந்த மார்பைத் தன் தோள்களால் தழுவிக் குறிப்பினாலேயே தன் விருப்பத்தையும் அவளுக்குப் புலப்படுத்தினான். பேசாத உறவுகள், குறிப்பையே மொழியாகக் கொண்டு பேசின. இவ்வாறு சுற்றியுள்ள மற்றயவர்கள் அறியா வண்ணம் காதலர் இருவரும் தத்தம் விருப்பத்தைப் பரிமாறிக் கொண்டனர். பதுமையின் பக்கத்தில் அவள் தோழி அயிராபதியும் உதயணனின் பக்கத்தில் அவன் நண்பன் வயந்தகனும் இந் நாடகத்திற்குத் துணையாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர். ஆனால் உண்மையில் இதனால் நிகழ்ந்த சங்கேதத்தை அயிராபதியோ, வயந்தகனோ அறியவில்லை. அவ்வளவு நயமாக இருவரும் தத்தம் குறிப்பை விருப்பமாகப் பாவனை செய்து காட்டியிருந்தனர். இது முடிந்ததும், பதுமாபதியின் நோக்கம் உதயணன் கையில் இருந்த பூம்பந்து ஒன்றின் மேற்சென்றது. அப்பந்தின் அழகு அவளை வெகுவாகக் கவர்ந்தது.

உதயணன் கையிலிருக்கும் அப் பூந்தளிர்ப் பந்தைக் காணும் போக்கில் கள்ளத்தனமாக அவன் தோள்களின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் பதுமை. பக்கத்திலிருக்கும் வயந்தகனோடு பேசுவது போல ஓரக் கண்ணால் எதிர்ப்புறம் மண்டபத்தில் உள்ள பதுமையை விழுங்கிவிடுபவன் போலப் பார்த்துக் கொண்டிருந்தான் உதயணன். ஆனால் எவ்வளவு நேரம் கள்ளக் கண் நோக்கம் நிகழ முடியும்? உலகத்திலுள்ள எல்லாக் காவியங்களும் காதலனுக்கும் காதலிக்கும் நடுவில் ஒரு தோழனையும் தோழியையும் படைத்து வைத்திருக்கின்றனவே! என் செய்வது?

புன்னை மரத்தடியில் நிலைத்திருந்த பதுமையின் பார்வை, சிரித்துக் கொண்டே தன்னை நோக்கும் அயிராபதியின் கண்களைக் கண்டதும் தான் இங்கே மீண்டன. விண்டு சொல்லவோ, மறைக்கவோ முடியாத நிலையில், "அயிராபதி, அதோ அந்தப் புன்னை மரத்தடியில் நிற்கிறானே ஓர் அந்தண இளைஞன்! அவனைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமோ? அவன் யார்?" என்று தோழியை விளித்துக் கேட்டு வைத்தாள். பதுமையின் சமத்காரமான இந்தக் கேள்விக்கு அயிராபதியும் பதில் கூறினாள். "நேற்று நாம் இங்கே வந்து விழா வழிபாட்டை முடித்துக் கொண்டு புறப்பட்டோம் அல்லவா? அப்போது நான் சற்றுப் பின் தங்கிப் புறப்படும்படி நேர்ந்தது. நான் இங்கிருந்து புறப்படும் போது இவன், இந்த மரத்தடியிலிருந்து என் பக்கமாக வந்தான். நான் பரிவுடன் இவனை விசாரித்தேன். இவன் தன் பெயர் மாணகன் என்றும் தன் தோழர்களோடு மகத நாட்டின் அழகைக் கண்டு போக வந்ததாகவும் என்னிடம் சொன்னான். நீ விழா இறுதி நாளில் செய்யும் தானத்தை அடைவதற்காக இவனும், இவன் தோழர்களும் இன்னும் இங்கே தங்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது!" என்று பதுமையிடம் கூறத்தக்கனவற்றை மட்டும் சுருக்கமாகக் கூறினாள் அயிராபதி. இதைக் கேட்டபின் தன் சிந்தை குடி புகுந்த செல்வன் இன்னான் என்பதைப் பதுமை தெரிந்து கொண்டாள்.

அவளுக்கு இப்போது வேறு ஓர் ஆசை தோன்றியிருந்தது. அதுதான் உதயணன் கையிலுள்ள பூம்பந்தை எவ்வகையிலேனும் பெற வேண்டும் என்ற ஆசை. "அவன் கையிலிருக்கும் பூம்பந்தை நீ பார்த்தாயோ அயிராபதி! பந்து புனைவதில் அவனுக்கு நல்ல தேர்ச்சி இருக்கும் போல அல்லவா தோன்றுகிறது! குறிப்பினால் மற்றவர்கள் அறியாதபடி அந்தப் பந்தை நீ எனக்கு வாங்கிக் கொடேன்!" என்ற குழைவோடு கூடிய வேண்டுகோளைப் பதுமை அயிராபதியிடம் வெளியிடவும், அயிராபதி அவளுடைய அந்த ஆசையை நிறைவேற்ற ஒப்புக் கொண்டாள். பதுமையின் மனம் மகிழந்தது.

பதுமையிடம் அவள் கூறியவாறே பந்தை வாங்கி அளிப்பதாக ஒப்புக் கொண்ட அயிராபதி, மண்டபத்திலிருந்து கீழிறங்கி உதயணனுக்குச் சற்றே அண்மையில் வந்து நின்று கொண்டு, அவன் கையிலிருக்கும் பந்தைப் பதுமைக்குக் கொடுக்குமாறு கைகளாலும் கண்களாலும் சைகை காட்டிக் குறிப்பைப் புலப்படுத்தினாள். அவள் குறிப்பை உதயணனும் நன்றாகப் புரிந்து கொண்டான். குறிப்போடு வேறோர் உண்மையும் இப்போது அவன் மனத்தில் உறுதியான நம்பிக்கையைப் பெற்றது. பதுமை தன்னைக் காதலிக்கிறாள் என்ற உண்மைதான் அது. பந்து இரகசியமாகக் கைமாறியது. இப்போது உதயணன் பக்கத்தில் வயந்தகனோடு இசைச்சனும் வந்து சேர்ந்தான். தொலைவில் வரும்போது மரத்தடியிலும் எதிரிலுள்ள மண்டபத்திலும் கண்ணோட்டம் விட்டுக் கொண்டே வந்த அவன், விஷயத்தை ஒருவாறு புரிந்து கொள்ள முயற்சி செய்தான். தோழர்கள் இருவரும் குறும்பும் சந்தேகமும் தோன்றத் தன்னைப் பார்ப்பது கண்ட உதயணன், உண்மையை ஒளிப்பதில் பயனில்லை என்ற கருத்துடன் அவர்களிடம் நிகழ்ந்தவற்றைச் சொல்லத் தொடங்கினான். பதுமாபதி தன் நெஞ்சைக் கவர்ந்ததையும் அவள் நெஞ்சில் தான் குடி கொண்டதையும் நளினமாக எடுத்துக் கூறி முடித்தான். அவன் சொல்லி நிறுத்தவும் இசைச்சன் வாய்விட்டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் எவ்வளவோ பொருள் பொதிந்திருந்தது. அவற்றுள் இகழ்ச்சியும் ஒன்று.

இசைச்சனுடைய சிரிப்பில் அத்தகைய இகழ்ச்சிக் குறிப்பு இருந்ததை உணர்ந்து கொண்டவன் போலக் கடுமையாக அவனை ஏறிட்டுப் பார்த்தான் உதயணன். அந்தப் பார்வையிற் கனல் பறந்தது. சிரித்தவன் மட்டும் இசைச்சனாக இல்லாமல் வேறொருவனாக இருந்திருந்தால் அந்த அம்புப் பார்வைக்கு உரிய விளைவைப் பெற்றிருப்பான். அவ்வளவு கடுமை அந்த விழிகளில் இருந்தது. இசைச்சன் கூட ஒரு கணம் நடுங்கிப் போனான். பின்பு சமாளித்துக் கொண்டு தான் சிரித்ததன் காரணத்தை விளக்குகின்றவன் போல் உதயணனை நோக்கிக் கூறலானான்: "மகத நாட்டுப் பெண்கள் மனத்தை அவ்வளவு எளிதில் நெகிழவிட்டு விடுபவர்கள் இல்லை! அவர்கள் நெஞ்சு எதற்கும் கலங்காத நிறை உடையது. பெண்களின் நிறை ஒழுக்கநெறி தவறாமல் இருப்பதற்கு, மகத வேந்தன் தருசகன் தன் ஆணைகளை எவ்வளவோ வன்மையாக வைத்திருக்கிறான். அதோ! வழிபாடு செய்ய வந்திருக்கிறாளே அந்தக் கன்னி பதுமாபதி, அவளும் இதற்கு விதிவிலக்கு இல்லை. நெஞ்சழுத்தமும் நிறைவரம்பும் கொண்டவள் அவள். அவளுடைய தோற்றமே இதை வற்புறுத்துவதாக அமைந்திருக்கிறது. மனம் போன போக்கிற் செல்பவள் இல்லை அவள். 'தத்தை தீப்பட்ட துயரும் பிறிவும் பொறாமல், உதயணன் அந்தண வேடங்கொண்டு இங்கே வந்திருக்கிறான்' என்று எவராயினும் அறிந்தவர்கள் அவளிடம் சொல்லியிருக்க வேண்டும்! அல்லது, 'இவர்களைப் பார்த்தால் தானம் பெறக் காத்திருக்கும் அந்தணர் போலத் தெரியவில்லையே? ஏதோ உயர்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தோர் போன்ற எடுப்பான தோற்றமும் ஒளியும் இவர்களிடம் காணப்படுகின்றனவே' என்று அவர்களாகவே சந்தேகங் கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒரு காரணம் பற்றியே அவள் உன்னை ஆர்வமுடன் கவனித்திருக்க வேண்டும். வேறு எந்தக் காரணத்தாலும், அவள் நெஞ்சு உன்னிடம் நெகிழ்வதென்பது இயலாது. ஒருவேளை நீ கூறுவது போல அவள் உன்னைக் காதலித்தாலும் அது முற்கூறிய சந்தேக உணர்ச்சியுடன் கூட நிகழ்வதாகவே இருக்கும். எனவே, மாறு வேடங்கொண்டு வேற்றுநாடு வந்திருக்கும் நமக்கு, இதனால் துன்பம் வரினும் வரலாம். ஆகவே இந்த விஷயத்தில் நீ கொஞ்சம் ஒடுங்கி இருப்பதே நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது." இசைச்சன் செய்த இந்த நீண்ட சொற்பொழிவு உதயணனுக்கு வேதனையையும் வெறுப்பையும் கொடுத்தாலும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தான். நோக்கில் மட்டும் முன்போலவே இன்னும் கடுமை இருந்தது.

இதற்குள் அங்கு வந்திருந்த உருமண்ணுவா, வயந்தகன் முதலிய மற்ற நண்பர்களும் இசைச்சன் கூறியது போலவே கூறி உதயணனை எச்சரித்தனர். இதுவரை அமைதியாக இருந்த உதயணன், தன்னை எவ்விதச் சந்தேகங்களுக்கும் இடமின்றி மெய்யாகவே பதுமை காதலிக்கிறாள் என்பதை அவர்களுக்குப் பிரத்தியட்சமாக நிரூபித்துக் காட்ட விரும்பினான். அதற்கென ஓர் ஏற்பாட்டை முதலில் தனக்குள் தீர்மானம் செய்து கொண்டு அதை அவர்களிடம் கூறினான். கண்வழிக் கலந்து மனத்தின் வழிப் புகுந்து தானும் பதுமையும் பரஸ்பரம் கொண்ட காதலை அவர்கள் அவ்வளவு சாதாரணமாக இகழ்ந்து பேசினதும் உதயணனை மிக்க வருத்தத்தில் ஆழ்த்தியது. "பலவகை மலர்கள், அரும்புகள், தளிர்கள், இவற்றால் ஓர் அழகிய மாலையை என் கையால் தொடுத்து, அதை அவள் காணும் போதே பொய்கைக் கரையில் உள்ள மரமொன்றின் கிளையில் தொங்க விடுகின்றேன். அப்படிச் செய்த பின் நானும் மறைவாக இருந்து கவனிக்கிறேன். நீங்களும் மறைவாக இருந்து கவனியுங்கள். அவள் வந்து நான் தொங்கவிட்ட மாலையை எடுத்து மார்பில் அணிந்து கொள்வாள். அப்போதாவது நீங்கள் என் காதல் இருபுறமும் ஒத்த மெய்க் காதல் என்று ஒப்புக் கொள்வீர்கள் அல்லவா?" என்று உதயணன் கூறிய நிபந்தனை ஏற்பாட்டை நண்பர் வரவேற்று ஒப்புக் கொண்டனர். அவர்கள் சம்மதம் கேட்ட அப்போதே உதயணன் தனக்கு வெற்றி கிடைத்து விட்டது போல மகிழ்ந்தான்.

பதுமை தன்னைக் காதலிக்கிறாள் என்ற உண்மை அவனுக்குத்தானே தெரியும்! திருடர்கள் குறிப்புத் திருடர்களுக்கே புரிவது போலத்தான், காதலர்கள் குறிப்பும். உதயணன் தன் நண்பர்களிடம் ஒப்புக் கொண்ட ஏற்பாட்டின்படி அன்றலர்ந்த புதிய மலர்களையும் அரும்புகளையும் தளிர்களையும் கொண்டு புதுமையும் அழகும் பொருந்திய மாலை ஒன்றைத் தொடுத்தான். அந்த மாலையுடன், ஓர் இளங்குருத்து வாழை இலையில் அதுவரை பதுமைக்கும் தனக்கும் இடையில் நடந்த காதல் நிகழ்ச்சிகளைக் கை நகத்தால் சித்திரங்களாகக் கீறி, அதையும் கையிற் கொண்டு புறப்பட்டான். சித்திர வண்டியின் திரைச் சீலை விலகியபோது இருவர் கண்களும் சந்தித்த நிகழ்ச்சியில் ஆரம்பித்து, அவள் உதயணனிடம் பந்து வேண்டிக் குறிப்புக் காட்டியது ஈறாக அவ்வளவு நிகழ்ச்சிகளும் இலையில் இடம் பெற்றிருந்தன. புன்னை முதலிய மரங்கள் செறிந்திருந்த மிக அடர்த்தியான பகுதியில் பதுமையின் கண்களுக்குத் தெரியுமாறு, அவளும் காணும்படி அம்மாலையும் வாழை இலையும் ஒரு மரக்கிளையில் கட்டித் தொங்கவிடப் பெற்றன. இது முடிந்ததும், உதயணன் நண்பர் முதலியோர், தனித்தனியே மறைந்திருந்து பதுமையின் வரவை எதிர்பார்த்தனர். மறைவிலிருந்த யாவருடைய கண்களும் நடக்க இருப்பதை ஆவலோடு நோக்கிக் கொண்டிருந்தன.

பதுமை தன் ஆயத்து மகளிர் கூட்டத்திலிருந்து விலகி, யாப்பியாயினி என்னும் பார்ப்பனத் தோழியுடன் நீராடுங் கருத்துக் கொண்டு, பொய்கைப் பக்கமாக வந்தாள். முழங்கால் ஆழமுள்ள பொய்கையின் முன்பகுதியிலேயே வெகுநேரம் குழைந்து விளையாடினாள். நீராடி முடிந்த பின் கார்முகில் போல நீண்டு வளர்ந்திருந்த தன் கூந்தலை நீரறப் புலர்த்தினாள். சிற்சில அணிகலன்களையும் அணிந்து அலங்காரம் செய்து கொண்டாள். இவ்வளவும் செய்யும்போதே, அவள் கரங்கள், உதயணன் தனக்காகவே அங்கு வைத்துவிட்டுச் சென்ற கண்ணியை எடுக்கத் துறுதுறுத்துக் கொண்டிருந்தன. சுற்றும் முற்றும் நோக்கிக் கொண்டே பதுமை, புன்னை மரத்தின் மிகத் தாழ்ந்த அந்தக் கிளையை நெருங்கினாள். கிளையில் தொங்கிய வாழை இலையில் சித்திரங்களைக் கண்டு தனக்குள்ளே வெட்கந் தோன்ற நகைத்துக் கொண்டாள். அடுத்த கணம் உதயணன் தொங்கவிட்டிருந்த மாலையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள். அவள் இவ்வளவும் செய்யும்போது யாப்பியாயினி ஏதோ செயலாகப் பக்கத்தில் சென்றிருந்தாள். அவள் வருவதற்குள், அதே மரக்கிளையில் தன் பெயருடன் கூடிய மோதிரம் ஒன்றையும் மலர்மாலை ஒன்றையும் உதயணனுக்காக எடுத்துக் கொள்ளும்படி பதுமை வைத்தாள். பின் அவசர அவசரமாக மார்பிலணைத்த மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு, தான் பூசிக் கொள்வதற்காக அதனுடன் உதயணன் வைத்திருந்த சந்தனத்தையும் பூசிக்கொண்டு புறப்பட்டாள். இந்தச் செய்கைகளினால் உதயணனையே தழுவிக் கொண்டது போன்ற ஆனந்தம் அவளுக்கு ஏற்பட்டது. இதனால் அவள் உடலெங்கும் இன்பப் பசலை பரந்தது போல ஓருணர்ச்சி தோன்றியது. இவ்வாறு காதல் நிறைந்த உணர்ச்சியோடு புன்னை மரத்தடியைக் கடந்து பொய்கைக் கரைக்குப் பதுமை வரவும் யாப்பியாயினி எதிர்ப்படவும் சரியாக இருந்தது. பதுமையை இந்தக் கோலத்தோடு கண்ட யாப்பியாயினி விளையாட்டாக அவள் பின்புறம் போய் நின்று கொண்டு, அவளை வம்புக்கு இழுக்க ஆரம்பித்தாள்! "பெண்ணே! நீ யார் தெரியவில்லையே? என் தோழி ஒருத்தி இங்கே இருந்தாள். பதுமாபதி என்பது அவளுடைய பெயர். அவளும் உன் போலவே தோற்றமுடையாள்! இப்போது அவள் எங்கே சென்றாளோ? காணோம்!" என்று பதுமையை நோக்கிக் குழைந்து வினவினாள் யாப்பியாயினி. அவள் வினாவில் குறும்பு விளையாடியது! இகழ்ச்சியும் குறிப்பாக ஒலித்தது! பதுமை இதற்கு விடை சொல்லவில்லை. நாணித் தலை குனிந்தாள். அவள் கால் விரல்கள் நிலத்திற் கிளைத்துக் கோலமிடத் தொடங்கின.

யாப்பியாயினி பதுமையை நோக்கிக் கலகலவென்று நகைத்தாள். இங்கே இப்படியிருக்க, இவைகளையெல்லாம் மறைந்திருந்து நன்றாக நோக்கிய உருமண்ணுவா அங்கே தன் நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு கூறிக் கொண்டிருந்தான். உதயணன் உட்பட அநேகமாக எல்லோருமே மறைந்திருந்து இந்நிகழ்ச்சியைக் கண்டவர்கள் தாம். இருப்பினும் உருமண்ணுவா ஆர்வம் மேலிடத் தான் கண்டவற்றைக் கூறினான். அப்போது உதயணனும் அங்கே வந்து சேர்ந்தான். அந்த நேரத்தில் அவர்களைச் சேர்ந்தவருள் வயந்தகன் ஒருவன் தான் தோட்டத்திலிருந்து வரவில்லை. உண்மையாகவே அவள் உதயணனைக் காதலிப்பதை அறிந்து கொண்ட நண்பர், அதற்கேற்றபடி மேல்திட்டங்களை வடிக்கக் கருதிச் சிந்திக்கத் தொடங்கினர். இதை ஒரு சாதாரண நிகழ்ச்சியாக எண்ணி ஒதுக்கிவிடுவதற்கும் இல்லை. ஏனென்றால் இதனாலேயே அவர்கள் சூழ்ச்சி, மாறுவேடம் யாவும் அம்பலமானாலும் ஆகிவிடலாம் அல்லவா! எனவே தான் நண்பர்கள் இதைப் பற்றிய சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படியாக நேர்ந்தது.

அப்போது மரத்தடியில் பதுமை உதயணனுக்காக வைத்து விட்டுச் சென்ற மோதிரம், மாலை ஆகியவைகளுடன் வயந்தகன் உள்ளே பிரவேசித்தான். உதயணனைத் தேடித் தோட்டத்துக்குள் சுற்றியபோது, அந்த மோதிரத்துடன் மாலையும் புன்னை மரக்கிளையில் இருந்ததாகவும், தான் அவற்றை உதயணனிடம் அளிக்கக் கொணர்ந்ததாகவும், சொல்லிவிட்டு அவற்றை உதயணனிடம் சேர்ப்பித்தான் வயந்தகன். அவற்றைப் பெற்றுக் கொண்ட உதயணன் தானும் அதே பொய்கையில் உருமண்ணுவாவுடன் சென்று நீராடி, வேறுடை உடுத்தியபின் மோதிரத்தையும் மாலையையும் அணிந்து கொண்டான். பதுமையின் நினைவு மயக்கம் அவன் நெஞ்சில் தோன்றியது. அவள் தொடுத்த மாலையும் மோதிரமும் தாபத்தைத் தணித்தன. இவ்வாறு காதலர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். மனத்தையும் நினைவுகளால் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

தான் வைத்த மோதிரத்தையும் மாலையையும் உதயணன் அணிந்திருப்பதனைக் கண்ணாரக் கண்ட பின்பே பதுமாபதி அங்கிருந்து அரண்மனைக்குப் புறப்பட்டாள். அங்ஙனம் புறப்படும் போது அவள் அவனைப் பார்த்த பார்வை எவ்வளவோ பொருள் பொதிந்ததாக இருந்தது. 'நம்முடைய காதல் நேற்றுவரை கண்களின் பார்வையளவில் இருந்தது. இன்றோ ஒருவர் மாலையை மற்றொருவர் மாற்றிக் கொள்ளும் அளவு வளர்ச்சியடைந்திருக்கிறது' என்று அவள் தன் மனத்திற்குள்ளேயே பேசிக் கொள்வது போல் இருந்தது அந்தப் பார்வை. இந்தப் பார்வையோடு அவனிடம் குறிப்பாக விடைபெற்றுக் கொண்டு சித்திர வையமேறி அரண்மனை சென்றாள் பதுமை. அப்போது மாலை நேரமாகியிருந்தது. அன்றிரவு உதயணன் நன்றாக உறங்கினான். பதுமாபதியிடம் தான் பூண்ட காதலுரிமை உண்மையானது என்பதை நண்பர்களுக்கு நிரூபித்து விட்டு திருப்தியோடு உறங்கினான். அந்த அமைதியான உறக்கத்தில் அவன் ஒரு கனவு கண்டான். கனவில் வாசவதத்தை அவன் முன்பு தோன்றினாள். பின்னலிட்டுப் படியாது மாசுற்றுப் பரந்த தலையும், இளைத்த நோயுடம்பும், வற்றிப் போய் எலும்பு தெரியும் முதுகுமாக இருந்தது அவளுடைய பொலிவில்லாத அந்தத் தோற்றம்.

உதயணன் கனவில் அவளைக் கண்டு ஆச்சரியத்தால் சூழப்பட்டான். மகிழ்ச்சியோடு வாசவதத்தையை வரவேற்றான். "வாசவதத்தாய், குற்றமற்ற கற்பின் செல்வி! என் துன்பம் இனித் தீர்ந்தது. நீ வந்துவிட்டாய்" என்று கனவில் வாய்விட்டு அரற்றினான். வாசவதத்தை, உதயணன் இவ்வாறு கூறியவற்றைச் செவியுற்று மெல்ல வாய் திறந்து பேசலானாள். உதயணன் அவள் பேசுவதைக் கவனமாகக் கேட்டான். "என்னைப் பிரிந்து வேற்று நாட்டிற்கு வந்திருக்கிறீர்கள். இப்போதோ என்னைக் கண்டவுடன் மிகவும் அன்பாக பேசுவது போல் பேசுகிறீர்கள்! எதற்கு இந்த வீண் பேச்சு" என்று அவன் பக்கம் நெருங்காமல் அகன்று நின்று கூறினாள் தத்தை. அது கேட்ட உதயணன் மனம் மயங்கி, "இறந்து போன உன்னை உயிரோடு மீட்டுத் தருபவர் இந்நகரத்தில் உள்ளார் என்று கேள்விப்பட்டே நெடுந் தொலைவைக் கடந்து இங்கே வந்தேன்! இதற்காக நீ சினங்கொள்ளாதே" என்று அவளை நெருங்கி இருந்து ஊடல் தணிக்க முற்பட்டான். இதைக் கேட்ட தத்தை மேலும் சினங்கொண்டவள் போல, "இன்று நீங்கள் இந் நாட்டரசன் தருசகன் தங்கையாகிய பதுமாபதியின் மேல் காதல் கொண்டீர்கள். அவளுக்குக் கொடுக்கவென மாலையுங் கட்டி வைத்தீர். அவள் கொடுத்த மோதிரத்தையும் மாலையையும் ஏற்று அணிந்து கொண்டீர்!" என்று சொல்லிவிட்டு ஒதுங்கி நின்று கொண்டாள், வெறுப்புடன். அவளுடைய ஊடலைக் கண்டு உதயணன் திகைத்தான்.

அவள் வெறுப்பையும் ஒதுக்குதலையும் கண்ட உதயணன் "பதுமாபதி என்ற பெயரையே இன்று இப்போது நீ சொல்லத் தான் நான் கேட்கிறேன். இதற்கு முன்பு அறியேன். அவ்வாறிருக்க நீ என்னைக் கூறுவது வீண் பழியாம். என் மனம் துயர் கொள்ளுமாறு தவிப்புறச் செய்வது உனக்கு அழகன்று. என் மனத்திற்கு உவகை அளிப்பது உன் கடமை" என்றிவ்வாறு மேலும் வேண்டிக் கொண்டான். இப்போது உதயணன் கண் முன்பு தத்தை தோன்றவில்லை. அதற்குப் பதிலாகப் பொழுது விடிந்தது. ஒளி பரவித் தோன்றியது. தான் அதுவரை தத்தையைக் கண்டது, பேசியது அவள் சினங் கொண்டது எல்லாம் இரவு நேரத்துக் கனவு என்பதை உதயணன் உணர்ந்தான். கனவை நண்பர்களுக்கு விளங்க எடுத்துரைத்தான். உதயணன் முதல் நள்ளிரவு கண்ட கனவை அவன் கூறக்கேட்ட நண்பர் மகிழ்ந்து, "கனவிற் கண்டதும் நல் நிமித்தத்திற்கு உரியதே. தத்தை உயிருடன் மீண்டும் உனக்குக் கிடைபபாள் என்பதையே கனவு நிகழ்ச்சியும் வற்புறுத்துகிறது" என்று கூறி உதயணனை வாழ்த்தினர்.

35. இருளில் நிகழ்ந்த சந்திப்பு

நண்பர்கள் தொடர்ந்து மேலும் சில அறிவுரைகளை உதயணனுக்குக் கூறினர். "உன் கனவில் பதுமாபதியைக் குறிப்பிட்டுத் தத்தை சினங்கொண்டு ஊடியதாக நீயே கூறுகின்றாய்! எனவே பதுமை கொடுத்த மாலையையும் மற்றவற்றையும் அணிந்து கொள்வது சரியல்ல! உனக்குத் தத்தையின் மேல் மெய்யன்பு இருக்குமாயின் பதுமையின் மேல் ஏற்பட்டிருக்கும் இவ்விருப்பத்தை நீ கைவிடத்தான் வேண்டும்" என்று உதயணனுக்கு உயிர்போன்ற நெருங்கிய நண்பர்கள் நயமாக எடுத்துச் சொன்னவற்றை உதயணன் ஒப்புக் கொள்ளவில்லை. பதுமையின் மேல் அவனுக்கிருந்த மோகத்தை அவ்வளவு சுலபமாக நண்பர்களால் நீக்கி விட முடியவில்லை. உதயணன் நண்பர்களின் அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ள மறுத்தான்.

'இவன் வத்தவ நாட்டுப் பேரரசன் உதயணன் என்று மகத வேந்தன் தருசகனுக்கு அறிமுகம் செய்து வைக்கவே இங்கே உதயணனை அழைத்து வந்தோம். இப்போதோ இயற்கையாகவே அந்த அறிமுகத்தை நாம் தவிர்த்தாலும் தவிராமல் தானாக ஏற்பட்டே தீரும் போலிருக்கிறது. இப்போது ஊழ்வினையும் ஏயர்குலத்தின் முன்னேற்றத்திற்கே உதவி செய்கிறது. உதயணன், பதுமை காதலால் நாம் எதிர்பார்த்து வந்த மகதநாட்டு அரசனின் உறவு கிட்டினால் அதுவே நமக்கு சிறந்த பலனாகும்' என்று எண்ணி நண்பரும் மனநிறைவு பெற்றனர். உதயணனும் பதுமாபதியின் காதலைப் பொறுத்தவரையில் தன் எண்ணத்தைச் சற்றேனும் தளர்த்திக் கொடுக்காமல் இருந்தான்.

'உதயணன் - பதுமாபதி காதல் உறுதியான மெய்யே' என்று அறிந்த நண்பர், 'இனி எவ்வாறேனும் தங்களுக்கு மகத வேந்தனுடைய தொடர்பு கிட்டிவிடும்' என்று மனநிறைவோடு இருந்தனர். ஆனால், உதயணன் நினைவில் மட்டும் பதுமாபதியின் காதல் ஒன்றே ஓங்கி நின்றது. அவளைப் பற்றியும் அவளுடைய அழகைப் பற்றியும் நினைத்த அளவு, மகத வேந்தனுடனே தனக்கு ஏற்பட வேண்டிய நட்பைப் பற்றி உதயணன் எண்ணவேயில்லை. எவ்வகையில் ஆயினும் பதுமையை மீண்டும் சந்திக்க வேண்டுமென்ற அடக்க முடியாத ஆசை அவன் மனத்தில் எழுந்தது. தன் மேல் அவளுக்குள்ள காதலின் மிகுதியை ஏற்கனவே அறிந்து உறுதி செய்து கொண்டதும், இந்த ஆர்வம் இன்னும் தவிர்க்க இயலாதபடி எழுந்ததற்கு ஒரு வகையில் காரணம் என்று சொல்லலாம். இந்த ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்ளத் துடிதுடித்த அவன் மனம், இதற்கென்று ஒரு திட்டத்தையும் கூட வகுத்துக் கொண்டுவிட்டது.

சில நாள்களில் அந்தி மயங்கிய பிறகு, இரவு நேரங்களிலும் பதுமை காமன் கோட்டத்திற்கு வழிபாடு செய்ய வந்து போவது வழக்கம். இத்தகைய நாள் ஒன்றில் கோவிலின் உட்புறத்தில் அதிகம் ஒளியற்ற பகுதியாகிய மணவறை ஒன்றில் அவளைச் சந்தித்து விடுவது என்று உதயணன் திட்டஞ்செய்து வைத்துக் கொண்டான். அந்த மணவறைக்குள், பதுமையைப் போன்ற தகுதியாற் பெருமை மிக்கவர்கள் தவிரப் பிறர் நுழைய முடியாது என்பதும், ஒளி மிகுந்திராது என்பதுவும் உதயணனுக்கு ஏற்ற வசதிகளாகப் பட்டன. காமன் கோட்டத்திற்கு வந்தால், என்றுமே அந்த மணவறைக்குள் நுழையாமல் பதுமை திரும்பிச் செல்வதில்லை என்ற வழக்கமும் உதயணனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அவளைத் தனிமையில் சந்திப்பதற்கு இதைத் தவிர வேறு வழி எதுவும் புலப்படவில்லை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னால், நண்பர்களிடமும் கூறிவிடுதல் நல்லது என்றெண்னிய அவன் அவ்வாறே கூறினான். "தன் அழகாகிய மத்தினால் என் அன்புக் கயிற்றை இட்டு இடையறாது உள்ளத்தைக் கடைகின்றாள் பதுமை. அவளைத் தனிமையிலே சந்திக்க வேண்டும் என்று என் மனத்தில் எழும் ஆசையை என்னால் அடக்க முடியவில்லை. காமன் கோட்டத்தின் உள்ளே இருக்கும் மணவறை மாடத்தில் அவளைச் சந்திக்கலாம் என்று கருதியிருக்கிறேன். அவள் சிறிதும் எதிர்பாராத நிலையில் இருளிடையே அவள் முன் தோன்ற வேண்டும். அதைக் கண்டு நாணத்தோடு அவள் தலைகுனிந்து நிற்கும் போது அந்த நகை முகத்தின் அழகையும் விழிகளின் குறுகுறுப்பையும் கண்களால் கண்டு அனுபவிக்க வேண்டும். நெஞ்சத்தை கலக்கித் துடிதுடிக்கச் செய்யும் இந்த ஆசையை எவ்வளவோ முயன்று பார்த்தும் என்னால் நீக்கிவிட முடியவில்லை" என்று உதயணன் கூறி முடித்த போது உருமண்ணுவா முதலிய அவனுடைய நண்பர்கள் அதைக் கேட்டுத் தயங்கினர்; திகைத்தனர்!

உதயணன் கூறிய திட்டம் நண்பர்களை அஞ்சுமாறு செய்தது. 'வீரமும் ஆண்மையும் பல்கலை வல்லமையும் பொருந்திய உதயணன் தானா அவ்வாறு கூறுவது?' என்று கூட ஐயப்பட்டனர் அவர்கள். அவன் கூறிய திட்டம் இடையிலே பிறழ்ந்து விடுமாயின், அதனால் அவனுக்கும் அவனுடன் வந்த நண்பர்களாகிய தங்களுக்கும் எவ்வளவு பெரிய பழி நேரும் என்பதை எண்ணிப் பார்க்கும் போதே அவர்கள் நடுங்கினர். உதயணன் திட்டத்தையும் நண்பர்கள் காரணங் காட்டி மறுத்தனர்.

"ஏதாவது தவறு நேர்ந்து சூழ்ச்சிகள் யாவும் வெளிப்பட்டு விடுமானால் நாளைக்கு அறிந்த மனிதர்கள் யார் மேல் குற்றங் கூறுவார்கள்? 'உதயணன் நண்பர் அவனோடு துறவிகள் போல மாறுவேடங் கொண்டு மகத நாட்டிற்கு அவனை அழைத்துச் சென்றனர். அங்கே உதயணனுக்கு நல்ல நெறி காட்டி முன்னேற்றங் கொடுக்கத் தெரியாமல் பதுமையோடு மறைவாகக் காதல் புரியவே அவனுக்குத் துணை செய்தனர். இந்த நண்பர்களுக்குச் சிறிதேனும் நுண்ணறிவு இருந்தால் உதயணனைத் தவறான வழிக்குச் செல்ல விட்டிருப்பார்களா இவர்கள்?' என்றெல்லாம் நாங்கள் எதிர்காலத்தின் பழிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும்! மேலும் நீ கூறுகிறவாறே காமன் கோட்டத்தின் உட்பகுதியிலுள்ள மணவறை மாடத்தில் அவள் அதனுள் வரும்போது சந்திக்கின்றாய் என்றே வைத்துக் கொள்வோம். பதுமை மாடத்திற்குள் நுழைவதற்கு முன்னால், அவளுடன் அரண்மனையிலிருந்து வரும் காவலர்கள் அதனுள் புகுந்து பரிசோதனை செய்தால் ஒளிந்து கொண்டிருக்கும் நீ அகப்பட்டுக் கொள்ள வேண்டியது ஆகும். நீ இரவலன் போல மாறுவேடத்தில் அங்கே செல்லப் போகிறாய்! ஆனால் உன்னைக் காண்பவர்கள் உனது எடுப்பான தோற்றத்தினையும் முகச்சாயலையும் பார்த்தே இவன் இரவலன் இல்லை என்று கண்டுபிடித்து விடுவார்கள். இவைகளை எல்லாம் மீறி மணவறையின் உள்ளே நீ பதுமையைச் சந்திக்கத் திடீரென்று அவள் முன் தோன்றும் போது தனிமையாலும் அச்சத்தினாலும் அவளே ஏதாயினும் கூக்குரல் இட்டுவிடலாம். அந்தக் கூக்குரலைக் கேட்டுத் தோழிப் பெண்களும் காவலர்களும் என்னவோ? ஏதோ? என்று திடுக்கிட்டு உள்ளே வந்து விடுவார்களானால் உன்பாடு தப்புவதற்கு வழியில்லை. இன்ன இன்ன துன்பங்கள் எல்லாம் உன் திட்டத்தில் கலந்திருக்கின்றன. இவைகளைத் தவிர்த்து விலக்கிக் கொண்டு சாமர்த்தியமாக நடந்து கொள்ள முடியுமானால் உன் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதில் எங்களுக்கு மறுப்பு இல்லை" என்று நண்பர்கள் உதயணனுக்கு விரிவாக மறுமொழி கூறினர்.

நண்பர்களின் மறுமொழியைக் கேட்ட பின்னரும் உதயணன் தன் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. "பதுமைக்குக் காவலராக வரக்கூடிய யாவரும் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களே. அந்தப்புரங்களில் பெண்களோடு பழகும் காவலர்கள் பெரும்பாலும் வயது சென்றவர்களாகவே இருப்பார்கள். பகற்காலம் முழுவதும் வேலை செய்து அலுப்படைந்த அந்தக் காவலர்கள் மாலையில் இங்கே பதுமைக்குக் காவலாக வரும்போது களைப்போடு வருவார்கள். எனவே அவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை. மேலும் பதுமையை நான் காமன் கோட்டத்து மணவறைக்குள் சந்திக்க போவது இருட்டிய பின்புதானே? இருளில் என்னை யாராலும் அறிந்து கொள்ள முடியாது. என்னைக் காப்பாற்றிக் கொள்ள எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்" என்று நண்பர்களுக்கு உதயணன் மறுமொழி கூறினான். அதற்குமேல் நண்பர்களும் அவனை வற்புறுத்தித் தடுக்கவோ மறுக்கவோ விரும்பவில்லை.

உதயணன் தன் விருப்பப்படியே, பதுமாபதி இரவில் காமன் கோட்டம் வருகின்ற ஒருநாளை அறிந்து முன்னேற்பாட்டோடு இருந்தான். மணவறை மாடத்திற்குள்ளே அவன் ஒளிந்து கொள்வதற்காக நுழைந்தபோது வயது முதிர்ந்த இரவலன் ஒருவனைப் போல மாறுவேடங் கொண்டிருந்தான். மாறுவேடத்திற்கு உள்ளே அவனுடைய இயற்கையான இளமைக் கோலம் இருந்தது. உதயணனது இந்தச் செய்கையை ஒப்புக் கொள்ளாமல் கருத்து வேறுபட்டதனால் தன் நண்பர்களிடம் அன்று மீண்டும் உதயணன் அதைப்பற்றிக் கூறவில்லை. அவர்களும் அதில் தலையிடவில்லை. அந்தி சாய்கின்ற நேரம். காமன் கோட்டத்துச் சோலையில் ஏற்கனவே வெயில் நுழையாது. இப்போது அங்கே நன்கு இருள் பரவியிருந்தது. பதுமை ஆயத்துப் பெண்களும் காவலர்களும் புடைசூழ வழிபடுவதற்கு வந்திருந்தாள். ஒலிகளினால் வெளியே பதுமையின் சித்திர வையம் வந்து விட்டதை அறிந்த உதயணன், இன்னும் நன்றாக மறைவில் ஒளிந்து கொண்டான்.

மாறுவேடத்திற்குரிய உடைகளை உள்ளே வந்தவுடன் களைந்துவிட்டு, முதன் முதலாகப் பதுமையைச் சந்தித்த அதே இயற்கையான தோற்றத்தோடு இப்போது இருந்தான். அவன் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. கோவிலுக்குள் இருந்து வெளியே பரவிக் கொண்டிருந்த அகில், மலர் முதலியவற்றின் மணம் போலவே அவன் நெஞ்சின் நினைவு மலர்கள் காதல் மணம் பரப்பிக் கொண்டிருந்தன. ஆயிற்று! இன்னும் சிறிது நேரத்தில் பதுமை எபப்டியும் அங்கே வழிபடுவதற்காகத் தனியே வருவாள். அப்போது மலரின் விரிவு நோக்கிக் காத்திருக்கும் வண்டின் நிலையில் அவன் இருந்தான். கோட்டத்தின் வாயிலில் யாரோ நடந்து வரும் சிலம்புகளின் கிண்கிணி நாதம் அவன் காதுகளில் யாழொலி போலக் கேட்டது. கலின் கலின் என்ற அந்த சிலம்போசை வரவர அவனை அவள் நெருங்குவதாகச் சொல்லியது. உதயணனுக்கு உடல் முழுவதும் வேர்த்துவிட்டது. பதுமை நெருங்கி வந்தாள். உடன் வந்திருந்த காவலர்கள் வெளியிலேயே அங்கங்கே மரத்தடியில் களைப்பாற அமர்ந்து விட்டனர். ஆயத்துப் பெண்களும் காமன் கோட்டத்தின் வேறு பகுதிகளுக்குச் சென்றிருந்தார்கள். எனவே, பதுமை தான் மட்டும் தனியே வழிபாடு செய்ய நினைத்து கோட்டத்தினுள் நுழைந்திருந்தாள்.

மணவறை மாடத்தின் எதிரே வந்ததும், திடுமென்று அவள் எதிரே, 'காமதேவனே அந்த இளைஞன் வடிவமாக வந்திருக்கிறானோ' என்று எண்ணும்படி உதயணன் இருளிலிருந்து வெளிப்பட்டு நின்றான். ஒரு நொடி, பதுமை திடுக்கிட்டு நடுங்கிக் கூக்குரலிட வாயைத் திறந்துவிட்டாள். சற்றைக்கெல்லாம் அந்த முகத்தை உற்றுப் பார்த்த பின்னர், எதிரே நிற்பவன் தன் உள்ளங் கொள்ளை கொண்ட கள்வன் தான் என்பதைப் பதுமை புரிந்து கொண்டாள். கூக்குரல் இடுவதற்கு மேலெழுந்த நாவு ஒடுங்கியது. பயத்தால் நடுங்கிய உடலில் நாணம் பரவியது. பதுமை தலைகுனிந்தாள். அவள் இதழ்களிலே புன்னகை மென்மலர் பூத்தது. கன்னங்களிலே செம்மை படர்ந்தது. விழிகள் குறுகுறுத்தன. அவள் மாதவிக் கொடிபோலத் துவண்டாள். உதயணன் கரங்கள் கொடியைத் தழுவும் கொழுகொழும்பு போல அவளைத் தழுவின.

உதயணனுடைய அந்தக் கைகள் அவளைத் தழுவியபோது யாரோ தன் மேல் கூடை கூடையாக அன்றலர்ந்த மல்லிகை மலர்களைக் கொட்டுவது போன்ற உணர்ச்சி பதுமைக்கு ஏற்பட்டது. அவள் தன்னை மறந்தாள். உதயணன் வசப்பட்டது அவளுடைய உணர்வு. அலர்ந்த மலரும் ஆவல் நிறைந்த வண்டும் ஒன்றுபட்டது போலாயிற்று, அவர்கள் நிலை. எவ்வளவு நேரம் அவர்கள் அதே நிலையில் இருந்தார்களோ? தோழியர்கள் உள்ளம் பதைத்து, 'உள்ளே சென்ற பதுமையைக் காணவில்லையே!' என்று கோட்டத்திற்குள் புகுந்துவரும் ஒலி கேட்டு உதயணன் இருளில் மறைந்து கொண்டான். பதுமை தன் நிலையை உணர்ந்து கொண்டவளாய், அப்போதுதான் வழிபாட்டை முடித்துக் கொண்டு வெளியே வருபவள் போல அவர்கள் முன்னே தோன்றினாள். மலர்களும் மாலைகளும் அப்படியே இருப்பதைக் கண்ட தோழி யாப்பியாயினி மட்டும் நுணுக்கமாகச் சிந்தித்துப் பதுமையின் மேல் சிறிது ஐயங்கொண்டாள்.

36. அரண்மனைத் தொடர்பு

காமன் கோட்டத்தின் உட்புறத்திலிருந்து தோழியரோடு வெளியேறிச் சென்ற பதுமை, வையத்திலேறிய பின்பும் உதயணனைப் பற்றிய இனிய நினைவுகளோடுதான் அரண்மனைக்குப் புறப்பட்டாள். எல்லோரும் கோட்டத்திலிருந்து வெளியே சென்ற பின்பு, உதயணன் இருள்நிறைந்த மணவறை மாடத்திலிருந்து வெளியே வந்தான். அவனுடைய நெஞ்சு நிறையப் பதுமையைப் பற்றிய இன்ப நினைவுகள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. தவப்பள்ளிக்கு அவன் செல்லும் போது இரவு வெகு நேரமாயிருந்ததை அங்கிருந்த அமைதி நிலையினாலேயே அவன் அறிந்து கொண்டான். தானும் தன் நண்பர்களும் இனியும் அதே தவப் பள்ளியில் தங்கியிருப்பது அங்குள்ளவர்கள் சந்தேகமுற ஏதுவாகும் என்ற சிந்தனை உதயணனுக்கு இப்போது உதித்தது. தங்களுக்குள் அடிக்கடி நிகழும் வாக்குவாதங்களையும் பேச்சுக்களையும் பிறர் கேட்க நேர்ந்தால், மாறுவேடம் வெளிப்படையாகிவிடுமே என்ற அச்சமும் அவனுக்கு இருந்தது. தான் அடிக்கடி காமன் கோட்டத்தின் பக்கம் சென்று வருவதனால் கூடப் பிறர் தன்னைத் தவறாக எண்ண நேரிடும் என்று எண்ணினான் அவன். இந்தச் சிந்தனையின் பயனாக உதயணன் ஒரு முடிவுக்கு வந்தான். 'மறுநாள் எப்படியும் மகத வேந்தன் தருசகனுடைய அரண்மனையில் மாறுவேடத்துடன் ஏதாவது ஒரு வேலையிற் சிறந்தவனாகச் சொல்லிக் கொண்டு அமர்ந்து விட வேண்டும். தருசகனுக்கு எந்த வகைத் தொழிலில் விருப்பம் அதிகம் என்று முன்பே தெரிந்து கொண்டுவிட வேண்டும்' என்பவைதாம் உதயணனுடைய அந்த முடிவுக்குள் அடங்கியிருந்தன. பதுமையின் காதலை வளர்த்துக் கொள்வதற்கும் சரி, மற்றவற்றிற்கும் சரி, அரண்மனைத் தொடர்பு மிகமிக ஏற்றதாகவும் அவனுக்குத் தென்பட்டது. இன்னும் சில நாள்கள் இதே முறையில் காமன் கோட்டத்திற்குள்ளேயே அவன் பதுமையைச் சந்திக்க வேண்டியதாக இருந்தது.

தவப் பள்ளியில் இருந்துகொண்டு அவன் இவ்வாறு பலமுறை காமன் கோட்டத்திற்கு வந்து செல்வது பிறர் கண்ணில் பட்டால் அவனையும் நண்பர்களையும் அதுவே காட்டிக் கொடுத்துவிடும் என்பதை அவன் தெளிவாக அறிவான். உடனடியாக அவனுக்கு இந்த எண்ணம் தோன்றுவதற்குக் காரணமே அதுதான். அடுத்த நாள் பொழுது விடிந்ததும் வழக்கப்படி செய்ய வேண்டிய காலைக்கடன்களை முடித்துக் கொண்ட பின், உதயணன் புதியதொரு மாறுவேடத்தோடு இராசகிரிய நகரத்து அரண்மனைக்குப் புறப்பட்டான். மகத அரசன் தருசகனைப் பற்றி நன்கு பழகி அறிந்து கொண்டிருந்த அரண்மனைக் காவலன் ஒருவனை முதலில் உதயணன் சந்தித்தான். அந்தக் காவலனோடு ஏதேதோ பல செய்திகளைச் சுற்றி வளைத்துப் பேசிக் கொண்டே வரும்போது, 'அரசனுக்கு மிகவும் விருப்பமான தொழில் ஏது?' என்றும் ஒரு கேள்வியையும் இடையே அவனிடம் கேட்டு வைத்தான். அரண்மனைப் பெருவாயிலின் ஒரு புறத்தே நின்று அவர்கள் இப்படி உரையாடிக் கொண்டிருந்தனர்.

பேசுவதில் விருப்பமிக்க அந்தக் காவலனைத் தன்னுடைய சிறிது நேரப் பழக்கத்தினாலேயே நன்றாகக் கவர்ந்து விட்டான் உதயணன். உதயணனிடம் அவனுக்கு விலக்க முடியாத ஈடுபாடு ஏற்பட்டு விட்டது. உதயணன் கேள்விக்கு அந்தக் காவலன் அன்போடும் ஆர்வத்தோடும் விடை சொல்லலானான். "எங்கள் அரசனின் தந்தை தம் ஆட்சிக் காலத்தில் பொன்னும் மணியும் முத்தும் அடங்கிய மதிப்பிட முடியாத செல்வத் தொகுதி ஒன்றை இவ்வரண்மனையின் ஒரு பகுதியில் புதைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் எங்கள் அரசன் புதையலாக இருக்கும் தம்முடைய தந்தையின் அந்த நிதியை இதுவரை பெற முடியவில்லை. அப்புதையலின் இருப்பிடம் இதுவரை தெரியவில்லை என்பதே அதற்குக் காரணம்! எனவே, புதையல் இருக்குமிடத்தை அறிந்து கூறுபவர்களைக் கண்டால் எங்கள் அரசன் அவர்களைக் கடவுள் போலக் கருதிக் கொண்டாடுவான். ஆயினும் இதுவரை வந்த ஓர் அறிஞராவது எம்மரசனின் தந்தையினுடைய புதையல் இருக்கும் இடத்தை அவனுக்குச் சரியாகக் கூறவில்லை. இருந்தாலும் அவருக்கு இன்னும் புதையல் இருக்குமிடத்தைக் கண்டு சொல்பவர்கள் மேல் அன்போ ஆதரவோ சிறிதும் குறையவே இல்லை" என்று காவலன் உதயணனுக்குச் சொல்லி முடித்தான்.

காவலன் இவ்வாறு கூறி நிறுத்தவும் உதயணன் தன் முகத்தில் மிகுந்த வியப்புத் தோன்றுமாறு செய்து கொண்டே "எவ்வளவு பொருத்தம்! உங்கள் அரசர் எந்த வித்தையை அதிகம் விரும்புவதாக நீங்கள் கூறினீர்களோ, அதே வித்தையில் நான் மிகவும் வல்லவன். நான் எண்ணி வந்தது போலவே இங்கும் இருக்கிறது பார்த்தீர்களா?" என்று தொடங்கிப் புதையல் இருக்குமிடத்தை அறியும் தன் கலை வன்மையை அவனிடம் விவரிக்கலானான். "முன்னோர் புதைத்து வைத்திருக்கும் புதையல்கள் இருக்கும் இடங்களை அறிந்து கூறுவதில் எனக்கு நல்ல பயிற்சி உண்டு. இதற்கு முன் பல இடங்களில் அத்தகைய புதையல்களைக் கண்டுபிடித்துக் கூறி அவற்றுக்கு உரியவர்களிடம் நற்பெயர் பெற்றுள்ளேன். இது தவிர வேறு பல திறமைகளும் என்பால் உள்ளன. அரண்மனைக்குள் நல்ல நீரூற்றுக்கள் இருக்கும் என்பதை நான் நிலத்தைப் பார்த்தவுடனே சொல்லுவேன். நிலத்தினுள்ளே மறைந்திருக்கும் பொருள்களை அறிவதற்கு வழிகூறும் நூல்கள் பலவற்றை நான் நன்கு ஆராய்ச்சி செய்திருக்கிறேன். உங்களுடைய அரசனுள்ளத்தை வருத்துகிற குறையையும் என்னால் தீர்த்து வைக்க முடியும் என்று எண்ணுகிறேன்" என்று உதயணன் கூறியவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டே அந்தக் காவலன் மன மகிழ்ச்சியோடு உள்ளே சென்றான்.

காவலன் வேந்தனின் இருப்பிடத்திற்குச் சென்று, "புதையலெடுத்தல், நிலத்தினுள் மறைந்திருப்பவற்றைக் கூறுதல் ஆகிய அருங்கலைகளில் தேர்ந்த கலைஞன் ஒருவன் நம் அரண்மனை வாசலில் வந்து காத்திருக்கிறான்" என்று கூறினான். தருசகவேந்தன் காவலன் கூறுவதைக் கவனமாகக் கேட்டான். "கலைஞர்களைக் காண்பதும் அளவளாவுவதும் கொடுத்து வைத்த பெரும்பேறுகள் அல்லவா? நீ கூறிய அந்தக் கலைஞர் திலகத்தை உடனே போய் இங்கழைத்து வா!" என்று அரசனின் கட்டளையைப் பெற்றுக் கொண்டு காவலன் வாயிலுக்குத் திரும்பினான். அரசன் தருசகனின் அழைப்பைக் காவலன், உதயணனிடம் கூறி, அவனை உள்ளே அழைத்துச் சென்றான். உதயணனும் மாறுவேடத்திற்கு ஏற்ற நடிப்புடனே அவனைப் பின்பற்றினான். உள்ளே நுழைந்ததும் தருசகன் அவனை அன்போடு வரவேற்று ஓர் ஆசனத்தில் இருக்கச் செய்தான். பின்பு அவன் படித்திருக்கும் கலைகள் எவை எவை என்பதைப் பற்றியும் சில வினாக்களைக் கேட்டான். உண்மையாகவே தான் புதையல், நிலத்து மறைபொருள்கள் முதலியவற்றைக் காணும் கலைஞன் தான் என்று அந்த அரசன் அப்போதே நம்பும்படியாக அவனுக்கு விடை கூறினான் உதயணன்.

கடைசியில் தன் தந்தை புதைத்து வைத்து விட்டுச் சென்ற அரும்பெரும் புதையலைத் தேடி இருக்குமிடம் அறியாமல் தான் துன்புற்று வருவதையும், அதுவரை வந்த எந்தக் கலைஞரும் அது இருக்கும் இடத்தைப் பற்றிச் சரியாகக் கூற முடியவில்லை என்பதையும் உதயணனிடம் தருசகன் கூறினான். மேலும், "தங்களால் அப் புதையல் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப் பெறுமாயின் யான் பெரிதும் மகிழ்ச்சியுறுவேன். உங்கள் திறமை இதில் எப்படியும் வெற்றி பெறும் என்றே நம்புகிறேன். இந்த உதவியை நீங்கள் எனக்குச் செய்தே தீர வேண்டும்" என்று அவன் வேண்டிக் கொண்ட போது, புதையல் எடுப்பதைப் பற்றிய அவனது எண்ணங்கள் எவ்வளவு பரபரப்பாக இருக்கின்றன என்பதை உதயணன் தெரிந்து கொண்டான். புதிய வேடம், புதிய துன்பத்தை வலுவில் கொணர்ந்திருப்பது உதயணனுக்கு அப்போதுதான் புரிந்தது. 'எப்படியாவது அரண்மனையில் தொடர்புகொள்ள வேண்டுமென்பதற்காக மாறுவேடத்தோடு இந்த நாடகத்தை மேற்கொண்டோம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே இங்கே நமக்காக பெரிய சோதனை காத்துக் கொண்டிருக்கிறதே?' என்று வருந்தினான் அவன். அரசனுடைய வேண்டுகோளுக்கு விடை கூறாமல் 'சொல்லிய வாக்கின்படி புதையலைக் கண்டுபிடிப்பது எவ்வாறு?' என்ற சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான் உதயணன்.

சற்றும் எதிர்பாராத உதவி ஒன்று அவனுக்கு அப்போது கிடைத்தது. ஏற்கனவே புதையலின் இருப்பிடத்தைச் சங்கேதமாகக் குறித்து வைத்திருந்த சில சுவடிகள் அரண்மனையில் இருந்தன. அந்தச் சுவடிகளைப் படித்துப் பார்த்தும் அதுவரை முயன்ற எல்லோருமே ஒருமுகமாகத் தோல்விதான் அடைந்திருந்தார்கள். இருப்பினும் அந்தச் சுவடிகளைக் கொண்டு எப்படியாவது தன் சொல்லைக் காப்பாற்றிக் கொண்டு விடலாம் என்ற நம்பிக்கை உதயணனுக்கு ஏற்பட்டது. 'மறைபொருளோடு சுவடியில் இருந்த சில குறிப்பான வார்த்தைகளை அறிந்து கொண்டால் உறுதியாக அவனுக்கு வெற்றி கிட்டிவிடும்' என்ற எண்ணம் உறுதியாக அவனுக்கு இருந்தது. உதயணன் உறுதிக்கு விதியும் தேவையான முறையில் உதவி புரிந்தது என்று தான் உரைக்க வேண்டும்! சுவடியிலிருந்து படித்து அறிந்ததில் அனுமானமாக அவனுக்குத் தெரிந்த ஓரிடத்தினை ஆட்களை விட்டு அகழ்ந்து பார்த்தால், அதுவே புதையல் இருக்கும் இடமாகத் தெரிந்தது. தருசகனின் தந்தை தாம் வைத்துச் சென்றிருப்பதாக எழுதியிருந்த எல்லாப் பொருட்களும் தோண்டிய அவ்விடத்திலேயே கிடைத்துவிட்டன. தருசகனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. உதயணனுக்கோ தற்செயலாகவும் சாதாரணமாகவும் தனக்குக் கிடைத்து விட்ட பெரிய வெற்றியை எண்ணி வியப்பாக இருந்தது. தருசகன் உதயணனைப் பாராட்டித் தன் அரண்மனைக் கலைஞர்களுள் அவனும் ஒருவனாகப் பதவி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றான். உதயணன் எதிர்பார்த்த தொடர்பு அவனுக்குக் கிடைத்து விட்டது.

37. கன்னி மாடத்தில் உதயணன்

அரண்மனையிலுள்ள பிற கலைஞர்கள் உதயணனுக்கு அவ்வப்போது தேவையான உதவிகளைச் செய்து அவனைக் குறையின்றிப் பார்த்துக் கொள்ளுமாறு தருசகன் கட்டளையிட்டான். எவராலும் தேடிக் கண்டுபிடிக்க முடியாத தன் தந்தையின் புதையலை, அவர் புதைக்கும் போதே பக்கத்தில் இருந்துக் கண்டவன் போல அவன் எடுத்துக் கொடுத்ததினால் அவன் மேல் மகத மன்னன் தருசகனுக்கு அளவற்ற அன்பும் பற்றும் ஏற்பட்டிருந்தன. பின்னர் ஒரு நாள் தருசகனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி உதயணன், 'அரண்மனையைச் சார்ந்த நிலப் பகுதிகளில் எங்கெங்கே நல்ல நீரூற்றுக்கள் இருக்கின்றன?' என்பதை அறிந்து கூறினான். இதற்குரிய நூல்களை அவன் முன்பே ஒருமுறை தற்செயலாகப் படித்து வைத்திருந்தான் என்றாலும் நல்ல ஊழ் அவன் பக்கமிருந்து அவனுக்கு வெற்றி அளித்தது என்றே சொல்ல வேண்டும். புதையல் எடுக்கும் வேலையும் நீரூற்றுக்களைக் காணும் வேலையும் இவ்வளவு விரைவில் விரைவாக ஏற்பாடும் என்று அவனுக்குத் தெரிந்திருந்தால் அவன் அரண்மனைக்கே வந்திருக்க மாட்டான். அவைகளில் எளிமையாகத் தான் வெற்றி கொண்டுவிட முடியும் என்ற நம்பிக்கையும் கூட அவனுக்கு இருந்ததில்லை. அரண்மனையைச் சேர்ந்த இளமரக்காவினுள் நீர் மிகுந்த பல இடங்களைக் கண்டு பிடித்துக் கூறினான். தண்ணீர் ஊறும் இடம் தரைமட்டத்திற்குக் கீழே எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதையும் நீரின் சுவை, நிறம், அப்பகுதியிலுள்ள மணல், பாறை, மண் முதலிய விவரங்கள் ஆகியவற்றையும் கூட அவன் அறிந்து உரைத்தான். மண்ணுக்குள்ளே புகுந்து பார்த்து விட்டு வெளி வந்தவனைப் போல உதயணன் இவ்வாறெல்லாம் விவரங்களைக் கூறியது கேட்ட தருசகன், உலகத்தையே தனக்கு உடைமையாகப் பெற்றவிட்டவன் போல மகிழ்ந்தான்.

உதயணன் இவ்வாறு மாறுவேடங்கொண்டு அரண்மனையிலே கலைஞனாக இருந்து வருவதை உருமண்ணுவா முதலிய மற்ற நண்பர்கள் விரைவில் அறிந்து கொண்டனர். 'அரண்மனையில் ஏதாயினும் பிழை நேர்ந்து, மாறுவேடத்திலுள்ள உதயணன் யார் என்று வெளிப்படையாகி விட்டால், அவனுக்குப் பல தீமைகள் நேருமே' என்று நண்பர்கள் சிந்தித்தனர். முடிவில் தாங்களும் அவன் இருக்கும் இடத்திலேயே அவனுக்குத் துணையாக இருப்பது நல்லது என்ற திட்டத்துடன் தருசகனின் அரண்மனையில் மாறுவேடத்தோடு வேலை தேடிப் போயினர். முதலில் உருமண்ணுவா நல்ல வேலையொன்றில் அமர்ந்தான். உதயணன் தன் கவனத்திலிருந்து விலகிவிடாதபடி அவனால் பார்த்துக் கொள்ள முடிந்தது. இசைச்சனும் வயந்தகனும் சமய நூல்களிலும் தரும நூல்களிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர்களைப் போல நடித்துப் பதுமையின் தாய்க்கு அறநூல்களைப் போதிக்கும் ஆசிரியர்களாக வேலை பெற்று அரண்மனைக்கு வந்தனர். மற்ற வீரர்களிற் சிலர் பதுமைக்கு விதவிதமான மலர் மாலைகளைக் கட்டிக் கொடுக்கும் பணியில் அமர்ந்தனர். இவ்வாறே உதயணனைப் போல அவனோடு வந்த யாவரும் அரண்மனையில் தொடர்பு கொண்டு விட்டனர். உதயணன் செல்லும் வழியில் அவனுக்குத் துன்பம் நேராமல் சுற்றியிருந்து காப்பது அவர்கள் கடமை அல்லவா? அந்தக் கடமையுணர்ச்சி தான் அவர்களையும் அரண்மனையில் தொடர்பு கொள்ளத் தூண்டியது.

மாறுவேடத்தோடு கூடிய நண்பர்களும் அரண்மனைக் கலைஞர்களும் எந்நேரமும் தன்னைச் சூழ இருப்பதை உதயணனும் அறிவான். ஆனாலும் அவர்களில் எவரும் அறிய முடியாதபடி காமன் கோட்டத்திற்குச் சென்று வருவதை மட்டும் அவன் நிறுத்தவில்லை. அதே பழைய மணவறை மாடத்தில் பதுமையும் அவனும் தொடர்ந்து தனிமையிலே சந்தித்து வந்தனர். அவர்களுடைய சந்திப்புக்களின் எண்ணிக்கையைப் போலவே காதலும் வளர்ந்து பெருகி வந்தது. ஆனால் இவ்வாறு சந்திக்கும் சந்திப்பில் உதயணனுக்கு இருந்ததை விடப் பதுமைக்கு மிகுதியான துன்பங்கள் இருந்தன. நாள்தோறும் மாலையில் காமன் கோட்டத்திற்கு வருவதும் மணவறைகுள் தனியே சென்று வெகுநேரம் தங்கி விட்டுத் திரும்புவதும் பிறர் சந்தேகங் கொள்ளத்தக்கவை ஆகும். தோழியரும் காவலர்களும் கோட்டத்திற்கு வெளியே இருக்கின்றனரே என்ற கவலை வேறு பதுமையைத் துன்புறுத்தியது. இந்தத் துன்பம் பதுமைக்குப் புதிய எண்ணம் ஒன்றை அளித்தது. உதயணனை மறைவாகத் தன்னோடு தனது கன்னி மாடத்திற்கே அழைத்துச் சென்று விடுவது என்று துணிவாகத் திட்டமிட்டாள் பதுமை. அவள் எவ்வளவுக்கு எவ்வளவு பெண்மையின் மென்மையான குணங்களைப் பெற்றிருந்தாளோ அவ்வளவுக் கவ்வளவு நெஞ்சுத் துணிவையும் கொண்டிருந்தாள். நினைத்ததைக் கைவிடாமல் செய்து முடிக்கும் திறன் அவளுக்கு இருந்தது. கன்னிமாடத்திற்கு உதயணனை அழைத்துப் போக என்னென்ன சூழ்ச்சிகளைச் செய்ய வேண்டியிருக்குமோ அவற்றைத் தான் எளிமையாகச் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு முழுமையாக இருந்தது.

பதுமை வகுத்திருந்த திட்டம் இதுதான்! 'ஒருநாள் காமன் கோட்டத்தில் தன் கையால் பலவகை அறங்களைச் செய்வதாகக் கூறிப் பகல்பொழுதிலேயே அங்கு வந்துவிடவேண்டும். வரும்போது சுற்றித் திரைச்சிலை போர்த்து இருவர் அமரத்தக்க பெரிய மூடுபல்லக்கு ஒன்றையும் கொண்டு வரவேண்டும். அன்று முழுவதும் உணவு கொள்ளாமல் விரதமிருந்து வழிபடுவதாகக் கூறிக் காமன் கோட்டத்து மணவறையில் உதயணனோடு பொழுதைக் கழிக்க வேண்டும். பொழுது சாய இருக்கும்போது அறங்களைக் கொடுப்பதாகப் பேர் செய்து முடிந்த பின் மூடு பல்லக்கில் பிறர் அறியாமல் உதயணனோடு தானும் ஏறிக் கொண்டு கன்னி மாடத்திற்குப் புறப்பட்டு விடவேண்டும்.'

இந்தத் திட்டத்தை அவள் குறிப்பாக உதயணனுக்கு முன்பே கூறிவிட்டாள். உதயணனோ, அரண்மனையில் இருக்கும்போது புதையல் எடுக்கும் கலைஞனுக்கு உரிய மாறுவேடத்தோடும், பதுமையைச் சந்திக்க வரும்போது 'மாணகன்' என்ற அந்தண இளைஞனாகவும் வந்து போய்க் கொண்டிருந்தான். இந்த இரண்டு வேற்று வடிவங்களையும் மேற்கொண்டு இரண்டு இடங்களிலேயும் தான் உதயணன் என்பது தெரிந்துவிடாதபடி அவன் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு வந்தான். குறிப்பிட்ட நாளன்று பதுமை, பகலிலேயே காமன் கோட்டத்திற்குப் புறப்பட்டு விட்டாள். தோழிப் பெண்களும், வயது முதிர்ந்த காவலர்களும், தானப் பொருள்களையும் வழிபாட்டுப் பொருட்களையும் ஏந்தி வரும் ஏவல் மகளிரும் உடன் வந்தனர். அவள் ஏற்பாட்டின்படி, திரைச்சீலை போர்த்த மூடுபல்லக்கு ஒன்றும் உடன் கொண்டு வரப்பட்டது. காமன் கோட்டத்தை அடைந்ததும் முன்னேற்பாடாக அந்தப் பல்லக்கை மணவறை மாடத்தின் அருகிலேயே வைக்குமாறு அதனைத் தூக்கி வந்தவர்களுக்குப் பதுமை கட்டளையிட்டாள். அவள் சொல்லியபடியே புதுப்பட்டுத்திரை மின்னும் அந்தச் சிவிகை மணவறைக்குப் பக்கத்தில் இறக்கி வைக்கப்பட்டது.

தான் மாடத்தினுள்ளே தனிமையில் விரதம் இருந்து வழிபடப் போவதாகக் கூறி, உடன் வந்த தோழிகளை அங்கங்கே பிரித்து ஒதுக்கிவிட்டுப் பதுமை மாடத்தில் நுழைந்தாள். பழைய இடத்திலேயே உதயணன் மறைந்திருந்தான். பதுமை புன்னகையோடு அவன் முன்னே தோன்றினாள். புன்னகையைப் பதில் புன்னகையாலே வரவேற்றான் உதயணன். அன்றைய பகல்பொழுது அவர்களுக்கு அந்த மாடத்தினுள்ளே கழிந்தது. நேரம் போனதே தெரியவில்லை. காதல் விளையாட்டுகளிலும் பேச்சிலும் மாலைப் பொழுதுவரை கழிந்துவிட்டது. கன்னிமாடத்திற்குப் புறப்பட்டுச் செல்லவேண்டிய நேரம் ஆகிவிட்டதைப் பதுமை உணர்ந்தாள். வெளியே அவள் சுட்டிக் காட்டிய இடத்தில் இருந்த சிவிகையை உதயணன் பார்த்து வைத்துக் கொண்டான். அவள் கூற வேண்டியவற்றை எல்லாம் குறிப்பாற் கூறினாள். யாவும் கேட்டுக் கொண்டு உதயணன் தலையசைத்தவாறே குறும்புச் சிரிப்பு ஒன்று இதழ்களில் தோன்ற நடந்து சென்றான்.

அவன் சிரிக்கும் அழகைக் கண்களால் பருகிக் கொண்டே பதுமை வெளியே சென்றாள். தானங்கள் வழங்குவதாகக் கூறிய செய்தியை மெய்யாக்கிக் காட்டவேண்டிய நாடகம் எஞ்சி இருந்தது. அதுவும் முடிந்து விட்டால் திட்டம் வெற்றி பெற்றது போலத்தான். பின்பு மூடுபல்லக்கில் காதலனோடு அரண்மனைக்குப் புறப்படுவதற்கு எதுவும் தடையில்லை. பதுமை கோட்டத்தில் இருந்து வெளிப்பட்டு வாயிலை அடையவும், அங்கே காத்திருந்த ஏவல் மகளிர் தானமாக வேண்டிய பொருட்களை வரிசையாகத் தூக்கிக் கொண்டு அவளருகில் வந்து நின்றனர். காவலர்கள் சங்கு முதலிய வாத்தியங்களை முழக்கி தானம் தொடங்கிவிட்டதை அறிவித்து இரவலர்களை அழைத்தனர். ஆடை வகைகளையும், பொன், மணி, முத்து இவைகளால் ஆகிய அணிகலன்களையும் பலவித உணவுப் பொருள்களையும் வருவோர்க்கு எல்லாம் தன் கையாலேயே பதுமை வரையாது வழங்கினாள். வந்திருந்த இரவலர்கள் யாவரும், தத்தமக்கு வேண்டுவனவற்றை வேண்டிய அளவு விருப்பத்தோடு பெற்றுச் சென்றனர்.

அவ்வளவில் மாலை முடிந்து எங்கும் இருள் பரவிற்று. காமன் கோட்டத்தில் இருந்த எல்லா மணி விளக்குகளும் ஏற்றப்பட்டன. பதுமை கோவிலின் உள்ளே இருந்த மணி விளக்கைத் தன் கையாலேயே ஏற்றிவிட்டுப் புறப்படத் தொடங்கினாள். கூட்டமாகப் பதுமையை நெருங்கி வந்த பெண்களை அவள் தோழி யாப்பியாயினி என்பவள், "எம் அரசி இன்று உண்ணா நோன்பு இருந்து களைப்புற்றிருக்கிறாள். இப்படிக் கூட்டம் கூடி நெருக்கினால் நல்ல காற்றும் அவளுக்குப்படாது" என்று குறிப்பறிந்து கூறிவிலக்கினாள். அப்போது முதிய பெண்கள் சிலர், மங்கல வாழ்த்துப் பாடினர். யாப்பியாயினி உதவியால் பதுமை தனிமை பெற்றாள். விரைவாக உள்ளே நுழைந்து, உதயணனை மூடு சிவிகையில் ஏற்றிவிட்டுத் தானும் அதே சிவிகையில் ஏறிக் கொண்டாள். குறிப்பாக எல்லாம் தெரிந்து கொண்டிருந்த யாப்பியாயினி, "அரசி மிகவும் களைப்புற்றிருக்கின்றமையினால் தனியாக இந்த மூடு பல்லக்கிலேயே ஏறிச் செல்லட்டும்" என்று காவலர்களை நோக்கிக் கூறினாள். காவலர்கள் பல்லக்கைத் தூக்கினர். பதுமை பல்லக்கின் திரைச்சீலை காற்றிலே ஒதுங்கிவிடாமல் இறுக இழுத்துப் போர்த்தினாள். வண்டோடு கூடிய தாமரை மலர் போல இருந்தது அவள் உதயணனோடு பல்லக்கினுள் இருந்த நிலை. யாப்பியாயினிதான் பதுமையிடம் முன்பே பெற்றிருந்த ஏவலின்படி, "இப் பல்லக்கைத் தேவியின் அந்தப்புரத்திலுள்ள கன்னிமாடத்தில் பதுமையின் பள்ளியறை அருகிலே தவிர வேறு எங்கும் நிறுத்தவோ வைக்கவோ கூடாது" என்று தூக்குபவர்களை நோக்கிச் சொன்னாள். பல வீதிகளையும் சோலைகளையும் கடந்து, சிவிகை அரண்மனையில் பதுமையின் கன்னிமாடத்திற்குள் புகுந்தது. உடன் வந்தவர்கள் வெளியிலேயே தங்கிவிட்டனர்.

38. பதுமையின் சினம்

பல்லக்கைத் தூக்கி வந்தவர்கள் பதுமையின் கன்னி மாடத்திற்குள் நுழைந்து பள்ளியறை வாயிலில் அதை இறக்கியபோது தோழி அயிராபதி விசிறியோடு பணிவாகக் காத்துக் கொண்டிருந்தாள். மயிற் பீலியினால் இயற்றப்பட்ட பெரிய ஆலவட்டம் அவள் கையிலிருந்தது. அவள் ஒரு புறமாக ஒதுங்கிச் சென்றபின் பதுமை உதயணனைப் பல்லக்கில் இருந்து வெளிப்படுத்தித் தன் பள்ளியறைக்குள்ளே அழைத்துச் சென்றாள். கன்னிமாடத்திலும் அதனுள் இருக்கும் பிற பகுதிகளிலும் அயலார் யாரும் இல்லை என்பதைப் பதுமை அப்போதே சுற்றிப் பார்த்துத் தெரிந்து கொண்டாள். இனி அயலவர்களை மிகுதியாக நடமாடவிடக் கூடாது என்றும் தனக்கு மிகவும் வேண்டிய தோழிகள் சிலரிடம் கூறியிருந்தாள். அன்றிலிருந்து யாழ், இசை முதலிய கலைகளைத் தான் மீண்டும் தெளிவாகக் கற்கப் போவதால் தனக்குக் கன்னிமாடத்திற்கே உணவைக் கொண்டு வந்து விடுமாறு கூறிவிட்டாள் பதுமை. யாப்பியாயினி என்ற தோழி பதுமைக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் விருப்பத்தோடு அந்தரங்கமாகச் செய்து வந்தாள். கன்னிமாடத்தின் ஏழாவது மாடத்தில் இருந்தது பதுமையின் பள்ளியறை. பதுமையின் கன்னிமாடத்திற்கு உதயணன் வந்த பின்னர் நாட்கள் வரிசையாகக் கழிந்து கொண்டிருந்தன. தோழி யாப்பியாயினி, பதுமை இவ்விருவர் தவிர வேறு எவரும் உதயணன் அங்கிருப்பதை அறியார்.

வேறு ஓர் இடமாக இருந்தால் உதயணனுக்கு இந்த மறைவு வாழ்க்கை அலுத்துப் போயிருக்கும். பதுமையின் காதலிலும், அவள் தனியாகத் தன்னை மறைத்து வைத்துப் பேணுவதிலும் அவன் அடைந்த இன்பம் நிகரற்றது. அந்த இன்பம் தான் அவனை அத்தகைய மறைவு வாழ்க்கைக்கு ஒப்புக் கொள்ளச் செய்தது. முழுமதியும் உரோகிணியும் ஒன்றுபட்டது போல அவனும் பதுமையும் அங்கே ஒன்று பட்டிருந்தனர். 'உதயணன் எங்கே எவ்வாறு இருக்கிறான்?' என்ற விவரம் முற்றிலும் தெரியவில்லை. எனினும், 'அவன் எப்படியும் பதுமையோடு அரண்மனைக்குள்ளேதான் இருக்கவேண்டும்' என்று உருமண்ணுவா முதலியோர் நுட்பமாக அனுமானித்து அறிந்து கொண்டனர். அவர்கள் அரண்மனையின் பிற பகுதிகளாகிய இடங்களில் வழக்கம் போல் மாறுவேடத்தோடு தங்கள் வேலையைக் கவனித்து வந்தனர். உதயணனோ ஆடவர்கள் என்றுமே புகமுடியாத அரண்மனையின் உட்பகுதியில், கன்னிமாடத்தின் ஏழாவது மாடத்திலே, அவர்கள் அறியாதபடி பதுமையோடு வசித்து வந்தான். இங்ஙனம் பதுமையோடு வசித்து வரும்பொழுது, அவள் தன் மேல் காட்டும் அளவு கடந்த காதலால், 'பதுமை நம்மை ஏதேனும் சூழ்ச்சியில் ஆழ்த்துவதற்கு எண்ணி இப்படிக் கன்னிமாடத்தில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறாளோ?' என்று சில சமயங்களில் விளையாட்டும் வினையும் கலந்த சந்தேக எண்ணங்கள் கூட உதயணனுக்குத் தோன்றும்.

'ஏதோ? எப்படியோ எந்தச் சமயத்தில் நமக்கு என்ன நேருமோ? எதற்கும் நாம் தான் முன்னேற்பாட்டுடன் இருக்க வேண்டும்' என்று எண்ணிய உதயணன், பதுமையினுடைய தோழியாகிய யாப்பியாயினியைக் கொண்டு இராசகிரிய நகரத்தையும் அதில் அரண்மனையின் அமைப்பையும் விளக்கத்தக்க சித்திரம் ஒன்றை எழுதி வாங்கி வருமாறு செய்தான்.

அவன் விருப்பப்படி அவள் எழுதுவித்துக் கொணர்ந்த அந்தச் சித்திரத்தால், அரண்மனையின் ஒவ்வோரிடமும் எங்கெங்கே எப்படி அமைந்திருக்கிறது என்பதையும், தான் இருக்கும் கன்னி மாடத்திலிருந்து தப்பிச் செல்ல வேண்டுமானால் எப்படித் தப்பிச் செல்லலாம் என்பதையும், உதயணன் நன்கு அறிந்து வைத்துக் கொண்டான். தருசக வேந்தனுடைய நாட்டின் பரப்பு, படைவன்மை முதலிய யாவற்றையும் அறிந்து கொண்ட பின், 'அவசியமானால் அவனை வெல்லும் திறமை கூடத் தனக்கு உண்டு' என்று துணிந்தான் உதயணன். சூழ்ச்சிகள் எவையேனும் நேருமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தான் அவன் அந்த ஓவியத்தை முன்னேற்பாடாக வாங்கி வைத்துக் கொண்டிருந்தான். மேலும் தான் அங்கே கன்னிமாடத்தில் அதிக நாள் தங்குவதனால் தனக்கு எந்த வகையிலும் கேடில்லை என்று உறுதி செய்து கொள்ளவும் இது உதவியது. பதுமை தான் யாழ் முதலியன கற்கப் போவதால் கன்னிமாடத்திற்கே உணவைக் கொண்டு வந்துவிடும்படி முன்பே ஏற்பாடு செய்திருப்பினும், அதனால் கூட உதயணனுக்கும் அவளுக்கும் சிற்சில துன்பங்கள் நேரலாயின. உணவு கொண்டு வரும் போது பதுமையின் நற்றாய், செவிலித் தாய், மிக நெருங்கி உடன் பிறந்தோர் போலப் பழகி விட்ட சில தோழிப் பெண்கள் ஆகியவர்களும் சில சமயங்களில் கன்னி மாடத்திற்குள் வந்து போகத் தலைப்பட்டனர். இதனால் மேலே எழுநிலை மாடத்தில் சரியான நேரத்தில் உதயணன் உணவு கொள்ள முடியாமல் போயிற்று. பதுமை ஒருத்திக்கு வரும் உணவு தான் உதயணன் வயிற்றையும் நிரப்பி வந்தது. மேற்கூறியவர்கள் அடிக்கடி வந்து பேசியும் பொழுது போக்கியும் பதுமையின் நேரத்தைக் கவர்ந்து கொண்டதனால் அவளுக்கு உதயணனோடு செலவழிக்க மிகக் குறைந்த நேரமே எஞ்சியது.

உதயணன் நிலையும் இதனால் கூட்டில் தனியே அடைக்கப்பட்ட கிளியினது நிலைமையைப் போலாகிவிட்டது. உரிய காலத்தில் தனது உணவில் அவனுக்குப் பங்கிட்டுக் கொடுக்க முடியாமல், பதுமை உண்ணும்போது அங்கு வந்தவர்கள் பக்கத்தில் அமர்ந்துவிடுவார்கள். அது ஒன்றுதான், இவையாவினும் பதுமையின் மனத்தை அதிகமாகத் துன்புறுத்தியது. இந்தத் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு வழிதேடிய அவள், யாப்பியாயினியின் துணையாலேயே அதையும் அடைந்தாள். மறுநாளிலிருந்து பதுமை எழுநிலை மாடத்தில் உதயணனுடனேயே இருந்தாள். அவள் கன்னி மாடத்தின் கீழ்ப்பகுதிக்கு வரவேண்டிய அவசியமில்லாதபடி யாப்பியாயினி தானே உணவு முதலியனவற்றை மேலே கொண்டு போய்க் கொடுக்கத் தொடங்கினாள். பதுமை கலைகளை நுணுக்கமாக மனஞ்செலுத்திக் கற்பதாகக் கூறி அவளுடைய தாயார், தோழி முதலியவர்களின் போக்கு வரவையும் கொஞ்சம் கொஞ்சமாக யாப்பியாயினி குறைத்து விட்டாள். இந்தப் பெரிய உதவியைச் செய்வதற்காகப் பதுமை யாப்பியாயினிக்கு மிகுந்த நன்றி செலுத்தினாள்.

இதன் பிறகு கன்னிமாடத்தின் மேற்பகுதியிலேயே இன்பமாகக் கழிந்து வந்தன அவர்களுடைய நாள்கள். அவ்வாறு இருக்கையில் ஒரு நாள் உதயணனுக்கு அங்குள்ள மாடங்களின் சித்திரம், சிற்பம் ஆகிய வேலைப்பாடுகளில் கவனம் சென்றது. அவைகள் அமைக்கப்பட்டிருந்த முறை அவனைக் கவர்ந்தது. மாடப் பேரறையில் அமைந்திருந்த கட்டிற் கால்கள் தந்தத்தினால் செய்யப்பட்டிருந்தன. விரிப்புப் பொருந்திய கட்டிலின் மேற்கட்டியில் முத்து, பவழம் முதலியவற்றினால் கோத்த அழகிய மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. சுற்றுப்புறத்தில் பதிந்திருந்த கண்ணாடிகளில் அவற்றின் ஒளிக்கதிர்கள் மின்னின. கட்டிலின் விளிம்புகளில் யானை, வீணை, சிங்கம், பலவகைக் கொடிகள் முதலியவை வனப்புறச் செதுக்கப் பெற்றிருந்தன.

பக்கத்தில் வட்ட வடிவமான பல தட்டுக்களில் அருமையான பாக்கு வகைகளும் வேறு சில வாசனைப் பொருள்களும் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. இப்படி அவன் அவைகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த போது, அறையின் மற்றொரு கட்டிலில் பதுமை அவனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள்.

உதயணன் அவள் வரவைக் கவனிக்கவில்லை. அப்போது இரவு நேரம். முழுமதி தன் அமுதக் கதிர்களைப் பரப்பிக் கொண்டிருந்தது. உதயணன் பதுமை வெகு நேரம் தனக்காக மிக அருகிலேயே அமர்ந்து கொண்டு காத்திருப்பதை அறியாமல் மாடத்தில் வரைந்திருந்த சித்திரங்களின் நயங்களையே பார்த்துச் சுவைத்துக் கொண்டிருந்தான். உதயணன் அப்படி தன்னை வேண்டுமென்றே பாராமுகமாக இருக்கிறான் என்றெண்ணிய பதுமை மிக்க சினமும் ஊடலும் கொண்டாள். அவன் அவ்வாறிருப்பதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவனுக்கு ஏதாவது பாடம் கற்பிக்க எண்ணினாள் அவள். இதையெல்லாம் ஒன்றும் அறியாமல், உதயணன் தற்செயலாக அவள் இருந்த பக்கம் திரும்பினவன், அவளை அதுவரை கவனியாமல் இருந்துவிட்டதற்காக வருந்தியவாறே அருகில் நெருங்கினான். நெருங்கிய அவன் மேல் சீறி விழுந்தாள் பதுமை. உதயணன் திடுக்கிட்டான். தான் செய்துவிட்ட பெருந்தவறு என்ன என்று அவனுக்குப் புரியவில்லை. தழுவச் சென்ற அவனுடைய கைகளை அவள் ஒதுக்கித் தள்ளினாள். அவளுடைய அப்போதைய தோற்றத்தைக் கண்ட உதயணன் முதலில் 'என்னவோ? ஏதோ?' என்று பயந்து விட்டான். அப்போது அதே தோற்றமுடன், சினம் பொங்கும் குரலில் பதுமை அவனை நோக்கிப் படபடப்போடு பேசத் தொடங்கினாள்.

"உச்சிக் கொண்டையையும் சிறகையும் அழகாக வாரித் திருத்தமுற நறுமணத் தைலம் பூசிச் சோறும் பாலும் தூய்மையாக ஊட்டினாலும், குப்பை கிளைக்கும் கோழி மீண்டும் குப்பை மேட்டைத்தானே தேடிக் கொண்டு ஓடும். ஆடவர்களும் அத்தகைய குப்பைக் கோழி போன்றவர்கள்தாம் போலும்! அதை இன்று கண் கூடாகவே இங்கே நான் கண்டுவிட்டேன்" என்று கைகளை அழுத்தி நெரித்துக் கொண்டே சினத் துடிப்புடனே நிறுத்தி நிறுத்திக் கூறினாள் பதுமை. அவள் தன்னிடம் சினமும் ஊடலும் கொண்டிருப்பதற்கு என்ன காரணம் என்று இப்போது உதயணனுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. தன்மேல் அவளுக்கு ஏற்பட்ட ஊடலோடு கூடிய அந்தச் சினத்தால், அணிகலன்களைக் கழற்றித் தரையிலே சிதறியும் கூந்தலை அவிழ்த்துக் கொண்டும் அவள் தோன்றிய அந்தச் சினத் தோற்றத்திலும் உதயணன் தனிப்பட்டதோர் அழகைக் கண்டான்.

அவளது சினத்தை எப்படியாவது தீர்க்கக் கருதிய அவன் அருகில் நெருங்கித் தான் வேண்டுமென்றே இப்படி இருக்கவில்லை என்றும் கவனக் குறைவாக இருந்துவிட்டதாகவும் இனிய மொழிகளில் இரங்கிக் கூறினான். அவளது அவிழ்ந்த தலையைக் கோதியும், சிதறிக் கிடந்த அணிகலன்களை எடுத்துக் கொடுத்தும், பல இங்கிதமான சொற்களைப் பேசியும் ஊடலைத் தணிக்க உதயணன் செய்த முயற்சிகள் யாவும் வீணாயின. அவனை அருகில் நெருங்க விடாமல் தள்ளினாள் சினந்தணியாத பதுமை. அப்போது எதிர்பாராத துணை ஒன்று இயற்கையாகவே உதயணனுக்குக் கிடைத்தது. மாடத்தின் கீழிருந்த சோலை மரங்களில் இருந்து கூகையொன்று திடீரென்று பறந்து வந்து மாடத்தில் அவர்கள் கட்டிலருகில் உள்ள திரிசூலத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு பலமான குரலில் பயங்கரமாக ஒருமுறை கத்தியது. அந்தக் குரலைச் செவியுற்ற பதுமை திடுக்கிட்டு நடுக்கத்தோடு திரும்பிய போது கோட்டானின் நெருப்புக் கண்கள் பயங்கரமாக இருளில் மின்னின. பதுமை பயந்துபோய் உடனே உதயணனைத் தழுவிக் கொண்டாள். இதனால் அவள் சினமும் ஊடலும் தீர்ந்து போயின. சமயத்தில் வந்து தனக்கு உதவி செய்த கூகையை வாழ்த்திக் கொண்டே பதுமையை ஊடல் தணியச் செய்தான் உதயணன்.

39. காதலன் கலைநலம்

உதயணனோடு பேசுகிறபோதும், பழகுகிற போதும் அவன் ஏதோ அரசகுலத்திற் பிறந்த ஓர் இளைஞன் என்ற எண்ணமே இயல்பாகப் பதுமைக்கு ஏற்பட்டது. அவனே தன்னிடத்தில் கூறியிருந்தபடி மாணகன் என்ற அந்தண இளைஞனாக அவனை அவளால் எண்ண முடியவில்லை. அவனோடு பழகப் பழகத் 'தான் ஓர் அந்தண இளைஞன் என்று அவன் கூறியது பொய்' என்பதாக ஒரு விதமான நம்பிக்கையும் அவளையறியாமலே அவள் உள்ளுணர்வில் கலந்து வளர்ந்து வந்தது. அவன் வேண்டுமென்றே உண்மையைத் தன்னிடம் மறைப்பதாகத் தோன்றியது அவளுக்கு. சொல்லும், செயலும், எடுப்பான தோற்றமும், திருநிறைந்த முகச்சாயலும் ஆகிய யாவும் சேர்ந்து உதயணனின் மாறு வேடத்தில் அவளுக்கு ஐயத்தைத் தோற்றுவித்திருந்தன. அந்த ஐயத்திற்கு உரிய விவரமான விடைதான் அவளுக்குப் புரியவில்லை! 'எதற்கும் அவனுடைய கலைத்திறனைப் பரிசோதித்துப் பார்க்கலாம்' என்ற கருத்துடன் தன் தோழியாகிய யாப்பியாயினியின் துணையை அதற்காக நாடினாள். மாடத்திலுள்ள பள்ளியறையில் அப்போது பதுமை இருந்தாள்.

நண்பகற்போது ஆகியிருந்தது. யாப்பியாயினியை அழைத்து அவளிடம் தனது கருத்துக்களைக் கூறித் தன் முன்னிலையில் அவற்றை அவனிடம் விசாரித்து விடை கேட்க வேண்டும் என்று கூறினாள் பதுமை. 'தானே நேருக்கு நேர் அவனைக் கேட்பது அவ்வளவு பொருத்தமாக இராது. மேலும் அவன் மனத்தில் தன்னை ஐயமுறக் காரணமாகும்' என்றெண்ணியே யாப்பியாயினியை, பதுமை தானும் அறிய வசதியாக, தன் முன்னிலையிலேயே அவனிடம் பேச்சுக் கொடுத்து அவற்றை அறியுமாறு கேட்டுக் கொண்டாள். தோழியும் அதற்கு ஒப்புக் கொண்டாள். அப்படியே செய்யவும் முற்பட்டாள்.

உதயணன் மாடப் பேரறைக்குள் வந்து அமர்ந்ததும் யாப்பியாயினிக்குப் பதுமை கண்களால் ஏதோ குறிப்புக் காட்டினாள். யாப்பியாயினி அந்தக் குறிப்பைப் புரிந்து கொண்டு உதயணனை அணுகிப் புன்னகையோடு கேட்கலானாள். "மதிப்பிற்குரிய அந்தண இளைஞரே! தங்களைப் பார்த்தால் இசை முதலிய நுண்கலைகள் பலவற்றிலும் தங்களுக்கு நல்ல பயிற்சி இருக்க வேண்டும் என்று தெரிகிறது. உண்மையில் தாங்கள் எந்த எந்தக் கலைகளில் தேர்ச்சிப் பெற்றிருக்கிறீர்கள் என நாங்கள் அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறோம். அருள் கூர்ந்து இதற்கு விடை கூறலாமா?" என்று பணிவோடு அவனிடம் கேட்டாள். புன்னகையோடு அவள் இவ்வாறு கேட்டதும் அவள் குரலில் இருந்த பணிவு ஒருவிதமான குறிப்புடன் அமைந்திருந்ததையும் கண்டு முதலில் உதயணனுக்குச் சந்தேகம் உண்டாகிவிட்டது.

இவர்கள் நம்மைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு விட்டார்களோ என்ற அச்சம் ஒரு கணம் அவனை நடுங்கச் செய்தது. அதே நேரத்தில் தன்னிடம் அந்தத் தோழி குத்தலாகவே அப்படிக் கேட்டிருக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டே அவனுக்குச் சிறிது சினமும் எழுந்தது. அப்படி இருந்தும்கூட அவன் தான் அந்தண இளைஞன், என்ற வேடத்திற்கு ஏற்றபடியே அவளுக்கு மறுமொழி சொன்னான். மறுமொழியாக அவன் சொன்ன வார்த்தைகளிலேயே அவன் மனத்தில் மூண்ட அந்தக் கோபத்தின் குறிப்பும் இலேசாகத் தொனித்தது. "வேதங்களை நன்கு பயின்ற அறிஞர்கள் பலர் இருந்தால் அவர்களுக்கு முன் என் திறமையையும் வேதநூற் பயிற்சியையும் விளக்கிக் காட்டுவேன்! அந்தண இளைஞனாகிய எனக்கு இதனைத் தவிர வேறு என்ன தெரிந்திருக்க முடியும்? இசை முதலிய கலைகளை என் போன்றோர் எவ்வாறு கற்க நேர்ந்திருக்கும்! தெரிந்திருந்தும் என்னிடம் நீ இந்தக் கேள்வியை விளையாடுபவள் போலக் கேட்கிறாயே? இது உனக்கே நன்றாயிருக்கிறதா? அந்தணர்களுக்கு வேத நெறியும் வைதீக ஒழுக்கமுமே தலைசிறந்த கலைகள். வேள்வி செய்யவும் அதற்குரிய கருவிகளை இயற்றவும் நான் நன்கு அறிவேன். இசைக் கருவிகளையும் இசையையும் அறிவதனால் எங்கட்கு ஏதும் பெரும் பயன் உண்டோ? என்றோ ஒருநாள் என் மனைவியின் வற்புறுத்தல் பொறுக்க முடியாமல் அவள் நோயாகக் கிடந்த துயரை மறக்கச் செய்வதற்காக 'குடமுழா' என்ற இசைக் கருவியை ஒரே ஒருமுறை வாசித்திருக்கிறேன். அதுதான் நான் முதன் முதலாக இசைக் கருவியைக் கையால் தொட்ட நாள்" என்று அழகாகத் தன் நடிப்புக்கு ஏற்ற வார்த்தைகளைப் புனைந்துரைத்தான். இதைக் கேட்ட பதுமை புன் சிரிப்பொன்றை உதிர்த்துக் கொண்டே யாப்பியாயினியின் காதிலே மட்டும் விழும்படியாக "அவ்வளவும் நடிப்பு. உண்மையில் இவர் ஒரு கலைஞராக இருக்க வேண்டும். அதை இப்போதே சோதித்து அறிந்து விடுவோம். நீ சென்று நான் வாசிக்கும் யாழை எடுத்துக் கொண்டு விரைவில் இங்கே வா!" என்றாள். உடனே தோழி விரைவாகச் சென்று பதுமையின் யாழோடு திரும்பி வந்தாள். யாழைப் பதுமையின் கைகளில் அளித்தாள்.

பதுமை யாழைத் தன் கையில் வாங்கி அதை வாசிக்க முயலுகின்றவள் போலச் சிறிது நேரம் நரம்புகளை மீட்டினாள். வேண்டுமென்றே நரம்புகளில் கெட்ட ஓசையைப் பிறக்குமாறு செய்து தான் அதை வாசிக்க ஆற்றாதவள் போலத் தோழியிடம் அளித்து உதயணன்பாற் கொண்டு சென்று அதனைச் செப்பஞ் செய்து வாங்கி வருமாறு குறிப்பாற் கூறினாள். அவன் இசைக் கலையில் நல்ல பழக்கம் உடையவன் என்பதை எவ்வகையிலாவது வெளிப்படச் செய்து விட வேண்டும் என்பது பதுமையின் ஆசை. அந்த ஆர்வத் தூண்டுதலினாலேதான் பதுமை இவ்வாறு செய்தாள். யாப்பியாயினி மீண்டும் யாழைக் கையில் வாங்கிக் கொண்டு சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த உதயணன் பக்கம் சென்றாள். யாழை உதயணனுக்கு முன்னால் பட்டு உறையை விரித்து அதன் மேல் வைத்து விட்டு, "இதன் நரம்புகள் தளர்ந்தமையால் இது தனது ஒலி பிழைத்தது. இதனுடைய நரம்புகளை ஏற்ற இடத்தில் அமையும்படி முறுக்கிக் கட்டிக் கொடுத்தருளல் வேண்டும்" என்று அவனிடம் கூறினாள்.

ஏதோ கவனத்தில் வேறு சிந்தனையில் இலயித்துப் போயிருந்த உதயணன் செவிகளில் அவள் கூறிய வார்த்தைகள் சரியாக விழவில்லை. அவள் தனக்கு முன்பு யாழை வைத்திருக்கக் கண்டு வழக்கப்படி தன்னை வாசிக்கச் சொல்லி வேண்டுகிறாள் போலும் என்று எண்ணிக் கொண்டு, "இந்த யாழ் வித்தையோடு எந்த வழியிலும் தொடர்பு இல்லாதது எங்கள் அந்தணர் மரபு. என்னை இப்படி வாசிக்கச் சொல்லி வற்புறுத்தி வருவதைப் பார்த்தால் இனிமேல் யாழ் கற்றுக் கொண்டு விடலாமா என்றெண்ணுகிறேன் யான்?" என்று சற்றே உரத்த குரலில் அவளுக்கு உதயணன் விடை கூறினான். அதைக் கேட்ட பதுமை சிரித்த வண்ணம் "அந்தணர் பெரும! நீ இதனை வாசிக்கவோ அதற்காக வலிய முயன்று கற்கவோ வேண்டாம்! இதிலுள்ள நரம்புகள் தளர்ந்ததனால் இது இனிமை குன்றிப் போயிற்று. சற்றே நரம்புகளை இறுக்கி ஒன்று சேர்த்துக் கொடுத்தால் போதும்" என்று பதுமை திரும்பவும் சாதுரியமாகக் கூறினாள். சூழ்ச்சிகளிலும் பிறர் மன இயல்பை நுட்பமாக ஆராய்ந்து உணர்வதிலும் தேர்ந்தவனான உதயணன் இந்த இடத்தில் தன்னை மறந்து பரவச நிலையோடு, பதுமையின் தந்திரப் பொறியில் மாட்டிக் கொண்டான்.

யாப்பியாயினிக்குக் கூறிய விடையளவில் தான் அவனுடைய நடிப்பு பயன்பட்டது. யாழ்க் கலையில் பயின்று பழகிப் பழுத்த அவன் கைகள் அவன் நடிப்பையும் மறந்து தாமாகவே மீறிவிட்டன. நரம்புகளை இறுக்கிக் கொடுக்குமாறு பதுமையின் தோழி கேட்டபோது, 'நான் யாழோடு சற்றும் பழக்கம் இல்லாத அந்தணர் குலத்திற் பிறந்தவன்' எனத் தான் கூறியதற்கு ஏற்பப் பேசாமல் இருக்க வேண்டும் உதயணன். 'பாடத் தெரியாது' என்றவன், கூறியவுடன் சற்றைக்கெல்லாம் அதை மறந்து நரம்பைத் திருத்திக் கொடுக்கச் சம்மதித்தால் அது எப்படி இருக்கும்? 'யாழோடு பழக்கம் சிறிதும் இல்லாதவனுக்கு அதை எவ்வாறு திருத்தத் தெரிந்தது?' என்று எண்ணுவார்களே எனவும் நினைக்கத் தவறி உதயணன், நரம்பை இறுக்கிக் கொடுக்கும் எண்ணத்துடனே யாழைக் கையில் எடுத்துவிட்டான். இது அவனது முதல் பலவீனமாயிற்று.

உதயணன் அந்த ஒரு நொடியில் தான் கொண்டிருக்கும் வேடம், தங்கியிருக்கும் இடம், அதற்கு முன் வேடத்திற்கு ஏற்பக் கூறிய பொய் வார்த்தைகள் முதலிய யாவற்றையுமே மறந்து யாழைச் செப்பஞ் செய்யத் தொடங்கிவிட்டான். அவ்வாறு அவன் செப்பஞ் செய்த முறையினாலேயே அவன் உண்மையிலே யாழிலே பேரறிஞன் என்பதைப் பிறர் அறிந்து கொள்ளலாம். பதுமைக்கு எதிரில் அவனுக்கு அந்த நுணுக்கமான எண்ணம் நினைவிலே எழாமற் போய்விட்டது. நரம்புகளை ஏற்றபடி இறுக்கிக் கட்டிவிட்டு அவை சரியான முறையில் பண்ணோடு ஒலிக்கின்றனவா என்றும் ஆராயத் தொடங்கிவிட்டான் உதயணன். அவன் முற்றிலும் தன் நிலையையும் தான் நடிக்க வேண்டிய நடிப்பையும் நினையாதவனாகித் தன் கையிலுள்ள பதுமையின் யாழைப் பற்றிய குணக் குற்றங்களைச் சிந்திப்பதில் ஈடுபட்டுவிட்டான்.

அவன் நரம்புகளை இறுக்கிய பின் யாழை மீட்டிய போது அதில் பகை நரம்பு ஒலித்தது கண்டு, அந்த யாழை மீண்டும் நன்றாக உற்றுப் பார்த்தான். அப்போது, பட்டுப்போய் நடுவே பொந்து விழுந்து சில நாள் தண்ணீரில் ஊறிய ஒரு மரத்திலிருந்து செய்யப்பட்டது அந்த யாழென்ற உண்மை அவனுக்குப் புரிந்தது. அந்த யாழ் இன்ன வகையால் குற்றமுடையது என்றெண்னி அவன் அதைத் தோழியின் கையில் நீட்டினான். அதுவரை பதுமையும், தோழியும் அவன் முகத்தையே கூர்மையாகக் கவனித்தவாறே யாழை அவன் திருத்தும் விதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தப் பார்வையில் அவன் யாழைப் பற்றி எண்ணும் நினைவுகளை ஒன்றுவிடாமல் அவர்களால் ஊடுருவ முடிந்தது. பதுமை ஓரளவு தன் முயற்சியில் வெற்றியும் அடைந்திருந்தாள். அவன் எப்படியும் யாழ் வாசிப்பதில் சிறந்த கலைஞனாகத் தான் இருக்க வேண்டும் என்ற முடிவு இதனால் அவளுக்குக் கிடைத்திருந்தது. அந்த முடிவுக்கு வந்த பதுமை, 'அவன் நீட்டும் யாழை அவன் கையிலிருந்து வாங்க வேண்டாம்' என்று கண்பார்வையால் சங்கேதமாக யாப்பியாயினிக்குத் தெரிவித்திருந்தாள். எனவே அவன் நீட்டிய யாழைத் தோழி வாங்கிக் கொள்ளாமல் இருந்துவிட்டாள். தன்னிடம் யாழை நீட்டும் உதயணனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, "இந்த யாழை வாசித்துத் தீஞ்சுவைப் பாடல் ஒன்று பாடவேண்டும்" எனப் பதுமையின் குறிப்பைத் தோழி அவனிடம் கூறினாள். அவ்வாறு அவள் கூறியதும் உதயணன் எதிரே தொலைவில் அமர்ந்திருந்த பதுமையையும் தோழியையும் மாறி மாறிப் பார்த்தபடியே, 'இவள் சிறந்த மதிநுடபமுடையவள்! நமக்கு யாழ் தெரியும் என்பதைப் புரிந்து கொண்டாள்' என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். "யாழ் வாசிக்கும் விதம் அறியேன் என முன்பே கூறினேனே" என்று மீண்டும் விட்டுக் கொடுக்காமலே அவளுக்கு உதயணன் விடை சொன்னான். தனக்கு வாசிக்கத் தெரியாது என வற்புறுத்தி நம்ப வைக்க முயன்றான். ஆனால் பதுமையின் தோழியா அவன் கூறிய விடையை ஏற்றுக் கொண்டு, அவனைச் சும்மா விட்டு விடுவாள்? மீண்டும் அவனை வற்புறுத்தினாள்.

தோழியும் அவனும் இப்படி வற்புறுத்தல் செய்து கொண்டிருக்கும் போது, பதுமையே வாய்திறந்து அவனோடு பேசலானாள்: "மனத்தைப் புலன்களின் வழியே ஓடவிடாமல் அடக்கி ஒரு நெறிபடுத்திய அந்தணர்களுக்கு முடியாதது என்றும் ஒரு செயல் உண்டோ? அவர்கள் மனம் வைத்தால் எல்லாக் கலைகளிலும் தங்கள் வன்மையைக் காட்ட முடியும்! உங்கள் மேல் நான் கொண்டிருக்கும் எல்லையில்லாக் காதலின் மேல் ஆணையிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். இன்ப மயக்கம் அடைந்திருக்கும் நான் கேட்கும்படி நீங்கள் ஒரு பாட்டுப் பாடித்தான் ஆகவேண்டும். மறுக்காமல் பாடியருளுங்கள்" என்று கனிவான மொழிகளால் பதுமை அவனை நேரில் வேண்டிக் கொண்டாள். இதற்குள் மாலை நேரம் ஆகியிருந்தது. சாளரங்களின் வழியே முல்லைப் பூக்களின் நறுமணத்தோடு கூடிய தென்றற் காற்று உள்ளே குளிர்ச்சியாக வீசியது. அது அவர்கள் காதலுக்குச் சான்று கூறி உதயணன் பாடியாக வேண்டும் என்று கட்டளையிடுவது போலிருந்தது.

உதயணன் பதுமையின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் பாட்டுப் பாடிக் கொண்டே யாழையும் மீட்ட ஆரம்பித்தான். அப்போது அவனுக்கு உஞ்சை நகரிலிருந்து தத்தையுடன் பிடிமேல் வரும்போது தவறிப்போன 'கோடபதி' என்னும் தனது தெய்வீக யாழின் நினைவு வந்து விட்டது. அந்த நினைவுடன் பதுமைக்கு முன் அவன் பாடிய பாட்டில் பண்ணும் இசையும் பருந்தும் அதன் நிழலும் போலப் பொருந்தி மிக அழகாக அமைந்துவிட்டன. அமுதம் போலச் செவிக்குள் பாய்ந்த அவன் யாழிசையையும் வாய்ப்பாட்டையும் கேட்டுப் பதுமை வியப்புக் கடலுள் ஆழ்ந்தாள். 'தும்புரு காமனுக்கு அடுத்தாற் போல யாழிற் சிறந்தவன். தும்புருவுக்கும் அடுத்த இடம், யாழ் வாசிப்பில் மானிட வேந்தர்களில் ஒரே ஒருவனுக்குத்தான் உண்டு. அந்த ஒருவன் தான் உதயணன்!' என்றெண்ணினாள் பதுமை. 'ஒன்று நம்முன் அந்தணனாக அமர்ந்திருக்கும் இவன் உதயணனாக இருக்க வேண்டும்! அல்லது உதயணனைக் காட்டிலும் சிறப்பாக யாழ் வாசிக்கத் தெரிந்த வேறோர் அந்தண இளைஞனாகவே இருக்க வேண்டும்!' என்று தன் வியப்புக்கு இடையே பதுமை நினைத்தாள். அந்த ஐயத்தையும் தன் மனத்திலிருந்து வெளிச் சென்று விடாதபடி மறைவாகவே வைத்துக் கொள்ள வேண்டுமென்று உறுதி கொண்டாள். அவ்வளவு கலைநலமும் திறமும் உடையவன் தன் உள்ளங்கவர்ந்த காதலனாக இருந்ததில் அவளுக்குத் தனிப்பட்ட உவகை ஏற்பட்டது. பதுமையின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் உதயணன் அன்று மாலையில் பாடிக் கொண்டே யாழ் வாசித்த அந்த நிகழ்ச்சியால் 'தனக்கு நன்கு யாழ் தெரியும். அதுவரை அறியேன் என்று மறுத்ததெல்லாம் நடிப்பு' என்று தானே வெளிப்படுத்திக் கொண்டது போல் ஆயிற்று.

ஒரு பாவமும் அறியாத, அந்தண இளைஞன் வேடத்தில் 'மாணகனாக' இருக்கும் அவனைப் பார்த்த எவரும் அந்தத் தோற்றத்திற்குள் அவ்வளவு திறமை அடங்கியிருப்பதை நம்பவே மாட்டார்கள். மறு நாளிலிருந்து யாழிசையில் தேர்ந்தவன் என்ற முறையில் பதுமை, யாப்பியாயினி இருவரும் அவனிடம் யாழ் கற்கும் மாணவிகளைப் போலப் பழகினர். "மறைகளில் தேர்ந்த அந்தண இளைஞரே! உருவத்தைக் கண்டே மனிதர்களின் திறமையை அறிந்து கொள்ளும்படி நான்முகன் மனிதர்களைப் படைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? பயனற்ற கொன்றைக் காய்க்குப் பெரிய உருவத்தையும் பயன் மிக்க பயறுகளின் தானிய மணிகளடங்கிய நெற்றுக்களுக்குச் சிறிய உருவத்தையும் கொடுத்திருக்கிறான். அதே போல இனிய சுவை மிக்க கரும்பின் உருவையும் பருமனையும் சிறிதாகவும், மூங்கிலைப் பெரியதாகவும் பிரமன் படைத்திருக்கிறான்! யானையை அடக்கியாளும் அளவிற்கு யாழிசையைத் தெய்வீக முறையிலே கற்றிருக்கும் உதயணனைக் காட்டிலும் சிறந்த கலைஞராக நீர் தோன்றுகிறீர். ஆயினும், உருவத்தைக் கண்டே உம் கலைத் திறத்தை அறிந்து கொண்டு விடுமாறு நான்முகன் உம்மைப் படைக்கவில்லையே?" என்று யாப்பியாயினி மறுநாள் ஆவலோடு அவனிடம் கூறினாள்.

40. பகைவர் படையெடுப்பு

பதுமையின் தோழியாகிய யாப்பியாயினி, உதயணனிடம் அவன் யாழ் நலத்தைப் புகழ்ந்து கூறும் போது பதுமையும் அண்மையில் இருந்தாள். நேற்று நகைச்சுவை ததும்பச் சிரித்தவாறே தன்னிடம் உரையாடிய அவர்களிடம் இன்று பயபக்தி தென்படுவதை உதயணன் கண்டான். முதல் நாள் கொடுத்த அதே யாழை அவன் கரங்களிற் கொடுத்து, "இந்த யாழிலிருக்கும் மறைவான குறைவை நீக்கிச் செவ்வழிப் பண்ணைப் பாடியருள்க" என்று யாப்பியாயினி, உதயணனிடம் கூறி வேண்டினள். அவள் கொடுத்த யாழைக் கையிலே வாங்கிக் கொண்ட உதயணன், நேற்றுக் கூறாமல் மறைத்த அந்தச் செய்தியை இன்று வெளிப்படையாகக் கூறிவிடக் கருதினான். முதல் நாள் தொடக்கத்தில் தான் நடித்துவிட்ட நடிப்பிற்கு ஏற்ப, இன்றும் அவன் அதை மனத்தோடு மறைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. நேற்று அவன் வேண்டுகோளுக்கு இணங்கி யாழ் வாசித்துவிட்டதனால் இன்றும் அதை மறுக்க வழியில்லமல் ஒப்புக் கொள்ளும்படியாகவே நேர்ந்தது.

நேற்றே அந்த யாழிலுள்ள குற்றத்தைத் தெரியும்படி செய்து விட்டதனால் இன்றும் அதைக் கூறுவது பிழையில்லை என்று உதயணன் எண்ணினான். "இந்த யாழ் பட்டுப்போன மரத்தினாற் செய்யப்பெற்றது! இது மங்கலமும் தூய்மையும் உடையது அல்ல! எனவே இது பயன்படாது" என்று தான் சொல்லத் துணிந்ததைச் சொல்லிவிட்டுக் கைகளில் வாங்கிய யாழை அவளிடமே திருப்பிக் கொடுத்துவிட்டான். இதைக் கண்ட பதுமை உடனே தன் தோழியை அருகிலழைத்து, "என் தமையன் தருசக வேந்தன் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததும் யவனத் தச்சன் இயற்றியதுமாகிய உயர்தரமான யாழை நீ சென்று உடனே எடுத்து வா" என ஏவினாள். யாப்பியாயினி உடனே மாடத்திலிருந்து கீழே சென்று மகர வடிவில் இயற்றப்பட்ட அந்த அழகிய யாழை எடுத்துக் கொண்டு வந்தாள். இரண்டாவதாகக் கொணர்ந்த அந்த மகர யாழைக் கையில் வாங்கிக் கொண்ட உதயணன் அந்த யாழில் உறுப்புக்கள் சேர்க்கப்பட்டிருக்கும் அழகைக் கண்டு வியந்தான். ஆனால் அதிலுள்ள நரம்புகளைக் கூர்ந்து நோக்கியபடியே மீட்டிப் பார்த்தவுடன் தான் அப்படி வியந்தது பிழை என்று அவனுக்குப் புரிந்தது. "நிணம் புலர உலர்த்திடாமற் பச்சையாகக் கட்டப்பெற்ற அந் நரம்புகள் குற்றமுடையன" என்று கூறி வேறு நல்ல நரம்புகளைக் கொண்டு வருமாறு தோழியிடம் சொன்னான் அவன்.

தோழில் யாழில் இணைப்பதற்கான வேறு நரம்புகளைக் கொண்டு வந்து அவன் முன்பு வைத்துவிட்டு ஒதுங்கி நின்று கொண்டாள். இசைக் கருவிகளையும் அவற்றின் அங்கங்களையும் பார்த்த அளவிலேயே அவை இன்ன இன்ன வகையில் குணமுடையன, இன்னின்ன வகையில் குற்றமுடையன என்று தெரிந்து கூறும் ஆற்றலுடைய உதயணன், இரண்டாவதாக எடுத்து வந்த அந்த நரம்புகளையும் பார்த்த மாத்திரையிலேயே, 'இவையும் பயன்படா' எனக்கூறி ஒதுக்கிவிட்டான். தோழி மீண்டும் சென்று வேறு பலவகை நரம்புகளை எடுத்து வந்தாள். பதுமை கண்ணிமையாமல் வியப்புடனே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனிடம் கண்ட ஆராய்ச்சித் திறமும் ஆழமான பயிற்சியும் அவளை மலைத்துப் போகச் செய்திருந்தன. அவளுடைய தோழி கொண்டு வந்த யாழ் நரம்பில் வேறு ஒன்றை அசாதாரணமாகப் பார்த்த மாத்திரமே கையிலெடுத்த உதயணன், அதனுடைய முறுக்கை அவிழ்த்துப் பிரித்து அதில் மயிர் பின்னியிருப்பதை அவர்களுக்குக் காட்டினான். இவ்வாறே பல நரம்புகளை ஆராய்ந்து கூறிய பின், இறுதியாகத் தோழி கொண்டு வந்த நரம்புகளில் பொற்சரடு போல் முறுக்கிய ஒரு நரம்பை யாழிலே பொருத்திக் கட்டினான். கட்டியதும் அவள் கையில் யாழைக் கொடுத்தான். "யாழையும் பாட்டையும் எல்லோரும்தான் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்! ஆனால் இவரைப் போல அதன் குணாகுணங்களைச் சொல்லுவார் மிக அரியர்" என்று தோழியிடம் பதுமை உதயணனைப் புகழ்ந்து கூறினாள். உதயணன் புதிதாக நல்ல நரம்பைச் சேர்த்துக் கொடுத்த யவனக் கைவினை நயம் பொருந்திய அந்த யாழைத் தன் தோழியின் கையிலிருந்து வாங்கிப் பதுமை இனிமையாகப் பாடலானாள்.

உதயணன் அவள் பாடலைக் கேட்டு, அதன் இன்சுவையை அநுபவித்தான். பதுமையின் பாட்டு அவன் உள்ளத்தை உருக்கும் இனிமை கொண்டதாக இருந்தது. இவ்வண்ணமே காதலின்பமும் இசை யாராச்சியுமாகக் கழிந்து வந்தன அவர்கள் நாட்கள். ஒவ்வொரு நாளும் வந்து நிகழ்வதும் கழிந்து போவதும் அறியாமல் இருவரும் இருந்தனர். இவர்கள் கன்னிமாடத்தினுள் இவ்வாறு இருந்து வந்தபோது, தருசகராசனிடம் கேகயத்தரசன் அச்சுவப் பெருமகன், பதுமையை மணம் கேட்டுப் பரிசங்களோடு வந்து சேர்ந்தான். பதுமையின் எழிலையும் கலைப் பயிற்சிகளையும் பலமுறை பலர் வாயிலாகக் கேள்விப்பட்டிருந்த அச்சுவப் பெருமகன் அவளைப் பற்றிய நினைவிற்குத் தன் நெஞ்சில் நிரந்தரமாக ஓரிடம் அளித்துவிட்டான். அந்த ஆசை காரணமாகவே தருசக வேந்தனிடம் நேரிலேயே சென்று கேட்டுப் பார்த்து விடுவது என்றெண்ணி இப்போது திருமணப் பரிசங்களுடன் ஆரவாரமாகப் புறப்பட்டு வந்திருந்தான். அவனும் ஒரு பேரரசன் என்ற முறையில் தருசகன் சிறப்புடன் அவனை வரவேற்பதற்காகத் தன் தலைநகரை நன்கு அணி செய்யச் சொல்லியிருந்தான். தருசகராசன் தானே தன் பரிவாரங்களோடு எதிரே சென்று அச்சுவப் பெருமகனை மதிப்புடன் வரவேற்றான். அச்சுவப் பெருமகன், தருசகனுடைய அரண்மனையில் விருந்தாளியாகத் தங்கிச் சில நாள்கள் இருந்தான்.

இந்தச் செய்திகளெல்லாம் கன்னிமாடத்திலுள்ளவர்களுக்கு விவரமாகத் தெரிவதற்குக் காரணமில்லாமற் போயிற்று. உதயணன் திடுமென்று ஒருநாள் தன் நண்பர்களைப் பற்றிய நினைவு வந்தவனாய் அவர்களைச் சந்திக்கும் எண்ணத்துடன் கன்னிமாடத்திலிருந்து வெளியேறிப் பிறரறியாமல் காமன் கோட்டத்திற்குச் சென்றுவிட்டான். அங்கே போன இடத்தில் நண்பர்களைக் காணமுடியவில்லை. தற்செயலாகத் தன்னுடன் வந்திருக்கும் வீரனொருவனை அங்கே சந்திக்க முடிந்ததனால் நண்பர்களும் தானிருந்த அதே அரண்மனையில் மாறுவேடத்தோடு வேலை பார்ப்பதையும் பிற விவரங்களையும் அவன் தெரிந்து கொண்டான். அதன் பின்னும் அவன் உடனே கன்னிமாடத்திற்குத் திரும்பிச் செல்லவில்லை. காரியார்த்தமாகச் சில நாள்கள் அங்கே வெளியிலேயே தங்கிவிட்டான். இவ்வாறு அவன் இங்கு வந்துவிட்ட போது பதுமை கன்னிமாடத்தில் இவனைக் காணாது தவித்தாள். ஆனால் விரைவில் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கை மட்டும் அவளுக்கு உள்ளூற இருந்தது. எங்காவது தவப் பள்ளியில் யாரையாவது பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும். நம்மிடம் கூறினால் நாம் வெளியேற அனுமதிக்க மாட்டோம் என்றெண்ணி அவராகவே சொல்லாமல் போயிருக்க வேண்டும் என்று கருதிக் கலங்கித் துடிக்கும் தன் மனத்தைத் தேற்றிக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தாள் அவள்.

உண்மையில் அவன் அங்கே காணாமற் போனது அவளுக்குப் பெருந் துயரத்தையே அளித்தது. அவள் உதயணனை எண்ணி ஏங்கியது போல் கேயத்தரசன் அச்சுவப் பெருமகன் அவளை எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தான். தருசகன் கேகயத்தரசன் அச்சுவப் பெருமகனுடன் அளவளாவி இருந்த அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவன் பகையரசர்கள் சிலர் ஒன்று கூடி அவன் மேல் படையெடுத்து மகத நாட்டு எல்லைக்கே வந்துவிட்டனர். அவர்கள் தருசகன் சிறிதும் எதிர்பாராத நிலையில் அவனைத் தாக்க வேண்டும் என்ற கருத்துடன் பல நாள்களாக அதற்கு வாய்ப்பை எதிர் நோக்கிக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவே விரைவில் முழு ஆற்றலோடு ஒன்று சேர்ந்து மகத நாட்டைக் கைப்பற்றிவிடும் எண்ணத்துடனே புறப்பட்டு வந்திருந்தார்கள். தருசகன்மேல் நெடுநாட்களாகப் பகை கொண்டிருக்கும் விரிசிகன் என்ற அரசன் இந்தப் படையெடுப்பிற்கு முக்கியக் காரணமாக இருந்தான். அத்தினபுரத்து அரசன் எலிச் செவியன், வாரணாசி மன்னன், அயோத்தி வேந்தன், போதனபுரத்தை ஆண்டு வந்த மிலைச்சன், துவராபதித் தலைவனாகிய சங்கரன், சீ நகரத்து மன்னன் வேசாலி என வேறு ஆறு அரசர்களும் விரிசிகனுக்கு உதவியாகத் தத்தம் படைகளுடனே மகத வேந்தனை எதிர்த்து வெற்றி கொள்ள எண்ணி உடன் வந்திருந்தனர். அவர்களிலே சிலர் பதுமையை மணந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும், மகத மன்னன் தங்களுக்கு அவளைக் கொடுக்க மாட்டானே என்ற ஏக்கமும் கொண்டிருந்தவர்கள்.

கேகயத்து மன்னன் அச்சுவப் பெருமகன் பதுமையைத் தனக்குத் திருமணம் பேச வந்துள்ளதையும், தருசகன் அவனை வரவேற்று மகிழ்ச்சியோடு தன் விருந்தினனாக ஏற்றுக் கொண்டிருப்பதையும் அறிந்த பின், அவர்களுடைய ஆத்திரமும், பொறாமையும் தருசகன் மேல் இப்போது, பன்மடங்காகப் பெருகியிருந்தன. 'பலவகையான சிறு கயிறுகளை எல்லாம் ஒன்று திரட்டி முறுக்கிய ஒரு பெரிய கயிற்றால் வலிமை மிக்க யானை ஒன்றைக் கட்டிப் பிணிப்பது போலத் தாங்கள் ஒன்று சேரும் வன்மையால் பேரரசனாகிய தருசகனை வென்று அவன் தங்களைப் பணிவுடன் வணங்கித் திறை கொடுக்குமாறு செய்ய வேண்டும்' என்று அவர்களுடைய கூட்டத்தில் சேர்ந்திருந்த ஒவ்வொரு அரசனுக்கும் அழுத்தமான எண்ணம் இருந்தது. அந்த எண்ணமே அவர்களுடைய ஒற்றுமைக்கு முழுக்காரணமாகவும் இருந்து கொண்டு தூண்டிற்று. அச்சுவப் பெருமகன், பதுமையை மணம் பேசுவதற்காகத் தருசகராசனிடம் வந்து விருந்தினனாகத் தங்கியிருந்ததனால் அவன் மேலும் அவர்களுக்கு மனக் கொதிப்பு ஏற்பட்டிருந்தது. தருசகனையும், கேகயராசனையும் அடக்கி ஒடுக்கிவிட்டால் அதன் பின் பதுமையை, தங்களுள் யாராவது ஒருவரையே மணம் புரிந்து கொள்ளும்படி செய்துவிடலாம் என்ற எண்ணத்துடன் ஒவ்வொருவரும் தமது தீர்மானத்தை அமைத்துக் கொண்டிருந்தனர்.

பதுமையைப் பற்றிய சபலம் யார் யாருக்கு அங்கே இருந்ததோ, அவர்கள் எல்லோருமே அந்தத் தீர்மானத்தைத் தங்கள் தங்களுக்கு ஆறுதலும் சாதகமும் ஏற்படுவதற்கு ஏற்றதாக வைத்துக் கொண்டிருந்ததுதான் விந்தை! ஒவ்வொரு அரசனும் படையுடன் தன் நாட்டு எல்லையைக் கடந்து மகதத்திற்குப் புறப்படும் போது தனக்கு அந்தப் போரால் ஏற்படும் இத்தகைய 'அழகிய சுயநலம்' ஒன்றைக் கருதியே புறப்பட்டிருந்தனர். ஆனால், வெளிப்படையாக எல்லோரும் மகத மன்னனின் எதிரிகள் என்ற முறையில் ஒரே கட்சியாக ஒன்று சேர்ந்திருந்தார்கள்! படைகளோடு புறப்பட்டு வந்த அந்த மன்னர்கள் யாவரும், மகத நாட்டு எல்லைக்கு அப்பால் வந்து தங்கி முற்றுகைக்கு ஏற்ற சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். மீன்கள் காலருகே வருகின்றவரை அடங்கி ஒடுங்கி நிற்கும் கொக்குப் போலத்தான் அந்தப் பகையரசர்களும், மகத நாட்டு எல்லையில் வந்து தங்கிக் காலந் தாழ்த்திக் கொண்டிருந்தனர். பகையரசர்கள் இவ்வாறு வந்து தங்கியிருந்த செய்தி மெல்ல மெல்லப் பரவி, மகத நாடெங்கும் தெரியலாயிற்று. தலைநகரில் தருசகராசனுக்கும் இச் செய்தி விரைவில் தெரிந்து விட்டது.

41. சோலைமலைத் திட்டம்

மணம் பேச வந்திருக்கும் அச்சுவப் பெருமகன் தன்னுடைய விருந்தினனாகத் தங்கியிருக்கும் பொழுதே சற்றும் எதிர்பாராத நிலையில் தங்களுக்குள் ஒன்று கூடிப் போருக்கு இழுக்கும் பகைவர்கள் செயலைக் கண்ட தருசகன், உண்மையாகவே மலைப்பு அடைந்தான். படையெடுப்புச் செய்தி கேட்ட நகரத்து மக்கள் கலவரமடைந்து அவரவர்க்கு தோன்றிய கருத்துக்களை அங்கங்கே பேசத் தொடங்கிவிட்டனர். பொதுவாக நகர் முழுவதும் இச் செய்தி திகைப்பையும் அச்சத்தையும், இனி என்ன நிகழுமோ? என்ற பரபரப்பையும் உண்டாக்கியிருந்தது. நகரையும் அரசனையும் திகைப்பும் கவலையும் கொள்ளச் செய்திருந்த இச் செய்தி அரண்மனைக் கன்னி மாடத்திலும் அந்தப்புரத்திலும் கூடப் பரவி விட்டது. ஏற்கனவே மாணகன் (உதயணன்) தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் கன்னி மாடத்திலிருந்து போய் விட்டதை எண்ணி வருந்திக் கொண்டிருந்தாள் பதுமை. இந்தப் படையெடுப்புச் செய்தி அவளுக்கு இன்னும் மிகுந்த துயரத்தை அளித்தது. ஆனாலும் அவளுக்கு உடனே என்ன தோன்றியதோ தெரியவில்லை; தன் தோழி அயிராபதியை அழைத்தாள். மாணகன் எப்படியும் அவனுடைய பழைய இடமாகிய காமன் கோட்டத்திற்குத் தான் திரும்பிச் சென்றிருக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு அவனைப் பிரிந்து தான் படுகின்ற துயரம் முதல் பகையரசர் படையெடுப்பு வரை எல்லாச் செய்திகளையும் அவனிடம் கூறி வருமாறு அந்தத் தோழியை அனுப்பினாள் பதுமை. அது கேட்ட தோழி அயிராபதியும் உடனே அதற்கு ஒப்புக் கொண்டு விரைவாய்க் காமன் கோட்டத்திற்குச் செல்லப் புறப்பட்டாள்.

பதுமையின் நம்பிக்கை சரியாகவே இருந்தது. நல்ல வேளையாக அயிராபதி காமன் கோட்டத்திற்குள் நுழைந்த போது, தன் நண்பர்களைத் தேடி வந்த உதயணன் அங்கே இருந்தான். அவன் அப்போது அதே 'மாணகன்' என்னும் அந்தண இளைஞன் வடிவத்திலேயே இருந்ததனால் அவனைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொள்ள அயிராபதிக்கு மிகுந்த நேரமாகவில்லை. அவள் உதயணன் அமர்ந்திருந்த இடத்தை நெருங்கிப் பதுமை அவனுக்குக் கூறி அனுப்பிய செய்திகளை எல்லாம் விரிவாகச் சொன்னாள். திடீரென்று பகையரசர்கள் மகதநாட்டின் மீது படையெடுத்து வந்திருப்பதையும், அதனால் அரண்மனையில் திகைப்பும், கலவரமும் நிரம்பியிருப்பதையும் கூட அவள் வணக்கத்துடனே விவரமாக எடுத்துச் சொன்னாள். உதயணன் அவள் கூறிய யாவற்றையும் கவனத்துடனே கேட்டான். பதுமை அயிராபதியின் மூலம் அனுப்பியிருந்த செய்திகளும், பகைவர் படையெடுப்பைப் பற்றிய விவரங்களும் ஒரு வகையில் அவனுக்கு மகிழ்ச்சியையே கொடுத்தன. தன்னுடைய திறமையையும், 'உண்மையில் தான் யார் என்பதையும் தருசகனுக்கு வெளிக்காட்டுவதற்குப் பகைவர்களின் இந்தப் படையெடுப்பு ஒரு நல்ல வாய்ப்பு என்று உதயணன் எண்ணினான். இதே வாய்ப்பைக் கொண்டு பதுமைக்கும் தனக்கும் உள்ள காதலிலும் தான் வெற்றியடைந்து விட முடியும் என்பது அவன் நம்பிக்கை. இத்தகைய நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிலவுகிற எண்ணங்களோடு தோழி அயிராபதிக்கு மறுமொழி கூறி அனுப்பினான் அவன்.

"இன்னும் இரண்டு மாதங்கள் பொறுத்துக் கொள்ளச் சொல்! அதன்பின் பதுமையை நான் சந்திக்க வந்து சேருவேன். இப்போது நான் இன்றியமையாத சில செயல்களை மேற்கொள்ள வேண்டியவனாக இருக்கிறேன். இதை விவரமாகப் பதுமைக்கு எடுத்துச் சொல்லி, வேண்டிய ஆறுதல் கூறு" என்று அவன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டு சென்றாள் அயிராபதி. அயிராபதி சென்ற பின்னர் உதயணன் சிந்தித்தான். 'படையெடுத்து வந்திருக்கும் பகைவர்களை எதிர்க்கும் வகை தெரியாமல் தருசகன் திகைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாமே நம்முடைய வீரர்களுடனே சென்று ஏதாவது ஒரு சூழ்ச்சியால் அவர்களை வென்று நம் திறமையை, தருசகனுக்குக் காட்ட வேண்டும்! தருசகன் கவனத்தை நம் பக்கம் கவரவல்லதாக அமையவேண்டும், நமது அந்தத் திறமையின் வெற்றி' என்ற எண்ணங்கள் அவன் மனத்தில் எழுந்தன. எதற்கும் தன் நண்பர்களைக் கலந்து கொண்ட பின்பே தான் செயலில் இறங்க வேண்டும் என்ற நினைவுடன், காமன் கோட்டத்தில் சந்தித்த தன் நாட்டு வீரனை அழைத்து மாறுவேடத்துடன் அரண்மனையிலிருக்கும் உருமண்ணுவாவிற்கு அவன் மூலம் இந்தச் செய்தி கூறி அனுப்பிய சற்றைக்கெல்லாம் அந்த வீரன் உருமண்ணுவாவையும் கையோடு அழைத்துக் கொண்டே அங்கு வந்து சேர்ந்துவிட்டான். இருவரும் நெடுநேரம் தங்களுக்குள் கலந்து ஆலோசித்தனர்.

"நம்மிடம் இப்போது படை வலிமையும் மிகுதியாக இல்லை. நாம் தலைநகரத்திலிருந்து புறப்படும்போது நம்முடன் வந்த வீரர்களும் இப்போது இந் நகரத்தில் அங்கங்கே தனித்தனியாக மறைந்து வசித்து வருகின்றனர். அவர்களை ஒன்று திரட்டுவது இப்போது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அப்படியே ஒன்று திரட்டிக் கொண்டு நாம் எல்லோரும் சென்றாலும் நம்மால் நேருக்கு நேர் நின்று போர் செய்து பகைவர் படையெடுப்பை நம்மால் முறியடிக்க முடியாது. எனவே தந்திரத்தால் தான் இந்தப் பகைவர்களை இப்போது இங்கிருந்து திரும்பி ஓடுமாறு செய்ய முடியும். நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் வாணிகம் செய்வோர் போல மாறுவேடங் கொண்டு பகைவர் ஆதரவு பெற்று, அவர்கள் படையில் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து கொண்ட பின்பு, நள்ளிரவில் அவர்கள் படைக்குள்ளேயே கலவரத்தை உண்டாக்கிவிட்டு, நம்மை அடையாளங்கண்டு கொள்ள முடியாதபடி போர் செய்து அதனால் அவர்களை இங்கிருந்து துரத்த வேண்டும். இம்முயற்சியில் நமக்கு வெற்றி கிட்டுமானால், 'யாவும் உதயணன் ஆற்றலால் விளைந்தவை' என்று நம்மவர்களைக் கொண்டே உன் புகழை நகரெங்கும் பரப்பித் தருசகன் செவிகளுக்கும் அது எட்டச் செய்ய வேண்டும். அப்போது நீ இங்கு வந்திருப்பதையும் காலமறிந்து செய்த உனது உதவியையும் அறிந்து தருசகன் பாராட்டுவதற்கு நேரும். அந்த நிலை ஏற்பட்டால் தான் பதுமையின் தொடர்பிற்கும் மற்றவற்றிற்கும் தருசகன் உதவி உனக்குக் கிடைக்க முடியும். இப்போது அதற்கான அடிப்படைச் செயல்களில் நாம் ஈடுபட வேண்டும்" என்று உருமண்ணுவா தன் கருத்துக்களை உதயணனுக்குத் தெளிவாக விவரித்தான்.

காரண காரியங்களுடனே சந்தர்ப்பத்திற்கு ஏற்ற விதமாக உருமண்ணுவா கூறிய திட்டங்களைக் கேட்ட பின்பு, அவையே தக்கவை என்று தோன்றியது உதயணனுக்கு. அத்திட்டங்களின் படியேதான் செயலாற்ற வேண்டியது என்ற முடிவிற்கு வந்தான் அவன். இப்படியே உதயணனும் உருமண்ணுவாவும் சில நாழிகைப் போது தங்களை மறந்து சிந்தனையிலே ஆழ்ந்தவர்களாய் அமர்ந்திருந்தனர். சிந்தனை கலைந்த உடனே உருமண்ணுவா உதயணனையும் அழைத்துக் கொண்டு காமன் கோட்டத்திலிருந்து வெளியேறினான். மேலே நடக்க வேண்டிய செயல்களை வரிசையாக நிறைவேற்றுவதற்கு வேண்டிய பொறுப்பு அவ்விருவருக்கும் மட்டுமே மிகுந்த அளவில் இருந்தது. மகத நாட்டின் தலைநகராகிய இராசகிரிய நகரத்திற்குப் பக்கத்தில் 'சின்னச் சோலை' என்னும் பெயரையுடைய மலை ஒன்று இருந்தது. உதயணன் முதலியவர்களோடு மகத நாட்டிற்கு மாறுவேடத்தோடு வந்திருந்த வீரர்களில் பெரும்பாலோர் இந்த மலையடிவாரத்திலும் இதன் சுற்றுப்புறங்களிலும் மறைமுகமாகத் தங்கள் வாழ்நாள்களைக் கழித்து வந்தனர். அவர்கள் எல்லாரையும் ஒன்று சேர்க்க வேண்டிய அவசியம் இப்போது உதயணனுக்கு ஏற்பட்டிருந்ததனால், அவன் உருமண்ணுவாவுடன் காமன் கோட்டத்திலிருந்து புறப்பட்டு நேரே சின்னச் சோலை மலைக்கு வந்திருந்தான்.

சின்னச் சோலை மலை, தொடர்ச்சியான பெரிய மலை அல்ல. ஒரு சிறு குன்று போன்றதுதான் அது. உருமண்ணுவாவின் சொற்படி உதயணன் அந்த மலையின் மேல் ஏறித் தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே தெரியக் கூடிய அடையாளப் பாடல் ஒன்றை உரத்த குரலிற் பாடினான். அவன் பாடியபோது அமைதி நிறைந்திருந்த இரவு நேரமாகையால், அவனுடைய அந்தப் பாட்டுக்குரல் குன்றைச் சுற்றி வெகுதொலைவுவரை தெளிவாக ஒலித்தது. அழைப்புக்கு அறிகுறியான அந்த அடையாளப் பாட்டை உதயணன் பாடி முடித்தவுடன் உருமண்ணுவாவோடு அவனும் குன்றின் மேலேயே இருந்து கொண்டான். இரவு நடு யாமத்திற்குள் பாட்டொலியைக் கேட்ட எல்லா வீரர்களும் குன்றின் மேல் உதயணனும் உருமண்ணுவாவும் இருந்த இடத்திற்கு மகிழ்ச்சியுடனே வந்து கூடிவிட்டார்கள். தங்கள் அரசன் மகத மன்னனுடைய நட்பு வேண்டி வந்திருப்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கு ஏதாவது நல்ல வழி புலப்பட்டிருக்கும் என்றே இந்தப் பாட்டொலி கேட்டதும் அவர்களிற் பலர் எண்ணி வந்திருந்தார்கள். சின்னச் சோலை மலையைச் சுற்றி உள்ள வீரர்கள் யாவரும் வந்த பின், தங்கள் அரசனிடம் பற்றுமிக்க அந்த வீரர்களைத் தங்கள் திட்டத்திற்கு உடன்படச் செய்யும் கருத்துடன் உருமண்ணுவா அவர்களோடு பேசினான். அந்தப் பேச்சுக்கு அவர்களிடமிருந்து எதிர்பார்த்த பலன் விளைந்தது.

42. மித்திர பேதம்

சோலை மலை மேல் வந்து கூடிய அந்த வீரர்களுள், முன்பு யூகியோடு உஞ்சை நகரிலிருந்து தத்தையுடனே உதயணன் மீள்வதற்கு உதவி செய்த வீரரும் பலர் இருந்தனர். பிரச்சோதனது மிகப்பெரிய படையை ஒரு சிலராகவே தனியே நின்று எதிர்த்த அந்த வீரர்களிடம், உருமண்ணுவா தங்களுடைய திட்டத்தைக் கூறினான். அவர்களோ, "இது படையாகவே எங்களுக்குத் தோன்றவில்லை. காக்கைக் கூட்டம் போலப் பலர் கூடி அல்லவா படையெடுத்து வந்திருப்பார்கள் போலிருக்கிறது! முன்பு பிரச்சோதனனின் பெரும் படையையே எளிதில் வென்ற நாம், இப்போது இவர்களைத் துரத்திவிட்டு அதனால் தருசகன் நட்பைப் பெற்றுக் கொள்வது நமக்கு மிக எளிதாக முடியக்கூடியதே" என்று கூறி இத் திட்டத்தை வரவேற்றனர். வாணிகர்களாக மாறுவேடத்திற் சென்று, இரவோடு இரவாகக் கலவரம் செய்து அவர்களை ஓட்டி விடலாமென்பதற்கு வீரர்கள் உறுதியாக ஒப்புக் கொண்டனர். இத் திட்டத்தை எல்லாரும் ஒப்புக் கொள்ளவே வாணிகர்களாக மாறுவேடம் செய்து கொள்வதற்குத் தகுந்த பொருள்களைச் சேகரிக்கும் கருத்துடன் மலையிலிருந்து யாவரும் கீழே இறங்கினர்.

எண்ணிக்கையில் நூற்றுக்கு மேற்பட்ட தொகையையுடைய அவர்கள் எல்லோரும், ஒரே விதமான வாணிகர்களாகவே சென்றால் பகைவர்கள் ஐயப்பட நேரிடும் என்பதற்காக, வணிகர்களிலும் பலபல வாணிகங்களை நடத்தும் வேறுவேறு வணிகர்களாகச் செல்ல வேண்டும் என்று எண்ணினார்கள். அதற்குப் பற்பல விதமான வாணிபப் பொருள்கள் வகை வகையாகத் தேவையாயிருந்தன. பகைவர் பாசறையை நோக்கிப் புறப்படுவதற்கு முன் விரைவாக இவற்றைக் கவனித்து ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியிருந்தது. இதனால் மலையிலிருந்து இறங்கிய அன்றிரவு, பொழுது விடிந்ததுமே அவர்கள் இந்த ஏற்பாடுகளிலே ஈடுபட்டுவிட்டனர். வாசனைப் பொருள்களை வாணிகம் செய்பவர்களாகச் சிலர் பச்சைக் கருப்பூரம், அகிலம், சந்தனம், முதலியவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டனர். பழம், மிளகு, இஞ்சி, மஞ்சள் முதலிய உண் பொருள்களை விற்பவர்களாக மாறினர் வேறு சிலர். மருந்துப் பொருள்களை வாணிகம் செய்யும் மருந்து வாணிகர்களாகச் சிலரும் மாறுவேடத்தில் தத்தம் பொருள்களோடு புறப்பட்டனர். சின்னச் சோலை மலையைச் சுற்றியிருந்த படை வீரர்கள் யாவரையும் இத்தகைய மாறுவேடங்களில் பகைவரது பாசறையை நோக்கி அனுப்பிய பின், உதயணன் முதலியோர் அந்தச் சூழ்ச்சியின் முடிவான இறுதிச் செயல் ஒன்றைச் செய்வதற்குப் பின் தங்கினர்.

படை வீரர்கள் புறப்பட இருந்த நேரத்தில் இடவகனால் உதயணன் உதவிக்கென்று அனுப்பப்பட்ட இசைச்சன், உயர்ந்த சாதிக்குதிரைகள் பலவற்றோடு அங்கே வந்து தோன்றினான். உதயணன் குதிரைகளுடன் வந்த இசைச்சனையும் தன் தோழர்களையும் தன்னுடனிருக்கும்படி கூறிவிட்டு ஏனையோரை எல்லாம் அனுப்பினான். படைவீரர்கள் சென்ற சிறிது நேரங்கழித்துச் சில முக்கியச் செய்திகளைத் தங்களுக்குள்ளே கலந்து ஆலோசித்துக் கொண்ட பின்னர், உதயணன் முதலியோர் குதிரை வணிகர்களாக மாறுவேடங் கொள்ளலாயினர். வயந்தகனைக் குதிரை விற்பவர்களின் தலைவன் போல மாறுவேடங் கொள்ளச் செய்தனர். முதலிற் சென்ற வாணிகர் வேடத்தோடு கூடிய படைவீரர்களும் சரி, குதிரை விற்பவர்களாகப் புறப்பட்ட இவர்களும் சரி, ஆயுதங்களைப் போதுமான அளவு மறைத்து வைத்துக் கொண்டு சென்றார்கள்.

"நாங்கள் குதிரை வாணிகம் செய்பவர்கள். ஒன்பது ஆண்டுகளாக எங்களுக்கு மகத மன்னனோடு பழக்கமுண்டு. ஆனால் இப்போது மகத அரசன் முன்போல் இல்லை. எங்களுக்கும் அவனுக்கும் பெரும் பகை மூண்டிருக்கிறது. நாங்கள் அவனைக் கருவறுக்கக் காலம் பார்த்துக் கொண்டிருந்தோம். நல்லவேளையாக நீங்களும் படையெடுத்து வந்தீர்கள்" என்று பகைவர்கள் பாசறையை அடைந்ததும் வயந்தகன் பகைமன்னர்களை நோக்கிக் கூறினான். பகை மன்னர்கள் அவன் கூறியதை நம்பி வரவேற்றனர். சூழ்ச்சி வென்றது. தங்களைப் பலப்படுத்திக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்த பகையரசர்கள், மகத நாட்டின் பகைவன் என்று சொல்லிக் கொண்டு யார் வந்தாலும் தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ள துணிந்து இருந்தார்கள். அந்த நிலைதான் தருசகனின் பகைவர்கள் எனக் கூறிக் கொண்டு குதிரை விற்பவர்களாகவும், வேறு பலவகை வாணிகர்களாகவும் வந்த உதயணன் முதலியோரை அவர்கள் தயங்காமல் தங்களுடன் சேர்த்துக் கொள்வதற்குக் காரணமாக் இருந்தது. தனித்தனிப் பாசறைகளில் தத்தம் படைகளுடனே தங்கிக் காலத்தை எதிர்நோக்கியபடி காத்திருக்க அப்பகை யரசர்கள் ஆறு பேரும், மகிழ்ச்சியோடு குதிரை விற்பவர்களையும் பிறரையும் வரவேற்று உபசரித்தனர். தங்கள் பாசறைகளிலேயே தங்கியிருப்பதற்கும் இடமளித்தனர்.

'இராசகிரிய நகரத்தின் அமைப்பு, அந் நகரத்தை எப்படி எப்படித் தாக்கலாம்?' என்பது போன்ற செய்திகளையெல்லாம் குதிரை வாணிகர் தலைவனாக மாறுவேடத்திலிருந்த வயந்தகனிடம் பகையரசர்கள் தூண்டித் தூண்டி ஆவலோடு கேட்கத் தொடங்கினார்கள். வயந்தகன் அவற்றிற்கு விருப்பத்தோடு விடை கூறுபவன் போலப் பொய்யாக எதை எதையோ சொல்லி நடித்தான். மகத நாட்டு எல்லைப் புறத்தில், ஒரு பெரிய சமவெளியில் பல பாசறைகள் அமைத்து அங்கங்கே பிரிந்து தனித் தனியாகத் தங்கியிருந்த அந்த அரசர்கள், ஒவ்வொருவரும் மாறுவேடத்தில் வந்த வாணிகர்களைத் தங்கள் தங்களோடு தங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலும், உதயணன் முதலியோர், தாங்கள் எல்லோரும் தனியாக ஒரே பாசறையில் தங்க வேண்டும் என்றே கருதினர். சில செயல்களைத் தங்களுக்குள் சிந்தித்துக் கொள்ள அவர்களுக்கு அங்கே தனிமை அவசியமாக இருந்தது. ஆகையால் விரிசிகன் முதலிய பகையரசர்களின் வேண்டுகோளை மறுத்துத் தங்களுக்கு எனத் தனியாக ஒரு பாசறை அமைத்துக் கொடுத்தால் தான் வசதியாக இருக்கும் என்று அவர்களைக் கேட்டுக் கொண்டனர். அதனபடி அவர்கள் தங்குவதற்கென்று அதே எல்லைக்கு உட்பட்ட இடத்தில் தனிப் பாசறை ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது. தனிப் பாசறையில் தங்கிய உதயணன் முதலியோர் 'அங்கே தங்கியிருக்கும் பகையரசர்களின் தொகை, படைகளின் வலிமை, தங்கள் சூழ்ச்சியால் அவர்களை ஓடச் செய்வதற்குப் பகல் நேரம் ஏற்றதா? இரவு நேரம் ஏற்றதா?' ஆகியவற்றைச் சிந்தித்து மேலே இயற்ற வேண்டிய செயல்களைப் பற்றித் தங்களுக்குள்ளே கூடி ஆராய்ந்தனர். சிந்தனைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இறுதியாக, நள்ளிரவில் அன்றே தங்கள் சூழ்ச்சியை நிறைவேற்றிப் பகையரசர்கள் ஓடிப்போகுமாறு செய்துவிட்டுத் தாங்களும் தங்கள் கூடவே கொணர்ந்திருக்கும் குதிரைகளில் ஏறித் தலைநகருக்கு ஓடிவிடுவது என்ற முடிவுக்கு வந்தனர். இன்ன இன்ன இடத்தில் இப்படி இப்படிச் சூழ்ச்சியை நடத்த வேண்டும் என்பதையும், நள்ளிரவில் அதை நிகழ்த்த வேண்டிய முறையைப் பற்றியும் தெளிவாகப் பேசிக் கொண்டனர். படையெடுத்து வந்திருக்கும் விரிசிகன் முதலாகிய ஆறு பகையரசர்களும் அந்த எல்லைக்குள்ளே தனித்தனியே அமைக்கப்பட்டிருந்த ஆறு பாசறைகளில் இருந்தனர். எனவே உதயணன் தன்னோடு வந்துள்ள மிகக் குறைவான தொகையினராகிய வீரர்களை ஆறு பகுதியாகப் பிரித்துக் கொண்டு அந்தச் சூழ்ச்சியை நடத்த வேண்டியதாய் இருந்தது. அவ்வாறே வீரர்களை ஆறு பகுதியாகப் பிரித்தனர். பகைவர்களின் ஒவ்வொரு பாசறைக்கு முன்பும் காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார்கள். ஆகையினால் அவற்றை முற்றுகையிட்டுச் சூழ்ச்சி புரிவதற்குச் செல்லும் வீரர்கள் முன்னெச்சரிக்கையோடு செல்ல வேண்டும் என்றும், தங்கள் சூழ்ச்சி வெற்றியடைந்தாலும் அடையாவிட்டாலும் தப்பியபின் எல்லோரும் 'இன்ன இடத்தில் வந்து கூடிவிட வேண்டும்' என்றும், உதயணன் முதலியோர் தம் வீரர்களுக்கு முன்னதாக அறிவுரை கூறினர்.

இரவு முதல் யாமம் முடிந்து, இரண்டாம் யாமம் தொடங்கும் நேரம். எங்கும் நள்ளிருள் செறித்து கருமை மண்டிக் கிடந்தது. குதிரை வாணிகர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் தங்கியிருந்த பாசறையிலிருந்து, தனித் தனிக் கூட்டமாய் இருளில் கருமையோடு கருமையாகக் கலந்து வீரர்கள் அரசர்களின் பாசறைகளை நோக்கிப் புறப்பட்டனர். கால் அடி பெயர்த்து வைக்கும் ஒலி கூடக் கேட்காதபடி நடந்தனர் வீரர்கள். எங்கும் நிசப்தம் நிலவியது. சற்று நேரத்தில் ஒரே சமயத்தில் ஆறு பாசறைகளிலிருந்தும் கூக்குரலும் கலவரமும் எழுந்தன. குதிரை வாணிகர்கள் தங்கியிருந்த இடம் ஒன்று தான் அந்த எல்லைக்குள்ளேயே அப்போது சூனிய அமைதியோடு விளங்கிற்று. ஆனால் அந்தக் கலவரத்திற்கு நடுவில் அதைக் கவனிக்க அங்கே யாருக்கு பொழுதே இல்லை.

விரிசிகனுடைய பாசறைக்குள் வேலும் வாளும் தாங்கி நுழைந்த உதயணன் வீரர்கள் இருட்டில் தங்களை இன்னாரென அடையாளங் கண்டு கொள்ள முடியாமல் 'அயோத்தி அரசன் வாழ்க!' என்று கூறிக் கொண்டே போர் செய்தனர். அயோத்தி அரசனுடைய பாசறையைத் தாக்கச் சென்றிருந்தவர்களோ, 'விரிசிகன் வாழ்க!' என்று கூறியவாறே போரிட்டனர். இவ்வாறே எலிச் செவியரசனைப் புகழ்கின்ற சொற்களைக் கூறிக் கொண்டே மிலைச்ச வேந்தன் பாடி வீட்டிலும், 'மிலைச்சன் வாழ்க!' என்ற வாழ்த்துடன் எலிச் செவியரசன் பாடி வீட்டிலும் போர் செய்தனர். "படையெடுத்து வந்திருக்கும் தங்களுக்குள்ளேயே உள்நாட்டுப் பகை திடீரென்று கிளம்பி இந்தக் கலவரம் உண்டாயிருக்க வேண்டும்" என்று ஆறு அரசர்களும் தனித்தனியே எண்ணி நடுங்கும் படியாக உதயணன் வீரர் இத்தகையதொரு சூழ்ச்சித் திறத்துடனே அந்தத் தாக்குதலை நடத்தினர். ஒற்றுமையோடு வந்திருக்கும் இந்த ஆறு அரசர்களும் ஒற்றுமை குலைந்து தனித்தனியே தத்தம் பாசறைகளிலிருந்து நாட்டுக்குத் திரும்பி ஓட வேண்டும் என்று கருதிய உதயணனின் இந்தச் சூழ்ச்சியினால் இருளில் பகைவர் படையைச் சேர்ந்த வீரர்கள் தங்களுக்குள்ளேயே போர் செய்து கொள்ளத் தொடங்கி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மடிந்து கொண்டிருந்தார்கள்.

உதயணனும், அவனுடைய வீரர்களும், தோழர்களும் இந்த உள்நாட்டுக் கலவரத்தைப் பெருகி வளர வழி செய்து விட்டுத் தம் குதிரைகளுடன் அமைதியாக வந்த சுவடு தெரியாமல் திரும்பிச் சென்றுவிட்டனர். அயோத்தியரசன், விரிசிகன் தனக்கு வஞ்சகமிழைக்கத் திட்டமிட்டிருப்பதாக எண்ணிக் கொண்டான். விரிசிகனோ, அயோத்தி வேந்தன் தன்னைக் கொலை செய்யக் கருதியே நள்ளிரவில் அவன் வீரர்களைத் தன் பாசறைக்கு அனுப்பியதாக எண்ணி அவன் மேலே வன்மம் கொண்டு நெஞ்சு குமுறினான். இப்படியே ஒவ்வொரு அரசனும் தங்களுக்குள்ளேயே மற்றொருவனை எதிரியாக எண்ணி மனங் கொதித்தனர். அவர்கள் படை வீரர்களும் அதே மனக் கொதிப்போடு, பெரிய புயலினால் அலைமோதும் கடல் போலத் தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டிருந்தனர். இறுதியில் ஒவ்வொரு அரசனும் தன் தன் படைகளுடன் பாசறை முதலியவற்றைக் கிடந்தது கிடந்தபடியே போட்டுவிட்டுத் திரும்பித் தன் நாட்டை நோக்கி ஓடலானான். பொழுது விடிவதற்குள் அவர்கள் பாசறைகள் இருந்த இடம் வெறும் பாலைவனமாகிவிட்டது.

முதல் நாள் இரவு சூழ்ச்சிப் போரில் மாண்டவர்களின் பிணங்களை விருந்துண்ண வந்த கழுகுகளைத் தவிர அங்கு வேறு யாருமில்லை. ஒன்றுபட்டு வந்திருந்த ஆறு பேரரசர்களின் உறுதியையும் ஒற்றுமையையும் வலிமையையும் ஒரே ஓர் இரவிற்குள் தன் சூழ்ச்சியால் அழித்திருந்தான் உதயணன். ஓடிய வேந்தர்கள் யாவரும் தற்செயலாக ஒரு மலையடிவாரத்தில் மீண்டும் சந்திக்க நேர்ந்தது. தாங்கள் யாவரும் நன்றாக ஏமாற்றப் பட்டிருப்பதை அப்போது அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

43. தருசகன் புகழுரை

படையெடுத்து வந்திருந்த பகை மன்னர்களுக்குள் கலவரத்தை மூட்டிவிட்ட பின் ஏற்கனவே உதயணன் எல்லாரும் சந்திக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்த இடத்தில் வத்தவ நாட்டு வீரர்கள் ஒன்று கூடினர். அவ்வாறு அவர்கள் கூடியது இருள் நன்றாக புலராத நேரத்தில். ஆகையால் 'வத்தவன் வாழ்க!' என்ற அடையாளக் குரலால் தங்களை இனம் புரிந்து கொண்டு ஒன்று பட்டிருந்தனர். அந்த வீரர்களில் ஒருவருக்கேனும் போரினால் ஒரு சிறு இரத்தக் காயம் கூட இல்லை. அவ்வளவு சாமர்த்தியமாகச் சூழ்ச்சியை நிறைவேற்றி விட்டுத் தப்பி வந்திருந்தனர் அவர்கள். 'பகைவர்களைத் தந்திரமாக ஓட்டிவிட்டோம். இனி உதயணனுக்குத் தருசகன் நட்பு சுலபமாகக் கிடைத்துவிடும். பதுமையின் காதலிலும் இதனால் உதயணன் வெற்றி பெற முடியும்' என்று உருமண்ணுவா முதலிய தோழர்கள் எண்ணினார்கள். உதயணன் அங்கு வந்திருப்பதையும், இரவோடிரவாக அவன் தன் ஆட்களுடனே தருசகனை வளைக்க வந்த பகைவர்களைத் துரத்திவிட்டதையும் நகர் எங்கும் வலியப் பரப்புதல் வேண்டும் என்று அவன் நண்பர் எண்ணினர். அப்படிச் செய்வது தருசகனுடைய கவனத்தையும் பாராட்டையும் உதயணனுக்குக் கிடைக்க வைப்பதற்குச் சிறந்த வழி என்று அவர்களுக்குத் தோன்றியது.

பதுமையும், தருசகன் நட்பும் உதயணனுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் உதயணனைப் பற்றி மகத வேந்தனாகிய தருசகனுக்கு மிக்க நன்மதிப்பு ஏற்பட வேண்டும். அதற்குரிய செயலை குதிரை விற்பவனாக மாறுவேடங் கொண்டு உதயணன் நிறைவேற்றியது மட்டும் போதாது. 'அவ்வாறு உதயணன் தான் நிறைவேற்றி உதவியிருக்கிறான்' என்பதைத் தருசகன் உணருமாறும் செய்தாக வேண்டும். எனவே அம்முறையில் அச்செய்தியை நகரெங்கும் பரப்புவதற்குத் திட்டமிட்டு வயந்தகனையும் வேறு சில வீரர்களையும் அனுப்பினர். "உதயணனின் தந்தையாகிய சதானிகனுக்கு மகத மன்னன் நண்பன். 'என் தந்தையின் நண்பருக்குத் துயர் வந்தால் காப்பது என் கடமையல்லவா?' என்று எண்ணி அவன் இங்கே வந்து நேற்றிரவு முற்றுகையிட்டிருந்த தருசகனின் பகைவர்களை முறியடித்து அனுப்பிவிட்டான்" என்று வயந்தகன் முதலியோர் இராசகிரிய நகரில் அங்கங்கே செய்திகளைப் பரப்பலாயினர். படையெடுப்புச் செய்தி அறிந்து கலவரத்தில் ஆழ்ந்திருந்த இராசகிரிய நகரம், வயந்தகன் முதலியோர் பரப்பிய இச்செய்தியைக் கேட்டு மகிழ்ந்தது. மெல்ல மெல்ல அரண்மனையிலும் பலர் வாயிலாக இச் செய்தி பரவிக் கவலையை நீக்கியது. நகர மக்கள் உதயணனைத் தெய்வமெனக் கொண்டாடிப் போற்றலாயினர்.

அரசன் தருசகன் அரண்மனையில், இந்தச் செய்தியைக் கேட்டவுடன் அளவற்ற மகிழ்ச்சி கொண்டான். உதயணனை அப்போது உடனே காணவேண்டும் என்ற ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. இந்த ஆவல் அவன் மனத்தில் பெருகவே அவன் அச்செய்தியைக் கூறியவர்களை அழைத்து வருமாறு தன் ஏவலர்களை அனுப்பினான். அவன் அனுப்பிய ஏவலர்கள் நகரில் பல இடங்களில் தேடியபின் இறுதியாக வயந்தகனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் அழைத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றனர். வயந்தகனும் அவனுடன் இருந்த மற்றவர்களும் அதை எதிர்பார்த்தே காத்திருந்தவர்கள் போலக் காவலாளர்களுடன் தருசக மன்னனின் அரண்மனைக்குப் புறப்பட்டுப் போனார்கள். தருசகன், வயந்தகன் முதலியவர்களை அன்போடு வரவேற்று முதல் நாள் நிகழ்ந்த செய்திகளை எல்லாம் ஆர்வத்தோடு விசாரித்தான். உதயணன் தனக்கு வலிய வந்து உதவி செய்த பண்பை வாய் நிறையப் புகழ்ந்தான். தனக்கு உதயணனின் தந்தை சதானிகனுக்கும் இருந்த நட்புணர்ச்சியின் கனிந்த நிலையைப் பற்றி விரிவாக எடுத்து உரைத்தான்.

"நான் திகைத்து மலைத்துக் கொண்டிருந்த நிலையில் உதயணன் இங்கு வந்து என் பகைவர்களை ஓடச் செய்தது நான் பெற்ற பெரும் பேறு ஆகும்" என்று போற்றி வியந்தான். வயந்தகன் முதல் நாள் நிகழ்ந்தவற்றைத் தருசகனுக்குக் கூறினான். தருசகன் வயந்தகனின் மூலமாக உதயணன் அப்போது இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு அவனை அழைத்து வரத் தன் பட்டத்து யானையை அனுப்பினான். உடனே அரண்மனை உதயணனை வரவேற்பதற்கேற்றபடி அலங்கரிக்கப்பட்டது. தருசகன், உதயணனை ஏற்ற முறையில் வரவேற்றுப் போற்றி நன்றி செலுத்திக் கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தான். தருசகனின் அழைப்பைக் கேட்டதும் உதயணனும் உருமண்ணுவா முதலிய அவன் தோழரும், பிற வீரர்களும் மன மகிழ்ச்சியோடு அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு உதயணனுடன் அரண்மனைக்குப் புறப்பட்டனர். இப்போது அவர்களில் ஒருவராவது மாறுவேடத்துடன் இல்லை. எல்லோரும் துணிந்து சுய உருவத்துடனேயே சென்றார்கள். உதயணன், தருசகன் மன்னன் அனுப்பியிருந்த பட்டத்து யானை மேல் ஏறிக் கொண்டு புறப்பட்டான்.

தன் அரண்மனை வாயிலிலேயே வீரர்களும் தோழர்களும் புடை சூழ யானை மேல் வரும் உதயணனைத் தருசகன் எதிர்கொண்டு மரியாதையாக வரவேற்றான். தருசகனுடைய அரசவையைச் சேர்ந்த சிலர், "எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை என்று தெளிவாகச் சிந்தித்து அறியாமல் உதயணன் போன்ற வேற்றரசர்களை உள்ளே அழைத்துக் கொள்வது சரியல்ல" என்று அவனை எச்சரித்தனர். தருசகன் அவர்களுக்கு உதயணன் உதவிப் பண்பு மிகுந்தவன் என்பதையும் அவன் நட்பின் சிறப்பையும் எடுத்துச் சொல்லிச் சமாதானம் கூறினான். யானை மேலிருந்து இறங்கிய உதயணனைக் கையோடு கை பிணைத்துத் தழுவி, உள்ளழைத்துச் சென்றான் தருசகன். பிற நண்பர்களும் வீரர்களும் கூட, மதிப்போடு அதே முறையில் வரவேற்கப்பட்டனர். தருசகன் மீண்டும் மீண்டும் உதயணனை வாய் ஓயாமல் நிறைய நிறையப் புகழ்ந்து நன்றி கூறினான். அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் தன் விருந்தினராகத் தங்கியிருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். உதயணன் அப்பொழுதுதான் புதிதாக அங்கே அரண்மனைக்குள் வருபவனைப் போல நடித்தவாறே அதற்கு ஒப்புக் கொண்டான். உதயணனுக்கும் அவன் தோழர்களுக்கும் அது புது இடமா என்ன? ஏற்கனவே அவர்கள் மாறுவேடத்தோடு வேலை பார்த்த இடம் தானே? படை வீரர்கள் மட்டும் தான் அவ்விடத்திற்குப் புதியவர்களாக இருந்தார்கள். பெருமதிப்புக்குரிய விருந்தினர்களாக இப்போது தருசக வேந்தனுடைய அரண்மனையில் அவர்கள் தங்கினர்.

44. ஓடினோர் கூடினர்

மகத நாட்டு எல்லையில் பாசறைகளில் தங்கியிருந்த போது நள்ளிரவில் நடந்த உட்பகைக் கலவரத்திற்கு அஞ்சி ஓடிய அரசர்கள் அறுவரும், மகத நாட்டு எல்லையைக் கடந்து வெளியேறும் போது அங்கே மலைத் தொடரின் நடுவே இருந்த ஒரே கணவாய் வழியாகத்தான் போக வேண்டியிருந்தது. ஒவ்வொரு அரசனும் மற்றவனைச் சினத்தோடு பார்த்தான். ஒவ்வொருவனுடைய உள்ளமும் மற்றவனைச் சந்தேகித்துக் கொண்டு குரோதத்தினால் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த உள்ளக் கொதிப்பை, அவர்களுடைய கண்கள் ஒன்றையொன்று சந்தித்துக் கொண்ட முறையே காட்டியது. ஆனால் படையெடுப்பிற்கு முக்கிய காரணனாகிய விரிசிகனுக்கு மட்டும், 'தங்களைக் கலைப்பதற்கு என்றே இதில் தங்களைச் சேராத பிறரது சூழ்ச்சி ஏதோ கலந்திருக்கிறது' என்று தோன்றியது. விரிசிகன் தனக்குத் தோன்றிய இந்த எண்ணத்தைத் 'தீர விசாரித்து, உண்மையைத் தெரிந்து கொள்வது நல்லது' என்ற முடிவிற்கு வந்தான். சிரமசாத்தியமான முயற்சியின் பயனாக அந்த மலையடிவாரத்திலேயே ஆறு அரசர்களையும் படைகளோடு தங்கச் செய்து ஒன்று கூட்டினான். அரசர்கள் ஆறு பேரும் தனியே ஒரு பெரிய மரத்தின் நிழலில் தங்கி, முதல் நாள் இரவு நடந்த கலவரங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினர்.

முதலில் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு பேசிய அவர்கள் பேச்சு வளரவளரத் 'தங்களில் யாருமே முதல் நாளிரவு நிகழ்ச்சிக்குக் காரணமில்லை' என்ற திடுக்கிடத்தக்க உண்மையைப் புரிந்து கொண்டனர். இறுதியில் முன் இரவில் கலவரம் முடிந்து தாங்கள் கலைந்த போதிலிருந்து குதிரை விற்பவர்கள் என்று கூறி வந்து தங்களோடு சேர்ந்து கொண்டவர்கள் காணமாற் போனது வரை அவர்களுக்கு எல்லா நினைவும் வந்தன. 'குதிரை வாணிகர்களாக வந்தவர்களே இந்தக் கலவரத்திற்குக் காரணம். அவர்கள் தருசகனாலேயே அனுப்பப் பட்டிருக்கலாம்' என்று எண்ணியபோது தாங்கள் அவ்வளவு எளிதில் சூழ்ச்சிக்கு ஆட்பட்டுவிட்டது அவர்களுக்கே வியப்பையும் வெட்கத்தையும் அளித்தது. அவர்கள் அஞ்சினர். ஆத்திரங்கொண்டு மீண்டும் அங்கேயே ஒன்று கூடி எழுந்தனர். அடக்க முடியாத ஆத்திரத்தோடு மறுபடி மகத நாட்டின் மீது படை எடுக்கத் துணிந்தனர்.

'நாங்கள் குதிரை வியாபாரிகள். இப்போது தருசகனுக்குப் பகைவர்கள்' என்ற பொய்யை மிகச் சாதாரணமாகக் கூறித் தங்களை நம்ப வைத்துவிட்டார்களே என்று எண்ணி எண்ணி மனங்கொதித்தனர். 'இனி முற்றுந் துறந்த முனிவர்களேயானாலும் சரி - அவர்களைப் படை நடுவில் விடக்கூடாது. தாங்களும் தங்கள் ஆறு பேருடைய படைகளும் தவிர வேறு எவருக்கும் உள்ளே இடம் கொடுத்து ஏமாறக் கூடாது' என்று உறுதி செய்து கொண்டார்கள். ஏமாற்றப்பட்டவர்களின் மனக் கொதிப்பும் ஆத்திர வேகமும் தான் உலகிலேயே உவமை சொல்ல முடியாதவைகள். ஒன்று கூடி வந்த தங்களைக் கேவலம் ஒரே ஓர் இரவில் சிதறி ஓடச் செய்த சூழ்ச்சியை நினைக்க நினைக்க நெஞ்சு குமுறிய அவர்கள், பழைய முறைப்படி தத்தம் படைகளை அணிவகுத்துக் கொண்டு மீண்டும் மகத நாட்டு எல்லைக்குள்ளே விரைந்து புகுந்தனர். அமைதிக்கு இடமின்றிப் புயற்காற்றாக பொங்கியெழுகின்ற கடலைப் போல இருந்தது அவர்களது நிலை. இப்படி இரண்டாம் முறையாக அவர்கள் ஒன்றுபட்டு வந்தபோது அங்கங்கே தென்பட்ட அழகிய சோலைகளை இருந்த இடம் தெரியாமல் சூறையாடி அழித்தனர். கமுகு, வாழை முதலிய தோட்டங்கள் அவர்களது ஆத்திரம் மிக்க கைகளிற் சிக்கிச் சிதைந்தன. கருக் கொண்டிருக்கும் தாய் மகள் போலப் பசுமை தவழும் காய்களுடனே விளங்கும் பலா மரக் காடுகள் பாழ்பட்டன. மா மரங்களையும் தென்னை மரங்களையும் படைகளைச் சேர்ந்த யானைகள் ஒடித்துத் தள்ளின. கழனிகளில் முற்றியிருந்த நெற் கதிர்களுக்கு நெருப்பூட்டி விளை பொருள்களை நாசப்படுத்தி மகிழ்ந்தனர் அப்படை வீரர்கள். இந்தச் செய்தி வேகமாகத் தலைநகரத்துக்கு எட்ட வேண்டுமென்றே இப்படி எல்லாம் செய்தார்கள் அவர்கள்.

அஞ்சி ஓடிய பகையரசர்கள் மீண்டும் ஒன்று கூடிப் போர் புரிய வந்து கொண்டிருப்பது இராசகிரிய நகரத்தின் எல்லையிலுள்ள தன் ஒற்றர்கள் மூலம் தருசகனுக்குத் தெரிய வந்தது. இச் செய்தி அறிந்ததும், ஒரு முறை கொடிய நோய் ஒன்றினால் துன்புற்று வருந்தியவன், அந் நோய் தீர்ந்த சில நாள்களிலேயே மறுபடியும் அக் கொடிய நோயால் பீடிக்கப்பட்டால் எப்படி இருப்பானோ அப்படி இருந்தான் தருசக மன்னன். அப்போது, 'அந்த நிலையில் உடனடியாக என்ன செய்ய முடியும்?' என்பதே அவனுக்குத் தெரியவில்லை. தோற்று ஓடியவர்கள் ஒன்று கூடி மீண்டும் திரும்பி வரவேண்டுமென்றால் அவர்களுடைய துணிவும் தன்னம்பிக்கையும் அளவுக்கு அதிகமாக இருந்தாலொழிய அது முடியாது என்று எண்ணி அஞ்சினான் தருசகன். ஆனாலும் தன் மனத் தளர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்வது அந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்றதல்ல என்று கருதி வெளிப்படையாகச் சினங் கொண்டவன் போல நடித்துப் படைத் தலைவர்களிடம் படைகளை விரைவில் திரட்டுமாறு ஆணையிட்டான்.

'மீண்டும் பகைவர்கள் கூடி வந்துவிட்டார்கள். நம் அரசன் அவர்களை எதிர்த்துப் போர் செய்யக் கருதியிருக்கின்றான்' என்ற செய்தி படைத் தலைவர்களால் எங்கும் முரசறைந்து அறிவிக்கப் பட்டது. அரண்மனையிலேயே வேறொரு பகுதியில் தருசகனுடைய விருந்தினனாகத் தங்கியிருந்த உதயணனுக்கு முதலில் இந்தச் செய்தி தெரியவில்லை. படையெடுத்துப் பகைவர் மறுபடியும் வருவதையும் விரைவில் எதிரிப் படைகள் தாக்கலாம் என்பதையும் தருசகனுடைய ஒற்றர்கள் கூறியவுடன், அதைக் கேட்ட தருசகன் படை திரட்ட ஆணையிட்டிருப்பதை உதயணன் அறிந்த போது, தருசகனுக்கு இம் முறையும் தான் உதவ வேண்டும் என்றே அவன் எண்ணினான். செய்தியைக் கேள்விப்பட்ட உடனே, தன்னுடன் தங்கியிருந்த உருமண்ணுவா முதலிய நண்பர்களிடம் அதைக் கூறி, "இப்போதும் நாமே முன்னின்று பகைவர் படையை அழித்துத் தருசகனை காப்பாற்ற வேண்டும்" என்று உரைத்தான் உதயணன். மேலே செய்ய இருப்பவை பற்றி நண்பர்களோடு கலந்து ஆலோசித்தான். "விருந்தினனாக வந்து தங்கியிருக்கும் நான், ஏற்கனவே இந்தப் படையை விரட்டித் தனக்கு உதவி செய்தவன் என்ற கருத்தினால் கூச்சத்தோடு என்னை மறுபடி சிரமப்படுத்த விரும்பாது, தருசகன் இப்போது எனக்கு இச்செய்தியைச் சொல்லி அனுப்பாமல் இருக்கலாம். ஆனாலும் நாம் இதனைக் கேட்டறிந்த பின்னும் வாளா இருத்தல் கூடாது" என்று உதயணன் கூறியதை உருமண்ணுவா முதலியோரும் மறுக்கவில்லை. போரில் தருசகனுக்கு உதவி செய்து, முழுமையாக வெற்றி பெறத் துணை புரிய வேண்டும் என்ற முடிவை உதயணனைச் சேர்ந்த யாவரும் ஒப்புக் கொண்டனர். உடனே வயந்தகனிடம் தன் கருத்துக்களை விவரித்து, அவற்றையெல்லாம் தூதுவனாகச் சென்று தருசகனிடம் கூறி வருமாறு அனுப்பினான் உதயணன். வயந்தகன், உதயணன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டு, தருசகனிடம் அவற்றை எல்லாம் உரைப்பதற்காகத் தூதுவனாகச் செல்லலானான்.

"பிரச்சோதனன் மகளாகிய தன் ஆருயிர்க் காதலி வாசவதத்தை இலாவாண நகரத்து அரண்மனையில் தீப்பட்டு இறந்த நாளிலிருந்தே, உதயணன் வாழ்க்கையின் மேல் வெறுப்புற்றுச் சுற்றி வருகின்றான். எங்கள் அரசனாகிய உதயணன் அவ்வாறு ஊர் ஊராகச் சுற்றி வரும் போதுதான் இங்கும் வரும்படியாக நேர்ந்தது. இங்கு வந்த போது, உங்கள் மகத நாட்டின் மேல் மாற்றரசர் பலர் கூடிப் படையெடுத்து வந்துள்ளனர் என்பதை நாங்களும் எங்கள் அரசர் பிரானும் கேள்வியுற்றோம். கேள்வியுற்ற உடனே, 'என் தந்தையாருக்கு நெருங்கிய நண்பராகிய மகத மன்னரின் பகைவர்களை இங்கிருந்து ஓடச் செய்துவிடுவது நம் கடமை' என்று கூறி இரவுக்கு இரவே சூழ்ச்சி செய்து அவர்களை ஓடிப்போகுமாறு செய்தான், எம் அரசன் உதயணன். ஆனால் அதே பகையரசர்களே, இப்போது மீண்டும் தங்களுக்குள் ஒற்றுமையுற்று மகத நாடு நோக்கிப் படைகளோடு வந்திருப்பதாகத் தெரிகிறது. இச் செய்தியை எம் அரசனிடம் தங்களுக்குள்ள அன்பு காரணமாகக் கூறித் தாங்கள் அனுப்பாவிடினும், நாங்களே நிலைமையை அறிந்து கொண்டோம். பகைவர்கள் மறுமுறையும் படையெடுத்து வந்திருப்பதை எண்ணி நீங்கள் சிறிதும் கலங்க வேண்டியதில்லை. எங்கள் அரசர் பிரானாகிய உதயணனாற் செய்ய முடிந்த எந்த உதவியையும் பிறருக்குச் செய்ய அவர் ஒருபோதும் தயங்குவதே இல்லை. மேலும் தாங்களே தங்கள் படைகளுடனே நேரிற் சென்று இந்தப் பகைவர்களுடன் போரிடுவது தங்களது தகுதிக்கு அவ்வளவு ஏற்றது ஆகாது. போரில் வெற்றி அல்லது தோல்வி என்பது மதில் மேல் பூனையைப் போல ஆகும். யார் பக்கம் வெற்றி, யார் பக்கம் தோல்வி என்பது அறிய முடிந்தது அல்ல. ஒரு கால் தோல்வி நம் பக்கம் நேருமானால், 'தாங்கள் நேரில் போருக்குச் சென்றும் பகைவர்கள் வென்றுவிட்டார்களே!' என்று நாளைய உலகம் தங்களுக்கு அழியாப் பழி ஒன்றை உண்டாக்கிவிடும். நாங்களும் எங்கள் மன்னரும், தங்கள் படை உதவியுடன் மட்டும் இந்தப் போருக்குச் சென்றால் தங்களுக்கு அவ்வாறு எத்தகைய பழியும் ஏற்படுவதற்கு வழி இல்லை. வெற்றியானால் அந்தப் பெருமிதத்தை நாங்கள் தங்களுக்கே அளிப்போம். தோல்வி என்றாலோ அந்தக் களங்கத்தைத் தங்கள் பக்கம் சாரவிடாமல் எங்களிடம் நாங்களே அமைத்துக் கொள்வோம். எனவே மகதவர் பேரரசே! ஆற்றலுடனே ஒன்றுபட்டு வந்திருக்கும் பகைவர்களை வென்று வருவதற்காகத் தாங்களே நேரிற் செல்ல வேண்டாம். எங்கள் மன்னர் பிரான் உதயணனுக்கு தங்கள் படைகள் யாவற்றையும் அளித்துப் போர்முனை நோக்கி அனுப்புங்கள். அதுவே சுலபமான வெற்றிக்கு ஏற்ற வழி! இவை பற்றித் தங்கள் கருத்து யாது என்பதை அறிந்து வரச் சொல்லியே என்னைத் தங்களிடம் தூதுவனாக அனுப்பினார் எங்கள் மன்னர்" என்று உதயணன் தன்னிடம் கூறி அனுப்பியவற்றை எல்லாம் வயந்தகன் தருசகராசனிடம் விளக்கமாக எடுத்து உரைத்தான்.

தன் முன் நின்ற வயந்தகன் கூறியவற்றைத் தருசகன் அமைதியாக இருந்து முற்றிலும் கேட்டான். உதயணனின் கருத்துப்படியே நடந்து கொள்வதுதான் நல்லது என்ற எண்ணமே தருசகனுக்கும் உண்டாயிற்று. அவன் வயந்தகன் கூறியவற்றைப் பூரணமாக நம்பி ஏற்றுக் கொண்டான். இருப்பினும் தன் அவையோர்களிடம் அதைப் பற்றிக் கூறி அவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதையும் அறிய வேண்டியிருந்தது. அவசியத்தை உத்தேசித்து அதை அவனால் தவிர்க்க முடியவில்லை. "உதயணன் எப்போதும் தீமை நினையாதவன். அவன் கூறியனுப்பியிருப்பதை நாம் உறுதியாக நம்பலாம். நம் படைகளை அவனோடு துணைக்கு அனுப்புவதில் எந்தவிதமான தவறும் கிடையாது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று அவன் தன் அவையோர்களைக் கேட்டான். "என்ன இருந்தாலும் நமக்கு உதயணன் வேற்றவன் தானே! எதற்கும், அவன் இவ்வாறு கூறியனுப்பி இருப்பதின் உட்கருத்து எதுவாக இருக்கலாம் என்பதைத் தீர ஆராய்ந்தால் ஒழிய, நாம் இதற்குச் சம்மதிப்பது கூடாது" என்று தருசகனின் அவையைச் சேர்ந்த அறிஞர்கள் அவனுக்குக் கூறினர். ஆனால் தருசகனோ அவர்களுக்கு உதயணனைப் பற்றிக் கூறித் தக்க சமாதானங்களை எடுத்துச் சொல்லிவிட்டான். "நம்மைவிட உதயணன் பகைவர்களை விரட்டுவதில் சூழ்ச்சித் திறம் மிக்கவன். அவனால் நமக்குத் தீமை வரும் என்பதை நாம் கனவிலும் எண்ண வேண்டியதில்லை" என்று அவன் முடிந்த முடிவாகச் சொல்லிய போது அவர்கள் மேலும் மறுத்துப் பேச முயலவில்லை. உடனே தருசகன் படைத் தளபதிகளை வரவழைத்து எல்லாப் படைகளையும் போருக்கு ஆயத்தம் செய்ய வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டான். வயந்தகன் இன்னும் அங்கேயே இருந்தான். தன் தூது வெற்றி பெற்றதற்கு அறிகுறியாக அவன் முகம் மலர்ந்தது. தளபதிகள் படைகளை ஆயத்தம் செய்வதற்குப் புறப்பட்டனர்.

45. மறுபடியும் போர்

இங்கு நிலைமை இவ்வாறு இருக்கும்போது, அரண்மனையில் திருமணம் பேசி வந்து முன்பே விருந்தினனாகத் தங்கியிருந்த கேகயத்து அரசன் அச்சுவப் பெருமகனுக்கும், இச் செய்திகள் பராபரியாகத் தெரியலாயின. இந்த நிலையில் விருந்தினனாகத் தங்கித் திருமணப் பேச்சோடு வந்திருந்தாலும் தருசகனுக்கு உதவாமல் இருந்துவிடுவது ஆண்மைக்கும் தன் உறவு நோக்கத்துக்கும் அழகல்ல என்றெண்ணினான் அவன். தான் உதவாமல் இருந்துவிட்டால், தருசகனே தன்னைப் பற்றித் தவறாக எண்ணிக் கொள்வான் என்றும் அவனுக்குத் தோன்றியது. 'தான் எப்படியும் இந்தச் சந்தர்ப்பத்தில் தருசகனுக்கு உதவி செய்தே ஆக வேண்டும்' என்று முடிவு செய்து கொண்ட அவன், நேரே தருசகனைச் சந்திப்பதற்குச் சென்றான். "உங்களை எதிர்த்துப் படையெடுத்து வந்திருப்பவர்கள் தேவர்களே ஆனாலும் சரி! நான் ஒருவனே அவர்களை வென்று உங்களுக்கு இழுக்கு வராமல் பாதுகாப்பேன். அருள் கூர்ந்து எனக்கு அனுமதி கொடுங்கள். நான் படைகளோடு சென்று வெற்றியைக் கொண்டு வருகிறேன்" என்று கேகயத்து அரசன் அச்சுவப் பெருமகன், வலிய முன்வந்து கூறிய போது தருசகன் வியப்படைந்தான். கேகயத்து மன்னனின் வேண்டுகோளை அவனால் புறக்கணிக்க முடியவில்லை. ஏற்கனவே உதயணன், வயந்தகன் மூலமாகக் கூறி அனுப்பியவற்றைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்திருந்த தருசகன், இப்போது தன் தங்கையை மணம் பேசி வந்த கேகயன் கேட்கும் வேண்டுதலுக்கு செவிசாய்த்துத்தான் ஆகவேண்டியிருந்தது. உதயணனுடனே தன் படைகளை உதவிக்கு அனுப்பும் போது கேகயத்தரசனையும் கூட அனுப்பலாம் என்று கருதினான் தருசகன். "என்மேற் படையெடுத்து வந்த பகையரசர்களை வெல்வதற்கு, உதயணன் தானே போருக்குச் செல்வதற்கு அனுமதி அளித்து என்னுடைய படைகளையும் உதவும்படி முன்பே வேண்டிக் கொண்டிருக்கிறான். நீ அவனோடு உடன் சென்று போர் செய்ய விரும்புவாயாயின் அதனை நான் மறுக்கவில்லை" என்று அச்சுவப் பெருமகனை நோக்கித் தருசகன் பதில் கூறினான். உதயணனோடு போர்க்களம் சென்று, தருசகனை வெல்லக் கருதிப் படையெடுத்து வந்திருக்கும் ஆத்திரங் கொண்ட பகையரசர்களோடு தானும் போரிடுவதற்குச் சம்மதித்தான் கேகய மன்னன். அவன் சம்மதத்தைக் கேட்டதும் தருசக மன்னன் அங்கே காத்திருந்த வயந்தகனைத் தன் அருகில் அழைத்தான். வயந்தகன் அருகில் நெருங்கி வந்து நின்று கொண்டதும், உதயணனுக்குத் தான் அனுப்ப வேண்டிய செய்திகளை, அவனிடம் கூறத் தொடங்கினான். "வயந்தக! இப்போது நான் கூறுவனவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு சென்று நீ உதயணனுக்குக் கூற வேண்டும். உதயணன் உன்னிடம் கூறி அனுப்பிய வேண்டுகோளின்படி என் படைகளை அவனுடன் உதவிக்கு அனுப்புகிறேன். அதனுடன், என் தங்கையைத் திருமணம் பேசுவதற்காக வந்து இப்போது இங்கே என் விருந்தினனாகத் தங்கியிருக்கும் கேகய மன்னனும் போரில் கலந்து கொள்ள விரும்புவதால் அவனையும் அனுப்புகின்றேன். என் படைகளையும் கேகய மன்னன் அச்சுவப் பெருமகனையும் துணைகளாகக் கொண்டு நாம் வெற்றி அடையும்படியாகப் போரை நடத்த வேண்டும் என்று உதயணனிடம் நீ போய்க் கூறு. மேலும் கேகயத்தரசன் திருமணக் காரியமாக இங்கே வந்திருப்பதனால் போரில் அவனுக்கு எதுவும் தீங்கு நேர்ந்து விடாமல் அவனைக் காப்பாற்றும் கடமையும் உதயணனுக்கு உண்டு என்று நான் சொல்லியதாக அவனிடம் சொல்" என்று கூறித் தருசகன் வயந்தகனை அனுப்பினான்.

வயந்தகன் சென்ற பின்பு, மீண்டும் கேகயத்தரசனையும் தன் அமைச்சர்கள், படைத்தலைவர்கள் முதலியோரையும் அழைத்தனுப்பி அவர்களுடன் கூடி ஆலோசனைகள் சிலவற்றை நடத்தினான் தருசகன். 'பகைவர் படையின் இரண்டாவது தாக்குதலும் தானாகவே தீர்க்கப்பட்டுவிடும்' என்று எண்ணி நம்பிக்கைக் கொள்ளும் அளவிற்கு உதயணன் வேண்டுகோளால் தருசகன் துணிவு அடைந்திருந்தான். படைவீரர்களை மேலும் மேலும் திரட்டுமாறு சேனாதிபதிகள் ஏவப்பெற்றனர். மகத நாட்டுக்குரிய பல்வகைப் படைகளும் போருக்கு எழுந்தன. கேகய மன்னனும் அந்தப் படைகளுடன் போருக்குச் சித்தமானான். உதயணனிடம் இருந்த சின்னஞ்சிறு படைத் தொகுதியும் மகத நாட்டுப் படைகளோடு கலந்து கொண்டன. உதயணன் தங்கியிருந்த பகுதிக்கு எதிரே அரண்மனை முற்றத்தில் எல்லாப் படைகளும் வரிசை வரிசையாக அணிவகுத்து நின்றன. உருமண்ணுவா, வயந்தகன், இசைச்சன் முதலியோர் நன்கு அலங்கரிக்கப்பட்ட யானைகளின் மேல் ஏறிக் கொண்டு முன்னணியில் விளங்கினர். அதற்கு முன்னால் ஒளி தவழும் அம்பாரியோடு கூடிய வேறோர் பெரிய யானை உதயணன் வந்து ஏறிக்கொள்வதற்காக என்றே நின்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் உதயணனும் போர்க் கோலத்துடனே வந்து அதன் மேலே ஏறி அமர்ந்து கொண்டான். சுற்றியிருந்த கோடிக்கணக்கான படை வீரர்களின் வாழ்த்தொலி வானைப் பிளந்தது. படைகளெல்லாம் புறப்படும் நேரமும் வந்தது. அந்த நேரத்தில் கேகயத்தரசனை உடன் அழைத்துக் கொண்டு தருசகன் அங்கே வந்தான். உதயணன் முதலியோரும் படைகளும் அவர்களுக்கு மிகுந்த மரியாதை செய்து வரவேற்றனர்.

தருசகன், உதயணனைத் தனியே அழைத்து, "கேகய மன்னன் இங்கே சுப காரியத்தைப் பற்றிப் பேசி விட்டுப் போவதற்காக வந்து தங்கியவன். தற்செயலாகத் திடுமென்று ஏற்பட்ட இந்தப் போரில் அவன் விரும்பிக் கலந்து கொண்டாலும் அவனுக்குத் துன்பம் நேராமல் நாம் காத்துக் கொள்ள வேண்டும்" என்று கவலையோடு கூறினான். உதயணன் கேகய மன்னனைக் காப்பது தன் கடமை என்றும் உறுதி மொழி கூறிய பின், தருசகன் இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு சென்றான். அவன் சென்றதும் அச்சுவப் பெருமகன் தனக்கு என்று இருந்த போர் யானையின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். உதயணன், உருமண்ணுவாவையும் கேகயத்தரசனையும் ஒரு வரிசையில் முன்னாக அமைத்து மற்றப் படைகளையும் ஏற்றபடி வரிசை செய்து கொண்டு புறப்பட்டான். கேகயத் தரசனுக்குத் துன்பம் நேராமல் காக்கவே அவனை உருமண்ணுவாவின் பக்கத்தில் நிறுத்தினான். தான் எல்லாருக்கும் முன் சென்று பகைவர்கள் பாசறையை நோக்கிப் படையைச் செலுத்தினான் உதயணன். பகைவர்கள் பாசறையை நேரடியாகப் போய் வளைத்துக் கொள்ள வேண்டுமென்பது அவன் திட்டமாயிருந்தது.

பகைவர் பாசறைக்கு அருகில் இரு தரப்புப் படைகளும் சந்தித்தன. தருசகன் படையை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் போலப் போரிடுவதற்கு ஏற்ற நிலையிலிருந்தனர் பகை படையினர். ஒருமுறை ஏமாற்றப்பட்டவர்கள் ஆகையால் இப்போது அவர்களுடைய ஆவேசமும் ஆத்திரமும் வளர்ந்து பெருகியிருந்தன. உதயணன் தலைமையில் கேகயன், உருமண்ணுவா முதலியவர்களோடு வந்த தருசகனின் வீரர்களும் திடீர்த் தாக்குதலுக்கு ஆயத்தமாகவே வந்திருந்தனர். படைவீரர்கள் சந்தித்த உடனேயே எதிர்பார்த்ததைக் காட்டிலும் விரைவாகப் போர் தொடங்கி விட்டது. இரண்டு பக்கத்திலும் வீரர்கள் நிறைகுறை சொல்ல முடியாதபடி ஈடுபட்டுப் போர் செய்தனர். காலாட் படையினர், யானைப் படையினர் என்றும் தனித்தனியே பிரிந்து நின்று போரிட்டனர். ஆரவாரம் செய்யும் அலைகடல் போலப் போர்க்களமே பயங்கரமான ஒலிகளால் நிறைந்து கலகலப்பாகவும் சுறுசுறுப்பாகவும் விளங்கியது. சிறிது நேரத்திற்கு முன்பு அமைதி தவழ்ந்த மண்ணில், இப்போது குருதி பெருகி ஓடியது. உடல்கள், யானைகள், குதிரைகள் சிலபல பிண்டங்களாகக் கோரமாய் வெட்டுண்டு வீழ்த்தப்பட்டன. உயிரைப் படைத்த மண், உயிரைப் போரிட்டு விளையாடச் செய்யும் பயங்கரத்தை யுத்த மூலமாகக் கண்டது. நேரம் ஆக ஆகப் போர் வெறி மூண்ட நிலையில், இரண்டு படைகளும் மிக நெருங்கி நின்று தாக்கிக் கொள்ளத் தலைப்பட்டன. போரின் வேகம் உச்ச நிலையை அடைந்திருந்தது.

உதயணன், உருமண்ணுவா, கேகய மன்னன் மூவரும் ஒரு பகுதியாகப் பிரிந்து தம் படைகளுடன் எலிச்செவியரசனைத் தாக்கிக் கொண்டிருந்தனர். எதிர்த் தரப்பில் எலிச்செவியும் அவன் தம்பி சித்திராங்கதனும் இருந்தனர். அண்ணனும் தம்பியுமாக அவர்கள் ஒன்று கூடித் தாக்கியதனால், உதயணன் பக்கம் மூவர் இருந்தும் தாக்குதலைச் சமாளிப்பது சற்றுக் கடினமாகவே இருந்தது. எலிச்செவி அரசனுடைய தம்பியை மடக்கிக் கைப்பற்றி விட்டால் அப்பால் அவனையும் சுலபமாக மடக்கி விட முடியும் என்று தோன்றியது. உதயணனுக்கு இந்த எண்ணம் தோன்றவும் எலிச்செவியின் தம்பி சித்தராங்கதன் நின்ற பக்கமாகச் சென்று வளைத்தான் அவன். சித்திராங்கதனோ ஒரு பெரிய யானை மேல் வாளோடு அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் சந்தர்ப்ப வசதிகளுக்கு ஏற்றவாறு மாறிமாறிப் போர் செய்து கொண்டிருந்தான். உதயணன் அப்போது தேரில் இருந்து கொண்டே சித்திராங்கதனை வளைத்தான். யானை மேல் அவன் அமர்ந்திருந்த உயரத்திற்குத் தேரில் உதயணன் நின்ற இடம், முக்கால் மட்டத்தில் தான் இருந்தது. திடீரென்று எலிச்செவியின் தம்பி சற்றே அஜாக்கிரதையாக இருந்த நேரம் பார்த்து உதயணன் தன் தேரிலிருந்து கையில் வாளுடனே எதிரிலிருந்த அவனுடைய யானையின் மத்தகத்தை நோக்கி நேரே தாவாகத் தாவிப் பாய்ந்தான். பாய்ந்த வேகத்தில் எதிரியின் வசம் யானை மேல் இருந்த வேல், வாள் முதலிய ஆயுதங்களைக் கீழே தள்ளி சித்திராங்கதனை நிராயுத பாணியாக்கினான். பின் அவன் அணிந்திருந்த இடுப்புக் கச்சையினாலேயே அவனுடைய கைகளை இறுக்கிக் கட்டிவிட்டான். எலிச்செவியின் தம்பி அவசரத்தால் ஏற்பட்ட திகைப்பும் மலைப்பும் நீங்கித் தன்னுணர்வு பெற்று உதயணனை எதிர்க்கத் தொடங்குவதற்குள்ளேயே அவன் இவ்வளவையும் செய்து முடித்து விட்டான். அதே வேகத்தோடு வேகமாக அவனை யானையிலிருந்து கீழே தள்ளித் தானும் இறங்கினான். இறங்கினவுடன் கீழே கைகள் கட்டுண்ட நிலையில் விழுந்து கிடக்கும் அவனைத் தன் தேருக்கு இழுத்து வந்து தேர்க்காலில் பிணித்து விட்டான். உதயணன் தன் தேர்க்காலில் வைத்துக் கட்டிய பின் எலிச்செவியின் தம்பி சித்திராங்கதன் கட்டுக்களிலிருந்து ஆடவோ அசையவோ முடியவில்லை; அவன் வாய்விட்டு அலறினான். அந்தக் குரல் உருமண்ணுவாவுடனும் கேகயத்தரசனுடனும் போரிட்டுக் கொண்டிருந்த எலிச்செவியைத் திரும்பிப் பார்க்கும்படிச் செய்தது. திரும்பிப் பார்த்த எலிச்செவி, தன் தம்பி சித்திராங்கதன், உதயணனுடைய தேர்க்காலிலே கட்டப்பட்டிருப்பது கண்டு மனக் கொதிப்படைந்தான். எலிச்செவியின் தம்பி சித்திராங்கதனை மடக்குவதனால் எலிச்செவியைத் தான் சுலபமாக வென்றுவிடலாம் என்பதே உதயணன் உட்கருத்து. இந்தக் கருத்து உருமண்ணுவாவுக்குக் குறிப்பாகத் தெரிந்தது.

46. கேகயன் மரணம்

போரில் உதயணன், எலிச்செவியின் தம்பி சித்திராங்கதனைக் கைப்பற்றிய உடனே உருமண்ணுவாவும் கேகயனும் முன்னேற்பாடாக எலிச்செவியை அருகிற் சென்று நெருங்கித் தாக்க ஆரம்பித்தனர். தம்பியை இழந்து தவிக்கும் இந்த நிலையில் எலிச்செவியையும் கட்டிக் கைப்பற்றிவிடலாமென்றே உருமண்ணுவா அவனை எதிர்ப்பதில் அவ்வளவு அவசரப்பட்டான். எலிச்செவியைச் சுற்றிப் பின்னால் அவன் படைகள் நிறைந்திருக்கின்றன என்பதைக் கூட அப்போது அவன் நினைப்பதற்கு மறந்து போனான். தன்னை நெருங்கி வளைக்கும் உருமண்ணுவாவையும் கேகயனையும் கண்டதும் எலிச்செவி பொறுமை இழந்து போகும் அளவிற்குப் படபடப்பு அடைந்து விட்டான். அந்த படபடப்போடு அவன் திடீரென்று எழும்பிக் குதித்து வீசிய வாள் வீச்சுக்குக் கேகய அரசனின் தலை இலக்காகிவிட்டது. ஒரு நொடியில் உருமண்ணுவாவோ, உதயணனோ, ஏன்? எலிச்செவி கூட எதிர்பாராதது நடந்து விட்டது! கேகயன் தலை உடலிலிருந்து பிரிந்து தரையில் வீழ்ந்தது. குருதி ஒழுகும் அவன் உடல் யானைமேற், சரிந்து சாய்வாக விழுந்தது. எதிர்பாராத விதமாகக் கேகயனுக்கு நேர்ந்த இந்தத் தீய மரணத்தை எண்ணித் திகைத்தவாறே என்ன செய்வதெனத் தோன்றாமல் இருந்தான் உருமண்ணுவா. உருமண்ணுவாவின் இந்தத் தளர்ச்சியையும் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய எலிச்செவி, சட்டென்று அவன் யானை மேலே தாவிப் பாய்ந்தான். கையில் உருவிய வாளுடனே பாய்ந்த எலிச்செவி உருமண்ணுவாவைக் கட்டிப் பிணித்துக் கைதியாக்கி விட்டான். போர்க்களத்தில் விநாடி நேர அமைதிக்கும் கூட விளைவு உண்டு. உதயணன் தன் தம்பியை எப்படிக் கைதாக்கினானோ அப்படியே உருமண்ணுவாவை எலிச்செவியும் கைதாக்கி விட்டான். இடையில் கேகயன் கொலை செய்யப்பட்டதும் உதயணன் பக்கம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக வந்து வாய்த்து விட்டது.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன் நம்பிக்கையையே முற்றிலும் உருக்குலைத்து அழிக்கும்படியான இரண்டு பெரிய நஷ்டங்கள் ஏற்பட்டு விட்டதைக் கண்டு உதயணனுடைய மனம் ஒடுங்கிப் போயிற்று. 'கேகயன் மரணமடைந்து விட்டானே என்று மலைத்து வேதனைப் பட்டுக் கொண்டிருந்த போதே, இப்படி உருமண்ணுவாவும் எதிரி கையிலே போய்ச் சிக்கிக் கொண்டானே' என்று வருந்தினான் உதயணன். "என் தம்பியை உதயணன் சிறைப்பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறான். அதே போலத் தான் நானும் உன்னைச் சிறைப்பிடித்திருக்கிறேன். என் தம்பி உதயணனிடமிருந்து விடுதலை பெற்றால் ஒழிய நீ என்னிடமிருந்து தப்ப முடியாது. அஞ்சாதே! உன்னை நான் வீணாகத் துன்புறுத்த மாட்டேன். ஆனால், என் தம்பி உன் தலைவன் கைகளினால் துன்புறுத்தப்படுவதைப் பார்க்கவும் நான் பொறுக்க மாட்டேன்" என்று எலிச்செவி, உதயணன் காதுகளிலும் கேட்கும்படியான உரத்த குரலில் உருமண்ணுவாவை நோக்கிக் கூறினான். உதயணனும் அவன் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டான். எப்படியாவது உருமண்ணுவாவைப் பகைவன் கையிலிருந்து மீட்டுவிட வேண்டும் என்றும் அதற்காக அவன் சிந்தித்தான்.

"நீ சிறைப்பிடித்திருக்கும் இவன் எங்கள் மன்னனாகிய தருசகனுக்கு ஒப்பானவன்! இவனுக்கு எந்த விதமான துன்பமும் இழைக்காமல் நீ விடுதலை செய்து எங்களிடம் அனுப்பிவிட்டால் நானும் உன் தம்பியை உடனே விடுதலை செய்து விடுகிறேன்" என்று அவன் கூறியவற்றிற்கு மறுமொழி கூறுகின்றவனைப் போல உதயணனும் இரைந்து பதில் சொன்னான். இந்தப் பதிலை எலிச்செவியும் கேட்டிருந்தாலும் உடனே விடை கூறாமலே அவன் மேலும் போர் செய்வதையே தொடர்ந்தான். உதயணனும் அவனை எதிர்த்துப் போர்ச் செய்தான். இதற்குள் மற்றப் பகுதிகளில் போர் செய்து கொண்டிருந்த தருசகனின் படைகளும் அங்கங்கே வெற்றி பெற்றுக் கொண்டு, உதயணன் பக்கம் வந்து சேர்ந்தன.

ஒன்று கூடி வந்திருந்த அரசர்களில் தோற்று ஓடிப்போனவரும் இறந்து போனவர்களும் போக எஞ்சியிருந்தவர்களே இரண்டொருவர்தாம். உதயணன் பக்கம் படைப் பெருகப் பெருக எலிச்செவி, பின்வாங்கிப் பதுங்க ஆரம்பித்தான். தண்ணீர் வெள்ளத்தைத் தாங்க முடியாமல் கரைந்து உடைந்து அழியும் உப்புச் சுவரைப் போலப் பகைவர் படை சிதறி அழிந்து போயிற்று. இறுதியாக எலிச்செவியும் வேறு சிலரும் போர் செய்ய ஆற்றலிழந்து, சிறைப்பிடித்த உருமண்ணுவாவையும் இழுத்துக் கொண்டு புறமுதுகுகாட்டி ஓடிப்போயினர். உதயணன் வெற்றி பெற்றான். ஆனால், அந்த வெற்றியில் கண்ணீரும் கலந்திருந்தது. கேகயத்தரசனின் மரணம், உருமண்ணுவா பகைவர்களிடம் கைதியானது இவ்வளவிற்கும் மேல் அல்லவா அந்த வெற்றி கிடைத்திருக்கிறது? உருமண்ணுவாவைப் பிரிந்த துயரத்துடனும் கேகயத்தரசனை இழந்த வேதனையுடனும் உதயணன் வெற்றியினாலும் களிப்பைப் பெறுவதற்கு முடியாதவனாய்ப் படைகளோடு தலைநகருக்குத் திரும்பினான். முதல் முறை தனியொருவனாக இருந்து, சிலர் உதவியுடனே, சூழ்ச்சியால் வெற்றி பெற்ற போது கூட இத்தகைய துன்பங்கள் எதுவும் அவனுக்கு ஏற்படவில்லை. இப்போது போர் செய்து பெற்ற வெற்றி, அவ்வளவு துன்பங்களை அவனுக்குத் தந்துவிட்டது.

இரண்டாம் முறையாக வெற்றி வாகை சூடித் திரும்பும் உதயணனை வரவேற்க நகர் எல்லையருகே பரிவாரங்கள் புடைசூழ வந்து காத்திருந்தான் தருசகன். தனக்கு ஏற்பட இருக்கும் துன்பங்கள் உதயணனால் ஒவ்வொன்றாக விலகி வருவதைக் கண்டு, அவன்பால் மட்டற்ற மகிழ்ச்சியும் அன்பும் கொண்டிருந்தான் அவன். உதயணனும் படைகளும் நகர எல்லைக்கு வந்து சேர்ந்தவுடன் தருசகன் எதிரே வந்து வரவேற்றான். உதயணனைப் போற்றிப் புகழ்ந்து இரண்டாம் முறையாகத் தன் நன்றியைக் கூறிக் கொண்டான். 'தருசகனைக் கண்டதும் கேகயத்தரசன் மரணத்தை அவனுக்கு எவ்வாறு கூறுவது' என்று எண்ணித் தயங்கினான் உதயணன். பின்பு மனத்தைத் தேற்றிக் கொண்டு, தான் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் உருமண்ணுவாவோடு களத்தில் முன்னே முன்னே சென்று பகைவர்களை வருத்தும் ஆர்வத்தோடு போரிட்டதனால் கேகயன் எலிச்செவியின் வாளுக்கு இரையானான் என்பதையும் உருமண்ணுவாவைப் பகைவர் பிடித்துச் சென்றனர் என்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தான். இந்தச் செய்திகளைக் கேட்ட தருசகன் பெரிதும் வருந்தினான். "என் தங்கையை மணம் செய்து கொள்ள ஆர்வமுற்று, இங்கே அவன் வந்தான். அந்த ஆர்வத்தை நான் அவனுக்குப் பூர்த்தி செய்து வைப்பதற்கு முன் எனக்காக அவனே போரில் கடமை பூண்டு உயிர்தியாகம் செய்துவிட்டானே!" என்று சொல்லி உள்ளம் உருகிய தருசகனை உடனிருந்தவர்கள் தகுந்த வார்த்தைகளைக் கூறி ஆற்றுவித்தார்கள்.

உடனே அன்று இரவிலேயே போர்க்களத்திலிருந்து கேகயனின் சடலத்தைக் கொணரச் செய்து முறைப்படி கருமங்களைச் செய்தனர். ஆசை தணியாமலே வெந்து அழிந்து போனது கேகயனுடல். எல்லாம் முடிந்த பின் தருசகனும் உதயணனும் தலைநகரத்திற்குப் புறப்பட்டனர். நகரமக்கள் உதயணனைப் பலவாறாகப் புகழ்ந்து வரவேற்றனர். 'இவன் அல்லவா உண்மை வீரன்?' என்று புகழ்ந்தது மகத நாட்டு மக்கள் கூட்டம். 'இவனுடைய இத்தகைய வெற்றிகளை எல்லாம் பார்க்கக் கொடுத்து வைக்காமல் இறந்து போன இவன் தேவி வாசவதத்தை பாக்கியமில்லாதவளே' என்று சிலர் அவளைப் பழிப்பது போலப் பேசினர். 'தத்தை இறந்த துயரம் தாங்காமல் தான் உதயணன் இங்கு வந்தான். அதனால் எங்கள் நாடு பெற இருந்த பகைத் துன்பங்கள் நீங்கின. எனவே இறந்தும் நன்மை செய்கிறாள் வாசவத்தை' என்று அவளைப் புகழ்வது போல் பேசினர் வேறு சிலர். அப்போதிருந்த மனநிலையில் உதயணனால் இப் புகழுரைகளில் ஈடுபாடு கொள்ள இயலவில்லை.

உதயணன், கேகயனுக்கும் உருமண்ணுவாவுக்கும் போர்க்களத்தில் ஏற்பட்ட துன்பங்களையே எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருந்தான். அவற்றை அவ்வளவு எளிதாக மறக்க முடியவில்லை அவனால். புகழ்ச்சி உரைகளில் ஈடுபாடு கொள்ள இயலாத மனநிலையோடு தருசகனுடன் அரண்மனை நோக்கிச் சென்று கொண்டிருந்தான் உதயணன். உதயணனது அந்த வரவை வெற்றித் திருஉலாவாகக் கொண்டாடும் நகர பெருமக்கள் வாய் ஓயாமல் அவன் புகழ் பேசி மகிழ்ந்தனர். "தருசகன் தன் தங்கை பதுமாபதியை இனி உதயணனுக்கே மணம் புரிந்து கொடுக்கலாம். பதுமையை மணந்து கொள்வதற்கு என்று வந்து தங்கியிருந்த கேகயத்தரசன் கூடப் போரில் மாண்டு போயினான். தனக்கு உதயணன் செய்திருக்கும் அரிய பேருதவிக்குக் கடல் சூழ்ந்த உலகம் முழுவதையுமே தருசகன் ஈடாகக் கொடுத்தாலும் அது போதாது. உதயணனின் ஈடு எடுப்பற்ற உதவிக்குப் பதுமையை அவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் இந்தக் கைம்மாறு ஓரளவு ஏற்றதாக அமையலாம்" என்று தமக்குத் தோன்றியவாறு பேசினர் நகர மக்கள்.

47. பதுமை கலங்கினாள்

பகை மன்னர்களை வென்று, மகத நாட்டைச் சூழ்வதற்கு இருந்து அச்ச மூட்டிய துன்பத்தைப் போக்கியதற்காக உதயணனைத் தன் அரண்மனை விருந்தினனாகச் சில நாள்கள் தங்கியிருக்கச் செய்தான் தருசக மன்னன். உதயணனுடைய அருமை நண்பர்களும் மற்றையோரும் கூட அவ்வாறே இராசகிரிய நகரத்தில் தங்கி இருந்தனர். உதயணன் உள்ளம் எந்த நிலையிலும் எதையாவது சிந்தித்துக் கொண்டிருக்கப் பழகிய உள்ளம். அரண்மனையில் விருந்தினனாகத் தனிமையும் அமைதியும் மிக்க சூழ்நிலையில் தங்கி இருந்த அப்போது கூட அவன் நெஞ்சம் பழைய இன்ப நினைவுகளில் ஆழ்ந்திருந்தது. சிந்தித்துச் சிந்தித்துப் பழகித் தழும்பேறிய உள்ளத்திற்குத் தனிமை என்பது பல நாள் பசிக்குப் பிறகு கிடைத்த சுவை மிகுந்த உணவைப் போன்றது. பதுமையோடு கன்னிமாடத்திலும் காமன் கோட்டத்திலும் பழகிய மகிழ்ச்சி நினைவுகள் அவன் மனத்தில் மலர்ந்தன.

உதயணன் பழைய நினைவுகள் என்பனவற்றைத் திராட்சை மதுவைப் போல மயக்கம் அளிக்கும் இயல்புடையனவாகக் கருதினான். அவற்றை எண்ணிப் பார்ப்பதில் தனிப்பட்ட ஒருவகைக் களிப்பு இருந்தது. அரண்மனையில் விருந்தினனாகத் தங்கியிருந்த அந்த நிலையில் தான் பதுமையோடு பழகிய நிகழ்ச்சிகளை எண்ணுதலாகிய நினைவுப் புணை கொண்டு தனிமைக் கடலைக் கடந்து கொண்டிருந்தான் உதயணன். 'பதுமையிடம் தான் கொண்ட காதல் இப்படி வெறும் நினைவு மாத்திரையோடு நின்றுவிடக் கூடாதே!' என்ற ஏக்க உணர்வும் அப்போது அவனுக்கு உண்டாகும். 'தாங்கள் காதலை நிலையாக இணைத்துக் கொள்ளத் திருமண உறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்! அதை எவ்வாறு ஏற்படுத்திக் கொள்ளலாம்?' என்று சிந்திக்கத் தொடங்கினான் அவன். 'முறையாக இவை நடக்க வேண்டியவை' என்னும் விளக்க முடியாத நியதிக்கு உட்பட்ட நிகழ்ச்சிகளை விதி தானே பொறுப்பேற்று நடத்தி விடுகிறது. அத்தகைய நிகழ்ச்சிகளோடு சம்பந்தம் உடைய யாவருக்கும் அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஏற்ற மனப்போக்கு, எண்ணங்கள் முதலியவற்றையும் விதியே உண்டாக்கிக் கொடுக்கிறது என்று கூடச் சொல்லலாம். இல்லை என்றால் தருசக வேந்தனுக்கும் அப்போது 'பதுமையை உதயணனுக்குத் திருமணம் செய்து கொடுத்தால் என்ன?' என்ற சிந்தனை தோன்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 'அச்சுவப் பெருமகன் போரில் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டான். உதயணனுக்கே பதுமையை மணஞ் செய்து கொடுத்து விட்டால் என்ன? காலமறிந்து நமக்கு அவன் செய்த உதவிக்கும் நாம் வேறு எந்த வகையில் தான் கைம்மாறு செய்யப் போகிறோம்! பதுமையும் உதயணனை அடைவதற்கு முற்பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும். உதயணன் அழகன், அறிஞன், கலைஞன், வீரன்! ஒப்பிலாப் பேரரசர்களில் ஒருவனாகவும் இருக்கிறான். பதுமையை அவனுக்கு மணம் புரிந்து கொடுப்பதால் நமக்கும் பெருமை; பதுமைக்கும் அது ஒரு சிறந்த பாக்கியம். நம் பதுமையின் அழகைக் கண்டால் உதயணன் அவளை உறுதியாக மணந்து கொள்ள விரும்புவான், என இத்தகைய சிந்தனைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த தருசகவேந்தன் தன் அமைச்சர்களையும் மற்ற பெரியோர்களையும் அழைத்து இதைப் பற்றி ஆலோசித்தான்.

தருசகனின் கருத்தை அவர்கள் யாவரும் ஒப்புக் கொண்டு வரவேற்றனர். பதுமை - உதயணன் திருமணச் சிந்தனை அவர்களுக்கும் மகிழ்ச்சியையே அளித்தது. நல்ல செயல்கள் யாவரும் தம்மை விரும்புவதற்கு ஏற்ற நிறைந்த கவர்ச்சியையும் தம்பால் உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றன. உதயணனுக்குப் பதுமையை மணம் செய்து கொடுக்க வேண்டும் என்று தருசகனுக்குத் தோன்றிய எண்ணத்திலும் அத்தகையதொரு கவர்ச்சி இயல்பாகவே அமைந்திருந்தது போலும்! தருசகன் தன் அமைச்சர்களுள் சிறந்த ஒருவனை அருகே அழைத்து, இச் செய்திகளை அவனுக்கு விளக்கமாகக் கூறி, 'உதயணனிடமும் இதை அறிவித்து அவனுடைய மனக் கருத்தைத் தெரிந்து கொண்டு வருமாறு' அனுப்பினான். அமைச்சன் இதற்காக அரண்மனையில் உதயணன் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையை நோக்கிச் சென்றான்.

சரியாக இதே நேரத்தில் தெய்வ பூசை செய்த பிரசாதங்களுடனே பதுமையின் அரண்மனைக்குச் சென்று கொண்டிருந்த முதுமகள் ஒருத்தி, இந்தச் செய்தியைக் கேள்விப்பட நேர்ந்தது. பதுமையை உதயணனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டபோது, அந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியை விரைவிலேயே சென்று பதுமையிடம் கூற வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு ஏற்பட்டது. அவள் பதுமையின் அந்தப்புரத்தை நோக்கி விரைந்தாள். அந்த முதுமகள் தெய்வப் பிரசாதங்களுடன் பதுமை இருக்குமிடத்தை அடைந்த போது தோழிப் பெண்கள் எவரும் அங்கு இல்லை. பதுமை மட்டும் தனியே அமர்ந்திருந்தாள். பதுமையின் அந்தத் தனிமை நிலையைக் கண்ட முதுமகள், தான் கேள்வியுற்றதைக் கூறுவதற்கு இதுதான் ஏற்ற சமயம் என்று எண்ணிக் கொண்டாள்.

தெய்வப் பிரசாதங்களைப் பதுமைக்கு அளித்துவிட்டு, முதியவர்கள் வாழ்த்தும் முறைப்படி, 'பொலிக நங்கை!' என்று அவளை வாழ்த்தினாள். "பதுமை! இப்போது நான் உனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்றைக் கூறப் போகின்றேன். உன் தமையன் உனக்கு எல்லாவகையிலும் ஒத்த தகுதியுடைய மணவாளன் ஒருவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த மணவாளன் எத்தகையவன் தெரியுமோ? தன் நிகரற்ற போர்க்கலைஞன். வத்தவநாட்டின் வேந்தன், யானையின் மதத்தையும் அடக்க வல்ல வினை வித்தகன். அவன் தான் உதயணன். அவனுக்கு உன்னை மணம் புரிந்து கொடுப்பதற்காக உன் தமையன் இன்று முடிவு செய்திருக்கிறார்" என்று பதுமைக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் உணர்வை எதிர்பார்த்துக் கொண்டே முதுமகள் அவளை நோக்கிக் கூறினாள். இதைக் கேட்டவுடன் தீயை மிதித்து விட்டவள் போலத் திடுக்கிட்டாள் பதுமை. மாணகனைத் தன் உயிரினும் மேலாகக் கருதி அவனுக்குத் தன் உள்ளத்தில் இடமளித்துவிட்ட அவள் உதயணனையும் எப்படி எண்ண முடியும்? பதுமையின் உள்ளம் துணுக்குற்று நடுங்கியது.

தன்னுடைய மனநடுக்கத்தையும் அச்சத்தையும் புறத்தே காட்டிக்கொள்ள விரும்பாத பதுமை சிரிப்பும் மலர்ச்சியும் தவழும் முகபாவத்தோடு அந்த முதுமகளை நோக்கினாள். அவளது முகம் நகைத்தது. அகம் புகைந்தது. தான் கூறிய செய்தியைக் கேட்டவுடன் பதுமையின் பவழச் செவ்விதழ்களில் முத்துநகை மலர்ந்தது. அவள் முகம் மலர்ச்சி பெற்றதைக் கண்ட முதுமகள் உண்மையாகவே பதுமைக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். அவள் அவ்வாறுதானே எண்ண முடியும்? பதுமையின் உள் மனம் கேள்விப்பட்ட செய்தியால் கொதித்தது. காமன் கோட்டத்திலும் கன்னிமாடத்திலுமாகக் கலந்து பழகிக் காதல் உறவு கொண்ட மாணகனை எண்ணிக் கண்ணீர் வடித்தது. அவள் மனம் மாணகனை மறந்து, வேறு யாரையாவது மணக்க நேரிடுமானால் வாழவேண்டும் என்ற ஆசையே அவளுக்குத் தோன்றவில்லை. அவள் மனத்தின் உணர்ச்சிக் கதிர்கள் யாவும் ஒன்றுப்பட்டு, 'மணந்தால், மாணகனை மணக்க வேண்டும். சந்தர்ப்பம் அதற்கு மாறாக ஏற்படுமானால் உயிரையே மாய்த்துக் கொள்ள வேண்டும்' என்ற ஒருமை நிலையை அவளுக்கு உண்டாக்கிக் கொடுத்திருந்தன. அவள் இந்தச் சோதனையால் மனம் கலங்கினாள்.

48. உதயணன் சம்மதம்

கதிரவனை நோக்கி மலர்கின்ற பூக்களைப் போலப் பெண்ணின் உள்ளமும் காதல் என்ற மாபெரும் ஒளிப் பிழம்பை நோக்கி ஒரே ஒரு முறை தான் மலர முடியும். வாழ்விலும் அந்த முதற் காதலின் மலர்ச்சியைத் தொடர்ந்ததாகவே பின் வாழ்க்கை அமைய வேண்டும். நிறங்களைப் பிரித்தெடுக்க முடியாமல் ஏற்ற இடங்களில் ஏற்றவாறு கலந்து தீட்டிய ஒருவகை எழிலோவியம் போன்றதுதான் காதல். முதலில் வரைந்த அந்த ஓவியத்தை அழித்து, அதற்குப் பயன்பட்ட அதே வர்ணங்களை வைத்து வேறோர் ஓவியம் எழுத இயலாதல்லவா? இதே போல் காதல் வாழ்விலும் உள்ளத்து உணர்ச்சிகள் ஒரே ஒரு முறை குறிப்பிட்ட இரண்டு ஆண் பெண் மனங்களுக்குள்ளே தான் சங்கமம் ஆக முடியும். உடைக்க முடியாத, விலக்க இயலாத உணர்வுக் கலப்புத்தான் அந்த அற்புத சங்கமம். மாணகன் மனத்தில் தன்னை அடைக்கலம் செய்து கொண்ட பதுமையும் அப்போது இதே நிலையில் இதே உறுதியோடுதான் இருந்தாள். திகைப்போடு அதை வெல்ல வேண்டிய திடமும் அவளிடம் இருந்தது. ஆனால் மாணகனும் உதயணனும் ஒருவர் தான் என்பதை அவள் அதுவரை அறிந்து கொள்வதற்கு இயலவில்லை.

தருசக வேந்தனால் அனுப்பப் பெற்ற அமைச்சன், தக்க நேரமறிந்து உதயணனைச் சந்தித்து வணங்கினான். உதயணன் அமைச்சனுக்குப் பதில் வணக்கம் தெரிவித்துவிட்டு அவனைத் தன் எதிரிலிருந்த ஆசனத்தில் அமரச் செய்தான். அப்போது உதயணன் தோழராகிய வயந்தகன் முதலியோரும் அங்கே வந்து அமர்ந்து கொண்டனர். வந்த அமைச்சனுடைய முகக் குறிப்பிலிருந்து அவன் ஏதோ முக்கியமான ஒன்றைப் பற்றிப் பேசிச் செல்வதற்கு வந்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் உதயணன். கூற வந்த செய்தியைச் சொல்லத் தொடங்கலாம் என்ற கருத்துப் பொதிந்த பார்வை ஒன்றை அமைச்சனை நோக்கி உதயணன் செலுத்தினான்.

அமைச்சனுக்கும் அந்தப் பார்வை புரிந்திருக்க வேண்டும். அவன் தான் வந்த காரியத்தைப் பற்றிப் பவ்வியமான முறையில் உதயணனிடம் பேச்சை ஆரம்பித்தான். "வத்தவர் பேரரசே! எம்மரசன் தருசகன் என்பாற் கூறி அனுப்பிய செய்தி இது! உலகைச் சூழ்ந்து வேலியிட்டுள்ள கடல் தன் வரம்பு கடந்து பொங்கி நிலை தளருமேயானால் உலகத்தோடு மட்டுமின்றி அதிலடங்கிய வானளாவிய மலைகளையும் தன்னுள் ஆழ்த்தி அடக்கிக் கொண்டு விடும். உலகத்தைக் காத்து அரசாளும் மன்னனும் தன் சொந்த வாழ்க்கையில் இன்ப துன்பப் பேருணர்வுகளில் சிக்கி உழலும் நிலை நேரிடுமாயின், அவனால் காக்கப்படும் உலகமும் கலக்கம் அடைய வேண்டியதாகும். வாசவதத்தையை இழந்து துன்பமுறும் தங்கள் மனமும் எவ்வளவு நாள் அந்தத் துன்பத்தோடு அரசாட்சிப் பொறுப்பையும் தாங்கிக் கொள்ள இயலும்? நீங்களே சிந்தித்துப் பாருங்கள். மேலும் எங்கள் நாட்டிற்கு வரும்போது நீங்கள் தனிமையாக வந்தீர்கள். கைம்மாறு செலுத்தி அமைத்துக் கொள்ள முடியாத அவ்வளவு பெரிய உதவியை எங்கள் நாட்டிற்கும் எங்கள் மன்னனுக்கும் செய்து காப்பாற்றினீர்கள். தத்தையை இழந்து தனிமையான வாழ்வில் சோகமுற்றிருக்கும் தங்களை அந்தச் சோகத்திலிருந்து எங்கள் மன்னர் மீட்க விரும்புகின்றார். உங்களுடைய நட்பை எங்களோடு என்றென்றும் நிலைத்திருக்கச் செய்து கொள்வதுடன் உங்களைத் தம்முடைய நெருக்கமான உறவினராகவும் எம் அரசர் ஆக்கிக் கொள்ள விரும்புகிறார். இது எங்கள் வேந்தர் பிரானின் மனப்பூர்வமான விருப்பம். இதைக் கூறித் தங்கள் கருத்தை அறிந்து கொண்டு வருவதற்காகவே என்னை அனுப்பினார்." அமைச்சன் தான் வந்த கருத்தை இவ்வாறு உதயணனிடம் உரைத்தான்.

அமைச்சன் தான் கூறவேண்டியவற்றை முடிந்தவரை தெளிவாகத்தான் கூறியிருந்தான். உதயணனும் தன் கலக்கங்களுக்கு இடையேயும் அதனைத் தெளிவாகப் புரிந்து கொண்டான். 'பதுமையைத் தனக்கு மணஞ்செய்து கொடுக்கத் தருசக வேந்தன் ஆவல் கொண்டிருக்கிறான்' என்பதை உதயணன் அதன் மூலம் விளங்கிக் கொண்டான். எதிர்பார்த்ததுதான். உதயணனுடைய மறுமொழிக்காக அமைச்சன் காத்துக் கொண்டிருந்தான். உதயணன் சற்று நேரம் அவனுக்கு மறுமொழிக் கூறாமல் அமைதியாக இருந்தான். 'அமைச்சன் கூறிய தருசகனின் விருப்பம் எதனால் ஏற்பட்ட விளைவு' என்பதைச் சிந்தித்த பின்பே, அவன் இது பற்றி முடிவு செய்ய வேண்டியிருந்தது.

சாதகமோ, பாதகமோ எதையும் சிந்தனைக்குப் பின்னரே அங்கீகரிக்கும் இயல்புடையவன் உதயணன். இராஜ தந்திரங்களில் அது முதன்மையானதும் ஆகும். "பொது வாழ்வின் சிந்தனை வேறு. பொதுவாழ்வில் நல்லவற்றின் நன்மையும், தீயவற்றின் தீமையும் ஆகிய இவ்வளவே சிந்தனைக்குப் போதுமானவவ. அரசியல் வாழ்வில் எங்கும் எதனுள்ளும் சூழ்ந்து ஆழ்ந்து சிந்திக்கும் நுட்பமான உளப்பண்பு வேண்டும். நல்லவற்றுள்ளே தீமையுண்டா, தீயவற்றுள்ளே நன்மை உண்டா என முரண்படச் சிந்திக்கும் இயல்பும் கூட அங்கே அவசியம் வேண்டும். எனவே, பதுமையைத் தான் மணந்து கொள்ள வேண்டும் என்ற தருசகனின் அந்த வேண்டுகோளைப் பற்றி உதயணன் தீர்மானமான ஓர் எண்ணங்கொள்ள இயலவில்லை. 'காமன் கோட்டத்தினுள் பதுமையைத் தான் சந்தித்ததும் அங்கு மணவறை மாடத்தில் அவளோடு பழகியதும் எப்படியாவது தருசகனுக்குத் தெரிந்து விட்டதோ?' என்றும், 'மணந்து கொள்ள வேண்டும், என்று எண்ணி வந்த கேகயராசனோ இறந்து போனான். இனிப் பதுமையை உதயணனுக்குத் தான் மணம் செய்து வைப்போமே என்று அலட்சியமாகக் கருதித் தருசகன் இப்படிச் செய்தானோ?' என்றும் பலப்பல விதங்களாகத் தனது சிந்தனையை ஓடவிட்டுக் கொண்டிருந்தான் உதயணன். இத்தனை சிந்தனைகளுக்கும் இடையில் அவனுக்கு ஒரு விதமான மகிழ்ச்சியும் இருந்தது. அது பதுமை தனக்குக் கிடைக்கப் போகிறாள் என்ற மகிழ்ச்சிதான்!

தனிமையிலே கண்டு பழகிக் காதல் கொண்டு தான் விரும்பிய பதுமையே தன்னை வந்து சேரப் போகிறாள் என்று எண்ணும் போது அது முன் செய்த பெருந்தவத்தின் விளைவோ என்று தோன்றியது உதயணனுக்கு. உள்ளூற அளவற்ற களிப்பு. ஆனால், அந்த மகிழ்ச்சியைப் புறத்தே தெரியாமல் மறைத்துக் கொண்டான் அவன். தருசகன் கூறி அனுப்பிய செய்தியிலே தனக்கு விருப்பம் இருந்தும், இல்லாதது போலத் தன் எதிரில் இருக்கும் அமைச்சனிடம் நடிக்கலானான் உதயணன். சம்மதத்திற்குரிய செய்தியே ஆனாலும், எடுத்த எடுப்பில் அமைச்சனிடம் தன் இசைவைக் கூறிவிட உதயணனுக்கு விருப்பமில்லை. வருத்தந்தோய்ந்த குரலில் அமைச்சனை நோக்கிப் பேசினான் அவன். "விருப்பத்தோடு காதலித்து மணந்து கொண்ட பிரச்சோதன மன்னனின் மகள் தத்தையை நெருப்புச் சூழ மாய்ந்து போகும்படி பறிகொடுத்தேன்! ஆருயிர் நண்பன் யூகியையும் இழந்தேன்! இப்படியெல்லாம் தாங்க முடியாத துன்பங்களை நான் அடைந்த பின்னும், உயிரைத் தாங்கிக் கொண்டு வாழ்கின்றேன். இப்படி நடைப்பிணமாக நான் வாழ்வதில் பொருளே இல்லை. என்னுடைய நெஞ்சுரம் தான் என்னை இன்னும் துணிந்து வாழச் செய்து கொண்டிருக்கிறது. தத்தைக்குப் பின்னால் வேறொருவரிடம் என் அன்பைச் செலுத்த முடியாதவனாக இருக்கின்றேன் நான்! உங்கள் அரசரின் வேண்டுகோள் படி பதுமையை மணஞ்செய்து கொள்ள நான் துணிவேனானால் உலகம் என்னை இகழ்ந்து பழிக்காமல் விடாது. 'தத்தையும், யூகியும் இறந்த பின்பு அவர்களுக்காகச் சிறிதளவும் சிறிது காலமும் மனம் நோகாமல் நான் மட்டும் இன்ப வாழ்வு வாழ விரும்புகிறேன்' என்று உலகம் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு பேசும். எனவே, உங்கள் மன்னர் கூறும் கருத்திற்கு இசைய முடியாத நிலையில் நான் இருக்கிறேன்" என்று இவ்வாறு போலித் துயரத்தை உட்கொண்டு நடிப்புக் குரலில் உதயணன் அமைச்சனுக்கு மறுமொழி தந்தான்.

தன்னைத் தேடித் தருசகனிடமிருந்து வந்திருக்கும் அமைச்சனின் மனக்கருத்தை ஆழம் பார்ப்பதற்காக உதயணன் நடித்த இந்த நடிப்பை அமைச்சன் உண்மை என்றே நம்பினான். எவ்வகையிலாயினும் உதயணனைச் சம்மதிக்கச் செய்துவிட வேண்டும் என்ற அழுத்தமான எண்ணத்துடன் உதயணனுக்கு ஆறுதல் கூறி இசைவு பெறும் முயற்சியில் அவன் இறங்கினான். பின்பு சிறிது நேரம் கழித்து, அவனது அந்த முயற்சிக்காகக் கட்டுப்பட்டு மறுக்க முடியாத நிலையில் வேண்டா வெறுப்பாகச் சம்மதிப்பவன் போல மனம் நெகிழ்ந்து இசைவு தெரிவித்தான் உதயணன். "அரசே! தாங்கள் எல்லா விதத்திலும் ஒப்புயர்வற்ற மறக்குடியிலே தோன்றிய பேரரசர். இவ்வாறு நெஞ்சம் கலங்குதல் தங்கள் போன்றோர்க்கு அழகன்று. நீங்கள் எம் அரசனின் இந்த வேண்டுகோளை எவ்வாறேனும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்" என்று மீண்டும் வேண்டினான் அமைச்சன். "பேரரசனாகிய தருசகராசனும், உங்களைப் போன்ற அறிவுத் துறையில் தலைசிறந்த அமைச்சரும், இப்படி என்னிடம் வேண்டும் போது, இனியும் நான் மறுப்பது நன்றாக இருக்காது. உங்கள் கருத்திற்கு இசைவு தராவிடில், வீணாக உங்களுக்கு மனக் கலக்கத்தைக் கொடுப்பதற்கு நான் காரணம் ஆவேன். அவ்வாறு உங்களைக் கலக்கப்படுத்தும் எண்ணம் எனக்குச் சிறிதளவும் இல்லை. ஆகையால் நான் இசைந்து தான் ஆகவேண்டும் போல் இருக்கிறது" என்று மனக்கருத்து இல்லாமல் ஏனோதானோ என்று சம்மதிப்பவனைப் போலத் தன் சம்மதத்தைக் கூறி நிறுத்தினான் உதயணன்.

49. இசைச்சன் திருமணம்

பதுமையை மணந்து கொள்ள, உதயணன் இணங்கினான் என்பதை அறிந்த பின்பு தருசகனின் அமைச்சன் மேலும் பலவாறு அவனிடம் தொடர்ந்து கூறி, அவன் இசைவை ஒருவாறு உறுதியாய்ப் பெற்றுக் கொண்டு சென்றான். தருசகனை நோக்கிப் புறப்பட்ட அவன், முடிப்பதற்கு அருமையான செயலை இன்று நம்மால் நிறைவேற்ற முடிந்ததே' என்ற மனநிறைவோடு சென்றான். அமைச்சன் வெளியேறியதும் உதயணன், தன் நடிப்பை எண்ணிக் கொண்டு நண்பர்களை நோக்கித் தானாகவே சிரித்தான். நண்பர்களும் அதுவரை அடக்கிக் கொண்டிருந்த சிரிப்பை வெளிப்படுத்தினர். மகத மன்னனோடு உதயணனுக்கு நெருங்கிய உறவை ஏற்படுத்தி, அவனது அரசியல் வன்மையைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தானே அவர்கள் இராசகிரிய நகரத்திற்கே வந்திருந்தார்கள்! அந்த நோக்கம் இவ்வளவு சுலபமாக நிறைவேறினால் அவர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படாதா என்ன? உதயணன் மகிழ்ச்சியாவது 'பதுமை உலகறியத் தன்னுடைய காதற்கிழத்தி ஆகிறாள்' என்ற காரணத்தால் ஏற்பட்ட காதல் மகிழ்ச்சி. நண்பர்களின் மகிழ்ச்சியோ 'நமது கடமையையும் இதனால் நிறைவேற்றி விட்டோம்' என்ற பூரணமான மகிழ்ச்சியாக இருந்தது.

உதயணன் இசைவைப் பெற்று அரண்மனைக்குத் திரும்பிச் சென்ற அமைச்சன், மகதவேந்தன் தருசகனிடம் நிகழ்ந்தவற்றை விரிவாகக் கூறினான். முதலில் பதுமையை உதயணன் மணக்க மறுத்ததையும் பின்பு சம்மதித்ததையும் தருசகன் அறிந்தான். 'உதயணன் பதுமாபதியைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்துவிட்டான்' என்று எண்ணும்போதே அவனுள்ளம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தது! உதயணன் சற்றும் எதிர்பாராத நிலையில் மகதநாட்டிற்கு வந்தது, தனக்கு உதவி செய்தது, பதுமையை மணந்து கொள்வதற்கு இசைந்தது ஆகிய எல்லா நிகழ்ச்சிகளுமே விதி தனக்கென்று செய்யும் சாதகங்களாக அவனுக்குத் தோன்றின. அமைச்சன் மூலமாக உதயணனின் சம்மதம் தெரிந்து, தருசகன் இவ்வாறு மகிழ்ந்து கொண்டிருந்த நிலையில் அங்கே உதயணன் புதிய கவலை ஒன்றினாற் சூழப்பட்டிருந்தான். மறுப்பதைப் போல நடித்து இறுதியில் அமைச்சனிடம் இசைவு தெரிவித்து அனுப்பியபின் சிறிது நேரங்கழித்து இந்தப் புதிய கவலை அவனைப் பற்றியது. என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் உதயணன் மூழ்கினான்.

'காமன் கோட்டத்தில் நாம் பதுமையைச் சந்தித்ததும், பழகியதும், காதல் கொண்டதும் மாணகன் என்ற அந்தண இளைஞன் தோற்றத்துடனே ஆகும்! இப்போது திடுமென்று 'நீ உதயணனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்று அவள் தன் தமையனிடமிருந்து கேள்விப்பட்டால், என்னை மாணகன் வடிவத்தில் பார்த்துப் பழகி மனம் பறிகொடுத்திருக்கும் பதுமையின் நெஞ்சம் என்ன பாடுபடும்? மாணகனும், உதயணனும் ஒருவரே என்பது பதுமைக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. நம் நண்பர்களைத் தவிர வேறு யாருக்குமே தெரியாத உண்மை ஆயிற்றே அது? அப்படி இருக்கும்போது பதுமை அதை எவ்வாறு அறிந்திருக்க இயலும்? உதயணனிடம் பதுமைக்கு மதிப்பு இருக்கலாம். ஆனால், அவள் உள்ளம் மாணகன் ஒருவனுக்கு மட்டும் தானே உரிமை உடையது? நானே மாணகனாக அவளிடம் நடித்தேன் என்ற உண்மையை அவள் தெரிந்து கொள்ளுமாறு செய்வது எப்படி? இந்த மறைவான உண்மையைப் பதுமை அறிந்து கொள்ளவில்லையானால் அவளுக்கும் காதலில் வெற்றியில்லை; எனக்கும் தோல்விதான்! இதை அவளுக்கு அறிவிப்பதற்கு வேறு வழியும் இருப்பதாகத் தெரியவில்லையே? என்ன செய்யலாம்?' என்று இவ்வாறு நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தான் உதயணன்.

'தானே மாணகனாக இருந்தவன் என்பதைப் பதுமைக்கு யாரால் எப்படி அறிவித்து அவளுடைய மனக் கலக்கத்தைப் போக்குவது?' என்று மிகுந்த நேரம் இதே சிந்தனையில் ஆழ்ந்து கிடந்ததன் பயனாக இறுதியில் உதயணனுக்கு ஒரு வழி புலப்பட்டது. அவன் தனக்குள் ஏதோ ஒரு முடிவிற்கு வந்தவனாக, வயந்தகனை அழைத்து வரச் செய்தான். சிறிது நேரத்தில் வயந்தகன் உதயணனிடம் வந்தான். வயந்தகனைத் தனக்கு மிக அருகில் வருமாறு உதயணன் குறிப்புச் செய்துவிட்டு, அவனிடம் கூறத் தொடங்கினான். "வயந்தகா! இப்போது முக்கியமான ஒரு காரிய நிமித்தம் உன்னை அழைத்திருக்கிறேன். எனக்காக நீ தருசகராசனிடம் சென்று இப்போது நான் கூறியனுப்புவதைச் சொல்லிவிட்டு வரவேண்டும்! இப்போது நான் அகப்பட்டுக் கொண்டிருக்கும் விநோதமான இன்னல் ஒன்றிலிருந்து தப்ப வேண்டுமானால், தருசகனிடம் உன்னை நான் எதற்காக அனுப்புகின்றேனோ அந்தக் காரியம் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி உன் கையில்தான் இருக்கிறது. காரியம் ஒன்றும் அவ்வளவு கடினமானது அன்று! மிகச் சாதாரணமான ஒன்றுதான். அதில் வெற்றி பெறுவதும் எளிதே! ஆனால், இப்போது நான் எண்ணிக் கூறுவது போலத் தருசகனும் இதைச் சாதாரணமாகவே நினைக்கும்படி செய்ய வேண்டும். இதில் அவன் சிறிதும் சந்தேகம் கொள்ளுவதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது. நம் வெற்றிக்கு வேண்டிய திறமை இதில்தான் இருக்கிறது. நான் இப்போது கூறுவதைக் கவனமாகக் கேட்டுக்கொள்!

'எங்கள் அரசர் உதயணனுக்கு இசைச்சன் என்னும் பெயரையுடைய அந்தணத் தோழன் ஒருவன் இருக்கிறான். அவன் இளமையிலேயே தன் தாய் தந்தையரை இழந்தவன். எங்கள் அரசரை வந்தடைந்த பின் அவர் தான் இசைச்சனுக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்து போற்றிப் பாதுகாத்து வருகிறார். இப்போது இவனுக்குத் திருமணம் செய்ய வேண்டிய பொறுப்பும் எங்கள் வேந்தருக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே தனக்கும் பதுமைக்கும், திருமணம் நடப்பதற்கு முன்பே இசைச்சனுக்கு ஏற்ற அந்தணர் குலக் கன்னிப்பெண் ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து அவனுடைய திருமணத்தை முடித்துவிடக் கருதுகிறார் எம் மன்னர். இதைத் தங்களிடம் கூறி இசைச்சனுக்கு ஏற்ற மணமகளைத் தேர்ந்தெடுத்து, அந்தத் திருமணத்தை நடத்திக் கொடுக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுமாறு முதலில் உங்களை வேண்டுகிறார்' என்று நீ சென்று தருசக மன்னனிடம் சொல்ல வேண்டும். இதுதான் எனக்காக நீ செய்ய வேண்டிய காரியம்" என்று உதயணன், வயந்தகனை நோக்கிக் கூறினான். உதயணன் கூறியபடியே செய்வதாக ஒப்புக் கொண்டு வயந்தகன், தருசக மன்னனைக் காண்பதற்குப் புறப்பட்டான்.

தருசகனைச் சந்தித்து, அவன் சிறிதளவும் சந்தேகங் கொள்ளாதபடி உதயணன் கூறியவற்றை அவனுக்கு ஆதியோடந்தமாக எடுத்துச் சொன்னான் வயந்தகன். இசைச்சனின் திருமணத்தைத் தானே முன் நின்று நடத்தி வைப்பதாக மனக்களிப்போடு ஒப்புக் கொண்டான் தருசகன். "பதுமையின் ஆருயிர்த் தோழியர்களுள் யாப்பியாயினி என்று ஓர் அந்தணக் கன்னி இருக்கிறாள். அவள் ஒழுக்கத்திலும் அழகிலும், குலத்திலும் நீங்கள் கூறும் இசைச்சனுக்கு மிகவும் ஏற்றவளாக இருப்பாள் என்று நான் எண்ணுகிறேன். விரைவில் ஒரு மங்கல நாள் பார்த்து அவளுக்கும் இசைச்சனுக்கும் திருமணத்தை நடத்தியபின் பதுமையின் திருமணத்தைப் பற்றிச் சிந்திப்போம்! இதை நீ சென்று உதயணனிடம் கூறுக" என்று வயந்தகனுக்கு மறுமொழி கூறி அனுப்பினான் தருசகவேந்தன். வயந்தகன் விடை பெற்றுக் கொண்டு சென்றான். அங்கே இருந்து வெளியேறியதும் வயந்தகன் நேரே உதயணன் இருக்கும் இடத்திற்குச் சென்று, யாவற்றையும் அவனிடம் விவரமாகக் கூறினான்.

வயந்தகன் வந்து கூறும் போது மற்ற நண்பர்களும் உதயணனோடு இருந்தனர். உதயணனது இந்த ஏற்பாட்டையும் இதற்குத் தருசகன் சம்மதித்ததையும் அவர்கள் முழு மனத்தோடு வரவேற்றார்கள். அதனோடு அமையாமல் நண்பர்களே ஒன்று கூடி இசைச்சனுடைய திருமணத்திற்கு ஒரு நல்ல மங்கல நாளையும் குறிப்பிட்டு வைத்துக் கொண்டனர். வயந்தகனுக்கு விடை கொடுத்து அனுப்பியதும் தருசக மன்னன், தன் தாய் சிவமதியைச் சந்திக்க அவள் மாளிகைக்குச் சென்றான். பதுமைக்கும் அவனுக்கும் தாயாகிய அம் மூதாட்டி முதிர்ந்த தளர்ந்த நிலையில் இருந்து வந்தாள். அந்த மாளிகையிலிருந்து வெளியேறவோ, நடமாடவோ முடியாத அவ்வளவு வயது அவளுக்கு. பதுமைக்கும் உதயணனுக்கும் திருமண ஏற்பாடு செய்திருப்பதையும் மற்ற செய்திகளையும் கூறிப் பெற்றவளின் ஆசியை எதிர்பார்த்து அங்கே சென்றான் தருசகன். யாப்பியாயினி, இசைச்சன் திருமணத்தை முதலில் நடத்த வேண்டிய அவசியத்தைப் பற்றியும், அதற்குப் பின் உதயணன், பதுமை திருமணம் நடக்கும் என்பதையும் தாயிடம் தருசகன் எடுத்துக் கூறினான்.

இரண்டு திருமணச் செய்திகளையும் கேட்டு அளப்பரிய உவகை கொண்டாள் பெற்றவள். "பதுமைக்கு உதயணன் முற்றிலும் தகுதி வாய்ந்தவன் தான். அது அவளுக்கு ஒரு நல்ல பாக்கியம் என்றே எனக்குத் தோன்றுகிறது" என்றாள் தாய். தருசகனும் தாயாரும் இவ்வாறு உரையாடிக் கொண்டிருக்கும் போது தற்செயலாகப் பதுமாபதியும் அங்கே வந்து சேர்ந்தாள். பதுமையின் தாய், யாப்பியாயினியின் திருமணத்திற்காக என்று தன்னிடமிருந்து சில அணிகலன்களை எடுத்துக் கொடுத்தாள். தருசகன் அவற்றைப் பெற்றுக் கொண்டான். அப்போதும் அதன் பின்பும் அவர்கள் இருவரும் பேசிக் கொண்ட பேச்சிலிருந்து அருகில் அமர்ந்திருந்த பதுமைக்கு, இசைசனுக்கும் யாப்பியாயினிக்கும் திருமணம் நிகழப் போகிறது என்ற செய்தி தெரிந்தது.

பதுமைக்குத் துயரம் தாங்க முடியவில்லை. 'காதலித்த மாணகனைக் காணாமல் தான் தவிக்கும் போது, உதயணனை மணப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். மாணகனும் நானும் உள்ளம் ஒத்த காதலர்கள் என்ற உண்மை என் தோழியருள் யாப்பியாயினி ஒருத்திக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. அவளைக் கொண்டே மாணகனைத் தேடிக் காணலாம் என்ற நினைவினால் இதுவரை ஆறுதல் பெற்று வந்தேன். இனிமேல் அதுவும் முடியாது போல் இருக்கிறதே? யாப்பியாயினியைத் திருமணம் செய்து கொடுத்து என்னிடத்திலிருந்து பிரிப்பதற்கு அல்லவா இவர்கள் ஏற்பாடு செய்துவிட்டார்கள். இனி நான் சிறகு ஒடிந்த பறவை போல் அன்றோ ஆகிவிடுவேன்?' என்ற எண்ண அலைகளிலிருந்து மீள இயலாத சஞ்சலத்தோடு, தமையனிடமும் தாயிடமும் விடைபெற்றுக் கொண்டு யாப்பியாயினியைச் சந்திக்கச் சென்றாள் பதுமை. தனக்குத் திருமணம் என்ற பேச்சு இதற்குள் எவ்வாறோ அவளுக்கும் தெரிந்திருந்தது. பதுமை யாப்பியாயினியைக் கண்டு முதலில் களிப்புக்குரிய பேச்சுக்களைப் பேசிவிட்டுத் தன் அன்பளிப்பாக அவளுக்குச் சில பரிசில்களைக் கொடுத்தாள். பின் "திருமணமானால் என்னைப் பற்றி உனக்கு எங்கே நினைவு இருக்கப் போகிறது? மறந்தே போய் விடுவாய் இல்லையா?" என்று நகைத்துக் கொண்டே பேசினாள் பதுமை. அவள் தலை குனிந்தபடி இதழ்களில் புன்னகை நிலவிட நின்றாள்.

இருவரும் விளையாட்டும் சிரிப்புமாக வெகுநேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். கடைசியில் பதுமை தன் துயரத்தை மனம் திறந்து யாப்பியாயினியிடம் விளக்கிக் கூறித் தனக்கு உதவி செய்யுமாறு வேண்டினாள். தன்னால் இயன்றதை எப்போதும் எந்த நிலையிலும் செய்வதாக அவள் பதுமைக்கு உறுதி கொடுத்தாள். இந்நிலையில் ஓரிரு நாட்கள் கழிந்தன. இசைச்சன் யாப்பியாயினி திருமணத்திற்குரிய ஏற்பாடுகள் விரைவாக நடந்து கொண்டிருந்தன. அவர்கள் திருமணச் செய்தியை நகரறிய முரசறைந்து எங்கும் பரவச் செய்திருந்தான் தருசகன். திருமணத்திற்குக் குறித்த நாளும் நெருங்கி வந்து கொண்டிருந்தது. உதயணன் தான் மாணகன், மாணகன் தான் உதயணன் என்ற இரகசிய உண்மையைப் பதுமைக்கு மட்டுமாவது அறிவித்து விடுவதற்கு இந்தத் திருமணத்தை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதி ஏற்பாடு செய்து கொண்டிருந்தான் உதயணன். 'இசைச்சனுக்கு முதலில் திருமணம் செய்யவேண்டும்' என்று அவன் கூறியனுப்பிய போதே அந்தத் திருமணத்தையே வாய்ப்பாகக் கொண்டு இந்த உண்மையைப் புரிய வைத்து விட வேண்டும் என்பதுதான் அவனது முக்கிய நோக்கமாக இருந்தது.

திருமண நாள் வந்ததும் உதயணன், மணமேடையில் மணமகனாகிய இசைச்சனுக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டிருந்தான். இசைச்சனும் யாப்பியாயினியும் பந்தலின் கீழே திருமணக் கோலத்தோடு விளங்கினர். திருமணச் சடங்குகள் முறைப்படி நிகழ்ந்து கொண்டிருந்தன. 'மாணகனாக மாறுவேடங் கொண்டிருந்தவன் தான் உதயணன்' என்று யாப்பியாயினி மட்டுமே அறிந்து கொண்டாலும் போதும். பின்பு அவள் மூலமாக எப்படியும் பதுமைக்கும் அந்த உண்மை தெரிந்துவிடும். யாப்பியாயினி நுண்ணறிவு உடையவள். உதயணனுடைய குரலைக் கேட்கும் சந்தர்ப்பம் நேர்ந்தாலும் போதும், 'இது மாணகனுடைய குரலைப் போல் இருக்கின்றதே' என்று அவள் சிந்திக்கும்படி நேரிடும்! அவளுடைய அந்தச் சிந்தனையின் பயனாக மெய் வெளிப்பட்டுப் பதுமையளவிற்காவது பரவித் தெரியலாம். தெரிவதற்கு ஏது இருக்கிறது என்று நீண்ட நேரம் சிந்தித்தப் பின்னர் 'எவ்வாறேனும் தன்னுடைய குரலை யாப்பியாயினி கேட்குமாறு செய்தாக வேண்டும்' என்ற முடிவிற்கு வந்தான் உதயணன்.

தன் முடிவைச் செயலாக்குவதற்கு ஏற்றவாறு மணமக்களுக்குச் சமீபத்தில் அவன் இருந்தான். மண நிகழ்ச்சிகளுக்கு இடையே இசைச்சனை அழைத்து, "எழில் மிகுந்த கோசாம்பி நகரத்தையும், அந் நகரத்திற்கு அழகு செய்யும் யமுனை நதியையும் அதன் இரு கரையிலும் வளமிகுந்து விளங்கும் பசுஞ் சோலைகளையும் உனக்கு மனைவியாகும் பெரும் பேற்றினால் யாப்பியாயினி காணப் போகிறாள். அவளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு இல்லை என்றால் நாம் தான் மகதத்திற்கு வருவானேன்? இப்படி இவை எல்லாம் நிகழ வேண்டும் என்று விதியே வகுத்துக் கொண்டு நம்மை இங்கே வரவழைத்துக் கொண்டதோ என்னவோ?" என்று தன் குரல் யாப்பியாயினிக்குக் கேட்கும்படி இரைந்து கூறினான் உதயணன்.

50. பதுமையின் பாக்கியம்

உதயணன் இசைச்சனை அழைத்துப் பேசிய அந்தக் குரலைக் கேட்டதும் அவன் எதிர்பார்த்தது போலவே யாப்பியாயினி உடனே ஆவலோடு அவன் பக்கமாகத் திரும்பிப் பார்த்தாள். உதயணன் மீது விநாடி நேரம் அவளது பார்வை நிலைத்தது.

'இந்தக் குரல் இதற்கு முன்பே எங்கோ கேட்டுப் பழகிய குரலைப் போல் அல்லவா இருக்கிறது? ஆம்! இப்போது நினைவு வருகிறது! சந்தேகம் இல்லாமல் இது மாணகனுடைய குரலேதான்' என்று யாப்பியாயினி இவ்வாறு எண்ணமிடலானாள். தான் ஏற்கனவே கண்டிருந்த மாணகனுடைய முகச்சாயலோடு இப்போது கண்ணெதிரே காணும் உதயணனை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டாள் அவள். உண்மை அவளுக்கும் புரிந்தது. 'உதயணனும் மாணகனும் ஒருவரே' என்பதை அவள் அறிந்து கொண்டாள். நெஞ்சங்கள் உறவு கொண்டு காதலிக்கும் போது அந்த உறவு இயற்கையாகவே எவ்வகையிலும் ஒத்த இரண்டிடங்களிலேயே ஏற்படுகிறது. 'பதுமையை மாணகனாக மாறி இருந்து காதலித்தவன் உதயணனே' என்று அறிந்து கொண்ட பின் இந்த ஒற்றுமை இயல்பை எண்ணிப் பார்த்தாள் யாப்பியாயினி. வியப்புக்குரிய இந்த உண்மையை விரைவாகப் பதுமைக்குக் கூறி அவளை மகிழ்விக்க வேண்டும் என்றும் ஆர்வமுற்றாள் அவள். 'பதுமை! நீ காதலித்த அந்தண இளைஞன் மாணகன், உண்மையில் யார் என்று தெரியுமோ உனக்கு? அவன் தான் உதயணன். நீ கொடுத்து வைத்தவள்! எல்லா வகையிலும் சிறந்த பேரரசனாகிய உதயணனையே உன் காதலனாகக் கொண்டு வந்து சேர்த்த விதியை அதற்காக வாழ்த்த வேண்டும்' என்று அப்போதே பதுமையைத் தனியே அழைத்துச் சென்று கூற வேண்டும் என்ற ஆசைத் துடிப்பை எய்தினாள் யாப்பியாயினி. அவள் அறிந்து கொண்ட உண்மை அத்தகையதாகவே இருந்தது.

ஆனால், 'உதயணனே மாணகன், என்ற செய்தியைப் பதுமைக்குச் சொல்ல வேண்டும்' என்று யாப்பியாயினி கொண்ட ஆர்வத்தை, ஏழு நாட்கள் அடக்கிக் கொள்ள வேண்டியதாகப் போயிற்று. திருமண நிகழ்ச்சிக்கு உரிய ஏழு நாட்களிலும் யாப்பியாயினி, பதுமையைச் சந்திக்கவே முடியவில்லை. எட்டாவது நாள் காலையில் பதுமையே யாப்பியாயினியைக் காணும் விருப்பத்தோடு அவளை அழைத்துக் கொண்டு வருமாறு சிவிகையையும் ஆட்களையும் அனுப்பிவிட்டாள். யாப்பியாயினியை அதுவரை முழுமையாக ஒரு நாள் கூடப் பிரிந்து தனிமையுறாத பதுமைக்கு அந்த ஏழு நாள் பிரிவு, ஏழாண்டுப் பிரிவு போல இருந்தது. யாப்பியாயினி புதுமணக் கோலத்தின் அழகுப் பொலிவோடு, ஆர்வமும் முந்திடச் சிவிகை ஏறிப் பதுமையைக் காண்பதற்கு வந்தாள். சந்தித்த உடனேயே, தான் அறிந்து கொண்டிருந்த உண்மையைப் பதுமைக்கு மகிழ்ச்சியோடு கூறினாள் அவள். பதுமையும் அவளும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர். "பதுமை! காமன் கோட்டத்தில் மாணகன் என்னும் அந்தண இளைஞனாக மாறுவேடங் கொண்டு உன் உள்ளத்தைக் கவர்ந்த காதலன் வேறு யாருமில்லை! உதயணனே தான். இனி நீ கவலையுறுவதைத் தவிர்க" என்றாள் யாப்பியாயினி.

அவள் கூறியதைக் கேட்டதும் பதுமையின் கண்கள் வியப்பால் மலர்ந்தன. அந்த மலர்ச்சி நிலைத்த நேரம் ஒரு நொடிதான். உதடுகளில் நாணப் புன்னகை ஒன்று தோன்றி நிலவியது. கன்னங்களில் செம்மை படர்ந்து பரவியது. பதுமை நாணமுற்று நின்றாள். 'அவருக்கு ஆட்பட்ட நெஞ்சம் இனி நான் மீட்க முடியாத அளவில் உறவு கொண்டு விட்டது' என எண்ணினாள். 'தங்கைக்கு மணம் புரிகிறேன் என்ற கடமையைக் காட்டித் தமையன், என்னை உதயணனுக்கு உரிமையாக்க ஏற்பாடு செய்கின்றானே' என்று முன்பு கலங்கியிருந்த பதுமையின் உள்ளம் இப்போது, 'அவரே தான் இவர்! இவரே தான் அவர்! அவரும் இவரும் ஒருவரே' என்பதை அறிந்து நிறைவு கொண்டது. ஆனாலும் தனது மனக்களிப்பை யாப்பியாயினி அறிந்து கொள்ளும்படியாக வெளிப்படுத்த விரும்பவில்லை அவள். தான் கேள்வியுற்ற அந்த உண்மையை மேலும் உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே திருப்தி அடையலாம் என்று அவள் தயங்கினாள்.

"தோழி! உன் கணவனாகிய இசைச்சன் கூட அவருக்குத் தோழன் தான் என்று கேள்வியுற்றேன். நீ கூறும் இந்த நல்ல செய்தியை என் மனம் எவ்வளவு மகிழ்ச்சியோடு வரவேற்கிறது தெரியுமா? ஆனால், இதை எந்தச் சான்றுகொண்டு நான் உறுதியாய் நம்ப முடியும்? என் மனம் உறுதியாக இதை ஏற்றுக் கொள்வதற்கும் நீயே ஏதாவது உதவி செய்ய வேண்டும்" என்று பதுமை தணிந்த குரலில் யாப்பியாயினியிடம் வேண்டினாள்.

"இதை உறுதிப்படுத்திக் கொள்ள இன்னும் என்னென்ன சான்றுகள் வேண்டுமோ அவற்றை அறிய என்னால் ஆன மட்டும் முயலுவேன். பதுமை! நீ என்னைத் துணிந்து நம்பலாம்?" என்று கூறி விடைப்பெற்றுக் கொண்டு புறப்பட்டாள் யாப்பியாயினி. நேரே உதயணனைக் காணக் கருதி அவனிருப்பிடத்தை அடைந்தாள். இசைச்சனோடு தான் பேசிய குரலை யாப்பியாயினி கேட்டுத் திரும்பியதையும், அப்போது அவளது வியப்போடு கூடிய பார்வை தன் மேல் நிலைத்ததையும் கண்டிருந்த உதயணன், அவள் தன்னைப் புரிந்து கொண்டு விட்டாள் என அனுமானித்துக் கொண்டான். 'என் கருத்து வெற்றி பெற்றுவிட்டது! யாப்பியாயினி எப்படியும் தன் சந்தேகத்தைப் பதுமையிடம் கூறாமல் இருக்க மாட்டாள்' என்று எண்ணிக் கொண்டு மனம் அமைந்தான் அவன்.

உதயணன் தன்னளவில் அநுமானித்துக் கொண்ட வெற்றியை நிச்சயப்படுத்துவது போல யாப்பியாயினி தனிமையில் அவன் முன் தோன்றினாள். நடந்ததை எல்லாம் அவள் மூலம் அறிந்து கொண்டான் உதயணன். அவள் கூறியதிலிருந்து பதுமையின் சந்தேகத்தைப் போக்கித் தானே மாணகனாக இருந்ததை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்பதையும் அவன் உணர்ந்தான். காமன் கோட்டத்தில் தனக்கும் அவளுக்கும் ஏற்பட்ட காதலில் தொடங்கி ஒன்று விடாமல் எல்லா நிகழ்ச்சிகளையும், அவளையும் சித்திரமாக வரைந்து, அதை யாப்பியாயினியிடம் அளித்தான். தானும் பதுமையும் மாத்திரமே அறிந்த பல மறைவுக் குறிப்புக்கள் அந்தச் சித்திரத்தில் இடம் பெறுமாறு செய்திருந்தான் அவன். அவற்றைக் கண்ட பின்பாவது தான் வேறு மாணகன் வேறு அல்ல, இருவரும் ஒருவரே என்பதைப் பதுமை புரிந்து கொள்ள முடியும் என்பதாக, அவன் நம்பினான். கடைசியில் வேறோர் முக்கிய அடையாளத்தையும் யாப்பியாயினியிடம் கூறினான்.

கன்னிமாடத்தில் ஒரு நாள் இரவில் கோட்டான் பயங்கரமாக அலறியதையும் அதைக் கேட்டு அஞ்சிப் பதுமை தன்னைத் தழுவிக் கொண்டதையும், அதனால் ஊடல் தீர்ந்ததையும் - அவளால் எப்படியும் மறுக்க முடியாது என்றெண்ணி அந்த இரகசிய நிகழ்ச்சியையே யாப்பியாயினியிடம் இறுதியில் சொல்லி அனுப்பினான். தான் எழுதிக் கொடுத்திருக்கும் சித்திரக் குறிப்புக்களையும் உருவத்தையும் கூட அவள் நம்ப மறுக்கலாம். ஆனால் இறுதியாகக் கூறிவிட்டிருக்கும் இந்தச் சம்பவத்தை ஒப்புக் கொண்டு நம்பித்தான் ஆக வேண்டும் என்ற தீர்மானத்தோடு தனியாக யாப்பியாயினியிடம் அதையும் கூறியிருந்தான் உதயணன்.

உதயணன் அளித்த சான்றுகளோடு மீண்டும் யாப்பியாயினி பதுமையின் கன்னிமாடத்துக்குச் சென்றாள். உதயணன் கொடுத்து அனுப்பிய சித்திரங்களையெல்லாம் கண்டு, 'இவற்றை எழுதவல்லவர் மாணகனை அன்றி வேறெவரும் இல்லை' என்று பதுமை தனக்குள் எண்ணிக் கொண்டாள். அவன் எழுதிக் கொடுத்திருந்த தனது வடிவத்தைக் கண்ட போது, 'தன்னோடு நெருங்கிப் பழகிய ஒருவரைத் தவிர வேறு யாரும் அதை அப்படி எழுதியிருக்க இயலாது. அந்த ஒருவர் மாணகனே! எனவே, மாணகனும் உதயணனும் ஒருவராக இருக்கலாம்' என்று இவ்வாறு நினைவுகள் அவள் உள்ளத்தில் தோன்றினாலும், அதே நெஞ்சத்தின் ஒரு கோடியில் இனம் புரியாத கலக்கமும் ஐயமும் இருந்து கொண்டே அவளை வருத்தின. அந்த வருத்தம் தூண்டிடப் பதுமை மீண்டும் தயக்கத்துடனேயே யாப்பியாயினிக்கு மறுமொழி கூறினாள்.

இந்த மறுமொழியிலும் பதுமையின் பூரண நம்பிக்கைக்கு உரிய எந்த அம்சமும் பிரதிபலிக்கக் காணோம். "தோழீ! இவைகளை எல்லாம் மாணகன் ஒருவன் தான் எழுத முடியும்! அதைப் பொறுத்தவரையில் எனக்கும் அவநம்பிக்கையோ மனவேறுபாடோ சிறிதளவும் கிடையாது. இதோ இந்த உருவங்களையும் குறை சொல்வதற்கு இல்லை. என்னோடு நெருங்கிப் பழகிய காதலர் எழுதியவைதாம் என்பதை மறுக்க முடியாதபடி இவை அமைந்துள்ளன. ஆயினும் இவற்றை நன்றாக ஆராய்ந்து பின்பல்லாது, இவற்றை நம்பிவிடல் ஆகாது. ஆராயாமல் ஒப்புக் கொள்ள மறுக்கிறது என் மனம்" என்று பதுமை கூறினாள். பதுமையின் இந்த மறுமொழியைக் கேட்ட யாப்பியாயினி அதிர்ச்சியுற்றாள்.

இவளுக்கு நம்பிக்கை யூட்டுவது அவ்வளவு எளிய காரியமில்லை என்று யாப்பியாயினி நினைத்துக் கொண்டாள். இறுதியாக உதயணன் கூறியனுப்பிய அந்த இரகசியச் செய்தியைக் கேட்ட பின்பாவது பதுமையின் நெஞ்சம் நெகிழ்கின்றதா பார்ப்போம் என்று கருதி அவளை நெருங்கிக் காதருகே அந்தச் செய்தியை மெல்லக் கூறினாள். பதுமையின் அவநம்பிக்கை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. யாப்பியாயினி கூறிய அந்தச் செய்தியால், அவள் மனத்திலிருந்த சிறிதளவு சந்தேகமும் நீங்கிப் போயிற்று. இறந்து போன கணவனின் இன்னுயிரைக் கூற்றுவனிடமிருந்து மீண்டும் பெற்ற போது சாவித்திரிக்கு எத்தகைய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்குமோ அத்தகைய மகிழ்ச்சி பதுமைக்கு இப்போது ஏற்பட்டது. இது வெறும் காதல் மகிழ்ச்சி மட்டும் அல்ல. காதலனின் மாறு வேடத் திறமையை எண்ணிக் களிக்கிற களிப்பும் கலந்த மகிழ்ச்சியாகும்.

மகிழ்ச்சிப் பித்தேறிய பதுமைக்கு அப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. யாப்பியாயினியோடு கைகோத்து ஆடினாள். உதயணன் எழுதிக் கொடுத்திருக்கும் சித்திரங்களை எடுத்து மார்புறத் தழுவிக் கொண்டாள். அந்தச் சித்திரங்களுள் ஒன்றில் உதயணன் பதுமை ஆகிய இருவர் உருவமும் வரையப் பெற்றிருந்தன. அதிலிருந்த உதயணன் வடிவத்தை நோக்கி, "என் நெஞ்சைக் கவர்ந்த காதலரே! நீங்கள் வஞ்சகத்தில் கைதேர்ந்தவராக இருப்பீர்கள் போலத் தெரிகிறதே! மாறுவேடத்தால்தான் இந்தப் பேதையின் நெஞ்சத்தைத் திருட முடியும் என்பது உம் கருத்தோ?" என்று அந்தச் சித்திரத்தோடு நேரில் உரையாடுவது போலப் பேசினாள். பதுமையின் இத்தகைய செயல்களால் அவளது மனப்பூர்வமான நம்பிக்கையையும் உடன்பாட்டையும் யாப்பியாயினி அறிந்து கொண்டாள். இவ்வாறே சில நாட்கள் கழிந்தன. இதற்குள் உதயணன் பதுமை திருமணத்திற்குத் தருசக மன்னன் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான்.

அரண்மனைச் சேனைப்பெருங்கணியார், திருமணத்திற்கென நல்ல நாள் ஒன்றைக் குறிப்பிட்டுக் கூறியிருந்தார். வழக்கத்தின் படியே மகத வேந்தனின் தங்கைக்குத் திருமணம் நிகழ இருக்கும் அந்தச் செய்தி, நகர் எங்கும் வள்ளுவர்களால் அறிவிக்கப் பெற்றது. பிற நாட்டு மன்னர்களுக்கு மணத் தூதுவர்கள் போக்கப் பெற்றனர். இராசகிரிய நகரம் கோலாகலமான அலங்காரச் சிறப்புக்களை அடைந்து பொலிவு பெற்றது. அங்கங்கே நகரில் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பதை அறிவிக்கும் மங்கலக் கொடிகள் உயர்ந்து தோன்றின. குறித்த நாளில் எல்லா வகைச் சிறப்புக்களோடும், பதுமை - உதயணன் திருமணம் நிகழ்ந்தது. அவர்கள் இருவரும் உலகறிய மணம் புரிந்து கொண்ட காதலர்களாயினர். திருமணம் முடிந்த பின் பதுமைக்கும் உதயணனுக்கும் நாள்கள் களிப்பு மயமாகக் கழிந்தன. பதுமையும் உதயணனும் ஒருவருக்கொருவர் புதியவர்கள் அல்லர். அவர்கள் காதல் கொண்டதும் மனம் கலந்ததும் ஆகியவை கூட முன்னைய நிகழ்ச்சிகளே! ஆனால், உலகறியாதவை அவை. அவர்களது உள்ளங்கள் மாத்திரமே அறிந்தவை! ஆனால், இப்போது அவர்கள் மணமானவர்கள். திருமண உரிமையோடு நுகர்கின்ற வாழ்வு இது. இந்த இன்பமயமான பொழுதின் இடையே, துன்பமுற்றிருக்கும் நண்பனை அவன் மறக்க முடியவில்லை. அதையும் நினைத்து வேதனைப் பட்டான் உதயணன்.

போரில் எலிச்செவியரசனிடம் சிறைப்பட்ட உருமண்ணுவாவை எவ்வளவு விரைவில் அங்கிருந்து மீட்க முடியுமோ அவ்வளவு விரைவில் மீட்க வேண்டும் என்று நினைத்து அதற்கான திட்டங்களை இடையறாது எண்ணிக் கொண்டிருந்தான். இவ்வாறு இருக்கையில் தருசகனோடு உரையாடும் சந்தர்ப்பம் ஒன்று அவனுக்கு ஏற்பட்டது. அப்போது உருமண்ணுவாவை விடுவித்துக் கொண்டு வரவேண்டிய அவசியத்தைப் பற்றிக் குறிப்பாகத் தருசகனிடம் கூறினான் அவன். தருசகனும் அதை உணர்ந்து கொண்டு உருமண்ணுவாவை விடுவிக்கத் தன்னால் இயன்றவரை முயல்வதாக ஒப்புக் கொண்டான்.

உதயணனுடைய இந்த வேண்டுகோளைக் கேட்ட பின், தருசகனுக்குத் தனிமையில் உதயணனைப் பற்றிச் சிந்திக்க அவகாசம் ஏற்பட்டது. உதயணன் எதிர்பாராத விதமாக வந்து தனக்கு உதவி செய்து தன்னோடு பழகியதிலிருந்து பதுமைக்கும் அவனுக்கும் திருமணம் நடந்ததுவரை யாவற்றையும் ஒருமுறை ஆழ்ந்து எண்ணிப் பார்த்தான். அதன் விளைவாக உதயணனின் அப்போதுள்ள நிலை, இவன் நாடு பிறருடைய கையில் இருப்பது ஆகிய எல்லாம் தருசகனுக்கு நினைவு வந்தன. உதயணனுக்கு தன்னால் எந்த வகையில் எல்லாம் உதவி செய்ய முடியுமோ, அந்த வகையில் எல்லாம் உதவி செய்து அவனை உயர்வுறச் செய்ய வேண்டிய உறவுமுறையும் கடமையும் இப்போது தனக்கு இருப்பதைத் தருசகன் உணர்ந்தான்.

'பாஞ்சால ராசனாகிய ஆருணி, உதயணன் இல்லாத நேரத்தில் அவனுடைய சோர்வைப் பயன்படுத்திக் கொண்டு அவன் நாட்டைக் கைப்பற்றி ஆண்டு வருகிறான். அவனிடமிருந்து நாட்டை மீட்டு உதயணனுக்கு அளிக்க வேண்டும். நமக்கு உதயணன் செய்திருக்கும் கைம்மாறு கருதாத பேருதவிக்கும் நம் தங்கையை மறுக்காமல் மணம் புரிந்து கொண்டதற்கும் நாம் அவனுக்குப் பட்டிருக்கும் நன்றிக் கடன் மிகப் பெரியது' என்று உதயணனுக்கு உதவும் ஆர்வமும் நன்றியும் தருசகன் உள்ளத்தில் பெருகி வளர்ந்தன. இத்தகைய தனிமைச் சிந்தனையின் முடிவாகத் தருசகன், உதயணன் நாட்டை அவன் திரும்பவும் பெறுவதற்கு உடனடியாக ஓர் ஏற்பாட்டைச் செய்ய முற்பட்டான். தன் அமைச்சர்களில் சிறந்தவர்களாகிய, வருடகாரன், தாரகாரி, தருமதத்தன், சத்தியகாமன் என்னும் நால்வரையும் அழைத்து உதயணனுக்குப் படை உதவி செய்வது பற்றி அவர்களிடம் கலந்தாலோசித்தான் தருசகன்.

51. தம்பியர் வரவு

அநுபவமும் பயிற்சியும் மிக்க தருசக ராசனின் அந்த நான்கு அமைச்சர்களும், தாம் மேற்கொள்ளும் செயல்களில் பிறருடைய உதவியின்றியே வெற்றி பெறும் ஆற்றலும் வன்மையும் உடையவர்கள். நால்வகைப் படைகளோடு அறுபதினாயிரம் வீரர்களையும் அழைத்துச் சென்று தாங்களே ஆருணியரசனிடம் இருந்து உதயணன் நாட்டை மீட்டுத் தருவதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர். முதலில் அமைச்சர்களையும் படையையும் அனுப்பிவிட்டு, பின்பு உதயனனைப் பதுமாபதியுடன் அனுப்புவது நலம் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டான் தருசகன். தன் அமைச்சர்களுள் வருடகாரனைத் தனியே அழைத்து, "வருடகார! அறிவும் அநுபவ முதிர்ச்சியும் மிகுந்த உன்னிடம் சில செய்திகளை நான் தனியாகக் கூறவேண்டும். இந்தப் படையெடுப்பின் வெற்றிக்கு உன்னையே நம்பி அனுப்புவது போல, வேறு ஒரு செயலுக்கும் நான் உன்னையே முழு மனத்தோடு நம்பியிருக்கிறேன். அதுதான், உதயணனுக்கு ஒரு சிறு துன்பமும் நேர்ந்து விடாதபடி காக்க வேண்டிய செயல். இன்னும் வெளிப்படையாகக் கூறவேண்டுமானால், உதயணன் உன் அடைக்கலம் என்று வைத்துக்கொள். பிறரிடம் அடைக்கலம் புகுகின்ற அளவிற்கு உதயணன் சாதாரணன் அல்லன். ஆனால் எனக்காகவும், என் தங்கை பதுமைக்காகவும் என் பொருட்டு நான் அவனை உன்னிடம் உரிய அடைக்கலப் பொருளாக ஒப்படைக்கிறேன். எந்த வகையிலாவது முயன்று ஆருணியரசனை வென்று நாட்டை உதயணனிடம் ஒப்பித்துவிட்டு வர வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கிறது. சூழ்ச்சிகளினாலோ, வெளிப்படையான முயற்சிகளினாலோ இதை நீ நிறைவேற்றியாக வேண்டும்" என்று தருசகன் வருடகாரனிடம் மிக அந்தரங்கமாக வேண்டிக் கொண்டான்.

அன்றிரவே கோசாம்பி நகரத்தை நோக்கி அமைச்சர்கள் நால்வரையும் முதன்மையாகக் கொண்டு மகத நாட்டுப் படைகள் புறப்பட்டன. உதயணன், பதுமை ஆகிய இருவருக்கும் வேண்டிய எல்லாப் பொருட்களும் படைக்குப் பின்பு சென்றன. புதுமணக் காதலர்களாகச் செல்கின்றவர்கள் ஆகையால், அவர்களுக்கென்று சிறப்புமிக்க பரிசிற் பொருள்கள் பலவற்றை அனுப்பி வைத்திருந்தான் தருசக மன்னன். படைபுறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் உதயணன் தருசகனிடம் விடைபெற்றுக் கொள்ள வந்தான். அப்போது தருசகன் அவனிடம் சில செய்திகளை மனம்விட்டுப் பேசினான். உதயணனைப் பிரியப் போகின்றோமே என்ற கலக்கமும் அந்தப் பேச்சிலே தொனித்தது. "உதயணன், உதயணன் என்று அதைப் புகழுக்குரிய பேரரசன் ஒருவனின் பெயராகக் கேள்விப்பட்டு அவ்வளவிலேயே மகிழ்ந்திருந்தவன் நான்! ஆனால் இன்றோ, நீ எனக்கு நல்ல சமயத்தில் செய்வதற்கு அரிய உதவி ஒன்றைச் செய்ததுடன் எனக்கு நெருங்கிய உறவினானகவும் ஆகிவிட்டாய். பேரரசர்கள் யாவருக்கும் நீ நண்பனாகவும் உறவினனாகவும் இருக்கிறாய். உஞ்சை நாட்டு வேந்தன் பிரச்சோதனனும் என் போலவே மகட்கொடை முறையில் உனக்கு உறவினனே. இப்போது ஆருணியோடு, நீயும் என் படைகளும் நிகழ்த்த இருக்கும் போரில் உனக்கு ஏதாவது தளர்ந்த நிலை ஏற்படுமானால், பிரச்சோதன மன்னனுடைய உதவியைக் கூட நீ கோரலாம். அவனும் உன் வேண்டுதலை மறுக்க மாட்டான். மலைச் சிகரத்திலே பெய்த மழை நீர் போல, ஆருணியும் அவனைச் சேர்ந்தவர்களும் சிதறியோடித் தோற்றுப் போகவில்லையானால் நானே நேரில் அந்தப் போர்க்களத்திற்கு வருவேன். அவனைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து ஆட்சியை உனக்கு வாங்கி அளிப்பேன். அதுவே இயலாமற் போயினும் எனக்கோ, பிரச்சோதனனுக்கோ நண்பர்களாகிய எந்த ஓர் அரசனை நீ அழைத்தாலும், அவன் மறுக்காமல் முன் வந்து உனக்கு உதவி செய்வான். நீயும் என் அமைச்சர்களும் தவிரப் பிறருடைய தொடர்பை இதில் ஏற்படுத்திக் கொள்வதனால் பல துன்பங்கள் விளையலாம். எனவே போர் சம்பந்தமான நிகழ்ச்சிகளை ஆலோசிக்கும் போதோ திட்டம் இடும்போதோ நீயும் அமைச்சர்களும் மட்டுமே தனிமையில் கலந்து பேச வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்" என்று உதயணனுக்கு வாழ்த்துக் கூறினான் தருசகன். "தாங்கள் கூறிய வாழ்த்துக்கும் யோசனைகளுக்கும் என் நன்றி! எல்லாம் தங்கள் கூறியவாறே இனிது நிகழும் என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. அவசியமானால் தங்களையோ, பிரச்சோதன மன்னரையோ நேரில் உதவிக்கு அழைப்பேன். நிற்க இது வேறோர் செய்தி! அதை மீண்டும் தங்களுக்கு நினைவூட்டித் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். நான் இங்கு வந்தது, அரிய சந்தர்ப்பத்தில் தங்களுக்கு உதவ நேர்ந்தது, தங்கள் தங்கையை மணம் புரிந்து கொண்டது ஆகிய இவை யாவற்றிற்கும் மூலகாரணமாக இருந்தவன் என் அருமை நண்பன் உருமண்ணுவாவே! நான் பதுமையை மணஞ் செய்து கொண்ட மகிழ்ச்சியை உணரவே முடியாமல், என் மனத்தில் உருமண்ணுவாவைப் பற்றிய துன்ப நினைவுகள் தடை செய்கின்றன. உருமண்ணுவாவை எப்படியும் இன்னும் பத்துப் பதினைந்து நாள்களுக்குள் எலிச்செவி அரசனிடமிருந்து விடுதலை செய்து அனுப்ப வேண்டியது உங்கள் பொறுப்பு. உருமண்ணுவா விடுதலையானால் ஒழிய, நான் என்னுடைய திருமண இன்பத்தை நினைக்கவும் வழியில்லை. இதை நீங்கள் எனக்காக விரைவில் செய்தாக வேண்டும்" என்று கூறித் தருசக வேந்தனிடம் தனக்கு விடையளிக்குமாறு கேட்டுக் கொண்டான் உதயணன். தருசகனும் அவ்வாறே செய்து உருமண்ணுவாவை விடுவிப்பதாக வாக்களித்து உதயணனுக்கு விடை கொடுத்து அனுப்பினான். தனக்கென்று இருந்த உரிமைப் படைவீரர்களும் வேறோர் சிறுபடையும் பின்பற்றி வர, உதயணன் கோசாம்பி நகரத்தை நோக்கிச் சென்றான். 'உதயணன் படைகளோடு புறப்பட்டு விட்டானே! இனி எந்த அரசனின் முடிவுக்கு ஆபத்தோ?' என்று எண்ணிப் பிற வேந்தர் பேதுற்றனர்.

தருசகன் அனுப்பிய மகத நாட்டுப் படைவீரர்களோடு அமைச்சர்கள் நால்வரும் முதன்மை வைத்து முன்செல்ல, உதயணனும் அவனுடன் சென்ற சிறு படையும் பின்பற்றித் தொடர்ந்து செல்லலாயினர். இராசகிரிய நகரத்தில் நிகழ்ச்சிகள் இவ்வாறு இருக்கும் நிலையில், அங்கிருந்து சில நாளைக்கு முன்பே வேறு ஒரு முக்கியமான செயல் நிமித்தம் வெளியேறிச் சென்றிருந்தான் வயந்தகன். மறைவாக இருக்கும் யூகியிடமிருந்து செய்தி பெற்று வரவே அவன் வெளியேறினான். யாப்பியாயினியின் திருமணம் முடிந்தபின் இரண்டோர் நாட்களில் வெளியேறிய அவனுக்கு, யூகியை அடைவதற்கு முன்பாகவே அவன் அனுப்பிய ஓலை நடுவழியிலேயே கிடைத்துவிட்டது.

உருமண்ணுவா போரிற் சிறைப்பட்ட பின் வயந்தகனுடைய பொறுப்பு அதிகமாகி இருந்தது. அவ்வப்போது யூகி கூறியனுப்பும் திட்டங்களை அறிந்தும், இங்கே உதயணனைக் கவனித்துக் கொண்டு இருபுறமும் செயலாற்றி வந்தான் அவன். யூகி அந்தத் தடவை அவனுக்கு அனுப்பியிருந்த ஓலையில், பாஞ்சால வேந்தன் ஆருணி மீது படையெடுப்பதற்கு அதுவே ஏற்ற சமயம் என்றும், உதயணனுடைய தம்பியர்களாகிய பிங்கல கடகர்களும் இதே நோக்கத்தோடு தாமாகத் திரட்டிய ஒரு படையுடன் இன்ன இடத்தில் இருக்கிறார்கள் என்றும், இந்தப் படையெடுப்பை ஆதரித்து அவர்களும் உதயணனோடு வந்து கலந்து கொள்வார்கள் என்றும் எழுதியிருந்தான். இந்த ஓலையைப் படித்தவுடன் தான் உதயணனைச் சந்திக்கக் கிளம்பினான் வயந்தகன். உதயணனோடு அவன் தம்பியரையும் ஒன்று சேர்த்து வைக்கும் வேலையைத் தன் ஓலை மூலம் வயந்தகனுக்கு யூகி கொடுத்திருந்தான்.

உதயணனைத் தேடி இராசகிரிய நகரத்திற்கு வந்த வயந்தகன், அவன் அங்கிருந்து படைகளோடு கோசாம்பிக்குப் புறப்பட்டு விட்ட செய்தியறிந்து விரைவாக அவனைப் பின் தொடர்ந்தான். உதயணன் கோசாம்பி நகரத்தை அடைவதற்குள் அவனைச் சந்தித்துப் பிங்கல கடகர்களைப் பற்றி அவனுக்கு நினைவு படுத்தி, அவர்களை ஒன்று சேர்த்து வைப்பது வயந்தகனுக்கு அப்போது கடமையாக இருந்தது. கோசாம்பி நாடு செல்லும் நடு வழியிலேயே வயந்தகன், உதயணனைச் சந்திக்க முடிந்தது.

உதயணனைச் சந்தித்தவுடனே அவன் பிங்கல கடகர்களைப் பற்றிய செய்தியைக் கூறத் தொடங்கினான். "நீ உஞ்சை நகரில் பிரச்சோதனனால் சிறைப்படுத்தப்பட்டிருந்த போது, உன் ஆட்சியுரிமைக்கு உட்பட்ட கோசாம்பி நாடு, உன்னுடைய தம்பியர்களாகிய பிங்கல கடகர்களால் ஆண்டு வரப்பெற்று அமைதியாக இருந்தது. அந்நிலையில் தான் பாஞ்சால வேந்தன் ஆருணி இளைஞர்களாகிய உன் தம்பியரோடு போரிட்டு, அவர்களை நாட்டிலிருந்து துரத்திவிட்டுத் தானே கோசாம்பியைக் கைப்பற்றி ஆள ஆரம்பித்தான். ஆருணியால் துரத்தப் பெற்ற நின் தம்பியர், குதிரைகளில் ஏறிக் காட்டுப் பகுதியில் மறைவாகத் திரிந்து, சில நாள்களைக் கழித்தனர். பின் மனவெறுப்புற்று யமுனை நதியில் வீழ்ந்து உயிரைப் போக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அவர்கள் சென்ற போது, பெண்கள் மட்டுமே வசிக்கும் ஒரு தீவு எதிர்ப்பட்டது. அத்தீவில் பன்னிரண்டு மாதங்கள் வசித்த பின்னர் மீண்டும் ஆருணியோடு போரிட்டு அவனை வெற்றிக் கொள்ள முயலலாம் என்று எண்ணி இப்போது உன்னைப் போலவே வேறோர் இடத்தில் அவர்களும் போருக்கு ஆயத்தமாக இருக்கின்றனர். அவர்களிடம் ஆருணியை வெல்வதற்கு ஏற்ற தகுதி வாய்ந்த படை ஒன்று இருக்கிறது. நீ விரும்பிச் சம்மதித்தால் அவர்கள் இப்போதே இங்கு வந்து உன்னோடு கலந்து கொள்வார்கள். நீங்கள் யாவரும் ஒன்று கூடிப் போர் புரிந்தால், ஆருணி தோல்வியுற்று ஓடுவது உறுதி. பின்பு வத்தவ குலம் உயர்வதற்கு எந்த விதமான தடையும் இல்லை" என்று விளக்கமாக உதயணனிடம் வயந்தகன் கூறியதும் உதயணன் தன் தம்பியராகிய பிங்கல கடகர்களை உடனே சந்திக்க விரும்பினான்.

அவர்கள் தன்னோடு ஒன்று சேருவது அந்த நிலையில் அவசியம் என்று உதயணனால் உணர முடிந்தது. உதயணன் வயந்தகனை நெருங்கினான். வயந்தகன் ஒரு வீரனை அழைத்து ஏதோ கூறி அனுப்பினான். வயந்தகன் அவ்வாறு கூறியனுப்பிய சிறிது நேரத்திற்குள்ளேயே பிங்கல கடகர்கள் தம் படையுடன் தமையன் உதயணனைச் சந்திக்க அங்கே வந்து சேர்ந்தனர். உதயணனைக் கண்டதும் அவனை அடிபணிந்து வணங்கிக் கண்ணீர் சிந்தினர் பிங்கல கடகர். "பெற்ற தாய்க்குப் பணிவிடை செய்வதற்கும் எங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. இராமனுடையத் தம்பி இலக்குவணனைப் போலத் தமையனாகிய உன் கீழ் வழிபட்டு உன் சொற்படி நடக்கும் பாக்கியம் கூட இன்று வரை எங்களுக்குக் கிடைக்கவில்லை. நாங்கள் முன்னைப் பிறவியிற் செய்த தீவினையின் மிகுதியோ என்னவோ? எங்களுக்கு நல்லவை எவையும் நிலைப்பதில்லை" என்று கண்ணீர் சிந்திக் கொண்டே உருக்கமான குரலில் அவர்கள் கூறியபோது, உதயணன் மனம் இளகிவிட்டது. அவன் தம்பியர்களைத் தன் காலடியிலிருந்து தூக்கி நிறுத்தித் தழுவிக் கொண்டான்.

உதயணனுக்கும் விழிக் கடையில் நீர்த்துளிகள் திரண்டு கண்கள் கலங்கிவிட்டன. "நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள்! எல்லாத் துன்பங்களும் விளைவதற்குக் காரணமாக் இருந்தவன் நான் ஒருவனே. நான் மட்டும் அன்றிலிருந்து என் மனம் போன போக்கிலே இருக்காமல் அமைச்சர்கள் சொற்படி நடந்திருந்தேனானால் இவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டிருக்கக் காரணமே இல்லை! என்னாலேயே இத் துன்பங்கள் நிகழ்ந்தன. அவற்றை எல்லாம் எண்ணி இனிக் கவலையுற்று என்ன பயன்? இப்போது நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்தது ஒரு வகைக்கு நல்லதாகப் போயிற்று. இனி ஆருணியின் கதி, நெருப்பிடையே அகப்பட்டுக் கொண்ட பஞ்சுப் பொதியைப் போல அழிந்து போவது ஒன்றுதான். நம்முடைய போர்த் திறமைக்கோ, வெற்றிக்கோ இனி எந்தவிதமான குறைவோ, தயக்கமோ இல்லை. இன்று உங்களைச் சந்தித்ததில், இருந்து என்னுடைய நல்ல காலம் தொடங்குகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. எங்கோ ஓடி அழிந்து போனதாக எண்ணி நான் மறந்துவிட்ட நீங்களே, எல்லா நலங்களோடும் திரும்பி வந்துவிட்டீர்கள். இதே போல என் அன்பிற்குரிய வாசவதத்தையும் யூகியும் கூட உயிரோடு திரும்பி மிக விரைவிலேயே என் முன் தோன்றுவார்கள் என்று எனக்குள் ஒரு விதமான நம்பிக்கை எழத் தொடங்குகிறது. எனது முன்னைத் தவப்பயன் இப்போதுதான் விளைந்து பயனளிக்கத் தொடங்கியிருக்கிறது போலும்! உங்களை இன்று நான் அடைந்தது போலவே பாஞ்சாலனை வென்று, நமது அரசாட்சியையும் நாம் உறுதியாக அடைந்து விடுவோம்" என்று கலங்கி நிற்கும் தன் தம்பியர்களுக்கு ஆறுதல் கூறினான் உதயணன். இறுதியில் தன் தாயைப் பற்றித் தம்பியர்கள் கூறிய செய்தி நினைவிற்கு வந்த போது உதயணன் உள்ளம் ஒரு கணம் உருகித் தாழ்ந்தது. தம்பியர்களைப் போலவே தானும் தன் தாய்க்கு தொண்டு செய்யும் வாய்ப்பை இதுவரை பெற இயலாமற் கழித்தவன் என்ற ஏக்கம், அவன் மனத்தில் அப்போது தோன்றி நிலவி மறைந்தது.

52. ஒற்றர் உரைத்தவை

வருடகாரன் முதலிய அமைச்சர்களை அழைத்துத் தம்பியர்களையும் உடன் வைத்துக் கொண்டு, சில முக்கியமான திட்டங்களைக் கலந்து ஆலோசித்துக் கொண்டு விட்டால் முன்னேற்பாடு நலமாக அமையும் என்று தோன்றியது உதயணனுக்கு. இந்த எண்ணம் தோன்றியவுடனே ஒரு காவலனை அழைத்து, வருடகாரனையும் இடவகனையும் கூப்பிட்டு வருமாறு அனுப்பினான் உதயணன். தன்னுடைய செல்வத் தம்பிகளாகிய பிங்கல கடகர்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றிய பின், ஆருணியை வென்று அவனிடமிருந்து தங்கள் நாட்டை மீட்கும் வழியைச் சிந்திக்கத் தொடங்கினான் உதயணன். அந்தச் சிந்தனையில் கலந்து கொள்வதற்காக அவன் அழைப்பை ஏற்றுக் கொண்டு வருடகாரனும் இடவகனும் வந்திருந்தனர். மூவரும் கூடி, ஆருணியை வெல்லும் வழியை ஆலோசிக்கலாயினர். ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் வருடகாரன் தன் மனத்தில் தோன்றிய வழியைக் கூறினான்.

உதயணனும் இடவகனும் அதைக் கூர்ந்து செவிமடுத்துக் கொண்டிருந்தனர். "அரசர் பெருந்தகையே! ஆருணியை வெல்ல முயலும் இந்த முயற்சியில் நாம் சாதாரண ஆற்றலை மட்டுமே செலவிடக் கருதினோமானால் அது போதாது. பயங்கரமான சூழ்நிலையை உண்டாக்குவதற்கு உரிய சில சூழ்ச்சிகளையும் சற்றும் தயங்காமல் செய்ய முற்பட வேண்டும். நம்முடைய ஒற்றர்கள் ஏற்கெனவே கோட்டைக்குள்ளும் அரண்மனையிலும் சென்று வந்து, நமக்கு எவ்வளவோ பயன்படத்தக்க விவரங்களைக் கூறியிருக்கின்றனர். கோட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அரணின் நிலையும் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். இந்த நல்ல வாய்ப்பைத் துணையாகக் கொண்டு நம்முடைய வீரர்களில் சிலரைக் கோட்டைக்குள் அனுப்பி, ஆருணி அஞ்சி நடுங்கத்தக்க இரகசியக் கலகம் ஒன்றைச் செய்ய வேண்டும். பகல் நேரத்தில் இந்த ஏற்பாடு சாத்தியமாகாது. எனவே இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான நேரம் நடு இரவுதான். நடு இரவில் கோட்டை வாயிலின் எல்லாக் கதவுகளும் அடைத்து விடுவார்கள். ஆகையால் கயிற்று ஏணிகளின் மூலமாகவே தந்திரமாக நம் வீரர்களைக் கோட்டைக்குள் அனுப்ப வேண்டும். மதில்களின் பிரம்மாண்டமான சுவர்களைக் கடந்து கோட்டைக்குள் நுழைவதற்கு இதைத் தவிர வேறு வழிகளே இல்லை. இந்த வழியை மேற்கொண்டு உட்புகுந்த நம் வீரர்கள், எதிர்பாராத விதமாகப் பொங்கிக் கரையருகே உள்ள ஊர்களை அழிக்கும் கடலைப் போல அமைதியான துயிலில் ஆழ்ந்திருக்கும் அரண்மனையிற் கலகம் புரிந்து குழப்பத்தை விளைவிக்க வேண்டும்! அதே நேரத்தில் தாங்கள் கோட்டைக்கு வெளியே போருக்கு ஆயத்தமாக அணிவகுத்த படைகளோடு காத்திருப்பது அவசியம். உள்ளே புகுந்த வீரர்கள் இரவோடிரவாக அரண்மனையிலும், போர் வீரர்கள் வசிக்கும் படைச்சாலைகளிலும் எவ்வளவு அழிவு செய்ய முடிகிறதோ அவ்வளவு அழிவைத் தங்கள் கலகத்தின் மூலம் செய்வார்கள். இன்னும் ஒரு செய்தி! கோட்டைக்குள் இருக்கும் மக்கள் யாவரும் தங்கள் பழைய மன்னனாகிய உங்கள் மேல் தான் அந்தரங்கமான பற்றும் விருப்பமும் கொண்டிருக்கிறார்கள். ஆருணி, வன்முறை ஆட்சியால் அவர்களை அடக்கி ஆண்டு வருகிறான். நம் வீரர்கள், 'உதயணன் வாழ்க' என்ற வாழ்த்தொலி மூலம் தங்கள் வரவைக் கோசாம்பி நகர மக்களுக்குத் தெரிவித்தால், அவர்கள் ஆதரவும் நமக்குக் கிடைக்கும். இவற்றையெல்லாம் திட்டம் பிறழாமல் நாம் செய்து முடித்தால் ஆருணிக்கு அதோ கதிதான். இருளில் பெரிய மழையிலே தனியாக அகப்பட்டுக் கொண்ட ஆண்குரங்கைப் போலத் திகைத்துத் திண்டாடுவான் அவன். நகர மக்கள் நமது வரவைத் தெரிந்து கொண்டு விட்டால் நம்மைப் பாராட்டி வாழ்த்தி வரவேற்பர். அவர்களாகவே ஒரு படை போலத் திரண்டு நம்மோடு வந்து சேர்ந்து கொள்ளுவார்கள். இந்தத் திட்டத்தை நீங்கள் ஒப்புக் கொண்டால், ஆருணியைத் தோல்வியுறச் செய்து சுலபமாக அவன் உயிரையும் வாங்கி விடலாம்" என்று இவ்வாறு தான் கருதிய வழியைக் கூறி முடித்தான் வருடகாரன்.

வருடகாரன் கூறிய இந்தத் திட்டம் இடவகனுக்கும் உதயணனுக்கும் பொருத்தமுடையதாகவே தோன்றியது. அவ்வாறே செய்ய உடன்பட்டு வருடகாரனைப் பாராட்டி நன்றி கூறினான் உதயணன். மேலே நடக்க வேண்டிய செயல்களை ஒரு பளிக்கு அறைக்குச் சென்று மிக இரகசியமாக நடத்தினர். ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எல்லாத் திட்டங்களுக்கும் சூழ்ச்சிகளுக்குமே பொதுவான நியதி ஒன்றுண்டு. அதுதான் நினைப்பளவிலும் பேச்சளவிலும் கவர்ச்சியுடையதாக இருத்தல், செயலில் இறங்கும் போதுதான் எண்ணமும் சொல்லும் எவ்வளவிற்கு எளிமையானவை என்று தோன்றும். பளிங்கு அறையிலே இரகசியத் தனிமையில் மூவரும் கூடிச் சிந்தித்த போது சற்றே மலைப்புத் தென்பட்டது! சொல்லும்போது சாதுரியத்தோடு திட்டத்தைச் சொல்லி விவரித்த வருடகாரனுக்கே 'தான் கூறியவைகள் செயலுக்கு வருவது இவ்வளவு கடினமா!' என்ற வியப்பு உண்டானது. ஆயினும் திட்டத்தை எவ்வகையிலேனும் நடத்தியே தீருவது என்ற முடிவு மூன்று பேருக்கும் உறுதியாக இருந்தது. இந்த நிலையில் ஆருணியை ஒற்றறிவதற்குக் கோட்டைக்குள்ளே மாறுவேடத்தோடு சென்றிருந்த சில ஒற்றர்கள் 'அவசரமாக அரசனைக் காண வேண்டும்' என்று சொல்லிக் கொண்டே திரும்பி அங்கே வந்தனர். ஒரு சேவகன் இந்தச் செய்தியை உள்ளே வந்து உதயணனிடம் கூறினான். உதயணனுக்கு வியப்பு ஏற்பட்டது. உடனே அவர்களை உள்ளே வரச்சொல்லி உரைக்குமாறு சேவகனை அனுப்பி சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் ஒற்றர்கள் உள்ளே நுழைந்து மூவரையும் வணங்கினர். வணங்கியபின் ஒற்றர்கள் செய்தியைக் கூற, மூவரும் ஆவலோடு அதைக் கேட்டனர். அந்த ஒற்றர்கள் படையெடுப்புக்கு வேண்டிய ஒற்றுச் செய்திகளையும் அறிந்து வந்திருந்தனர்.

கோட்டைக்குள்ளே சென்று ஒற்றறிந்து வந்த அந்த வீரர்களிற் சிலர், மகத நாட்டிலிருந்து உதயணனோடு வந்திருந்தவர்கள். சிலர் உதயணனைச் சேர்ந்தவர்கள். இப்போது அவர்கள் அறிந்து வந்து கூறிய செய்தியிலிருந்து தாங்கள் ஏற்கனவே கருதி முடித்திருந்த திட்டத்தைக் கைவிட வேண்டி நேர்கிறது என்பதை மூவரும் உணர்ந்தனர். இங்ஙனம் திட்டமே மாறிப் போகும்படியாக ஒற்றர்கள் கூறிய செய்திதான் என்ன? "ஆருணி, கோட்டை மதில்களையும் அரணிலுள்ள மற்ற உறுப்புக்களையும் பழுது நேர்ந்த இடங்களிற் செப்பனிட்டுள்ளான். இரவிலும் பகலிலும் கோட்டைப் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை முன்னிருந்ததைக் காட்டிலும் மிகுதிபடுத்தியிருக்கிறான். மதில்களின் விளிம்பிலமைந்த ஆளோடிகள் சிதைந்து போயிருந்த பகுதிகளில், கோட்டையைச் சுற்றியிருக்கும் அகழியை அது முன்பிருந்ததைக் காட்டிலும் பயங்கரமான முறையில் மாற்றி அமைத்திருக்கிறான். கற்களைப் பதித்து ஆற்றுக்கும் அகழிக்கும் ஒரு சுரங்கக் கால்வாய் மூலமாக இணைப்புச் செய்திருப்பதனால், அகழியில் ஆள் இறங்க முடியாதபடி நீரின் ஆழம் மிகுந்திருக்கிறது. கோட்டையைச் சேர்ந்தவர்கள் அகழியில் தோணிகளை மிதக்க விட்டுக் கொண்டு ஓரத்து மதிற் சுவர்களில் ஏற முடியாதபடி பல இயந்திரப் பொறிகளை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடக்க முடியாத அகழியை எவ்வாறேனும் கடந்து சென்று விட்டால், மதிற் சுவர்களை நெருங்கவும் இயலாத வண்ணம் நுணுக்கமான விசைப் பொறிகள் பல பொருத்தப்பட்டு இருக்கின்றன. முற்றுந்துறந்த முனிவர்களே வந்தாலும் சரி, அவர்களை நன்றாக ஆராய்ந்து தெளிந்து ஐயந்தீர்ந்த பின்புதான் கோட்டை வாயிலுக்குள் நுழைய விடுகின்றார்கள். நாட்டில் அங்கங்கே இருந்த படைத்தலைவர்கள் யாவரும் அரசன் ஏவலால் கோட்டைக்குள்ளே வந்து தங்கியிருக்கிறார்கள். கோட்டைக்குள்ளே இருந்தவர்களில் தனக்குப் பயன்படாத சாதாரண மக்களை எல்லாம் வெளியே காடுகளின் புறத்தே சென்று வசிக்குமாறு துரத்திவிட்டான் ஆருணி. 'எங்கள் பழைய மன்னன் உதயணன் தான் எங்களை ஆள வேண்டும்' என்று எவரெவர் ஆர்வத்தோடு கலகம் செய்தார்களோ, அவர்களையெல்லாம் சிறையில் அடைத்துவிட்டனர். இன்னும் சில முக்கியமான செய்திகள்: 'உதயணன் படையெடுத்து வருவான்' என்பதை ஆருணி எவ்வகையிலோ முன்பே அறிந்து கொண்டிருக்கிறான். 'உன் மகளை வலிய தூக்கிச் சென்று மணந்து கொண்ட உதயணனைப் பழிவாங்க இது ஒரு நல்ல வாய்ப்பு! அந்த உதயணன் என்னுடன் போருக்கு வருகிறான். நீயும் உன் படையோடு எனக்குத் துணையாக இங்கே கோசாம்பி நகரத்துக்கு வந்து சேர்க!' என்று பிரச்சோதன மன்னனுக்கும், 'இராசகிரிய நகரத்தில் உங்களைச் சூழ்ச்சியால் வென்ற உதயணன் இங்கே என்மீது படையெடுத்து வருகின்றான். துணையாக நீங்களும் வந்து, என் பக்கம் சேர்ந்தால், அவனை இங்கே அழித்து விடலாம்' என்று வேசாலி, எலிச்செவி முதலிய சங்க மன்னர்களுக்கும், அவசரமாகத் திருமுகங்கள் அனுப்பியிருக்கிறான் ஆருணி. அன்றியும் மகத மன்னன் தருசகன், நமக்குத் துணையாக இருக்கிறான் என்ற செய்தியையும் ஆருணி எவ்வாறோ அறிந்து கொண்டிருக்கின்றான். அதனால், 'உதயணனுக்குத் துணை செய்வதை உடனே நிறுத்திவிட்டு என்னோடு சேர்ந்து கொண்டால் உனக்கு நீ வேண்டும் பொருளைக் கைம்மாறாக வழங்குகிறேன்' என்று பொருளாசைக் காட்டித் தருசக மன்னனுக்கும் ஆருணி ஒரு திருமுகம் அனுப்பியிருக்கிறான். திருமுகம் போதாதென்று மகத மன்னனோடு நன்கு பழக்கமுள்ள நண்பர் சிலரை மகத நாட்டுத் தலைநகருக்குத் தூது அனுப்பியிருப்பதாகவும் தெரிகின்றது" என்று ஒற்றர்கள் உதயணனிடம் தெரிவித்தனர்.

53. புதியதொரு சூழ்ச்சி

ஒற்றர்கள் சமயமறிந்து தெரிந்து வந்து உரைத்த மேற்கூறிய செய்திகள் உதயணனுக்குப் பெரிதும் பயன்பட்டன. மதிநுட்பமுள்ள எந்த அரசனும், ஒற்றர்கள் தனக்கு மிகவும் வேண்டியவர்களே ஆனாலும் அவர்கள் கூறியதை அப்படியே நம்பிவிடுதல் கூடாது. உதயணன் தன்னைத் தவிரப் பிறர் யாருக்கும் தெரியாதவாறு வேறு சில ஒற்றர்களையும் ஆருணியின் கோட்டைக்கு அனுப்பியிருந்தான். அந்த ஒற்றர்கள் செல்வது இந்த ஒற்றர்களுக்குத் தெரியாது. இந்த ஒற்றர்களைப் பற்றி அந்த ஒற்றர்களுக்குத் தெரியாது. தனியே அவர்களையும் அழைத்துக் கேட்ட பின் இருவர் கூறியதும் ஒத்திருந்தது கண்டு, அதன் பின்பே இவையாவும் உண்மைதான் என்று உதயணன் நம்பினான். கோசாம்பி நகரத்துக் கோட்டையில் ஆருணி புதிதாகச் செய்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மற்ற விவரங்களையும் ஒற்றர்கள் சொல்லக் கேட்டபின், நள்ளிரவில் கோட்டைக்குள் நுழைந்து கலகம் விளைவிக்கும் திட்டம் ஒத்துவராது என்பது உதயணன் முதலிய மூவருக்கும் தெரிந்தது. உதயணன் ஆழ்ந்து சிந்தித்தான்; 'வேறு எந்த வகையில் இந்த ஆருணியை வெல்லலாம்?' என்று பல விதமான எண்ணங்களால் சூழ்ந்து எண்ணினான். முடிவில் அவனுக்கு ஒன்று தோன்றியது.

"இரவில் அரண்மனைக்குள் நம்மவர்களை அனுப்பி வெளியே படைகளுடனே வளைத்திருந்து வென்றுவிடலாம் என்று நாம் எண்ணியிருந்தது இனிமேற் பயன் பெறாது! ஆருணி, இப்போது இருக்கும் சூழ்நிலையில் அரண்மனை கோட்டை முதலியவற்றில் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தெரிகிறது. நாம் படையோடு அவனை வளைக்கத் தொடங்கும் நேரத்தில், அவன் உதவி வேண்டித் திருமுகம் அனுப்பியிருக்கும் சங்க மன்னர்களில் யாராவது துணைக்கு வந்து அவன் பக்கம் சேர்ந்து கொண்டால், நமது நினைவு சித்தியடைவதற்கு வழியே இல்லை. எனவே, இப்போது வேறோர் புதிய சூழ்ச்சியை நாம் மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்" என்று கூறிவிட்டு, எதிரே அமர்ந்திருந்த வருடகாரனையும் இடவகனையும் அவர்கள் கருத்தை முகக் குறிப்பால் அறியும் நோக்கத்தோடு பார்த்தான் உதயணன்.

வருடகாரனும் இடவகனும் சம்மதத்திற்கு அறிகுறியாகத் தலையசைத்தனர். உதயணன் வருடகாரனைக் குறிப்பாகத் தன் அருகில் நெருங்கி வருமாறு கூறினான். அவன் வந்ததும் தன் கருத்தை அவனிடம் கூறினான். "வருடகார! இப்போது உன்னை அடிப்படையாகக் கொண்டே என் மனத்தில் இந்தப் புதிய சூழ்ச்சியை உருவாக்கியிருக்கிறேன். இந்தப் புதிய சூழ்ச்சியும் உன்னுடைய திறன் மிக்க செயலாற்றலைக் கொண்டுதான் வெற்றிபெற வேண்டும். இப்போதே இந்த நொடியிலிருந்து நீ என்னுடைய பகைவனாக மாறி நடித்தால் ஆருணியின் நட்பு எளிதில் கிடைத்து விடும். பகையாளி குடியை உறவாடி தான் கெடுக்க வேண்டும். நம்மைச் சேர்ந்தவர்கள் கூட நீ உண்மையாகவே எனக்குப் பகைவனாக மாறிவிட்டாய் என்று நம்பிவிடுமாறு அவ்வளவு பொருத்தமாக இந்தச் சூழ்ச்சியை நீ ஏற்று நடிக்க வேண்டும்! ஆருணிக்கு வேண்டியவர்களை ஒருவர் விடாமல் நீ சந்தித்து என்னை வெறுத்துப் பேசி 'ஆருணியோடு இப்போதே நான் சேர்ந்து கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்' என்று கூறி, அவர்கள் ஆதரவை முதலில் பெற்றுக் கொள். ஆருணியோடு உனக்கு உறவு ஏற்படுத்திக் கொள்வதற்கு இதுவே தகுந்த வழி. அவர்களிடம் எப்போதும் என்னைப் பற்றி இகழ்ந்தே பேசிக் கொண்டிருக்க வேண்டும். 'உதயணனுக்குத் தன் புகழைப் பேணும் விருப்பமே இல்லை. போர் செய்வதற்கு ஆசையோ, ஆற்றலோ அவனிடம் இப்போது கிடையாது. ஏதோ மகத மன்னனுடைய வார்த்தையைத் தட்ட முடியாமல் இங்கே படையெடுத்து வந்திருக்கிறான். உறுதியாக இப்போது அவன் சிறிதும் ஆற்றல் இல்லாதவனாகவே இருக்கின்றான்' என்று என்னைப் பற்றி பலவாறாகக் கூறி இகழ்ந்து பேசு. பின்பு அவர்கள் மூலம் ஆருணியை நண்பனாக அடைந்து, எனக்கு அஞ்சி அவன் புதிய புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாதபடி என்னைப் பற்றி அவனிடம் எளிமையாகச் சொல். இவ்வாறு நீ சொல்வதனால் ஆருணி புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறைப்பதோடு வேறு அரசர்களைத் துணைக்கு அழைத்தலையும் நிறுத்திவிட்டு, முன்பிருந்தே எனக்கு அஞ்சி வந்ததற்கு எண்ணி நாணி எப்போதும்போல இயல்பாக இருக்கத் தொடங்குவான். நான் இப்போது பலத்தில் குறைந்தவனாக இருக்கிறேன் என்று ஆருணியை நம்பும்படி செய். அதற்குமேல் என்ன செய்வது அவனை எப்படி வெல்வது என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று உதயணன் கூறி முடித்தான்.

வருடகாரன் மனத்திற்கும் இந்த ஏற்பாடு சரி என்றே தோன்றியது. "தாங்கள் கூறியபடியே சூழ்ச்சி புரிகிறேன். எல்லாம் நம்முடைய வெற்றிக்கு ஏற்றபடி நடக்க என்னால் இயன்ற மட்டும் செயல் புரிய முற்படுகிறேன்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டான் வருடகாரன். வருடகாரன் கோசாம்பி நகரத்துக் கோட்டைக்குள் செல்வதற்கு முன் தன்னை சேர்ந்த படை வீரர்களில் நம்பிக்கை வாய்ந்த சிலரை அழைத்து, "உதயணனுக்கு எந்தவிதமான அல்லலும் ஏற்படாமல், இரவோ, பகலோ, எந்த நேரமும் காத்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு" என்று கூறிவிட்டுச் சென்றான். தான் அருகில் இல்லாத நேரத்தில் 'எவர் செய்யும் சூழ்ச்சிக்காவது உதயணன் ஆட்பட்டுவிடக் கூடாதே! ' என்று வருடகாரனுக்கு ஓர் அச்சம். கோட்டைக்குள் சென்ற வருடகாரன், முதல் தந்திரமாக ஆருணியின் சேனாபதி மகனைத் தன்னுடைய நெருக்கமான நண்பனாகச் செய்து கொண்டான். இளைஞனாகிய சேனாபதி மகன் மூலம், அவனுக்குப் பல இரகசியச் செய்திகள் தெரியலாயின. தான் உதயணனை வெறுத்து அவனோடு கடும்பகை கொண்டிருப்பதாக வருடகாரன் அங்கே கூறியிருந்ததனால், ஒரு நாள் அவன் எதிர்பார்த்த விளைவு அவனைத் தேடி வந்தது. "எங்கள் அரசன் ஆருணியோடு நீ சேர்ந்து கொள்வதாக இருந்தால், உனக்கு எவ்வளவோ பயன்கள் எய்தும்! இருநூறு யானையும் ஐந்து தேரும், இன்னும் பல பெரிய சிறப்புக்களும் உனக்குக் கிடைக்குமாறு செய்வேன் நான்" என்று சேனாபதி மகன் வருடகாரனிடம் கூறினான். அவன் வேண்டுகோளுக்கு உடன்படுவது தன் காரியத்திற்கும் சாதகமாக அமையும்போலத் தோன்றியது வருடகாரனுக்கு. எனவே அவன் சேனாபதி மகனிடம் தான் அதற்கு சம்மதிப்பதாகவும், தன் சம்மதத்தை அரசனிடம் சென்று கூறிவிடுமாறும் கேட்டுக் கொண்டான். உடனே சேனாபதி மகன் மகிழ்ச்சியோடு ஆருணியைக் காணச் சென்றான்.

வருடகாரன் தங்கள் பக்கம் சேரச் சம்மதிப்பதாக ஆருணியிடம் கூறிவிட்டு, அதனால் தங்களுக்கு என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை விவரித்தான். ஆருணியின் கேடுகாலம் அவனுக்கு அருகில் நெருங்கி வந்து கொண்டிருந்ததோ என்னவோ சேனாபதி மகன் கூறியவுடனே ஆருணி அதற்கு மகிழ்ச்சியுடனே சம்மதித்து விட்டான். உடனே ஆருணி, தன் அரசவையைச் சேர்ந்த சகுனி கௌசிகன் என்னும் பெயரையுடைய அமைச்சன் ஒருவனையும் வேறு மூவரையும் அழைத்து உதயணனோடு வருடகாரன் பகைத்துக் கொண்டு தங்கள் பக்கம் சேர இருப்பதைக் கூறி, அவனுடைய மனக் கருத்தை அறிந்து அவனை அழைத்து வருமாறு ஆணையிட்டான். அவர்கள் தங்கள் அரசனின் ஆணையை மேற்கொண்டு சேனாபதி மகனுடன் வருடகாரனைக் காண்பதற்குப் புறப்பட்டனர்.

54. சேனாபதி பதவி

சேனாபதி மகனுடன் ஆருணியால் அனுப்பப்பட்ட சகுனி கௌசிகன் முதலிய நால்வரும் வருடகாரனைச் சந்திப்பதற்காக அவன் இருப்பிடம் வந்து சேர்ந்தனர். வருடகாரன் அவர்களை அன்போடு வரவேற்று இருக்கச் செய்துவிட்டுத் தன்னோடு மகத நாட்டிலிருந்து வந்த தாரகாரி என்பவனை மறைவாக வரவழைத்து அவன் மூலமாக, ஆருணியால் அனுப்பப்பட்ட சகுனி கௌசிகன் முதலியோர் தன்னைச் சந்திக்க வந்திருக்கிறார்கள் என்ற செய்தியை, உடனே உதயணனுக்குத் தெரிவித்து விட்டான். 'ஆருணிக்குப் பக்கபலமாக இருக்கும் முக்கியமான ஆட்களை அகப்பட்டவரை தொலைத்துவிட வேண்டும்' என்று உதயணனும் வருடகாரனும் முன்பே தங்களுக்குள் ஓர் இரகசியத் தீர்மானம் செய்து கொண்டிருந்தனர். அதற்காகவே வருடகாரன் தன்னிடம் வந்திருப்பவர்களைப் பற்றி உதயணனுக்குத் தாரகாரி மூலம் அவ்வளவு அவசரமாகச் சொல்லி அனுப்பினான்.

தாரகாரி வந்து சொல்லிய செய்தியைக் கேட்டதும் உதயணன், பிங்கலன் முதலிய வீரர்களைத் திரட்டி வருடகாரனின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். தண்ணீரில் ஒளியோடு துள்ளும் கெண்டை மீனைச் சமயம் பார்த்துக் கொத்தும் மீன் கொத்தியைப் போல உதயணனால் அனுப்பப்பட்ட வீரர்கள் வருடகாரனின் துணையைக் கொண்டு பரம இரகசியமாகச் சகுனி கௌசிகன் முதலியோர்களைச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றனர். சிறைப் பிடிக்கப்பட்டு வந்துள்ள அவர்களை இடவகனுடைய பொறுப்பின் கீழ் ஒப்பித்தான் உதயணன். சிறைப்பட்டவர்களை என்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே இடவகனிடம் உதயணன் தனியே கூறியிருந்ததான். 'தீமூட்டி அதனிடையே அவர்களை மாண்டு போகச் செய்ய வேண்டும்' என்பது ஏற்பாடு. இடவகன் அதற்கான செயல்களைச் செய்து சிறைப்பட்டவர்களை அழிக்க முற்பட்டான். அப்போது மாலை நேரம். அகப்பட்டுக் கொண்ட பகைவர்களுக்கோ, அதுவே அவர்களுடைய வாழ்க்கையின் அந்தி நேரம்.

இடவகன் தன் செயலை நிறைவேற்றப் போகின்ற தருணத்தில் உதயணன் அங்கே வந்தான். சகுனி கௌசிகன் முதலியவர்கள் மூலமாக, வருடகாரன் தனக்குப் பகைவன் தான் என்பதை மேலும் அழுத்தமாக ஆருணியை நம்பச் செய்வதர்காக, ஒரு சிறு சூழ்ச்சியை நடித்துக் காட்டும் கருத்துடனேயே அவன் அங்கு வந்திருந்தான். "இடவக! உட்பகை எவ்வளவு பொல்லாதது பார்த்தாயா? நம்முடைய நெருங்கிய நண்பன் போல் நேற்று வரை உறவு கொண்டிருந்த வருடகாரன், திடுமென்று ஆருணியின் பக்கம் போய்ச் சேர்ந்து கொண்டானே! எவ்வளவு பயங்கரமானது அவன் வஞ்சகம்?" என்று சகுனி கௌசிகன் முதலியவர்களும் கேட்கும்படியாகவே இடவகனிடம் உதயணன் கூறினான். இடவகன் வைத்த தீயிலிருந்து ஆருணியைச் சேர்ந்த எல்லோரும் மீள முடியாவிட்டாலும், இரண்டொருவர் தீயிலிருந்து எப்படியோ தப்பிச் சென்றனர். காலையிலேயே, தன் படைகளைக் கோசாம்பி நகரத்துக் கோட்டைக்கு மிக அருகிலே இருந்த ஒரு மலைத் தொடரின் அடிவாரத்திற்குக் கூட்டிச் சென்று, அங்கே பாசறையாகத் தங்கி இருந்து கொண்டான் உதயணன். தான் அவ்வாறு மலையடிவாரத்தை அரணாகக் கொண்டு தங்கியிருக்கும் செய்தியை ஆருணிக்கும் அவனைச் சேர்ந்தவர்கள் மூலமாகவே தெரியச் செய்தான். உதயணன் இவ்வாறு செய்த செயல்கள் எல்லாம், ஒவ்வொரு பயன் நிறைந்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டே இருந்தன.

'வருடகாரனைத் தேடி வந்த அமைச்சர்களைத் தான் வலிய சிறைப்படுத்தி வந்து கொன்றதனால் தனக்கும் வருடகாரனுக்கும் பகை என்பதை ஆருணி உறுதியாக நம்புவான். இந்த நம்பிக்கை அவனுக்கு ஏற்பட்டதும் உடனே வருடகாரனிடம் அபிமானம் பெருகும். அபிமானத்தினால் அவனிடம் பெரும் பதவி ஒன்றை நிர்வகிக்கும்படி ஒப்பிப்பான். வருடகாரனுக்கு அத்தகைய, பெரும் பதவி கிடைப்பது நாம் ஆருணியை வெல்வதற்குரிய அறிகுறியாகும். ஆருணியின் கோட்டைக்கு மிகவும் பக்கத்தில் இருந்து கொண்டே அவனோடு போரிட்டு அவனை வெல்வது அருமை. எனவே அவனுக்கு ஒரு போக்குக் காட்டுவது போல மலைப்புறமாகச் சென்று தாக்குவோம். வருடகாரன் தன்னுடைய தந்திரச் செயல்களால் ஆருணியைப் படைகளோடு நாம் தங்கியிருக்கும் மலைப்பகுதியில் ஆருணியின் படைகளைச் சிதறிவிடச் செய்து வென்றுவிடலாம்' என்று இவ்வாறெல்லாம் தனக்குள் பன்முறை எண்ணிப் பலாபலன்களை ஆராய்ந்து பார்த்த பின்பே உதயணன் இவ்வளவையும் செய்திருந்தான். உதயணன் எண்ணியது வீண்போகவில்லை.

தீயில் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பிச் சென்றவர்கள் ஆருணியை அடைந்து, தங்களுக்கு உதயணனிடம் நிகழ்ந்த யாவற்றையும் கூறினர். உதயணன் வருடகாரனின் மேல் அளவற்ற குரோதங் கொண்டிருப்பதையும், தன் படைத் தளத்தை மலைப்புறமாக மாற்றிக் கொண்டு போய்விட்டதையும் அவர்கள் மூலமாக ஆருணி அறிந்தான். இந்த மட்டிலும், போன அமைச்சர்களில் இவர்களாவது தீயில் சாகாமல் பிழைத்து வந்தார்களே என்று அவனுக்கு மகிழ்ச்சி ஒரு புறம். 'எப்படித் தப்பினர்' என வியப்பு ஒருபுறம்! தன்னுடைய காதில் அந்தச் செய்திகளை வந்து கூற வேண்டும் என்பதற்காகவே அவர்களை வேண்டுமென்றே உயிரோடு தப்பவிட்டு அனுப்பியிருக்கிறான் உதயணன் என்பது அவனுக்கு எப்படித் தெரியமுடியும்? இந்த நிலையில், போனவர்களை உதயணன் சிறை செய்து தீயிட்டதற்காகத்தான் மிகவும் வருந்துபவன் போல ஆருணியின் ஆறுதலைப் பெறுவதற்காக நடித்தான் வருடகாரன். 'உண்மையாகவே உதயணனைப் பகைத்துக் கொண்டு வருடகாரன் தங்கள் பக்கம் சேர்ந்திருக்கிறான்' என்று வந்தவர்கள் மூலமாகவும் அறிந்த போது, ஆருணிக்கு அவன் மேல் உண்மையான பற்றும் விருப்பமும் ஏற்பட்டன. தன் படைகளோடு அரசவையைச் சேர்ந்த அமைச்சர்கள், தளபதிகளுடனும் வருடகாரனைச் சந்திப்பதற்காக, அவன் இருப்பிடத்திற்கு ஆருணியே தேடிக் கொண்டு நேரிற் சென்றான்.

ஆருணியை வருடகாரன் வணங்கி, மதிப்போடு வரவேற்றான். வருடகாரன் கண்ணீர் சிந்தியவாறே, உதயணனால் சகுனி கௌசிகன் முதலியவர்கள் தீயிலே கொல்லப்பட்ட செயலுக்காகத் தன் வருத்தத்தை ஆருணியிடம் தெரிவித்துக் கொண்டான். "இந்த அடாத செயலுக்காகவாவது நாம் உடனே உதயணனைப் பழி தீர்த்துக் கொள்ள வேண்டும். அவன் இப்போது மலைப்பக்கத்தை அரணாகக் கொண்டு அங்கே படைகளோடு தங்கியிருக்கின்றானாம். உடனே நாம் படையோடு அங்கே சென்று அவனைச் சின்னா பின்னப்படுத்த வேண்டும்!" என்று போலி ஆவேசத்தோடும் ஆத்திரத்தோடும் வருடகாரன் கூறியபோது, ஆருணி அதை மெய்யென்றே நம்பி, உடனே அப்போதே படையோடு புறப்படச் சம்மதித்து விட்டான். அதோடு பதினாறாயிரம் வீரர்கள் அடங்கிய தன் பெரிய படையை நடத்திச் செல்லும் சேனாபதிப் பதவியை, அப்போதே உடனடியாக வருடகாரன் பொறுப்பில் அவனைப் பூரணமாக நம்பி அளித்தான் ஆருணி. படைகள் உதயணன் தங்கியிருக்கும் மலையடிவாரத்தை அடைவதற்குள் இடையே ஒரு பெரிய காட்டாற்று வெள்ளத்தையும் கடக்க வேண்டியிருந்தது. அதற்கு வேண்டிய படகுகளையும் உடனே ஏற்பாடு செய்தனர். வருடகாரன் தன் பொறுப்பையும் சேனாபதிப் பதவியின் பெரிய கடமையையும் உணர்ந்து கொண்டு நடிப்பவனைப் போன்று படைகளை முறைப்படுத்தி, மறுகரைக்குப் படகுகளில் ஏற்றி அனுப்பினான். படைகள் யாவும் மறுகரையை அடைந்ததும், வருடகாரன் ஆருணியை அணுகி வணக்கத்தோடு, "இனிமேல் என்ன செய்யலாம் அரசே!" என்று விநயமாகக் கேட்டான். ஆருணி அவனுக்கு மிகுந்த சிறப்புக்களை அளித்துத் தன் பக்கலில் அன்போடு அமர்த்திக் கொண்டான். தன் சூழ்ச்சிக் கருத்தை முடிப்பதற்கு ஏற்ற பதவியே தனக்குக் கிடைத்திருக்கிறது என்ற திருப்தியோடு சேனாபதியாக நடித்தான் வருடகாரன்.

55. படைச்செலவு

வருடகாரனின் தலைமையில் ஆருணியரசனின் படைகள், படகுகள் மூலமாக வெள்ளத்தைக் கடந்து மறுகரையிற் சேர்ந்த பின்பு, சென்ற இடம் வஞ்சகாந்தை, காந்தவதி என்னும் இரண்டு நதிகள் ஒன்று கூடும் சங்கமமாகும். இரண்டு நதிகளும் சங்கமமாகும் அந்த இடத்திற்கு அப்பால் அடர்ந்த பெருங்காடு பரந்து இருந்தது. அந்தக் காட்டில் ஆருணிக்கு வேண்டிய வேடர்கள் பலர் இருந்தனர். ஆற்றுக்கு மறுகரையில் வருடகாரனும் ஆருணியும் அமர்ந்து கொண்டிருந்த போது, அந்தக் காட்டு வேடர்கள் யாவரும் தங்கள் தங்கள் தலைவர்களின் கீழ் அணிவகுத்து வந்து ஆருணியின் படைகளோடு ஒன்று சேர்ந்து கொண்டனர். படையின் வன்மை வேடர்களால் பெருகுவது கண்டு ஆருணி மகிழ்ந்தான். 'தங்கள் சூழ்ச்சி தரைமட்டமாகி விடுமோ?' என்று வருடகாரன் உள்ளூறத் தயங்கினான். இவர்கள் இவ்வாறு படையுடனே தங்கியிருந்த வஞ்சகாந்தை-காந்தவதி நதிகளின் சங்கமத்துக்கு அப்பால் சிறிது தொலைவிலேயே, தவதிசயந்தம் என்னும் மலைத் தொடர் இருந்தது. இந்த மலைத் தொடரின் அடிவாரத்தை அரணாகக் கொண்டே உதயணனின் படை தங்கியிருந்தது. ஆருணியின் பக்கம் படை மிகுதியாகி வருவதைக் கண்ட வருடகாரன், எவ்வாறேனும் சூழ்ச்சி புரிந்து இந்தப் படைகள் ஒன்றாகச் சென்று தாக்காமல் தனித்தனியே இவற்றை உடைத்து விட வேண்டும் என்று தன் மனத்திற்குள் கருதினான்.

"பாஞ்சாலர் வேந்தே! மாரிக் காலத்தில் மேலும் மேலும் மழை பொழிந்து கொண்டிருக்கும் போது நீரைப் போகவிடாமல் ஒரே குளத்தில் நிரப்பினால் குளம் தானே உடைந்து போகும். கேவலம்! மிகக் குறைந்த படைகளோடு மலையில் பதுங்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசனை எதிர்க்க, இவ்வளவு படைகளையும் ஒன்றாக ஒரே திசையில் நாம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில்லை. உதயணனுக்கு உதவியாக அறிவில்லாத மலைவாழ் வேட்டுவர்கள் எவரேனும் அங்கே சேர்ந்தாலும் சேர்ந்திருக்கலாம். அப்படி இருந்தால் அவர்களையும் எதிர்க்க வேண்டும். ஆகையால் படைகளைப் பல பிரிவாகப் பிரித்து மலைத் தொடரின் பல திசைகளிலும் போக்க வேண்டும்" என்று ஆருணியை நோக்கிக் கூறினான் வருடகாரன். வருடகாரன் கூறியபடியே செய்வதற்கு ஆருணி சம்மதித்து விட்டான். வருடகாரனின் மேல் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை. 'வருடகாரன் தன்னிடம் சொல்லுவனயாவும் தனக்கு நன்மையே தரும்' என்று உறுதியாக நம்பினான் அவன்.

ஆருணியின் உடன்பாட்டைப் பெற்றவுடனே வருடகாரன் படைகளைப் பல கூறுகளாகப் பிரித்தான். அவ்வாறு பிரித்த உடனே தன் ஆள் ஒருவன் மூலமாக, 'எந்தெந்தப் படை எப்படி வருகிறது? அதை எவ்வாறு நிர்மூலமாக்கி விடலாம்' என்பதை உதயணனுக்கும் தானே முன்னறிவிப்பாகச் சொல்லி அனுப்பிவிட்டான். தவதிசயந்த மலையில் போரை எதிர்நோக்கிப் படையோடு வந்து தங்கிக் காத்திருக்கும் உதயணனுக்குக் கந்தவதி நதியின் சங்கமமுகத்திலிருந்து வருடகாரன் அனுப்பிய செய்தி விரைவிற் கிடைத்தது. அதையறிந்து உதயணன் தன் படைகளை அதற்கு ஏற்றபடி அணி வகுத்துத் தனித்தனியே மலை இடுக்குகளிலே நிறுத்தி வைத்தான். மகத நாட்டிலிருந்து வருடகாரனைப் போலவே தருசகனால் தன்னுடன் அனுப்பப்பட்டிருந்த தருமதத்தன் நுழைவாயிலிலே படைகளோடு மறைவாக இருக்கும்படி செய்தான். அங்கங்கே மறைவான புதர்களிலே பகைவர்களை அவர்கள் கண்ணுக்குத் தெரியாமலே சூறையாடுவதற்காகப் பல வாட்படை வீரர்களைத் தொகையாக மறைந்து இருக்கச் செய்தான்.

வருடகாரன் என்ற பாகனால் தந்திரமாகத் துரத்திக் கொண்டு வரப்படுகின்ற ஆருணி என்னும் மதயானையைப் பிடிப்பதற்குரிய இவ்வளவு ஏற்பாடுகளையும் உதயணன் முன்னேற்பாட்டுடனும் கவனத்துடனும் செய்து வைத்துக் கொண்டான். இங்கே இவ்வாறிருக்க நதிக்கரையில் வருடகாரனின் விருப்பப்படி படைகளைத் தனித்தனிக் குழுவாகப் பிரிக்கச் சம்மதித்த ஆருணி, மகிழ்ச்சியோடு அவன் கூறும் ஒவ்வொரு செயலுக்கும் ஒப்புதல் கொடுத்துக் கொண்டிருந்தான். 'கெடுமதி கண்ணுக்குத் தெரியாது' என்ற நிலையில் இருந்தான் அவன். படைகள் புறப்படுவதற்கு முன்னால் பல தீய நிமித்தங்கள் உண்டாயின. ஆருணியின் படையைச் சேர்ந்த மந்தரம் என்ற யானைக்கு மதம் பிடித்து அது தறிகெட்டு ஓடியது. படையினரைச் சேர்ந்த சில முரசங்கள், சில முறை அடித்ததுமே தோல் கிழிந்து கெட்டுப் போயின. கொடிகள் அடிக்கடி நிலை சாய்ந்து மண்ணில் வீழ்ந்தன. ஓர் அரசன் தன் படைகளோடு போருக்குப் புறப்படும் நேரத்தில் யானை தறிகெட்டு ஓடுவதும், வெற்றியை முழக்க வேண்டிய மங்கலமான முரசங்கள் தோல் கிழிவதும், கம்பீரமாக வீசிப் பறக்க வேண்டிய கொடிகள் கால் இற்றுத் தரையிலே சாய்வதும், எவ்வளவு அமங்கலமான நிகழ்ச்சிகள்? ஆனாலும் ஆருணி இவற்றைப் பொருட்படுத்தவும் இல்லை; இவற்றைக் கவனித்து மனத்தில் தவறாகக் கருதவும் இல்லை.

வருடகாரன் வகிர்ந்த கோட்டைச் சிறிதும் மீறாமல், அவன் சொன்னபடி இயங்கும் பொம்மையாக அல்லவா இப்போது ஆருணி இருக்கிறான்? ஆனால் ஆருணியின் அமைச்சனாகிய பூரண குண்டலன் என்பவன், இந்தத் தீய சகுனங்களை எல்லாம் கண்டு மனம் நடுங்கி, "அரசே! இப்போது படையோடு புறப்படுவது நமக்கு நல்ல பயனைத் தரும் என்று தோன்றவில்லை. அமங்கலமான தீய நிமித்தங்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன" என்று அறிவுரை கூறிப் பார்த்தான். "இப்படியே நகரத்துக்குத் திரும்பிச் சென்றுவிட்டுப் படையெடுப்பை ஒத்திப் போடலாம்" என்றும் அந்த அமைச்சனே மேலும் கூறினான். அதைக் கேட்டு ஆருணியும் கொஞ்சம் மனம் தளர்ந்து யோசிக்க ஆரம்பித்தான். வருடகாரனுக்கு உடனே ஒரு தந்திரமான எண்ணம் உண்டாயிற்று. அதனால் ஆருணியைப் படையெடுப்புக்குச் சம்மதிக்க செய்ய முடியும் என்று அவன் எண்ணினான்.

ஆருணி படையெடுப்பைச் சட்டென்று நிறுத்திவிட்டால் அதுவரை உதயணனும் தானும் செய்திருந்த சூழ்ச்சிகளெல்லாம் வீணாகி விடுமோ என்ற பயம் வருடகாரனுக்கு. எனவே, "அரசே! இந்தத் தீய நிமித்தங்களைக் கண்டு தங்கள் அமைச்சர் பூரண குண்டலர் தவறாகப் புரிந்து கொண்டு பயப்படுகிறார். இவை நமது பகையாளிகளின் அழிவைக் குறிக்குமே அன்றி, நாம் கனவிலும் இவற்றால் நமக்கு அழிவு நேரிடுமென அஞ்ச வேண்டியதில்லை! இந்தத் தீய சகுனங்கள் உதயணனின் அழிவையே கூறுகின்றன" என்று வருடகாரன் கூறினான். உடனே ஆருணி, "ஆம்! வருடகாரரே! நீர் கூறியபடிதான் இருக்க வேண்டும். அதுதான் சரி. நாம் இதற்குச் சிறிதும் அஞ்ச வேண்டியதே இல்லை. நம்படை தாமதமின்றிப் புறப்படட்டும்" என்று வருடகாரனுக்கு ஒப்பாகப் பேசினான். உடனே பூரண குண்டலன் மேலே பேசத் தோன்றாமல் வாய் ஒடுங்கிப் போனான். வருடகாரன் படைகளோடு புறப்பட்டான். ஆருணியும் தவதிசயந்த மலையில் தன் வாழ்வின் விதியை நிர்ணயித்துக் கொள்வதற்கோ என்னவோ, நம்பிக்கையோடு விரைந்து படையோடு சென்றான்.

56. வெற்றி முழக்கம்

கந்தவதி நதியின் சங்கம முகத்திலிருந்து புறப்பட்ட படை தவதிசயந்த மலையின் அடிவாரத்தை அடைவதற்கு மிகுந்த நேரம் ஆகவில்லை. ஏற்கனவே வருடகாரன் மூலமாகப் படை வருகின்றது என்ற செய்தி உதயணனுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்ததனால் இருதரப்புப் படைகளும் சந்திப்பதற்கும் தாமதமாகவில்லை. உடனே போர் உக்கிரமாகத் தொடங்கி விட்டது. தன் படைகள் மலையை நெருங்குவதற்குள்ளேயே, எதிரிப் படைகள் தனித்தனியே எதிர் வந்து மலை இடுக்குகளில் இருந்தவாறே தாக்குதலைக் கண்டதும் ஆருணிக்கு ஒரே ஆச்சரியமாகப் போயிற்று! 'சொல்லி வைத்தாற் போல உதயணன் இவ்வளவு முன்னேற்பாடாக இருக்கிறானே! இவனுக்கு இது எவ்வாறு சாத்தியமாயிற்று?' என்பதே ஆருணியின் வியப்பிற்குக் காரணம். எவ்வளவோ சூழ்ச்சிகளைச் செய்திருந்தும் இரண்டு தரப்புப் படைகளும் அங்கங்கே கலந்து போர் செய்கின்ற அந்த நிலையில், 'முடிவு என்ன ஆகுமோ?' என்றும் சற்றே சிந்தனை செய்த உதயணன், தானே குதிரை மேல் ஆரோகணித்து வாளுடனே சமரிற் குதித்தான். அதைக் கண்ட ஆருணி அரசனும், காந்தாரகன், சாயன், சூரன், பரிசேனன் என்ற தன்னைச் சேர்ந்த அரசர்கள் நால்வரோடு தானும் போரில் இறங்கினான். இருதரப்பிலும் போரில் அழிவு சமமாகவே நிகழ்ந்து கொண்டிருந்தது. கையில் சுழற்றி வீசும் ஒளி வாளுடன் குதிரை மேல் தனி ஒருவனாகத் தன் படையைச் சூறையாடிக் கொண்டிருக்கும் உதயணனை நான்கு அரசர்களோடு தானும் சேர்ந்து கொண்டு ஐவராக எதிர்த்து வளைக்க முற்பட்டான் ஆருணி. வேறு பல வீரர்களுக்குத் தான் ஒருவனாகவே தாக்குதலுக்கு ஈடுகொடுத்துக் கொண்டிருந்த உதயணன், அதோடு இவர்கள் ஐவரும் தன்னை நெருங்குவதையும் சமாளிக்க முயன்றான். நல்லவேளையாக அந்தச் சமயத்தில் உதயணனின் தம்பியாகிய கடக பிங்கலர்கள் அவன் பக்கம் உதவிக்கு வந்து சேர்ந்தனர். கடக பிங்கலர்களின் வாள் வீச்சுக்கு ஆற்றாமல் ஆருணியைச் சேர்ந்த காந்தாரகன் என்ற அரசன் முதல் களப்பலியாகப் போரில் மாண்டு போனான். உடனே ஆருணிக்கு மிகுந்த சினம் மூண்டுவிட்டது.

"ஆருணி பிறந்த நாளும் நட்சத்திரமும் அவன் பிறரை அழிக்கும் வல்லமையையே அவனுக்குக் கொடுப்பவை. பிறரால் அவன் ஒரு நாளும் அழியமாட்டான். அழிக்கவும் முடியாது!" என்று ஆருணி தன்னைப் பற்றித் தானே வஞ்சினங் கூறிவிட்டு ஆத்திரத்தோடு உதயணனை நெருங்கினான். ஆருணி வஞ்சினங் கூறிக் கொண்டே தன் பக்கம் நெருங்குவதைக் கண்டதும் அதுவரை போர் முறை மீறாமல் அமைதியாகப் போரிட்டுக் கொண்டிருந்த உதயணனுக்கு மிகுந்த கோபம் உண்டாகிவிட்டது. உதயணனின் கோபம் ஆருணியைப் போல அவனுடைய கண்களிலே புலனாகவில்லை. கைகளிலே புலனாயிற்று. விசித்திரமான வேகத்தோடு சுழன்று சுழன்று மின்னும் அவன் கை வாளிலே புலனாயிற்று.

"ஆருணி! உன் தீய உயிரை உண்ண வேண்டுமென்ற எனது வாளின் ஆசை தணிய வேண்டும். அந்த ஆசையை நிறைவேற்றாமல் என் வாளை நான் ஏமாற்றமாட்டேன்" என்று சிரித்துக் கொண்டே கூறினான் உதயணன். உதயணன் இவ்வாறு கூறியதைக் கேட்ட ஆருணி, அதுவரை வேலாலும் ஈட்டியாலும் செய்து கொண்டிருந்த தன் போர் முறைகளை நிறுத்திக் கொண்டு, உதயணனைப் போல் ஒரு கையில் வாளும் மற்றொரு கையில் கேடயமும் தாங்கி நேருக்கு நேர் உதயணனை எதிர்ப்பதற்காகத் தன் யானையை முன்னே செலுத்தினான். உதயணனும் வாளை வீசிச் சுழற்றியவாறே ஆருணியின் யானைக்கு அருகே தன் குதிரையைச் செலுத்தினான்.

பேரரசர்களாகிய இருவர் வாளும் மோதலாயின. இந்தச் சந்தர்ப்பத்தில், "மாற்றரசனாகிய பெருவேந்தன் ஒருவனைக் கொல்லும் வீரப் பெருமையை அடியேனுக்குக் கொடுங்கள் பிரபு! அதை நான் செய்கிறேன்" என்று கூறிக் கொண்டே தருமதத்தன், உதயணன் பக்கம் வந்து சேர்ந்து கொண்டான். சிறிது நேரப் போரிலேயே ஆருணி தளர்ந்து சோர்ந்து விட்டான். அதை அவன் துரதிர்ஷ்டம் என்று தான் கூறவேண்டும்! அவன் ஏறியிருந்த யானையும் அவன் வசப்படாமல் தட்டுக் கெட்டு விலகிப் போக ஆரம்பித்து விட்டது. அந்த நேரத்தில் தருமதத்தனுடைய கூரிய வாள் ஆருணியின் மார்பைப் பிளந்தது. ஆருணி விண்ணுலகடைந்தான். வஞ்சினத்தோடு போரில் இறங்கிய அவன் நீண்ட நேர கடினமான போரைக் கூடச் செய்யவில்லை; செய்யவும் முடியவில்லை. விதி அவனை அதற்குள் அழித்துவிட்டது. ஆருணியின் மரணத்திற்குப் பின் மிகக் குறுகிய நேரத்துப் போரிலேயே வெற்றி உதயணனை வந்தடைந்துவிட்டது.

வருடகாரனின் சூழ்ச்சி மிகுந்த உதவிகள் தாம் இவ்வளவிற்கும் காரணம். ஆனால் ஆருணிக்கு அவன் சாகும் வரை 'வருடகாரன் உதயணனுக்கு எதிராக நடித்துத் தன் பக்கமிருந்தது ஒரு சூழ்ச்சி நாடகம்' என்ற இரகசியம் தெரியவே தெரியாது. உதயணன் வெற்றியடைந்ததைக் கோசாம்பி நகரம் எங்கும் அறிவிப்பதற்காக யானை மேல் ஒரு வீரனைப் பெரிய முரசு ஒன்றுடனே அமர்த்தி எல்லா இடங்களிலும் அந்த மங்கலச் செய்தியை வெற்றி முழக்கம் செய்து வருமாறு அனுப்பினர் நண்பர். முரசு நகரமெங்கும் வெற்றி முழக்கம் செய்யலாயிற்று. வருடகாரன், தருமதத்தன், தாரகாரி, இடவகன், எல்லோரும் உதயணனோடு வந்து ஒன்று சேர்ந்த பின், ஆருணி தங்கள் பகைவன் ஆனாலும் அவனுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கடன்களை முறையாகச் செய்துவிட வேண்டுமென்று அவன் கூறினான். நண்பர்களும் அதற்கு இசையவே, ஆருணியின் சடலத்தை ஈமக்கடன்கள் இயற்றி அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு முடிந்தது. ஆருணி முறைப்படி செய்யப்பட வேண்டிய ஈமக்கடன்களைச் செய்யப் பெற்றான்.

அழிந்தது போக எஞ்சிய ஆருணியின் படைகளைத் தன் வசத்தினவாக ஆக்கிக் கொண்டு உதயணன் முதலியவர்களைப் பின்னால் வருமாறு கூறிவிட்டுக் கோசாம்பி நகரத்துக் கோட்டை வாசலைத் திறப்பதற்காக முன்னால் சென்றான் வருடகாரன். ஆனால், கோட்டைக்குள்ளே இருந்தவர்கள் உட்புறமாக கதவை அடைத்துத் தாழிட்டுக் கொண்டு திறக்க மறுத்து விட்டனர். "மக்களே! நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் பழைய அரசனாகிய உதயணன், ஆருணியை வென்று, கோசாம்பி நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். ஆகவே பழைய அரசன் மீண்டும் திரும்பி வருகிறான் என்ற மகிழ்ச்சியோடு கோட்டைக் கதவைத் திறவுங்கள்" என்று உள்ளே இருப்பவர்களுக்கு வருடகாரன் அறிவித்தான். வருடகாரன் இவ்வாறு அறிவித்த பின்பும், கோட்டைக்குள் இருந்தவர்கள் கதவைத் திறக்கவில்லை.

'உதயணன் வெற்றி அடைந்துவிட்டான்; கதவைத் திறவுங்கள் என்று கூறுபவன், உதயணனுக்குப் பகைவனாக மாறிய வருடகாரன் அல்லவா? இவனை நம்பி நாம் எவ்வாறு கதவைத் திறக்கலாம்? என்ன சூழ்ச்சி நடக்குமோ?' என்று அவர்கள் அஞ்சினர். இதற்குள் உதயணன், இடவகன் முதலியவர்களும் அங்கே கோட்டை வாசலுக்கு வந்து சேர்ந்தனர். எல்லோரும் கதவு திறப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் இது நிகழ்ந்தது.

"உதயணன் வந்திருக்கிறான் என்பதற்கு அடையாளமாக அவனுடைய இராச முத்திரையை உள்ளே அனுப்பித்தால் கதவை நாங்கள் உடனே திறந்து விடுகிறோம்" என்று உள்ளே இருந்தவர்கள் கூறி அனுப்பினார்கள். உதயணன் இதைக் கேட்ட உடனே இடவகனைப் பார்த்து, "இடவக! கோசாம்பி நகரத்து மக்கள் உன்னை நன்கு அறிவார்கள். நீ வந்திருக்கிறதாகச் செய்தி சொல்லி அனுப்பு. கதவு உடனே திறக்கப்படலாம்" என்று கூறினான். இதைக் கேட்ட இடவகன் உதயணனின் இராச முத்திரையோடு கூடிய கொடி முதலிய சின்னங்களைக் கையில் ஏந்திக் கொண்டு கோட்டை மதிற்சுவரில் ஏறி நின்றான். இடவகனை உதயணனின் சின்னங்களோடு மதில்மேலே கண்டதும் கோசாம்பி நகரத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்து, வெற்றி ஆரவாரத்தோடு கோட்டைக் கதவைத் திறந்தனர்.

உதயணனையும் வீரர்களையும் கோசாம்பி நகர மக்கள் முகமலர்ச்சியோடு விரும்பி வரவேற்றுக் கொண்டிருக்கும் போது ஆருணியைச் சேர்ந்தவனாகிய கும்பன் என்னும் சூழ்ச்சிக்காரன் அங்கங்கே மக்கள் மனங்களை மாற்ற முயன்று கொண்டிருந்தான். உடனே இது தெரிந்த உதயணன் வீரர் ஓடிச் சென்று, "உன் போன்றவர்கள் வேறு யாரேனும் இந்த நகரத்தில் இருந்தால் அவர்களுக்கும் இந்தக் கதிதான்?" என்று கூறி அவனைப் பிடித்துக் கொலை செய்தனர். உதயணன் பழையபடி கோசாம்பி நகரத்து ஆட்சியை மேற்கொண்டதும் அச்செய்தி நாடெங்கும் பிரகடனம் செய்யப்பட்டது. நாடு திருப்தியுற்றது. உதயணன் வெற்றியில் தங்கள் மனத்தின் வெற்றியைக் கண்டனர் மக்கள்.

57. மீண்ட அரசாட்சி

உதயணன் கோசாம்பி நகரத்து அரசாட்சியை மீண்டும் பெற்று ஆளத் தொடங்கியது, நாட்டுக்குடி மக்களுக்கும் பிறர்க்கும் அளவற்ற மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது. மக்களுக்கு ஏற்பட்ட அந்த மகிழ்ச்சியைப் போலவே பழம்பெரும் உரிமையாகிய அரசாட்சியை மீண்டும் அடைந்து விட்டோம் என்ற உவகையும் பெருமிதமும் கொண்டிருந்தான் உதயணன். அவனுடைய அந்த உவகைக்கும் பெருமிதத்துக்குமிடையே நன்றியும் ஒருபுறம் சுரந்து கொண்டிருந்தது. தருசக மன்னனால் தனக்குத் துணை செய்வதற்காகத் தன்னோடு அனுப்பப் பெற்ற வருடகாரன் முதலிய பெரு வீரர்களின் உதவிதான் தனக்கு வெற்றியளித்தது என்பதை அவன் உறுதியாக நம்பினான். தன் படைபலம் குறைந்திருந்தும், படை பலத்தாலும் வசதிகளாலும் நிறைந்த நிலையிலிருந்த ஆருணியைத் தன்னால் வெல்ல முடிந்தது என்றால் வருடகாரன் கூறிய அரிய சூழ்ச்சிகளாலும், செய்த தந்திரச் செயல்களாலுமே அது சாத்தியமாயிற்று என்பதை நன்கு உணர்ந்தான் உதயணன். எனவே, தனக்கு உதவிய அவர்களுக்கு உள்ளன்போடு நன்றி செலுத்தி அனுப்புவதை அவன் மறந்து விடவில்லை.

வருடகாரன், தருமதத்தன் முதலிய தருசகனின் படைத் தலைவர்கள், இராசகிரிய நகரத்திற்குத் திரும்பிப் புறப்படுவதற்கு முன்னால் உதயணனிடம் விடை பெற்றுச் செல்வதற்கு வந்த போது, தன் உள்ளம் நிறைந்த நன்றிக் கடனைத் தந்து நிறைவேற்றினான் உதயணன். வருடகாரனை மார்புறத் தழுவி நன்றி செலுத்திய பின் அவனுக்கு, தான் ஏறிக் கொண்டிருந்த பட்டத்து யானையையும் தன் மார்பை அலங்கரித்துக் கொண்டிருந்த விலையுயர்ந்த ஆபரணங்களிற் சிலவற்றையும் உதயணன் அன்பளிப்பாக நல்கினான். தருமதத்தனை அன்போடு அவன் தோள்மேல் கைதழுவியவாறு பாராட்டிக் குருதிநிற எழுத்துக்களாலான ஒரு பாராட்டு இதழையும், ஒரு யானையையும், பத்துச் சிற்றூர்களையும் அவனுக்குப் பரிசுகளாக அளித்தான். இவ்வாறே மகத நாட்டிலிருந்து தனக்குத் துணையாக வந்திருந்த படைத்தலைவர்கள் யாவருக்கும் அவன் தன் நன்றியையும் அன்பளிப்பையும் மனப்பூர்வமாகக் கொடுத்தனுப்பினான். இதைச் செய்து முடித்த பின்புதான் அவன் மனத்தில் பூரண அமைதியும் திருப்தியும் நிறைந்து நிலவின.

ஆருணியை வேருடன் அழித்துக் கோசாம்பி நகரத்துக் கோட்டைக்குள் நுழைந்த உடனேயே உதயணன் அந்த நகரத்து அரசனாகவும், ஆட்சிப்பொறுப்பு அவனுடையதாகவும் ஆகிவிட்டது. என்றாலும், பல நாள்களுக்கு அப்பால் அவன் மீண்டும் அரியணையில் ஏறும் அந்த நன்னாளை ஒரு பெரிய திருவிழாவாகக் கொண்டாட விரும்பினர் கோசாம்பி நகரத்துப் பெரியோர். உதயணன் அரியணை ஏறும் அந்த விழா நாளை, ஒரு புதிய முடிசூட்டு விழா நாளைப் போலவே கொண்டாட வேண்டுமென்பது அவர்கள் கருத்து, எனவே, ஒரு நல்ல நாளில், நகரை வலம் வந்து மக்களுக்குக் காட்சி கொடுத்தபின் அரியணை ஏறச் செய்யலாம் என்று அவர்கள் ஏற்பாடு செய்தனர். குறித்த நாளில் எல்லா வகை அலங்காரங்களும் சிறப்புக்களும் தோன்ற, உதயணன் கோசாம்பி நகரின் அழகிய பெரு வீதிகளில் பரிவாரமும், மக்களும், பெரியோர்களும் புடைசூழ, வீதியுலா வந்தான்.

கருமேகத்திற்கு மேலே வெண்மதி போலப் பெரியதொரு யானையின் மேலே வெண்கொற்றக் குடை நிழல் செய்ய உதயணன் உலா வந்த காட்சி, காணப் பேரின்பம் பயப்பதாக இருந்தது. மதியின் நிலவுக் கதிர்கள் போல அவனுக்கு இருபுறமும் வெண் சாமரைகள் வீசப்பெற்றன. கங்கையாறு கடலோடு கலப்பது போல மக்களின் ஆரவார ஒலியோடு சங்கு, முரசு முதலிய வாத்தியங்களின் ஒலியும் கலந்து ஒலித்தன. "உதயணன் வாழ்க!" என்ற வாழ்த்தொலி வீதிகளிலிருந்து தோன்றி, நாற்றிசைகளையும் எட்டி அளந்தது. வீடுகளின் மாடங்களிலிருந்தும் கோட்டங்களின் கோபுரங்களிலிருந்தும், பெண்களும் முதியோர்களும் மலர்களை மழைபோலப் பொழிந்தனர். இவ்வாறே எல்லா வீதிகளையும் கடந்து உதயணன் தன் அரண்மனையின் தலைவாயிலாகிய தோரண வாயிலையடைந்தான். இறந்து போன ஆருணியின் மனைவி மக்களிற் சிலர் 'இனி ஏது செய்வது?' என்று மயங்கி ஒன்றும் செய்யத் தோன்றாத துயரக் குழப்பத்தோடு அங்கேயே அரண்மனையினுள் இருந்து வருகிறார்கள் என்ற செய்தி அப்போது உதயணனுக்குத் தெரிய வந்தது. உண்மையில் அவர்கள் நிலை அவனுக்கு மனநெகிழ்ச்சியையும் இரக்கத்தையுமே அளித்தது. ஆகையால் அவர்களுக்கு வேண்டிய பொருளை அளித்து விட்டு அவர்கள் வசிப்பதற்கும் வேறு இடங்கள் அமைத்துத் தரச் செய்தான் அவன். ஆருணி தனக்குப் பகைவனாக இருந்த குற்றத்திற்காக, அவன் மனைவி மக்களையும் நொந்து போயிருக்கும் இந்த நிலையில் துன்புறுத்துவது முறையல்ல என்று எண்ணியே உதயணன் அவர்களுக்கு இவ்வாறு உதவி செய்து அனுப்பினான். பகைவனுடைய உற்றார் மேலும் இரக்கம் பாராட்டும் அவனது இந்த இயல்பைக் கண்டோர் வியந்துப் போற்றினர். பின்பு உலா வந்த பெரியோர்களுடனும் அமைச்சர், சுற்றத்தினர், நண்பர் முதலியோர்களுடனும் அரண்மனையினுள்ளே உதயணன் நுழைந்தான்.

உதயணன் ஆட்சிக்கு உட்பட்ட பழைய சிற்றரசர்கள் எல்லாரும், மீண்டும் அவன் நாட்டை ஆளத் தொடங்குவதை அறிந்து மனமகிழ்ச்சியோடு வந்திருந்தனர். நல்ல மங்கல நேரத்தில் அவன் அமைச்சர், நண்பர், பிற அரசியலாளர்கள் சூழ அரியணையில் ஏறி அமர்ந்தான். பருவத்தாலும் அறிவாலும் மூத்த பெரியோர்களும் அறிஞர்களும் அவனைப் பற்பல ஊழிகள் வாழுமாறு வாழ்த்தினர். சிற்றரசர்கள் திறைப் பொருள்களையும் அன்பளிப்புகளையும் அவனுக்கு அடியுறையாக வழங்கினர். பழைய குடிமக்களில் உதயணனோடு நெருங்கிய தொடர்புடையவர் அவனை வந்து கண்டு வணக்கத்துடனே தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டுச் சென்றனர். முன்பு ஆருணியால் பல வகையிலும் துன்ப முற்றிருந்தவர்கள், உதயணனை நேரிற் கண்டு 'இனிமேல் தங்களுக்கு எந்நாளும் துன்பமில்லை' என்று தெரிவித்து விட்டுச் சென்றனர். சிறையில் ஆருணியால் கைதியாக வைக்கப்பட்டிருந்தவர்கள் விடுதலை அடைந்தனர். எங்கும் மகிழ்வும் திருப்தியும் களிப்புடனே கலந்து தென்படலாயின. முன்பு ஆருணியின் ஆட்சிக் காலத்தில் கோசாம்பி நகரத்து மக்கள் அடைந்திருந்த பல்வகைத் துன்பங்களைப் படிப்படியாக நீக்கி அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதைத் தனது முதற் கடமையாகக் கொண்டான் உதயணன்.

'இது மற்றோர் அரசனுக்குரிய நாடு தானே! நான் ஆளக் கொடுத்து வைத்தது எவ்வளவு நாளோ? அதுவரை நமக்குத் தோன்றியவாறு எல்லாம் இதை ஆளுவோம்' என்று எண்ணித் தன் மனம் போன போக்கில் கொடுங்கோல் ஆட்சி நடத்தியிருந்தான் ஆருணி. புதிதாக மக்கள் பல வரிகளைச் செலுத்த வேண்டும் என்று அவன் இட்டுவிட்டுச் சென்றிருந்த கட்டளைகள் உடனே உதயணனால் நீக்கப்பெற்றன. ஆருணியின் வன்முறை ஆட்சியை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவன் ஆள்கின்ற காலத்திலேயே கோசாம்பி நகரத்து மக்கட்கு இருந்த போதிலும், அது பெற்றோர்களிடம் காவலிலுள்ள கன்னிப் பெண் கண்ட காதல் கனவு போல வெளியிட முடியாததாகவே கழிந்து போய் விட்டது. எனவே ஆருணியின் காலத்தில் கொடுங்கோலாட்சியால் மக்களடைந்த துன்பத்திற்கு ஆறுதல் போல அமைந்தது, உதயணன் இப்போது ஆளத் தொடங்கிய விதம்.

கவனிப்பார் இன்மையாலும் ஆட்சியினால் புறக்கணிக்கப் பட்டதனாலும், ஆருணியின் காலத்தில் நகரில் இருந்த சில அறக் கோட்டங்களும், அழகிய பழமையான கோயில்களும், மலர்ப் பொய்கைகளும், பூஞ்சோலைகளும், குடியிருப்பு வீதிகளும் பாழடைந்து போயிருந்தன. உதயணன் முதல் வேலையாக உடனே அவைகளைப் புதுப்பிக்கும்படி ஆணையிட்டான். இன்னும் ஆட்சிமுறை சீர்குலைந்திருந்ததனால், மக்களிற் பலர் தங்கள் உடமைகளைப் பறிகொடுத்திருந்தார்கள். அத்தகையவர்கள் மீண்டும் தத்தம் உடைமைகளை அடைவதற்கு வழி செய்யப்பட்டது. சால்பும் மானமும் தன்னடக்கமும் உள்ள சில சான்றோர்கள் தாங்களுற்றிருந்த துன்பங்களைக் கூறுவதற்கு நாணினர். ஆனால் குறிப்பாக அவர்கள் துன்பத்தையும் அறிந்து போக்கினான் உதயணன். போரில் தத்தம் கணவன்மாரை இழந்து கைம்மைக் கோலமுற்ற இளமகளிர்க்கு வாழ்க்கை துன்பமின்றிக் கழிவதற்குப் போதுமான வசதிகள் செய்து தரப்பெற்றன. கைகால் முதலியன இழந்து உறுப்புக் குறை பட்டோர்க்கும், கண் இழந்தோர்க்கும் கூட இவ் வசதிகள் கிடைத்தன. கலைஞர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் முதலியோருக்கு அரச போகத்தின் ஆதரவுகளும் சிறப்புகளும் போதும் போதும் என்று மறுக்கும்படி விருப்பத்தோடு மிகுதியாகக் கொடுக்கச் செய்தான் உதயணன். அவனுடைய இத்தகைய அன்பும் ஆதரவும் மிகுந்த செங்கோலாட்சியில் மக்கள் புதியதோர் இன்ப வாழ்வைப் பெற்று அனுபவிக்கத் தொடங்கினார்கள். கூற்றவனும், நோய் நொடிகளும் ஆகிய இவைகளும் கூடக் கோசாம்பி நகரில் நுழைவதற்கு அஞ்சும் படியானது போல அமைந்திருந்தது இந்தப் புதிய நல்லாட்சி. நிலவளமும், நீர்வளமும் சிறக்க, மழை காலந்தவறாமற் பெய்தது. காடும் மலைகளும் பசுமைக் கவினும் வளப்பெருக்கமும் கொண்டு சிறந்து விளங்கின. அரசாட்சி, தாயால் அரவணைக்கப்படும் மக்களின் நிலையினது போல் இருந்ததை யாவரும் உணர்ந்தனர்.

58. நன்றியின் நினைவுச் சின்னம்

கோசாம்பி நகரத்து வேளாளப் பெருமக்கள் விளை நிலங்கள் மிக்க சிற்றூர்களும் பிற வசதிகளும் அடைந்து நலம் பெருக வழி செய்தனர், உதயணன் அமைச்சர். இந்நிலையில் கோசாம்பி நகருக்கு அப்பால் நாட்டின் எல்லைப் புறத்திலுள்ள சில சிற்றரசர்கள், உதயணனுக்கு எதிராக மாறுபட்டுக் கலவரம் செய்தமையால், உதயணன் தன் தம்பியர்களாகிய பிங்கல கடகர்களை ஏற்ற படைகளுடன் அங்கே அனுப்பி வைத்தான். மகத நாட்டிலிருந்து வந்த படைத் தலைவர்கள் விடைபெற்றுச் சென்றிருந்தாலும் மகத வீரர்களிற் பலர் இன்னும் கோசாம்பியிலேயே தங்கியிருந்தனர். அவர்களும் உதவிக்குச் சென்று பிங்கல கடகர்களை வெற்றி முழக்கத்தோடு திரும்பச் செய்தனர். பிங்கல கடகர்கள் எல்லைப் புறத்து அரசர்களை வென்றுவிட்டுத் திரும்பியதும் மகத நாட்டு வீரர்களுக்குத் தக்க சீர் சிறப்புக்களைச் செய்து, அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார்கள்.

ஒரு நல்ல நாளில் பதுமாபதி, கோசாம்பி நகரத்து அரண்மனை அந்தப்புரத்திற்கு வந்து குடி புகுந்தாள். உதயணன் அந்தப்புரத்தைச் சேர்ந்தக் கட்டிடங்களை பதுமைக்காக மேலும் அழகுபடுத்திப் புதுப்பித்திருந்தான். மகத மன்னனின் தங்கை பதுமாபதி, இராசகிரிய நகரத்தின் பெரிய அரண்மனையினும் இந்தப் புதிய அரண்மனையின் அந்தப்புரம் எழில் ஓங்கி விளங்குதல் கண்டு இதை வியந்தாள். நாட்டிலே நல்லாட்சியும், பதுமையுடன் கூடிய இன்ப வாழ்வுமாகத் தன் நாட்களை அமைதியும் பயனும் நிறைந்தனவாகச் செலவிட்டு மகிழலானான் உதயணன்.

கோசாம்பியின் ஆட்சியை அடைந்து இவ்வாறு அமைதியாக வாழ்ந்து வருங்கால், ஒருநாள் அவனுக்கு பத்திராபதியின் நினைவு உண்டாயிற்று. தன்னையும் வாசவதத்தையையும் சுமந்து கொண்டு உஞ்சை நகரின் நீராடல் துறையிலிருந்து இரவு என்றும் பகல் என்றும் பாராமல் ஓடி வந்து, அந்த யானை வருகின்ற வழியிலே இறந்து போன நிகழ்ச்சியும் கூடவே அவன் நினைவில் தோன்றி உள்ளத்தை உருக்கியது. பத்திராபதி தனக்குச் செய்திருக்கும் நன்றியின் அளவை உள்ளூற நினைத்துப் பார்த்தபோது, எப்படியாவது அந்த நன்றிக்கு அழியாத கைம்மாறு ஒன்று செய்தால் ஒழியத் தன் மனம் திருப்தியுறாது என்று அவனுக்குத் தோன்றியது. இந்த நினைவு ஏற்பட்டவுடனே, காட்டுப் பகுதியில் நன்கு பழக்கமுள்ள சிலரை அழைத்துப் பத்திராபதியைத் தான் புதைத்துவிட்டு வந்த இடமும் வழியும், முதலிய விவரங்களைத் தெளிவாகக் கூறி, அந்த இடத்தை அடையாளங் கண்டு அங்கே அகப்படும் அதன் எலும்பு முதலிய பொருள்களை எவ்வாறேனும் தேடிக் கொண்டுவருமாறு கூறினான். அவர்களும் இயன்ற வரையில் தேடிப் பார்த்துக் கொண்டு வர முயற்சி செய்வதாகக் கூறிவிட்டுச் சென்றனர்.

செலுத்த வேண்டியதொரு நன்றியைச் செலுத்தி அமைதியுறாமல், அதைத் தாங்கி மனத்துக்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பது என்பது பண்புடையோருக்கு மிகப் பெரிய சுமையாகத் தோன்றும். அந்தச் சுமையை உள்ளன்போடு செய்து கழித்தால் ஒழிய, அவர்கள் மனப்பாரம் குறைந்து விடுவது இல்லை. 'நன்றிக்கு ஏற்ற இடத்தில் நன்றியைச் செலுத்தத் தவறக்கூடாது' என்பது சிறந்த பண்பாட்டுக்கு உரிய சின்னங்களில் ஒன்று அல்லவா? உதயணனும் இத்தகைய பண்பாடு நிறைந்தவன். ஆகையால் தான் என்றோ பல நாள்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவத்தை நினைவு படுத்திக் கொண்டதோடு அல்லாமல், பத்திராபதி என்னும் யானைக்கு என்றும் நிலைத்து நிற்கும் ஞாபகச் சின்னம் ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவன் கருதினான். ஒரு விலங்கின் உயிரையும் மனித மனத்தோடு நினைக்கிற பரந்த அன்பு அவனுக்கு இருந்தது.

பத்திராபதி வீழ்ந்த இடத்தைக் கண்டுபிடிப்பதற்காகத் தேடிச் சென்றவர்களும் அவன் கருத்துக்கு ஏற்றபடி வெற்றியையே கொணர்ந்தனர். எலும்பு முதலியன அகப்பட்டுவிட்டது என்றும், பத்திராபதி புதையுண்ட இடமும் தெரிந்துவிட்டது என்றும் சென்று வந்தவர்கள் கூறவே, உதயணன் தன் மனக்கருத்தை அவர்களுக்கு விவரித்து உரைக்கலானான். அப்போது பத்திராபதி இறந்து வீழ்ந்த பகுதியிலுள்ள காட்டு வேடர்களும் குறும்பர்களும் கூட அங்கே அழைத்துக் கொண்டு வரப்பெற்றிருந்தனர். தான் கூறுவதை அவர்களும் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டுமென்பது உதயணனின் எண்ணம். "அன்று என் சபதப்படியே என்னையும் வாசவதத்தையையும் காப்பாற்றி உஞ்சை நகரிலிருந்து தப்பி ஓடி வருவதற்கு உதவியாக இருந்தது பத்திராபதி என்ற இப்பெண் யானையே! இது எங்களுக்காகத் துன்பமுற்று இடை வழியில் தன் உயிரைத் தியாகம் செய்தது. இதற்குக் கிட்டும்படியான எந்த ஒரு நன்றியையும் நாம் இப்போது செய்ய முடியாதானாலும் நன்றி மறந்து விடுவதும் நல்லது அன்று. எனவே எந்த வகையிலாவது நம் நன்றிக் கடனை மறவாமல், பத்திராபதி இறந்து போன இடத்தில் அதற்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்பது என் கருத்து. மாடத்தோடு கூடிய பெருங்கட்டடம் ஒன்றை அந்த இடத்தில் கட்டி, அதில் பத்திராபதியின் வடிவத்தை உருவாக்கிக் கோவில் கொள்ளுமாறு செய்ய வேண்டும். கோவிலில் பத்திராபதியின் சிலையுருவத்தைக் கடவுள் மங்கலம் செய்து, முறைப்படி நிலை நாட்டிய பின்னால் காலையும் மாலையும் அங்கே வழிபாடு நடத்தி வருவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று உதயணன் கூறிய போது அவனுடைய அந்த நன்றியுணர்வு மற்றவர் மனத்தை நெகிழச் செய்தது.

இதனுடன் பத்திராபதியின் உயிர் நற்கதி அடைவதற்கு வேறு ஓர் அறத்தையும் அங்கே செய்வது இன்றியமையாதது என்று உதயணன் கருதினான். "வழிச் செல்வோர் நீர் விடாய் தணித்துக் கொள்வதற்கு ஒரு தண்ணீர்ப் பந்தரும், பசித்து வந்த மக்கள் வயிறார உண்டு செல்வதற்காக ஓர் அட்டிற்சாலையும் அதனருகே அமைத்துவிட வேண்டும்" என்று கூறிக் கட்டிடம் அமைக்கும் கலைஞர்களையும் சிற்பிகளையும் அழைத்து, அவர்களிடமும் விவரத்தைக் கூறி, முன்பு பத்திராபதி வீழ்ந்த இடமறிந்து வந்து கூறியவர்களோடு அவர்களைக் காட்டிற்கு அனுப்பினான். காட்டில் கலைஞர்களுக்கு எல்லாச் சௌகரியங்களையும் ஏற்படுத்தித் தருமாறு அரண்மனை ஏவலாளர்கள் ஆணையிடப் பெற்றனர். பத்திராபதி வீழ்ந்த இடத்தை அடையாளங் கண்டு அதன் எலும்பு முதலிய அரும் பொருள்களைச் சேகரித்துக் கொடுத்தவர்களை இன்மொழிகளால் பாராட்டி, அவர்களுக்கு வேண்டிய பரிசில்களைக் கொடுத்து அனுப்பினான் உதயணன்.

காட்டு வேடர்களுக்கும் குறும்பர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது. பத்திராபதியின் கோவில் திருப்பணி பற்றிய செய்தி, அங்கங்கே சென்று மீண்டும் எல்லோருக்கும் தெரியுமாறு பறை சாற்றப் பெற்றது. இரண்டோர் திங்களில் கோவிலும் சிலையும் வேலை முற்றி நிறைவேறின. கடவுள் மங்கலம் நிகழ்த்துவதற்கு முன்னால் நடுக்காட்டிலிருந்த அந்த இடத்திற்குச் சென்று வருவதற்கு வசதியாகப் பெரிய சாலை ஒன்று அமைக்கப்பட்டது. கோவிலுக்கு வழிபாடு நடத்துகின்றவர்கட்கும், பிறர்க்கும் அங்கேயே அருகில் இருக்கைகள் கட்டப் பெற்றன. மாதந் தவறாமல் திருவிழாக்கள் நடத்துவதற்குப் போதுமான உடைமைகள் கோவிலுக்கு உரிமை செய்து கொடுக்கப் பெற்றன. சிறந்த முறையில் கடவுள் மங்கலமும் ஒருநாள் செவ்வனே நிகழ்ந்து இனிதாக நிறைவேறியது. பத்திராபதி இனிமேல் தெய்வமாகியது.

59. கோடபதி கிடைத்தது

'இன்பமும் துன்பமும் தனித்து வருவதில்லை' என்ற முதுமொழி மெய்யாகவே வாழ்வின் அனுபவத்திலிருந்து கனிந்ததாக இருக்க வேண்டும்! கோசாம்பி நகரத்து அரசாட்சி மீண்டதிலிருந்து உதயணனது வாழ்வில் இன்பப்படுவதற்குரிய நிகழ்ச்சிகளாகவே தொடர்ந்து நிகழலாயின. இழந்த பொருள்கள் ஒவ்வொன்றாக மீண்டும் மீண்டும் அவனை வந்தடையும் நிகழ்ச்சிகள் தொடங்கின. 'இன்ப துன்பங்களின் போக்குவரவு என்பது, மனித வாழ்க்கையில் கோடை மழையைப் போன்றது அல்ல. அது கார் காலத்து மழையைப் போன்றதே' என்ற சித்தாந்தம் மெய்ப்பிக்கப்படுவது போலச் சென்றது, மேல்வரும் உதயணனின் வாழ்க்கை. பத்திராபதிக்கும் கோவில் கட்டி முடித்த சில நாள்களில், உஞ்சை நகரத்திலிருந்து வரும் போது, முன்பு உதயணன் இழந்துவிட்ட கோடபதி என்னும் தெய்வீக யாழ் மீண்டும் நல்வினை வசத்தால் அவன் கைக்கே வந்து சேர்ந்தது. அதை உதயணன் திரும்ப அடைந்த வரலாறு ஒரு விந்தையான கதையைப் போன்றது.

அப்போது உதயணன் கோசாம்பி நகரை ஆள்வதற்குத் தொடங்கிச் சில நாட்கள் கழிந்திருக்கும். உஞ்சை நகரத்தில் வசித்து வந்த 'அருஞ்சுகன்' என்னும் அந்தண இளைஞன் ஒருவன் கோசாம்பி நகரத்தில் இருக்கும் தன் உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்துவிட்டு வருதல் வேண்டும் என்ற மிகுந்த அவாவினால், வழிநடையாகவே உஞ்சை நகரத்தில் இருந்து கோசாம்பி நகரத்துக்குப் பயணம் புறப்பட்டு விட்டான். அருஞ்சுகன் இளைஞனாயினும் கல்வி கேள்விகளிலும் இசை முதலிய கலைகளிலும் முதிர்ந்த அறிவும் பயிற்சியும் உடையவன். பேரியாழ், சீறியாழ், செங்கோட்டியாழ், சகோடயாழ் முதலிய எல்லா யாழ்களிலும் இசைக்கும் முறை அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது. இவ்வாறு எல்லா நூல்களிலும் எல்லாக் கலைகளிலுமே பயிற்சியுடைய அவன் ஆருணியின் ஆட்சிக் காலத்தில் கோசாம்பி நகருக்கு வர முடியாதவனாக இருந்துவிட்டதனால், பல நாள் வராதிருந்த வருத்தம் தீர மகிழ்ச்சியோடு புறப்பட்டிருந்தான்.

உஞ்சை நகரத்திலிருந்து கோசாம்பி நகருக்கு வருகின்ற வழி பல காத தூரம், மலை காடுகளைக் கடந்து வரவேண்டிய அரிய வழியாகும். இடையிலுள்ள மலையடிவாரத்துக் காடுகளில் யானை முதலிய விலங்குகளின் போக்கு வரவும் உண்டு. இதே வழியாகத்தான் ஏற்கனவே உதயணனும் வந்திருந்தான். இப்போது அருஞ்சுகனும் வழி நடையாகக் கோசாம்பி நகருக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தான். பயணத்தின் போது அருஞ்சுகன் ஒரு நாள் மாலை நேரத்தில், ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியின் இடையே வந்து கொண்டிருந்த போது, வளைந்து வளைந்து சென்ற காட்டின் முடுக்கு வழிகளிலே திரும்பித் திரும்பி மேலே சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஒரு வழியின் திருப்பத்தில் திரும்பியதும் திடுக்கிட்டுப் போனான்.

அவனுக்கு மிக அருகில் ஒரு பெரிய நீர் நிலையில் பல காட்டு யானைகள் கூட்டமாக நீர் பருகிக் கொண்டிருந்தன. அவற்றில் இரண்டொன்று அவன் வருவதைப் பார்த்தும் விட்டன. அருஞ்சுகன் பதைபதைத்து நடுக்கங் கொண்டான். பயம் அவனைத் திக்பிரமை அடையும்படி செய்துவிட்டது. அந்த யானையிடமிருந்து தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்பதே அவனுக்குப் புரியவில்லை. அந்த அபாயகரமான நிலையில் அவனுக்குச் சமீபத்தில் ஓங்கி வளர்ந்திருந்த வேங்கை மரம் ஒன்றை அவன் கண்டான். மேலே தாவி ஏறிக் கொள்வதற்கு வசதியாக இருந்த அந்த வேங்கை மரம் அவனுக்கு அப்போது அடைக்கலம் அளித்தது. நீர் நிலையிலிருந்து தன்னை நோக்கித் தாவி வரும் யானைகளிடமிருந்து அந்த மரத்தினால் அவன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான். இந்த நிலையிலே அவன் சற்றும் எதிர்பாராத விந்தை ஒன்று நிகழ்ந்து, அவனை ஆச்சரியக் கடலில் ஆழ்த்தியது. மரத்தில் இருந்தவாறே அந்த வியப்புகுரிய அற்புதத்தைக் கண்டு பிரமித்தான் அருஞ்சுகன். அந்த அற்புத நிகழ்ச்சி இதுதான்.

அவன் வேங்கை மரத்தில் வேகமாகத் தாவி ஏறியவுடன் தற்செயலாகக் காற்று சற்றே வலுவாக வீசியது. காற்றின் வேகத்தையும் தான் ஏறும் மரத்தை நோக்கிப் பாய்ந்தோடி வரும் யானைகளையும் கண்டு நெஞ்சு குலைந்து பதைபதைப்பு அடைந்தான் அவன். அதே நேரத்தில் எதிரே வழி மேல் ஓரமாக அடர்ந்து வளர்ந்திருந்த மூங்கிற் புதரினுள்ளே இருந்து, ஒரு நல்ல யாழின் இன்னிசை ஒலி காற்றிலே கலந்து வந்தது. 'அந்த யாழ் ஒலி எப்படி உண்டாயிற்று? யார் அதனை வாசிக்கின்றார்கள்?' என்று ஐயமும் வியப்பும் கொண்டு திரும்பி நோக்கிய அருஞ்சுகன் இன்னொரு பேரதிசயத்தையும் எதிரே கண்டான்.

மதம் பிடித்து வெறி கொண்டவை போல் அவன் இருந்த வேங்கை மரத்தை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்த காட்டு யானைகள், புதிதாகக் காற்றில் கலந்து வந்த இந்த யாழ் ஒலியைக் கேட்டு மந்திரத்திற்குக் கட்டுண்டவைகளைப் போல அப்படி அப்படியே நின்றுவிட்டன. அவை அந்த யாழொலியிலே ஆழ்ந்து ஈடுபட்டு விட்டனவாகக் காணப்பட்டன. அருஞ்சுகன் மூங்கிற் புதரைப் பார்த்தான். காற்று வீசும் போது அங்கிருந்து யாழ் ஒலி உண்டாவதும், காற்று நின்றால் ஒலி நின்று விடுவதும் அவனுக்குப் புலப்பட்டனவே ஒலிய வேறொன்றும் அவனுக்கு அங்கே காணத் தெரியவில்லை.

ஏதும் தெளிவாகப் புரிந்து கொள்ளவோ, அனுமானித்துக் கொள்ளவோ முடியாத வியப்புடன் அவன் மிகுந்த நேரம் யானைகளுக்கு அஞ்சி வேங்கை மரத்தின் அடர்ந்த கிளைகளுக்குள் பதுங்கிக் கொண்டிருந்தான். வெகு நேரங்கழித்து யானைகள் யாவும் அங்கிருந்து மலைப் பகுதிகளுக்கு சென்றுவிட்டன என்பதை நன்கு கண்டு தெளிவாக உறுதி செய்து கொண்ட பின்பே, அவன் கீழே இறங்கி ஆவலோடு மூங்கிற் புதரை நெருங்கினான். அருகே சென்று பார்த்ததில் இரண்டு மூங்கில்களுக்கு நடுவே அழகிய சிறிய யாழ் ஒன்று அகப்பட்டுச் சிக்கிக் கிடப்பது தெரிந்தது. காற்றால் ஆடும் மூங்கில் கழிகள் யாழின் நரம்புகளில் உராய்கின்ற போது, அதிலிருந்து அரிய இன்னிசை எழும்புவதையும் அருஞ்சுகனே அப்போது நேரில் கண்டான். அவன் வியப்பு வளர்ந்தது. அந்த யாழின் ஒலியைக் கேட்டு யானைகள் எல்லாம் மயங்கி நின்றதனால், அதன் சிறப்பியல்பையும் அவன் தானாகவே அனுமானித்துக் கொண்டான். அதை எப்படியும் தான் கைப்பற்றிக் கோசாம்பி நகருக்கு எடுத்துக் கொண்டு போகவேண்டும் என்ற அடக்க முடியாத ஆசை அவனுக்கு உண்டாயிற்று.

'இந்த யாழ் கின்னரர்களோ, இயக்கர்களோ மறந்து இங்கே தவறவிட்டுச் சென்றதாக இருப்பினும் சரி, தேவருலகத்திலிருந்து நழுவி விழுந்ததாக இருந்தாலும் சரி, அதை எப்படியும் நான் எடுத்துக் கொண்டு தான் போகப் போகிறேன்' என்று அவன் தன் மனத்திற்குள் ஒரு உறுதி செய்து கொண்டான். மூங்கிற் புதரில் யாழ் கெடுதியுறாதபடி மெல்ல இதை விடுவித்து எடுத்துக் கொண்டு, பின் தனக்கு அதைக் கிடைக்கும்படி செய்த நல்வினையை வாழ்த்தி வணங்கிவிட்டு, மேலே பயணத்தைத் தொடர்ந்தான் அவன். இரண்டொரு நாள்களில் தன் பயணத்தை முடித்தவனாக அவன் கோசாம்பி நகரடைந்து, அங்குள்ள தன் நண்பர்கள் வீட்டில் தங்கினான்.

காட்டில் கிடைத்த யாழும் அவனிடமே பத்திரமாக இருந்தது. இறுதியாக அருஞ்சுகன் தங்கியிருந்த ஒரு நண்பனின் வீடு கோசம்பி நகரத்து அரண்மனைக்கு மிகவும் அருகில் இருந்தது. நண்பன் வீட்டில் அனைவருமே அவனுக்கு நல்ல பழக்கமுடையவர்கள். யாவரும் அவனுடைய சுற்றத்தினர்களைப் போன்றவர்கள் என்றே துணிந்து கூறலாம். அவன் அங்கு வந்து தங்கி இரண்டொரு நாள்கள் கழிந்த பின், ஒரு நாள் மாலை எல்லோருடைய விருப்பத்தையும் நிறைவேற்றுவதற்காக அவனே யாழ் வாசிக்கும்படி நேர்ந்தது. நண்பர் வீட்டில் யாவரும் ஏற்கெனவே அவனுக்கு யாழ் வாசித்தலில் நல்ல திறமை உண்டு என்பதை அறிவார்கள். ஆகையால் அன்று மாலை எப்படியும் அவன் தங்களுக்கு யாழிசை விருந்து அளித்துத்தான் ஆக வேண்டும் என்று அவனை வற்புறுத்தினார். அவர்களுடைய வேண்டுகோளை மறுக்க இயலாமல், அன்று மாலை அந்த வீட்டின் மேல்மாடத்தில் எல்லோரும் கேட்கும்படியாகக் காட்டிலே தனக்குக் கிடைத்த யாழை எடுத்து வாசித்தான் அருஞ்சுகன். அற்புதமான இயல்பு வாய்ந்த அந்தத் தெய்வீக யாழில் அவனுடைய கைவண்ணம் கேட்போரைக் கவர்ந்து மயக்கியது.

செவ்வழிப் பண்ணைப் பாடினான் அவன். அதே நேரத்தில் அரண்மனை மேல்மாடத்தில் பதுமையோடு பேசி மகிழ்ந்து கொண்டிருந்த உதயணனின் செவிகளில் காற்றினிலே கலந்து வந்து ஒலித்தது இந்த யாழிசை. அவன் திகைத்தான்.

60. இழந்த பொருள்களின் வரவு

தொலைவிலிருந்து காற்றோடு கலந்து வந்த அந்த யாழிசையைக் கேட்டு அது தனக்குப் பழக்கமான ஓசையாயிருப்பதை உணர்ந்தான் உதயணன். எதிர்புறத்துத் தெருவில் ஒரு வீட்டின் மேல்மாடத்திலிருந்து செவ்வழிப் பண்ணில் இசைக்கப்பட்டு, காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது அந்த யாழ் ஒலி. உதயணன் கண்களில் மலர்ச்சியும் முகத்தில் மகிழ்ச்சியும் தோன்ற, மீண்டும் அந்த ஒலியைக் கூர்ந்து கேட்டன். 'சந்தேகமே இல்லை! அது கோடபதியின் ஒலிதான்!' என்று தன் மனத்திற்குள் உறுதி செய்து கொண்டான். பத்திராபதியில் ஏறி வாசவதத்தையோடு உஞ்சை நகரத்திலிருந்து வரும்போது நடுவழியில் மூங்கிற் புதரில் சிக்கித் தொலைந்து போன அந்த யாழ் இப்போது இங்கே எப்படி வந்தது? தான் அந்த ஒலியைக் கேட்பது கனவா, நனவா?' என்று சில கணம் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், எதிர்புறத்துத் தெருவிலுள்ள அந்த வீட்டு மேல் மாடத்திலிருந்து வந்த கோடபதியின் ஒலியானது, 'அரசே என்னைக் காட்டிலே தவறவிட்டுவிட்டு ஒரேயடியாக மறந்து போய் விட்டாயே! உன் மனம் எவ்வளவு கடுமையானது?' என்று அவனை நோக்கிப் பழைய சம்பவத்தை நினைவூட்டி இரக்கப்பட்டுக் கொள்வது போல இருந்தது.

உதயணனுக்கு அந்த இசை செவியில் பாயப்பாய, மனம் நெகிழ்ந்தது. கோடபதியின் தெய்வீகத் தன்மை அவன் நினைவிலே படர்ந்து அவனை ஏங்க வைத்தது. சட்டென்று ஓர் ஆளை அந்த வீட்டிற்கு அனுப்பி, 'யார் யாழ் வாசிப்பது? வாசிக்கின்ற யாழ் அவனுக்கு எங்கே அகப்பட்டது?' என்று விசாரித்து வரச் சொல்ல வேண்டும் என்று கருதி, மேல்மாடத்தின் வாயிலுக்கு வந்து மெய்க்காப்பாளனை அழைத்தான் உதயணன். மெய்க்காப்பாளன், உதயணனுக்கு அருகில் வருவதற்குள் பக்கத்து அறையில் இருந்த வயந்தகன் அவசரமறிந்து விரைந்தோடி வந்தான். வந்து "என்ன செய்ய வேண்டும்? என்ன நிகழ்ந்தது?" என்று உதயணனைக் கேட்டான். உடனே, உதயணன், வயந்தகனை மேல் மாடத்தின் முன் பகுதிக்கு அழைத்துச் சென்று அவனையும் காற்றோடு கலந்து வந்த அந்த யாழிசையைக் கேட்கும்படி செய்தான். வயந்தகனும் அதைக் கேட்டுவிட்டு, "அது கோடபதியின் ஒலிதான்" என்று உறுதியாகக் கூறினான். உதயணன் உடனே அந்த வீட்டிற்குச் சென்று விவரங்களை மேலும் அறிந்து கொண்டு வருமாறு வயந்தகனை அனுப்பினான். வயந்தகன் கீழிறங்கி விரைந்து சென்றான்.

எதிர்ப்புறத்துத் தெருவில் யாழொலி எந்த வீட்டு மேல்மாடத்தில் இருந்து வந்ததோ, அந்த வீட்டிற்குள் செய்தியை அறியும் ஆவலோடு விரைந்து நுழைந்தான் வயந்தகன். கீழே இருந்த சிலரை விசாரித்ததில், யாழ் வாசிப்பவன் உஞ்சை நகரத்தைச் சேர்ந்த ஓர் அந்தண இளைஞன் தான் என்றும், அவன் அங்கே தன் நண்பர் வீட்டுக்கு அப்போதுதான் புதிதாக வந்துள்ளான் என்றும், வந்து இரண்டோர் நாள்களே ஆகின்றன என்றும், அவன் நன்றாக யாழ் வாசிப்பான் என்றும் விவரங்கள் தெரிய வந்தன. இவற்றைத் தெரிந்து கொண்ட பின்னர், மேல்மாடத்தை அடைந்து அந்த இளைஞனைச் சந்தித்துப் பேசும் கருத்துடன் வயந்தகன் ஆவலோடு சென்றான். திடும் என்று யாரும் எதிர்பாராத விதமாக வயந்தகன் உள்ளே நுழையவே, அருஞ்சுகன் யாழ் வாசித்துக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டான். வயந்தகனை ஏற்கனவே அறிந்து கொண்டிருந்த மற்றவர்கள், அவனுக்கு வணக்கம் செலுத்தும் பாவனையில் எழுந்து நின்று வரவேற்றனர். வயந்தகன் நேரே யாழோடு வீற்றிருந்த அருஞ்சுகனின் அருகிற் சென்று அமர்ந்தான். "அன்பு கூர்ந்து இந்த யாழ் தங்களுக்குக் கிடைத்த வரலாற்றை எனக்குச் சிறிது விளக்க வேண்டும்! அதை நானும் அறிந்து கொள்ளலாம் அல்லவா?" என்று வயந்தகன் கேட்டவுடனே அருஞ்சுகன் மறுக்காமல், தான் கோடபதியைப் பெற்ற விவரத்தைக் கூறலானான்.

"இரண்டோர் நாள்களுக்கு முன்னால், உஞ்சையிலிருந்து நடையாக நடந்து கோசாம்பி நகருக்குப் பயணம் வரும்போது, வழியில் நருமதை நதிக்கு இப்பால், ஒரு பெரிய மலையடி வாரத்தில் மூங்கிற் புதர் ஒன்றில் சிக்கியிருந்த இந்த யாழை நான் கண்டேன். நீர் பருக வந்த யானைகளால் துன்புற நேருமே என்றஞ்சி நான் வேங்கை மரத்தில் ஏறிய போது, காற்றிலே மூங்கிற் புதரிலிருந்து இந்த யாழ் ஒலித்தது. இதன் ஒலி கேட்டு யானைகள் விலகிச் சென்றன. நான் இறங்கி இந்த யாழை எடுத்துக் கொண்டு வந்தேன்" என்று அருஞ்சுகன் யாவற்றையுமே கூறவே, வயந்தகன் அந்த யாழ் உதயணனுடைய கோடபதி என்பதையும் பத்திராபதியில் வரும்போது அது மூங்கிற்புதரில் சிக்கிக் கொண்டதையும் சொல்லி, அவனை யாழுடனே உதயணனிடம் அழைத்துச் சென்றான்.

காட்டில் கிடைத்த அந்த யாழால் உதயணனைச் சந்திக்கும் வாய்ப்பு வந்ததே என்ற மகிழ்ச்சியோடு வயந்தகனைப் பின்பற்றி அரண்மனை சென்றான் அருஞ்சுகன். இருவரும் அரண்மனை மேல்மாடத்தில் ஏறி நுழைந்ததும் அருஞ்சுகன் கையில் கோடபதியைக் கண்ட உதயணன் அவனை அன்போடு வணங்கி வரவேற்றான். அருஞ்சுகன் மீண்டும் தனக்கு அது கிடைத்த வரலாற்றைக் கூறிவிட்டு, அதனைப் பயபக்தியோடு உதயணன் கரங்களில் அளித்தான். "வருக என் கோடபதியே! நீதான் வத்தவனுக்கு, அமுதம்" என்று யாழை வரவேற்பவன் போலக் கூறிக் கொண்டே அதைப் பெற்றுக் கொண்டான் உதயணன். பின்பு வெகுநேரம் அவன் அருஞ்சுகனோடு அமர்ந்து யாழிசையையும் கலைகளையும் பற்றி ஆர்வத்தோடு அளவளாவிக் கொண்டிருந்தான். கோடபதியைக் கொண்டு வந்து கொடுத்தவன் என்ற முறையில் அருஞ்சுகனின் மேல் உதயணனுக்கு அளவற்ற அபிமானம் ஏற்பட்டிருந்தது. இறுதியில், அருஞ்சுகனுக்கு பல பரிசில்களை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு வழங்கி மகிழ்ந்தான் உதயணன். பரிசில்களை மட்டுமின்றித் தன் நாட்டைச் சேர்ந்த சிறப்பான ஊர் ஒன்றையும் அவனுக்கு அளிக்க உவந்தான். "அருஞ்சுக! நீ திரும்பவும் உஞ்சை நகருக்குச் செல்ல வேண்டாம். இங்கேயே கோசாம்பியில் நீ வசித்து வருதல் வேண்டும் என்பது என் விருப்பம். என் அரசவைக் கலைஞனாக நீ இங்கேயே இருந்தாக வேண்டும்" என்று உதயணன் வேண்டிக் கொண்டபோது அருஞ்சுகனும் வேண்டுகோளுக்கு உடன்பட்டு அங்கேயே, கோசாம்பியில் வசிப்பதற்கு தனக்குச் சம்மதம் தான் என்று மறுமொழி கூறினான். பின்னர் அவன் உதயணனிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றான்.

கோடபதி கைக்கு வந்ததும் ஆருயிர்க் காதலி வாசவதத்தையைப் பற்றிய பழைய நினைவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக அந்த யாழைக் காண்கின்ற போதிலும் வாசிக்கின்ற போதிலும் உதயணனுக்கு ஏற்படலாயின. பதுமை அவனுக்கு மிக அருகிலேயே இருந்தும் கூடத் தத்தையைப் பற்றிய இத்தகைய நினைவுகளை அவனால் தவிர்க்க முடியவில்லை. இழந்த பொருள்களை மீண்டும் அடைவதில் ஒரு துயரமும் உண்டு. மீண்டும் கிடைத்த அந்தப் பொருளோடு தொடர்புடைய பழைய துயர நினைவுகள் எவையேனும் இருந்தால், அவற்றைத் தவறாமல் நினைவூட்டி விடும் அந்தப் பொருள். கோடபதியால் உஞ்சை நகரத்தில் நளகிரியை அடக்கியது, அதனால் வாசவதத்தையைச் சந்தித்துக் காதல் கொண்டது, யூகியையும் ஒருங்கே இழந்தது முதலிய நினைவுகளை அவன் மனத்தில் படருமாறு செய்தது அந்த யாழ். பிங்கல கடகர்களாகிய தன் தம்பியரை மீண்டும் பெற்றது, கோசாம்பி நகரத்து ஆட்சியை மீண்டும் எய்தியது, எல்லாவற்றிற்கும் மேலாக 'இனிமேல் அது கிடைக்காது' என்று நம்பிக்கை இழந்துபோன கோடபதி அருஞ்சுகனால் கிடைத்தது ஆகிய இவ்வளவு நிகழ்ச்சிகளுக்காகவும் இன்புற்றிருக்க வேண்டிய உதயணன், இவற்றிற்கு நேர்மாறான பழைய துன்ப நினைவுகளைக் கோடபதியால் நினைவூட்டிக் கொண்டு நெஞ்சங் குழம்பிய நிலையில் சிறிதும் அமைதியின்றி இருந்து வந்தான்.

இங்கே கோசாம்பி நகரத்து நிகழ்ச்சிகள் இவ்வாறு இருக்க, மகத நாட்டில் உதயணன் புறப்படும் போது, 'உருமண்ணுவாவை எப்படியும் சங்க மன்னர்களிடமிருந்து விடுதலை செய்து அனுப்புவது தன்னுடைய பொறுப்பு' என்று அவனுக்கு வாக்களித்திருந்த மகத வேந்தன் தருசகன் அதற்காக முயற்சி செய்தான். உருமண்ணுவாவை விடுதலை செய்வதற்கு அவன் மேற்கொண்ட முயற்சிகள் பல. ஆருணியை வெல்லும் முயற்சியை மேற்கொண்டு புறப்படும் அந்த வேளையிலும் மறவாமல் 'நீங்கள் எவ்வாறேனும் உருமண்ணுவாவை விடுதலை செய்து அனுப்ப வேண்டும்' என்று உதயணன் உள்ளமுருக வேண்டிக் கொண்டதனால், தருசகனுக்கு அதனை மறுக்க முடியவில்லை. ஆகையால் தான், எப்படியும் உருமண்ணுவாவை விடுதலை செய்ய ஏற்பாடு செய்வதாகத் துணிந்து உதயணனிடம் அன்று வாக்களித்து விட்டான் அவன்.

உதயணன், வருடகாரன் முதலியவர்களுடனே புறப்பட்டுக் கோசாம்பிக்குச் சென்றபின், தனியாகச் சிந்தித்துப் பார்க்கும் போதுதான், 'உருமண்ணுவாவைச் சங்கமன்னர்களிடமிருந்து விடுவிப்பது அவ்வளவு எளிதாக முடிந்து விடக் கூடிய காரியமில்லையே' என்பது தருசகனுக்குப் புலப்பட்டது. எனவே அதற்கான முயற்சியில் நுட்பமான ஆழ்ந்த சிந்தனைகளுக்குப் பின் செயலாற்றுவதற்குத் திட்டமிட்டான் அவன். இறுதியில் ஓர் அருமையான வழி உருமண்ணுவாவை விடுதலை செய்வதற்கு ஏற்றதாகக் கிட்டியது. படையெடுத்து வந்து தோற்றுப் போய் ஓடிவிட்ட சங்க மன்னர்களைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானவர் சிலரும் உடைமைகளிற் சிலவும் இராசகிரிய நகரத்துச் சிறையில் இருந்ததுதான் அந்த வழி. இங்கிருக்கும் இந்த உடைமைகளையும் இவர்களையும் விட்டு விடுவதாக ஆசைகாட்டி விடுதலை செய்துவிட்டால், உருமண்ணுவாவைப் பதிலுக்கு விடுதலை செய்யுமாறு அவர்களைக் கேட்கலாம் என்பது தருசகனுக்குத் தோன்றிய திட்டம்.

எலிச்செவி அரசனுடைய தம்பியாகிய சித்திராங்கதன் முதலிய சில முக்கியமானவர்கள் தருசகன் வசம் சிறைப்பட்டுக் கிடந்ததால், தன்னிடம் இருக்கும் அந்தப் பிடிப்பை வைத்துக் கொண்டு எதிரிகளிடமிருக்கும் உருமண்ணுவாவை விடுதலை அடையச் செய்து விடலாம் என்பதே அவனது நம்பிக்கை. 'எதிரிகள் தனது நம்பிக்கை நிறைவேற்றுவதற்கு ஏற்ற நிலையில் இருக்கின்றார்களா? அல்லது அழுத்தமான பிடிவாதத்தோடு இருந்து வருகிறார்களா?' என்று மெல்ல அறிந்து வருவதற்காகத் திறமையும் நுணுக்கமும் வாய்ந்த சில தூதுவர்களை சங்க மன்னர்களிடம் அனுப்பினான் தருசகன். தூதுவர்கள் சென்றனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாகச் சங்க மன்னர்கள் மகிழ்ச்சியோடும் மரியாதையோடும் அவர்களை வரவேற்றனர். இழிந்தவர்களோடு கூடி இன்பம் நுகர்வதிலும் உயர்ந்தவர்களோடு பகைகொள்வதே நல்லது என்ற தத்துவத்தை உணர்ந்து கொண்டவர்கள் போல் நடந்து கொண்டனர் சங்க மன்னர்கள்.

தருசகனிடமிருந்து சென்றிருந்த தூதுவர்கள் தாமாகப் போய் அங்கு எல்லா விவரங்களையும் கூறுவதற்கு முன்பே அவர்களாகவே உருமண்ணுவாவைச் சிறையிலிருந்து விடுதலை செய்து கொணர்ந்து அழைத்துக் கொண்டு போகுமாறு வேண்டினர். சென்றிருந்த தூதுவர் திகைத்தனர். சங்க மன்னர்களுடைய பண்பாட்டில் அவர்கள் மதிப்பிற்குரிய தன்மையைக் கண்டனர். உருமண்ணுவாவும் தூதுவர்களும் சங்க மன்னர்க்குத் தங்கள் உள்ளமர்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விரைவில் தங்களிடத்தில் சிறைப்பட்டிருக்கும் எலிச்செவியரசனின் தம்பி முதலியோரை விடுவித்து அனுப்பி விடுவதாகக் கூறி விடைபெற்றுக் கொண்டு சென்றனர். இராசகிரிய நகரத்திற்கு வந்ததும் உருமண்ணுவா தருசக வேந்தனைச் சந்தித்துச் சங்க மன்னர்கள் தன்னிடமும் மகத நாட்டுத் தூதுவர்களிடமும் பண்புடனே நடந்து கொண்ட முறையைப் பாராட்டிக் கூறிச் சித்திராங்கதன் முதலியோரை உடனே விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டான்.

தருசகனும் சங்க மன்னர்களின் பண்பையும் நல்லியல்பையும் பாராட்டி உடனே சித்திராங்கதன் முதலியோரை விடுதலையாகச் செய்தான். அதுவரை சிறை வாழ்வைப் பொறுத்துக் கொள்ள நேர்ந்தமைக்காக வருத்தந் தெரிவித்துக் கொண்டு அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினர் தருசகனும் உருமண்ணுவாவும். அவர்கள் சென்ற பின் உதயணனைப் பற்றிய சகல விவரங்களையும் தருசக வேந்தனிடம் கேட்டு அறிந்து கொண்டான் உருமண்ணுவா. கோசாம்பியை ஆருணியிடமிருந்து மீட்டாயிற்று என்ற செய்தி அவனுக்குப் பேருவகை தந்தது. எல்லா வகையிலும் தன் தலைவனான உதயணனுக்குத் தருசகராசன் மிகுந்த உதவி செய்துள்ளமையைப் புகழ்ந்து கூறி நன்றி செலுத்தி விட்டு அங்கேயே சிறிது காலம் உருமண்ணுவா தங்கியிருந்தான்.

இந்த நிலையில் வாசவதத்தையோடு மறைந்து வசித்து வந்த யூகி, சாதகன் என்னும் குயவனை உருமண்ணுவாவிடம் தூது அனுப்பியிருந்தான். உஞ்சை நகரத்திலிருந்து உதயணன் மீண்டு வருவதற்காக அன்று யூகி செய்த சூழ்ச்சிகளுக்குத் துணையாக இருந்தவனாகிய இந்தச் சாதகன், யூகி உஞ்சை நகரிலிருந்து திரும்பும் போது தானும் வந்து, யூகிக்கு உதவியாக இருந்து வந்தான். அடிக்கடி யூகி, உருமண்ணுவாவிற்குக் கூறியனுப்பும் சூழ்ச்சித் திட்டங்களின் விவரத்தை அவனே கூறுவதற்குப் புறப்படுவது வழக்கம்.

சங்க மன்னர்களிடமிருந்து விடுதலை அடைந்து இராசகிரிய நகரத்தில் தருசக மன்னனின் அரண்மனையில் உருமண்ணுவா தங்கியிருக்கிறான் என்பதை நன்கு தெளிவாக அறிந்து கொண்ட யூகி, சாதகனைத் திருமுகத்துடனே இராசகிரிய நகரத்துக்கு அனுப்பியிருந்தான். இரண்டாவது முறையாகத் தானும், தத்தையும் இறந்து விட்டதாக உதயணனை நம்பச் செய்த பின் அவன் நன்மையைக் குறிக்கொண்டு, தான் செய்த ஒவ்வோர் சூழ்ச்சியும் நடத்துவதற்கு உருமண்ணுவாவைத் தான் யூகி முற்றிலும் பொறுப்பாக நம்பியிருந்தான். 'இப்போது உதயணன் கோசாம்பி நகரத்து ஆட்சியை மீட்டுக் கொண்டு வாழ்விலே தனது அரசியல் பொறுப்பை உணர்ந்தவனாகப் பதுமையோடு அமைதியான முறையிலே வாழ்ந்து வருகிறான்' என்பதைக் கேள்வியுற்றுத் 'தன் திட்டங்களும் சூழ்ச்சிகளும் அநேகமாக வெற்றி பெற்றுவிட்டன' என்ற மன நிறைவு யூகிக்கு அப்போது ஏற்பட்டிருந்தது. எனவே, 'வாசவதத்தை உயிருடன் தான் இருக்கிறாள்' என்று கூறி அவனிடத்தில் மீண்டும் ஒப்படைக்கவும், தான் 'அவல் விக்கி இறந்து போனதாகப் பரப்பிய செய்தி பொய்' என்று நிரூபித்துக் காட்டவும் ஏற்ற சந்தர்ப்பம் வந்து விட்டது என்பதை யூகி உணர்ந்தான்.

தனது இந்தக் கருத்தை சமயமறிந்து முடித்து வைக்கத் தகுந்தவன் உருமண்ணுவாவே என்ற எண்ணத்தோடுதான், சாதகனைத் தனது திருமுகத்தோடு அவனிடத்துக்கு அனுப்பியிருந்தான். சாதகன் திருமுகத்தோடு தன்னைத் தேடிக் கொண்டு வந்த போதே, யூகி தான் தன்னிடம் அவனை அனுப்பியிருப்பான் என்பதை உருமண்ணுவாவும் ஒரே நொடியில் உய்த்துணர்ந்து கொண்டான். சாதகன் தன்னைத் தேடி வரும் போது அரண்மனையைச் சேர்ந்த யானைக் கொட்டிலின் வாயிலில் யானைப் படைத் தளபதிகள் சிலரோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான் உருமண்ணுவா. தொலைவில் வரும்போதே சாதகனை அடையாளம் கண்டு கொண்டான். சாதகன் கையில் திருமுகச் சுருளோடு தயங்கி நின்ற குறிப்பைக் கண்டதும், அவன் தன்னைத் தனியாக அழைக்கின்றான் என்ற குறிப்பைப் புரிந்து கொண்டு சாதகனோடு வேறு இடத்திற்குத் தனிமையை நாடிச் சென்றான் உருமண்ணுவா. அங்கு சுற்றும் முற்றும் நோக்கிக் கொண்டே யூகியின் திருமுக ஓலையை உருமண்ணுவாவிடம் எடுத்துக் கொடுத்த பின் விவரங்களைக் கூறினான் சாதகன். உருமண்ணுவா, யூகியின் ஓலையை வாங்கிப் படித்தான்.

'உதயணன் அரசபாரத்தின் பொறுப்பை உணர்ந்து கோசாம்பியைக் கைப்பற்றி அமைதியான முறையில் ஆளத் தொடங்கி விட்டதனால் வாசவதத்தையோடு தானும் மறைவிலிருந்து வெளிப்பட்டுப் பின்பு தத்தையை அவனிடம் ஒப்பித்து விட்டு, எல்லாவற்றையும் ஐயமற அவனுக்கு விளக்கிக் கூறிவிட வேண்டும்' என்ற செய்தியைத் தான் யூகி அந்தத் திருமுகத்தில் உருமண்ணுவாவுக்கு எழுதியிருந்தான். அதைப் படித்தவுடன் உருமண்ணுவாவும் மகிழ்ச்சியே அடைந்தான். 'யூகியும் தத்தையும் மறைந்த பின், அவர்கள் எங்கே எப்படிக் காலங்கழித்து வந்தார்கள்?' என்ற செய்தியை அடிக்கடி வந்த திருமுகங்களினால் அறிந்திருந்தான். ஆனாலும் அவற்றை முழுவதும் ஆதியோடந்தமாகக் கூறும்படி அப்போது சாதகனைக் கேட்டான் உருமண்ணுவா. சாதகனும் நிகழ்ந்த யாவற்றையும் முதலிலிருந்து தொடங்கிக் கூறலானான்.

"இலாவாண நகரில் அரண்மனையைத் தீயிட்டு விட்டுச் சுரங்க வழியாகத் தப்பிப் பிறரறியாமல் காட்டு வழியே சென்றோம். காட்டு வழியில் வாசவதத்தை நடக்க முடியாமல் தளர்ந்தமையால் எங்கள் பயணம் சற்று மெல்லவே நடந்தது. காட்டைக் கடந்து ஒரு தவப்பள்ளியை அடைந்து அங்கே சில நாள் தங்கி இருந்தோம். பின்பு 'அது தவத்தினர் வசிக்கும் இடமாகையினால் எங்கள் இரகசியம் வெளிப்பட்டு விடுமோ?' என்று அஞ்சி விரைவில் அங்கிருந்து கிளம்பிச் சண்பை நகரத்தைச் சென்றடைந்தோம். சண்பை நகரத்தில் யூகிக்கு நண்பனாகிய மித்திரகாமன் என்பவன் வீட்டில் சிறிது காலம் மறைவாக வசித்து வந்தோம். மித்திரகாமனின் மனைவி வாசவதத்தையை அன்போடு பேணிப் போற்றி வந்தாள். இந்த நிலையில் சண்பை நகரிலிருந்து அடிக்கடி ஆருணியிடம் கோசாம்பி நகருக்குச் சென்று பழகும் காளமயிடன் என்பவன் அக்கம் பக்கத்தில் எங்களைப் பற்றி ஐயந்தோன்ற விசாரிக்கலானான். சண்பை நகரத்தில் வசித்து வந்தாலும் ஆருணிக்கு ஒற்றனைப் போன்றவன், காளமயிடனென்னும் இந்த அந்தணன். 'இவன் மூலமாகப் பகைவனான ஆருணி அறிந்து கொள்ளும்படி நம் இரகசியம் வெளிப்பட்டு விடக்கூடாதே' என்று அஞ்சி, மித்திரகாமனையே துணைக்கு அழைத்துக் கொண்டு சண்பை நகரை விட்டுப் புறப்பட்டுப் புண்டரம் என்னும் நகரத்தை அடைந்தோம். அந் நகரத்தை ஆண்டு வந்த வருத்தமானன் என்னும் அரசன், யூகிக்கு நண்பன் ஆகையால் அவன் ஆதரவில் மறைந்து வாழ்ந்து வரலானோம். அங்கும் விதி எங்களை அமைதியாக இருக்க விடுவதாயில்லை. வருத்தமானன் மேல் பகை கொண்டிருந்த அவன் தமையன் இரவிதத்தன், திடீரென்று புண்டர நகரத்தின் மேல் படையெடுத்துத் துன்புறுத்தவே, அங்கிருந்தும் நாங்கள் தப்பி ஓடி அந் நகரத்திற்கு அரண்போல அமைந்திருக்கும் ஒரு மலை சாரலை அடைக்கலமாகக் கொண்டு அங்கே புகுந்தோம். அவ்வாறு அந்த மலைச்சாரலில் வசித்து வந்த போதுதான், உதயணன் கோசாம்பி நகரை வென்று விட்ட செய்தியும் பதுமை அவன் மனைவியானது முதலிய பழைய நிகழ்ச்சிகளையும் நாங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. யூகி இப்போது இவற்றை அறிந்து கொண்ட பின், 'தத்தையை இனிமேல் எப்படியும் உதயணனிடம் கொண்டு போய்ச் சேர்த்து விட வேண்டும்' என்றெண்ணியே இன்று என்னை இங்கே திருமுகத்தோடு அனுப்பினார். அவர்கள் எல்லோரும் இப்போது புண்டர நகரத்து மலைச்சாரலில் தான் வசித்து வருகிறார்கள். மேலே நடக்க வேண்டியவைகளை விளக்கி, நீங்கள் என் வசம் இனிமேல் கூறி அனுப்பப் போகும் செய்திகளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள். எனவே, விரைவில் எனக்கு செய்தி கூறி அனுப்புங்கள்" என்று சாதகன், உருமண்ணுவாவை நோக்கிக் கூறி வேண்டிக் கொண்டான்.

உடனே உருமண்ணுவா, சாதகனைச் சிறிது போது அங்கே தாமதிக்கும்படி கூறிவிட்டு அரண்மனைக்குள் நுழைந்து, யூகியின் திருமுகத்தோடு அவசரமாகத் தருசக மன்னனைச் சந்திப்பதற்காகச் சென்றான். அப்போதிருந்த நிலையில் தருசகனைப் போன்ற ஒரு பேரரசனிடம் எல்லாவற்றையும் விளக்கமாகக் கூறி, ஆலோசனைக் கேட்டுக் கொண்டு அதன்படி நடப்பதே சிறந்ததாக இருக்கும் என்று உருமண்ணுவாவின் மனத்தில் தோன்றியது. வியப்புக்குரிய மிகப் பெரிய இரகசிய உண்மைகளாயினும் அவற்றை அந்த நிலையில் தருசகனிடம் விவரித்துச் சொல்ல வேண்டியதாகத்தான் இருந்தது. உருமண்ணுவா ஒவ்வொன்றாகக் கூறிக் கொண்டே வரும் போது சிறிது சிறிதாகத் தருசகனுடைய வியப்புப் பெருகிக் கொண்டே இருந்தது. எல்லாவற்றையும் தருசகனுக்குக் கூறி முடித்த பின், தான் உடனே யூகி முதலியவர்களைச் சந்திப்பதற்காகப் புண்டர நகரம் செல்ல வேண்டும் என்றும், தன்னோடு துணையாக வருவதற்கு இராசகிரிய நகரத்து அரண்மனையிலிருந்து விவரந்தெரிந்த ஒரு மனிதரை உடனே அனுப்பி உதவ வேண்டும் என்று தருசகனை வேண்டிக் கொண்டான் உருமண்ணுவா. உருமண்ணுவாவின் வேண்டுகோளின் படி இராசகிரிய நகரத்து அரண்மனையைச் சேர்ந்த சக்தி யூதி என்னும் மதி நுட்பம் மிக்க மனிதனை அழைத்து அவனை உடன் கூட்டிக் கொண்டு செல்லுமாறு அனுப்பினான் தருசகன். அன்றே உருமண்ணுவா, சக்தி யூதியுடனும் ஓலை கொண்டு வந்த சாதகனுடன் புண்டர நகரத்தை நோக்கிப் பயணம் புறப்பட்டான்.

புண்டர நகரத்திற்குச் செல்லும் போது இடைவழியில் இருந்த சண்பை நகரில் நுழைந்து மூவரும் மித்திரகாமனைச் சந்தித்தனர். அவன் கூறிய சில செய்திகளிலிருந்து, 'யூகி தத்தை முதலியோருக்கு இந்த அஞ்ஞாத வாசத்தினால் மிகுந்த துன்பம் ஏற்பட்டிருக்குமோ?' என மனம் தளர்ந்து போயிருந்த உருமண்ணுவாவுக்குச் சிறிது ஆறுதல் உண்டாயிற்று. 'அவர்கள் மிகுந்த துன்பத்தை அடையாதவாறு அங்கங்கே வேண்டிய உதவிகளை எய்தியிருந்தார்கள்' என்பதை மித்திரகாமன் ஓரளவு தெளிவாகக் கூறியிருந்ததனால் தான் உருமண்ணுவாவிற்கு இந்த ஆறுதலாவது ஏற்பட்டிருந்தது. அப்பால் மித்திரகாமனிடம் விடை பெற்றுக் கொண்டு மூவரும் புண்டர நகரத்தின் எல்லையிலே இருந்த மலைச்சாரலை அடைந்து அங்கே யூகி, வாசவதத்தை, சாங்கியத்தாய் ஆகிய மூவரையும் சந்தித்தனர். உருமண்ணுவாவும் யூகியும் அவ்வளவு காலம் சந்திக்காமல் இருந்த பிரிவு தீர ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு மகிழ்ந்தனர். நண்பர்களின் அந்த உணர்ச்சிச் சங்கமத்தைக் கண்டு யூதி, சாதகன் ஆகிய இருவருக்கும் கண்களில் நீர் துளிர்த்து விட்டது. அந்தக் காட்சி அவர்களை மனம் உருக்கிற்று.

61. மதுகாம்பீர வனம்

பல நாள் பிரிந்திருந்து இப்போது முதன் முறையாகச் சந்தித்த பின்னர் யூகி, உருமண்ணுவா இருவரும் கூடிச் சிந்தித்துத் தாங்கள் எல்லோரும் உடனே கோசாம்பி நகரத்துக்குப் புறப்படுவது என முடிவு செய்தனர். 'சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென்று தானும் வாசவதத்தையும் உதயணனுக்கு முன் தோன்றினால், அவன் ஏதேதோ நினைத்து மனங்குழம்பும்படி ஆகிவிடும்' என்று உருமண்ணுவாவிடம் யூகி கூறி, அவனது கருத்து யாது எனவும் வினாவினான். 'அவ்வாறு செய்வது பொருத்தம் அல்ல' என்பதே தன் கருத்து என்றும், 'மெல்ல மெல்லவே அதை உதயணன் அறியும்படி செய்ய வேண்டும்' என்றும், அவன் யாவற்றையும் ஒருவாறு தெளிந்து கொண்ட பின்பே வாசவதத்தையை அவன் முன்னால் நிறுத்த வேண்டும் என்று யூகிக்கு உருமண்ணுவா மறுமொழி கூறினான். கோசாம்பி நகரின் ஊரெல்லையில் மதுகாம்பீர வனம் என்ற ஓர் அழகான பெரிய சோலை உண்டு. அந்தச் சோலைக்கு நடுவில், நகருக்கு விருந்தினராக வரும் அரசர்கள் தங்குவதற்கென்றே எழில் மிக்க விருந்தினர் மாளிகை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. கோசாம்பி நகரத்திலுள்ள அழகான அம்சங்களில் எல்லாம் கண்டோர் மனத்தைப் பிணிக்கும் பேரழகு வாய்ந்த அம்சம், இந்த மதுரகாம்பீர வனமும் இதனுள் இருக்கும் விருந்தினர் மாளிகையும் தான். எத்தனை கோடி முறை கண்குளிரக் கண்டாலும் தெவிட்டாதது இதன் வனப்பு. இந்தச் சோலையையும் மாளிகையையும் காத்து வரும் அரண்மனைக் காவலர்களை உருமண்ணுவாவுக்கு நன்கு தெரியும்.

அப்போது சோலையில் உள்ள மாளிகையில் வேற்று நாடுகளிலிருந்து எந்த அரசரும் வந்து விருந்தினராகத் தங்கியிருக்கவில்லை என்பதையும் உருமண்ணுவா நன்கு அறிந்திருந்தான். எனவே, புண்டர நகரத்திலிருந்து யூகி, தத்தை, சாங்கியத்தாய் முதலியவர்களோடு புறப்பட்டுக் கோசாம்பி நகருக்கு வந்த உருமண்ணுவா, நகர எல்லையை அடைந்ததும் நேரே இந்தச் சோலைக்குள்ளே நுழைந்தான். சோலைக் காவலர்கள் உருமண்ணுவாவை வணங்கி வரவேற்றார்கள். உருமண்ணுவா அவர்களைத் தனியே அழைத்து எல்லா விவரத்தையும் கூறித் தாங்கள் அங்கே தங்கியிருப்பதோ, தங்களைப் பற்றிய மற்ற இரகசியங்களோ யாருக்கும் தெரியக் கூடாது என்றும் தெரியும்படி அவர்களும் பேசலாகாது என்றும் கூறிவிட்டு யூகி முதலியவர்களை மாளிகையில் மறைவாகத் தங்கச் செய்தான். பின்பு தான் மட்டும் தனியே அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்றான். உருமண்ணுவா, வரும் செய்தியை கேட்டு அளவற்ற மகிழ்ச்சியடைந்து, அச்செய்தியைக் கொண்டு வந்த காவலனிடம் உடனே அவனை அழைத்து வருமாறு அனுப்பினான் உதயணன்.

தனக்கு வாக்களித்தபடியே உருமண்ணுவாவை விடுதலை செய்து அனுப்பிய தருசகனின் பெருந்தன்மையை தன் மனத்திற்குள்ளே எண்ணிப் பாராட்டிக் கொண்டான் உதயணன். அவன் அவ்வாறு எண்ணிக் கொண்டே இருக்கும் போது உருமண்ணுவா உள்ளே நுழைந்தான். உதயணன் ஆறாத மகிழ்ச்சியோடு அவனைத் தழுவிக் கொண்டு இனிய மொழிகளால் வரவேற்றான். சங்க மன்னர்களிடம் சிறைப்பட்ட பின்பு நடந்த நிகழ்ச்சிகளைக் கூறும்படி, உதயணன் கேட்டுக் கொள்ளவே, உதயணனுக்கு அவற்றை விவரித்துக் கூறலானான் உருமண்ணுவா. தருசகனுடைய தூதுவர்கள் சங்க மன்னர்களிடம் வந்தது தொடங்கி, அவர்கள் பண்புடனே நடந்து கொண்டு தன்னை விடுவித்து அனுப்பியது வரை உருமண்ணுவா யாவற்றையும் கூறி முடித்தான். சாதகன் தன்னிடத்தில் வந்து யூகியின் திருமுகத்தைக் கொடுத்தது, தான் புண்டர நகரம் சென்று யூகி முதலியவர்களை அழைத்துக் கொண்டு வந்து மதுகாம்பீர வனத்திலே தங்க வைத்திருப்பது முதலிய செய்திகளை மட்டும் அப்போது உதயணனிடம் கூறாமல் மறைத்து விட்டான்.

உதயணனுக்கு இவற்றைக் கூறிய பின் உருமண்ணுவா வயந்தகனைத் தனியே அழைத்துச் சென்று அவனிடம் சில இரகசியமான சூழ்ச்சித் திட்டங்களை விவரித்து, அவை நிறைவேற்றுவதற்குப் பூரணமாக ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொண்டான். அத் திட்டங்கள் யாவும் யூகி, தத்தை, சாங்கியத்தாய் ஆகியோர்களைப் பிறர் சந்தேகம் அடைந்து திகைத்து விடாதவாறு வெளிக் கொணருவதைப் பற்றியவையே ஆகும். 'உதயணனை அதற்கேற்ற முறையில் பக்குவப்படுத்துவதற்கு அவனோடு அந்நிலையில் மிகவும் நெருங்கிப் பழகிவரும் வயந்தகனே ஏற்றவன்' என்று அறிந்த உருமண்ணுவா அவனுடைய உதவியை நாடினான்.

உருமண்ணுவாவைச் சந்திப்பதற்கு முன்னால் உதயணனது மனநிலை எவ்வாறு இருந்தது என்பதை, அதற்கு முன்பே நடந்த சில நிகழ்ச்சிகளைக் கொண்டு அறிய வேண்டியது இங்கே அவசியம் ஆகிறது. உருமண்ணுவா கோசாம்பி நகருக்கு வருவதற்கு முதல் நாள் நடந்த நிகழ்ச்சிகளே அவை. அருஞ்சுகன் மூலம் கோடபதி திரும்பக் கிடைத்ததிலிருந்து வாசவதத்தையைப் பற்றிய நினைவுகளை மனத்திலிருந்து நீக்க முடியாமல் தவித்தான் உதயணன். அந்தப் பழைய நினைவுகளால், அவனுக்குப் பதுமையின் மேலிருந்த அன்பு கூடச் சிறிது குறைந்திருந்தது. அவளிடத்தில் சில நாட்களாக அவன் பாராமுகமாகவே நடந்து கொண்டான். கோடபதி என்ற யாழ் திரும்பக் கிடைத்ததிலிருந்து அவன் அவ்வாறு தன்னிடம் பற்றின்றி நடந்து கொள்வதைப் பதுமையும் ஓரளவு உணர்ந்திருந்தாள். ஒரு நாள் அவன் யாழ் வாசித்துக் கொண்டிருந்த போது அவனது பற்றற்ற நிலையில் மனத் துயரந் தாங்கமாட்டாமல் அவனிடம் ஒன்று வேண்டிக் கோண்டாள் பதுமை. "கோடபதி என்ற இந்தத் தெய்வீக யாழினால் தான் நீங்கள் நளகிரியின் மதத்தை அடக்கினீர்கள்! அன்றியும், நீங்கள் அல்லும் பகலும் நினைத்துருகும் அந்த வாசவதத்தைக்கு இதனால் தான் யாழிசையைக் கற்பித்திருக்கிறீர்கள்! தயவு கூர்ந்து தங்கள் அடியாளாகிய எனக்கும் இந்த அற்புத யாழினால் இசையைக் கற்பியுங்கள்! இது என் அன்பான வேண்டுகோள்" என்று கூறினாள்.

பதுமையின் இந்த வேண்டுகோளை உதயணன் ஒரு பொருட்டாக மதித்து மறுமொழி கூறவே இல்லை. அவள் 'வாசவதத்தை கற்ற இந்த யாழை நானும் கற்பேன்' என்று கூறிய சொற்களின் ஒலி நெருப்பிலே காய்ச்சிய வேல்போல் அவன் மனத்திலே பாய்ந்தது. அச் சொற்களால் தத்தையைப் பற்றிய சிந்தனையில் பின்னும் ஆழ்ந்து இலயித்துப் போன அவன், மனமுருகிக் கண்ணீர் சிந்தினான். அவனுடைய துயரம் பெருகுவதைக் கண்டு, தத்தையைப் பற்றித் தான் அப்போது அவனிடம் குறிப்பிட்டதே தவறு என்பதை உணர்ந்து கொண்டாள் பதுமை. தன்னுடைய முதல் மனைவியாகவும் ஆருயிர்க் காதலியாகவும் இருந்து மறைந்து போன அவளைப் பற்றி அவன் அவ்வாறு நினைப்பது இயற்கையே என்றும் எண்ணினாள் பதுமை. அவன் இப்படி மனம் வருந்தியிருக்கும் இந்த நிலையில் தான் அவனிடம் கோபங்கொண்டு பிணங்குவது கூடப் பொருந்தாது என்று எண்ணித் தற்செயலாக அங்கிருந்து எழுந்து செல்பவளைப் போலக் குறிப்பறிந்து அவனைத் தனிமையில் விடுத்துச் சென்று விட்டாள் அவள்.

பதுமை சென்ற சற்றைக்கெல்லாம் வயந்தகன் அங்கே உதயணனைக் காண வந்தான். அவன் வரவையும் ஒரு பொருட்டாக மதித்து வரவேற்கவில்லை உதயணன். "பிரிந்து சென்ற வாசவதத்தையை எண்ணிப் பதுமையின் மேல் பாராமுகமாக நடந்து கொள்ளுதல் தகுமா? அவள் என்ன பிழை செய்தாள்? அவள் மேல் வெறுப்பு ஏன்?" என்று அன்போடு குழைந்த குரலில் வயந்தகன் கேட்டபோது, அதற்கும் அவனிடமிருந்து மறுமொழியே பிறக்கவில்லை. பழைய நினைவுகளை எண்ணியும் அரற்றியும் படுக்கையின் பஞ்சணை மேல் சிறு குழந்தையைப் போல அழுது புரண்டு கொண்டிருந்தான் உதயணன். இந்த நிலையைக் கண்டு வயந்தகன் மேலும் பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து சென்று விட்டான். உதயணனும் அதே நிலையில் இரவு உணவு கூட உட்கொள்ளாமல் உறங்கிவிட்டான். விடியற்காலை நேரத்தில் ஒரு கனவு கண்டு விழித்துக் கொண்ட போது தான் அவன் மறுபடி தன் நினைவைப் பெற்றான். பாற்கடலிலிருந்து, வெண்ணிறத்து இளங்காளை ஒன்று உள்ளே வீற்றிருக்கிற வெண்டாமரை மலர் ஒன்றை, அம்மலர் பற்றிய உண்மையைத் தன்வசம் கூறிய பின்னர், தெய்வ மகள் ஒருத்தி வந்து தனக்கே அளிப்பது போலக் கனவு கண்டான் உதயணன்.

கனவின் முடிவில் அவன் விழித்துக் கொண்டான். அந்நேரம் விடிவதற்கு உரிய நேரம் என்பதைக் கண்டு, கனவின் பயனை அறியும் ஆவல் ஏற்பட்டது அவனுக்கு. விடிந்ததும் புறநகரில் உள்ள தவப்பள்ளிக்குச் சென்று அங்கிருந்த முனிவர் ஒருவரிடம் தன் கனவைக் கூறி அதன் பயனையும் உடனே தனக்கு உரைக்குமாறு வேண்டிக் கொண்டான். முனிவர் அவன் விருப்பப்படியே கனவின் பயனை உரைத்தார். அவர் கூறிய பயனைக் கேட்டு மகிழ்ச்சியும் வியப்பும் ஒருங்கே தோன்றியது உதயணனுக்கு. "உதயணன்! நீங்கள் யாவரும் இறந்து போய்விட்டதாகக் கருதியிருக்கும் வாசவதத்தை, உண்மையில் இன்று வரை உயிரோடு இருக்கிறாள். அவள் இறந்து விட்டாள் என்ற தவறான எண்ணம் உனக்கு இருக்குமானால் அதை இப்போதே மாற்றிக் கோள். இன்று அல்லது நாளை மாலைப் பொழுதுக்குள் வாசவதத்தையை எப்படியும் நீ அடைந்தே தீருவாய். அது மட்டுமல்ல விரைவில் அவளிடத்தில் உனக்கு ஒரு புதல்வன் பிறப்பான். அப்புதல்வன் தேவருலகையும் ஆளும் வாய்ப்புடையவன். வெண்தாமரைப் பூ வாசவதத்தையையும், அதில் வீற்றிருக்கும் இளங்காளை உனக்குப் புதல்வன் பிறக்கப் போவதையும், பூவைத் தெய்வமகள் உன் கையில் அளித்தது தத்தையை விரைவில் நீ அடையப் போவதையும் குறிப்பிடுகின்றன. நீ கண்ட கனவின் பொருள் இதுதான்" என்று கூறி விளக்கினார் முனிவர். இச் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் பூரிப்புக் கொண்ட மனநிலையோடும் அந்த முனிவரிடம் விடை பெற்றுக் கொண்டு அரண்மனை திரும்பினான் உதயணன்.

அவன் அரண்மனை திரும்பிய சிறிது நேரங்கழித்துத் தான் உருமண்ணுவா அவனைச் சந்தித்தது நிகழ்ந்தது. எனவே சிந்தனைக் குழப்பமின்றி மனமகிழ்ச்சியும், நிறைந்த எண்ணமும் பொருந்திய நிலையிலிருந்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அவனைச் சந்தித்து விட்டு வயந்தகனைத் தனியே அழைத்து விவரம் கூறி உதவி நாடினான் உருமண்ணுவா. உடனே வயந்தகன் உதயணனுக்குக் கோடபதி திரும்பக் கிடைத்த வரலாற்றையும் அதனால் அவன் மனம் தத்தையைப் பற்றிய பழைய நினைவுகளில் சிக்கிக் குழம்பியிருப்பதையும் உருமண்ணுவாவுக்கு விவரித்தான். 'உதயணன் கோடபதியால் வாசவதத்தையைப் பற்றிய நினைவாகவே இருக்கிறான்' என்பது தன் காரியத்தின் வெற்றிக்கு ஏற்றதாகத் தோன்றவே, வயந்தகனுக்கு உருமண்ணுவா மறைவான திட்டம் ஒன்றைக் கூறி, அதன்படி யாவற்றையும் ஏற்பாடு செய்து நடத்தும்படி உரைத்தான்.

62. நிறைவேறிய நோக்கம்

உருமண்ணுவா தன்னிடம் கூறிய திட்டப்படி செயலாற்றக் கருதிய வயந்தகன், உதயணனைச் சந்தித்து ஒரு கருத்தை அவனிடமிருந்து அறிந்து கொள்வதற்காக மெல்லப் பேச்சுக் கொடுத்தான். "எந்த நேரமும் மறைந்து போன தத்தையை எண்ணி எண்ணி வேறு நினைவே இல்லாமல் இப்படி அழுது அரற்றிக் கொண்டிருந்தால் என்ன செய்வது? பதுமை, தத்தை இருவருள் யார் மேல் தங்களுக்கு அதிக அன்பு என்பதும் தெரியவில்லையே?"

வயந்தகன் இவ்வாறு கூறியதும் உதயணன், "வயந்தக! இதற்கு நான் விடை கூறித்தான் நீ உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? என் உயிரினும் இனிய காதலி வாசவதத்தையே அல்லவா? என் தீவினைப் பயனால் அவள் மறைந்து விட்டாள். இலாவாண நகரத்திலே நெருப்பு அவளைக் கொன்று விட்டதே?" என்று மறுமொழி கூறினான்.

"அரசே! தாங்கள் கூறுவது முற்றிலும் சரி. ஆனால், அவர் மறைவை எண்ணி, ஒரு நாட்டிற்கு மன்னராகிய தாங்கள் இவ்வாறு வெளிப்படையாக அழுது அரற்றிக் கொண்டிருப்பது பிறருக்குத் தங்கள் பலவீனத்தைக் காட்டிவிடும்! தங்கள் மனம் அடிக்கடி குழம்பும் இயல்புடையதாக இருக்கிறதே? வாசவதத்தையே உயிர்க் காதலி என்றால், பதுமையை எப்படிக் காதலித்தீர்கள்? ஏன் மணந்து கொண்டீர்கள்? இப்போது அவள் மேல் வெறுப்புக் கொள்வது எதற்காக?" என்று பேச்சுப் போக்கில் அதிக உரிமை பாராட்டி இந்தக் கேள்வியை வெளியிட்டான் வயந்தகன்.

வயந்தகனுடைய இந்தச் சொற்கள் உதயணனைத் திகைக்க வைத்துவிட்டன; சுருக்கென்று மனத்தில் தைத்தும் விட்டன. ஆனால் பொறுத்துக் கொண்டு, "பதுமை, வாசவதத்தையைப் போலவே உருவ அமைப்புப் பெற்றிருந்ததனால் என் மனம் அவளிடம் பேதலித்து விட்டது. அன்றியும் பதுமையைக் காதலித்தது, மணம் புரிந்து கொண்டது யாவும் என் விதியினது விளைவுகள். அவற்றைத் தடுத்திருக்க நாம் யார்?" என்று பதில் கூறினான். "அன்று நாம் இராசகிரிய நகரத்திலே சந்தித்த அந்தண முனிவர், இன்று தற்செயலாக இங்கே வந்திருக்கிறார். அன்று வாசவதத்தையை எப்படியும் உயிரோடு காண முடியும் என்று வாக்களித்த அம் முனிவர் இன்றும் அதையே வற்புறுத்திக் கூறுகின்றார். ஆனால், இதற்காக அவர் உங்களுக்கு விதிக்கும் நிபந்தனை ஒன்றுண்டு. நீங்கள் உங்களது பள்ளியறையை மங்கலப் பொருள்களால் அலங்கரித்து, வாசவதத்தையைப் பற்றிய நீங்கா நினைவோடு, பதுமையைப் பிரிந்து சில நாள்கள் தனிமையாக இருக்க வேண்டும். இவ்வாறு விரதமிருந்தால் தத்தை உங்களிடம் வருவாள்" என்று மகிழ்ச்சி மலரும் உதயணன் முகத்தைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே கூறினான் வயந்தகன்.

உதயணன் அவ்வாறே விரதமிருப்பதாக வயந்தகனிடம் உறுதிமொழி தந்தான். வயந்தகன், 'உருமண்ணுவாவின் சூழ்ச்சி வெற்றியே பெறும்' என்ற நினைவோடு உதயணனிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டான். அவன் சென்ற பின்னர் உதயணன், பதுமையை அழைத்து, 'அன்றிலிருந்து தான் வேறு சில பகைவர்களை வெல்லுவதற்காகச் சில மறைவான யோசனைகளில் ஈடுபடப் போவதால் அவள் சில நாள்கள் தன்னை சந்திக்கவே வேண்டா' என்று ஒரு பொய்யைக் கற்பித்துக் கூறினான். அந்தச் சொற்களில் பதுமை சூதுவாது காணாது 'சரி' என்று ஒப்புக் கொண்டாள். பிறருக்கும் இதே போன்றதொரு காரணத்தைக் கூறித் தனக்குத் தனிமையைப் பூரணமாக ஏற்படுத்திக் கொண்டான் உதயணன். பின்னர் அன்று இரவு வயந்தகன் கூறியபடியே பள்ளியறையை மங்கலப் பொருள்களால் அலங்கரித்துத் தூய ஆடை அணிகளை அணிந்து கொண்டு வாசவதத்தை பற்றிய நினைவுகளை இடைவிடாமல் எண்ணியவனாக கோடபதியை வாசித்துக் கொண்டே உறங்கிவிட்டான். பள்ளியறையிலோ, பள்ளியறைக்கு வெளிப்புறத்திலோ வேறு யாரும் இல்லை. 'ஒரு பணிப்பெண் கூட மறந்தும் அங்கே இருக்கக் கூடாது' என்று கடுமையான ஆணையிட்டிருந்தான் உதயணன். எனவே பூரணமான முறையில் தனிமை நிலவியது அங்கே.

இந்த நிலையில் உருமண்ணுவாவும் வயந்தகனும், மதுகாம்பீர வனத்திலிருந்து இரவின் தனிமை அமைதியில் யாரும் அறிந்து கொண்டு விடாமல், வாசவதத்தையை அழைத்துக் கொண்டு அரண்மனைக்குப் புறப்பட்டனர். 'எங்கே அழைத்துச் செல்கின்றார்கள்?' என்ற விவரம் அரண்மனையை அடையும் வரை வாசவதத்தைக்குக் கூடத் தெரியாது. அரண்மனையை அடைந்து உதயணனின் பள்ளியறை வாயிலுக்கு வந்ததும், "உன்னைப் பிரிந்து, உன் கணவனாகிய உதயணன் எவ்வளவு துன்புறுகிறான் என்பதை நீயே உள்ளே சென்று கண்டு வா" என்று கூறி அவளை அவர்கள் உள்ளே அனுப்பினார்கள். அவள் உள்ளே நுழைகின்ற நேரத்தில் தான் "வாசவதத்தையே! என் ஆருயிர் மருந்தே! உன்னைப் பிரிந்து ஆற்றாமல் உயிர் பொறுத்து இன்னும் வாழ்கின்றேனே நான்" என்று கனவில் உதயணன் வாய் சோர்ந்து உறக்கத்தின் இடையே அரற்றிக் கொண்டிருந்தான். அவ் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே, அவற்றால் மனம் நெகிழ்ந்து கனிய, வாசவதத்தை அவன் உறங்கிக் கொண்டிருக்கும் பஞ்சணைக்கு அருகே சென்றாள். தன்னை நினைந்து வெம்மையான பெருமூச்சுடன் விரக தாபத்தால் பஞ்சணையிலிருந்த மலர்களும் வாடும்படி கோடபதியைத் தழுவியவாறே உறங்கும் கணவனைக் கண்டு, அவள் மனம் பெரிதும் இரங்கியது. கனவிலும் நினைவிலும் அவன் உள்ளத்தில் தானே படிந்திருக்கின்றோம், என்பதை அறிந்து பெருமிதம் உண்டாயிற்று அவளுக்கு. அவள், உறங்கும் தன் கணவன் பாதங்களைத் தீண்டி மெல்ல வணங்கினாள். கோடபதியைக் கண்டதும், தொலைந்து போன மகனை மீண்டும் கண்டடைந்த தாய் போலக் களிப்புற்றாள் அவள்.

பஞ்சணையில் ஒரு புறத்தில் மெதுவாக அமர்ந்து உதயணன் தழுவிக் கொண்டிருந்த கோடபதியை அவன் உறக்கம் கலைந்து விடாமல் எடுத்து மெல்ல வாசிக்கத் தொடங்கினாள். யாழை வாசிக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில், அந்த இனிய ஓசை காதில் விழுந்ததனாலோ என்னவோ, உதயணன் தூக்கம் கலைந்து மெல்ல கண் விழித்துக் கொண்டான். விழித்த அவன் கண்கள், தன் அருகில் பஞ்சணையில் அமர்ந்து கோடபதியை வாசித்துக் கொண்டிருந்த வாசவதத்தையைக் கண்டனவோ இல்லையோ, வியப்பும் திகைப்பும் தோன்ற விரிந்து மலர்ந்தன. "வாசவதத்தாய்! வந்து விட்டாயா?" என்று அவளை நோக்கிக் கூறிவிட்டு எழுந்து, அவள் கூந்தலை நீவியவாறே அவளைத் தழுவிக் கொண்டான் உதயணன். "என்னை நினையாமல் உன்னால் இவ்வளவு நாள்களை எவ்வாறு கழிக்க முடிந்தது?" என்று குழைந்த குரலில், அவளை அணைத்துக் கொண்டே கேட்டான் அவன். வாசவதத்தை அவனுடைய வினாவுக்குப் பதிலே கூறாமல் தலை குனிந்து நாணிக் கொண்டிருந்தாள். உதயணன் மேலும், தான் இலாவாண நகரில் அவள் வேண்டிக் கொண்டதற்கிணங்கத் தழை, பூ முதலியன கொய்யச் சென்றது, திரும்பி வருவதற்குள் அரண்மனையில் தீப்பற்றி அவள் எரியுண்டது முதலிய செய்திகளைத் திரும்பத் திரும்பக் கூறி அரற்றிக் கொண்டிருந்தான். அவற்றிற்கு வாசவதத்தை வாய் திறந்து மறுமொழி கூறவே இல்லை. நாணியே அமர்ந்திருந்தாள்.

உதயணன் விழித்துக் கொண்டிருந்தாலும், அவன் உடலும், உள்ளமும் உறக்கச் சோர்வில் ஈடுபட்டு மயங்கி இருந்ததனால், 'தன் எதிரே, வாசவதத்தை அமர்ந்திருப்பது, அவள் வீணை வாசிப்பது, தான் அவளைத் தழுவிக் கொண்டிருப்பது' எல்லாவற்றையுமே கனவென்று எண்ணிக் கொண்டனவோ என்னவோ? மீண்டும் அப்படியே தூக்கத்திலாழ்ந்து விட்டான். அவன் கேட்ட கேள்விக்கு வாசவதத்தை மறுமொழி கூறாமல் எழுதி வைத்த பாவை போல் இருந்தாள். ஆகையினால் கனவு என்றே எண்ணிக் கொண்டு விட்டானோ என்னவோ? சிறிது நேரம் திரும்பத் திருமப் அரற்றிக் கொண்டே கண்கள் சோர்ந்து அவன் தூங்கிவிட்டான்.

இந்தச் சமயத்தில் பள்ளியறைக் கதவைத் திறந்து கொண்டு வயந்தகன் உள்ளே வந்து, "இன்று தங்கள் நாயகர் தங்கள் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டுவதற்காகவே இங்கே அழைத்து வந்தோம். நீங்கள் முறைப்படி யூகியுடனே சேர்ந்து வந்து, நாளைப் பகலில் இருவருமாக உதயணனைச் சந்திக்க வேண்டும் என்ற ஏற்பாடு செய்திருக்கின்றோம். இப்போது இனிமேல் நீங்கள் இங்கே தங்குவது கூடாது! நாம் விரைவில் மதுகாம்பீர வனத்திற்குத் திரும்பிப் புறப்பட வேண்டும். வாருங்கள் போகலாம்" என்று அழைத்தான். கரையை உடைத்துப் பாயும் நீரைப் போலத் துயரம் பெருகிப் பாய்ந்தது தத்தையின் மனத்தில். கணவனைப் பிரிய வேண்டி நேர்கிறதே என்ற அந்தத் துயரத்தோடு தன் மடியில் சாய்ந்திருந்த உதயணன் தலையை மெல்ல எடுத்து வைத்துவிட்டு எழுந்திருந்தாள். யாழையும் அவனையும் பார்த்தவாறே நீர் துளிக்கும் கண்களோடு வயந்தகனைப் பின் தொடர்ந்து வெளியேறினாள். மதுகாம்பீர வனமடைந்து யூகியோடும் சாங்கியத் தாயோடும் இருந்தாள்.

வயந்தகனால் வாசவதத்தை மதுகாம்பீர வனத்திற்கு அழைத்துச் செல்லப் பெற்ற பின், இங்கே அரண்மனை மேல் மாடத்திலுள்ள பள்ளியறையிலே, 'வாசவதத்தை தன் பக்கத்திலே இருக்கின்றாள்' என்ற எண்ணத்துடனே உறங்கிக் கொண்டிருந்த உதயணன், இடையே விழித்துக் கொண்டான். விழிப்பு வந்ததும், மஞ்சத்திலே தன் அருகிலே தத்தையைத் தேடி அவன் கண்கள், ஏமாற்றமடைந்து அவளை அங்கே காணாமல் கனவென்றே திகைத்தன.

மீண்டும் எழுந்திருந்து பள்ளியறை முழுவதும் நன்றாகத் தேடிப் பார்த்தான். தத்தை அங்கே இல்லை என்பது உறுதியானவுடன், அவன் மனம் துயரத்தினால் மிக்க வேதனையடைந்தது. பெறுவதற்கரிய மாணிக்கம் ஒன்றைப் பெற்றவன் தவறுதலாக அதனை நீர் நிறைந்த ஆழமான மடு ஒன்றில் இட்டு விட்டாற் போன்ற நிலையை எய்தினான் உதயணன். அந்தத் துயரம் முற்றிய மனநிலையால் அழுது கதறுதலைப் போலப் புலம்பத் தொடங்கிவிட்டான் அவன். அந் நிலையில் தத்தையை மதுகாம்பீர வனத்தில் கொண்டு போய் விட்டுவிட்டுத் திரும்பிய வயந்தகன், உதயணனுக்கு ஆறுதல் கூற வருவான் போல அங்கே வந்தான்.

"இரவும் பகலும் இவ்வாறு 'வாசவதத்தை வாசவதத்தை' என்று அவளையே நினைத்து இரங்குதல் தங்களைப் போன்ற பேரரசர்க்கு ஏற்றதன்று! பகைவர் இதனைத் தங்கள் பலவீனமாக எண்ணி ஏதேனும் செய்ய முற்படுவர்" என்று பலமுறை கூறிய அறிவுரையையே அப்போதும் வயந்தகன் அவனுக்கு ஆறுதலாகக் கூறினான். வயந்தகன் கூறிய இந்த ஆறுதல் மொழிகளைக் கேட்ட உதயணன், தத்தை சற்று நேரத்திற்கு முன் தன் பள்ளியறைக்கு வந்தது, தன்னருகில் அமர்ந்து கோடபதியை வாசித்தது, அவளது எண்ணெய் காணாது மாசுண்ட கூந்தலை தான் அன்போடு தன் கைகளால் நீவியது முதலிய யாவற்றையும் சோக உணர்ச்சியும் ஆர்வமும் தொனிக்கும் குரலில் உதயணன் கூறினான். ஆனால், வயந்தகனோ சிரித்துக் கொண்டே அவனுக்குப் பதில் கூறினான். "கனவிலே கண்ட பொருளை நனவிலே அடைய வேண்டும் என்று தேவர்களே ஆசைப்பட்டாலும் முடியாதே! உன் வார்த்தையைக் கற்றவர்கள் கேட்டால் நகைப்பார்கள்! ஒன்று வேண்டுமானால் நடந்திருக்கும். ஆடலும் பாடலும் புன்னகையும் கொண்டு வாசவதத்தைப் போன்ற உருவத்துடனேயே இங்கே அரண்மனையில் ஓர் இயக்கி உலாவி வருகின்றாள். அவள் மாயா வடிவமுடையவள். அவளே உங்கள் கனவில் வாசவதத்தை போலத் தோன்றி, உங்களை ஏமாற்றியிருக்க வேண்டும்! இனி அந்த மாய வடிவின் நடமாட்டம் நிகழாதபடி மந்திரங்களைக் கொண்டு பரிகாரம் புரிந்து காக்க ஏற்பாடு செய்து விடுகின்றேன்" என்று தான் ஒன்றையும் அறியாதவன் போல் ஒரு பொய்யைத் துணிந்து கூறினான் வயந்தகன்.

ஆயினும் வயந்தகன் கூறியபடி அது, 'கனவாக இருந்து விடக்கூடாதே!' என்று கலங்கியது உதயணன் நெஞ்சம். 'புண்ணியப் பயனாக அது நனவிலேயே நிகழ்ந்து விடலாகாதா?' என ஏங்கினான் அவன். மறுநாள் பொழுது புலர்ந்ததும் 'கனவாகவே இருப்பினும் அது நல்விளைவைத் தருதல் வேண்டும்' என்ற கருத்துடன் பலவகை அறங்களை விரும்பிச் செய்தான். குளம்புகளிலும் கொம்புகளிலும் பொன் தகடுகளைப் பதித்து, ஒளிமயமான புதிய ஆடைகளால் உடம்பைப் போர்த்திய பசுக்கள் பலவற்றைத் தானமாக வழங்கினான். அந்தணர்கள் ஏழேழு முறை அப்பரிசில்களைப் பெற்றனர்.

வாசவதத்தையை தன் பள்ளியறையில் தான் உண்மையாகவே கண்டிருப்பினும், வயந்தகன் கூறியவற்றாலும், உறங்கி விழித்ததும் அவளைக் காணாமையாலும், படிப்படியான சிந்தனைக்குப் பின் அது கனவாகத்தான் இருக்கும் என்ற முடிவிற்கே உதயணனும் வந்து சேர்ந்து விட்டிருந்தான். தத்தையையே எண்ணி அவள் மேல் வேட்கையுற்றிருந்த தன் மனநிலைக்கு ஏற்ப அவள் கண்முன் தெரிந்தது போலவும் பக்கத்திலமர்ந்து கோடபதியை வாசித்தது போலவும் தனக்குத் தோன்றியவை எல்லாம் 'வெறும் பிரமை! ஆசையின் விளைவு!' என்ற முடிவிற்கு வந்தான். 'வேட்கையும் ஆசையும் உடைய எவருக்கும் இவ்வியல்பு இருக்கும் போலும்' என்று தன் மனத்தையும் சமாதானப்படுத்திக் கொண்டுவிட்டான் அவன்.

உதயணன் நம்பிக்கை இழந்து மனந்தளர்ந்த இதே சந்தர்ப்பத்தில், வயந்தகன் மீண்டும் அவனைக் கண்டு அருமையான யோசனை ஒன்றைக் கூறினான். "முன்பு நாம் மகத நாடு சென்றிருந்த போது இராசகிரிய நகரத்தில் சந்தித்தோமே ஓர் முனிவர் அவர் இப்போது இங்கே கோசாம்பி நகரத்திற்கு வந்து நகர்ப்புறத்திலுள்ள மதுகாம்பீர வனமெனும் சோலையில் தங்கியிருக்கிறார். வாசவதத்தை சென்றிருக்கும் இடம் ஏதுவாயினும் மந்திர வன்மையால் அவர் மீட்டுக் கொடுப்பார். நாம் இருவரும் சென்று இன்று அவரைச் சந்தித்தால், ஏதாவது நலம் விளையும் என்று கருதுகிறேன்" என வயந்தகன் கூறவும் முழு மனத்தோடு மதுகாம்பீர வனம் சென்று அவரைச் சந்திக்கச் சம்மதித்தான் உதயணன். உண்மையாகவே மதுகாம்பீர வனத்தில் அப்போது யார் வந்து தங்கியிருக்கிறார்கள் என்பதை உதயணனிடம் கூற விரும்பாதவனல்லன் வயந்தகன்! ஆயினும், 'அவனே நேரில் வந்து கண்டு திகைக்கவும் வியப்புக் கொள்ளவும் செய்ய வேண்டும்' என்றே யாரோ ஒரு முனிவர் வந்திருப்பதாக ஒரு பொய்யைக் கூறினான். வயந்தகனும் உதயணனும் வேகமாகச் செல்லும் குதிரைகள் பூட்டிய தேர் ஒன்றில் மதுகாம்பீர வனத்தை நோக்கிப் புறப்பட்டனர். விரைவில் ஊரெல்லையிலிருந்த அந்த வனத்தை அடைந்தது அவர்கள் தேர். உதயணனை அழைத்து வரப்போகின்ற செய்தியை யூகிக்கு ஏற்கனவே புலப்படுத்திவிட்டு தத்தையும் அவனும் உதயணனைச் சந்திக்க ஏற்றவாறு இருக்கும்படி முன்பே கூறிவிட்டுச் சென்றிருந்தான் வயந்தகன். யூகியின் தோற்றம், அவன் அப்போதிருந்த நிலையாவும் மிகவும் துயரத்திற்கு உரியனவாக இருந்தன. பல நாள்களாக எண்ணெய் பூசிப் பேணப்படாமையினால் சடை படர்ந்து பிடரியில் தொங்கும் குஞ்சி! பாவத்துடனே போராடி வென்ற ஆண்மையைப் போன்று ஒருவிதமான புனித நிலையின் சாயல் மட்டுமே புலப்படும் ஒடுங்கிய தோற்றம்! காவி நிறத்து ஆடைகள்! 'இரவு நேரத்தில் உண்பதில்லை' என்ற விரதத்தைக் கொண்டிருந்ததனால், இளைத்திருந்த உடல்! அதுவரை அவனது சிந்ததையில் இருந்தது ஒரே ஓர் எண்ணம்தான். 'உதயணன் நல்லபடி தன் அரசைப் பெற்று நீடூழி காலம் வாழ வேண்டும்' என்பது தான் அந்த எண்ணம்! அதுவும் நிறைவேறிவிட்டது.

63. பதுமையின் பெருந்தன்மை

வாசவதத்தையின் தோற்றத்திலும் நீண்ட பிரிவுத் துயரமே தென்பட்டது. உடல் முழுவதும் பொன்னிறப் பசலை போர்த்திருந்தது அவளுக்கு. ஒளி வறண்ட நெற்றி, செழிப்புக் குறைந்து ஒடுங்கிய உடல் என்று இவ்வாறு இருந்த இந்த நிலையிலும், கணவனை நலமுறச் செய்வதற்காகத் தான் தனிமை வாழ்வை மேற்கொண்ட தியாகத்தின் ஒளியும் கற்பின் உறுதியும் அவள் முகத்தில் நன்றாகப் பிரதிபலித்தன. 'உதயணனை அழைத்துக் கொண்டு வயந்தகன் வரப் போகின்றான்' என்பதை அறிந்த உடனேயே, யூகியும் தத்தையும் மதுகாம்பீர வனத்து மாளிகையில் தனித்தனியாக இருந்த இரண்டு அறைகளில் வேறுவேறாக மறைந்து நின்று கொண்டனர். சாங்கியத்தாயும் தத்தையுடனே இருந்து கொண்டாள்.

வயந்தகன் தேரிலிருந்து இறங்கி வனத்துக்குள் முன்னே செல்ல, உதயணன் அவனைப் பின்பற்றிச் சென்றான். மாளிகையினுள் நுழைந்து யூகி இருக்கும் அறையருகே சென்றதும், "இவ்வறையினுள்ளேதான் மகதத்தில் நாம் சந்தித்த அந்த முனிவர் பெருமான் எழுந்தருளியிருக்கின்றார். உள்ளே சென்று அவரைக் காணுங்கள்" என்று உதயணனிடம் கூறி அவனை உள்ளே அனுப்பித்தான் வயந்தகன். உதயணன் பயபக்தியுடனே அவ்வறைக்குள் நுழையவும் வெளியே நின்ற வயந்தகன் தனக்குள் சிரித்துக் கொண்டான். உள்ளே சென்ற உதயணன் அறையினுள் முனிவரைப் போன்ற தோற்றத்துடனே யாரோ ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு அவர் அருகே சென்றான். சென்றவன் அங்கே இருந்தவரின் முகத்தை ஏறிட்டு நோக்கினானோ இல்லையோ, உடனே திடுக்கிட்டான்; திகைத்தான்! தன் கண்கள் தன்னை ஏமாற்றுகின்றனவோ என்று தோன்றியது அவனுக்கு. மீண்டும் உற்றுப் பார்த்தபின் மாளிகையே அதிரும் படியாக, "யூகி" என்ற குரல் அவன் வாயிலிருந்து வெளிவந்தது. அடுத்த கணம் தாவிப் பாய்ந்து அவனைத் தழுவிக் கொண்டான். இருவர் கண்களிலும் நீர் முத்துக்கள் திரண்டன.

யூகியைத் தழுவிக் கொண்டபோது, அவன் இறந்து போய் விட்டதாகத் தான் கேள்விப்பட்டிருந்த செய்தியைப் பற்றிய ஐயம், உதயணனது மனத்தில் எழுந்தது. உடனே யூகியின் மார்பிலிருந்த யானைக் கொழும்பின் தழும்பு அவன் பார்வையில் தெரிந்தது. அந்த ஐயம் முற்றிலும் ஏற்படாதவாறு செய்தது. இளமையில் கலிங்க தேசத்து அரசனின் பட்டத்து யானையோடு போர் செய்ததால், யூகியின் மார்பில் அந்த வடு இருப்பது உதயணனுக்கு நன்கு தெரியும். துயரப் பெரு மூச்சுடனே தான் தழுவிக் கொண்டிருந்த தன் இன்னுயிர் நண்பன் யூகியை நோக்கி உதயணன் பேசலானான். "பிறருக்கு நன்மை பயக்கும் சூழ்ச்சிகளை மேற்கொண்டு உழைப்பவனாகி, அதனால் துன்பங்கள் எவ்வளவு வரினும் தாங்கும் விந்தை மனிதன், நீ ஒருவன் யூகி! என் நலனுக்காகவே நீ இறந்து விட்டதாகச் செய்தி பரப்பியிருக்கிறாய் என்பது உன்னை நன்கு அறிந்த எனக்கு இப்போதல்லவா தெரிகிறது? எப்படியோ! பழைய நிகழ்ச்சிகள் போகட்டும்! இனி நீ என்றும் என்னைப் பிரியவே கூடாது! பிரிந்தால் பின்பு உன் உதயணனை நீ உயிரோடு காணமாட்டாய்! என்னால் இனி உன் பிரிவைத் தாங்கிக் கொள்ளவும் இயலாது" என்றான் உதயணன்.

அப்போது வயந்தகனும் உள்ளே வந்தான். யூகி, வயந்தகன் இருவரும், அதுவரை நன்மை குறித்தே தாங்கள் அவ்வளவு சூழ்ச்சிகளையும் செய்ய நேர்ந்ததென்பதையும் வாசவதத்தை உயிருடனே இருக்கிறாள் என்பதனையும் உதயணனிடம் கூறித் தங்களை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டனர். உதயணன் உடனே வாசவதத்தையைக் காண வேண்டும் என்ற ஆவலால் துடித்தான். யூகியும் வயந்தகனும் அவனைப் பக்கத்திலிருந்த மற்றோர் அறைக்கு அழைத்து சென்றனர். உதயணனைக் கண்டதும் வாசவதத்தை தான் அவன் நன்மைக்காகவே அதுவரை அவ்வாறு மறைந்து வசிக்க நேர்ந்தது என்று கூறிக் கண்ணீர் சிந்தி அரற்றினாள். அவன் திருவடிகளிலே வீழ்ந்து தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினாள். அவ்வாறு அவள் வணங்கியபோது அவளது கண்ணீர் அவன் பாதங்களை நனைத்தது. அவிழ்ந்த கருங்குழல் அவன் அடிகளைத் தழுவியது. அவள் நிலை அவனை மனமுருகச் செய்தது. குனிந்து அவளைத் தன் கைகளால் தூக்கி நிறுத்தித் துயரந்தீரத் தழுவிக் கொண்டான்.

அருகிலே நின்ற சாங்கியத் தாய் அப்போது அவன் கண்களில் புலப்படவே, அவளைக் கை குவித்து வணங்கினான். "முன்பே பலமுறை என்னைத் துன்பங்களிலிருந்து மீட்டு அரிய பெரிய உதவிகளை எல்லாம் செய்துள்ளீர்கள்! உங்கள் உதவியின் அளவு ஆலம் வித்து போல சிறியதாக இருந்தாலும், அவற்றால் தோன்றி விளைந்து பல படர்ந்த நன்மைகள் ஏற்பட்டுள்ளன. அந்த நன்றியை நான் என்றுமே மறக்க மாட்டேன்" என்று சாங்கியத் தாய்க்கு நன்றி செலுத்தினான். பின் மீண்டும் தத்தையைக் கூர்ந்து நோக்கிய அவன், முதல் நாளிரவு தன் பள்ளியறையில் கண்டது போலவே அவள் தோற்றம் இப்போதும் இருந்ததைக் கண்டு வயந்தகனைக் கூப்பிட்டுக் கேட்டான். வயந்தகன் உண்மையாக நிகழ்ந்தவற்றை எல்லாம் அவனிடம் கூறிவிட்டான். சற்றைக்கெல்லாம் யாவரும் தேரேறி அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்றனர். தேரில் செல்லும்போது எல்லார் மனத்திலும் மகிழ்ச்சியே நிரம்பியிருந்தது.

'இறந்து போனார்கள் என்றெண்ணியிருந்த வாசவதத்தை, யூகி, சாங்கியத் தாய் ஆகிய மூவரையும் தேரில் ஏற்றிக் கொண்டு வயந்தகனும் உதயணனும் வருவதைக் கண்ட கோசாம்பி நகர மக்கள் மட்டிலா மகிழ்ச்சி கொண்டனர். தேர் சென்ற வீதிகளில் எல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி இந்தக் காட்சியைக் கண்டனர். 'பிரிந்தவர் கூடினோம்' என்ற மகிழ்ச்சியுடனே யாவரும் கோசாம்பி நகரத்து அரண்மனையை வந்தடைந்தனர். 'யூகிக்குத் தன் நன்றியைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும்' என்பது போன்ற ஆசை உதயணனுக்கு அப்போது அடிக்கடி ஏற்பட்டது. ஆனால், 'அடிக்கடி ஒருவருக்கு நன்றியைக் கூறுவதும் நட்பிற்கு ஏற்றது அல்லவே' என்றெண்ணித் தன் ஆசையை அடக்கிக் கொண்டான். சாங்கியத் தாயை மட்டும் இரண்டு மூன்று முறை மீண்டும் பாராட்டுக் கூறி நன்றி செலுத்தினான். பதுமாபதியின் அந்தப்புரத்திற்கு ஆளனுப்பி, 'உன் தமக்கை முறையுடையவளாகிய வாசவதத்தை இன்று வந்திருக்கிறாள்! நீ வந்து அவளைக் காண்க' என்று அவளுக்குச் செய்தி அறிவிக்கச் செய்திருந்தான்.

செய்தியறிந்த பதுமை, 'வாசவதத்தை வந்துவிட்டாளே!' என்று சிறிதேனும் பொறாமை அடையவில்லை. பெருந்தன்மையோடு கூடிய மகிழ்ச்சியே தத்தையின் வரவால் அவளுக்கு ஏற்பட்டது. உடனே ஆர்வம் முந்தும் மனத்துடன் பலவகைச் சிறந்த ஆடை அணிகலன்களை ஏந்திய தோழியர்கள் புடை சூழத் தத்தையைக் கண்டு பேசுவதற்கு விரைந்து வந்தாள் பதுமை. அவள் வந்த சமயம் உதயணன் அங்கே இல்லை. வாசவதத்தையும் சாங்கியத் தாயும் மட்டுமே இருந்தனர். உதயணன் தத்தையைத் தன் உயிரினும் சிறந்தவளாகக் கருதி வருவதை நன்கு உணர்ந்தவளாகையினால் தான், பதுமை அங்ஙனம் வலிய தேடி அவளைக் காண வருவதைச் சிறிதும் இழிவாகக் கருதவில்லை. தத்தையை வணங்கித் தழுவிக் கொண்டாள் அவள். "வாசவதத்தை! உன் கற்பின் புகழ் ஓங்கி வளர்க!" என்று பாராட்டினாள். அதன் பின் தத்தையும் அவளும் அருகருகே இருந்த இரு ஆசனங்களில் அமர்ந்து கொண்டிருந்த தோற்றம் இரண்டு தாமரை மலர்களில் திருமகள் இருவர் அமர்ந்து கொண்டிருந்தது போல எழிலாய் விளங்கிற்று. இவர்கள் இங்கு இவ்வாறிருக்க யூகியைத் தன் அரசவை மண்டபத்துக்குக் கூட்டிக் கொண்டு சென்றிருந்தான் உதயணன். அரசவையைச் சேர்ந்த யாவரும் யூகியை அன்போடும் பெருமதிப்போதும் வரவேற்றனர். அவையில் உதயணனுக்கு அருகில் யூகி அமர்ந்து கொண்டதும், 'தன்னை உச்சயினி நகரத்துச் சிறையிலிருந்து மீட்டனுப்பிய பின்பு அவன் எங்கெங்கே, எவ்வாறு மறைந்து வாழ்ந்தான்?' என்பதையும் 'இலாவாண நகரில் அரண்மனை எரியுண்ட பின் தத்தை எவ்வாறு எங்கே அவனால் வாழ்விக்கப்பட்டாள்?' என்பதையும் எல்லோரும் அறியும்படி விவரித்துக் கூறுமாறு கேட்டுக் கொண்டான் அவன்.

நடந்தவற்றை எல்லாம் தெளிவாக விவரித்துரைத்தபின், "நீ உனக்குரிய கோசாம்பி நாட்டை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காகவும், அரசாட்சியின் அருமையையும் பொறுப்பையும் உணர வேண்டுமென்பதற்காகவும், தம்பியர்களாகிய பிங்கல கடகர் உன்னை வந்தடைவதற்காகவுமென்றே உன் மேல் எனக்குள்ள உரிமையைப் பாராட்டி இவைகளை எல்லாம் சூழ்ச்சியாகச் செய்தேன்" என்று உதயணனிடம் கூறினான் யூகி. மறைந்த வாழ்வின் போது தன் திட்டங்களுக்கு ஏற்ப ஒத்துழைத்த உருமண்ணுவா, வயந்தகன், இடவகன் முதலியோரைப் பாராட்டி யூகி நன்றி தெரிவித்துக் கொண்டான். வயந்தகன், உருமண்ணுவா முதலியோரும் அப்போது அங்கே அரசவை மண்டபத்திலேயே இருந்தனர். உதயணன், "யூகி! உனக்கும் எனக்கும் உள்ள நட்பு உயிரோடு ஒன்றிய நட்பு. நீ செய்திருப்பவை எல்லாம் என் நன்மையின் பொருட்டே என்பதை நான் உணர்கிறேன்" என்று யூகியை நோக்கி இனிய மொழிகளாற் சொன்னான். அவ்வளவில் அரசவை அன்று கலைந்தது.

அரசவையிலிருந்து உதயணன் அந்தப்புரத்திற்கு வந்த போது பதுமையும் வாசவதத்தையும் சேர்ந்து அவனெதிரே வந்து அவனை வரவேற்றனர். அவர்களது இணையான அந்தக் காட்சி உதயணனை வியப்பும் மயக்கமும் அடையும்படி செய்தது. அன்று உதயணன் உண்ணும் பொழுது பதுமை, தத்தை இருவரும் சேர்ந்து உணவு பரிமாறி அவனை உபசரித்தனர். தான் உண்டு எழுந்தவுடன் அவர்களை நோக்கி, "நீங்கள் இருவரும் இன்று ஒரே உண்கலத்தில் சேர்ந்து உண்ணுங்கள்! அந்த அழகிய உருக்கமான காட்சியை நான் அருகேயிருந்து காணப் போகின்றேன்" என்று உதயணன் வேண்டிக்கொண்டான். பதுமையும் தத்தையும் சிரித்துக் கொண்டே அவ்வாறே செய்வதாக ஒப்புக் கொண்டனர். அங்ஙனமே சேர்ந்து உண்ணவும் செய்தனர். உதயணன் அதைக் கண்டு மகிழ்ந்தான்.

சாப்பிட்டு முடிந்ததும் பதுமை உதயணன் திருவடிகளில் விழுந்து வணங்கி, "இதுவரை எத்தனையோ திங்கள் தத்தையைப் பிரிந்து வேதனையுற்று இருந்தீர்கள்! உங்களுக்காக நீண்டகாலப் பிரிவு என்னும் மகத்தான தியாகத்தைச் செய்திருக்கும் கற்பின் செல்வி தத்தையுடன், என்னைச் சில நாள்கள் மறந்து, தாங்கள் ஒருங்குகூடி மகிழ்ந்து இருத்தல் வேண்டும்! இது அடியாள் தங்களிடம் வேண்டிக் கொள்ளும் வரம்! யான் என் அந்தப்புரத்திற்குச் செல்லுகின்றேன். நீங்களிருவரும் அன்புடன் எனக்கு விடையளிக்க வேண்டும்" என வேண்டிக் கொண்டாள். அவளுடைய மாசற்ற அன்பு உள்ளத்தைக் கண்டு உதயணனுக்கு மனம் நெகிழ்ந்தது. பதுமை மீண்டும் இருவரையும் வணங்கி விட்டுச் சென்றாள்.

64. பிரச்சோதனன் தூது

பதுமாபதி சென்ற பின் வாசவதத்தையிடம் அவளுடைய குணங்களைப் பலவாறு பாராட்டிக் கூறினான் உதயணன். 'குணத்திலும் அழகிலும் பதுமை உன்னைப் போலவே இருக்கிறாள் என்பதற்காக நான் அவளை மணந்து கொண்டேன்' என்றும், மேலும் பலவிதத்திலும் பதுமையைப் பற்றி உதயணன் தன்னிடத்தில் புகழ்ந்து கூறவும் அதுவரை பொறாமை என்பதையே நினையாமலிருந்த வாசவதத்தைக்கும் மெல்ல மெல்ல பொறாமை ஏற்பட்டு விட்டது. பதுமையை அவன் தன்னோடு ஒப்பிட்டுப் பாராட்டியதை அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. தத்தையின் கண் இமைகள் சிவந்தன; உதடுகள் துடித்தன; முகத்தில் கடுமை பரவியது. வெடுக்கென்று உதயணனைச் சுட்டுவிடுபவளைப் போலத் திரும்பிப் பார்த்தாள் அவள். வாசவதத்தை சினங்கொண்டிருக்கிறாள் என்பதை அவனறிந்து கொண்டான். பேச்சை மாற்றிப் பலவகை உபாயங்களினாலே அவள் சினத்தைத் தணிக்க முயன்றான் அவன். ஆனால், அவை யாவும் அவள் சினத்தைப் பெருக்குவதற்குத்தான் பயன்பட்டனவே தவிர, சிறிதளவும் குறையச் செய்யவில்லை. இறுதியாக, "மற்ற விதங்களில் பதுமை உன்னை ஒத்திருப்பினும் உன் பெண்மைக்கு நிகர் நீயேதான்" என்று கூறிய பின்பே உதயணனால் அவளுடைய சினத்தை ஒருவாறு தணியச் செய்ய முடிந்தது.

வாசவதத்தை வந்து சில தினங்களான பின்னால், கோசாம்பி நகரத்து அரண்மனையில் ஒரு பெரிய பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தான் உதயணன். பிரிந்து ஒன்று கூடிய தன் நண்பர்களை எல்லாம் பாராட்டித் தான் செலுத்த வேண்டிய நன்றியைச் செலுத்தி விட வேண்டும் என்பதே அவன் நோக்கம். யூகியையும் வாசவதத்தையையும் தான் திரும்பப் பெற்றுவிட்ட மகிழ்ச்சியோடு அந்த விழாவும் சிறப்புற நிகழ வேண்டும் என்று அவன் ஆசையுற்றதனாலேயே, ஏற்பாடுகளை உடனே செய்யுமாறு தன் சேனாபதிகளுக்கு ஆணையிட்டிருந்தான். அரசவையில் ஐம்பெருங் குழுவினரும் எண் பேராயத்தினரும், அமைச்சர்களும் மிகப்பெரிய செல்வர்களும் நெருங்கி நிறைந்து கூடியிருந்தனர்.

உருமண்ணுவாவை அழைத்து அன்றிலிருந்து தன்னுடைய பிரதம சேனாபதியாக அவனை நியமித்திருப்பதாக அறிவித்தான் உதயணன். பன்னூறாயிரம் பொன்னுக்குக் குறைவில்லாத வருவாய்களை உடைய ஊர்களையும் உயரிய பாதுகாப்புப் படைகளையும் அவன் வசம் ஒப்புவித்தான். பதுமைக்கு நெருங்கிய தோழியும் அழகிற் சிறந்த இளங் கன்னியுமான இராசனை என்பவளை உருமண்ணுவா மணந்து கொள்வதற்கு ஏற்ற மங்கலத் திருநாளையும் ஏற்பாடு செய்தான். பாராட்டுத் திருவிழாவிற்கு இடையே மங்கலமான ஒரு நாளில் உருமண்ணுவாவுக்கும் இராசனைக்கும் திருமணம் நடந்தேறியது. பின் இலாவாண நகரம், சயந்தி நகரம், இரண்டையும் பிரதம சேனாபதியாகிய அவன் ஆண்டு வருமாறு கூறித் தான் அழைக்கும் போது மட்டும் தலை நகருக்கு வந்து தங்கினால் போதுமென்று ஆணையிட்டான் உதயணன். கணவனும் மனைவியுமாக அவர்களிருவரும் இலாவணத்திலுள்ள பெற்றோரைப் பேண வேண்டுமென்று கூறி அவர்களை வாழ்த்தி வழி அனுப்பினான். விடைபெற்ற பின் உருமண்ணுவாவும் புதிய பதவியுடனும் புதிய மனைவியுடனும் கோசாம்பியில் யாவரிடமும் சொல்லிக் கொண்டு இலாவாண நகரத்திலுள்ள தன் பெற்றோரைக் கண்டு ஆசி பெறப் புறப்பட்டான். தான் கூப்பிட்டனுப்பும் வரை அவன் இலாவாணத்திலிருந்து கொண்டே சயந்தி, இலாவாணம் ஆகிய இரு நகரங்களின் ஆட்சியையும் கவனித்து வரவேண்டும் என்பது உதயணன் அவனுக்கு இட்டிருந்த பணி.

கோசாம்பியில் பாராட்டு விழா தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. யூகி, சேதி நாடு முழுவதையும் தன் அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்டு ஆளவேண்டும் என்று உதயணன் அதை அவனுக்கு அன்புடனே அளித்தான். இடவகன் என்ற நண்பனுக்கு முனையூர் முதலாக உள்ள ஐம்பது சிறு நகரங்களைப் பரிசிலாக வழங்கி அப்பகுதிகளிலுள்ள சிற்றரசர்களைப் புட்பக நகரத்தில் இருந்து மேற்பார்வை செய்யுமாறும் தான் அழைக்கின்ற சமயங்களில் மட்டும் கோசாம்பி நகரத்திற்கு வந்து போகுமாறு கூறி அவனைப் பாராட்டி அனுப்பினான் உதயணன். வயந்தகனுக்கு அன்பளிப்பாக வனம் நிறைந்த நகரங்கள் பதினொன்றையும் அளித்து, நாள் ஒன்றிற்கு ஆயிரம் கழஞ்சுப் பொன் வேதனத்திற்குரியவனாக்கித் தன்னை விட்டு என்றும் பிரியாமல் தன் அருகிலேயே இருக்குமாறு வைத்துக் கொண்டான்.

இசைச்சன் முதலிய மற்றெல்லா நண்பர்களுக்கும் இதே அளவிற் சிறப்பான அன்பளிப்புக்களையும் பாராட்டுக்களையும் நல்கினான். இன்னும் தான் உஞ்சை நகரத்தில் இருந்த போதிலும் மற்ற சந்தர்ப்பங்களிலுங் கூட தனக்கும் தன் நண்பர்க்கும் உதவிகள் செய்தவர் எவராயினும் அவரையெல்லாம் தான் காண விரும்புவதாக எல்லா இடங்களிலும் முரசறைந்து தெரிவிக்கச் செய்தான். உஞ்சை நகரத்திலும் பிற இடங்களிலும் தனக்கும் யூகிக்கும் அரும் பெரும் உதவிகள் செய்துள்ள 'சாதகன்' என்னும் குயவனுக்கும் பலவகைப் பரிசில்கள் அளித்துக் கோசாம்பி நகரத்தின் தலைமைக் குயவனாவதற்குரிய பெருங்குயப் பட்டத்தை அவனுக்கு அளித்தான். தானும் தன் நண்பரும் மகதநாடு சென்று மறைந்து வசித்த போது உடன் வந்து உதவிய பலர்க்கும் அவரவர்க்கேற்ற பெருஞ் சிறப்புக்களைச் செய்தான். பின்பு தன் தாயை அவளிருக்கும் இடத்திற் சென்று கண்டு, அவள் விரும்பிய எல்லாவகைத் தானங்களுக்கும் ஏற்ற பொருள்களை வழங்குமாறு செய்தான். ஒரு நாட்டையே தன் தாயின் தானத்திற்காகக் கொடுத்தான் உதயணன்.

பிற்பாடு தன் பட்டத்துத் தேவிமார்களான வாசவதத்தைக்கும், பதுமாபதிக்கும் வேண்டிய ஆடல் மகளிர், பாடல் மகளிர், பிற அலங்காரப் பொருள்கள் முதலியவற்றைப் பகுத்து அளித்து அவர்களை மகிழ்வித்தான். புதிய பல அணிகலன்களையும் அவர்களுக்காகச் செய்வித்து வழங்கினான்.

பாராட்டு விழா நிகழ்ந்து முடிந்த பின், கோசாம்பி நகரத்து அரண்மனை வாழ்வு இன்பமும் அமைதியுமாகக் கழிந்து வந்தது. அவ்வாறிருக்கும் போது ஒருநாள் யூகியும் உதயணனும் தனித்திருந்து உரையாடிக் கொண்டிருந்த நிலையில், அரண்மனை வாயிற்காவலன் வந்து உஞ்சை மன்னர் பிரச்சோதனனிடமிருந்து தூதுவர்கள் வந்திருப்பதாகக் கூறினான். உதயணன் உடனே பெருமகிழ்ச்சியுற்றுத் தூதுவர்களைத் தகுந்த மரியாதைகளோடு உள்ளே அழைத்து வருமாறு காவலனுக்கு ஆணையிட்டான். யூகியும் தானுமாக அவர்களை வரவேற்பதற்கும் ஆயத்தமாயினான். தூதுவர் கூட்டத்திற்குப் பதுமை என்னும் பெயரையுடைய பெண் ஒருத்தி தலைமை தாங்கி வந்திருந்தாள். நீதி நூல்களிலும் அரசியல் நூல்களிலும் முதிர்ந்த அறிவும் பயிற்சியும் உடையவள் அந்தப் பெண். தூதுவருக்கு வேண்டிய எல்லாப் பண்புகளும் அவள்பாற் பொருந்தியிருந்தன. காண்பதற்கு அழகும் கவர்ச்சியும் அளிக்கவல்ல வனப்பான தோற்றத்துடனே விளங்கினாள் அவள். அவளுடன் கூட வேறு கலைஞர்களும் உஞ்சை நாட்டு அரசியலறிஞரும் பிரச்சோதனன் தன் மகள் தத்தைக்குப் பரிசிலாக அனுப்பிய பொருள்களும் தோழிப் பெண்களும் வந்திருந்தனர். ஐம்பது தேர்களையும் அழகிய தோழிப் பெண்கள் ஓராயிரவரையும், வாசவதத்தையின் செவிலித்தாய் நற்றாய் முதலியவர்கள் அன்போடு கொடுத்தனுப்பியிருந்த அணிகலப் பேழைகளையும், கிளி, அன்னம் முதலியனவாக வாசவதத்தை விளையாடி முன்பு வளர்த்த பறவைகளையும், இன்னும் பல எண்ணற்ற பரிசிற் பொருள்களையும் அவளுக்கெனக் கொண்டு வந்திருந்தாள் தூதி பதுமை. உதயணனும் யூகியும் உஞ்சை நகரத்திலிருந்து வந்திருந்த அந்தத் தூதுவர் குழுவை எதிர்கொண்டு வரவேற்றனர். பதுமை என்னும் தூதி, உதயணனையும் யூகியையும் வணங்கிய பின்பு பிரச்சோதன மன்னன் கொடுத்தனுப்பியிருந்த திருமுகத்தை உதயணனிடம் அளித்தாள். சங்கு, சக்கரம் முதலிய உருவங்களின் முத்திரை வைக்கப்பெற்று அரக்குப் பொறியிட்டு மூடப் பெற்றிருந்த அந்தத் திருமுகத்தை உதயணன் பெற்றுக் கொண்டான். பிறருக்குக் கொடுத்தலைத் தவிரப் பிறரிடமிருந்து வாங்குதலறியாத அவன் கை, பதுமையினிடமிருந்து வாங்கிய திருமுகத்தை ஆவல் துடிக்கும் உள்ளத்தோடு பிரிக்கலாயிற்று. பிரச்சோதனன் எழுதியிருக்கும் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் அவன் மனத்தைப் போலவே கைகளும் முந்தின. அந்த ஆர்வம் அவன் முகச்சாயையிலும் ஒளிர்ந்தது. அவன் அந்தத் திருமுகத்தைக் கையில் வாங்கியதும் ஆசையோடு படிக்கலானான்.

65. யூகியின் புறப்பாடு

யாருக்கு யாரெழுதியது, நலம் விழைதல், வாழ்த்து முறை முதலிய கடிதத்தின் தொடக்கப் பகுதிகளை விரைவில் படித்துவிட்டு மேலேயுள்ள செய்தியைப் பார்க்கத் தொடங்கினான் உதயணன். 'அன்பிற் சிறந்த உதயணா! நாவலந் தீவினுள்ளே தகுதியானும் சிறப்பானும் உயர்ந்த குலம் உன்னுடையதும் என்னுடையதுமாகிய இரண்டே! இதனால் அன்று ஒரு நாள் எனக்கு ஓரெண்ணம் எழுந்தது. 'ஆரவாரம் மிக்க பெரும் போரைச் செய்யாமல், உங்கள் குலத்தை எவ்வாறேனும் என் குலத்திற்கு அடிமைப்படுமாறு தந்திரத்தினாலேயே ஏதாயினும் செய்ய வேண்டும் என்று யான் கருதத் தலைப்பட்டேன். அதன் விளைவு தான் காட்டிற்கு எந்திர யானையை அனுப்பித்து உன்னைத் தந்திரமாகச் சிறைப்பிடித்து வரச் செய்தது. இது என்றோ நடந்து கழிந்து போய்விட்டது என்றாலும் இதற்காக இன்று நான் உன்னிடம் மன்னிக்கும்படி வேண்டுகிறேன்! நீ இன்று இனிமேல் என்னை உன் தந்தை முறையுள்ளவனைப் போலக் கருதுதல் வேண்டும். சென்றதை மறந்து விடு! இனிமேல், பழம் பகையைக் கருதாதே! வாசவதத்தையின் நற்றாயும் நானும் உங்கள் இருவரையும் மணக்கோலத்தோடு ஒருங்கே காண வேண்டும் என்ற ஒரே ஆசையால் தவித்துக் கொண்டிருக்கிறோம். தத்தையோடு ஒருமுறை இங்கே வந்து நீ எங்களுடைய இந்த ஆசையைப் பூர்த்தி செய்யலாகாதா? நிற்க, மகத வேந்தன் தருசகனின் உதவியால் ஆருணியை வென்று பாஞ்சாலர் ஆதிக்கம் நீக்கிக் கோசாம்பியை நீ மீண்டும் அடைந்த நற்செய்தியைக் கேள்வியுற்று மகிழ்ந்தேன். ஆருணியை வென்று கோசாம்பி நாட்டை உனக்கு மீட்டுக் கொடுத்திருக்க வேண்டிய செயலை நானே செய்யக் கருதியிருந்தேன். நீயாகவே மகத மன்னன் உதவியினாலே அதை அடைந்துவிட்டாய். நல்லது. குழந்தையைப் பேணும் பெற்றோர்களைப் போலக் குடிமக்களை அன்போடும் பண்போடும் நீ ஆண்டு வருக. யூகி என்ற உனது அரும்பெறல் அமைச்சனைப் பற்றிக் கேள்வியுற்றேன். அவனுடைய அற்புதமான சாமர்த்தியமும் குணநலன்களும் என்னை வியப்படையச் செய்கின்றன. அந்தத் திறமை மிக்க மனிதனை நான் உடனே காண வேண்டும் போல ஆவலாயிருக்கிறது எனக்கு. இந்தத் திருமுகம் கண்டவுடனே யூகியை நீ அன்புடன் இங்கே, உஞ்சை நகரத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த மாபெரும் தீரனைப் பாராட்டுவதற்காக அவந்தி நாட்டு அரசவை மனமுவந்து இப்போதே அவனை எதிர்பார்க்கிறது. இதுவரை எழுதியவை யாவும் நான் உனக்கு உள்ளன்போடு உண்மைக்குப் புறம்பின்றி எழுதியவை. தவறாக இதில் எதுவுமே எண்ணிக் கொள்ள வேண்டாம்' என்று இவ்வாறு தூது வந்த பதுமை, உதயணனிடம் அளித்த அந்தத் திருமுகத்தில் எழுதியிருந்தது.

திருமுகத்தைப் படித்து முடித்த உதயணன் புன்முறுவல் பூத்தான். அவன் மனத்தில் களிப்பு நிறைந்தது. ஆயினும் கடிதத்தில் ஒரே ஒரு செய்தியைப் பற்றி, 'அது விசாரிக்கத் தக்க முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக இருந்தும் கூட பிரச்சோதன மன்னன் அதை ஏன் விசாரிக்கவில்லை' என்ற சந்தேகம் உதயணனுக்கு ஏற்பட்டது. தூதியாக வந்திருக்கும் பதுமை என்ற அந்தப் பெண்ணிடமே அதனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றெண்ணினான் அவன். "வாசவதத்தை இலாவாண நகரத்து அரண்மனையில் தீப்பட்டு இறந்து போனதாக ஒரு செய்தி எங்கும் பரவியதே! அந்தச் செய்தி பொய் என்றிருப்பினும் தத்தையின் தந்தையாகிய தங்கள் அரசர் அதைப்பற்றி இத்திருமுகத்தில் ஒன்றுமே விசாரிக்கவில்லையே! ஏன்?" என்று உதயணன் பதுமை என்ற தூதியை நோக்கி வினவினான்.

"வேந்தே! வாசவதத்தை தீயிலகப்பட்டு இறந்து போனதாகப் பரவிய செய்தி எங்கள் பிரச்சோதன மன்னருக்கும் தெரியும். அந்தச் செய்தியைக் கேள்வியுற்ற அவர் துடிதுடித்துப் போய்த் தமக்குத் தெரிந்தவரும் நெருங்கிய நண்பருமாகிய ஆற்றல் மிக்க முனிவர் ஒருவரிடம் சென்று, உண்மையைக் கூறுமாறு பிரலாபித்தார். ஞான திருஷ்டியும் தீர்க்க தரிசன உணர்ச்சியும் மிக்க அந்த முனிவர், 'அரசே! தத்தை உண்மையில் தீயிலகப்பட்டு இறக்கவில்லை. உதயணனது நன்மையின் நிமித்தம் அவள் மறைந்து வாழ்கின்றாள். குறிப்பிட்ட நாள்கள் கழித்து அவள் வெளிப்படுவாள். நீ கவலை தவிர்க்க' எனத் தொடுத்த மாலையைக் கையால் எடுத்தளித்தது போல உண்மையைத் தெளிவாகக் கூறி எம் அரசன் மனந் தேறுமாறு செய்துவிட்டார். இதனாலேயே இச் செய்தி இத் திருமுகத்தில் குறிக்கப் பெறவில்லை" என்று பதுமை மறுமொழி கூறினாள். உதயணனுக்குச் சந்தேகம் நீங்கியது. பின்பு பிரச்சோதன மன்னன் தனக்கும் வாசவதத்தைக்கும் அனுப்பியிருந்த பரிசில் பொருள்களை எல்லாம் வரிசை வரிசையாக உதயணன் உவகையோடு மனம் விரும்பிக் கண்டான். வந்திருந்த தூதுவர் குழுவைத் தன் விருந்தினராகத் தங்குமாறு ஏற்பாடு செய்து சிறப்பாக உபசரித்தான்.

பதுமை முதலிய பிரச்சோதன மன்னனின் தூதுவர்கள் கோசாம்பி நகரத்து அரண்மனையில் உதயணன், வாசவதத்தை இவர்களுடன் சில நாள்கள் தங்கியிருந்தனர். பின்னர், "விரைவில் நகர் செல்ல வேண்டும். விடை தருக! நாங்கள் சென்று வருகிறோம்" என்று ஒரு நாள் அவர்கள் உதயணனிடம் கூறினர். இவ்வாறு அவர்கள் கூறியவுடன் பிரச்சோதன மன்னன் 'யூகியையும் அவர்களோடு இங்கே அனுப்ப வேண்டும்' என்று தன் திருமுகத்தில் கேட்டிருந்த செய்தி உதயணனுக்கு நினனவு வந்தது. பிரச்சோதன மன்னனின் வேண்டுகோளை மறுக்காமல் யூகியை அவனிடம் அனுப்புவது தான் ஏற்றதென்று தோன்றியது உதயணனுக்கு. எனவே அவன் யூகியையும் அந்தத் தூதுவர்களோடு உஞ்சை நகரத்துக்கு அனுப்பக் கருதி அவனை அழைத்து வரச் சொல்லி ஓர் காவலனை அனுப்பினான். யூகி வந்தான். உதயணன் அவனிடம், "பிரச்சோதனன் அன்போடு வேண்டுகிறான்! எனவே, நீ போய் வருவதே நல்லதென்று எனக்கு தோன்றுகிறது. இதில் உன் விருப்பம் எப்படி?" என்று கேட்டான். தனக்கும் போய்வர வேண்டும் என்பதே கருத்து என்று உதயணனுக்கு மறுமொழி கூறினான் யூகி.

"அப்படியாயின் இந்தத் தூதுவர்களுடனேயே நீயும் உஞ்சை நகர் செல்க. சில நாள் தங்கியிருந்து பிரச்சோதனனுக்கு எல்லாச் செய்திகளையும் கூறுக. பின் விரைவில் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு கால தாமதமின்றி இங்கு வந்து சேர்க" என்று யூகியிடம் கூறினான் உதயணன். யூகியும் அதற்குச் சம்மதித்தான். யூகி முதலியவர்கள் புறப்படுவதற்கு முன்பாகவே வேறு சில வீரர்கள் மூலமாக, "என் நாட்டுக்குரிய சில நாடுகள் எல்லை பிறழ்ந்து தங்கள் நாட்டுடனே சேர்ந்திருக்கின்றன. அவற்றை விரைவில் மீண்டும் என் நாட்டுடனே சேர்த்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்ற செய்தியை எழுதிய திருமுகம் ஒன்றைப் பிரச்சோதனனுக்கு உதயணன் அனுப்பி வைத்திருந்தான். எனவே, யூகி புறப்படும் பொழுது விவரமான திருமுகம் ஏதும் அவனிடம் எழுதிக் கொடுக்கவில்லை. எனினும் வாய்மொழியாகச் சில செய்திகளைப் பிரச்சோதனனுக்குக் கூறி அனுப்பினான். அச்செய்திகள் யாவுமே இரு நாட்டிற்கும் இடையேயுள்ள ஒற்றுமையைப் பலப்படுத்துவனவாயும் இரு அரசர்களுக்கும் இடையேயுள்ள உறவு முறையின் நெருக்கத்தை வன்மையடையச் செய்வனவாகவுமே இருந்தன. யூகியினது உஞ்சை நகரப் பிரயாணம் இரு நாட்டுக்கு இடையிலும் இத்தகையதோர் நல்லுறவை ஏற்படுத்த வேண்டுமென்பதே உதயணன் நோக்கம்.

பிரச்சோதன மன்னனுக்கும், வாசவதத்தையின் நற்றாய், செவிலித்தாய் முதலியவர்களுக்கும், அரச குமாரர்களாகிய கோபாலன், பால குமாரன் ஆகியோர்க்கும் வேண்டிய அளவு சிறப்பும் பெருமையும் பொருந்திய பரிசில்களை யூகியின் மூலம் உதயணன் கொடுத்தனுப்பினான். தன் நாட்டிலுள்ள அயிராபதம் என்ற மலையிற் கிடைக்கும் சிங்கச்சுவணம் என்னும் பெயரையுடைய தூய பொன்னாற் செய்த அணிகலன்களையும், காந்தார நாட்டிற் தோன்றிய சாதிக் குதிரைகள் நாலாயிரத்தையும், மற்றும் பலவற்றையும் பிரச்சோதனனுக்காக யூகி உஞ்சை நாட்டுக்குப் புறப்படும் பொழுது கொண்டு சென்றான். இவை தவிரத் தத்தையின் தாயார், பிரச்சோதனனின் அரசிளங்குமரர், சிவேதன் ஆகியோர்க்கென அனுப்பிய வேறு பல பரிசிற் பொருள்களும் யூகியைப் பின்பற்றிப் பிற ஊழியர்களால் கொண்டு செல்லப்பட்டன. யூகியோடு கூடப் பிரச்சோதனனுடைய தூதுவர்களாகிய பதுமை முதலியோர் சென்றாலும், தன் அரண்மனையைச் சேர்ந்த விண்ணுத்தராயன் என்ற மிகப் பெரிய வீரனை யூகிக்கு மெய்க்காப்பாளனாகச் செல்லுமாறு ஏவினான் உதயணன். கோசாம்பி நகரத்து அரண்மனையைச் சேர்ந்த தேர்களில் எல்லாம் சிறந்த தேராகிய வையக்கிரம் என்னும் தேரை யூகியின் பிரயாணத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அளித்தான். இத்தகைய நிறைவான வசதிகளோடு உஞ்சை நகரப் பிரயாணத்தில் மனம் விரும்பி ஈடுபட்டுப் புறப்பட்டான் யூகி.

66. பந்தாடிய சுந்தரிகள்

யூகி உஞ்சை நகரத்திற்குச் சென்ற பின்பு, பல நாள் பிரிந்த துயரம் தீரக் காதலி தத்தையின் எழிலில் திளைத்தும் பதுமையின் வனப்பில் மயங்கியும் இன்பமயமான வாழ்க்கையை மேற்கொண்டான் உதயணன். தத்தையும் பதுமையும் அரண்மனையிலுள்ள ஆடல் பாடல் மகளிரும் அருங் கலைஞர்களுமே உதயணனுடைய நாள்களை இனபமும் சுவையும் நிறைந்திடச் செய்தனர். எந்நேரமும் மகிழ்ச்சி நிறைந்திடப் போது கழிந்தது உதயணனுக்கு.

உதயணன் வெளியே உலாவச் செல்லும் நாள்களில் அவன் இல்லாத நேரத்தில், அரண்மனைச் சோலைக்கு இடையே உள்ள வெளியில் தோழிகளுடனேயே பதுமையும் வாசவதத்தையும் பந்தாடுவது வழக்கம். உதயணன் அரண்மனையில் இருக்கும் நேரங்களிலே அவர்கள் இந்தப் பொழுதுபோக்கு விளையாட்டை மேற்கொள்வதில்லை. தான் இல்லாத போது அவர்கள் பந்து விளையாடுகிறார்கள் என்ற செய்தியை வயந்தகன் மூலமாக உதயணன் அறிந்து கொண்டான். வயந்தகன் அவர்களுடைய பந்தாட்டத்தை விவரித்து வருணித்ததைக் கேட்ட உதயணனுக்குத் தானும் ஒருமுறை மறைந்திருந்து அந்த விளையாட்டைக் காண வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று.

உதயணன் பாஞ்சால ராசனாகிய ஆருணியை வென்றபோது, ஆருணியின் உரிமை மகளிராகிய ஆடலங் கணிகையர் பலரைக் கைப்பற்றியிருந்தான். வாசவதத்தை வந்த பின்பு அந்த மகளிரை இரு பகுதியாகப் பிரித்துப் பதுமைக்கு ஓர் பகுதியும் தத்தைக்கு ஓர் பகுதியுமாகக் கொடுத்து விட்டிருந்தான். அவர்களும் இந்த பந்தாட்டத்தில் கலந்து கொண்டு விளையாடினர். வாசவதத்தையும் பதுமையுமாகக் கட்சி பிரித்துக் கொண்டு, அவர்கள் தங்களுக்குள் போட்டியிட்டு விளையாடும் அந்த விளையாடல், பார்க்கச் சுவை நிறைந்த காட்சியாக இருக்கும் என்றும் உதயணன் அவசியம் அதனைக் காண வேண்டும் என்றும் வயந்தகன் ஆசையைக் கிளப்பிவிட்டு விட்டான். உதயணன் அந்தப் பந்தாட்டத்தைக் காண்பதற்குத் தீர்மானித்த போது ஒரு தடையும் எழுந்தது. 'அவன் விளையாட்டைக் காண்பதற்கு வரப் போகிறான்' என்பதை அறிந்தாலே அந்தப் பெண்கள் அச்சமும் நாணமும் கொண்டு ஓடிவிடுவர். இதனால் ஒரு பெண்ணைப் போலவே மாறுவேடங்கொண்டு, அவர்கள் விளையாடும் இடத்திற்குச் சற்றுத் தள்ளி ஒரு பெண்யானையில் அமர்ந்தவாறே அதனைக் காண்பது என்ற யோசனையை வயந்தகன், உதயணனுக்குக் கூறினான்.

உதயணனும் தத்தை-பதுமை பந்தாடலைக் காண்பதற்காகப் பெண்ணாக மாறுவேடம் பூண்டான். பெண்கள் கூட்டத்திற்கு நடுவே பெண்ணாகக் கலந்து பழகி நடிப்பதற்கு அவன் மிகுந்த பழக்கமும் முன்னெச்சரிக்கையும் கொள்ள வேண்டியிருந்தது. தோழிகளும், நாட்டிய மகளிருமாக நூற்றுக்கணக்கான பெண்கள் சூழ இருந்தனர். பதுமையும் தத்தையும் ஆட்டத்திற்கு இருபுறங்களிலும் முறையே தலைமை வகித்தனர். உதயணன் ஓர் உயரிய பெண் யானையின் மேல் 'பெண்ணாக' வீற்றிருந்தான். ஆட்டம் தொடங்கியது. அவர்கள் விளையாடுவதற்குப் பயன்படுத்திய பந்துகள் நெட்டியினாலும், பஞ்சினாலும் உலண்டு உன்னும் ஒருவகைப் பட்டு நூலாலும் செய்யப்பட்டிருந்தன. மயிற்பீலி, பட்டுக் கயிறு, பாம்பின் மெல்லிய தோல் முதலிய பல்வேறு வகைப் பொருள்களால் அவை புனையப் பெற்றிருந்தன. அப்பந்துகள் யாவுமே பெண்கள் கைப்பற்றி விளையாடுவதற்கு ஏற்ற மென்மையும் நளினமும் பொருந்தி விளங்கின.

முதன் முதலாக இராசனை என்னும் பெண் விளையாட்டைத் தொடங்கி வைத்தாள். சிலம்புகள் குலுங்கக் கை வளைகள் கலகல என்று கீதம் செய்ய, அவள் பந்தைப் பாய்ந்து பாய்ந்து ஆடிய காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இடைவிடாது ஆயிரம் எண்ணிக்கைவரை அவள் சோர்வு இல்லாமல் பந்தை அடித்து விட்டு நீங்கியதும் வாசவதத்தையின் உயிர்த்தோழியாகிய காஞ்சனமாலை என்பவள் தொடர்ந்து ஆடினாள். பந்தாடுவதிலுள்ள சில சாதுரியமான முறைகளைக் கடைப்பிடித்து ஆடியதனால் அவளால் ஆயிரத்து ஐந்நூறு எண்ணிக்கை வரை ஆட முடிந்தது. காஞ்சனமாலைக்குப் பின்பு விளையாடிய பதுமையின் தோழியாகிய அயிராபதி, அரிய முயற்சியின் பேரில் ஈராயிரம் எண்ணிக்கை வரை பந்தடித்துக் காண்போரை வியக்கச் செய்தாள். அயிராபதி இவ்வாறு அற்புதமான சாமர்த்தியத்தோடு விளையாடியதைக் கண்டு, அடுத்து விளையாட வேண்டிய முறை உடையவளான வாசவதத்தையின் தோழி விச்சுவலேகைக்கு மிகுந்த ஆத்திரமும், பொறாமையும் ஏற்பட்டு விட்டது. எனவே அதன் விளைவாக அவள் ஈராயிரத்து நூறு எண்ணிக்கைவரை ஆடிக்காட்டி, அயிராபதியின் திறமையிலும் தன் திறமை உயர்ந்ததென்று நிரூபித்தாள். இதற்குப்பின் விளையாடிய பதுமையின் தோழியாகிய ஆரியை என்பவள், திறமையாக விளையாடினாலும், மூவாயிரம் எண்ணிக்கைக்கு மேலே அவளால் ஆட முடியவில்லை.

ஆரியை விளையாடி முடித்தவுடன் பந்தை எடுத்து விளையாட ஒருவரும் முன்வராமற் போகவே, வாசவதத்தை தன் தோழிகளை நோக்கி, "உங்களில் எவரும் விளையாடுவதற்கு முன் வருவதற்கு விரும்பவில்லையா?" என்று சற்றுச் சினந் தொனிக்கும் குரலிலேயே கேட்டாள். உடனே கோசல நாட்டைச் சேர்ந்தவளும் வாசவதத்தையின் ஆயத்திலிருந்தவளுமான மானனீகை என்ற வனப்புமிக்க பெண், பெருமிதந்தோன்ற நடந்து முன்வந்தாள். பந்தை எடுத்து விளையாடுவதற்கு முன், அவள் கூடியிருந்த மற்ற பெண்களை நோக்கிச் சில கருத்துக்களைப் பேசலானாள். அந்தப் பேச்சில் அதுவரை விளையாடியவர்கள் தத்தம் ஆடல்களிற் செய்த தவறுகளைச் சொல்லிவிட்டுப் பந்தாட வேண்டிய முறையைப் பற்றியும் விளக்கிக் கூறிய பின்பே அவள் விளையாடுவதற்காகப் பந்தை எடுத்தாள்.

நல்ல பந்துகளாக இருபத்தொரு பந்துகளைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்டாள் அவள். விளையாட்டிற்காக அவள் செய்து கொண்ட ஆயத்தங்களே, அவளுடைய ஆடும் திறமையைப் புலப்படுத்துவன போலத் தெரிந்தன. இதுவரை பெண் யானைமேல் இளநங்கை போல மாறுவேடங் கொண்டு பார்த்து வந்த உதயணன், மானனீகை என்ற அந்தப் பெண்ணின் அழகாலும் ஆட்டத்தாலும் பெரிதும் கவரப்பட்டான். அவள் அழகிலும் பந்தாடும் விதத்திலும் ஒரு வகை மோகமும் கவர்ச்சியும் ஏற்பட்டு மயங்கியது அவன் உள்ளம். கூந்தல் குழன்று சரிய, குதூகலம் திகழும் முகத்தில் குறுகுறுவென்று வியர்வரும்பக் கண்களும் புருவங்களும் பாய்ந்து வளைந்து பந்துக்கு ஏற்பத் திசைகளிலே மாறிமாறித் திரும்ப அபூர்வமான அழகும் கலைத்திறனும் காட்டி விளையாடினாள் மானனீகை. அவளுடைய அந்த அருமையான ஆட்டத்திற்கும் அழகிற்கும் உதயணனுடைய மனம் சிறிது சிறிதாக அவனையறியாமலே தானாக அடிமைப்பட்டுக் கொண்டிருந்தது. அவனால் அதைத் தடுக்க முடியவில்லை.

பந்தாட்டத்தின் பலவித சாதுரிய நிலைகளையும், வகைகளையும் தன் ஆட்டம் மூலமாக யாவரும் கண்டு ஆச்சரியமடையும்படி செய்த மானனீகை, எண்ணாயிரம் எண்ணிக்கை ஆடி முடித்த பின்பே பந்தைக் கீழே வைத்தாள். இருபத்தொரு பந்துகள் அவள் ஆடுவதற்குப் பயன்பட்டிருந்தன. மானனீகையின் இந்த நிகரற்ற வெற்றியால் வாசவதத்தையின் பக்கம் மாபெரும் மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது. மானனீகையின் ஆட்டம் இரு கட்சியினரையுமே வியப்பிலாழ்த்திவிட்டது. 'இந்தப் பெண்ணின் அழகை நம் அரசன் காண நேர்ந்தால் பின்பு நம்மை நினைத்துக் கூடப் பார்க்க மாட்டானே! இவள் அழகுதான் எவ்வளவு அரிது?' என்று காரணமற்ற ஒரு விதமான பொறாமை எண்ணமும் மானனீகையைக் கண்டு வாசவதத்தைக்கு உண்டாயிற்று. 'உண்மையில் அந்த அழகியை உதயணன் அப்போதே மாறுவேடத்துடன் கண்டு கொண்டிருக்கிறான்' என்பதை அவள் எவ்வாறு அறிவாள்? பதுமை முதலாக அந்தக் கூட்டத்திலிருந்த மற்றவர் யாவருக்கும் கூட வாசவதத்தைக்கு ஏற்பட்டது போல் மானனீகையின் மேல் இவ்வாறு பொதுவாக ஒரு பொறாமை ஏற்படவே செய்தது.

மானனீகை பந்தாட்டத்தை நிறுத்தியவுடனே ஆசையால் தன்னை மறந்துவிட்ட உதயணன், சற்று அருகிலே சென்று அவளைக் காணவேண்டும் என்று விரும்பினான். எனவே உடனே தான் அமர்ந்திருந்த பெண் யானையின் மேலிருந்து கீழே இறங்கிச் சட்டென்று தன்னுடைய பெண் வேடத்தைக் கலைத்து விட்டான் அவன். வேடம் கலைந்தவுடனே தன் சுய உருவத்தோடு அவர்களுக்கு இடையே அவன் சென்று நின்றான். சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென்று அவனை அங்கே கண்டதினால் பதுமை, தத்தை முதலிய யாவரும் அச்சமும் நாணமும் கொண்டு அங்கிருந்து ஓடிச் சென்றுவிட்டனர். அங்ஙனம் ஓடிச் சென்றுவிட்ட அவர்கள், நேரே தத்தை அந்தப்புரத்திற்குள்ளே போய் மறைந்து கொண்டனர். 'மானனீகையின் அழகுக் கவர்ச்சியினால் தன் வசமிழந்து ஓடி வந்திருக்கிறான் உதயணன்' என்பதை அவன் நிலையிலிருந்து புரிந்து கொண்டாளாகையினால், மானனீகையை வாசவதத்தை ஓர் அறைக்குள் தள்ளி மறைந்திருக்கும்படி செய்து விட்டாள்.

மானனீகையை மீண்டும் உதயணன் கண்டு விடாதபடி செய்து விட வேண்டும் என்பது அவள் கருத்து. 'மானனீகையின் அழகால் அரசன் என்ன ஆவானோ?' என்ற பயம் அவளுக்கு உண்டாயிற்று. பூஞ்சோலையில் தான் திடுமென்று சென்று நின்றதும் யாவரும் ஓடி விட்டதனால் ஏமாற்றமடைந்த உதயணன், 'மானனீகையை இனி எப்படிக் காணுவது?' என்று கலங்கினான். 'உடனே தத்தையையும் பதுமையையும் அழைத்துக் கேட்டால் என்ன?' என்று தோன்றியது அவனுக்கு. அவ்வாறே செய்ய வேண்டும் என்ற கருத்துடன் அவனும் அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்றான். சென்று அரண்மனையை அடைந்தவுடன் குற்றேவல் மகளிராகிய பணிப் பெண்ணை அழைத்து, "அந்தப்புரத்திற்குச் சென்று பதுமையை உடனே அழைத்துக் கொண்டு வாருங்கள்! தத்தையின் அந்தப்புரம் போய் அவளையும் அழைத்து வாருங்கள்!" என்றான். அவன் மனவுணர்வுகள் கட்டுக் கடங்காத ஆவலில் இருந்தன. உதயணன் கூப்பிட்டனுப்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் பணிப் பெண்கள், தத்தையும் பதுமையும் முன்வரப் பின் தொடர்ந்து அவனிடம் அவர்களை அழைத்து வந்தனர். பதுமை, தத்தை இருவரும் அவனை வணங்கித் தங்களை அப்போது அழைத்தனுப்பிய காரணம் யாதென்று இனிய மொழிகளாலே கேட்டனர்.

67. மானனீகை மயக்கம்

தன் முன் வந்து நின்ற வாசவதத்தையையும் பதுமையையும் நோக்கி, "உங்களோடு சற்று முன் பந்தாடிய தோழிப் பெண்கள் எல்லாரையும் ஒருவர் கூட விட்டுப் போகாமல் இப்போதே இங்கே அழைத்து வாருங்கள்" என்று உதயணன் கூறினான். அதைக் கேட்ட பதுமையும் தத்தையும் தத்தம் தோழிமார்களை அழைத்து வருமாறு மீண்டும் அருகிலிருந்த பணிப்பெண்களையே அனுப்பினர். அவர்கள் சென்று மானனீகையைத் தவிர இரண்டு தேவிமார்க்கும் சொந்தமான எல்லாத் தோழிப் பெண்களையும் கூட்டிக் கொண்டு வந்து நிறுத்தினர். அவர்கள் யாவரும் வந்தவுடன் உதயணன் தன் கோப்பெருந்தேவியர்களாகிய பதுமையையும் தத்தையையும் நோக்கி, "இதோ நிற்கும் உங்கள் தோழியர்களை ஒவ்வொருவராகச் சுற்றம், குலம், பேர், ஊர் முதலிய விவரங்களோடு எனக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டான். அவர்களும் அவ்வாறே அறிமுகம் செய்தனர். 'மானனீகை வராததை உதயணன் கண்டுபிடித்து விடுவானோ?' என்ற நடுக்கம் தத்தையை உள்ளூறப் பயங்கொள்ளச் செய்திருந்தது. எல்லாரையும் அறிமுகப்படுத்தி முடித்த பின், "ஆம்! அது சரிதான்! உங்கள் தோழியரில் ஒரே ஒரு பெண்ணை மட்டும் நீங்கள் அழைத்து வராமல் மறைப்பதற்குக் காரணம் என்ன?" என்று வாசவதத்தை மேலும் நடுங்குமாறு ஒரு கேள்வியை வினாவினான் அவன். உதயணன், மானனீகை வராமல் இருந்ததைத் தான் அவ்வாறு கேட்கிறான் என்பதை அனுமானித்துக் கொண்டாள் தத்தை. அவனுக்கு மானனீகையின் மேலே அவ்வளவு பற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டு அவளுக்குப் பொறாமையும் சினமுமே ஏற்பட்டன.

"இங்கு வராமல் இருக்கும் அந்தப் பெண்ணிடம் உங்களுக்கு ஏதாவது பேச வேண்டுமானால் அவளைத் தனியாக அழைத்துப் பேசிக் கொள்வது தானே? அதற்காக இவ்வாறு எங்கள் யாவரையும் கூட்டம் கூட்டி அதைச் சொல்வானேன்?" என்று தனது ஆத்திரத்தைப் புலப்படுத்தும் குரலில் பேசினாள் தத்தை. அவள் பொறாமையினாலேயே அவ்வாறு பேசுகின்றாள் என்பதை உணர்ந்து கொண்ட உதயணன் தன் காதல் மயக்கத்தை அவளறியாதபடி மறைத்துச் சாதுரியமாக வேறு ஒரு செய்தியைக் கூறினான். "தத்தை! அந்தப் பெண்ணை நான் காணக் கருதுவதில் தவறான நோக்கம் ஏதேனும் இருக்குமோ என்று நீ சந்தேகம் கொள்ள வேண்டாம். தோற்று இறந்து போன என் பகைவனாகிய ஆருணியைப் பற்றிய சில முக்கியமான அரசியல் செய்திகளை அந்தப் பெண் அறிவாள் என்று நான் கேள்விப்பட்டேன். அதற்காகவே நான் அவளைக் காண வேண்டும்" என்று ஒரு பொய்யைக் கூறி அவள் சினத்தை மாற்றினான் உதயணன். இதைக் கேட்டதும் இது மெய் என்றே நம்பிய வாசவதத்தை உடனே ஒரு பணிப் பெண்ணைக் கூப்பிட்டு மானனீகை மறைந்திருக்கும் இடத்தைக் கூறி அவளை அழைத்து வருமாறு சொல்லி அனுப்பினாள்.

உதயணன் மானனீகையை அழைப்பது ஆருணியைப் பற்றி விசாரிப்பதற்கே என்று தெரிந்து கொண்டதால் தத்தை, பதுமையையும் தோழிமார்களையும் அழைத்துக் கொண்டு அந்தப்புரம் சென்றுவிட்டாள். இதனால் மானனீகையை உதயணன் தனிமையில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பணிப்பெண் மானனீகையை அழைத்துக் கொண்டு வந்து அவன் முன்பு நிறுத்தினாள். உதயணன் பணிப் பெண்ணுக்குச் சைகை செய்யவே அவளும் ஒதுங்கிச் சென்றாள். செதுக்கி வைத்த பொற்பாவை போல அழகெல்லாம் ஒன்று திரண்ட உருவமாய் மிரள மிரள விழித்துக் கொண்டு அவன் முன்னே நின்றாள் மானனீகை. உதயணன் காதல் மயக்கம் பிறந்து மிளிரும் கண்களுடனே அவளை ஏறிட்டுப் பார்த்தான். மானனீகை முதலில் அச்சமும் நாணமும் கொண்டு ஒல்கி ஒடுங்கி நின்றாலும் உதயணன் தன்னை ஏறிட்டுப் பார்த்ததும் கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்டு அவன் பாதங்களைக் குனிந்து வணங்கினாள். அவள் வணங்கும்போது ஒசிந்த சின்னஞ்சிறு மின்னல் இடையையே நோக்கும்படி மோக வெறியிலாழ்ந்திருந்தன அவன் கண்கள். அவள் வணங்கி எழுந்ததும், தன் ஆசையை சிறிது அடக்கிக் கொண்டு நடிப்புக்காக ஆருணியைப் பற்றி அவளறிந்த விவரங்களைக் கூறுமாறு கேட்டான் உதயணன். "ஆருணியைப் பற்றிய சில மறைவான செய்திகள் உனக்குத் தெரியும் என்று கேள்விப்பட்டேன்! அதை நீ கூறுவதற்கு முன் உன்னைப் பற்றிய விவரங்களையும் எனக்குக் கூறு" என்று அவன் கேட்கவும், அவள் ஏதோ மறுமொழி சொல்லத் தொடங்கினாள்.

அவளது அந்தக் குரல் அமுதமழை பொழிந்தது போல உதயணன் செவிகளில் நுழைந்தது. "அரசே! கோசலத்து மன்னனின் கோப்பெருந்தேவியாகிய சுந்தரி என்பவளுக்குச் சேடியாக இருந்தவள் யான். பாஞ்சாலராசனாகிய ஆருணி கோசல நாட்டை வென்ற போது என்னையும் இன்னும் பல பெண்களையும் சிறைப் பிடித்து இங்கே கோசாம்பி நகரத்துக்குக் கொணர்ந்தான். இங்கே என்னைக் கோப்பெருந்தேவிக்கு வண்ணமகளாக (அலங்காரஞ் செய்பவளாக) நியமித்திருந்தான். இப்போது ஆருணியை வென்று அவன் நாட்டை நீங்கள் கைப்பற்றி விட்டதனால் நாங்கள் அரண்மனையில் உங்கள் அந்தப்புரத்திற்கு உரிமை மகளிராய் இருக்கின்றோம். என் வரலாறு இதுதான். தாங்கள் கேள்விப்பட்டது போல ஆருணியைப் பற்றி எனக்கு வேறு ஒன்றும் தெரியாது" என்று சிரித்துக் கொண்டே விடை கூறினாள்.

மானனீகை தன் சொந்த வரலாற்றைப் பற்றிக் கூறியபோது நிறுத்தி நிறுத்திக் கூறிய விதத்திலிருந்து, அதில் அவள் எதையோ மறைக்க முயல்வது போலத் தென்பட்டது உதயணனுக்கு. 'அவள் மேல் தான் கொண்டுள்ள காதல் ஆர்வத்தை அப்போது உடனடியாக அவளிடம் வெளியிடுவதிற் பயனில்லை' என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டு உதயணன் அவளைத் தன்னோடு நெருங்கிப் பழகச் செய்வதற்கு ஏற்ற பதவி ஒன்றில் நியமிக்கக் கருதினான். அவ்வாறு நியமிக்கப் பட்டால் மானனீகை தன்னோடு பன்முறை பழகித் தன் உள்ளத்தை உணர்ந்து அன்பு கொள்ள வழிபிறக்கும் என்று அவன் நம்பினான். "அப்படியானால் இன்று முதல் நீயே வாசவதத்தைக்கும் வண்ணமகளாய் இருந்து பணி புரிய வேண்டும். உன்னுடைய அலங்காரத் திறமை எல்லாம் வெளிப்படுமாறு அவளை நீ அழகு செய்க" என்று மானனீகையிடம் உதயணன் கூறினான்.

மானனீகையும் உடனே தத்தைக்கு வண்ணமகளாக இருப்பதற்குத் தனக்குப் பூரண சம்மதம் என்று கூறிச் சென்றாள். வாசவதத்தையின் வண்ணமகளாக நியமிக்கப் பெற்ற பின்பு, நாள் தவறாமல் தத்தையை நன்கு அலங்காரஞ் செய்து உதயணன் காணும்படி செய்து வந்தாள் மானனீகை. சித்திரம் எழுதுபவர்கள் கண்டாலும் வெட்கமடையுமாறு அவ்வளவு திறமையுடன் தத்தையை மானனீகை அணி செய்து அனுப்புவாள். ஆனால், உதயணன் தத்தையின் அழகைக் கண்டு இரசிப்பதற்குப் பதிலாக, மானனீகையின் காதல் மயக்கத்தில் சிக்கிச் சிதைந்து தவித்துக் கொண்டிருந்தான். தனக்கும் மானனீகைக்கும் இடையே வளர வேண்டிய காதலை வளர்ப்பதற்காகத் தத்தையை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்குத் துணிந்து விட்டான் அவன்.

மானனீகையின் மேல் அவனுக்கு ஏற்பட்டிருந்த மோகம், அவ்வாறு முற்றிக் கனியத் தொடங்கிவிட்டது. மானனீகை தத்தையின் நெற்றியில் வாசனைக் குழம்புகளால் பலவகை அழகான திலகங்களைத் தீட்டி அனுப்பியிருப்பாள். 'மானனீகைக்கு யவன மொழி நன்கு தெரியும்' என்பதனை அறிந்து கொண்டிருந்த உதயணன் தனக்கு அவள் பால் ஏற்பட்டுள்ள காதலை, வாசவத்தையின் நெற்றியிலிருக்கும் திலகங்களை அழித்து விட்டு அந்த இடத்தில் எழுதி அனுப்புவான். ஒரு பாவமும் அறியாத வெள்ளை மனத்தினளான வாசவதத்தை, மானனீகை எழுதியனுப்பிய திலகங்களில் ஏதோ குற்றம் இருப்பதனால் கணவன் அவற்றை அழித்து மீண்டும் எழுதுகிறான் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் வாசவதத்தையின் முகத்தை உதயணனும் மானனீகையும் தங்களிருவரைத் தவிர வேறு எவருமே அறியாத யவன மொழியில், காதல் கடிதம் எழுதும் ஓலையாகவே பயன்படுத்திக் கொண்டு வந்தனர். முதல் முதலாகத் தத்தையை அலங்கரித்து உதயணனிடம் அனுப்பியிருந்த மானனீகை, தத்தை திரும்பி வந்ததும் அவள் முகத்தில் தான் எழுதியிருந்த திலகங்களுக்கும் அலங்காரங்களுக்கும் பதிலாக யவன மொழியில் ஏதோ சுருக்கமாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள்.

தத்தை, மானனீகையிடம், "மானனீகை! நீ எழுதிய திலகங்களில் தவறுகள் நிறைந்திருந்ததாகச் சொல்லி என் கணவர் இவ்வாறு திருத்தி எழுதினார். இதை உன்னிடமும் காட்டச் சொன்னார்" என்றாள், மனத்தில் சூதறியாதவளாக. மானனீகை வியந்தாள். 'உதயணன் தன்னைக் காதலிக்கிறான்' என்பதை அறிந்து மானனீகை மனம் பூரித்துக் களிப்பு அடைந்தாள். எனினும், 'தத்தையைக் கருவியாக வைத்துக் கொண்டு தங்கள் யவன மொழியில் அவ்வாறு தங்களது உள்ளங்களைத் திறந்து காட்டிக் கொள்கிறோம்' என்றெண்ணும்போதே அச்சமும் நாணமும் அவளை வருத்தித் தயக்கம் கொள்ளுமாறு செய்திருந்தன. எனவே, மறுநாள் வாசவதத்தைக்கு அலங்காரம் செய்த போது தான் அவனுக்கு எழுதிய பதிலில், 'என் மீது அன்பு பூண்ட தேவரீர் எழுதியனுப்பிய திருமுகத்தைக் கண்டேன். இத்தகையதொரு சூழ்ச்சி முறையால் வாசவதத்தையை இதற்குப் பயன்படுத்திக் கொள்வது எனக்கு மிக்க பயத்தை அளிக்கிறது. பேதை மீது இவ்வளவு மிகுந்த அன்பு தங்களுக்கு வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். என்போலப் பெண்ணாகப் பிறந்த ஒருத்திக்கு, இது நடுக்கத்தை உண்டாக்குவதாக இருக்கிறது. தத்தைக்குத் துரோகமாக அமையக் கூடிய இதனை, அறமுறைக்கு மாறாக நான் செய்ய விரும்பவில்லை' என்று எழுதி அவளை உதயணனிடம் அனுப்பினாள்.

மானனீகையின் மறுமொழியுடனே தத்தையைக் கண்ட உதயணன், அதைப் படித்து வெந்த புண்ணில் வேல் எறிந்தது போலக் கலங்கினான். மானனீகை தன் கருத்துக்கு இசையாதவள் போல அஞ்சி எழுதியிருந்த சொற்கள் அவனை வருத்தின. உடனே, "இந்த அலங்காரத்தில் பிழைகள் மலிந்திருக்கின்றன. வேறு நான் செய்கிறேன் பார்!" என்று தத்தையிடம் கூறி அவள் அலங்காரத்தைக் குலைத்து, 'இன்றைக்குள் உன்னைச் சந்தித்து அளவளாவ முடியாமற் போகுமானால் நான் இறந்து போவது உறுதி! மறுமொழி எதிர்பார்க்கிறேன்' என்று புதிதாக மானனீகைக்கு எழுதி, அதை உடனே சென்று மானனீகையிடம் காட்டுமாறு தத்தையை அனுப்பினான். உடனே சற்றைக்கெல்லாம் தத்தை அதை மானனீகையிடம் சென்று காட்ட அவள் உதயணன் பிடிவாதத்திற்கு அஞ்சி மறுக்க முடியாமல் தத்தைக்கு வேறு அலங்காரம் செய்பவள் போல், 'இன்றிரவு கூத்தப்பள்ளியிலிருக்கும் குச்சரக் குடிகையில் காத்திருக்கவும். அங்கு வந்து சந்திப்பேன்' என்று மறுமொழி எழுதி அவளை உதயணனிடம் அனுப்பினாள்.

வாசவதத்தை திரும்பவும் வரக்கண்ட உதயணன் மனம் மகிழ்ந்து அவளை அருகிற் கொண்டு மானனீகை தனக்கு எழுதியிருப்பதைப் படித்துணர்ந்து மகிழ்ந்தான். மானனீகை சந்திப்பதற்குச் சம்மதித்து இடமும் குறித்து அனுப்பியிருந்தது அவனை உவகைக் கடலுள் மூழ்கச் செய்தது. "தத்தை! இந்த அலங்காரத்தில் ஒரு பிழையும் இல்லை. இது நன்றாக இருக்கிறது. மானனீகையை நான் பாராட்டியதாகக் கூறு" என்று சொல்லித் தத்தையை அனுப்பிவிட்டான் அவன். பகல் கழிந்து இரவு எப்போது வரப் போகிறது என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்துத் துடிதுடித்தது அவன் உள்ளம். இரவு வந்தது. மானனீகை வாசவதத்தையின் அந்தப்புரத்திலிருந்து மறைவாக வெளியேறித் தான் குறிப்பிட்டிருந்த கூத்தப் பள்ளியில் குச்சரக் குடிகையுள் சென்று இருந்தாள்.

உதயணன் வரவை எண்ணி, நேரம் கழிந்து கொண்டிருந்தது அவளுக்கு. உதயணன் தான் கூத்தப்பள்ளியில் மானனீகையைச் சந்திக்கச் செல்வது பதுமை, தத்தை இருவருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக இருவரையும் ஒரு தந்திரமான வழியினால் ஏமாற்றினான். வாசவதத்தையிடம் தான் அன்றிரவு பதுமையின் அந்தப்புரத்தில் தங்கப் போவதாகவும், பதுமையிடத்தில் தான் அன்றிரவு வாசவதத்தையின் அந்தப்புரத்தில் தங்கப் போவதாகவும் தனித்தனியே கூறி இருவரையும் ஒருங்கே ஏமாற்றிவிட்டுக் கூத்தப்பள்ளியில் மானனீகையைக் காணப் புறப்பட்டான். தான், பதுமை-தத்தை இருவரையுமே ஏமாற்றி விட்டதாக அவன் எண்ணம். ஆனால் அன்று காலையில் மானனீகையும் அவனுமாகத் தன்னை பலமுறை அலங்கரித்து ஒருவர் பால் ஒருவர் அனுப்பியதாலும், வேறு சில நினைவுகளினாலும் மனத்திடையே மானனீகை-உதயணன் உறவைப்பற்றி ஐயம் கொண்டு சிந்திப்பதற்கு காரணமாக இருந்ததாலும், தத்தை உண்மையறிந்து வருமாறு காஞ்சனமாலை என்னும் தோழியை உதயணன் அறியாமல் அவன் பின்னே அனுப்பியிருந்தாள்.

உதயணன் இரவில் எவரும் அறியாமல் கூத்தப்பள்ளியின் உட்புறம் புகுந்தபோது காஞ்சனமாலையும் அவன் பின்னால் உட்புகுந்து ஒருபுறமாக ஒளிந்து கொண்டு 'என்ன நடக்கிறது?' என்று கவனிக்கலானாள். கூத்தப்பள்ளியின் இடையே அமைந்திருந்த குச்சரக் குடிகையில் நுழைந்து மானனீகையைச் சந்தித்து அளவளாவிக் கொண்டிருந்தான் உதயணன். மானனீகையின் அழகையும் அவள் மேல் தனக்கு ஏற்பட்ட அளப்பரிய காதலையும் பாராட்டி அவளது மனம் நெகிழுமாறு பேசினான் உதயணன். மானனீகை அவன் புகழுரையைக் கேட்டுத் தலைகுனிந்தாள். உதயணன் ஆர்வத்தோடு அவள் கைகளைப் பற்றினான். மானனீகை அடுத்த விநாடி அவன் அணைப்பிலே சிக்கிக் கொடியெனத் துவண்டாள். மகிழ்ச்சி மிகுதியில் வசமிழந்தனர் அவர்கள். வசமிழந்த அந்த நிலையே நீடித்தது.

வெகு நேரம் கழிந்த பின் உதயணன், 'வாசவதத்தையின் முகம் தங்களுக்கு எவ்வாறு திருமுகம் எழுதுவதற்குப் பயன்பட்டது' என்பதைச் சிரித்துக் கொண்டே மானனீகையிடம் விளையாட்டாகக் கூறினான். அதற்குப் பதிலாக மானனீகையும் சிரித்துக் கொண்டே சில கூறினாள். இறுதியாக, இரவு நெடுநேரம் ஆகியிருக்கவே இருவரும் பிரிய வேண்டியபோது நெருங்குவதை அறிந்தனர். 'நாள்தோறும் தன்னை அதே இடத்தில் வந்து அன்று போலவே சந்திக்க வேண்டும்' என்று அவளை வேண்டிக் கொண்டு தன் சிறு விரலில் அணிந்து கொண்டிருந்த மோதிரத்தை அவள் கரத்து விரலில் அணிவித்து மகிழ்ந்தான் உதயணன். இதுவரை ஒளிந்து இருந்து கொண்டே இந்த நிகழ்ச்சிகள் யாவற்றையும் கண்டு கொண்டிருந்த காஞ்சனமாலை, இப்போது மெல்ல அங்கிருந்து வெளியேறிச் சென்றாள். அவள் தத்தையின் அந்தப்புரத்திற்கு உடனே சென்று, நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் அவளிடம் கூறத் தொடங்கிய அதே நேரத்தில், இங்கே கூத்தப்பள்ளியிலிருந்து மானனீகையும் உதயணனும் பிரிய மனமின்றியும் இன்ப நினைவுகளோடும் பிரிந்து வெளியேறினர்.

68. உண்மை வெளிப்பட்டது

மறுநாள் வைகறை நேரத்தில் உதயணன் சிறிதும் எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. 'பொழுது புலர்ந்ததும், தான் காஞ்சனமாலை மூலமாகக் கேள்விப்பட்ட உதயணன் - மானனீகை உறவைப்பற்றி அவனிடமே சாமர்த்தியாமாக விசாரிக்க வேண்டும்' என்று எண்ணியவாறே மனவேதனையுடனே அன்றைய அந்த இரவை உறங்காமலே கழித்தாள் தத்தை. 'உதயணன் - மானனீகை ஆகிய இருவரும் தனக்கு அலங்காரம் செய்வது என்ற பேரில் தன்னை எந்த விதத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்?' என்பது பற்றிக் காஞ்சனமாலை கூறியவையும், அவர்கள் கூத்துப்பள்ளியில் அளவளாவிச் சரசமாடியதாகக் கேள்விப்பட்டதும் தத்தையின் உள்ளத்தை அணுஅணுவாகச் சிதைத்து வருத்தின. 'பொழுது புலரட்டும்! உதயணனிடம் சாதுரியத்துடன் பேசி உண்மையை வரவழைத்து விடலாம்' என்று விடிவதற்குக் காத்திருந்தாள் அவள்.

உதயணன் மானனீகையைக் கூத்தப்பள்ளியில் சந்தித்துப் பிரிந்த பின் அன்றிரவு தத்தையையோ, பதுமையையோ காண்பதற்குச் செல்லாது நேரே தன் சயன அறைக்குச் சென்று உறங்கி விட்டான். பொழுது புலரும் தருணத்தில் அவன் எழுந்த போது, வாசவதத்தை தன்னைக் காண்பதற்கு வந்து தன் சயன அறை வாயிலில் காத்திருப்பதை அறிந்தான். அவ்வளவு அருங்காலையில் அவள் தன்னை தேடிவர நேர்ந்தமைக்குக் காரணம் என்ன என்றெண்ணிய போது, உதயணனுக்குத் திகைப்பு ஏற்பட்டது. கண்கள் சிவந்து கலங்கிய முகத்துடனே வந்து நின்ற அவளை அணுகி, என்னவென்று அன்போடும் மிகுந்த ஆதரவோடும் கேட்டான் அவன். "அரசே! நேற்றிரவு நான் விந்தையானதொரு கனவைக் கண்டேன்; அதைக் கேட்டருள வேண்டும்" என்றாள் தத்தை. "அது என்ன கனவென்று எனக்கும் தான் சொல்லேன்" என்று கேட்டான் உதயணன். "நேற்று இரவில் மனத்தாலும் உங்களைப் பிரிய விரும்பாத என்னைப் பிரிந்து நீங்கள் கூத்தப்பள்ளிக்குச் சென்று அங்கே வேறொரு பெண்ணுடனே சரசமாடியதாகவும், என் முகத்தில் மாறி மாறி எழுதிய வசனங்களைச் சொல்லி அவளோடு சிரித்ததாகவும், அவளும் நீங்களும் பிரியும் போது நீங்கள் ஓர் மோதிரத்தை அவளுக்கு அணிவித்ததாகவும் கனவு கண்டேன் அரசே!" என்றாள் வாசவதத்தை. இவ்வாறு கூறிவிட்டு உதயணனின் முகபாவத்தை தன் பார்வையாலே ஊடுருவினாள் அவள். அவன் கைச் சுட்டுவிரல் மோதிரம் இல்லாமல் விரல் மூளியாயிருப்பதையும் கண்களின் நோக்கிலேயே கண்டுபிடித்துவிட்டாள் தத்தை.

உதயணன் தத்தையின் கனவைக் கேட்டுத் திடுக்கிட்டான். தான் மானனீகையைச் சந்தித்தது அவளுக்குத் தெரிந்துவிட்டதோ என்று பயம் தோன்றியது அவனுக்கு. ஆயினும், அந்த இக்கட்டான நிலையிலும், தன்னைச் சமாளித்துக் கொண்டு, பதில் கூற அவனால் முடிந்தது. "தத்தை! நீ சொல்லுகிறாயே அது போன்ற அனுபவத்தைக் கனவில் கூட நான் நினைத்ததில்லையே! வீணாக ஏதேதோ எண்ணிப் பயந்து கொண்டிருக்கிறாய். கலக்கமடையாதே! உனது உள்ளத்திலேயே நான் இடைவிடாமல் வசிக்கும் போது அங்கிருந்து வேறு ஒருவரை நாடிச் செல்வது என்பது எவ்வாறு சாத்தியம்? உன்னைப் போல் கற்பு நெறியில் ஒழுகும் பெண்டிர் இப்படிச் சந்தேகமாக நினைப்பது தகுமோ?" என்று ஒரு பாவமும் அறியாதவன் போல அவளை நோக்கிக் குழைந்து கூறினான் அவன். இவ்வாறு அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் தனக்குள் சிரித்துக் கொண்டாள் வாசவதத்தை.

"ஏதோ கனவிற் கண்டதை மற்றவர்களிடம் கூறினால் தீமை நிகழாதென்று எண்ணிக் கூறினேன். வேறு எதுவும் நான் பிழையாக எண்ணிக் கொள்ளவில்லை. அன்றியும் என் மனத்திலுள்ளவற்றை உங்களிடமன்றி வேறு யாரிடம் நான் கூறுவேன்?" என்று அவனுக்குப் பதில் கூறிவிட்டு, வஞ்சகம் பொருந்திய அவன் செயலை எண்ணி எண்ணி வருந்தும் மனத்தினளாய் அவள் அங்கிருந்து அகன்றாள். 'வாசவதத்தை உண்மையாகவே இப்படி ஒரு கனவுதான் கண்டிருக்கிறாளே அன்றி, வேறு எதுவும் நிகழ்ந்ததை அவள் அறியமாட்டாள்! கனவினால் அவளுக்கு ஏற்பட்டிருக்கிற பயத்தையும் சந்தேகத்தையும் கூட நம்முடைய மறுமொழியால் நாம் தெளிவு செய்துவிட்டோம். இனி நமக்கும் மானனீகைக்கும் குறுக்கே எவருமில்லை' என்று நினைத்துக் கொண்டான் உதயணன்.

தன் எண்ணத்தையும் சூழ்ச்சியையும் வெளியாக்கும்படியான ஒரு திட்டத்தை வாசவதத்தை போட்டுக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு எப்படித் தெரியப் போகின்றது? அன்றும் 'பகல் நேரம் எப்போது கழியப் போகின்றது? இரவு எப்போது வரும்?' என்றெண்ணி மானனீகையைச் சந்திக்கும் இன்ப நினைவோடு இருந்தான் அவன். காலையில் உதயணன் சயன அறைக்கு வந்து, அவனிடம் தன் கனவைக் கூறுபவள் போலக் கூறி, அவன் நெஞ்சை ஆழம் பார்த்துவிட்டுப் போன வாசவதத்தை, தன் அந்தப் புரத்திற்குச் சென்றதும் முதல் காரியமாக மானனீகையை வரவழைத்து அவள் எங்கும் வெளியே செல்லாதபடி காவலில் வைத்துவிட்டாள். உதயணனின் சிறு விரல் மோதிரம் மானனீகையின் கையில் இருந்ததையும் அவள் கவனித்துக் கொண்டாள்.

பகற்பொழுது கழிந்து இரவுப் பொழுது வந்தது. வாசவதத்தை, மானனீகையைக் காத்துக் கொண்டிருந்த காவலர்களை மிகவும் கவனத்தோடு காக்குமாறு எச்சரித்து விட்டுக் கூத்தப்பள்ளிக்குத் தானே புறப்பட்டுச் சென்று, மானனீகை உதயணனுக்காக முதல் நாளிரவில் எந்த இடத்தில் காத்திருந்தாளோ அதே இடத்தில் தானே இருளில் மறைந்து நின்று கொண்டாள். 'மானனீகை வந்து காத்திருப்பாளே' என்று இரவில் யாரும் அறியாதபடி புறப்பட்டுக் கூத்தப்பள்ளியைச் சேர்ந்த குச்சரக் குடிகைக்கு வந்தான் உதயணன். மானனீகைதான் இருளிடையே மறைந்து நிற்கின்றாள் என்றெண்ணிக் கொண்டே அவன், "மானனீகை!" என்று அன்பொழுக அழைத்துக் கொண்டே அவளைத் தழுவ வந்தான். அங்கு நின்ற தத்தை பேசாமல், மௌனமாக இருந்துவிட்டாள். தழுவ வந்த கைகளை மட்டும் தன்னைத் தழுவவிடாமல் விலக்கினாள் வாசவதத்தை. தழுவவிடாமல் தன் கைகளை விலக்கியதைக் கண்டு, 'மானனீகை நம்மோடு ஊடுகிறாள் போலும்' என்றெண்ணிக் கொண்டான் உதயணன். எனவே, அவளது ஊடலை நீக்க வேண்டும் என்று கருதி, "இந்த அரசு முழுவதும் எனக்கு வேண்டும் என்று நீ கேட்டாலும் உனக்கு உடனே அளித்து விடுவேனே மானனீகை! உன் சினத்தை என்னால் எவ்வாறு தாங்க முடியும்? கோபம் தணிவாயாக மானனீகை!" என்று அவளை நோக்கிக் கூறியவாறே உதயணன் அவள் கால்களைப் பற்றினான். அவள் உடனே கோபத்தோடு தன் கால்களை அவன் பிடியிலிருந்து உதறிக் கொண்டு ஒதுங்கிச் சென்றாள். அந்த நிலையிலும், 'அவள் மானனீகை இல்லை, வாசவதத்தைதான்' என்பதை உணராத உதயணன், "மானனீகாய்! ஒரு புதுச் செய்தியைக் கேட்டாயா? நேற்றிரவு நாமிருவரும் இங்கே சந்தித்துப் பேசிய நிகழ்ச்சிகளை எல்லாம் வாசவதத்தை இன்று காலையில் என்னிடம் வந்து, தான் அவ்வாறு ஒரு கனவு கண்டதாகக் கூறினாள். பாவம்! அவளுடைய பேதமையைப் பார்த்தாயா? வாசவதத்தை சூதுவாதில்லாதவள். 'என் மனத்திலும் அத்தகைய நினைவு இல்லை' என்று நான் கூறியவுடனே அதை நம்பிக் கேட்டுக் கொண்டு பேசாமல் போய்விட்டாள் அவள்!" எனக் கூறினான். தான் கூறிய அதனாலாவது அவள் ஊடல் தணிந்துவிடும் என்றெண்ணிக் கொண்டு அவளை நெருங்கினான் உதயணன்.

இருளில் அவள் கரங்கள் அவன் பிடியிற் சிக்கின. ஆனால், வாசவதத்தை கைகளை விலக்கிக் கொண்டு, "நான் மானனீகை இல்லை; வாசவதத்தை! இதோ என்னை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு அவன் முன் ஒரு விநாடி நின்றாள். மறுவிநாடி அங்கிருந்து பாய்ந்து ஓடிவிட்டாள். வெளியே அவளுக்காகக் காத்திருந்த காஞ்சனமாலையோடு வேகமாக அந்தப்புரம் சென்றுவிட்டாள் அவள். உதயணன் திடுக்கிட்டான். திகைப்பு அவனை அப்படியே சிலைபோல நிற்கும்படி செய்துவிட்டது. அடுத்த கணம் தான் இனி அங்கே நிற்பது அபாயம் எனக் கருதி, அவனும் ஓடிச் சென்று பக்கத்தில் இருந்த வேறு ஓர் மண்டபத்தில் ஒளிந்து கொண்டான். அவன் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. 'தத்தைக்கு இந்த உண்மை தெரிந்ததின் விளைவு என்ன ஆகுமோ?' என்று அவன் மனம் பதைபதைப்பு அடைந்தது. வெகு நேரம் அந்த மண்டபத்திலேயே இருந்து சிந்தித்த பின், அவன் தன் சயன அறைக்குச் சென்றான்.

மறுநாள் பொழுது விடிந்தது. வாசவதத்தை துயிலெழுந்ததும் முதல் வேளையாக மானனீகையைக் காவல் வைத்திருந்த இடத்திற்குச் சென்று தன் ஆத்திரத்தை அவள் மேல் காட்டுவது என்று புறப்பட்டாள். மானனீகையைக் காவல் வைத்திருந்த இடத்திற்குச் சென்றதும், "அடி நன்றி கெட்டவளே! இருந்திருந்தும் எனக்கே துரோகம் செய்வதற்குத் துணிந்துவிட்டாயா? கூத்தப்பள்ளியில் நள்ளிரவில் நாடகமா ஆடுகின்றாய்? அரசனோடு அங்கே போய் ஏது செய்தாயடி? என்ன சொல்லி அவரை மயக்கினாய்?" என்று ஆத்திரத்தோடு உரத்த குரலில் வினவினாள். வாசவதத்தை சில பணிப் பெண்களை அழைத்து மானனீகையை அங்கிருந்த சித்திரத் தூண் ஒன்றில் கட்டி வைக்கும்படி கட்டளையிட்டாள். உடனே மானனீகை பலவந்தமாகத் தூணுடனே சேர்த்து வைத்துக் கட்டப்பட்டாள்.

'அவளை எந்த வகையிலும் அவமானப்படுத்திவிட வேண்டும்' என்ற குரோத உணர்ச்சி வாசவதத்தையின் மனத்தில் கொதித்து எழுந்திருந்தது. 'உதயணனை மயக்கக் காரணமாக இருந்த மானனீகையின் அழகைச் சிதைத்து அழித்துவிட வேண்டும்' என்று தோன்றியது தத்தைக்கு. பக்கத்தில் இருந்தப் பணிப்பெண்ணை அழைத்து, "இந்தத் துரோகியின் தலை மயிரைக் கத்தரித்து இவள் அழகை நிர்மூலமாகச் செய்தால் ஒழிய என் மனம் திருப்தியுறாது" என்று கூறி, அந்தப் பணிப் பெண்ணை உடனே ஒரு கத்தரிகை எடுத்து வருமாறு அனுப்பினாள். அப்போது தற்செயலாக அந்தப் பக்கம் வந்த வயந்தகன், கத்தரிகை எடுத்து வரச் சொல்லி அவள் பணிப்பெண்ணை அனுப்புவதையும் மானனீகை தூணிலே கட்டப்பட்டிருப்பதையும் கண்டுவிட்டான். 'என்ன நேருமோ' என்ற அச்சத்தோடு வேகமாகத் தான் கண்ட அக்காட்சிகளை உதயணனிடம் போய் கூறுவதற்குப் புறப்பட்டான் அவன்.

69. மானனீகை பிழைத்தாள்

வயந்தகன் தன்னை நோக்கிப் பரபரப்போடு ஓடி வருவதைக் கண்ட உதயணன் திடுக்கிட்டான். என்னவோ ஏதோ என்று பதைபதைத்தது அவனுக்கு. ஏற்கனவே முதல் நாள் இரவு கூத்தப்பள்ளியில் தத்தையிடமே தான் அகப்பட்டுக் கொண்டு ஏமாற நேர்ந்த சம்பவம் வேறு அவன் மனத்தைக் கலக்கியிருந்தது. தனக்கும் மானனீகைக்கும் இடையிலிருந்த இரகசியக் காதலைத் தத்தை புரிந்து கொண்ட சாமர்த்தியமான விதத்தை நினைத்த போதே அவன் மனம் துணுக்குற்றது. "தத்தை மானனீகையைத் தூணில் கட்டி வைத்து அவள் கூந்தலை அறுத்து அலங்கோலம் செய்வதற்கு முயன்று கொண்டிருக்கிறாள்" என்று ஓடிவந்த வயந்தகன் பரபரப்போடு கூறியதும், உதயணன் அளவற்ற வேதனை அடைந்தான். "வயந்தகா! மானனீகையின் ஒரு மயிரைக் கத்திரிகையால் தீண்டினாலும் அப்புறம் என் உயிர் உடலில் நிற்காது! இது உறுதி. எப்படியாவது இதை நீ தடுக்க வேண்டும்" என்றான் உதயணன். அதைக் கேட்ட வயந்தகன், "திடுமென்று வாசவதத்தைக்கு மானனீகையின் மேல் இவ்வளவு சினம் ஏற்படுவானேன்? அப்படி என்னதான் நிகழ்ந்தது?" என்று உதயணனை நோக்கி வினாவினான். "எல்லாம் நீ பந்து விளையாட்டைப் பற்றி வருணித்து என்னை அதைக் காணும்படி அனுப்பியதனால் வந்த வினைதான்" என்றான் உதயணன். அவன் கோபம் எதிரே நிற்கும் வயந்தகன் மேலே திரும்பிவிட்டது போலத் தோன்றியது. பூடகமாகவும் சினத்தோடும் உதயணன் இவ்வாறு தன்னை நோக்கிக் கூறியதைக் கேட்ட வயந்தகன், 'என்ன நடந்திருக்க வேண்டும்?' என்பதைத் தனக்குள் அனுமானித்துக் கொண்டான். தானும் சினங்கொண்டவன் போல உதயணனுக்கு மறுமொழி கூறலானான் அவன்.

"பெண்களும் தேவியரும் பந்துகளை விளையாடுகின்ற அழகைக் கண்டு வரவேண்டும் என்றுதான் நான் கூறினேனேயொழிய, 'மானனீகையைக் கண்டு மயங்கி அவளிடத்தில் கரந்து பழகும் காதல் ஒழுக்கத்தை மேற்கொள்க' என்று நான் உன்னிடம் சொல்லவில்லையே! கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையின் சினத்தை தணிக்கும் தகுதியுடையவர் இங்கு யார் இருக்கிறார்கள்? இயலும் காரியமா என்ன இது? ஆனாலும் என்னால் ஒன்று செய்ய முடியும்! எப்படியாவது ஓர் ஆறு ஏழு நாழிகை வரை மானனீகையின் கூந்தலை வாசவதத்தை அறுத்து விடாதபடி நிறுத்திச் சாமர்த்தியமாகத் தடுத்துவிட முடியும்! அதற்குமேல் அவள் கோபத்திற்கு முன்னால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. எனவே, நீதான் அந்த ஆறு ஏழு நாழிகைக்குள் வேறு யாரையாவது அனுப்ப வேண்டும்" என்று உதயணனிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் வயந்தகன்.

உதயணனிடமிருந்து புறப்பட்ட அவன் நேரே மானனீகையை வாசவதத்தை கட்டி வைத்துத் துன்புறுத்திக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தான். அவன் அந்த இடத்திற்குள் நுழைந்ததுமே அங்கிருந்த வாசவதத்தையின் தோழி ஒருத்தி, 'இப்போது இங்கே வரவேண்டாம்! தேவியார் சினம் மிக்க நிலையில் இருக்கிறார்' என்னும் பொருள் புலப்படும்படி கையசைத்துச் சைகை செய்து அவனைத் தடுத்தாள். உடனே வயந்தகன் அவள் கூறியதைக் கேட்டு மிகவும் பயந்து நடுங்கினவன் போல நடித்து, "இவ்வாறு கட்டி வைத்து தண்டிக்கும் படியாக அவள் செய்த குற்றம் என்ன?" என்று மானனீகையைச் சுட்டிக் காட்டி அந்தத் தோழியிடம் மெல்லிய குரலில் கேட்டான். அவனுடைய இந்தக் கேள்வியை வாசவதத்தையே செவியுற்று விட்டதனால் பெண் புலிபோலச் சீறிக் கொண்டே அவனுக்கு மறுமொழி கூறுவதற்காகத் திரும்பினான். வயந்தகன் வாசவத்தையை அன்றுவரை அவ்வளவு சினத்துடன் கண்டதே இல்லை. "அரசன் என்னும் மதிப்பிற்குரிய பெயரோடு உலாவும் தூர்த்தனாகிய கள்வனைக் கேட்டால் அல்லவா இவள் இழைத்த குற்றம் என்னவென்பது தெரியும்?" சுடச்சுட இப்படி வயந்தகனுக்குப் பதில் கூறினாள் தத்தை. அதன் பின்னர் தன் பக்கத்தில் இருந்த தோழியை அருகில் அழைத்து அவள் கையில் ஒரு கூர்மையான கத்திரிகையைக் கொடுத்து மானனீகையின் கூந்தலைச் சிதைக்குமாறு வேண்டினாள்.

அந்தச் சந்தர்ப்பத்தையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய வயந்தகன், "இவள் கூந்தலை எவ்வாறு கத்தரிகையால் விரைவில் அறுக்கலாம் என்பதை நான் அறிவேன். இவள் இழைத்த குற்றம் உண்டாயின் நானே இவள் கூந்தலை அரிக்கின்றேன். கத்திரிகையை என்னிடம் அளியுங்கள்" என்று கூறித் தானே வலுவில் முன் வந்து அந்தக் கொடும் பணியை ஏற்பவன் போல் ஏற்றுக் கொண்டான். வாசவதத்தையும் தோழியை நோக்கிக் கத்தரிகையை வயந்தகனிடம் கொடுக்குமாறு ஏவினாள். தோழியும் கத்திரிகையைப் பணிவுடனே அவனிடம் நீட்டினாள். தோழியின் கையிலிருந்து கத்தரிகையை வாங்கிக் கொண்ட வயந்தகன் அப்படியே பேச்சை வளர்த்து வளர்த்து நேரத்தைக் கழிக்க முற்பட்டான்.

உதயணனுக்கு அவன் கொடுத்துவிட்டு வந்திருந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது ஒன்றே அப்போதிருந்த அவனது நோக்கம். "தேவீ! கூந்தலைக் கத்தரிக்கும் கத்திரிகைகளின் வகைகள் பல. அவற்றின் இலட்சணங்களும் பல. சிலவற்றினாலே நன்மை தீமைகள் விளைவதும் உண்டு" என்று வயந்தகன் தன் பேச்சைத் தொடங்கினான். ஒன்றன் பின் ஒன்றாக மானனீகையின் கூந்தலை அரிவதற்காக வாசவதத்தை அளித்த அக் கத்திரிகைகளைக் குற்றம் கற்பித்து விலக்கிக் கொண்டே பொழுதைக் கழித்தான். வயந்தகன் நிலை இங்கே இவ்வாறிருக்க அங்கே உதயணன் மனம் பதறி, என்ன செய்வதென்று புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தான்.

'ஆறேழு நாழிகைகள் வயந்தகன் மானனீகையைக் காப்பாற்றி விடுவான்; அதன் பின்பு அவள் கதி...?' நினைத்துப் பார்க்கவும் அஞ்சியது உதயணன் உள்ளம். இந்தத் துயரம் சூழ்ந்த நிலைமையில் எதிர்பாராத பேருதவி அவனுக்குக் கிட்டியது. புறநகரின் எல்லையில் உஞ்சை நகரம் சென்ற யூகி முதலியோர் திரும்பி வந்து தங்கியிருப்பதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் நகருக்குள் வந்துவிடுவார்கள் என்றும் ஒரு காவலன் உதயணனிடம் ஓடோடியும் வந்து கூறினான். உடனே மனம் களித்த உதயணன், யூகியை அப்போதே உடனடியாக அழைத்து வருமாறு அந்தக் காவலனையே அனுப்பினான். 'அந்தத் துயர நிலையை யூகியின் வரவால், அவனைக் கொண்டு எப்படியும் போக்கிவிடலாம்' என்று முற்றிலும் நம்பினான் உதயணன். சென்ற காவலன் யூகியை விரைவில் அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டான்.

யூகியைப் பெரு மதிப்போடும் மகிழ்ச்சியோடும் வரவேற்க வேண்டிய உதயணன், அப்போது தன்னைச் சூழ்ந்திருந்த தொல்லையால் அவைகளை மறந்து அவசர அவசரமாக நடந்த நிகழ்ச்சிகள் யாவற்றையும் அவனிடம் சுருங்கக் கூறி, எப்படியாவது மானனீகையை அந்த அவமானத்திலிருந்து விடுவிக்குமாறு வேண்டிக் கொண்டான். ஆனால் யூகியோ, "உதயண! இந்த விஷயமாய் வாசவதத்தையுடன் சமாதானமாகப் பேசி மானனீகையை விடுவிக்க இயலாதபடி உன் குற்றமே இதில் பெரும்பகுதியாக இருக்கிறது! எனவே மானனீகையை விடுக்குமாறு தத்தையிடத்தில் நான் போய்க் கேட்பதற்கு இயலாது. வயந்தகனைப் போலவே நானும் ஆறு ஏழு நாழிகைகள் மானனீகை அவமானப்படாமல் இன்னும் காத்துவிட எப்படியேனும் முயல்கிறேன். அதுதான் என்னாலும் முடியக் கூடியது. அதற்குள் நீ வேறு ஏதாவது செய்ய இயலுமானால் செய்" என்று கூறிவிட்டு வாசவதத்தையின் அந்தப்புரம் நோக்கிச் சென்றான்.

வாசவதத்தையின் அந்தப்புரத்தினுள் நுழைவதற்கு முன்னால், கண்டவர் அருவருக்கத்தக்க தோற்றமுடைய ஒரு பித்தனைப் போல யூகி மாறுவேடங் கொண்டான். உடலெல்லாம் வெண்ணிறச் சாம்பலைப் பூசிக் கொண்டு, கிழிந்த ஆடைகளை அணிந்து, மிரள, மிரள விழிக்கும் கண்களுடனே தத்தை, மானனீகை, வயந்தகன் ஆகியவர்கள் இருக்கும் இடத்தில் யூகி தோன்றினான். 'திடும்' என்று அந்தப் பித்தனை அங்கே கண்டதும் வாசவதத்தையின் தோழிகள் பக்கத்திற்கொருவராகச் சிதறி அச்சத்தோடு ஓடினர். வாசவதத்தைக்கும் அங்கே தோன்றிய அந்தப் பித்தனது தோற்றம் அச்சத்தை உண்டாக்கினாலும் ஒரு புறம் அடக்கமுடியாத சிரிப்பு தோன்றி வெளிப்பட்டது. அந்நிலையில் மானனீகையின் மேல் இருந்த தன் கவனத்தை முற்றிலும் பெயர்த்துப் பித்தன் மேல் செலுத்தித் தன் இதழ்களில் நகை திகழ மேன்மேலும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வாசவதத்தை. இந்தச் சமயத்தில் மானனீகைக்கு அருகே கையில் கத்தரிகையோடு நின்று கொண்டிருந்த வயந்தகன் அதை ஒரு புறமாக மறைத்து வைத்துவிட்டு, 'நடந்த செய்திகளை உதயணனிடம் போய் உடனே கூறுமாறு' அங்கிருந்த தோழிப் பெண் ஒருத்தியை அனுப்பினான். அங்கே யூகியை அனுப்பிவிட்டு மேலே என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த உதயணனுக்குப் பதுமாபதியின் நினைவு வந்தது. 'அவளை அழைத்து, அவள் மூலமாகத் தத்தையைச் சினந்தணிந்து மானனீகையை விடுதலை செய்யும்படி ஏதாவது முயல முடியாதா?' என்று தோன்றியது அவனுக்கு. உடனே பதுமையை அழைத்து வரச் சொல்லி அவசரமாக ஒரு பணிப் பெண்ணை அனுப்பினான் உதயணன்.

பதுமாபதி உடனே உதயணனிடம் ஓடி வந்தாள். உதயணன் அவளை அன்போடு தழுவிக் கொண்டு வரவேற்றான். அன்பும் இனிமையும் இழைத்த குரலில், "அடிச்சியை இப்போது விரைவாக அழைத்த காரணம் என்ன?" என்று கேட்டாள் பதுமை. உதயணன் அதற்கு மறுமொழி கூறாமல் அமைதியாக அவளையே இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தான். பதுமை மீண்டும் அதே பழைய கேள்வியைக் கேட்டாள். உதயணன் இப்போது தான் "வாசவதத்தையிடம் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. அதை நானே அவளிடம் சென்று நிறைவேற்றிக் கொள்ள இயலாதவனாக இருக்கின்றேன். அவளிடம் போக எனக்குத் தயக்கம் உண்டாகிறது. எனக்குத் தெய்வீகக் காதலி நீ! என் பொருட்டு நீ தத்தையிடம் சென்று இதைச் செய்துதான் ஆகவேண்டும்" என்று வேண்டிக் கொண்டு அவளிடம் விவரங்களைச் சூசகமாகக் கூறினான்.

பதுமை அவன் வேண்டுகோளை மறுக்க முடியாமல் வாசவதத்தையைக் காண்பதற்குச் சென்றாள். தத்தை பதுமையைப் புன்முறுவலோடு வரவேற்றாள். பதுமை, தத்தையை ஓர் ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்று, "இவ்வாறு இந்த இளம்பெண்ணைக் கட்டிவைத்துத் துன்புறுத்துவதனால் நமக்கென்ன ஊதியம் கிடைத்து விடப் போகின்றது? கணவனே நெறிதவறிப் பிழை செய்து விட்டாலும் பெண்களாகப் பிறந்த நாம் பொறுத்துப் போதலே நமக்குப் பெருமை! இழிந்தவர்கள் செய்யும் குற்றத்தைப் பெருந்தகைமை உடையவர்கள் ஒரு பொருட்டாகக் கொள்வார்களா? என் பொருட்டு நீ இந்தப் பெண்ணைத் துன்புறுத்துகின்ற செயலை இவ்வளவில் விட்டுவிட வேண்டும்" என்று அவளை அன்புடனே வேண்டிக் கொண்டாள். பதுமையின் அந்த வேண்டுகோளால் மானனீகை தற்காலிகமாகப் பிழைத்தாள். அவசரப்பட்டுப் பதறி உடனே மானனீகையைத் தண்டித்துவிடாமல், சற்றே நிதானமாக யோசித்தாள் வாசவதத்தை.

70. தூதுவர் வரவும் வேதனை அழிதலும்

தத்தையிடம் பதுமாபதி மானனீகையைத் துன்புறுத்தலாகாதென்று வேண்டிக் கொண்டிருந்த அதே சமயத்தில், அங்கே உதயணன் முன்னிலையில் அப்போதுதான் வந்திருந்த கோசல நாட்டு அரசனுடைய தூதுவர்களை அழைத்து வந்து நிறுத்தினார்கள் அரண்மனைக் காவலர்கள். உதயணன் அவர்களை அன்புடனே வரவேற்று அமரச் செய்து, அவர்கள் பிரச்சோதனன், உதயணனுக்கு ஒரு திருமுகமும் தனியாக வாசவதத்தைக்கு ஒரு திருமுகமும் கொடுத்தனுப்பியதாகக் கூறி, வாசவதத்தைக்கு அனுப்பிய திருமுகம், உதயணனுக்கு அனுப்பிய திருமுகம் இரண்டையுமே எடுத்து அவனிடம் கொடுத்தார்கள், அந்தத் தூதுவர்கள். திருமுகங்களை வாங்கிக் கொண்டதும் மின்னல் வேகத்தில் உதயணனுக்கு ஒரு யோசனை தோன்றியது. 'இந்தச் சமயத்தில் கோசலத்தரசனுடைய இத்திருமுகத்தை அங்கே வாசவதத்தைக்குக் கொடுத்து அனுப்பினால், அவள் கவனத்தை மானனீகையின் மேலிருந்து திருப்பிவிடலாம்' என்றெண்ணி ஒரு குற்றேவல் மகளை அழைத்து அதை உடனே தத்தையிடம் சேர்க்குமாறு கொடுத்தனுப்பினான்.

திருமுகத்தை வாசவதத்தையிடம் சேர்த்து விடுவதற்காகப் பெற்றுக் கொண்டு சென்ற பணிப்பெண் தத்தையும் பதுமையும் தனியே நின்று உரையாடிக் கொண்டிருந்த போது அதைக் கொண்டு வந்து தத்தையை வணங்கி அவளுடைய கையிற் கொடுத்தாள். தத்தை அருகிலிருந்த பதுமையிடம் அந்தத் திருமுகத்தைக் கொடுத்து அதை உடனே தனக்கு வாசித்துச் சொல்லும்படி வேண்டிக் கொண்டாள்.

பதுமை திருமுகச் சுருளைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினாள். 'கோசலத்தரசன் ஓலையை வாசவதத்தைக் காண்பாளாக. உன்னுடைய தங்கை (கோசலத்தரசன் ஒரு வகையால் வாசவதத்தைக்குச் சிறிய தந்தை முறையுடையவனாக வேண்டும்) வாசவதத்தை (மானனீகையின் இயற்பெயர்) பாஞ்சால நாட்டரசன் ஆருணி என் நகரத்தைக் கைப்பற்றியபோது இங்கிருந்த மற்ற உரிமை மகளிரோடு அவனாற் பிடித்துக் கொண்டு போகப் பட்டாள். மகளைப் பிரிந்த துயரத்தில் நானும் என் தேவியும் துன்பத்தில் ஆழ்ந்து போயிருக்கின்றோம். சமீபத்தில் ஒரு செய்தி கேள்விப்பட்டோம். ஆருணியிடமிருந்து உதயணன் கோசாம்பி நகரத்தை வென்ற போது, ஆருணியின் அந்தப்புரத்து மகளிர் யாவரும் அவனிடம் அகப்பட்டனாரம். அப்படி அகப்பட்ட உரிமை மகளிரை உதயணன் உனக்கும் பதுமைக்குமாகப் பிரித்து வழங்கியிருக்கிறானாம். அந்தப் பெண்களுள் மானனீகை என்னும் மறுபெயர் பூண்டு, 'தான் கோசலத்தரசனின் கோப்பெருந்தேவி வசுந்தரியிடம் வண்ண மகளாக இருந்ததாகவும் அப்போது ஆருணியாற் சிறைப் பிடிக்கப்பட்டதாகவும்' கேட்பவர்களிடம் எல்லாம் பொய் வரலாறு கூறிக் கொண்டு, என் மகளும் உன் தங்கை முறை உடையவளுமான வாசவதத்தை அங்கேயே இருந்து வருகின்றாள் என்று அறிந்து கொண்டேன். இது உண்மைதானா? மானனீகை என்னும் பெயரோடு அங்கிருக்கும் பெண் என் அருமை மகள் வாசவதத்தை தானா என்பதை அறிந்து கொள்வதற்கு நானே விரைவில் அங்கே, கோசாம்பி நகரத்துக்குப் புறப்பட்டு வரலாம் என்று எண்ணி இருக்கின்றேன். அதுவரை அந்தப் பெண்ணைக் கண்காணித்து அவளுக்கு ஒரு குறையும் நேராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு ஆகும்" என்று இவ்வாறு அந்தத் திருமுகத்தில் எழுதியிருந்ததைப் படித்தாள் பதுமை.

"எதற்கும் நீயே ஒரு முறை தெளிவாகப் படித்துவிடுவதுதான் நல்லது! எனக்கு இதில் ஒன்றுமே விளங்கவில்லை" என்று கூறிக் கொண்டே திருமுகத்தை வாசவதத்தையிடம் நீட்டினாள் பதுமை. வாசவதத்தை ஓலை முழுவதையும் தான் மீண்டும் ஒருமுறை படித்தாள். அவள் முகம் வியப்பால் மலர்ந்தது. சிறு வயதில் தன் சிறிய தந்தையாகிய கோசலத்தரசன் வீட்டில் தான் பார்த்திருக்கும் தன் தங்கை வாசவதத்தையின் இளம்பருவத் தோற்றம் அவள் மனக் கண்களுக்கு முன் தோன்றியது. எதிரே கட்டி வைக்கப்பட்டிருந்த மானனீகையை நன்றாக ஊடுருவி நோக்கினாள் அவள். சந்தேகமே இல்லை! அவள் கோசலத்தரசன் மகளும், தனக்குத் தங்கை முறையுடையவளுமாகிய வாசவதத்தையாகவே இருக்க வேண்டும்! தத்தையின் மனம் அதுவரை மானனீகையிடம் குரூரமான முறையில் நடந்து கொண்டதற்காகத் தன்னையே கடிந்து கொண்டது.

'அறியாமல் எவ்வளவு பெரிய துரோகத்தை நம்முடைய தங்கைக்கே நாம் செய்துவிடக் கருதியிருந்தோம்' என்று நினைக்கும் போதே அவளுக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அவள் உடனே தானே பாய்ந்தோடிச் சென்று மானனீகையைக் கட்டியிருந்த தூணிலிருந்து அவிழ்த்து விட்டாள். விழிகள் நீர் பெருக்க உள்ளத்தில் இயல்பாக ஊறிய பாசத்துடனே அவளைத் தழுவிக் கொண்டாள். சுற்றியிருந்தவர்களால் தத்தையின் இந்த மாறுதலுக்குக் காரணம் கண்டு கொள்ள முடியவில்லை. தத்தை திருமுகத்தைக் காட்டி உண்மையை விளக்குவதற்கு முன்னால், மானனீகைக்கே அவள் தன்னை அன்போடு தழுவிக் கொண்டதன் காரணம் புரியவில்லை. "மானனீகை! நான் உன்னை இவ்வளவு துன்புறுத்திய பின்பும், நீதான் கோசலத்தரசன் மகள் வாசவதத்தை என்பதனை என்னிடம் கூறாமலே இருந்து விட்டாயே? உனக்குத்தான் எவ்வளவு அடக்கமும் பொறுமையும் இருக்கிறதடி! நான் அறியாமற் செய்துவிட்ட துன்பங்களை மனத்தில் வைத்துக் கொண்டு வருந்தாதே. இந்தக் கணமே அவற்றை மறந்துவிடு" என்று தழுவிக் கொண்டிருந்தவாறே அவளிடம் கூறினாள் வாசவதத்தை. கூடியிருந்த தோழிப் பெண்களையும் பிறரையும் உடனே அங்கிருந்து விலகிச் செல்லுமாறு தத்தை பணித்தாள். யாவரும் விலகிச் சென்றனர்.

மாறுவேடத்தில் பித்தனாக இருந்த யூகியும் கத்தரிகையைப் பயன்படுத்துவதற்காக நின்று கொண்டிருந்த வயந்தகனும் கூட அங்கிருந்து சென்றுவிட்டனர். கூட்டம் கலைந்த பின்பு வாசவதத்தை, மானனீகையை அன்போடு கைப்பற்றி அழைத்துக் கொண்டு தனது அந்தப்புரம் நோக்கிச் சென்றாள். போகும் போதே, தன் தந்தை தூதுவர்கள் மூலம் திருமுகம் அனுப்பியிருப்பதும் வாசவதத்தை தனக்குத் தவ்வை (அக்காள்) முறை ஆக வேண்டும் என்பதையும் அவளிடமிருந்தே கேட்டுத் தெரிந்து கொண்டாள் மானனீகை. "நான் உனக்கு அலங்காரம் செய்கிறேன் என்ற பெயரில் உன் முகத்தில் யவன மொழியில் அவருக்குக் காதல் கடிதம் எழுதியதும் நீ அறியாமல் அவரோடு காதல் ஒழுக்கம் மேற்கொண்டு ஒழுகியதுமாகிய செயல்களை நீ மன்னித்து விட வேண்டும்" என்று உள்ளமுருகக் குழைந்து வாசவதத்தையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் மானனீகை. "அவற்றையெல்லாம் மீண்டும் நினைத்து மனம் கலங்க வேண்டாம்" என்று அவளுக்குக் கனிந்த மொழியால் ஆறுதல் கூறினாள் தத்தை. மானனீகையைத் தன் அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்று வாசவதத்தை தன் கைகளாலேயே அவள் கூந்தலுக்கு எண்ணெய் பூசி நீராட்டினாள். பதுமையும் அப்போது மானனீகையை உபசரிப்பதில் தத்தைக்கு உதவியாக இருந்தாள். நீராட்டு முடிந்ததும் இருவரும் அவளை நன்றாக அலங்கரிக்கத் தொடங்கினார்கள். அலங்காரம் முடிந்த பின் மூவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர்.

இங்கு இவர்கள் இவ்வாறிருக்க வயந்தகனிடமிருந்து நடந்தவற்றை எல்லாம் கேள்விப்பட்டு அறிந்து கொண்டான் உதயணன். மானனீகை யார் என்பதையும் மற்ற விவரங்களையும் தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் அவன் உள்ளம் களித்தது. 'மானனீகை கோசலத்தரசனுக்கு மகள்! வாசவதத்தை என்பதே அவளுடைய மெய்யான பெயர்! தன் கோப்பெருந்தேவி தத்தைக்கு அவள் தங்கை முறையினள்' என்றெல்லாம் வெளியான செய்திகளால் மானனீகைக்கும் தனக்கும் இடையேயுள்ள அன்புத் தொடர்பு அறுவதற்கில்லை என்ற உறுதி அவனுக்கு ஏற்பட்டது. அந்த உறுதியைத் தான் அடைவதற்குக் காரணமான செய்திகளை வந்து கூறிய வயந்தகனைப் பாராட்டித் தழுவிக் கொண்டான் உதயணன். எல்லா நற்செய்திகளையும் தம் அரசனிடம் சென்று கூறி திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளோடு வருவதாகத் தத்தையிடமும் உதயணனிடமும் விடைபெற்றுக் கொண்டு சென்றனர் கோசல நாட்டு மன்னனிடமிருந்து வந்திருந்த தூதுவர்கள். வாசவதத்தையும் பதுமையுமே முன் நின்று மானனீகைக்கும் உதயணனுக்கும் திருமணம் நிகழ மகிழ்ச்சியோடும் முழு அளவு மனத் திருப்தியோடும் ஏற்பாடு செய்தனர். 'கோசலத்து வேந்தன் மகளை உதயணன் திருமணம் புரிந்து கொள்ளப் போகின்றான்' என்ற மங்கலச் செய்தி எங்கும் பரவியது. குறுநில மன்னரும் பெருநில மன்னரும் திருமண அழைப்பு ஓலை பெற்றனர்.

தன் மகள் கோசாம்பியில் வாசவதத்தையின் பாதுகாப்பில் நலமாக இருக்கின்றாள் என்பதையும், உதயணனும் அவளும் காதல் மேற்கொண்டு ஒழுகுகின்றனர் என்பதையும் தூதுவர்கள் வந்து கூறக் கேட்ட கோசலை மன்னன் பேருவகை உற்றான். திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைப்பதற்காக உடனே தன் பரிவாரங்களுடனும் திருமணத்திற்கு வேண்டிய பெரும் பொருள்களுடனும் கோசாம்பி நகரத்துக்குப் புறப்பட்டான் அவன். உதயணனைப் போன்ற ஓர் பேரரசன் தன் மகளுக்குக் கொழுநனாக வாய்த்ததனால் அவன் மனம் மட்டிலாக் களிப்பில் ஆழ்ந்திருந்தது. மானனீகையின் தாயும் கோசலரசன் கோப்பெருந்தேவியுமாகிய வசுந்தரியும் அதே அளவு மகிழ்ச்சியோடு கோசாம்பி நகருக்குப் புறப்பட்டாள். ஒரு மங்கல நாளில் கோசாம்பி நகரத்து அரண்மனையில் உதயணன் மானனீகை திருமணம் சிறப்புற நடந்தேறியது. பதுமையும், வாசவதத்தையும் தாமே மானனீகைக்கு வதுவைக் கோலம் புனைந்தனர். யூகி, வயந்தகன், கோசல மன்னன் யாவரும் வாழ்த்திப் புகழ நிகழ்ந்து முடிந்தது அந்தத் திருமணம். உதயணன், மானனீகை இருவர் மனோரதமும் தடையின்றி நிறைவேறியது. உதயணனின் மூன்றாவது மண வாழ்வு தொடங்கியது.

71. மந்தர முனிவர் வந்தார்

மானனீகை - உதயணன் திருமணத்திற்குப் பின்பு கோசாம்பி நகரத்து அரண்மனை வாழ்க்கை அமைதியும் இன்பமும் மிகுந்ததாகச் சென்று கொண்டிருந்தது. இஃது இவ்வாறு இருக்க முன்பு உதயணனால் மாலை தொடுத்துச் சூட்டப்பெற்ற இலாவாண மலைச்சாரலின் தவப்பள்ளியைச் சேர்ந்த விரிசிகை என்னும் பெண்ணின் நிலைபற்றி அறிய வேண்டாமா? வாசவதத்தை முதலியவர்களுடன் உதயணன் இலாவாண மலைச்சாரலில் உண்டாட்டு விழாவிற்காகத் தங்கியிருந்த போது அங்குள்ள ஒரு முனிவரின் ஆசிரமத்தில் விரிசிகையைச் சந்தித்து அவளுக்கு அழகிய மாலை, கண்ணி முதலியவைகளைத் தொடுத்துச் சூட்டினான். அப்போது அங்கே வந்த தத்தை, உதயணன் மேற் கோபம் கொண்டு ஊடினாள். உதயணன் தன்னை மடியில் இருத்திக் கொண்டு மாலை சூட்டிய நிகழ்ச்சியை அவன் அங்கிருந்து சென்ற பின்பும் விரிசிகையால் மறக்க முடியவில்லை. அந்த நினைவும் இன்ப உணர்ச்சியும் அவள் உள்ளத்தில் என்றென்றும் அழியாத ஓவியங்களாக நிலைத்து விட்டன. அன்று உதயணன் இலாவாண மலைச்சாரலில் தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற போது தன்னிலிருந்து உயிரோடு தொடர்புடைய இன்றியமையாத பொருள் ஒன்றை அந்த ஆணழகன் பறித்துக் கொண்டு போவது போன்ற ஓர் உணர்ச்சி விரிசிகைக்கு ஏற்பட்டது. அந்த மெல்லிய உணர்வின் காரணமோ, உள்ளர்த்தமோ விரிசிகைக்கு அப்போது தெளிவாகப் புலப்படவில்லை.

நாளாக ஆக அவ்வுணர்வு அவளுக்கு அர்த்தமாயிற்று! உதயணனுக்குத் தன் உள்ளம் தானாகவே காணிக்கையாகியிருப்பதை அவள் உணர்ந்தாள். அவனின்றித் தனக்குத் தனியே வாழ்வில்லை என்பதையும் அறிந்தாள். விரிசிகையின் நிலையில் ஏற்பட்ட இந்த மாறுதலை அவளுடைய தந்தையாகிய மந்தர முனிவர் அறிந்தார். காரணம் புரியாதவர் போலத் தம் மகளைத் தாமே அதைப் பற்றிக் குறிப்பாக விசாரித்தார். கள்ளங்கபடமற்ற அந்தப் பெண் எதையும் ஒளிக்காமல் நடந்தது எல்லாவற்றையும் தந்தையிடத்தில் கூறிவிட்டாள். அவள் கூறிய அடையாளங்களில் இருந்தும், அந்தச் சமயத்தில் இலாவாண மலைச்சாரலுக்கு வந்து சென்ற அரசர் உதயணனைத் தவிர வேறு எவரும் இல்லை என்று அறிந்ததாலும், 'தம் மகளின் மனத்தைக் கவர்ந்து கொண்டு சென்றவன் உதயணனே' என்று அவர் உய்த்துணர்ந்து கொண்டார். 'தம் மகளுக்கும் அவனே ஏற்ற நாயகன் ஆவான்' என்று மனம் விரும்பி அமைந்தவர், அதன் பிறகு உதயணனைச் சந்தித்து அவனிடம் விரிசிகையின் திருமணம் பற்றிப் பேசி முடிவு செய்வதற்குக் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் காலம் மட்டும் பொருத்தமாக வாய்க்காமல் அவரை ஏமாற்றம் செய்து கொண்டே இருந்தது.

விரிசிகையின் ஏக்கமும் தவிப்பும், அவள் உதயணனை எண்ணும் நாள்களைப் போலவே வளர்ந்து கொண்டிருந்தது. உதயணன் யூகியை இழந்த செய்தி, தத்தை எரியுண்டதாகக் கூறப்பெற்ற பொய்ச் செய்தி இவைகளைக் கேள்விப்பட்ட முனிவர், திருமண விஷயமாக அப்போது உதயணனைச் சந்தித்துப் பேசுவதற்குக் காலம் ஏற்றதில்லை என்று எண்ணி நாளைக் கடத்திக் கொண்டு வந்தார். ஆனாலும் 'உதயணனை எண்ணி விரிசிகை தாபத்தால் உள்ளூறத் தவித்துக் கொண்டிருக்கிறாள்' என்று கண்டுணர்ந்த போது அவர் பரபரப்பும் அவசரமும் கொண்டார். இந்தச் சமயத்தில் தான் உதயணன் மகத மன்னனாகிய தருசகனின் படை உதவியால் கோசாம்பியை ஆருணியிடமிருந்து மீட்டுக் கொண்டதும், யூகி, தத்தை ஆகியோர்களைத் திரும்ப உயிருடன் பெற்றதுமாகிய செய்திகளை விரிசிகையின் தந்தையாகிய மந்திர முனிவர் அறிய நேர்ந்தது. உடனே அவர் கோசாம்பி நகரத்திற்கு உதயணனைக் காண்பதற்காகப் புறப்பட்டார்.

கோசாம்பியை அடைந்து அரசவை கூடியிருக்கும் போதில் உதயணனைக் காண அவைக்குள் நுழைந்து, வந்த செய்தியைக் கூற நேரம் நோக்கிக் காத்துக் கொண்டிருந்தார் அவர். உதயணனின் கவனம் மந்திர முனிவரின் பக்கமாகத் திரும்பிய போதில், அவர் உதயணனை நோக்கித் தாம் வந்த காரியத்தை விவரிக்கலானார். "பெருமை பொருந்திய வத்தவகுலப் பேரரசே! முக்கியமானதும் உனக்கு விருப்பத்தைத் தரக் கூடியதுமான ஒரு நல்ல செய்தியைப் பற்றி இப்போது உன்னிடம் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன். நீயோ சிறப்பும் பெருந்தகைமையும் பொருந்திய சிறந்த குலத்தைச் சேர்ந்தவன். நான் யார் என்பதையும் கூறுகிறேன்; கேட்பாயாக! முன்பு மந்தர நாட்டின் அரசனாக இருந்து, பருவ முதுமையால் மக்களிடம் அரசாட்சியை விட்டுத் துறவறம் மேற்கொண்ட மந்தர மன்னன் நான் தான். இப்போது என் தவப் பள்ளி இலாவாண மலைச்சாரலில் இருக்கின்றது. அங்கே நான், என் மனைவி நீலகேசி, என் மகள் விரிசிகை ஆகிய மூவரும் வாழ்ந்து வருகிறோம்..." என்று கூறிக் கொண்டே வந்து சற்றே நிறுத்தினார் மந்தர முனிவர்.

'விரிசிகை' என்ற பெயரையும் இலாவாண மலைச்சாரலையும் அந்த முனிவர் நினைவூட்டியதும் உதயணனுக்கு முகமலர்ச்சி ஏற்பட்டது. 'வந்திருப்பவர் எதற்காக வந்திருக்கிறார்?' என்பதை அவனாகவே மனக் களிப்போடு அனுமானித்து உணர்வதற்கு முயன்றான். அதற்குள் தாம் இடையே நிறுத்திய பேச்சை மேலே தொடர்ந்தார் மந்தர முனிவர். "நீ உண்டாட்டு விழாவிற்காக இலாவாண மலைச்சாரலுக்கு வந்திருந்த போது நான் சில புண்ணிய தீர்த்தங்களில் நீராடி வருவதற்காக யாத்திரை சென்றிருந்தேன். திரும்பி அங்கே வந்த பின்பு, விரிசிகை மூலமாக எல்லாவற்றையும் அறிந்து கொண்டேன். அந்தச் சம்பவம் இன்றுவரை உனக்கும் நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன். விரிசிகையையோ, அந்த நிகழ்ச்சியையோ நீ மறந்திருக்க மாட்டாய் என்பது என் உறுதியான நம்பிக்கை! எனவேதான், நான் இங்கு வந்தேன்! நீ மாலை தொடுத்துச் சூட்டிவிட்டு வந்த தினத்திலிருந்து விரிசிகை உன் நினைவாகவே இருக்கின்றாள். உன் பிரிவினால் அவள் எய்தியிருக்கும் துயரம் உரைக்கும் தரத்தினது அன்று. உன்னிடம் பறிகொடுத்த மனத்தினளாய் எப்போதும் உன் நினைவு சூழவே விரிசிகை அங்கே சீவனற்று இயங்கி வருகின்றாள். உனக்காக உள்ளத்தை அர்ப்பணித்து விட்டுத் தணியாத காதலுடனே காத்திருக்கும் காரிகையை ஏமாறச் செய்வது உன் போன்ற ஆடவருக்கு அழகு அன்று. 'நான் என் மகளை உனக்கு மணம் செய்து கொடுக்கிறேன். நீ அவளை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்' என்று உன்னை வற்புறுத்துதல் எனக்குப் பண்பாடு ஆகாது. இருந்தாலும் விரிசிகைக்கு உன்னை மணம் செய்து கொள்ளும் உரிமை இருக்கிறது. உனக்கு விரிசிகையை மணந்து கொள்ள வேண்டிய கடமை பண்டை வினைத் தொடர்புடையதாக இருக்கிறது. முன்பே அவளுக்கு மலர் மாலை சூட்டியவன் நீ! முறை என்ற வகைக்கு அந்தப் பழைய நிகழ்ச்சியும் சான்றாக நிற்கிறது. ஆகையால் என் விருப்பப்படி நானே மனமுவந்து விரிசிகையை உனக்குக் கொடுக்கிறேன். விரிசிகையை ஒரு நல்ல மங்கல நாளில் நீ மணம் செய்து கொள்ள வேண்டும்" என்று மந்தர முனிவர் வேண்டிக் கொண்டார்.

உதயணனுக்கும் அந்த வேண்டுகோள் விருப்பத்தையே உண்டாக்கியது. ஆயினும் தன் தேவிமார்களுள் முதன்மை வாய்ந்தவளாகிய வாசவதத்தையைக் கலந்து ஆலோசித்து, அவள் சம்மதம் பெற்றுக் கொண்ட பின்னரே முனிவரிடம் தன்னுடைய உடன்பாட்டைத் தெரிவிக்க விரும்பினான் அவன். மானனீகை நிகழ்ச்சி வேறு அவனைப் பயமுறுத்தியது. எனவே மந்தர முனிவரைத் தகுந்த உபசாரங்களுடன் பெருமதிப்பிற்குரிய வரவேற்பளித்து, அரண்மனையில் தங்குமாறு செய்தபின் வாசவதத்தையைக் காணச் சென்றான் உதயணன். ஏற்கனவே மானனீகையை மணந்து கொள்வதற்குள் இடையில் தத்தையினால் நிகழ்ந்து முடிந்திருந்த குரூரமான சோதனைகள் அவனை எச்சரித்திருந்தன. எனவே தான் விரிசிகையை மணந்து கொள்வது பற்றித் தத்தையினிடமிருந்து கருத்து அறிந்த பின்புதான் மேற்கொண்டு எதுவும் தீர்மானிக்க முடியும் என்றெண்ணியபடி அவளை அணுகினான் உதயணன். தவிர முன்பே இலாவாண மலைச்சாரலில் விரிசிகைக்கு மாலை சூட்டியது காரணமாக வாசவதத்தை தன் மேல் சினமும் ஊடலும் கொண்டு பிணங்கியிருப்பதனால் அவளிடம் கேட்காமல் ஏதும் செய்யச் சம்மதிக்கவில்லை அவன் உள்ளம். ஆகவே அவன் வாசவதத்தையை அணுகி மந்தர முனிவர் வரவு பற்றியும் விரிசிகையை மணந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அவருடைய வேண்டுகோளையும் விளக்கமாக எடுத்துக் கூறினான்.

தத்தைக்கு அப்போதிருந்த மனநிலை, 'பிறருக்காக நம்முடைய இன்பத்தைப் பகுத்து அளிப்பதனாலேயே வாழ்வில் தியாகம் என்ற பெரும் பண்பாடு இடம் பெற முடியும்' என அமைந்திருந்தது. மானனீகை, உதயணன் திருமணத்திற்கு அப்பால் இத்தகையதொரு மனநிலை அவளுக்குத் தன் போக்கில் ஏற்பட்டிருந்தது. அன்றியும் விரிசிகையின் காதல் அவளுக்கு முன்பே தெரியும். 'என்னால் அந்த முனிவர் தவமகளுடைய வாழ்க்கை பாழ்படுவானேன்? இவரே உயிர் என்று கருதி வாழும் சூதுவாதற்ற அந்தக் கன்னியும் இவரை மணந்து கொள்ளட்டுமே. அதனால் எனக்குக் குறை என்ன வந்துவிடப் போகிறது! எனக்குச் சம்மதம் என்றால் பதுமைக்கும் மானனீகைக்கும் கூட அது சம்மதமாகவே இருக்கும். விரிசிகையின் காதல் கருகி அழிய வேண்டாம். அவளை இவர் மணந்து கொள்ளட்டும், அதற்காக இவ்வளவு தொலைவு தேடி வந்து வேண்டிக் கொண்டு நிற்கும் அந்த முனிவர் ஏமாற்றம் அடையக் கூடாது' இப்படித் தன் மனத்திற்குள் எண்ணிப் பார்த்த பின் பெரிதும் மகிழ்ந்து, உதயணனிடம் தனது சம்மதத்தைத் தெரிவித்தாள் வாசவதத்தை. உதயணனும் மகிழ்ந்தான்.

உதயணன் மந்தர முனிவரிடம் விரைந்து வந்து தன் உடன்பாட்டைத் தெரிவித்தான். முனிவரும் மகிழ்ந்தார். விரிசிகையை மணம் செய்து கொள்ள வாய்த்த பெரும் பேற்றை எண்ணிச் சில பல தானங்களைச் செய்தான் உதயணன். சில நாள்கள் அவனோடு கோசாம்பி நகரில் தங்கிவிட்டு, விரிசிகையை அழைத்து வருவதற்காக இலாவாண மலைச் சாரலுக்குப் புறப்பட்டார் மந்தர முனிவர். விரிசிகையையும் அவள் தாயையும் அழைத்துக் கொண்டு விரைவில் வருமாறு வேண்டிக் கொண்டு, உதயணன் அவருக்கு விடைகொடுத்து அனுப்பினான். அப்போதுதான் ஒரு திருமணம் முடிந்து அந்தக் கோலாகலத்தின் சுவடு மறைந்திருந்தது கோசாம்பி நகரத்தில். உடனே விரிசிகையின் திருமணச் செய்தி பரவவே பழைய கோலாகலமே எங்கும் மீண்டும் குறைவின்றி நிறைந்தது. 'விரிசிகை இலாவாண மலையிலிருந்து எப்போது வருவாள்? அவளைக் கண் நிறையக் காண்கின்ற நல்ல பாக்கியம் என்றைக்குக் கிட்டும்?' என்ற ஆவல் நிறைந்த நினைவுகளோடு கோசாம்பி நகரம் முழுவதுமே அவளுடைய நல்வரவை நாள்தோறும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. நகரத்தின் தலைவாயிலும் பெருவீதிகளும் நன்றாக அலங்கரிக்கப்பெற்று ஆரவாரத்தோடு விளங்கின. வீதிகளுக்குப் புதுமணல் பரப்பிப் பந்தலிட்டனர். வீடுகளிலும், மாடங்களிலும் மகிழ்ச்சியின் சின்னங்களாகிய அணிகளும் கொடிகளும் இலங்கின. நகரெங்கும் யார் யாரைச் சந்தித்தாலும் விரிசிகையைப் பற்றியும், விரிசிகையின் திருமணத்தைப் பற்றியும், அவள் என்றைக்கு வருகின்றாள் என்பதைப் பற்றியுமே பேசினர். வானுலகிலிருந்து வரும் தேவகன்னிகை ஒருத்தியை வரவேற்க முற்படுவோர் போலக் கோசாம்பி நகரத்து மக்கள், விரிசிகை என்னும் பேரழகியின் வரவை எதிர்பார்த்தனர் என்றே கூறலாம்.

72. விரிசிகை திருமணம்

விரிசிகையின் தந்தை இலாவாண நகரிலிருந்து அனுப்புகின்ற நாளைக் குறித்து உதயணனுக்குச் செய்தி அனுப்பினார். விரிசிகையை அழைத்து வருவதற்கான சிவிகையையும் காவலர்களையும் சில பணிப்பெண்களையும் உடனே இலாவாண மலைக்கு அனுப்பினான். விரிசிகையைக் காண வேண்டுமென்ற ஆவல் நகர மக்களுக்கு மிகுதியாக இருத்தலை அறிந்து உதயணன் சில ஆணைகளை இட்டிருந்தான். 'விரிசிகையைப் புற நகரத்திலுள்ள சோலை வரைக்கும் சிவிகையில் அழைத்து வரவேண்டும்' என்றும் 'அங்கிருந்து வழி நடையாகவே, நகர மக்கள் யாவரும் காணும்படி அவளை வீதிகளின் வழியாக அரண்மனைக்கு அழைத்து வரவேண்டும்' என்றும் ஏற்பாடுகள் செய்யப் பெற்றிருந்தன. விரிசிகை நகரத்திற்குள் வருகின்ற போது அந்நகரத்து வீதிகளில் யானை, குதிரை முதலியவற்றின் போக்குவரவு நீக்கப்பட வேண்டும் என்றும், வீதிகளைத் தூய்மை செய்து நறுமண மலர்களைப் பரப்பி வைக்க வேண்டும் என்றும் ஆணைகள் இடப் பெற்றிருந்தன. விரிசிகையை அழைத்து வருவதற்காக இலாவாணம் சென்றிருந்த அரண்மனைப் பணிப் பெண்கள், காவலர்கள், முதுமக்கள் முதலியோர்க்கும் இந்த ஏற்பாடுகள் முன்கூட்டியே அறிவிக்கப் பெற்றிருந்தன. விரிசிகை வழி நடையாகவே நகர வீதிகளில் உலா வருவாள் என்ற செய்தி கேட்டு, 'அவளை எல்லாரும் நன்கு, கண் நிறையக் காணலாம்' என்னும் ஆசையால் கோசாம்பி நகரின் பக்கத்துச் சிற்றூர், பேரூர்களிலிருந்தும் மக்கள் கூட்டம் கூடலாயிற்று.

உதயணனால் அரண்மனையிலிருந்து அனுப்பப்பட்டவர்கள் இலாவாணத்தை அடைந்தனர். விரிசிகை அவர்களோடு புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை முனிவர் முன்கூட்டியே செய்து வைத்திருந்தார். வாழ்க்கையில் அவர் துறவி. பொருள்களின் நிலையாமையையும் அறிந்தவர். உலக மாயையாகிய பாசவலையிலிருந்து விடுபடுவதற்கு முயலும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர். ஆயினும் விரிசிகையின் பிரிவு அவர் மனத்தைத் துறவு நெறியில் மேலும் உறுதிப்படுத்தியது. திடுமென்று அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை! விரிசிகையோடு தாமோ, தம் மனைவியோ, கோசாம்பிக்குச் செல்வதில்லை' என்ற தீர்மானத்திற்கு வந்தார் அவர். 'வந்திருக்கும் அரண்மனை மனிதர்களோடு ஆசிரமத்தைச் சேர்ந்த வேறு சில தவ மகளிர்களுடனும் விரிசிகையை அனுப்பி விட வேண்டும்' என்ற உறுதியான எண்ணத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டார். துறவு நம்பிக்கை, துறவின் மேல் உறுதியான பற்று என்னும் இவை எல்லாம், ஒரு சிறு பாச உணர்வினால் பாதிக்கப்படுமாயினும் மீண்டும் தொடர்ந்து பலவகையான பாசங்கள் வளர்ந்து கொண்டே போவதற்கே உரிய காரணங்களாகிவிடும். 'விரிசிகை, உதயணன் திருமணத்தைத் தாம் சென்று கண்டால், தமக்கும் அதே போல உலக வாழ்வில், தம் மகள் மேல், அத்தகையதோர் பாசம் ஏற்பட்டுவிடுமோ?' என்று அஞ்சினார் மந்தர முனிவர்.

'விரிசிகையை மணந்து கொள்ள நான் உடன்படுகின்றேன்' என்று உதயணன் எப்போது கூறினானோ, அப்போதே உலக வாழ்வில் எனக்கு இருந்த ஒரே ஒரு கடைசி பந்தமும் அற்றுப் போனது. 'இனி நான் தவத் தொடர்பு ஒன்றை மட்டுமே தாங்குவதற்கு உரியவன்' என்றிவ்வாறாக மந்தர முனிவர் சிந்தித்தார். 'விரிசிகையுடன் கூட அவரும் அவர் தேவியும் கோசம்பிக்குச் செல்ல வேண்டாம்' என்று தம்முடைய மனத்திற்குள்ளிருந்து ஏதோ ஒரு சக்தி அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பது போல அவருக்குத் தோன்றியது! இறுதியில் முனிவருடைய ஆசை தோற்றது! மனம் வென்றது! ஆம். முனிவரும் அவருடைய தேவியும் இலாவாண மலையில் தங்கள் ஆசிரமத்திலேயே தங்கிவிட்டனர். அரண்மனையிலிருந்து வந்திருந்தவர்களும் ஆசிரமத்தைச் சேர்ந்த வேறு சில பெண்களுமே விரிசிகையை அழைத்துக் கொண்டு கோசாம்பிக்குச் சென்றனர். அங்கிருந்து புறப்படும்போது விரிசிகை பிரிவுச் சுமை பொறுக்கமுடியாமல் அழுதே விட்டாள். இளமையிலிருந்து அன்று வரை தாய் தந்தையரைப் பிரியாமல் வளர்ந்துவிட்ட அவளுக்கு, அன்று அங்கிருந்து செல்வது மிகப் பெரிய வேதனையைக் கொடுத்தது.

இயற்கையின் சகல சம்பத்துக்களாலும் சௌபாக்கியங்களாலும் நிறைந்து விளங்கும் இலாவாண மலைச்சாரலிலிருக்கும் தந்தையின் அழகிய ஆசிரமத்தை விட்டுச் செல்வதற்கு மனம் கலங்கினாலும், வேறோர் ஆசை அவளைக் கோசாம்பி நகரத்தை நோக்கி அதிவேகமாக அழைத்துக் கொண்டிருந்தது. அந்தக் காதல் ஆசையின் தீராத தாபத்தை அவளால் விலக்க முடியவில்லை. அவள் ஒரு துறவிக்கு மகள் தான். ஆனால் அவளால் எந்தப் பாசங்களையும் துறக்க முடியவில்லை. கண்ணீர்த் திரை கண்களை மறைக்கத் தந்தையையும் தாயையும் வணங்கிவிட்டு, அந்த அழகு மயமான ஆசிரமத்தையும் நீலமணி முடிதரித்தது போல நெடிது விளங்கும் இலாவாண மலையின் சிகரங்களையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தபின், கோசாம்பி நகரப் பயணத்துக்காகச் சிவிகையில் ஏறினாள் விரிசிகை. அவள் உள்ளம் உவந்தது. கண்கள் நீர் சிந்தின. சிவிகை புறப்பட்டது. இலாவாண மலையிலிருந்து புறப்பட்ட விரிசிகை, கோசாம்பியின் புறநகரில் அமைந்திருந்த கோவில் தோட்டம் ஒன்றில் தங்கியிருக்க ஏற்பாடு செய்யப் பெற்றாள். அரண்மனையைச் சேர்ந்த பணிப்பெண்களும் தவப்பள்ளியைச் சேர்ந்த மகளிரும் விரிசிகையை நகரத்திற்கு உள்ளே அழைத்துக் கொண்டு செல்லப் பெறுவதற்கு முன்பாகவே, தாங்கள் தங்கியிருந்த தோட்டத்திலேயே மங்கல நீராட்டி, அலங்கரித்து விடுவதென்று முடிவு செய்தனர்.

விரிசிகையின் அழகிய கருங்குழலுக்கு நறு நெய்பூசிப் பலவகை வாசனைப் பொருள்களால் நீராட்டினர். நீராட்டி முடித்த பின்னர், அழகுக்கு அழகு செய்வது போல அவளை அணி செய்யத் தொடங்கினார்கள். பலவகை நறுமண மலர்களால் தொடுத்த பூங்கொத்துக்களை அவள் கூந்தலில் அணிந்தனர். சிறந்த உடைகள், அணிகலன்கள் முதலியவறைக் கொண்டு விரிசிகையைப் புனையா ஓவியமாகச் செய்தனர். இயற்கை தன் உடலில் ஊட்டியிருந்த வனப்பைத் தவிர, அது காறும் செயற்கை வனப்புக்கு உரிய எந்த அணிகளையும் பயன்படுத்தி அறியாத விரிசிகைக்கு அலங்காரம் செய்த பெண்கள், இயற்கை வனப்போடு செயற்கை வனப்பையும் அவளுக்கு அளித்தனர். விரிசிகையின் அலங்காரம் முடிந்தது. அரண்மனையிலிருந்து அவளை வீதிகளின் வழியே நடத்தி அழைத்துச் செல்வதற்கு வந்தவர்கள் காத்திருந்தனர். புறப்பட வேண்டிய நேரத்தில், 'அழகான பெரிய செங்குவளை மலர் ஒன்றை, வலக்கையில் பிடித்துக் கொள்க' என்று கூறி விரிசிகையிடம் கொண்டு வந்து அளித்தாள் ஒரு தோழி. விரிசிகை அந்த மலரை வாங்கி வலக்கையில் பிடித்துக் கொண்டாள். அது அவளுடைய சோபையைப் பன்மடங்கு எடுப்பாக விளங்கச் செய்தது.

தவப்பள்ளியிலிருந்து உடன் வந்திருந்த பெண்கள் அங்கிருந்தே விடை பெற்றுக் கொண்டு திரும்பிச் செல்வதற்கு விரும்பினார்கள். நகருக்குள் வருவதற்கு அந்தப் பெண்கள் விரும்பவில்லை. அரண்மனையிலிருந்து விரிசிகையை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தவர்களுள் சாங்கியத் தாயும் இருந்தாள். தவப்பள்ளியிலிருந்து உடன் வந்திருந்த பெண்கள், "சாங்கியத் தாயே! நாங்கள் இங்கிருந்தே விடை பெற்றுக் கொள்கிறோம். விரிசிகையை அரண்மனையில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது, இனி உங்கள் பொறுப்பு" என்று அவளிடம் வேண்டிக் கொண்டனர். விரிசிகையை நோக்கி, "விரிசிகை! உதயணனின் பிற மனைவியர்களாகிய தத்தை, பதுமை, மானனீகை ஆகியோர்களை இனி நீ உன்னுடைய தாயாராகவும், தமக்கையராகவும் நினைத்துக் கொண்டு அவர்களை மதித்து வாழ வேண்டும். நாங்கள் சென்று வருகிறோம். எங்களை மறந்துவிடாதே!" என்று கூறிவிட்டு வாழ்த்திய பின் ஆசிரமத்திற்குத் திரும்பினர். விரிசிகை அவர்களைக் கைகூப்பி வணங்கிக் கண்களில் நீர் மல்க விடை கொடுத்தாள். அவர்கள் சென்ற பின் விரிசிகையை, மக்கள் காணுமாறு வீதிகளின் வழியே நடத்தி அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.

கோசாம்பியின் புறநகரத்துச் சோலைகளிலிருந்து இலாவாணத்திற்குத் திரும்பிச் சென்றவர்கள், விரிசிகையின் தந்தையான மந்தர முனிவரிடமும் தாய் நீலகேசியிடமும் நடந்தவற்றை விவரித்தனர். அதே ஆசிரமத்தில் அதே மலைச்சாரலில் விரிசிகையில்லாமல் வாழ்வது அவருடைய மனத்தை வேதனையால் அரித்தது. பாசவுணர்வுகளும் உருப்பெற்று அரித்தது. திடீரென்று மந்தர முனிவருக்கு மனத்தில் என்ன தோன்றியதோ தெரியவில்லை! "நீலகேசி" என்று தன் தேவியை அழைத்தார். நீலகேசி அவருக்கு முன் வந்தாள். "இனி என்னால் இதே ஆசிரமத்தில் விரிசிகையை மறந்து எனது கடுமையான தவத்தின் நியமங்களை மேற்கொண்டு பொறுமையாக வாழ முடியாது போலிருக்கிறது. நான் வேறிடத்திற்குப் போகிறேன். உன்னையும் பிரிந்து தனிமையான கடுந்தவத்தில் ஈடுபடப் போகிறேன்! எனக்கு விடைகொடு" என்றார். அவள் ஏதேதோ சொல்லி மறுத்துக் கூற முயன்றாள். ஆனால், மந்தர முனிவர் அவளுடைய மறுப்பை இலட்சியம் செய்யாமலே புறப்பட்டு விட்டார். ஆசிரமத்து நிகழ்ச்சி இவ்வாறிருக்கக் கோசாம்பி நகரின் நிகழ்ச்சிகளை மேலே தொடர்ந்து கவனிப்போம்.

கையிலே செங்குவளை மலரை ஏந்தித் தெய்வமகள் ஒருத்தி ஊர்ந்து வருவது போலக் கோசாம்பி நகரத்து வீதியில் மென்னடை பயின்று, தன்னை அழைத்துச் செல்லும் அரசபோக ஆரவாரங்களுடனும் பரிவாரத்தினருடனும் சென்றாள் விரிசிகை. அவளுக்குப் பின் ஆசிரமத்தில் அவள் பழகிப் பயின்ற குயில், மயில், புறா, கிளி, மான், பாவைகள் முதலியவற்றையும் கொண்டு சென்றனர். விரிசிகை இவ்வாறு வீதியில் நடந்து அரண்மனைக்குச் சென்றபோது அவளைக் கண்ட கோசாம்பி நகரத்து மக்கள் பலவாறு பாராட்டி வியந்தனர். "மந்தர முனிவர் செய்த வேள்வியில் தோன்றியவளோ இந்தத் தெய்வ கன்னிகை?" என்று வியந்து கூறினர் சிலர். "கையிலே செங்குவளை மலரைப் பற்றிச் செல்லும் திருமகளின் அவதாரமோ?" என்று வியந்தனர் வேறு பலர். "உதயணன் இத்துணை நாள் இவளைப் பிரிந்து எவ்வாறு இங்கே ஆற்றியிருக்க முடிந்தது?" என்றெண்ணிக் கொண்டனர் மற்றும் சிலர். "இவளுக்கு நிகரான அழகுடையவளை உலகிலேயே காண்பது அரிது! 'நானே சிறந்த அழகி' என்று இறுமாந்திருக்கும் எந்தப் பெண்ணும் இவளைக் கண்டால், உறுதியாகத் தலைகுனிந்து நாணிப் போவது நிச்சயம்! இயற்கையிலேயே அழகின் பிம்பமாக விளங்கும் இவளுக்கு அலங்காரம் செய்திருக்கிறார்களே! அவர்கள் எவ்வளவு பெரிய பேதைகள்!" என்று இவ்வாறு அவளைக் கண்டவர்கள் தத்தமக்குத் தோன்றியபடியெல்லாம் பேசிக் கொண்டு பொழுது போக்கினர். விரிசிகை அரண்மனையை அடைந்தாள்.

அரண்மனை வாயிலில் உதயணன், யூகி, வயந்தகன், முதலியவர்களும், வாசவதத்தை, பதுமாபதி, மானனீகை முதலியவர்களும் அவளை வரவேற்பதற்குக் காத்திருந்தனர். விரிசிகை வந்த உடனேயே தத்தை முதலிய பெண்கள் அவளை அன்போடு தழுவித் தங்கள் அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றனர். கள்ளங்கபடில்லாத அந்தப் பெண், மிக விரைவிலேயே தன் அன்பால் தத்தை, பதுமை முதலியவர்களுடைய மனத்தில் நிரந்தரமான ஓர் இடத்தைப் பெற்று விட்டாள். தத்தை முதலிய மூன்று தேவியர்களுமே பெற்ற தாயார் போல இருந்து விரிசிகையின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைத்தனர். உதயணனுடைய வாழ்வு, நான்கு அன்பு நிறைந்த காதல் மகளிரோடு இன்ப நிறைவாக வாய்த்தது. கோசாம்பி நகரத்து மக்களும் அமைதியான நல்லாட்சியுற்றனர். கோசாம்பி நகரத்து அரண்மனையிலே நிறைந்த நல்வாழ்வின் போக அமைதி பரவித் திகழ்ந்தது.

73. ஆசை பிறந்தது

விரிசிகை-உதயணன் திருமணம் நிகழ்ந்த பின், கோசாம்பி நகரத்து அரண்மனையின் வாழ்க்கை இன்பமும் அமைதியுமாகப் பல ஆண்டுகள் கழிந்து கொண்டிருந்தன. இன்பமும் அமைதியுமாகக் கழிந்த அந்தப் பல வருடங்களுக்கு நடுவே நிகழ்ந்த எல்லா நிகழ்ச்சிகளும் கதைப் போக்கிற்கு அவசியமில்லையாயினும் சில இன்றியமையாத நிகழ்ச்சிகளை அவசியம் குறிப்பாக அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. உதயணனின் தலை சிறந்த நண்பர்களாகிய யூகி, வயந்தகன், இடவகன் முதலியவர்களுக்குத் திருமணம் ஆகியிருந்தது. முதலாவதாகக் குறிப்பிட வேண்டிய செய்தி இது. பல ஆண்டுகள் தானும் தன் மனைவியுமாக கோசாம்பி நகரத்திலேயே தங்கியிருந்த யூகிக்கு 'மீண்டும் தான் அவனைக் கண்டு அளவளாவ விரும்புவதாகவும், அவன் உடனே வரவேண்டும்' என்று பிரச்சோதனனிடமிருந்து அழைப்பு வந்தது. உதயணனின் அனுமதி பெற்றுத் தன் மனைவியைக் கோசாம்பியிலேயே விட்டுவிட்டுத் தான் மட்டும் உஞ்சை நகருக்குச் சென்றான் யூகி. இவ்வாறு சென்று திரும்பிய பின்னரும், இடையிடையே கோசாம்பியிலும் உஞ்சையிலுமாக யூகி மாறி மாறி இருந்தான். மற்ற நண்பர்கள் தத்தம் மனைவிமாரோடு கோசாம்பியிலேயே உதயணனுக்கு துணையாகத் தங்கியிருந்தனர். தானே முன்பு இலாவாணத்துக்கு அனுப்பி இருந்த உருமண்ணுவாவையும் இப்போது தன்னிடம் வரவழைத்து வைத்துக் கொண்டிருந்தான் உதயணன். எனவே உருமண்ணுவாவும் தன் மனைவி இராசனையுடனே கோசாம்பி நகரத்தில் வந்து தங்கியிருந்தான். இந்த நிலையில் தான் உதயணனின் வாழ்க்கையில் ஐந்தாவது பகுதியாக அவன் மகன் நரவாண தத்தனின் தோற்றமும் வளர்ச்சியும் தொடங்குகிறது.

இவ்வாறு இருக்குங்கால், உதயணனுடைய அரசவைக்கு ஒருநாள், 'சொந்தப் புதல்வர்கள் இல்லாமையால் தங்கள் உடைமை எவரைச் சேரும்?' என்பதை அறிந்து கொள்ளும் நோக்கும் அவாவும் உடையதான வழக்கு ஒன்றை இரண்டு வாணிகர்கள் விசாரணைக்குக் கொணர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்புக் கூறுமாறு உருமண்ணுவாவை உதயணன் நியமித்தான். உருமண்ணுவா அந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கினான்.

வழக்கு விவரம் இதுதான். ஒரு தாய் வயிற்று பிறந்த வாணிக மக்கள் மூவர். மூவரும் உடன் பிறந்தவர்களாகையினால் குடும்பத்தின் உடைமைகள் மூவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கப் பெற்றிருந்தன. மூவரும் தனித்தனியே பிரிந்து தத்தம் இல்லற வாழ்க்கையையும் வாணிகத்தையும் செவ்வனே நிகழ்த்தி வந்தனர். மூவருடைய தொழிலும் வாணிகமே! ஆனாலும் மூவரும் அதை மேற்கொண்டிருந்த முறையிலே வேற்றுமை இருந்தது. ஒருவன் அரும்பெரும் பொருள்களைக் கப்பலிலே ஏற்றிச் சென்று பிறநாடுகளில் விற்கும் கடல் வாணிகத்தை மேற்கொண்டிருந்தான். மற்றொருவன் உள்ளூரிலேயே கடை ஒன்று வைத்து அதன் மூலமாக வாணிகம் செய்தான். மூன்றாமவன், கிடைப்பதற்கு அரிய பண்டங்களை எளிய முறையில் சேகரித்துக் காலம் வரும்வரை மறைத்து வைத்து, இப்பண்டங்கள் விலையேறிய காலத்தில் அவற்றை விற்று மிகுந்த ஊதியம் சம்பாதித்து வந்தான்.

இவர்கள் வாழ்க்கை இவ்வாறு கழிந்து வருங் காலத்தில், கடல் வாணிகம் செய்து வந்தவனாகிய முதலாமவன், கடலில் கப்பல் கவிழ்ந்து இறந்து போனான். கடலில் எழுந்த கோரப் புயலும் கொந்தளிப்பும் அவன் உயிரைச் சூறைகொண்டுவிட்டன. இதை அறிந்த மற்ற சகோதரர்கள் இருவரும் அவன் பிணத்தை அது ஒதுக்கப்பட்டிருந்த தீவிலிருந்து கண்டெடுத்து அதற்கு உரிய பிதிர் கடன்களைச் செய்தனர். செய்துவிட்டுத் தங்கள் தாயிடம் சென்று எல்லா விவரத்தையும் கூறி, "இறந்துபோன அவனுக்குப் பிதிர் கடன்கள் யாவற்றையும் தாங்களே செய்திருப்பதனால் அவனுடைய உடைமையைத் தாங்களே இரு பகுதியாக்கிப் பிரித்து எடுத்துக் கொள்வதற்குத் தங்களுக்கு உரிமை உண்டு" என்றனர். தாயோ புதல்வனை இழந்த பெருந்துயரத்தால், கண்ணீர் சிந்திப் பேதுற்று இருந்தனளே ஒழிய, அவர்களுக்கு மறுமொழிக் கூறவில்லை. எனவே, இறந்து போனவனின் உடைமை யாருக்கு உரியது என்பதை அறிந்து கொள்வதற்கே அந்த வாணிக சகோதரர்கள், உதயணனுடைய அவைக்களத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்கள்.

மேலே கூறப்பட்டவாறு வழக்கின் முழு விவரத்தையும் அவர்கள் வாய்மொழியாகவே உதயணன் அறிந்து கொண்டபின், உருமண்ணுவா அவர்களைச் சில கேள்விகள் கேட்டான்.

"இறந்து போனவனுக்கு மனைவி இருக்கின்றாள் அல்லவா?"

"ஆம், இருக்கின்றாள்!"

"இது பற்றி அவள் கருத்து என்ன?"

"இப்போது அவள் கருவுற்ற நிலையில் இருக்கின்றாள்" என்று அறிந்து வந்து கூறினர் அவர்கள்.

"கருவுற்றிருக்கும் அவளுக்கு ஆண் மகன் பிறந்தாலோ, உடைமையைப் பற்றி நீங்கள் கனவிலும் உங்களுக்குரியதாக எண்ண முடியாது. பெண் குழந்தை பிறந்தால், உடைமை உங்கள் இருவருக்கும் சரிசமபாகமாகப் பிரிக்கப்பட்டுச் சேரும். இக்காரணங்களால், அவள் பிள்ளைப் பேறு எய்துகிற வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்" என்று உருமண்ணுவா இந்த வழக்கிற்குத் தீர்ப்பு கூறினான்.

இந்த வழக்கிற்குத் தீர்ப்புக் கூறும்படி உருமண்ணுவாவை நியமித்திருந்தாலும், அவையில் இவ் வழக்கு நிகழும் போது தானும் அருகே இருந்தான் உதயணன். வழக்கு முடிந்த போது உதயணனின் கண்கள் கலங்கியிருந்தன. 'அவை கலையலாம்' என்று கட்டளை பிறப்பித்துவிட்டுத் தான் மட்டும் சற்று நேரம் அங்கேயே அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான் உதயணன். அன்று அவையில் நிகழ்ந்து முடிந்த அந்த வழக்கு அவன் உள்ளத்தை உருக்கியிருந்தது. 'மக்களைப் பெறாத வாழ்வும் ஒரு வாழ்வா?' வாழ்க்கையையும் உடைமையையும் எவராவது கண்டவர்கள் பற்றிக் கொண்டு, கையினால் எள்ளும் நீரும் வாரி இறைக்கும் இழிந்த வாழ்வல்லவா அது?' என்று இதே வினாக்கள் அவன் உள்ளத்தில் திரும்பத் திரும்பச் சுழன்று கொண்டிருந்தன. ஆம்! உதயணனுக்கும் அன்று வரை மக்கட்பேறு இல்லை. தன் வாழ்க்கையில் நிறைவேற்ற முடியாத பின்னத் தன்மையை, இந்த அம்சத்தின் குறைவு உண்டாக்கி விட்டதாக அவன் எண்ணினான். உதயணனின் உள்ளம் இதற்காக ஏங்கியது. ஏக்கம் என்பது ஆசையின் அடிப்படை. அது மட்டுமன்று, விருப்பத்தின் வேதனை. அங்கே உதயணனின் உள்ளத்தில் அந்த வேதனை பிறந்துவிட்டது. 'தனக்குப் பின் கோசாம்பியின் அரியணையை அலங்கரிக்க ஏற்ற மகனொருவன் தனக்கில்லையே' என்ற பெருங்குறையை அவன் உணர்ந்து கொண்டான்.

'மக்கட்பேறு இல்லையே? தனக்குப் பின் தன் மரபும் தன்னால் ஆளப்படும் நாடும் என்ன ஆவது, என்ற கவலை, ஏக்கம், வேதனை ஆகியவைகளினால் உதயணன் எந்த ஒரு துயரத்தை அடைந்தானோ, அதே துயரத்திலாழ்ந்து அங்கே அந்தப்புரத்தில் வாசவதத்தையும் ஏங்கிக் கொண்டிருந்தாள். அன்று காலை எழுந்திருந்தது முதலே இந்தக் கவலை ஏனோ அவளுடைய இதயத்தைப் பற்றி வாட்டிக் கொண்டிருந்தது. தவத்துறையில் சிறந்த துறவிகளின் துறவுச் சாலைக்குச் சென்று, அவர்களை வழிபட்டுவிட்டு வந்தபின் அவர்களுடைய நல்ல ஆசி மொழிகளினால் தனக்கு நன்மையே விளையும் என்ற நம்பிக்கையுடன் வாசவதத்தை தனது அந்தப்புரத்து மேல்மாடத்திலே வந்து இருந்தாள். அவள் மேல்மாடத்தில் வந்து அமர்ந்து, கவலை மிக்க நெஞ்சுடன் வானவெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் அப்போது அங்கே தென்பட்ட வேறு ஒரு காட்சியும் அவள் மனத்தை ஏக்கமுறச் செய்யும்படி அமைந்திருந்தது.

புறாக்கள் கூட்டம் கூட்டமாகத் தத்தம் குஞ்சுகளுக்கு இரை தேடி எடுத்து வந்து கொண்டிருந்தன. பவழம்போலச் சிவந்த கால்களுடனும் வெண்புகை போன்ற நிறத்துடனும் அந்தப் புறாக்கள் பறந்து வரும் வேகத்தில் தங்கள் தங்கள் குஞ்சுகளுக்கு இரையூட்ட வேண்டிய தாய்மையின் அவசரமும் கலந்திருப்பது போலத் தோன்றியது அவளுக்கு! இதயத்தை வகிர்ந்து கொண்டு வெளிவருவது போல ஒரு நீண்ட பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது. வாயில் கௌவிய இரையுடனே வந்த அந்தப் புறாக்களிற் சில, மேல்மாடத்தின் அருகே கீழ்ப்புறமிருந்த தோட்டத்திலுள்ள மரங்களில் வந்து அமர்ந்து, தம் வாயிலிருந்த இரையைக் குஞ்சுகளுக்கு ஊட்டின. குஞ்சுகள் தாயின் வாயிலிருந்து தமக்குக் கிடைத்த அந்த இரையை மகிழ்வோடு உண்பதையும், தாய்ப் பறவை அதில் அநுபவிக்கும் தியாகங் கலந்த இன்பத்தையும் தத்தை கண்டாள்!

தத்தையின் உள்ளம் வெதும்பியது! வாழ்க்கையில் பெண்மையின் அநுபவத்துக்கு உரியனவாகக் கிடைத்து வருகிற உணர்வுகளில் மிகவும் புனிதமானது தாய்மை. 'அது தனக்கு அன்று வரை கிடைக்கவே இல்லை' என எண்ணும் போதே துயரம் தாங்காமல் நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது தத்தைக்கு. அவள் முடிவிலாத துயரச் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

74. வாசவதத்தையின் மயற்கை

தத்தை அன்று மாலை வரை ஏக்கம் நிறைந்த எண்ணங்களுக்கு நடுவே தன் பொழுதைக் கழித்தாள். மாலை மயங்கி இருள் படர்ந்து பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில், உதயணன் அவளுடைய அந்தப்புரத்திற்கு வந்தான். தத்தையைக் கண்டதுமே, அவள் முகத் தோற்றத்திலிருந்தே அவள் உள்ளத்தை ஏதோ ஒரு பெரிய ஏக்கம் அரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானித்து விட்டான் உதயணன். மெல்ல அருகில் சென்று அமர்ந்து, பரிவோடு கூந்தலைக் கோதியவறே வாட்டத்திற்குக் காரணம் என்ன என்பதை வினவினான். தத்தையின் குறிப்பான மறுமொழியிலிருந்து, அன்று அரசவையில் நிகழ்ந்த வழக்கினால் தனக்கு ஏற்பட்ட ஏக்கம் எதுவோ அதுவேதான் அவளுக்கும் அப்போது ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து வியந்தான் உதயணன். தண்ணீர் வேட்கையால் தவிப்பவன், தனக்கு எதிரே குடம் நிறையத் தண்ணீருடனே ஒருவர் வருவதைக் காண்பது போலிருந்தது, உதயணனுக்கும் தத்தைக்கும் ஏற்பட்ட இந்த எண்ண ஒற்றுமை! பேசிக் கொண்டு துயரச் சுமையைக் குறைத்து ஆறுதலடைந்தனர் அவர்கள். ஆறுதல் ஆர்வத்தையும் விளைவித்தது! அதன் பின்பு என்ன? அன்று இரவு கோசாம்பி நகரத்தில் தத்தையின் அந்தப்புரத்தில் மாடத்தின் மேலே காய்ந்த நிலவு வீண் போகவில்லை! இரவு வீண் போகவில்லை!

அந்த இனிய இரவில் உதயணன் ஓர் அழகிய கனவு கண்டான். விரும்பத் தகுந்ததான ஓர் இன்பக் கனவு அது! நடுயாமத்து இரவின் கடுமையை விலக்கிக் கொண்டு ஒளிமயமான அழகுடனே தெய்வ நங்கை ஒருத்தி உதயணன் முன் தோன்றினாள். "எங்கள் அரசனாகிய குபேரன் உம்மை அழைத்து வருமாறு என்னை இங்கே அனுப்பினான்" என்று அந்தத் தெய்வீகப் பேரழகு பெண் அவனை நோக்கி கூறினாள். "என் கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையும் என்னுடன் அங்கே வருவாள். இதற்குச் சம்மதமானால் நான் உங்கள் அரசனின் அழைப்பை இப்பொழுதே ஏற்றுக் கொள்ளுகின்றேன்" என்று உதயணன் அவளுக்குப் பதில் சொன்னான். அந்தத் தெய்வீக நங்கையும் அதற்குச் சம்மதித்து அவனையும் தத்தையையும் தன்னுடன் குபேரனின் நகராகிய அளகாபுரிக்கு அழைத்துக் கொண்டு சென்றாள். அளகாபுரி நகரை அடைந்து குபேரனின் அவைக்குள் உதயணனும் தத்தையும் நுழைந்த போது அரியணையில் வீற்றிருந்த குபேரன் மிக்க அன்புடனும் பெருமதிப்புடனும் அவர்களை வரவேற்று ஒரு சிங்காதனத்தில் அமரச் செய்தான். பின்பு குபேரனுடைய ஆணையால் அவர்களை அழைத்துச் சென்ற தெய்வீக நங்கை அழகாகவும் ஒளிமயமாகவும் இயற்றப்பட்ட மணிமுடி ஒன்றை உதயணனிடம் அளித்தாள். உதயணன் அதனைத் தனக்களித்த குபேரனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் நன்றி செலுத்தி விட்டு, அதை வாங்கித் தன் அருகிலிருந்த வாசவதத்தையிடம் அளித்தான். அடுத்து இருவரும் குபேரனிடம் விடைபெற்று கொண்டு திரும்பிப் புறப்படுவதற்காக எழுந்திருந்தனர். என்ன விந்தை? வாசவதத்தையின் கையிலிருந்த மணிமுடி அப்போது சட்டென்று பிளந்து கண்ணைக் கூசச் செய்யும் ஒளிப் பிழம்பாக மாறி அவள் திருவயிற்றிலே நுழைந்துவிட்டது! கூடியிருந்த யாவரும் இந்த அதிசய நிகழ்ச்சியைக் கண்டனர். வாசவதத்தையோ தன் கையிலிருந்த மணிமுடியைக் காணாமல் திகைத்துப் போய் ஒன்றும் தோன்றாமல் நின்று கொண்டிருந்தாள்!

இவ்வளவில் உதயணன் தன் கனவிலிருந்து விழித்துக் கொண்டுவிட்டான். உடனே தத்தையை எழுப்பி அவளிடம் இந்த அற்புதமான கனவைக் கூறினான். அவளும் இதைக் கேட்டு வியந்தாள். பொழுது புலர்ந்ததும் ஆற்றலிற் சிறந்த முனிவர் ஒருவரிடம் போய், இக் கனவை உரைத்து இதற்குப் பயன் கேட்டான் உதயணன். "குபேரனின் நாடு வெள்ளியங்கிரி முதலிய தேவருலகத்து நாடுகளை எல்லாம் வென்று விளங்கக்கூடிய வெற்றி வீரனாகிய புதல்வன் ஒருவன் விரைவில் உனக்குப் பிறப்பான். இந்தக் கனவின் பயன் இதுவே" என்று அம் முனிவர் பயன் கூறினார். உதயணன் அதைக் கேட்டு மிகவும் மனமகிழ்ந்தான்.

நாள்கள் கழிந்தன. கனவின் பயனை முனிவரிடமிருந்து அறிந்து கொண்டதனால் விளைந்த ஆர்வமும் பெருமையும், தத்தைக்கும் உதயணனுக்கும் வளர்ந்து பெருகிற்று. அந்த ஆர்வ வளர்ச்சியின் விளைவுக்கு ஓர் அறிகுறி போலத் தத்தை அப்போது கருவுற்றிருந்தாள். கருவுக்குரிய அடையாளங்கள் அவள் உடலில் தெளிவாகப் புலப்பட்டன. உடலில் புதிதாக மின்னும் ஒளி ரேகையிட்டிருந்தது. கருவுக்குரிய தாய்மை யுணர்வின் பொலிவு அவள் மதிமுகத்தில் இலங்கியது. உதயணன் இச் செய்தி அறிந்து பெருமகிழ்ச்சி கொண்டான். கருக்கொண்ட பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் மயற்கை அடிக்கடி அவளுக்கு ஏற்படத் தொடங்கியது. கருவும் நாளுக்கு நாள் அவள் ஆசையையும் தாய்மைப் பெருக்கையும் போலவே வளர்ந்து முதிர்ந்து வந்தது. இந் நிலையில் ஒரு நாள் இரவில் அரிய கனவு அநுபவம் ஒன்று அவளுக்கு ஏற்பட்டது!

விஞ்சையர் உலகிலிருந்து புறப்பட்டு வந்த திறமை மிக்க ஒரு வெள்ளை யானை தன் வயிற்றில் நுழைவதாகவும், பின்பு சிறிது காலம் சென்ற பின் அது தன் வயிற்றிலிருந்து வெளித் தோன்றி வெள்ளியங் கிரிக்குப் புறப்பட்டுப் போய் அங்குள்ள கதிரவனை விழுங்குவதாகவும், தொடர்பும் பொருத்தமும் நம்பிக்கையும் ஏற்பட முடியாத அபூர்வக் கனவு ஒன்றை அவள் கண்டாள். மறுநாள் காலையில் துயிலெழுந்ததும் உதயணனிடத்தில் தன் கனவை உரைத்து அதன் உட்பொதிந்த கருத்தை விளக்குமாறு வேண்டிக் கொண்டாள் வாசவதத்தை. "உனக்குப் பிறக்கும் புதல்வன் வலிமையில் சிறந்தவனாக இருப்பான்! தன் வீரத்தாலும் ஆற்றலாலும் தேவருலகம் வரையும் சென்று அங்கும் தனது வெற்றியை நிலைநாட்டி ஆணை செலுத்தக் கூடியவனாக இருப்பான் அவன். இதைத் தான் நீ கண்ட கனவும் குறிப்பிடுகிறது! நான் கண்ட கனவிற்கு முனிவர் என்னிடம் உரைத்த பயனிலும் இதே கருத்தைத்தான் விளக்கினார்!" என்று உதயணன் அவளுக்குக் கனவின் பயனை விளக்கித் திருப்தியுறுமாறு செய்தான். பிறக்கப் போகும் தன் புதல்வனின் வீரப் பராக்கிரமத்தைக் கேட்டு மனம் புளகித்தாள் வாசவதத்தை! தாய்மைக்கே இயற்கையான மனக்களிப்பு அவளுக்கு ஏற்பட்டது.

கருப்பமுற்றிருக்கும் காலத்தில் மயற்கையினால் பெண்களுக்கு உண்டாகும் இயற்கையான விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவது ஆடவர்களின் அவசியமான கடமை என்பதை நன்கு அறிந்துணர்ந்திருந்த உதயணன், தத்தைக்கு ஏதாவது விருப்பமுண்டாயின் அதை உடனே தெரிந்து கொண்டு நிறைவேற்ற விரும்பினான். தத்தையின் அருகில் அமர்ந்து கொண்டு அன்போடும் பரிவோடும் அவள் விருப்பத்தைக் குறிப்பாகத் தெரிந்து கொள்ள முயன்றான் உதயணன். கந்தர்வர்களைப் போல வானத்தில் விரும்புமிடங்களில் எல்லாம் பறந்து சென்று, பல ஆறுகளையும் மலைகளையும் நகரங்களையும் காண வேண்டும் என்ற ஆசை தனக்கு மிகுதியாய் இருப்பதாக வாசவதத்தை அவனிடம் தெரிவித்தாள். 'அறியாமை கலந்த மயற்கை நிலையில் என்ன கேட்கிறோம், எதனைக் கேட்கிறோம், தான் அப்போது கேட்கின்ற அந்த ஆசை நிறைவேற்ற முடிந்ததுதானா? அது நிறைவேறுமா என்றெல்லாம் சிறிதளவும் சிந்திக்காமல் கேட்டுவிட்டாளே அவள்' என்றெண்ணி அதை நிறைவேற்றும் வழியறியாமல் தயங்கினான் உதயணன்.

அது தன்னுடைய சாதனையின் வரம்பை விஞ்சிய வேண்டுகோளாயிருப்பது அவனுக்குப் புரிந்தது. அவளுடைய இந்த வேண்டுகோளை இப்படி எதிர்பாராத விதமாகக் கேட்டதும் திகைத்து விட்டான் உதயணன். இப்படிக் கேட்டதற்காக வாசவதத்தையின் மேலும் குற்றம் சொல்லி விடுவதற்கில்லை! தனது இந்த விருப்பம் பலிக்குமோ, பலிக்காதோ என்றஞ்சி இதனைத் தானாக வெளிப்படுத்தாமல் இருந்த அவளை, "எது உன் ஆசையாக இருப்பினும் சரி, அதை நிறைவேற்ற நான் தயங்க மாட்டேன். துணிந்து சொல்" என்று தைரியப்படுத்திக் கேட்டவனே உதயணன் தான். அவனுடைய தைரியத்தின் தூண்டுதலாலும் தனது மயற்கையினாலும் அவள் அப்படிக் கேட்டுவிட்டாள். தத்தை வெளியிட்ட அந்த வேண்டுகோளைக் கேட்டதிலிருந்து மலைத்துப் போய்ச் சிந்தனையிலாழ்ந்து விட்டான் உதயணன்.

அவளது அபூர்வமான இந்த ஆசையை 'எந்த வகையில், எப்படிப் பூர்த்தி செய்யலாம்?' என்றே அவனுக்கு விளங்கவில்லை. இந்த விதமான அந்தரங்க விஷயங்களை அவன் உருமண்ணுவாவோடுதான் கலந்து சிந்திப்பது வழக்கம். நேற்றுவரை கோசாம்பியில் அவனுடனேயே தங்கியிருந்த உருமண்ணுவா, இன்றுதான் ஓர் இன்றியமையாத செயலின் நிமித்தம் இலாவாண நகரத்துக்குச் சென்றிருந்தான். அவன் இருந்தாலாவது தத்தையின் இந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு ஏதாவது ஒரு வழி கூறுமாறு அவனிடம் போய்க் கேட்கலாம். அவனும் அருகில் இல்லாதது உதயணனுக்கு ஒரு கையே இல்லாமற் போனது போலச் சோர்வு தருவதாக இருந்தது. வேறு வழியின்றி அவன் தன் அமைச்சர்களில் சிலரை அழைத்துத் 'தத்தையின் ஆர்வத்தைப் பூர்த்தி செய்வதற்கு ஏதேனும் மார்க்கம் இருக்கிறதா?' என்பதைப் பற்றிச் சிந்தித்தான். அவர்களையும் இது பற்றிச் சிந்தித்து ஒரு வழி கூறுமாறு வேண்டிக் கொண்டான்.

ஒரு முடிவும் செய்ய இயலாமல் இரண்டொரு நாள்களும் சென்று விட்டன. அப்போது அவசர காரியமாக இலாவாண நகரம் சென்றிருந்த உருமண்ணுவா திரும்பி வந்துவிட்டான். உருமண்ணுவாவைக் கண்டதுமே தத்தையின் விருப்பத்தை நிறைவேற்ற இயலாமல் மனம் திகைக்கும் தன் நிலையையும் அவனிடம் பரபரப்போடு விவரித்தான் உதயணன். உருமண்ணுவா உதயணனுக்கு அப்போது உடனே தேவையான அரிய யோசனை ஒன்றைக் கூறினான். 'உருமண்ணுவா வந்தால் தன் கவலை தீரும்படி தனக்கு ஏதாவது வழி கூறித் தத்தையின் ஆசை நிறைவேறுவதற்கு உதவி செய்வான்' என்று உதயணன் நம்பிக் கொண்டிருந்த நம்பிக்கை பாழாகிவிடவில்லை! அந்த நம்பிக்கை மேலும் ஊக்கமடையும் படியாகவே இருந்தது உருமண்ணுவா கூறிய யோசனை. உருமண்ணுவாவின் சிறந்த ஞாபகசக்தியும் அறிவு கூர்மையும் அதிலிருந்து உதயணனுக்கு நன்றாக விளங்கியது.

75. இயக்கன் வரவு

உருமண்ணுவா கூறிய யோசனை இதுதான்! "முன்பு சிறுவயதில் நாம் இதே கோசாம்பி நகரில் வசித்து வந்த போது ஒரு நாள் நண்பர்களாக ஒன்று கூடிக் காட்டுக்கு வேட்டையாடச் சென்றோம் அல்லவா? அப்போது காட்டில் வெகு தொலைவு அலைந்து திரிந்து களைத்த பின், நீர் வேட்கையால் வருந்தித் தண்ணீர் இருக்குமிடம் தெரியாமல் திகைத்துத் திண்டாடிக் கலங்கிப் போனோம்! அந்தச் சமயத்தில் குபேரனுக்கு ஏவல் செய்யும் இயக்கர்களில் ஒருவனாகிய நஞ்சுகன் என்பவன் வந்து நமக்குத் தண்ணீர் கொடுத்துக் காப்பாற்றினானே! அந்தச் சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவன் அன்று நம்மை விட்டுப் பிரியும் போது 'இப்போது ஏற்பட்டாற் போல உங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படுகிற காலங்களில் எல்லாம் என்னை நினையுங்கள்! நான் வந்து உங்களுக்கு வேண்டியதை எல்லாம் உதவுகின்றேன்' என்று அன்புடன் கூறிவிட்டுத் தன்னை நினைப்பதற்குரிய மந்திரத்தையும், என்னை மட்டும் தனியே அழைத்து என்னிடம் கூறிவிட்டுப் போனானல்லவா? அந்த மந்திரத்தை உச்சரித்து அவனை இப்போது இங்கே வரவழைத்து விட்டால் இயக்கனாகிய அவனால் நம் காரியம் நிச்சயமாக நிறைவேறிவிடும்" என்று உருமண்ணுவா தன்னிடம் கூறிய போது அந்தக் காரியம் முக்காற் பங்கு வெற்றியடைந்து விட்டதாகவே எண்ணி மகிழ்ந்தான் உதயணன். உடனே இயக்கனை நினைத்து வரவழைப்பதற்குரிய மந்திரத்தை ஒரு தனி ஏட்டில் எழுதி உதயணனிடம் கொடுத்தான் உருமண்ணுவா.

அந்தப் பழைய நிகழ்ச்சியும் அவ்வளவு நாள்களுக்கு முன்பு கேட்டிருந்த மந்திரமும் உருமண்ணுவாவின் நினைவுத் திரையிலே சலனமும் அழிவும் இன்றி அப்படியே இருந்தது தான் உதயணனுக்கு பேராச்சரியத்தை உண்டாக்கியது. அந்த ஆச்சரியம் ஒருபுறம் இருக்க, அவன் எழுதிக் கொடுத்த மந்திரத்தை மதிப்போடும் பயபக்தியோடும் தூய்மையான நிலையில் ஓதினான் உதயணன். ஓதிச் சிறிது நேரத்திற் கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பு காட்டிலே சந்தித்திருந்த நஞ்சுகன் என்னும் பெயரையுடைய அந்த இயக்கன் உதயணன் முன்பு தோன்றி நட்புணர்ச்சியோடு அவனை வணங்கினான். இயக்கனை உதயணனும் மகிழ்ச்சியோடும் பெருமதிப்போடும் வரவேற்றான். நஞ்சுகன் தான் யார் என்பதையும், தன்னைப் பற்றிய பழைய வரலாற்றையும், தாங்கள் முன்பு காட்டில் சந்திக்க நேர்ந்த நிகழ்ச்சியையும் மறுபடி உதயணனுக்கு நினைவுபடுத்தினான்.

"நீ பிரச்சோதனனுடைய மாய யானையால் சிறைப்பட்டுப் பிணிப்புண்டிருந்த போதும் மகத நாடு சென்று மாணகனாக மறைந்து வாழ்ந்த போதும் என்னை நினைத்து என் உதவியை நாடியிருக்கத் தக்க துன்பங்கள் உனக்கு எத்தனையோ ஏற்பட்டிருப்பதை நான் அறிவேன். ஆயினும் அந்தக் காலத்தில் எல்லாம் என்னை எண்ணி, என் உதவியை நாடாத நீ இப்போது மட்டும் என் உதவியை நாடுவதற்குக் காரணம் என்ன?" என்று நஞ்சுகன் உதயணனை நோக்கி கேட்டான். "அப்போது ஏற்பட்ட அந்தத் துன்பங்களெல்லாம் எங்களுடைய மனித யத்தனத்தினாலேயே தீர்த்துக் கொள்ளக் கூடியவனவாக இருந்தன. மனித யத்தனத்தினால் இயலும் எளிய காரியங்களுக்காக உன்னை அழைப்பானேன் என்று வாளா இருந்துவிட்டோம். இப்போது வாசவதத்தையின் இந்த ஆசையை நிறைவேற்றுவது எங்கள் யத்தனத்திற்கு அப்பாற்பட்டது என்று தெரிந்ததனால் தான் உன்னை விரும்பி அழைத்தோம்" என்று நஞ்சுகனது வினாவுக்குச் சமாதானம் கூறினான் உதயணன்.

"அரசே உனக்குப் பிறக்கப் போகும் புதல்வன் சாதாரணமானவன் அல்லன்! வித்தியாதரர்கள் வாழும் பேருகலத்தாலும் விரும்பப்படுகின்றவன் அவன். அத்தகைய சிறந்த புதல்வனின் கருவை உன் மனைவி தாங்கியிருக்கின்றாள். நீ அவள் விருப்பத்தை இப்போது பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமே. முன்னால் முத்தியடைந்த பத்திராபதி என்னும் யானை, இப்போது குபேரனிடத்தில் தெய்வ கன்னிகையாகப் பிறவியெடுத்து வாழ்ந்து வருகின்றாள். அவள் உனக்கு ஏதாவது ஓர் பெரிய உதவியைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாளாகையினால் தத்தையின் இந்த ஆசையை நீ அவளைக் கொண்டே நிறைவேற்றிக் கொள்ளலாம். பத்திராபதி முன் பிறவியில் யார் என்பது உனக்கு இன்னும் விளங்கியிருக்காது. அவள் பத்திராபதியாகப் பிறந்ததே ஒரு சாபத்தினால் தான். அந்த வரலாற்றை இப்போது நான் உனக்குக் கூறுகின்றேன் கேட்பாயாக!

முன்பொரு காலத்தில் விந்தியமலைக்கு அருகிலுள்ள நருமதையாற்றின் கரையில் பருப்பதம் என்ற மலையில் குபேரன் தன் உரிய மகளிர் சிலருடனே தங்கியிருந்தான். குபேரனுக்கு உரிய தெய்வ மகளிர் பத்திரை முதலிய ஒன்பது பேர்கள். அவர்களில் ஒருத்தியாகிய பத்திராபதி என்பவளை அழைத்து அருகிலுள்ள சோலைக்குச் சென்று மலர் தளிர் முதலியன கொய்து கொண்டு வருமாறு குபேரன் அனுப்பினான். சோலைக்கு மலர் கொய்வதற்குச் சென்ற பத்திராபதி அங்கே ஓரிடத்தில் ஓர் ஆண் யானையும் பெண் யானையும் களிப்புடனே கூடிய நிலையில் இருந்ததைக் கண்டு மனோ விகாரமுற்று விரகதாபம் கொண்டாள். அந்த நிலையில் அவள் தன் செயலை மறந்ததைக் கண்டு குபேரன், ஆற்ற முடியாத சினத்தினால் மண்ணுலகிற் சென்று பெண் யானையாகப் பிறக்குமாறு அவளுக்குச் சாபம் அளித்துவிட்டான். பத்திராபதி அஞ்சி நடுங்கியவளாய்க் கலங்கிய உள்ளத்தோடு, 'எனக்கு எப்போது இச் சாபத்திலிருந்து விடுதலை?' என்று குபேரனை வினவினாள். 'உன்னைப் பிரச்சோதன மன்னன் பத்திராபதி என்ற இதே பெயருக்குரிய யானையாக வளர்த்து உதயணனுக்கு அளிப்பான். உதயணன் வாசவதத்தையோடு உஞ்சை நகரிலிருந்து தப்பி ஓடும்போது இருளில் பெருந்தொலைவு சென்ற பின் காலகூடம் என்ற சுடு நோயால் நீ இறந்து வீழ்வாய். அப்போது இறந்து வீழ்ந்த உன் காதுகளில், உதயணன் பஞ்ச மந்திரத்தை உபதேசிப்பான். அதன் பின் நீ பழைய தெய்வ கன்னிகை பத்திராபதியாக மாறிப் பிறந்து இங்கே வருவாய்' என்று குபேரன் அன்று பத்திராபதிக்குச் சாப விடுதலை கூறினான். பின்பு இதன்படியே நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்து முடிந்தது உனக்கும் தெரியும்.

இப்போது அதே பத்திராபதியால் தான் உன் மனைவி வாசவதத்தை கருக் கொண்டிருக்கிறாள். பத்திராபதிக்குப் பஞ்ச மந்திரத்தை உபதேசித்ததற்காக, உன் மேல் நன்றி கொண்டு குபேரனிடம் உனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டுமென்று வரம் கேட்டு அவள் இவ்வாறு செய்துள்ளாள். அவளுடைய ஏற்பாட்டின்படி குபேரன், சௌதர்மேந்திரன் என்னும் வித்தியாதரன் மூலமாகச் சோதனன் என்னும் முனிவனை உன் மகனாக அவதரிக்குமாறு ஏற்பாடு செய்திருக்கிறான். எனவே அதே பத்திராபதியை இப்போது நீ இந்த உதவிக்காக அழைத்தால் வானிற் பறக்க வேண்டும் என்ற உன் மனைவியின் மயற்கை உடனே நிறைவேறிவிடும்" என்று சொல்லிப் பத்திராபதியை அழைப்பதற்குரிய மந்திரத்தையும் அவனுக்குக் கூறிவிட்டுச் சென்றான் நஞ்சுகன் என்ற அந்த இயக்கன். இதைக் கேட்டு உதயணன் கவலை நீங்கப் பெற்று மகிழ்ந்தான்.

வாசவதத்தை விரும்பியபடியே அவளுக்குப் பறக்கும் ஊர்தியைச் செய்து தருவதற்கு இயலும் என்ற மனத் திருப்தியோடு அதற்கான முயற்சிகளைத் தொடங்கினான் அவன். தனக்கு நண்பனாகிய இயக்கன் நஞ்சுகன் பத்திராபதியை நினைத்து அழைப்பதற்குரிய மந்திரத்தைக் கூறிவிட்டுச் சென்ற பின், உதயணன் அதே மந்திரத்தை எண்ணி இடைவிடாமல் உருவேற்றத் தொடங்கினான். பத்திராபதியின் உதவியால் தத்தையின் ஆசையை நிறைவேற்றிவிடலாம் என்ற விருப்பமே இதற்குக் காரணமாகும். இதே சமயத்தில் உதயணனுடைய அமைச்சர்களும் வாளா இருக்கவில்லை! அங்கங்கே நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்த திறமை வாய்ந்த தச்சர்களை வரவழைத்து, 'வானிற் பறந்து சென்று பல இடங்களையும் காணுவதற்குப் பயன்படும் இயந்திரம் ஒன்றை உங்களால் இயற்ற முடியுமா?' என்று கேட்டு வந்தனர். ஆனால், அவ்வாறு அழைக்கப்பட்டு வந்த தச்சர்களில் எவரும் தங்களால் அதைச் செய்வது சாத்தியமில்லை என்றே கூறினர். எல்லாரும் அது முடியாத காரியம் என்று சொல்லி ஒருமுகமாக கையை விரித்துவிட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில், உதயணன் தன்னை எண்ணித் தன் உதவியை நாடுகின்றான் என்பதைப் பத்திராபதி உணர்ந்தாள். உடனே தான் சென்று உதயணனுக்கு உதவ வேண்டும் என்ற அவா அவளுக்கு ஏற்பட்டது. இளமையான தச்சன் ஒருவனைப் போலத் தன் உருவத்தை மாற்றிக் கொண்டு உடனே உதயணனைச் சந்திக்கக் கோசாம்பி நகருக்குப் புறப்பட்டாள் பத்திராபதி. 'ஒரு காலத்தில் தனக்கு நிரம்ப உதவி செய்தவனுக்கு, இன்று தானே உதவி செய்வதற்குச் செல்கிறோம்' என்றெண்ணி பெருமிதம் கொண்டு மகிழ்ந்தாள் அவள்.

76. புதல்வன் பிறந்தான்

கோசாம்பி நகரத்துக்கு வந்து இளந்தச்சன் உருவத்தோடு அரண்மனை வாயிலில் நுழைந்த பத்திராபதி, முதலில் உருமண்ணுவாவைச் சந்தித்தாள். தச்சுவேலை செய்யக்கூடிய திறமை வாய்ந்த இளம் ஆண்மகனைப் போன்ற தோற்றத்தில் வந்துள்ளவனைக் கண்டு மனமகிழ்ந்த உருமண்ணுவா, உடனே உதயணனிடம் சென்று கூறினான். "அரசே! இப்போது வந்திருக்கும் தச்சுவினை இளைஞன், சிறந்த கலை வல்லான் போல் விளங்குகின்றான். இவனைப் பார்த்ததிலிருந்து நம் விருப்பத்தை இவனால் நிச்சயமாக நிறைவேற்ற முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது. இவன் இதற்காக எவ்வளவு சன்மானம் கேட்டாலும் நாம் கொடுத்து விடலாம்" என்று கூறிய உருமண்ணுவாவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்ட உதயணன், உடனே அந்தத் தச்சனை அழைத்து வருமாறு பணித்தான். தச்சன் அழைத்து வரப்பட்டான்.

உதயணனும் உருமண்ணுவாவும் வாசவதத்தையின் ஆசையை விவரித்து, அதற்கேற்றபடி 'பறக்கும் இயந்திரத்தைச் செய்ய இயலுமா?' என்று தச்சனை வினாவினர். தச்சன் ஒரு மறுப்பும் சொல்லாமல் முகமலர்ச்சியோடு அதற்குச் சம்மதித்தான். அவன் சம்மதித்த விதமும் அப்போது அவனிடம் தோன்றிய முகபாவமும் உதயணனுக்கு முழு நம்பிக்கையை ஊட்டுவனவாக இருந்தன. இயந்திரப் பொறி செய்வதற்கு ஏற்ற பொருள்களை அளித்து, வேலையை உடனிருந்து மேற்பார்வை செய்யுமாறு உருமண்ணுவாவைக் கேட்டுக் கொண்டான் உதயணன். வேலைத் தொடங்கி அதிகமான நாள்கள் கழியவில்லை. மிகுந்த திறமையும் சுறுசுறுப்பும் கொண்டு காரியத்தை நடத்தினான் தச்சன். அவர்கள் எதிர்பார்த்த காலத்திற்கு முன்பே இயந்திரம் முற்றுப் பெற்றுவிட்டது. வாசவதத்தை அதில் பறப்பதற்காக ஆசையோடு காத்திருந்தாள். உதயணன் அவளை அழைத்துச் சென்று வானிற் பறப்பதற்குரிய அந்த இயந்திரத்தைக் காண்பித்தான். இயந்திரத்தை வெள்ளோட்டம் விடுகிற பாவனையில் அப்போதே அதில் பறந்து செல்ல விருப்பமுற்றனர் தத்தையும் உதயணனும். மங்கை பங்கனாகச் சிவபெருமானும் உமாதேவியாரும் ஒருங்கே ஓராசனத்தில் ஏறி அமர்ந்ததைப் போல உதயணனும், வாசவதத்தையும் பறக்கும் இயந்திரத்தில் ஏறியமர்ந்தனர்.

இயந்திரம் புறப்படுகின்ற நேரத்தில் உருமண்ணுவா, உதயணனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தான். "அரசே! என் மனைவி, வயந்தகன் மனைவி, இடவகன் மனைவி ஆகியோரும் இப்போது கருவுற்றிருக்கின்றனர். அவர்களுக்கும் தங்கள் தேவியாருக்கு ஏற்பட்டிருப்பது போலவே வானிற் பறந்து பல இடங்களையும் காணவேண்டும் என்ற மயற்கை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. ஆகையால் அவர்களையும் இவ்வியந்திரத்தில் ஏற்றிக் கொண்டு செல்லத் தாங்கள் திருவுளம் பாலிக்க வேண்டும்."

உருமண்ணுவாவின் இந்த வேண்டுகோளை உதயணன் மறுக்கவில்லை. ஆனால், "இயந்திரம் அவ்வளவு பேர்களைத் தாங்குமோ, தாங்காதோ தெரியவில்லையே?" என்று தச்சனை நோக்கி உதயணன் ஒரு சந்தேகத்தை வெளியிட்டான்.

"உலகம் முழுவதும் இதில் ஏறினாலும் ஏறட்டுமே! இந்த இயந்திரம் தாங்கும்" என்று சிரித்தவாறே விடையிறுத்தான் தச்சன். தச்சன் இவ்வாறு கூறவும் உதயணன் யாவரையும் ஏறிக் கொள்ளச் சொன்னான். யாவரும் ஏறிக் கொண்டனர். இயந்திரம் புறப்படுவதற்கு இருந்தது. தச்சன், அதைச் செலுத்திக் கொண்டு போகவேண்டிய முறைகளையும், நுணுக்கங்களையும் அப்போது உதயணனுக்கு விளக்கமாக எடுத்துக் கூறலானான்.

"இந்த இயந்திரம் வானில் விரைவாகச் செல்லுவதும் மெல்லச் செல்லுவதும் நீங்கள் மனத்தில் எண்ணுகின்ற எண்ணத்தைப் பொறுத்தே இருக்கின்றது. உயரப் பறக்க வேண்டிய இடங்கள் இவை இவை என அறிந்து, அவற்றிற்கு ஏற்றபடி பறக்க வேண்டும். ஆற்றின் கரைகள், தீவுகள் முதலிய இடங்களுக்கு இயந்திரத்தைச் செலுத்தி நீங்கள் அவ்விடங்களில் இறங்குவது அவ்வளவாக உசிதமில்லை. இயந்திரத்தின் இலாகன வகைகள் இன்னின்ன நிலையிலுள்ளன என்று பறக்கும் போது முற்றிலும் உணரவேண்டும்."

தச்சன் கூறிய உரைகளைக் கேட்டுக் கொண்ட பின் உதயணன் இயந்திரத்தைத் தானே இயக்கினான். வனப்பும் விரைவும் ஒளியும் ஒருசேரத் தோன்றுமாறு இயந்திரம் விரைவாக மேலெழும்பிப் பறந்தது. கதிரவன் ஒளியில் தகத் தகாயமாக மின்னிக் கொண்டே மேகக் கற்றைகளைக் கிழித்து விலக்கிக் கொண்டு இயந்திரம் பறந்து வான் மேற் சென்றது. வாசவதத்தையும் உதயணனும் மற்றையோரும் உள்ளங்களித்தனர். வானவெளியின் பரப்புக்கு உட்பட்ட நாடு நகரங்களையெல்லாம் அவர்கள் மேலே விமானத்திற் பறந்தபடியே சுற்றிப் பார்த்தனர். மலைகள் அடர்ந்து செழித்து விளங்கும் வன வனாந்தரங்கள், ஆறுகள், அருவிகள், குளிர் பூம்பொழில்கள் எல்லாவற்றையும் மகிழ்ந்து கண்டனர். ஏறியிருந்தோர் பிரமித்து வியப்புக் கொள்ளுமாறு விரைவும் நுணுக்கமும் கொண்டு இயங்கிப் பறந்தது அந்த இயந்திரம். எல்லாவற்றையும் கண்டு முடிந்த பின் இயந்திரத்தைக் கோசாம்பி நகர் நோக்கித் திருப்பிச் செலுத்தலானான் உதயணன்.

கோசாம்பி நகரத்து அரண்மனையில் இயந்திரத்தை இயற்றிய தச்சன் முதலியோர் அது திரும்பி வருவதை எதிர்நோக்கிக் கோயில் முன்றிலில் ஆவலோடு காத்திருந்தனர். அவர்களுடைய ஆவல் வீண் போகவில்லை. இயந்திரம் கீழே இறங்குவதற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கிற காட்சியை, மேலே கண்டார்கள். தாங்கள் சுற்றிப் பார்க்க வேண்டிய அதிசயங்களை எல்லாம் இயந்திரத்தில் பார்த்து முடித்துவிட்டுக் கோசாம்பி நகரத்தில் வந்து இறங்கியவுடன் உதயணனுக்கு ஏற்பட்ட முதல் உணர்ச்சி 'அதை இயற்றிக் கொடுத்த தச்சுவினை இளைஞனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்' என்பதேயாகும். இயந்திரத்திலிருந்து இறங்கியதும் ஆவலோடு பாய்ந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த தச்சனைக் கட்டித் தழுவிக் கொண்டான் உதயணன்.

"இளங்கலைஞனே! எவராலும் நிறைவேற்றிட முடியாத ஆசையை என் மனைவி என்னிடம் வெளியிட்டாள். 'அவள் விருப்பம் நிறைவேற வழியின்றி வீணாகவே போய் விடுமோ?' என்று அஞ்சி, நான் நம்பிக்கை இழந்த நிலையில் மனம் சோர்ந்து இருந்தேன். அப்போது நீ வந்து என் முன் தோன்றி, இந்த அருமையான இயந்திர ஊர்தியை எனக்கு இயற்றிக் கொடுத்தாய்" என்று இவ்வாறு தச்சனை நோக்கிக் கூறிவிட்டுத் தன் உடலில் அணிந்து கொண்டிருந்த அணிகலன்களை எல்லாம் கழற்றி அவனுக்கு அளித்தான் உதயணன். ஆனால் தச்சன் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. "அரசே! நான் யார் என்பதை இப்பொழுது உங்களிடம் கூறுகிறேன்" என்று தச்சனிடமிருந்து வந்த குரல் இனிமையான பெண் குரலாக இருக்கவே உதயணன் திகைப்போடு தச்சனை நிமிர்ந்து பார்த்தான். அங்கே தச்சன் இல்லை. ஒலியும் வனப்புமாகப் பொலிவோடு விளங்கும் தேவ கன்னிகை ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். உதயணன் ஒன்றும் புரியாமல் வியந்தான். அக்கன்னிகை தொடர்ந்து பேசலானாள்:

"இதுதான் என்னுடைய உண்மையான உருவம் அரசே! குபேரனுடைய சாபத்தால் நான் முன்பு பிரச்சோதன ராசனிடம் பத்திராபதி என்ற பெண் யானையாக இருந்தபோது உன்னையும் வாசவதத்தையையும் வழிப்பயணமாக இரவில் சுமந்து கொண்டு வர நேர்ந்தது. அப்போது நடுவழியில் இறந்த என் காதில் பஞ்ச மந்திரத்தை உபதேசித்துப் பழம் பிறவியிலிருந்த தேவ கன்னிகையாக மாறுவதற்கு நீ உதவி செய்தாய். அதனால் நான் நிறைந்த நன்றிக் கடன் பூண்டுள்ளேன். என் உதவிக்கு உன்னிடம் நான் எந்த மாற்றுதவியையும் எதிர்பார்க்கவில்லை. மேலும் உன்னோடு என்னை வெற்றவளாகவும் கருதவில்லை நான்" என்று கூறிய பின் வானத்தில் சஞ்சாரம் செய்யப் பயன்படக் கூடிய மந்திரம் ஒன்றையும் உதயணனுக்குக் கூறிவிட்டு, யாவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு சென்றாள் பத்திராபதி. வத்தவர் கோனாகிய உதயணனும் பிறரும் அவளை வனங்கி அன்போடு அவளுக்கு விடையளித்தனர். சில திங்கள் கழிந்தன.

வாசவதத்தையின் கரு முற்றிய நிலையை அடைந்தது. உரிய காலத்தில் தங்க சிலைபோல ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள் வாசவதத்தை. உதயணன் வாசவதத்தை ஆகிய இருவருடைய உள்ளத்திலும் நிறைந்திருந்த மகிழ்ச்சியைப் போலவே நாட்டு மக்கள் யாவரிடத்தும் மகிழ்ச்சியை நிரப்பியிருந்தது இந்த நிகழ்ச்சி. அரண்மனை வந்தோர்க்கு எல்லாம் வரையராது வழங்குவதற்குப் பலவகைத் தான தருமங்கள் நடக்க ஏற்பாடு செய்திருந்தான் உதயணன். சிறைப் பிடிக்கப் பெற்று அரண்மனைச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தவர்கள் யாவரும் இச்சமயத்தில் விடுதலை செய்யப் பெற்றிருந்தனர். அரசருக்கு ஆண் குழந்தை பிறந்ததைக் கொண்டாட நகரெங்குமே கோலாகலமான திருவிழாக்கள் பல நிகழலாயின. தனக்குப் புதல்வன் பிறந்த களிப்பில் நாடெங்கும் உள்ள கலைஞர்கள் யாவரும் பங்கு கொள்ள வேண்டும் என்று கருதிய உதயணன், அவர்களை எல்லாம் தன்னிடம் வரவழைத்துப் பரிசில் அளித்து மகிழ்ந்தான். தனக்குப் புதல்வன் பிறந்த செய்தியை அறிவிக்க வேண்டிய உறவினர்க்கும் மற்ற பேரரசர்க்கும் அறிவிப்பதற்காகத் தக்க தூதுவர்களைத் திருமுகங்களுடனே எல்லா நாடுகளுக்கும் அனுப்பி வைத்தான். தன் தம்பியர்களாகிய பிங்கல கடகர்களுக்கு இந்த மகிழ்ச்சிச் செய்தியைக் கூறி உடனே அவர்களையும் அழைத்து வரச் செய்தான் உதயணன். உஞ்சையில் அப்போது தங்கியிருக்கும் யூகியையும் அழைத்துக் கொண்டு அவனுடன் விரைவில் வந்து பேரனைக் கண்டு செல்ல வேண்டும் என்று பிரச்சோதனனுக்கு ஒரு திருமுகம் எழுதியிருந்தான். யூகி அப்போது தன்னுடன் இல்லாதது பெருங் குறையாகவே இருந்தது உதயணனுக்கு.

77. காலமெல்லாம் நிறைந்த களிப்பு

இந்த நிலையில் ஏறக்குறைய தத்தை கருவுயிர்த்துச் சில நாள்கள் கழிவதற்குள்ளேயே மகிழ்ச்சிக்குரிய வேறு பல நிகழ்ச்சிகளும் நிகழ்ந்தன. யூகி, உருமண்ணுவா, வயந்தகன், இடவகன் ஆகிய நால்வருடைய மனைவியர்களும் ஒரே நாளில் ஆண் குழந்தைகளுக்குத் தாயாகி ஈன்றெடுத்தனர். ஏற்கனவே அரண்மனையிலிருந்தல் கோலாகலத்தைக் குறையவிடாமல் வளர்த்துக் கொண்டன இந்தப் புது இன்ப நிகழ்ச்சிகள். உவகையும் ஆரவாரமும் பன்மடங்காகப் பெருகின. புதல்வர்கள் எல்லோர்க்கும் ஒரே நாளிற் பெயரிடலாம் என்று கருதிப் பெயர் சூட்டு விழாவிற்கு ஒரு நல்ல மங்கல நாளைக் குறிப்பிட்டுக் கூறியிருந்தனர் அரண்மனைக் கணிகள். குபேரனுடைய அருளாற் பிறந்ததனாலும், விஞ்சையருலகையும் வென்று ஆளும் திறமையுடையவனாகக் கூறப்பட்டிருந்ததாலும் உதயணனுக்குப் பிறந்த புதல்வன் 'நரவாண தத்தன்' என்று பெயர் சூட்டப் பெற்றன. மற்றும், யூகியின் புதல்வனுக்கு 'மருபூதி' என்றும், உருமண்ணுவாவின் புதல்வனுக்கு 'அரிசிகன்' என்றும் வயந்தகன் புதல்வனுக்கு 'தவந்தகன்' என்றும் இடவகன் புதல்வனுக்குக் 'கோமுகன்' என்றும் பெயர் சூட்டப்பெற்றன. இப்புதல்வர்களுக்குரிய ஜாதகங்களும் ஏற்கனவே உரிய காலத்தில் கணிக்கப் பெற்றிருந்தன. உதயணனால் அனுப்பப் பெற்ற தூதுவர், உஞ்சை நகரடைந்து உதயணனுக்கும் நண்பர்களுக்கும் ஆண் மக்கள் பிறந்திருக்கும் செய்தியை அறிவித்தனர். இந்த நல்ல செய்தியைக் கொணர்ந்தமைக்காக்த் தூதுவர்களுக்குப் பெரும் பொருளும் பரிசில்களும் அளித்தான் பிரச்சோதனன்.

தனக்குப் பேரன் பிறந்ததற்கு அறிகுறியாகப் பிரச்சோதனன் நகரெங்கும் நன்றாக அலங்கரிக்குமாறு ஆணையிட்டான். யூகியைப் பாராட்டி, "உனக்கும் புதல்வன் பிறந்துள்ளமைக்காக நீ செய்ய வேண்டிய தானங்களைச் செய்க" என்று அதற்காக அவனிடம் தகுந்த பொருள்களை அளித்தான். வாசவதத்தைக்குப் புதல்வன் பிறந்துள்ள செய்தியை நகரெங்கும் முரசறைந்து தெரிவிக்க ஏற்பாடுகள் செய்தான். தனக்குப் பேரன் பிறந்ததை ஒரு பெரிய திருவிழாவாகக் கொண்டாடினான். யூகிக்கும் புதல்வன் பிறந்திருப்பதனாலும், உதயணன் அவனை விரைவில் அனுப்பச் சொல்லியிருப்பதாலும், அவன் மிக விரைவில் கோசாம்பி நகருக்குத் திரும்பி விட நேரும் என்பதைப் புரிந்து கொண்ட பிரச்சோதனன், அவனுக்கும் தன்னுடைய அமைச்சன் சாலங்காயனுக்கும் உள்ள அறிவின் தராதரத்தை ஒரு தருக்கச் சொற்போர் நிகழ்ச்சி மூலமாக நிர்ணயித்துப் பார்த்துவிட விரும்பினான். இந்த எண்ணம் பிரச்சோதனனுடைய மனத்தில் வெகுநாளாக நிலைத்திருந்த எண்ணம். எனவே யூகி கோசாம்பிக்குப் புறப்படுவதற்கு முதல் நாள், யூகிக்கும் சாலங்காயனுக்கும் தன் அவையில் ஒரு தருக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான் பிரச்சோதனன். அறிவுப் போராட்டமான அந்தத் தருக்கத்தில் 'யாருக்கு வெற்றி' என்று அறிவதில் பிரச்சோதனன் அவையில் யாவரும் ஆவல் காட்டினர்.

முன்பே தீர்மானித்தபடியே யூகி, சாலங்காயன் ஆகியோர்களின் தருக்கமிடும் திறமையை நிர்ணயிப்பதற்காக, யூகி உஞ்சையிலிருந்து கோசாம்பிக்கும் புறப்படுவதற்கு முதல் நாள் அறிவு வன்மையுள்ள தன் அவையைக் கூட்டினான் பிரச்சோதனன். உஞ்சை நகரத்து அரண்மனையைச் சேர்ந்தவர்களாகப் பல்வகைத் திறமையும் பெற்ற நூற்றுக் கணக்கான அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் தலைவனாகவும் பிரச்சோதன மன்னனுக்கு முதலமைச்சனாகவும் இருந்தவனே சாலங்காயன். கல்வி கேள்விகளிற் சிறந்து தருக்கத்திலும் பெரும் புலமை படைத்த அரசியல் ஞானி அவன். சொல்லப் புகுந்தால், யூகியோடு சமமாக மதிக்கத்தக்க நுண்ணறிவும் சூழ்ச்சித் திறனும் உடையவனே! ஆனாலும் பிரச்சோதனனுக்கு என்னவோ தன் சொந்த ஆர்வத்தைக் கைவிடுவதற்கு மனம் இசையவில்லை. அதனால் தான் அவசரமாக யூகி ஊருக்குப் புறப்பட இருக்கும் நிலையிலும், இந்த விவாத நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தான் அவன். பிரச்சோதனனுடைய ஆசையை மறுக்க முடியாத நிலையிலேயே யூகியும் இதற்குச் சம்மதித்திருந்தான்.

சாலங்காயனும் யூகியும் சபையில் வாதமிடத் தொடங்கினார்கள். பிரச்சோதனனும், பற்பல கலைகளிலும் வல்லவரான வேறு சில சான்றோர்களும் வாதத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் வெற்றி தோல்விகளையும் நிர்ணயிப்பதற்குரிய நடுவர்களாக அமர்ந்திருந்தனர். வாதம் வளர வளரச் சாலங்காயன் தளர்ந்துவிட்டான். யூகிக்கு எதிர்த்து நின்று தாங்குகிற அவ்வளவிற்கு அவனால் முடியவில்லை. நொடிக்கு நொடி யூகியின் வெற்றியும் சாலங்காயனின் பலவீனமும் தெளிவாகவே புலப்பட்டன. இறுதியில் வாதப் போர் உச்சநிலையை அடைந்ததும், 'யூகி வென்றான் சாலங்காயன் தோற்றேவிட்டான்' என்ற முடிவு தானாக ஏற்பட்டது. அவையோரும் பிரச்சோதன மன்னௌம் யூகியின் வெற்றியை மனமாரப் பாராட்டி வாழ்த்துக் கூறினார்கள். 'நட்பின் சிறப்பும் கல்விப் பெருக்கமும், பண்பாடும் வீரமும் அமைந்த ஒருவருமாக யூகியை இங்கே நான் காண்கிறேன். பகைவராயினும் அவர்களுடைய தீமையைக் கூறாத திண்மையும் யூகியினிடம் அமைந்துள்ளது" என்று அவையோர் கேட்கும் படியாக யூகியை வாயாரப் புகழ்ந்தான் பிரச்சோதனன்.

பின்னர் பிரச்சோதனன் தனது நாட்டிலுள்ள பேரறிஞர்களை எல்லாம் யூகிக்கு அறிமுகம் செய்து வைத்தான். தன் அமைச்சர்களுள் சிறந்தவராகிய பரதகனின் கன்னி திலகமாசேனை என்பவளையும் யூகியாலேயே தோல்வியுற்ற சாலங்காயனின் தங்கை யாப்பியையும் 'தன் நாட்டிற்கு வந்து சென்றதற்கு அறிகுறியாக யூகியே திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்று பிரச்சோதனன் அவனை வேண்டிக் கொண்டான். யூகியும் அந்த வேண்டுகோளை மறுக்கவில்லை. பரதகன் மகள் திலகமாசேனையையும், சாலங்காயனின் தங்கை யாப்பியாயையும் தன் மனைவியராக ஏற்றுக் கொண்ட பின்பு, அங்கிருந்து புறப்பட்டுக் கோசாம்பி செல்வதற்கு விடை கொடுக்குமாறு பிரச்சோதனனை யூகி வேண்டிக் கொண்டான். கோசாம்பியில் தனக்குப் பிறந்திருக்கும் ஆண்மகனை உடனே சென்று காண வேண்டும் என்ற ஆவலே அப்போது யூகியின் அவசரத்திற்குக் காரணம். இது பிரச்சோதன மன்னனுக்குத் தெரிந்திருந்தது. அவனும் யூகி புறப்படுவதற்கு அன்போடு விடை கொடுத்துப் பரிசில்களாகச் சில சிறந்த பொருள்களையும் நல்கினான்.

"யூகி நீ எப்போதும் என் அருகிலேயே இருக்க வேண்டும் போல் எனக்குத் தோன்றுகிறது! உன்னைப் பிரிவதனால் ஏற்படும் வேதனையிலும் கூட எனக்கு இப்படி ஓருணர்வு உண்டாகிறது. ஆனாலும் நீ எங்களை மறந்துவிடாதே" என்று பரிவுடனே கூறியபின் அவனைக் கோசாம்பிக்கு அனுப்பினான் பிரச்சோதன வேந்தன். உஞ்சை நகரில் புதிதாக மணந்து கொண்ட மனைவிமார்களோடும், சிறப்பாகக் கிடைத்த பரிசில்களோடும் பிறந்த புதல்வனைக் காண வேண்டும் என்ற ஆசையோடும் கோசாம்பிக்கு விரைந்தான் யூகி. ஆர்வமும் பாசமும் சேர்ந்து உண்டாக்கிய விரைவே அவனுடைய பயணத்தின் விரைவாயிருந்தது.

திலகமாசேனை, யாப்பியை இவர்களைத் திருமணம் செய்து கொண்ட மணக் கோலத்தோடு உஞ்சையிலிருந்து கோசாம்பிக்கு வந்த யூகியை உதயணன் சிறந்த முறையில் வரவேற்றான். யூகிக்குப் புதல்வன் பிறந்துள்ளமைக்காக உதயணனும் உதயணனுக்குப் புதல்வன் பிறந்துள்ளமைக்காக யூகியும் ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியை இனிய மொழிகளால் பரிமாறிக் கொண்டனர். உஞ்சை நாட்டிலிருந்து பிரச்சோதன மன்னன் தன் பேரனுக்குக் கொடுத்தனுப்பிய பரிசிற் பொருள்களையும் பிறவற்றையும் யூகி உதயணனிடம் அளித்தான். பிரச்சோதன மன்னன் தன் மூலமாக உதயணனுக்குக் கூறியனுப்பிய செய்திகளையும் அவனிடம் சென்று விவரித்துக் கூறி விளக்கினான் யூகி.

உஞ்சை நகரத்திலிருந்து திரும்பிய யூகி கோசாம்பி நகரத்துக்கு வந்து சேர்ந்த பின்னால், அரண்மனை வாழ்க்கையில் பழையபடி அமைதியும் இன்பமும் சூழ்ந்தன. துன்ப காலத்திலேதான் பொழுதும் காலமும் மெல்லக் கழிவன போலத் தோன்றும். இன்ப காலத்தில் களிப்பு என்னும் அமைதி நிறைந்த அந்த அனுபவத்தினால் காலம் வேகமாகக் கழிந்தாலும் அதை உணர்வதற்குத் தோன்றும் அவா எழுவது இல்லை. உணர கூட முடியாதபடி இத்தகையதொரு களிப்பின் அமைதி தான் பரவியிருந்தது.

78. நரவாணன் நாடிய நங்கை

கோசாம்பி நகரில் ஒவ்வொன்றாக ஆண்டுகள் கழிந்தன. ஆனால், காலத்தின் வளர்ச்சி என்பது அதன் சொந்த வளர்ச்சியாக மட்டுமா இருந்து விடுகிறது? மனிதர்களையும் அவர் தம் எண்ணங்களையும் செயல்களையும் கூடக் காலம் தானே வளர்த்துக் கொண்டு போக வேண்டும்? உதயணன் முதலியவர்களுடைய புதல்வர்களும் இப்படித் தன் போக்கான கால வேகத்தில் வளர்ந்து வளர்ந்து இளமைப் பருவம் எய்தியிருந்தனர். உதயணனுடைய புதல்வனாகிய நரவாண தத்தனும், யூகி முதலிய மற்றத் தோழர்களின் புதல்வர்களாகிய கோமுகன், அரிசிகன், பூதி, தவந்தகன் முதலியவர்களும் இளமைப் பருவத்திற்குரிய தோற்றக் கனிவையும் பொலிவையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அடைந்து வந்தனர்.

கல்வி, அரசியல், படையியல் முதலிய கலைகள் தக்க ஆசிரியர்கள் மூலம் அவர்களுக்குக் கற்பிக்கப் பெற்று வந்தன. தோற்றத்திலும் உடலிலும் இளமையின் வனப்பு வளர்ந்து வந்ததைப் போலவே, கலை வனப்பை வளர்க்கும் கல்வித் துறைகளிலேயும் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தனர் அவர்கள். அரசகுமாரனாகிய நரவாண தத்தன், உதயணன் இளமையில் எந்த கவர்ச்சி நிறைந்த அழகுடன் விளங்கினானோ, அதே அழகைப் பெற்றவனாக இப்போது விளங்கினான். அழகை அடிப்படையாகக் கொண்டு எழுகிற உணர்வின் மூலமாக நிகழும் காதல் என்ற கலைக்குத் தலைவன் மன்மதன். இந்த மன்மதனைப் போலவே நிகரற்ற அழகு நரவாண தத்தனிடம் அமைந்திருந்தது. இளமைக்கே உரிய பருவ உணர்ச்சிகளும் உள்ளக் கனிவும் நரவாண தத்தனுடைய தோற்றத்தில் புலப்பட்டன. அவனது நடையில் பெருமிதம் செறிந்திருந்தது. முகத் தோற்றத்தில் இளமை என்ற அந்தப் பருவத்தின் தத்துவமே அழகு வடிவமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் தான் படைப் பயிற்சிக்காகப் பழகிக் கொண்டிருந்த யானை மேல் ஏறி கோசாம்பி நகரத்திலுள்ள சில முக்கியமான வீதிகளின் வழியாகச் சென்று கொண்டிருந்தான் நரவாண தத்தன். அப்போது 'கார்மேகக் கூட்டங்களின் திரண்ட கருமைக்கு மேலே எழுந்து காட்சியளிக்கும் முழு வெண்மதி போலத் தோற்றமளிக்கின்றான், யானை மேல் வீதிகளில் உலா வந்த நரவாண தத்தன்' என்று கற்பனை செய்து உவமிக்கும் படியாக இருந்தது அவனது பவனி. பல தெருக்களைக் கடந்து அழகிலும் ஆடல் பாடலிலும் சிறந்த கணிகையர் வசிக்கும் தெருவிற்குள் நுழைந்தது நரவாணனின் யானை. கணிகையர் தெருவிடையே அவன் யானை மேற் சென்று கொண்டே இருக்கும் போது திடுமென்று ஒரு பெரிய வீட்டின் நிலா முற்றத்துச் சாளரத்திலிருந்து அழகிய பூம்பந்து ஒன்று அவனுடைய மெல்லிய மேலாடையில் வந்து விழுந்தது. மனத்தை மயக்கும் மோகனமும் இன்மணமும் மென்மையும் பொருந்திய அந்தப் பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு தலை நிமிர்ந்து, மேலே பந்து விழுந்த சாளரத்தை அண்ணாந்து பார்த்தான் நரவாணன். மேலே சாளரத்தை நோக்கி நிமிர்ந்த நரவாணனின் கண்கள் அங்கேயே நிலைத்துவிட்டன.

சாளரத்தின் வழியாகக் கீழே யானை மேலிருக்கும் அவனைப் பருகிவிடுவது போல நோக்கிக் கொண்டிருந்தாள் ஓர் அழகிய நங்கை. மாடத்தின் இடையே வெகு உயரத்தில் அமைந்திருந்த சாளரத்தில் தெரிந்த அந்த அழகு ததும்பும் மதிமுகம் நரவாணனுக்குத் தெளிவாக விளங்காவிடினும் மங்கலாகத் தென்பட்டது. அதுவும் ஒரே ஒரு கணந்தான்! அடுத்த கணம் வெட்கம் மேலிட்டதனாலோ, பயத்தினாலோ அந்த யுவதி அங்கிருந்து மறைந்து விட்டாள். அவள் மறைந்த பின்பும் மயங்கிய மனத்தினனாய்த் தெரு, சூழ்நிலை முதலியவற்றையும் மறந்து அதே சாளரத்தைச் சற்று நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் நரவாணன். அவனது கையில் அதே மிருதுவான பூம்பந்து புரண்டதைப் போலவே, அவனுடைய நெஞ்சில் அவளைப் பற்றிய மென்மையான நினைவுகள் புரண்டன. சிறிது நேரம் அந்த மாளிகை, மாடம், சாளரம் முதலியவற்றைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அருகிலிருந்த சோலை ஒன்றை அடைந்தான் அவன்.

சோலையில் இடவகன் மகனாகிய கோமுகனைச் சந்தித்தான். எடுப்பாக ஏறி வந்த யானையிலிருந்து இறங்கி, பந்தும் கையுமாகத் தன்னை நோக்கி வரும் நரவாணனை வியப்பு கலந்த நோக்குடனே கோமுகன் வரவேற்றான். நரவாணன் கோமுகனுக்கருகில் அமர்ந்து பந்தை, அவனுக்குக் காட்டி நடந்த நிகழ்ச்சி முழுவதையும் அவனிடம் விவரித்தான். கோமுகன் அதைக் கேட்டவுடன் நரவாணனைப் பார்த்து மென்முறுவல் பூத்தான். நரவாணன் தான் கொண்டு வந்திருந்த பந்தை, அப்போதே கோமுகனிடம் அளித்து அந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்களை அறிந்து வந்து தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். கோமுகன் அந்தப் பந்தைக் கையில் வாங்கிப் பார்த்தான். 'அதைப் பிடித்து விளையாடிய இளம்பெண், அப்படி விளையாடிய போது கைகளிர் ஈரச் சந்தனம் பூசிக் கொண்டிருந்தவளாயிருக்க வேண்டும்' என்று அனுமானிக்க அதில் இடமிருந்தது. பந்தில் அதைப் பிடித்திருந்த சிறு விரல்களின் சந்தனக் கறை படிந்திருந்தது.

'அந்தப் பந்தையும் அதன் மேல் படிந்திருக்கும் இளம் பெண் விரல்களின் சந்தனக் கறையையும் கொண்டே அதை விளையாடிய பெண் யார் என்பதைத் தேடிக் கண்டுபிடித்து விடலாம்' என்ற நம்பிக்கை கோமுகனுக்கு ஏற்பட்டது. அந்தப் பந்துக்குரியவளைக் கண்டுபிடித்து விடலாமென்று நரவாணனுக்குக் கோமுகன் ஆறுதலும் உறுதியும் கூறினான். கோமுகனைச் சந்தித்து நரவாணன் தன்னிடம் இருந்த பந்தை அளித்து, அதற்குரியவளைக் கண்டுபிடித்துக் கூறுமாறு வேண்டிக் கொண்டு சென்றதிலிருந்து, கோமுகன் தனது சிந்தனை, செயல் இரண்டினாலும் அதே வேலையை மேற்கொண்டு அலைந்தான். இதன் பயனாக அந்தப் பந்தைப் பற்றிய பெரும்பான்மையான விவரங்களை அதற்குரிய இடத்தில் சென்று விசாரித்துக் கோமுகன் கண்டறிந்து கொள்ள முடிந்தது.

கோசாம்பி நகரத்துக் கணிகையர் தெரு, 'கலைகளின் இருப்பிடம்' என்று கூறுமாறு விளங்குவது. ஆடல், பாடல், முதலிய நுண்கலைகளையே வாழ்க்கையின் நிலையாகக் கொண்ட எண்ணற்ற பல கணிகையர் அங்கே வாழ்ந்து வந்தனர். அவர்களில் தலைமை சான்றவளாகவும் சிறப்பு மிக்கவளாகவும் விளங்கியவள் கலிங்கசேனை. அந்தக் கலிங்கசேனைக்கு ஒரு மகள் இருந்தாள். அழகுக்கென்றே படைப்புக் கடவுள் படைத்த பெண்ணாக இவளைக் கூறலாம். இவளுக்கு மதனமஞ்சிகை என்று பெயர். இவள் தன் வீட்டின் மேல் மாடத்திலுள்ள நிலா முற்றத்தின் உள்ளே பந்து விளையாடிக் கொண்டிருந்த போதுதான் கை தவறி மாடத்துச் சாளரத்தின் வழியாகப் பந்து கீழே விழுந்துவிட்டது. அவ்வாறு கீழே நழுவிய பந்துதான், தெருவில் யானை மேல் சென்று கொண்டிருந்த நரவாண தத்தன் மடியில் வந்து விழுந்தது.

'பந்து கீழே விழுந்து விட்டதே' என்று திகைத்தே அந்தப் பெண்ணும் சாளரத்திலிருந்து தெருவை எட்டிப் பார்த்திருக்கின்றாள். அதே சமயத்தில் நரவாணனும் மேலே சாளரத்தைப் பார்த்திருக்கின்றான். அப்போது இருவர் உள்ளமும் ஒன்றாகிக் கலந்திருக்கின்றன. இருவர் அன்பும் கலந்திருக்கின்றன. பந்து நழுவி விழுந்து காதலை படைத்திருக்கின்றது. 'நழுவியது பந்து ஒன்று மட்டுமல்ல! பார்த்த இரண்டு உணர்வுகளும் கூட நழுவியிருக்கின்றன' என்று கோமுகன் அறிந்து கொண்டான். பின்பு மதனமஞ்சிகையின் வடிவத்தைத் தான் அறிந்தபடி ஓவியமாக வரைந்து கொண்டு போய், நரவாண தத்தன் அந்த ஓவியத்தைக் காணும்படி செய்தான் கோமுகன். ஏற்கனவே சாளரத்தில் கண்டிருந்த வடிவத்தினிடம் தன் உள்ளத்தைப் பறி கொடுத்திருந்த நரவாணன், இப்போது ஓவியத்தில் அவள் வடிவத்தையே முற்றிலும் கண்டவுடன், அவள் மேல் பெருவிருப்பம் கொண்டான். காதல் ஆசையாக முதிர்ந்து வளர்ந்தது. 'மணந்தால் இத்தகைய எழிற் செல்வியையே மணக்க வேண்டும்' என்று நரவாணன் மனத்தில் எழுந்த ஆர்வம் முற்றிக் கனிந்தது. கோமுகனிடம் இந்த எண்ணத்தை மறைக்காமல் வெளிப்படையாகக் கூறி, இதற்கான உதவியையும் அவனே செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டான் நரவாணன். நரவாணனின் விருப்பத்தைத் தானே பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அன்பும் ஆசையும் கொண்டு, கோமுகன் அதைச் செய்வதற்கு இணங்கிப் புறப்பட்டான்.

79. மதனமஞ்சிகை எங்கே?

மதனமஞ்சிகையே தன்னுடைய உயிர் என்ற எண்ணம் நரவாண தத்தனுக்கு மேலிடவே, கோமுகன் தகுந்த பரிசுப் பொருள்களுடன் மதனமஞ்சிகையின் தாயாகிய கலிங்கசேனையின் மாளிகையை நாடிச் சென்றான். கலிங்கசேனை கோமுகனை அன்போடும் பெருமதிப்போடும் வரவேற்றாள். கலிங்கசேனையிடம் பரிசுப் பொருள்களை அளித்து, மதனமஞ்சிகையின் பந்து தெருவிற் சென்று கொண்டிருந்த நரவாணன் மேல் விழுந்தது தொடங்கி, அவனுக்கு அவள் மேல் அளவற்ற காதல் ஏற்பட்டிருப்பது வரை எல்லா விவரங்களையும் விளக்கமாகக் கூறினான் கோமுகன்.

"என் மகள் மதனமஞ்சிகையின் மேல் இந் நாட்டின் இளவரசராகிய நரவாண தத்தருக்குக் காதல் தோன்றியிருக்கிறது என்றால், அது எங்கள் வழிபடு தெய்வம் எங்களுக்கு நாங்கள் வேண்டாமலே தானாகக் கொடுத்த வரம் போன்றது ஆகும். என் மகள் மதனமஞ்சிகை முற்பிறவியில் புண்ணியத்தின் மிகுதி பெற்றவள் போலும். எனவே தான் மதனமஞ்சிகை நரவாண தத்தரை நாயகராக அடைகின்றாள்" என தன் மகிழ்வையும் இசைவையும் தெரிவித்தாள் கலிங்கசேனை. கோமுகனை அமரச் செய்து விட்டுத் தன் உறவின் முறையைச் சேர்ந்தவர்களாகிய மற்ற கணிகையர்களையும் தனியாக ஒன்று கூடி 'நரவாணனுக்கு மதனமஞ்சிகையை அளிப்பது பற்றி அவர்கள் கருத்து யாது?' என்பதையும் கலிங்கசேனை விசாரித்தாள்.

மதனமஞ்சிகையை நரவாணனுக்கு மணமுடித்துக் கொடுப்பதைப் பற்றி அவர்களில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லையானாலும், 'நரவாணனின் தந்தையும் நாட்டின் பேரரசனுமாகிய உதயணனிடம் யாவற்றையும் தெரிவித்துக் கருத்து உடன்பாடு பெற்றுக் கொண்டாலொழிய இதை நாமாகச் செய்துவிடுவது நல்லதன்று' என்ற புதிய தீர்மானத்தை அவர்கள் கலிங்கசேனைக்கு கூறினார்கள். கலிங்கசேனைக்கும் அவர்கள் கூறியபடியே செய்வதுதான் சரியென்று தோன்றியது. அவள் உடனே அதை, கோமுகனிடம் வந்து கூறினாள். தான் கூறுவதைக் கேட்டுக் கோமுகன் சினமோ ஆத்திரமோ கொண்டு விடாதவாறு பணிந்த மென்மொழிகளால் இதை அவனிடத்திற் கூறினாள் அவள். எனவே கோமுகன் அவள் கூறுவதிலும் ஒரு விதமான உண்மையும் பொருத்தமும் அடங்கியிருத்தலை உணர்ந்து கொள்ள முடிந்தது. 'தானும் நரவாணனும் கூட அதுவரை அரசர் உதயணனிடம் அதைக் கூறாமலிருந்தது தவற்றுக்குரியதே' என்றும் எண்ணி வருந்தினான் கோமுகன். ஆகவே அரசரிடம் அனுமதி பெற்றுக் கொண்ட பின்பு மீண்டும் அங்கே வருவதாகக் கலிங்கசேனையிடம் கூறிவிட்டுப் புறப்பட்டான் அவன். புறப்பட்ட பின் அங்கிருந்து நேரே அரண்மனைக்குச் சென்ற கோமுகன், உதயணனைச் சந்தித்துக் கூற வேண்டியவற்றைக் குறிப்பாகவும் அமைதியாகவும் கூறினான்.

உதயணன் எல்லாவற்றையும் கேட்டுப் புன்முறுவலோடு "இளமை நெஞ்சங்களுக்கு இத்தகைய காதலுணர்ச்சி இயற்கைதான்! நரவாணனுக்கு மதனமஞ்சிகையினிடம் இத்தகைய கவர்ச்சியும் உள்ளத் தொடர்பும் ஏற்பட்டிருப்பது மெய்யானால் நீ செய்யும் திருமண ஏற்பாடுகள் மிகவும் பொருத்தமானவைகளே. நான் இவற்றை மறுக்கவில்லை" என்று கோமுகனுக்கு இணங்கி மறுமொழி கூறினான் உதயணன். உடனே, வாசவதத்தையின் அந்தப்புரம் சென்று, அவளிடமும் அன்று நிகழ்ந்தவற்றை விவரித்தான்! அவளும் தன் மகன் நரவாணன், மதனமஞ்சிகையை மணந்து கொள்வதற்குத் தன்னுடைய முழு உடன்பாட்டையும் அளித்தாள். நரவாணன் - மதனமஞ்சிகை திருமணத்திற்கு உதயணன், வாசவதத்தை ஆகிய இரு முதுகுரவரின் சம்மதத்தையும் பெற்றுக் கொண்டு மீண்டான் கோமுகன். உதயணனும் நரவாணனுக்குத் தந்தை என்ற முறையில் மதனமஞ்சிகைக்கு மேலும் பல திருமணப் பரிசங்களை அனுப்பினான்.

விரைவில் ஒரு மங்கலத் திருநாளில் நரவாணன் - மதனமஞ்சிகை ஆகிய இருவர் மனோரதமும் நிறைவேறியது. இன்ப வாழ்க்கை என்ற சுவைமிக்க இலக்கியத்தில் ஈடுபட்டு மகிழலாயினர் அவர்கள். புதிய காதல் வாழ்வின் தொடக்கம் என்பதே, ஒரு புதிய இலக்கியத்தைக் கற்பது போலத்தானே! இந்த இலக்கியத்தை மதனமஞ்சிகையும் நரவாணனும் கற்கலாயினர்.

கோமுகனுடைய நட்பாலும் உதவிகளாலும் தங்களுக்குத் திருமணம் முடிந்த பின் மதனமஞ்சிகை, நரவாண தத்தன் வாழ்க்கை இன்பமாகவும் அமைதியாகவும் கழிந்து வந்ததென்று மேலே கூறப்பட்டது. பல நாள்கள் இவ்வாறே கழிந்து கொண்டிருந்த போது, கோசாம்பி நகரத்து மக்கள் வழக்கமாகக் கொண்டாடும் பெரிய திருவிழா ஒன்றும் வந்து சேர்ந்தது. நகர மக்களும் அரண்மனையைச் சேர்ந்த மற்றவர்களும் இந்த விழாவைச் சிறந்த முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்து வரலாயினர். தேவருலகத்தைச் சேர்ந்த விஞ்சையர்களும் கூட மகிழ்ச்சியுடனே இந்த விழாவில் கலந்து கொள்வதாக இதைச் சிறப்பித்துக் கூறுவது வழக்கம்.

உரிய மங்கல நாளில் முன்பே செய்திருந்த சிறப்பான ஏற்பாடுகளுடனே இந்த விழாவைக் கோசாம்பி நகரத்தினர் தொடங்கி நடத்தினர். நகரின் எப்பகுதியிலும் விழா ஆரவாரமும் வியப்புக்குரிய இனிய காட்சிகளும் புதுமையும் மலிந்து தோன்றின. வித்தியாதரர் உலகில் நூற்றுப் பத்து அரசர்களைத் தன் ஆணையின் கீழே கொண்டு ஆளும் மன்னனாகிய மானசவேகன் என்னும் விஞ்சையன், கோசாம்பி நகரத்தில் நிகழும் இந்த விழாவைக் கண்டு களிக்க ஆவல் கொண்டு, கரந்த உருவுடனே தோற்றம் மாறி வந்திருந்தான். கோசாம்பி நகரத்தின் தோற்றத்திற்கே தனிப்பட்டதோர் அழகைச் செய்யும் மாட கூட விமானங்களையும், அழகுமிக்க பெரிய வீதிகளையும் சோலைகளையும் பூங்காக்களையும் மகிழ்ச்சியோடு பார்த்தவாறே அவ்வழகிய நகரத்தின் பகுதிகளில் மனம் போனபடி சஞ்சரித்துக் கொண்டிருந்தான் அந்த விஞ்சையன்.

அப்போது விழா நாள்களில் ஒரு நாள், மதனமஞ்சிகையோடு ஒரு பெரிய சோலைக்குச் சென்றான் நரவாண தத்தன். விழாக் காட்சிகளைப் பலவாறு அலைந்து கண்ட பின்பு பொழுதை இனிய சூழ்நிலையில் இன்பமாகக் கழிக்கலாம் என்றே அவர்கள் இருவரும் அந்தச் சோலைக்கு வந்திருந்தனர். ஆனால் 'அவர்களைப் பிரிப்பதற்கு விதி, மானசவேகன் என்ற விஞ்சையன் உருவத்திலே இனிமேல் வலை விரிக்கப் போகிறது' என்பதை அவர்கள் கண்டார்களில்லை! சோலைக்குள் மஞ்சிகை அங்குள்ள செய்குன்று ஒன்றின் அருகே நின்று அதனுடைய வனப்பை வியந்து கொண்டிருந்தாள். ஏறக்குறைய அதே நேரத்தில் பிறர் கண்ணுக்குப் புலப்படாத கரந்த உருவத்தோடு மானசவேகனும் அந்தச் சோலைக்கு வந்து சேர்ந்தான். செய்குன்றின் அருகே நின்று கொண்டிருந்த மதனமஞ்சிகை, மானசவேகனுடைய கண்களுக்கு ஒரு தேவகன்னிகை போலத் தென்பட்டாள். அவளுடைய வடிவழகு அவனை மிகுந்த மயக்கமுறச் செய்தது. அவன் நெஞ்சில் மோகப் பித்தம் முறுகி வளர்ந்தது. தன் ஆசைத் தீயை அவனால் தணித்துக் கொள்ள முடியவேயில்லை.

'இப்படிப்பட்ட அழகி தேவருலகிலும் இல்லையே! இவளை அடைந்தால் அல்லவா வாழ்க்கையின் இன்ப நோக்கு நிறைவேறும்' என்று நினைத்தான் மானசவேகன். 'மதனமஞ்சிகையை எவ்வாறேனும் தன்னோடு அபகரித்துச் சென்று விட வேண்டும்' என்ற எண்ணமும் அவன் மனத்தில் உறுதியுற்றது. இந்த எண்ணத்தோடு சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தான் மானசவேகன். மதனமஞ்சிகையும் நரவாண தத்தனும் அந்தச் சோலையில் சில விளையாடல்களைப் புரிந்த பின் ஓரிடத்தில் களைப்பு மிகுதியால் படுத்திருந்தனர். படுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஆழ்ந்த உறக்கம் அவர்களை ஆட்கொண்டு விட்டது. தங்களை மறந்து தூக்கத்தில் இருந்தனர் இருவரும். இந்த உறக்க நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய மானசவேகன், தன் மந்திர வலிமையினால் நரவாண தத்தனை இன்னும் ஆழ்ந்த உறக்கம் கொள்ளுமாறு செய்துவிட்டு, மதனமஞ்சிகை தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு விடாதபடி அவளை மெல்லத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு வான் நோக்கி எழுந்தான். மதனமஞ்சிகை மலர்ப் பந்து போல அவன் கைகளிற் இருந்தாள். ஏதும் அறியாதவனாய்க் கீழே உறங்கிக் கொண்டிருந்தான் நரவாணன். மானசவேகன் வானில் மேலே மேலே சென்றான். 'விஞ்சையருலகம் வருந்தி அழைத்தாலும், வராத ஓர் அழகின் மாமணியை நான் அங்கே எடுத்துக் கொண்டு செல்கின்றேன்' என்ற நினைவினால் பூரித்திருந்தான் மதனமஞ்சிகையைத் தூக்கியவாறே வானிற் சென்று கொண்டிருந்த மானசவேகன். தன்னுடைய மனம் அப்போதிருந்த மகிழ்ச்சியினாலும் கிடைத்த உற்சாகத்தினாலும் மேலும் மேலும் விரைவாகச் சென்றான்.

80. வேகவதியின் காதல்

மதனமஞ்சிகையைத் தூக்கிச் சென்ற மானசவேகன் வித்தியாதரர் உலகத்திலுள்ள தன் தலைநகர் சென்று தனது அரண்மனையில் உள்ள ஓர் அழகிய மஞ்சத்தில் அவளைத் துயில வைத்தான். 'துயில் நீங்கி உணர்வு பெற்று அவள் தானாக எழுந்த பின்புதான் அவளுக்கு முன் தான் தோன்ற வேண்டும். தோன்றித் தன் ஆசையை வெளியிட வேண்டும்' என்றெண்ணிக் கொண்டு மானசவேகன் அப்பாற் சென்றான். இரண்டோர் நாழிகைகளில் மதனமஞ்சிகை துயிலுணர்ந்து எழுந்தாள். தன் அருகில் ஆருயிர்க் காதலன் கொழுநன் நரவாண தத்தன் தென்படாமலிருப்பதையும், தான் இருக்கும் பகுதி அதுவரை தான் கண்டிராத முற்றிலும் புதியதொரு இடமாக இருப்பதையும் கண்டு திகைத்துத் துணுக்குற்றாள். 'இந்தப் புதிய இடத்திற்கு எப்போது, எப்படி, யாரால் கொண்டு வரப்பட்டோம்?' என்று மனம் குழம்பும்படி சிந்தித்துப் பார்த்தாலும் அவளுக்குத் தெளிவாக ஒன்றும் புலப்படவில்லை.

அவள் இவ்வாறு மயங்கி இருந்த நிலையில் மானசவேகனே அங்கு வந்து சேர்ந்தான். தான் அதுவரை கண்டிராத பழக்கமற்ற புதிய ஆடவன் ஒருவனைத் திடீரென்று அங்கே காண நேர்ந்ததும் மதனமஞ்சிகை திடுக்கிட்டாள். ஆனால் மானசவேகனோ, தான் கோசாம்பி நகரத்துச் சோலையிலிருந்து அவளைத் தூக்கிக் கொண்டு வந்தது முதலிய செய்திகளை அவளிடம் இனிய மொழிகளாற் கூறித் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இணங்குமாறு வேண்டினான். அவனுடைய மொழிகளில் ஆவல் வெறியும் கெஞ்சுகின்ற பாவனையும் இருந்தன. மதனமஞ்சிகை தனக்கு விஞ்சையனால் நிகழ்ந்த வஞ்சகத்தை உணர்ந்தாள். தான் நரவாணனிடமிருந்து வலுவில் திருடிக் கொண்டு வரப் பெற்றதற்கும் அதுவே காரணம் என்றும் அவளுக்குப் புரிந்தது. தீயை மிதித்தவள் போலானாள் மதனமஞ்சிகை. பெண் புலியாக மாறினாள். மானசவேகனைக் காறித் துப்பிச் சீறினாள். அவளுடைய சினத்தையும் அளவற்ற ஆத்திரத்தையும் கண்டு மானசவேகனே பயந்து போனான்.

தன்னால் அவள் மனத்தை மாற்ற முடியாதென்றுணர்ந்த அவன், அழகும் சாமர்த்தியமான பேச்சுத் திறனும் வாய்த்தவளாகிய தன் தங்கை வேகவதி என்பவளை அழைத்து, "மதனமஞ்சிகையை எப்படியாவது மனம் மாறும்படி முயன்று என் விருப்பத்திற்கு இணங்கச் செய்வது உன் பொறுப்பு" என்று கூறி அவளிடம் அனுப்பினான். வேகவதியின் திறமையில் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை. அவளும் அதற்குச் சம்மதித்து மதனமஞ்சிகையின் மனத்தை மாற்றுவதற்காக அவளிருந்த இடத்திற்குச் சென்றாள். வேகவதி மதனமஞ்சிகையை அடைந்து, அவளிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தாள். தன் பேச்சுத் திறமையை எல்லாம் பயன்படுத்தி, அவள் மனத்தை மாற்றுவதற்கு முயன்றாள். மானசவேகனுடைய அழகையும் சிறப்பையும் வானளாவ வருணித்து, "இப்படிப்பட்ட கந்தர்வ வேந்தன் ஒருவனுடைய காதல் உனக்கு எளிமையாகக் கிடைக்கிறது என்றால் அதை ஏன் நீ கை நழுவ விடுகின்றாய்?" என்று தந்திரமாக ஆவலைக் கிளப்பிப் பார்த்தாள். ஆனால் எந்த ஒரு முயற்சியும் மதனமஞ்சிகையின் திடத்தை அசைக்க முடியவில்லை.

மதனமஞ்சிகை அணுக முடியாத நெருப்பாயிருந்தாள். அவள் மனத்தில் நரவாண தத்தனைப் பற்றிய ஒரே நினைவு தான் இருந்தது. வேகவதியின் முயற்சிகள் அவளிடம் சிறிதளவு கூடப் பலிக்கவே இல்லை. அம்முயற்சிகள் அவளுடைய கோபத்தை வளர்க்கவே பயன்பட்டன.

"என் காதலர் நரவாண தத்தரைப் போல அழகிற் சிறந்தவர்கள் இந்த உலகம் முழுவதும் தேடினாலும் கிடைக்க மாட்டார்களே! அவருடைய கல்விக்கும் ஆண்மைக்கும் ஈடு இணை ஏது? என் உள்ளம் அவர் ஒருவருக்கே உரியது. அவரும் நானும் பூண்டிருக்கும் தெய்வ சாட்சியான இந்த அன்புரிமையை எங்களிடமிருந்து எவரும் பறிக்க முடியாது. பறிக்க விடமாட்டேன். அதை மீறி வன்முறைகளால் பறிக்க முயன்றால் என் உயிரையாவது கொடுப்பதற்கு முயல்வேனே ஒழிய, அன்புரிமை களங்கமடையும்படி விடமாட்டேன்" என்று இப்படி மதனமஞ்சிகை உறுதியாகக் கூறியபோது, உண்மையில் வேகவதிக்கே மலைப்பு ஏற்பட்டு விட்டது. அதோடு, 'காதலுக்குரிய அழகு என்பது என்ன!' என்று காணத் துடிதுடிக்கும் பருவம் அவளுக்கு. வேகவதி, நரவாண தத்தனைப் பற்றிக் கேள்விப்பட்ட இனிய செய்திகள், கன்னிகையான அவள் மனத்தில் இன்பத் தென்றலை வீசியது.

'மானிடர்களில் மெய்யாகவே நரவாணனைப் போன்ற ஓர் அழகன் இருக்க முடியுமா? இருந்தால் நல்லதுதான்! அவனை என் போன்ற தேவ கன்னிகள் அனுபவிக்க கொடுத்து வைத்திருக்குமானால் அது எங்களுக்கு எவ்வளவு பெரிய பாக்கியம்?' என்று இத்தகைய இன்ப நினைவுகளால் நரவாணனைச் சென்று காண வேண்டும் என்ற ஆவல் வெள்ளம் போற் பெருகியது வேகவதியின் உள்ளத்தில். தேவ கன்னிகையான வேகவதி, தன்னை மறந்தாள். தான் தன்னுடைய தமையனிடம் ஒப்புக் கொண்டு வந்திருந்த செயலையும் மறந்துவிட்டாள். அதுவரை கண்டிராத நரவாண தத்தன் என்னும் மண்ணுலகத்து அழகரசன் மேல் மட்டுமே இலயித்து விட்டது அவள் உள்ளம். மதனமஞ்சிகை, தன் தமையனான மானசவேகன், ஆகியோர் எக்கேடு கெட்டால் என்ன? தான் நேரே கோசாம்பி நகரத்திற்குச் சென்று 'தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அந்த நரவாண தத்தனை ஒருமுறை ஆசை தீரத் தழுவினால் ஒழிய, தன் உள்ளத்து வெறி ஓயாது' என்று அவளுக்குத் தோன்றியது. வேகவதி கோசாம்பி நகருக்குப் புறப்பட்டுச் சென்றாள். போகும் போதே அவள், தன்னை மதனமஞ்சிகையின் தோற்றமுடையவளாக மாற்றிக் கொண்டாள்.

அது அவ்வாறிருக்க இங்கே சோலையில் தூக்கத்தினின்று விழித்த நரவாணன் அருகில் தன்னோடு துயின்று கொண்டிருந்த மதனமஞ்சிகையைக் காணாமல் திடுக்கிட்டான். கலங்கிய உள்ளத்தோடு அந்தச் சோலையில் ஒவ்வொரு பகுதியிலும் தேடத் தொடங்கினான். அலமந்த மனத்துடன் நரவாணன் இவ்வாறு சோலையில் சுற்றிக் கொண்டிருந்த போதுதான், விஞ்சையர் உலகிலிருந்து வேகவதி மதனமஞ்சிகையின் உருவத்தோடு அந்தச் சோலையில் வந்து இறங்கினாள். மன்மதன் போன்ற நரவாண தத்தனின் தோற்றம் அவளைப் பித்துற்று மயங்கும்படி செய்தது. நரவாணன் தன்னை மதனமஞ்சிகை என்றே எண்ணிக் கொள்ளும்படியாக, அவளுருவத்துடனேயே அவனருகே சென்றாள் வேகவதி. அவளைக் கண்ட நரவானன் அவளை மதனமஞ்சிகை என்றே எண்ணிக் கொண்டு, "மதனமஞ்சிகை! இவ்வளவு நேரம் நீ எங்கே சென்றிருந்தாய்" என்று கேட்டவாறே ஓடி வந்து அவளைத் தழுவிக் கொண்டான்.

வேகவதி அவனுடைய அந்த மோகனமான தழுவலில் மதுவுண்டு களித்த வண்டு போல மயங்கி நின்றாள். அவளுக்குச் சற்றே நாணமும் ஏற்பட்டது. அவள் தன் இதழ்களில் நாணம் நிறைந்த புன்னகையோடே தரையை நோக்கினாள். அவளுடைய அந்த நாணத்தைக் கண்ட நரவாணனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. 'இவள் என்னோடு நன்கு பழகிய மதனமஞ்சிகையானால் திடீரென இன்று புதுமையாக இவ்வளவு நாணம் கொள்ள மாட்டாளே!' என்று சந்தேகத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தான் நரவாணன். வேகவதிக்கு அந்தக் கம்பீரமான பார்வையின் பொருள் புரிந்து விட்டது. அவள் நரவாணனிடம் ஓர் உண்மையை ஒப்புக்கொண்டு தான் யார் என்பதையும் கூறிவிட்டாள். ஆனால் மதனமஞ்சிகையைப் பற்றியோ அவளைத் தன் தமையன் தூக்கி வந்திருப்பதைப் பற்றியோ, அவள் அப்போது தன் தமையனிடம் இருப்பதைப் பற்றியோ எதுவுமே அவனிடம் கூறவில்லை.

நரவாணனும் அப்போது காமப் பரவசமான நிலையில் இருந்ததனால், மதனமஞ்சிகையைப் பற்றி விசாரிக்கவே தோன்றவில்லை அவனுக்கு! வேகவதியின் அழகும் புதுமை தவழும் கன்னிமை கனிந்த உடலும் சந்தேகத்தையும் மீறிய காமுகனாக அப்போது அவனை மாற்றிவிட்டன. அவன், அவள் வசத்தினனாய் மாறி அவளுடன் சரசமாடுவதே தன் செயலாக இருக்கலாயினான். வேகவதியும் அவன் இன்பத்தில் மிக்க விருப்பமுற்று, அவனுடனேயே கோசாம்பியில் தங்கியிருக்க முற்பட்டுவிட்டாள். முதலில் தோன்றிய சிறிது சந்தேகமும் இப்போது இல்லாமல் வேகவதியோடு நெருங்கிப் பழகத் தொடங்கி விட்டான் நரவாண தத்தன்.

வித்தியாதர லோகத்தில் மானசவேகன் தான் மதனமஞ்சிகையிடம் அனுப்பிய தன் தங்கை வேகவதியைக் காணாமல் சந்தேகங் கொண்டு தன்னுடைய மந்திர வலிமையினால், 'அவள் அப்போது எங்கே இருக்கின்றாள்' என்பதை ஆராய்ந்து பார்த்தான். அவள் இருக்குமிடத்தைப் பற்றிய உண்மை அவனுக்குத் தெரிய வந்தது. 'தான் கூறிய காரியத்தையும் தன்னையும் மறந்து வேகவதி கோசாம்பி நகரத்தில் நரவாண தத்தனுடனே இன்ப விளையாடல்களைப் புரிந்து கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்த போது, அவள் மேல் அவனுக்குப் பெருங் கோபம் எழுந்தது. அடக்க முடியாத அந்தக் கோபத்தில் தனக்கு மதனமஞ்சிகையின் மேலிருந்த ஆசையையும் மறந்து, தங்கையின் மேல் ஆத்திரத்தோடு கோசாம்பி நகரத்துக்குப் புறப்பட்டான் அவன்.

கோசாம்பிக்கு வந்து சோலையில் அவர்களைக் கண்ட அவன் மனம் பற்றி எரிந்தது. நரவாணனும் வேகவதியும் அப்போது இருந்த நிலையே அவன் மனத்தைக் கொதிக்கும்படி செய்தது. சோலையில் இருந்த வேகவதியையும் நரவாணனையும் அப்படியே சிறைசெய்து கட்டி வலியப் பற்றி இழுத்துக் கொண்டு வான் வழியாக மேலே கிளம்பினான் மானசவேகன். அவர்களிருவரையும் சரியானபடி தண்டிக்க வேண்டும் என்பது அவன் ஆத்திரமுற்ற நெஞ்சத்தின் தீர்மானம். வானத்தின் மேல் சென்று கொண்டிருக்கும் போதே இடைவழியில், திடீரென்று நரவாணனைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டான். தனக்கு இன்பமளித்த தன் காதலனைத் தன் தமையன் இவ்வாறு தள்ளியதைக் கண்டு தன் மந்திர வலிமையால் அவன் யாதொரு துன்பமும் அடையாமல் உயிரோடு பூமியைச் சென்றடைவதற்கு ஏற்பாடு செய்தாள் வேகவதி.

வேகவதியின் ஏற்பாட்டின்படி நரவாணன் ஒரு துன்பமுமின்றி ஓர் ஆசிரமத்தில், காட்டு நதி ஒன்றின் கரைப் புறமாகப் பூமியில் வந்து இறங்கினான். அந்த ஆசிரமத்தில் உள்ள முனிவரைச் சந்தித்துத் தனக்கு நேர்ந்த துன்பங்களைக் கூறி, அவற்றைத் தவிர்க்க வழியும் கேட்கலாம் என்றெண்ணினான் நரவாண தத்தன். உதயணனுக்குத் தந்தையும் தனக்குத் தாத்தாவுமாகிய சதானிக முனிவருடைய ஆசிரமம் தான் அது என்றறிந்த போது நரவாணனின் வியப்பு இன்னும் பன்மடங்காகப் பெருகிற்று.

81. புண்ணிய விளைவுகள்

தான் வானிலிருந்து கீழே இறங்கிய ஆற்றங்கரையிலிருந்த ஆசிரமத்திலே அந்த முனிவரைச் சென்று வணங்கிய போது, அவரே தம்முடைய அறிவு வலிமையால் அவனை இன்னான் என்று இனந் தெரிந்து கொண்டு அவனுக்கு வாழ்த்தும் உறவும் கூறி விளக்கினார். தான் அந்த முனிவருக்குப் பேரன் முறையாக வேண்டும் என்பதை அறிந்து கொண்ட போது, நரவாணனுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் வியப்பும் ஏற்பட்டது. தான் எவ்வாறு விஞ்சையர் உலகு சென்று அவர்களை வெல்வது என்றும், மதனமஞ்சிகையை மீட்பது எங்ஙனம் என்றும் தனக்குப் பாட்டனார் முறையினரான அந்த முனிவரிடம் பயபக்தியோடு விசாரித்தான் நரவாணன். "பறவைகள் வான் மார்க்கமாகப் பறந்து செல்வதற்குரியது போல மாந்தரும் பறந்து செல்வதற்குப் பயன்படக் கூடியதான ஓர் அரிய மந்திரம் உன் தந்தையாகிய உதயணனுக்குத் தெரியும். நீ கோசம்பி நகரத்துக்குத் திரும்பிச் சென்று, அந்த மந்திரத்தை உன் தந்தையிடமிருந்து அறிந்து கொண்டால் திறமையைப் பயன்படுத்தி விஞ்சையருலகத்தையே வென்று வாழலாம்! இது உன் முற்பிறவிப் புண்ணியங்கள் உனக்கு விளைந்து கொண்டிருக்கின்ற காலம். உனக்கு எல்லாம் நலமாக முடியும்" என்று விளக்கி அவனுக்கு ஆசி கூறினார் அந்த முனிவர்.

முனிவர் சொற்படியே கோசாம்பிக்கு வந்து தந்தையிடம் அந்த மந்திரத்தை அறிந்து, சில நாள் தன் பெற்றோர்களோடு தங்கியிருந்த பின் விடைபெற்றுக் கொண்டு விஞ்சையருலகிற்குக் கிளம்பினான் நரவாணன். விசயார்த்தம் என்ற மலைத் தொடரின் தென்புறத்திலுள்ள ஸ்ரீதரம் என்ற நகரம் முதலில் குறுக்கிட்டது. அந்த நகரின் கோட்டை வாயிலில் சில நாழிகைகள் தங்கினான் அவன். சதானிக முனிவர் சொல்லியனுப்பியது போல நரவாணனுக்கு அது புண்ணியம் விளைகின்ற காலமாகையினால், கந்தருவபுரத்து மன்னனாகிய நீலவேகன் என்பவனின் தூதுவன் தானாகவே வலுவில் வந்து "தங்களை எங்கள் மன்னன் அழைத்துக் கொண்டு வரச்சொன்னார்" என்று நரவாணனை உடனழைத்துப் போனான். நரவாணன், கந்தருவபுரத்து மன்னனாகிய நீலவேகனைச் சென்று சந்தித்தான். "என் புதல்வியாகிய அநங்க விலாசினி ஒரு நாள் துயிலும் போது மண்ணுலகிலிருந்து சிங்கக் குருளை போன்ற ஆடவன் ஒருவன் வந்து தனக்கு மாலை சூட்டுவதாகக் கனவு கண்டாள். அதனை யான் ஒரு முனிவரிடம் சென்று கூறி அக்கனவின் உட்பொருளை விளக்குமாறு வேண்டிக் கொண்டேன். அவர், 'மண்ணுலகத்தில் உதயணனுக்கு மகனாகப் பிறந்த அரசகுமாரன் வந்து உன் புதல்வியை மணந்து கொள்வான்' என்று அந்தக் கனவின் பயனை விவரித்தார். அன்புடனே என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, என் மகள் அநங்க விலாசினியை மணந்து கொள்ள வேண்டும்" என்று பிரார்த்தித்தான் நீலவேகன்.

நரவாணனும் அந்த வேண்டுகோளுக்கு இணங்கி அநங்க விலாசினியை மணந்து கொண்டு அவளோடு அங்கே சில நாள்கள் தங்கினான். அவ்வாறு அவன் கந்தருவபுரத்தில் தங்கியிருந்த போது அவனுடைய புண்ணியப் பெரும்பலன்கள் ஒன்று ஒன்றாக விளையத் தொடங்கின. இந்திரனுடைய ஏவலினால் தேவர்களும் தேவருலகத்தைச் சேர்ந்த அரசர்களும் நரவாணனைக் கண்டு வணங்கி அவனுக்கு மிகுந்த பரிசில்களையும் நவநிதிகளையும் திறைகளையும் மனமுவந்து கொடுத்து விட்டுச் சென்றனர். இதையெல்லாம் கண்ட மானசவேகனும் மிகவும் அச்சங்கொண்டு கந்தருவபுரத்துக்கு ஓடோடியும் வந்தான்.

நரவாணனிடம் பணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு மதனமஞ்சிகையை அவனிடம் ஒப்படைத்தான். தன் தங்கை வேகவதியையும் நரவாணனுக்கே மணம் முடித்துக் கொடுத்தான். தன்னைப் பிரிந்து வாட்டமுற்றிருந்த மதனமஞ்சிகை, வேகவதி இருவருக்கும் ஆறுதல் கூறி ஏற்றுக் கொண்டான் நரவாணன். இவ்வாறிருக்கும் போது, அவனுடைய புண்ணிய பலத்தினால் வித்தியாதரர் உலகத்தின் ஆட்சிப் பொறுப்பு நரவாணனிடம் வந்து சேர்ந்தது. நரவாணன் மணி முடி சூடிப் பேரரசனானான். தேவியர் மூவருடனும் தேவருலகை ஆண்டு வந்த அவன், இடையே பெற்றோரைக் காண வேண்டுமென்ற ஆசை உந்தியதனால் கோசாம்பி சென்று சில நாள் தன் மனைவியருடனும் பிற பரிவாரத்தினருடனும் தங்கி வந்தான். அவன் கோசாம்பியிலிருந்து திரும்புகிற போது தனக்குப் பதிலாகத் தன் தம்பியும் தன் தந்தையின் மற்றொரு மனைவியுமான பதுமையின் புதல்வனுமாகிய கோமுகனைக் கோசாம்பியின் இளவரசனாக நியமித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டான், தன் தந்தையாகிய உதயணனிடம்.

உதயணனும் தன் புதல்வனின் அந்த வேண்டுகோளுக்கு இணங்கி விடை கொடுத்தான். பின்பு நரவாண தத்தன் மீண்டும் வித்தியாதரருலகத்தை அடைந்து மனைவிமார்களுடனே அங்கேயேத் தங்கிச் சிறப்பாக அதனை ஆண்டு வந்தான். தேவருலகையும் ஆளச் செய்த புண்ணிய பலனைக் கண்டு அவனை மற்றவர்கள் வாழ்த்தினர். முதுமையடைந்துவிட்ட பின்பும், தன் மகன் செய்த வெற்றி முழக்கத்தால் உதயணன் இப்போது கூடப் பெருமிதமடைய முடிந்தது. தான் ஆருணியை வென்று வெற்றி முழக்கமிட்ட பழைய நிகழ்ச்சியை விட, தன் மகன் இப்போது தேவருலகையே வென்ற வெற்றியில் பெரிதும் மகிழ்ந்தான் அவன். உதயணன் தனக்கு ஒப்பற்ற நண்பனான யூகி மந்திரியாக வாய்த்ததும், வாசவதத்தை மனைவியானதும், வித்தியாதர சக்ரவர்த்தியாக விளங்கும் நரவாண தத்தன் புதல்வனானதும், பிற நலங்களும் தவத்தின் பயனே! ஆதலால், 'இனிமேல் தான் மேற்கொள்ளத்தக்க செயல் தவமே' என்று துணிந்து அரச போகங்களாகிய செல்வத்தையும் பதவியையும் வெறுத்தான். அதனை அறிந்த அவன் தேவிமார், நீர் விளையாட்டு முதலியவற்றால் அவன் மனத்தை வேறுபடுத்தித் தம்மையே கருதித் தம் வயத்தினனாக அவன் மனத்தை ஒழுகச் செய்ய முயன்றனர்.

அவன் மனம் அந்த வழியிற் சில நாள்கள் சென்றது. பின்பு ஒரு நாள் உதயணனுடைய பட்டத்து யானை மதங்கொண்டு புறப்பட்டு நகரை அழிக்கத் தொடங்கி, யாருக்கும் அடங்காமற் பாகர்களையும் குத்துக்கோற்காரையும் பிளந்தெறிந்தது. அந்த யானையினால் நகரமே நடுங்கியது. அக்காலத்தில் அந்நகரை அடுத்த சோலை ஒன்றில் தவத்தால் சித்தி பெற்ற சாரணர் பலர் வந்து தங்கினார்கள். அவர்களுக்குத் தலைவரான தருமவீரர் என்பவர் தம்மை அடைந்தவர்களுக்கு வழக்கப்படி அங்கே தருமோபதேசம் செய்து வருவாராயினர். அவ்வுபதேச மொழிகளை விலங்குகளும் பறவைகளும் கேட்பனவாய்த் தத்தம் செயல்களை மறந்து உணவொழிந்து தாம் செய்த பாவங்களை நினைந்து துன்புற்றவண்ணமாய் அடங்கி நின்றன. மேற்கூறிய பட்டத்து யானையும் இயல்பாகவே அங்கே வந்து அந்த அறவுரையைக் கேட்டுக் கோபம் நீங்கித் தன் பாவச் செயல்களுக்கு அஞ்சிக் கண்ணீரை உகுத்துக் கொண்டு யாதொரு கொடுஞ் செயலும் இன்றித் திரும்பி அரண்மனை வாயிலில் வந்து நின்றது.

யானை வந்து அடங்கி நிற்பதை வாயிற் காவலர் அரசனுக்குத் தெரிவிக்க, அவன் வந்து பார்த்து வியப்புற்று நின்றனன். அப்போது யூகி, "ஏதோ அறவுரையைக் கேட்டு இது பக்குவமுற்று அடங்கி நிற்கிறது போலும்; இனி ஊர்ந்து செல்வதற்கு இது தகுதியுள்ளது" என்றனன். உதயணன் அதன் பிடரியில் ஏறிய பொழுது யானை அவனை மிக்க விருப்பத்துடன் தாங்கிக் கொண்டு சென்று மேற்கூறிய வனத்தை அடைந்து நின்றது. அரசன் அவ்வனத்தில் பெரியோர் பலர் வந்திருத்தலை அறிந்து இறங்கி வழிபாட்டுடன் சென்று தருமவீர முனிவரை வணங்க, அவர் அரசனுக்கு ஓர் இருக்கையை அளித்து தருமோபதேசம் செய்தார்.

அதனைக் கேட்ட உதயணன் இன்புற்று, "இந்த யானையின் பண்டை வரலாறு என்ன?" என்று அவரிடமே கேட்க, அவர், "சாலி என்பதொரு நாட்டில் கடகம் என்பதோர் ஊரிலுள்ள இடபகன் என்பவனும் அவன் மனைவி சாலி என்பவளும் இல்லறம் நடத்திக் கொண்டு வருகையில், அவன் பண்டைப் பாவ வசத்தால் அமரிகை என்னும் ஒரு கணிகை வயப்பட்டவனாய்க் குல ஒழுக்கத்தை விட்டுவிட்டு, மிக்க பாவத் தொழில்களைச் செய்வானாயினன். இறந்த பின்பு அவனே இந்த யானைப் பிறப்பை அடைந்தனன். அதனால் தான் இந்த யானை தருமங்களைக் கேட்டவுடன் தன் கொடுஞ் செயல்களைத் துறந்து அடங்கி நிற்கின்றது" என்றனர். இதைக் கேட்ட உதயணன் அதை நன்கு பாதுகாக்கும்படி பாகர்களுக்குக் கட்டளை இட்டு அதன் பக்கத்தை அடைந்து, "யானை அரசே! உனக்கு யான் செய்வித்த துன்பங்களைப் பொறுத்துக் கொள்" என்று சொல்லி அதனை அன்புடன் தன் கைகளால் தடவிக் கொடுத்துத் தன்னிடத்தை அடைந்தான். அதன் வரலாற்றைக் கேட்ட யாவரும் வியப்புற்றுத் தருமோபதேசத்தின் பெருமையைப் பாராட்டினர்.

அப்பால் அரசனுக்கு வைராக்கியமுண்டாக, அவன் நரவாண தத்தனை வருவித்து, "நீ இந்த அரசாட்சியை ஒப்புக் கொள்; ஆட்சியைத் துறந்து தவஞ் செய்வதற்கு என் மனம் விரைகின்றது" என்று சொல்ல, அவன் தன் தந்தையை வணங்கி, "அடியேனுக்கும் அரசாட்சியிற் சிறிதும் விருப்பமில்லை; துறத்தற்கே என் மனமும் விழைகின்றது" என்று தன்னுடைய கருத்தைத் தெரிவித்தான். பின்பு உதயணன் பதுமையின் புதல்வனாகிய கோமுகனை அழைத்து அவனுக்கு முடிசூட்டிவிட்டுச் சென்று தேவியருக்குத் தன் கருத்தைத் தெரிவித்தான். அவர்களும் அவனுடன் வந்து தவஞ் செய்வதாகக் கூறினர்.

யூகி முதலிய மந்திரிமார்கள் யாவரும் வாசவதத்தை முதலிய தேவிமாரும் பிறரும் புடைசூழ்ந்து தன்னுடன் வர, உதயணன் தவ வனம் சென்று அங்கே தவம் செய்து கொண்டிருந்த தருமச்சுருதி என்னும் முனிவரைச் சரணமடைந்து துதித்து, "அடிகேள்! தவவழிகளை உபதேசித்து அடியேங்களை உய்வித்தருள வேண்டும்" என்று பிரார்த்தித்தான். அவர் சில தருமங்களை அவனுக்கும் மற்றவர்களுக்கும் விரிவாக உபதேசித்தார். உபதேசித்த பின்பு அவன் அப்பொழுது செய்ய வேண்டிய நியமங்களை முடித்துக் கொண்டு தியானாதிகளைச் செய்வானாயினன். பின்பு உதயண முனிவன், நீண்டகாலம் யோக சாமாதியைச் செய்து முடித்துச் சித்தபதத்தை அடைந்தான். தேவியரும் மந்திரிகளும் தவம் செய்து கற்பலோகத்தை அடைந்து நெடுங்காலம் இன்புற்று வாழ்ந்தார்கள். உதயணன் ஒரு காலத்தில் அரசனாக இருந்து செய்த இணையற்ற வெற்றி முழக்கங்களை இப்போது அவனுடைய இளைய மகனாகிய கோமுகன் செய்து தன் புகழ் திக்கெல்லாம் பரவும்படி பெருமைகளைப் பெற்றுக் கொண்டிருந்தான்.