vinveliyil piranthanal

விண்வெளியில் பிறந்தநாள்

உங்கள் பிறந்தநாளை நீங்கள் எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்? யோசித்துப் பாருங்கள், பிறந்தநாளன்று நீங்கள் விண்வெளியில் நடந்தால் எப்படியிருக்கும்! இதோ, இந்தக் கதையைப் படியுங்கள், மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பீர்கள், அப்போது உங்கள் காலுக்குக் கீழே புவியீர்ப்புவிசை இல்லாவிட்டால், நீங்கள் அங்கேயே மிதந்துகொண்டிருப்பீர்கள். வாருங்கள், இக்கதையில் வரும் சிறுமியுடன் விண்வெளியைச் சுற்றிவருவோம்!

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நாளை எந்தன் பிறந்தநாள்,

நங்கை எனக்கோர் ஆசையுண்டு,

நட்சத்திரமும் சூரியனும்

நிலவும் என்னை வாழ்த்திடவே.

காலை எழுந்து பார்க்கின்றேன்

கண்ணைத் தேய்த்து விழிக்கின்றேன்,

வீட்டின் முன்பொரு ராக்கெட்டைப்

பார்த்தே நானும் திகைக்கின்றேன்.

ராக்கெட் கிளம்பத் தயாராச்சு

பைகளை நிரப்பி மூடியாச்சு,

விர்ரென அதுவும் விரைந்தாச்சு,

விண்வெளிப்பயணி ஆயாச்சு.

எந்தன் செல்லப் பூனைக்கும்

எனக்கும் தலையே சுற்றுது,

சில நிமிடங்களிலே ராக்கெட்டும்

பூமியைக் கடந்தே பறந்தது.

சிலமணி நேரம் பறந்தோமே,விண்வெளி வீட்டை அடைந்தோமே,இதற்குப் பெயரே விண்வெளிநிலையம்,எத்தனை அழகு, வியக்கின்றோம்!

’பொய்ங்’கெனக் குதித்து நடக்கின்றோம்,காலைக் காணோம், திகைக்கின்றோம்,மறுநொடி தலைகீழ் ஆகின்றோம்,மர்மம் என்ன? குழம்புகிறோம்.காற்றில் இடமும் வலமும்மிதந்தே நாங்கள் செல்கின்றோம்,அங்கும் இங்கும் உருள்கின்றோம்,ஆஹா, இன்பம், களிக்கின்றோம்.

என் பை தலைகீழ் ஆனதுவே,

ஜிலேபி, சமோசா வெளிவரவே,

அவையும் குதித்துப் பறந்திடுமே,

அச்சோ, எல்லாம் மிதந்ததுவே.

எல்லாம் போச்சு, இனிமேலே

பசியைத் தீர்க்கும் வழியென்ன?

கவலை வேண்டாம் விண் உணவை

கலக்கம் இன்றித் தின்றிடலாம்.

என் முடி எங்கோ பறக்கிறது,

உடைகள் கசங்கிக் கிடக்கிறது,

குளியல் அறையைக் காட்டுங்கள்,

குளித்திட வேண்டும் இப்போதே.

விண்வெளி தன்னில் குழாயில்லை,

வெந்நீர் கிடைக்க வழியுமில்லை,

துண்டில் கொஞ்சம் நீர்த்தூவி

முகத்தை மெல்லத் துடைக்கின்றேன்.

ஷாம்பூ கொஞ்சம் எடுக்கின்றேன்,

கூந்தலில் அதனைத் தேய்க்கின்றேன்,

மீண்டும் துண்டால் துடைக்கின்றேன்,

கூந்தல் சுத்தம் ஆனதுவே.

’ஸ்பேஸ்சூட்’ என்கிற விண்ணுடையை

மெதுவாய் எடுத்து அணிகின்றேன்,

விண்வெளி நடைக்குச் செல்கின்றேன் ,

நீங்களும் என்னுடன் வரலாமே!

வேகம் வேண்டாம், ஆபத்து,

மெல்லத் தவழ்தல் மிகநன்று,

எங்கும் இருட்டு! குளிரோடு,

துளியும் சத்தம் இங்கில்லை.

நட்சத்திரங்கள் பெரிதாக

நன்றே மின்னும், நிலவும்தான்

என்னை வாழ்த்திப் பாடிடுமே,

'பிறந்தநாள் வாழ்த்து, சிறுபெண்ணே.'

நடந்தது போதும், திரும்பிடலாம்,

சற்றே ஓய்வு எடுத்திடலாம்,

விண்வெளி நடையில் பயந்தேனே ,

ஆயினும் மகிழ்ந்து களித்தேனே .

இதுதான் விண்வெளிச் சிறுபடுக்கை,இனிதே துயிலும் இடமாகும்,இதிலே படுத்து நமைநாமேஇறுக்கிக் கட்டிக் கொள்ளணுமாம்.நன்றாய்த் தூங்கி எழுந்தேனே,நானும் சுறுசுறுப்பானேனே,பல்லை அழுத்தித் தேய்த்தபின்னேவிழுங்கினேன் நானே பற்பசையை.

அம்மாவுடன் நான் பேசணுமே,

கணினியை எடுத்துப் பொருத்துகின்றேன்,

'யாரிது?' என்றே அவர் கேட்க,

'விண்வெளிப் பெண் நான்' என்கின்றேன்.

இங்கே நானும் பார்க்கின்ற

மாயம் யாவும் சொல்கின்றேன்,

எந்தன் மகிழ்ச்சி அவருக்கும்

எளிதில் தொற்றிக் கொண்டதுவே.

இரண்டே மாதம் விண்வெளியில்இனிதே நானும் வாழ்கின்றேன்,திரும்பிட வேண்டும் நாளைக்கு,தித்திக்கின்ற பூமிக்கு.நீங்களும் விண்வெளி செல்லணுமா?பெட்டியை நன்றாய் கட்டுங்கள்,கையைத் தூக்கிக் கூப்பிடுங்கள்,வந்திடும் உடனே ராக்கெட்டு!

உங்களுக்குத் தெரியுமா?

- விண்வெளிக்குச் செல்ல 'ராக்கெட்'கள் தேவை. பலவிதமான ராக்கெட்கள் உள்ளன, இக்கதையில் வரும் குல் என்ற சிறுமியும் அவளுடைய பூனையும் சென்ற ராக்கெட்தான் பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படுவது. அந்த ராக்கெட் அவர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு(ISS)* அழைத்துச் சென்றது. அங்கேதான் குல் இரண்டு மாதங்கள் விண்வெளியில் வாழ்ந்தாள். அவர்கள் ISSஇல் இருந்து சோயூஸ் என்ற விண்கலனைப் பயன்படுத்திப் பூமிக்குத் திரும்பினர்.

- பூமியிலிருந்து ISSக்குச் செல்லும் விண்கலங்கள் சிறப்பாகப் பொட்டலம் கட்டப்பட்ட உணவு, தண்ணீர், விண்வெளி வீரர்கள் அங்கே வாழத் தேவையான மற்ற பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்கின்றன. அங்கே ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரும் விலையுயர்ந்தது. ஆகவே, கவனமாகப் பயன்படுத்தவேண்டும்.

*ISS - International Space Station

- குல்லும் ISSஇலிருக்கும் பிற பொருள்கள் அனைத்தும் பலூன்களைப்போல் மிதக்கிறார்கள். அங்கே இழுத்துக் கட்டப்படாத எல்லாமே மிதக்கும். இது ஏன்? விண்வெளிக்கு யார் சென்றாலும், அவர்களுடைய உடல் எடையற்றதுபோல் மாறிவிடும். இதற்குக் காரணம், விண்வெளி நிலையமும், அதற்குள் உள்ள மற்ற விஷயங்கள் அனைத்தும் பூமியை நோக்கித் தொடர்ந்து விழுகின்றன, அவை விழும் வேகத்தில், அனைத்தும் எடையற்று இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், அப்படித் தொடர்ந்து விழுகிற விண்வெளி நிலையமும் அதிலுள்ள பொருள்களும் ஏன் பூமியில் விழுந்து உடையவில்லை? காரணம், நமது கிரகம் உருண்டையாக உள்ளது, ISS, அதிலுள்ள எல்லாம் கீழே விழ, விழ, விழ, பூமியின் பரப்பும் அவர்களிடமிருந்து விலகி வளைந்துகொண்டே இருக்கிறது.   ஆகவே, அந்த விண்வெளி நிலையம் விழுந்துகொண்டேதான் இருக்கும், ஆனால் ஒருபோதும் பூமியின் பரப்பைத் தொடாது.

- ISSக்குள் குழாய்கள் கிடையாது. காரணம், எடையில்லாத சூழலில் தண்ணீரால் கீழே பாயமுடியாது. ஆகவே, குல் ஒரு சிறப்பு ஷாம்பூவைப் பயன்படுத்துகிறாள், அதைக் கழுவி அகற்றவேண்டியதில்லை. அதேபோல், அவள் தன்னுடைய பற்பசையைத் தானே விழுங்கிவிடுகிறாள். ஒருவேளை அவள் ஒரு தண்ணீர்ப் பையைத் திறந்து வைத்துவிடுகிறாள் என்றால், தண்ணீர்த்துளிகள் விண்வெளி நிலையத்தில் எங்கும் மிதக்கத்தொடங்கும், அவை ஒன்றாகச் சேர்ந்து பெரிய தண்ணீர்ப் பந்தாக மாறும்.