பறவைகள் பறப்பதைப் பார்க்க சரளாவுக்குப் பிடிக்கும்.
ஒருநாள் அறிவியல் பாட வகுப்பின்போது, ஒரு கழுகு வானத்தில் இறகை அடிக்காமல் பறப்பதை ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். ’இந்தப் பறவைக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி!’ சரளாவுக்கு விமானங்கள் பறப்பதைப் பார்ப்பதும் பிடிக்கும்.
"ஏய்! உன் பெயர் என்ன?" சரளா படித்த வகுப்பின் புது ஆசிரியர் கேட்டார். "வகுப்பில் நான் பாடம் நடத்துவதை கவனிக்க வேண்டாமா?"
தயக்கத்துடன் சரளா எழுந்து நின்று, "மன்னித்துக் கொள்ளுங்கள்! நான் ஒரு கழுகைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நாம் எல்லோரும் பறவை, விமானம் போல் பறக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!" என்று சொன்னாள்.
"உன் பெயர் என்ன?""சரளா."
"ரொம்ப நல்லது! உனக்குத் தெரியுமா? இந்தியாவின் முதல் பெண் விமானியின் பெயர் கூட சரளாதான்!" என்றார் ஆசிரியர்.
"என் பெயர் ஹம்ஸா. அதற்கு அன்னப்பறவை என்று அர்த்தம். பறக்கும் பறவைகளிலேயே பெரியவற்றுள் அன்னப்பறவையும் ஒன்று, தெரியுமா?
நீ நூலகத்திற்குச் சென்று படிக்க வேண்டும். அங்கு பறவைகள், விமானங்கள் மற்றும் பறக்கும் இயந்திரங்கள் பற்றிய புத்தகங்கள் கட்டாயம் இருக்கும்" என்றும் சொன்னார்.
அடுத்த சில நாட்களில், சரளா பறவைகளைப் பற்றியும் விமானங்களைப் பற்றியும் நிறையப் படித்துத் தெரிந்துகொண்டாள்.
பறவைகளைப் போல் இல்லையென்றாலும், மனிதர்களாலும் பறக்க முடியும் என்று சரளா தெரிந்துகொண்டாள். மனித இனத்தின் அற்புதமான கண்டுபிடிப்புகளில் ஒன்றான விமானத்தின் மூலம் உலகின் எந்த நகரத்திற்கு வேண்டுமானாலும் நாம் பறந்து செல்லலாம். இந்தச் சிறந்த இயந்திரத்தின் உதவியால் வான்வெளிப் பயணம் தருகின்ற மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.
விமானங்கள் அளவில் மிகப்பெரியதாகவும் அதிகக் கனமாகவும் இருக்கும். பறவைகளைப் போலவே விமானங்களுக்கும் இரு பக்கங்களிலும் இறக்கைகள் இருக்கும். அவை விமானம் பறப்பதற்கு உதவுகின்றன. விமானங்களின் இறக்கைகள் பறவைகளின் இறக்கைகள் போலவே மேல்பக்கம் வளைந்தும், அடிப்பக்கம் தட்டையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், அவை வானத்தில் உயரமாகப் பறக்க இயலும்.
பறவைகள் சிறகடித்துப் பறப்பதைப் பார்த்திருக்கிறோம்; ஆனால், விமானங்கள் அப்படி சிறகடிப்பதில்லை!காற்றின் துணைகொண்டு தங்கள் உடலை மேலே உந்தித் தள்ளுவதற்காகப் பறவைகள் சிறகடிக்கின்றன. விமானங்களும் காற்றின் துணைகொண்டே பறக்கின்றன. அவற்றின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள எஞ்சின் என்கிற பொறியின் உதவியால் அவை காற்றை உருவாக்குகின்றன. இந்தக் காற்று விமானத்தின் கீழே செல்கிறது.
’எஞ்சின்’ என்பது சக்தி வாய்ந்த ஓர் இயந்திர பாகமாகும். அது விமானத்தின் மூளையைப் போன்றது. பறவைகள் எப்படித் தங்களுடைய மூளையையும் சிந்தனையையும் உபயோகித்துப் பறக்கப் பழகுகின்றனவோ, அதேபோல் விமானங்கள் இந்த எஞ்சினைப் பயன்படுத்தித் தரையிலிருந்து மேலெழுகின்றன; முன்னோக்கிச் செல்கின்றன.விமானத்தின் எஞ்சின், எரிபொருளை எரிக்கும்போது அதிவேகத்தோடு வெப்ப வாயுக்கள் வெளியேறும். இவை விமானத்தின் பின்னால் உள்ள காற்றைத் தள்ளிவிட்டு விமானத்தை முன்னோக்கிப் போகவைக்கும்.
கார்கள் போன்ற பிற வாகனங்களிலும் எஞ்சின் உண்டு. அவையும் முன்னோக்கிச் செல்பவையே. ஆனால், விமானங்களைப் போல் அவை வானில் ஏறிப்போவதில்லை!விமானத்தின் இறக்கைகள் பறவைகளின் இறக்கைகளைப் போலவே வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான் இதற்குக் காரணம். அவற்றின் மேல்பக்கமும் அடிப்பக்கமும் காற்று செல்வதால், அது விமானத்தை ஆகாயத்தில் ஏற்றி அங்கேயே இருத்திவைக்கிறது.பறவைகளைப் போலவே விமானங்களுக்கும் வால் உள்ளது. அது விமானத்தை நிலையாக வைத்திருக்கவும் திருப்பவும் உதவுகிறது.
விமானங்கள் வானில் ஏறுவதற்கும் தரையிறங்குவதற்கும் பெரிய, நீண்ட சாலைகள் தேவை. இந்த நீண்ட சாலைகளுக்கு ’ஓடு பாதை(ரன் வே)’ என்று பெயர்.விமானம் காற்றில் எழுவதற்கு, இந்த ஓடுபாதையில் அதிவேகமாக ஓடித் தன்னுடைய வேகத்தை அதிகரிக்க வேண்டும். விமானங்கள் அதிவேகமாகச் சென்றால் மட்டுமே காற்றில் ஏற இயலும்.ஓடு பாதை விமான நிலையத்தில் ஒரு முக்கியமான பகுதியாகும். ஏனெனில், அவைதான் விமானங்கள் வேகத்தைக் கூட்டிக்கொள்ளத் தக்க அவகாசம் கொடுத்து, அவை வானில் ஏற உதவுகின்றன.
விமானத்தை ஓட்டும் விமானிதான் அந்த விமானம் எங்கே செல்ல வேண்டும் என்று தீர்மானிப்பார். விமானத்தின் முன்புறமுள்ள ’விமானி அறை’ என்னும் இடத்திலிருந்து விமானி விமானத்தைக் கட்டுப்படுத்துவார்.விமான நிலையம் என்பது, விமானங்கள் புறப்படுகிற மற்றும் தரை இறங்குகிற இடம் ஆகும். துல்லியமான, நவீன கருவிகளின் மூலம் விமானி எப்போதும் விமான நிலையத்தோடு தொடர்பில் இருப்பார்.
சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு உதவ, போக்குவரத்து விளக்குகளும் காவல்காரர்களும் இருப்பதைப் போலவே விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் இருப்பார்கள், அவர்கள் ஒவ்வொரு விமானமும் எப்போது, எங்கே பறக்கவேண்டும் என்பதையும் அவை வானில் ஏறுவதற்கும் தரையிறங்குவதற்கும் உரிய பாதுகாப்பான நேரத்தையும் விமானிகளுக்குத் தெரிவிப்பார்கள்.விமானம் என்பது ஒரு மிகப் பெரிய பறவை. அது பறவையைப் போல் வடிவமைக்கப் பட்டிருக்கிறது, அதன் உதவியால் நாம் பறக்க இயல்கிறது. ஆனாலும், ஒரு பறவையைப் போல் நம்மால் பறக்க இயலாதுதான்!சரளா பெரியவளாகும்போது, விமானியாகி, பல விமானங்களை ஓட்டவேண்டும் என்று விரும்புகிறாள்.
உங்களுக்குத் தெரியுமா?1. இந்தியாவின் முதல் விமானம் ‘ஹர்லோ’ ஜூலை 1941இல் பறந்தது.2. இந்தியாவில் முதல் விமான ஒட்டுநர் உரிமத்தைப் பெற்றவர் ஜே.ஆர்.டி. டாடா அவர்கள். ’ஏரோ க்ளப் ஆஃப் இண்டியா அண்ட் பர்மா’ என்னும் நிறுவனம், 1929ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவருக்கு இந்த உரிமத்தை வழங்கியது.
3. உலகின் அதிவேக ஜெட் விமானம் ’லாக்ஹீடு எஸ்.ஆர் - 71 ப்ளேக் பேர்ட்’. இது ஒலியின் வேகத்தை விடவும் வேகமாகப் பறக்கக் கூடியது.
4. இந்தியாவின் முதல் பெண் விமானி, சரளா தக்ரால். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணி நேரங்கள் பறந்த முதல் பெண் விமானியும் இவரே.
பறக்கலாம், வாருங்கள்!உங்கள் நண்பர்களோடு இந்தச் செயல்பாடுகளைச் செய்து மகிழுங்கள்:
1. காகித விமானங்களைச் செய்து பறக்கவிடுங்கள், யாருடைய விமானம் நெடுந்தூரம் செல்கிறது என்று பாருங்கள். அது ஏன் என்று யோசியுங்கள்: ஒரு விமானம் அதிக தூரம் பறப்பது, பயன்படுத்தப்பட்ட காகிதத்தாலா அல்லது அது செய்யப்பட்ட விதத்தினாலா? ஒவ்வொரு காகித விமானமும் காற்றில் செலுத்தப்படும்போது என்ன ஆகிறது என்று கவனியுங்கள். நீங்கள் உங்கள் காகித விமானத்தைச் செலுத்தும் முன்னர் அதன் மேலே, கீழே, அல்லது உள்ளே காற்றை ஊதினால் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்கின்றனவா என்று கவனியுங்கள்.
2. பற - பறக்காதே விளையாட்டு:நண்பர்கள் சிலர் கூட்டமாக சேருங்கள். ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளாமல் அறைக்குள் பறப்பதற்குத் தக்கவாறு ஓர் அறையைக் கண்டுபிடியுங்கள். அங்கே ஒருவர் ஒரு மூலையில் நின்றுகொண்டு, பறப்பனவற்றின் பெயர்களையும், பறக்காதவற்றின் பெயர்களையும் வரிசையாகச் சொல்லுவார். அவர் பறக்காதவற்றின் பெயர்களைச் சொல்லும்போது (உதாரணமாக, ‘மேஜை’) ‘விமானங்கள்’ தரையிறங்கவேண்டும் (அதாவது, கீழே உட்காரவேண்டும்). இதைத் தவறாகச் செய்பவர் ஓரமாக நின்று அடுத்த சுற்றில் பொருட்களின் பெயர்களைச் சொல்லவேண்டும்.