vinkalathil panipuri

விண்கலத்தில் பானிபூரி

சிக்கி, எப்போதும் சாப்பிடுவதற்கு ஆர்ப்பாட்டம் செய்வாள். அதிலும், ‘முள்ளங்கி பராத்தா வாடை அடிக்கும்’ என்ற நினைப்பால், அவளுக்கு அதைக் கண்டாலே ஆகாது. அவளுக்கு விண்வெளிப் பயணம் செய்ய ஆசை. விண்கலத்தில் பீட்ஸா, பானிபூரி, ஐஸ்க்ரீம் இவை எல்லாம் கிடைக்குமா என்று அவளுக்கு சந்தேகம். விண்வெளி வீரர்கள் விண்வெளிப் பயணத்தின் போது என்ன உண்பார்கள், ஏன் என்பதைப் பற்றி மதிய உணவின் போது தமது பெற்றோருடன் உரையாடும் சிக்கி, நீனுவுடன் நீங்களும் சேர்ந்துகொள்ள வாருங்கள்!

- Elavasa Kothanar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“சாப்பாடு தயார்!” என்று அழைத்தார் அப்பா.

வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிக்கியும் நீனுவும் வீட்டிற்குள்ளே ஓடி வந்தனர். அதற்குள் அப்பா சாப்பாட்டு மேஜையில் தயாராக அமர்ந்திருந்தார்.

“இன்றிரவு என்ன சாப்பாடு?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் நீனு.

“முள்ளங்கிப் பராத்தாவும் பச்சடியும்!” என்றார் அம்மா.

சிக்கி “ஐய்யே!” என்றபடியே முகம் சுளித்தாள்.

“சாப்பாட்டைப் பற்றி ஒருபோதும் குறைசொல்லக் கூடாது, சிக்கி!” என்று கடிந்துகொண்டார் அப்பா.

“எனக்கு முள்ளங்கி வாடையே பிடிப்பதில்லை” என்றாள் சிக்கி.

“சிக்கி, சிக்கி! தின்பாய் நீ முக்கி!” என பராத்தாவைக் கடித்தபடிச் சீண்டினான் நீனு. அவனுக்கு, சிக்கியைப் போல் இல்லாமல், அனைத்து வகை உணவுகளும் பிடிக்கும்.

“சிக்கி, நீ விண்வெளி வீராங்கனையாக வேண்டும் அல்லவா?” என்று கேட்டாள் அம்மா.

“ஆம்!” என்று ஆமோதித்தாள் சிக்கி.

அம்மா ஒரு விஞ்ஞானி, அப்பா ஒரு ராணுவப் பாதுகாப்புப்படை விமானி! சிக்கிக்கு அறிவியலில் ஆர்வம் அதிகம். அப்பாவை விடவும் உயரே பறக்க வேண்டும் என்று விரும்பினாள். அவளுக்கு விண்வெளியில் பறந்து செல்லும் விண்வெளி வீரர்கள் போலத் தானும் ஆகவேண்டும் என்பதே கனவு!

“சரி, ஒன்று செய்யலாம். இப்பொழுது நீ இந்த பராத்தாக்களைச் சாப்பிடு. நாளை நான், உனக்கு விண்வெளி வீரர்கள் சாப்பிடும் உணவைச் செய்து தருகிறேன்,” என்று அம்மா சொன்னார்.

‘‘சரி!’’ என மகிழ்வுடன் சொன்ன சிக்கி, அந்த பராத்தாவை விழுங்கினாள்.

மறுநாள் சிக்கியும் நீனுவும் பள்ளியில் இருந்து மதிய உணவு உண்ண வீட்டிற்கு வந்தார்கள். அம்மா என்ன செய்திருப்பாரென்று அறிய மிகவும் ஆவலாக இருந்தார்கள்.

“விண்வெளியில் கேக்கும், ஐஸ்க்ரீமும் கிடைக்கும் என்றே நினைக்கிறேன்!” என்றான் நீனு.

“அதோடு பீட்ஸாவும் பானிபூரியும்!” என்று கூவினாள் சிக்கி.

ஆனால், அவர்கள் தட்டிலோ பற்பசைக் குழாய் போன்ற ஒன்றினைப் பார்த்தார்கள்!

“பற்பசையா? இதையா விண்வெளி வீரர்கள் உண்பார்கள்!” என்று கதறினான் நீனு.

“அது பற்பசை இல்லை!” என்று சிரித்தாள் அம்மா. “நான் சாதத்தையும், பருப்பையும் மசித்துக் குழாயில் போட்டுவிட்டேன். நீங்கள் அதிலிருந்து அப்படியே உங்கள் வாயினுள் பிதுக்கிக்கொண்டு விழுங்கிவிட வேண்டியதுதான்,” என்றார்.

அப்பாவின் தட்டில் பருப்பு சாதம் இருந்தது. குழாயில் இருக்கும் குழைத்த சாப்பாட்டை விட, அது அதிக சுவையாயிருக்குமென சிக்கிக்குத் தோன்றியது. “எங்களுக்கும் தட்டில் பருப்பு சாதம் தந்தால் என்ன அம்மா?” எனக் கேட்டாள்.

அதற்கு அப்பா, “என் தட்டில் சாப்பாடு எப்படிப் பறக்காமல் இருக்கிறது பார்த்தாயா? விண்வெளியில் தட்டில் வைக்கும் சாப்பாடு மிதந்துகொண்டு போய்விடும்!” என்றார்.

உடனே, சிக்கியும் நீனுவும் அறையெங்கும் சோற்றுப் பருக்கைகள் பறப்பது போல் கற்பனை செய்து பார்த்தார்கள்.

நீனு, அங்கும் இங்கும் குதித்து, அவற்றைப் பிடித்து உண்பது போல விளையாடத் தொடங்கினான். சிக்கியோ, “நான் உன்னைப் பிடிக்கப் போகிறேன்,” என்று பருக்கைகளை நோக்கி ஓடினாள்.

“கற்பனை செய்யும் பொழுது நல்ல விளையாட்டாகத் தோன்றினாலும், இப்படிச் சாப்பிட்டால், சாப்பிட்டு முடிக்க வெகு நேரம் ஆகும். அது மட்டுமில்லாமல், சாதப்பருக்கைகள் விண்கலத்தின் இயந்திரத்திற்குள்ளே சென்று அதைச் செயலிழக்கச் செய்துவிடும்,” என்றார் அப்பா.

“விண்வெளியில் ஏன் சாப்பாடு மிதக்கும்? இங்கெல்லாம் அப்படி மிதப்பதில்லையே?” எனக் கேட்டாள் சிக்கி.

“பூமியில், புவியீர்ப்பு விசை என்ற ஒன்று இருக்கிறது. அது சாப்பாட்டை மட்டுமில்லாமல் நம்மையும் வானத்தில் மிதந்து போகாதபடி நிலைத்திருக்கச் செய்கிறது. இந்த விசையினால்தான், நாம் ஒரு பந்தை மேலே எறிந்தால் அது மீண்டும் தரையில் வந்து விழுகிறது,” என்று விளக்கினார் அப்பா.

“பூமியில் இருந்து நாம் விலகி செல்லச் செல்ல, புவியீர்ப்பு விசை இல்லாமல் போய்விடும். அதனால் விண்வெளி வீரர்களும், மற்ற பொருட்களும் எடையற்றவையாக ஆகி மிதக்கின்றன,” என விளக்கத்தைத் தொடர்ந்தார் அம்மா.

“அங்கு கொண்டுசெல்லப்படும் உணவு, உண்பதற்கு எளிதாக இருக்கவேண்டும். இல்லையேல் உண்ணும் பொழுது மிதந்து சென்றுவிடும்” என்றார் அப்பா.

சிக்கியும், அதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினாள்.

“புவியீர்ப்பு விசைதான் எல்லாவற்றையும் கீழே இழுக்கிறது என்றால், நாம் சாப்பிடவும் அது தேவைதானே? மேலே இருக்கும் வாயில் இருந்து கீழே இருக்கும் வயிற்றிற்கு உணவு செல்லவும் அது தேவைதானே? அப்படியானால் விண்வெளியில் இருப்பவர்கள் எப்படி உண்பார்கள்? அவர்கள் விழுங்க முயலும் போது, உணவு மிதந்து மீண்டும் வாய்க்கே வந்து விடாதா?” என்று சிக்கி கேட்டாள்.

“நல்ல கேள்வி! மனிதர்கள் விண்வெளிக்கு செல்ல ஆரம்பித்த போது, விஞ்ஞானிகள் உன்னைப் போலவே வியந்தனர். ஒரு பரிசோதனையாக, விண்வெளியில் ஜான் க்ளென் என்ற விண்வெளி வீரரை ஒரு மடக்குத் தண்ணீர் அருந்தச் செய்தனர்,” என்றார் அப்பா.

“அவரால் முடிந்ததா?’’ நீனு கேட்டான். ‘தண்ணீர் கூட குடிக்க முடியவில்லையென்றால் எப்படியிருக்கும்?’ என யோசித்தான்.

“ஆமாம்! அவரால் குடிக்க முடிந்தது! ஏனெனில், நம் வாயில் இருந்து வயிற்றுக்கு உணவு செல்ல புவியீர்ப்புச் சக்தி காரணமில்லை. அது நம் வாய்க்கும் வயிற்றுக்கும் இடையிலுள்ள உணவுக்குழாய் தசைகள் செய்யும் வேலை. அதனால்தான் நாம் தலைகீழாகத் தொங்கும்போதுகூட சாப்பிட முடிகிறது. ஆனால் புவியீர்ப்பு விசையை எதிர்த்து தசைகள் மிகக்கடினமாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது,” என்று அப்பா மேலும் விளக்கினார்.

சிக்கியும் நீனுவும் ஒருவரை ஒருவர் விஷமத்தோடு பார்த்துக் கொண்டனர். ‘அடுத்த சோதனைக்கு விஷயம் கிடைத்து விட்டது!’

அவர்களது மனப்போக்கை அறிந்த அப்பா, ”பூமியில் தலைகீழாகத் தொங்கும்போது அதிகமாகச் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. புவியீர்ப் புவிசை மிகவும் வலுவானது,” என்று அப்பா எச்சரித்தார்.

சிக்கி தனது தட்டில் இருக்கும் குழாயைப் பார்த்து, “இப்படித்தான் விண்வெளியில் உண்பார்களா?” என்று மிகுந்த ஏமாற்றத்துடன் கேட்டாள்.

அம்மா சிரித்தபடியே, “விண்வெளி வீரர்கள் முதலில் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட போது, காய்கறி, மாமிசங்கள், பழங்கள் என எல்லாவற்றையும் இப்படி குழாயிலிருந்துதான் உண்டார்கள். அது ருசிக்கவில்லை! உன்னைப் போலவே அவர்களும் குறை கூறினார்கள்,” என்றார்.

“அதனால் விஞ்ஞானிகள், பார்க்கவும் சாப்பிடவும், எப்போதும் உண்பதைப் போலவே இருக்கும் உணவு வகைகளை விண்வெளி வீரர்களுக்குத் தயார் செய்ய ஆரம்பித்தார்கள். அதிகம் சிந்தாமல் ஒரேமுறையில் வாயில் போட்டுக்கொள்ளும் வகையில், ‘க்ரனோலா’ துண்டுகள், கொட்டைகள் மற்றும் டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள் இப்பொழுது விண்வெளி வீரர்களுக்குக் கிடைக்கின்றன,” என்று விவரங்களைச் சொன்னார் அப்பா.

‘‘அங்கே பீட்ஸா, ஐஸ்க்ரீம், சோடா போன்றவையும் கிடைக்குமல்லவா?‘‘ என்று கேட்டான் நீனு.

“விண்வெளியில் சாப்பிட, பீட்ஸா அனுப்ப விஞ்ஞானிகள் வெகுகாலமாக முயன்று வருகிறார்கள். அங்கே மாவைப் பிசைவதும், அதைச் சுடுவதும் கடினம். ஆனாலும் ஒரு விண்வெளி வீரர்கள் குழு, தட்டை ரொட்டி(flat bread), சுவைச்சாறு(sauce) மற்றும் காய்கறிக்கலவைப் படுகை(toppings) ஆகியவற்றைக் கொண்டு பீட்ஸா செய்தனர். ஐஸ்க்ரீமை சேமித்து வைக்க விண்கல உறைகலன்களில் இடமில்லை. ஐஸ்க்ரீமை அனுப்பிக்கொடுத்தாலும், அதை அவர்கள் விரைவிலேயே சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்,” என்றார் அப்பா.

“சோடாவில் இருக்கும் குமிழிகள், புவியீர்ப்பு இல்லாததால் இங்கு போலல்லாது வினோதமாக நடந்து கொள்வதால் அங்கு சோடாவும் கிடையாது,” என்றார் அம்மா.

“இன்றைய விண்வெளி வீரர்களுக்கு விதவிதமான உணவு வகைகள் தயார் செய்து தரப்படுகின்றன. ஆப்பிள், வாழைப்பழம் போன்றவையும் கூட விண்கலத்தில் கிடைக்கின்றன. விண்வெளியிலேயே காய்கறிகளைப் பயிரிடுவதற்கான ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்றார் அப்பா.

“இப்போது, நான் தரும் இந்தப் பூக்கோசு பராத்தாவை சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்!” எனக் கண்விரியச் சிரித்தார் அம்மா.

“ஐயோ! பூக்கோசா?” என்று அலறிய சிக்கி, “நான் விண்வெளியில் பறக்கும் பொழுது கட்டாயம் பானிபூரி கொண்டு செல்வேன்!” என்றாள்.

உங்களுக்குத் தெரியுமா?

• ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின், விண்வெளியில் 1961ஆம் ஆண்டு உண்ட முதல் உணவு, மாட்டுக்கறியும் ஈரலும் கலந்த ஒரு பசையாகும். அவர் திரவ சாக்லேட்டும் சாப்பிட்டார்.

• ரஷ்ய விண்வெளி வீரர்களை ‘காஸ்மோநாட்’ என்றும் இந்திய விண்வெளி வீரர்களை ‘வ்யோமோநாட்’ என்றும் அழைக்கிறார்கள்.

• விண்வெளி வீரர்கள், ஒரு கோளைப் போல பூமியைச் சுற்றி வரும் விண்வெளி நிலையங்களில் வசிக்கிறார்கள். ஒரு விண்வெளி நிலையம், மூன்று வீடுகளின் அளவினை ஒத்திருக்கும். அது சமையலறை, குளியலறை, படிக்கும் அறை மற்றும் படுக்கையறைகளைக் கொண்டிருக்கும்.

• விண்வெளியில் உப்பும் மிளகும் திரவ வடிவிலேயே  பயன்படுத்தப்படுகின்றன!

• விண்வெளி வீரர்கள் உணவுக்கலங்களை ’வெல்க்ரோ’(Velcro) கொண்டு தட்டோடு பிணைத்துக்கொள்வார்கள். அதன்பின் தட்டை தம் தொடைகளில் கட்டிக்கொள்வர். இப்படிச் செய்தால்தான் அவர்களால் உட்கார்ந்து கொண்டு உணவருந்த முடியும்.

• விண்வெளி வீரர்கள், தனித்துவமுள்ள கெண்டி(Nozzle) கொண்ட அடப்பைகளிலிருந்து(pouch) திரவ உணவுகளைக் குடிக்கிறார்கள். சாதாரணக் கோப்பைகளைப் பயன்படுத்தினால் அவர்கள் அருந்த நினைக்கும் காப்பியோ பழரசமோ ஒரு பந்து போலாகி அறைக்குள் மிதந்துவிடும்.

• விண்வெளியில் உமிழ்நீர் அதிகம் சுரக்காத காரணத்தால் உணவு அவ்வளவாக ருசிப்பதில்லை. அதனால் காரம் மிகுந்த உணவை விண்வெளி வீரர்கள் மிகவும் விரும்புகிறார்கள்.

• விண்வெளி வீரர்கள் தங்களுக்கு வேண்டிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்கிறார்கள். உணவுப் பொட்டலங்களை அடையாளம் கொள்ள அவற்றின் மீது பெயர் வில்லைகள் ஒட்டப்பட்டிருக்கும்.