vinveliyil eekkal

விண்வெளியில் ஈக்கள்

இரண்டு ஈக்கள்... அவை பிறந்ததோ பூமியில்; வளர்ந்ததோ விண்வெளியிலே!

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இப்பொழுதுதான் பிறந்த ஒரு சின்னஞ்சிறிய பழ ஈ - ட்ரோசோ.

அவன் தன்னுடைய இறக்கைகளை முதன்முறையாக விரித்துப் பார்த்தான். அவற்றை மேலும் கீழும் அதிவேகமாக அடித்துக்கொண்டான். சரியாகச் சொல்லவேண்டும் என்றால் விநாடிக்கு 220 தடவைகள் அடித்துக்கொண்டான்.

‘ஆஹா, நான் பறக்கிறேன்!’ என்று கூவினான் ட்ரோசோ.

தான் பிறந்த அந்த அழுகிய வாழைப்பழத்தைக் குனிந்து பார்த்தான் ட்ரோசோ.

அருமையான காட்சி! அவன் சகோதரி ஃபிலாவும் இறக்கைகளை விரிக்கத் தொடங்கியிருந்தாள்.

‘என்னால் எவ்வளவு உயரத்துக்குப் பறக்க முடியும்?’ என்று யோசித்தான் ட்ரோசோ. ஓரளவு உயரத்துக்குப் பறந்து பார்த்தான்.

உயரப் பறப்பது ஃபிலாவுக்கும் பிடித்திருந்தது. ஆனால் அதைவிட, தன்னை விதவிதமாக அழகு பார்த்துக்கொள்ளப் பிடித்திருந்தது.

இங்கே ஒரு கால், அங்கே இரண்டு கால்கள், மீதமுள்ள மூன்று கால்கள் இன்னோரிடத்தில் என்று பலவிதமாக வைத்து அழகு பார்த்தாள் ஃபிலா.

பின்னர், “நான் நடிக்கும் அழகியாகப் போகிறேன்” என்று அறிவித்தாள்.

அடுத்த நாள், ட்ரோசோ பழக்கூடையின் மேற்பகுதிக்குப் பறந்து பார்த்தான். அதற்கு அடுத்த நாள், குளிர்சாதனப் பெட்டியின் உச்சிக்குப் பறந்து பார்த்தான்.

அதற்கு அடுத்த நாள்... இன்னும் மேலே, இன்னும் மேலே பறந்து...

... கூரையில் இடித்துக் கொண்டான் ட்ரோசோ. அதைவிட உயரமாகப் பறக்க அவனால் முடியவில்லை!

இங்கே பாருங்கள்! ட்ரோசோவும் ஃபிலாவும் ரிச்சா என்பவரின் வீட்டினுள்ளே இருக்கிறார்கள். ரிச்சா ஒரு விண்வெளி வீராங்கனை. இன்னும் இரண்டு வாரங்களில் அவர் ஒரு ராக்கெட்டில் ஏறி விண்வெளிக்குச் செல்லப் போகிறார்.

அதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்ததினால், அவர் தன் வீட்டிலிருந்த வாழைப்பழங்கள் அழுகிக்கொண்டிருப்பதைக் கவனிக்கவில்லை.

விண்வெளி வீராங்கனை ரிச்சாவுக்கும், பழ ஈ ட்ரோசோவுக்கும் அப்படியொன்றும் வேறுபாடில்லை.

ரிச்சாவும் ட்ரோசோவைப் போலவே மிகமிக உயரமான இடங்களுக்குச் செல்ல விரும்பினார்.

விண்வெளிக்குப் பறக்கவேண்டும் என்பது ரிச்சாவின் நீண்டகாலக் கனவு. இப்பொழுது அது நிறைவேறப் போகிறது. என்ன ஒரு பரவசம்!

ரிச்சாவின் நினைப்புகள் எல்லாமே விண்வெளியைப் பற்றித்தான்!

விண்வெளி என்பது, தரையிலிருந்து நூறு கிலோமீட்டர் மேலே இருக்கிறது. அங்கே சுவாசிக்கக் காற்று இல்லை; நிற்பதற்கு நிலம் இல்லை. மேலே, கீழே என்கிற திசைகள் இல்லை! ஆதலினால், விண்வெளியில் எதுவுமே கீழே விழுவதில்லை.

ரிச்சா போன்ற விண்வெளி வீரர்கள் அங்கே மிதந்தபடி இருப்பார்கள்.

என்ன ஒரு வினோதமான இடம் அது!

“மேலே, கீழே என்பதே இல்லாத விண்வெளியில் பறவைகள் எப்படிப் பறக்க முடியும்?” என்று ரிச்சா அடிக்கடி வியப்பார்.

இதைத் தெரிந்துகொள்ள ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.

’நான் விண்வெளிக்குச் செல்லும்போது, என்னோடு ஒரு பறவையையும் அழைத்துச் செல்வேன்!’ என்று தீர்மானித்துக் கொண்டார்.

ஆனால், எந்தப் பறவையை அழைத்துச் செல்வது? ஒரு புறாவை அழைத்துச் செல்லலாமா? வேண்டாம், அதற்குச் சிறகுகள் அதிகம்.

ஒரு காக்கையை?

வேண்டாம், அது மிகப் பெரியது.

ஒரு சிட்டுக்குருவியை?

அது மிகவும் இரைச்சல் போடும். தீனியும் அதிகம் தின்னும்.

ரிச்சா நெடுநேரம் கடுமையாக யோசித்தார். அவருக்குப் பசியே வந்துவிட்டது. பழக்கூடையை எடுத்துப் பார்த்து, “அய்யே, பழங்களெல்லாம் அழுகிவிட்டதே!” என்றார்.

அப்பொழுதுதான் அவர் ட்ரோசோவும், ஃபிலாவும் பழங்களைச் சுற்றி அங்கே பறந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.

“பழ ஈக்கள்!” என்று கூவினார் ரிச்சா. ’இவைதான் விண்வெளிக்கு மிகவும் பொருத்தமானவை’ என்று மகிழ்ந்தார்.

அவர் ட்ரோசோவையும் ஃபிலாவையும் பிடித்து ஒரு ஜாடிக்குள் வைத்தார். அவர்கள் சாப்பிடுவதற்காக ஒரு அழுகிய வாழைப்பழத் துண்டையும் போட்டார்.

பிறகு, மீதமிருந்த வாழைப்பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு, தனக்காக ஒரு ’சாண்ட்விச்’ செய்து சாப்பிட்டார்.

இன்றைக்கு, ரிச்சா விண்வெளிக்குப் பறக்கவிருக்கிறார்.

அவருடைய கையில் என்ன இருக்கிறது என்று பாருங்கள்!

ஃபிலா, உலகின் முதல் விண்வெளி அழகியாகிவிட்டது. அது விண்வெளியில் சாப்பிடுவதையும் ஓய்வெடுப்பதையும் விண்வெளிவீரர்கள் பலவிதமாகப் புகைப்படம் எடுத்தார்கள்.

ரிச்சாவும், அவருடைய விஞ்ஞானி நண்பர்களும் ட்ரோசோ விண்வெளியில் தனது இறக்கைகளை எப்படிப் பயன்படுத்துகிறது என்று உன்னிப்பாகக் கவனித்தனர்.

பாருங்கள்! ட்ரோசோ மேலே...மேலே...மேலே பறந்து உலகில் வேறு எந்த ஈயும் எட்டாத உயரத்தை எட்டிவிட்டது.

விண்வெளியில் விலங்கினங்கள்

பழ ஈயின் அறிவியல் பெயர் ட்ரோசோஃபிலா. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கினம், ஒரு பழ ஈதான். இது 1947இல் நடந்தது.

உங்களுக்குத் தெரியுமா? பழ ஈக்களுக்கும் மனிதர்களுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. நம்மைப்போலவே அவையும் பல விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்கின்றன. அவை நோய்வாய்ப்படுவதும் கூட நம்மைப் போலவே தான். அதனால், விஞ்ஞானிகள் விண்வெளியில் பழ ஈக்களைப் பற்றி ஆராய்ந்தறிய விரும்புகிறார்கள். மேலும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதைவிட, ஈக்களை அனுப்புவது எளிதல்லவா! ஆகையினால்தான், பழ ஈக்கள் ’மாதிரி உயிரினங்கள்’ என்று அறியப்படுகின்றன.

விண்வெளிக்குச் சென்ற மற்ற விலங்கினங்கள் யார்யாரென்று உங்களுக்குத் தெரியுமா? அவை ஆல்பெர்ட் என்ற குரங்கு, லைகா என்ற நாய், ஹாம் என்ற சிம்பன்ஸி குரங்கு மற்றும் அரபெல்லா என்ற சிலந்தி ஆகியவை!