vidhai semippavarkal

விதை சேமிப்பவர்கள்

விதைகளின்றி உண்ண உணவோ, உடுக்க உடையோ சாத்தியமில்லை. உண்மைச் சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்ட இந்தக் கதை, ஒரு விதை வங்கியை அமைக்க ஒன்றுகூடிய கிராமத்தைப் பற்றியது.

- Rajam Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பருத்தி விவசாயிகள் அனைவரும் கவலையோடுஇருந்தனர். கடந்த ஆண்டின் விளைச்சல்மிகவும் மோசமாக இருந்தது.

இப்போது வெயில் காலம் - பருத்தி விதைக்கும் காலம் சீக்கிரமே வந்துவிடும்.

ஆனால், அவர்கள் கிராமத்தில் உள்ளூர் இயற்கை விதைகள் போதுமான அளவு கிடைப்பது கடினம்.

“என்ன செய்வது? என்ன செய்வது?” என்று பிஜய் குழப்பத்தோடு கேட்டார்.

“நமக்கு இது ஒரு பெரிய பிரச்சனை.”

“சந்தையில் விற்கும் விதைகள் விலை அதிகம்” என்றார் நபிதா.

“அதுமட்டுமா? அவை வளர பூச்சி மருந்து வேண்டும். இரசாயன உரமும் வேண்டும்” என்றார் கேதகி.

“இங்கே வளமாக வளரக்கூடிய விதைகள் வேண்டும். அவை நம் மண்ணுக்கும்பருவநிலைக்கும் ஏற்றதாகவும் இருக்கவேண்டும்” என்று சொன்னார் பிஜய்.

“என்ன செய்வது? என்ன செய்வது?” என்றார் சுரேஷ்.

“நமக்கு இது ஒரு பெரிய பிரச்சனை.”

நபீதாவும் கேதகியும் ஒரு மகளிர் விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினர்கள். அவர்கள் கூட்டங்களை நடத்தினர். கிராமத்தலைவர்களைச் சந்தித்தனர். பல விவசாயிகள் சங்கத்தினரைச் சந்தித்து உரையாடினர்.

“என்ன செய்வது? என்ன செய்வது?” என அனைவரும் கூடி சிந்தித்தனர்.

“நமக்கு இது ஒரு பெரிய பிரச்சனை.”

பல நாட்கள் ஆலோசித்த பின்னர், ஒரு நாள் எல்லோரும் மகிழ்ச்சியாகத் தென்பட்டனர்!

“என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது. தீர்க்கமுடியாத பெரிய பிரச்சனை என்று எதுவுமே இல்லை. நாம் ஒரு வங்கி ஆரம்பிக்கலாம்” என்றார் நபீதா.

“வங்கியா? அது நமக்கு எப்படி உதவும்?” எனக் கேட்டார் பிஜய்.

“இது பணம் போட்டு எடுக்கின்ற வங்கி இல்லை; விதைகளுக்கான வங்கி” என்றார் கேதகி.

விவசாயிகள் அனைவரும் சேர்ந்து விதை வங்கி ஒன்றைத் தொடங்கினர்.தங்கள் வீட்டிலிருந்த விதைகளை எடுத்துக்கொண்டு வங்கிக்குச் சென்றனர்.

சிலர் சிறிதளவே கொண்டுவந்தனர். சிலர் நிறைய கொண்டுவந்தனர். எல்லோரும் வங்கியில் சேமித்தனர். விதை வங்கி, பண வங்கியைப் போலவே செயல்படும்! வங்கியில் மக்கள் பணத்தை சேமிப்பார்கள். விதை வங்கியில் விவசாயிகள் விதைகளைச் சேமித்தனர்!

பழைய விதைகள்

உள்ளூர் விதைகள்

இயற்கை விதைகள்

பருத்தி விதைகள்

வெண்டை விதைகள்

பூசணி விதைகள்

துவரை விதைகள்

நெல் விதைகள்

சிறுதானிய விதைகள்

சேகரிப்பதற்குத்தான் எத்தனைவகையான விதைகள் இருக்கிறன!

சுமதி, வங்கியிலிருந்து ஒரு கிலோ பருத்தி விதைகளைக் கடனாக வாங்கிக் கொண்டார்.

நபீதா, அதைக் கணக்கேட்டில் கவனமாக எழுதி வைத்துக் கொண்டார். கிருபா, ஒரு கிலோ நெல்விதைகளை வங்கியில் செலுத்தினார்.

கேதகி, அதை ஒரு பானையில் பத்திரமாகச் சேமித்தார்.

விதைகள் விதைக்கப்பட்டன.  நீர் பாய்ச்சப்பட்டது.

மழைக்காலம் வந்து போனது.

இப்போது அறுவடைக் காலம்!

இந்த ஆண்டு, விவசாயிகள் பருத்தியில் அமோக விளைச்சலைக் கண்டார்கள்.

அதை நண்பர்களுடன் கூடிக் கொண்டாடினார்கள்!

அறுவடையில் சுமதிக்கு நிறைய பருத்தி விதைகள் கிடைத்தன! அவர், தான் வாங்கிய விதைக்கடனுக்கு வட்டியுடன் சேர்த்து, ஒன்றரைக் கிலோ பருத்தி விதைகளை வங்கியில் செலுத்தினார்.

கேதகி, அதைக் கவனமாகக் கணக்கேட்டில் எழுதினார்.

நபீதா, விதைகளைக் கவனமாகப் பானையில் பத்திரப்படுத்தினார்.

விதை வங்கியில் இப்போது நிறைய விதைகள் இருக்கின்றன. அடுத்த ஆண்டு விதைக்கவும் அதற்கு அடுத்த ஆண்டுக்கும் அதற்கும் அடுத்த ஆண்டுக்கும்கூட போதுமான விதைகள் உள்ளன.

பருத்தி விவசாயிகளுக்கு இனிமேல் இது பெரிய பிரச்சனை இல்லை. ஏனெனில் அவர்களது விதை வங்கி மிகமிகப் பெரியது!

இப்போது, வங்கியிலும் வயலிலும் எங்கெங்கும் விதைகள்!

விதை வங்கிக்காரர்கள்

நம் உணவையும், உடைக்கான நூலையும் விளைவிக்க விதைகள் தேவை. விதைகளை வாங்க நிறைய செலவாகலாம். சில கலப்பினப் பயிர்களிலிருந்து கிடைக்கும் விதைகளை மீண்டும் விதைக்க முடியாது; அவை முளைக்காது. அந்த விதைகளைத் தூரத்தான் எறிய வேண்டும்! மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் வளர்வதற்கு இரசாயன உரங்கள் தேவை. வேறு பகுதிகளிலிருந்து வரும் விதைகள், உங்கள் வட்டார மண்ணுக்கு  ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம்.

இரசாயனங்கள் தேவைப்படாத உள்ளூர் இயற்கை விதைகளை சேமித்து வைத்தால், விவசாயிகள் சந்தையிலிருந்து விதைகள் வாங்க அவசியமே இருக்காது. பண வங்கி மாதிரியே, விதை வங்கியில் விதைகளைச் சேமிக்கலாம். தேவையானபோது விதைகளைக் கடனாகப் பெற்றுக்கொண்டு, பின்னர் வட்டியோடு அதிக விதைகளைத் திருப்பிச் செலுத்தலாம்!

ஒரிஸ்ஸா மாநிலத்திலுள்ள பீம்தங்கா கிராமத்தின் மா லங்கேஷ்வரி விதை வங்கியை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை உருவானது.

சேத்னா ஆர்கானிக் என்ற நிறுவனம் பருத்தி மற்றும் பிற விதைகளை சேமிப்பதற்காக, விவசாயிகளுக்கு விதை வங்கி அமைக்க உதவியது.

இந்தியாவிலும் உலகின் பல இடங்களிலும் விவசாயிகள் ஒன்றிணைந்து விதை வங்கிகளை உருவாக்கியுள்ளனர். அங்கு விதைகளை சேமிக்கின்றனர். பெரும்பாலும், பெண்கள்தான் விதை வங்கிகளை இயக்குகின்றனர். விதைகளைப் பத்திரப்படுத்துவதால், அவர்களை விதை வங்கிக்காரர்கள் அல்லது விதைக்காப்பாளர்கள் என்று அழைக்கின்றனர்.

உலகத்தில் உள்ள எல்லா விதைகளையும் பாதுகாக்க ஒரு வங்கி உள்ளது. அதன் பெயர் உலக விதைப் பெட்டகம்(Svalbard Global Seed Vault). அது, வெகு தூரத்திலிருக்கும் குளிர்ப்பகுதியானஆர்க்டிக் பகுதியில் அமைந்திருக்கிறது. உலகம் முழுவதிலிருந்து சேகரிக்கப்பட்ட 8,30,000-க்கும் மேற்பட்ட விதை வகைகள் அங்கே பாதுகாக்கப்பட்டுள்ளன.