‘ஃபூஊ!! ஃபூஊ!’ அன்னா மணி தனது பிறந்தாள் கேக்கிலிருந்த
எட்டு மெழுகுவர்த்திகளையும் ஊதி அணைத்தாள்.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், அன்னா!”
என்று அவளது சகோதரர்களும், சகோதரிகளும் வாழ்த்தினர்.
அன்னாவுக்கு பெரிய குடும்பமும் மலைமீது ஒரு பெரிய வீடும் இருந்தது.
ஆனால் பிறந்தநாளில், அவளுக்கு ஒரேயொரு சிறிய ஆசைதான் இருந்தது.
அன்னா தன் பிறந்தநாள் பரிசைத் திறந்து பார்த்தாள். உள்ளே ஏதோ மின்னிக்கொண்டிருந்தது.
“வைரத் தோடா? அய்யே!”
அவளுக்கு வைரத் தோடுகள் வேண்டாம். அவை விலை மிகுந்ததும் பயனற்றதுமாகும்!
அன்னா உண்மையில் எதற்கு ஆசைப்பட்டாள் தெரியுமா?
புத்தகங்கள், புத்தகங்கள், நிறைய நிறைய புத்தகங்கள்!
”நம் வீட்டில் தான் புத்தகங்கள் பல இருக்கின்றனவே!”
என்றார் அவள் அண்ணன். ஆனால் அன்னா அவற்றை ஏற்கனவே படித்து முடித்திருந்தாள்.
”நூலகத்தில் தான் பல புத்தகங்கள் இருக்கின்றனவே!”
சுட்டிக் காட்டினார் தாத்தா. ஆனால் அன்னா அவற்றையும் படித்து முடித்திருந்தாள்!
தன் அறையை நோக்கி நடைபோட்டாள்.
“ம்ம்ம்ம், ப்ச்!”
பின்னர், யாரோ அன்னாவின் அறைக்கதவை தட்டும் சத்தம் கேட்டது. ஆனால் வெளியே யாருமில்லை!
பதிலாக, அவள் அறைவாசலில் ஒரு பெரிய பெட்டி இருந்தது.
”இதுவும் நகைகளாக இருந்துவிடக் கூடாது!” என்று சத்தமாகச் சொன்னாள். அவை நகைகளல்ல. புத்தம்புதிய தகவல் களஞ்சியப்
புத்தகங்கள்!
”நிறையப் புத்தகங்கள். ஹைய்யா!” அன்னா வீட்டைச் சுற்றி ஓடி எல்லோரையும் கட்டிக்கொண்டாள்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர், பற்பல புத்தகங்கள் படித்த காலமும் கடந்த பிறகு,
அன்னாவுக்கு ஒரு பிரபல விஞ்ஞானியின் சோதனைக்கூடத்தில் வேலை கிடைத்தது.
”இங்கே நான் என்ன செய்யவேண்டும்?” என்று அன்னா கேட்டார்.
அந்த விஞ்ஞானி ஒரு பெட்டியைக் காட்டினார்.
அதனுள்ளே என்ன இருந்தது தெரியுமா?
”வைரங்களா? அய்யே!” என்றார் அன்னா.
ஆனால், இம்முறை வைரங்கள் அணிந்துகொள்வதற்கு அல்ல. அவை சோதனைகள் செய்வதற்காக!
அந்த விஞ்ஞானி வைரங்கள் எதனால் மின்னுகின்றன என்று அன்னாவைக் கண்டுபிடிக்கச் சொன்னார். எனவே அன்னா வைரங்களைப் பற்றிய புத்தகங்களைப் படித்தார்.
புத்தகங்கள், புத்தகங்கள், மேலும் நிறைய புத்தகங்கள்!
விஞ்ஞானியாக இருப்பது உன்னதமானது! அவர் விரும்பிய எதையும் படிக்க முடிந்தது.
அன்னாவுக்கு மின்னும் பொருட்கள் பிடித்தே இருந்தன.
வைரத்தைவிட பளீரென்று மின்னக்கூடியது எது?
சூரியன்! எனவே, சூரியன், சூரிய ஒளி, வானிலை பற்றிய புத்தகங்களைப் படித்தார் அன்னா .
புத்தகங்கள், புத்தகங்கள், மேலும் நிறைய புத்தகங்கள்!
அன்னா நூற்றுக்கணக்கான சோதனைகளைச் செய்தார்.
ஒரு இடத்தின் வானிலையை அளக்கக்கூடிய பல கருவிகளை உருவாக்கினார்.
மும்பையில் எவ்வளவு வெயிலடிக்கிறது?
அதை அளப்பதற்கு அன்னா ஒரு கருவியை உருவாக்கினார்.
சென்னையில் எவ்வளவு காற்றடிக்கிறது?
அன்னா, அதற்கும் ஒரு கருவியை உருவாக்கினார்.
அவருடைய விருப்பமான கருவியை உருவாக்கப்
பல மாதங்கள் பிடித்தது.
அது 'ஓஸோன் உணரி' (ozonesonde) என்னும் பெயருடைய
ஒரு விசேஷமான பலூன்.
அதில் ஒரு சிறிய இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும்.
அந்த இயந்திரத்தால் காற்றிலுள்ள
ஓஸோன் என்ற வாயுவை அளக்க முடியும்.
ஓஸோன் உணரிகளால் உயரமாகப் பறக்க முடியும்.
அன்னா மணி மொத்தமாக எத்தனை கருவிகளை உருவாக்கினார் என்று யூகிக்க முடிகிறதா?
சுமார் நூறு வானிலைக் கருவிகள்!
இவற்றை உருவாக்குவதற்கென அவர்
சொந்தமாக ஒரு தொழிற்சாலையை வைத்திருந்தார்.
அவரால் எதை வேண்டுமானாலும்
உருவாக்க முடியும் போலிருந்தது!
அன்னா மணி இந்தியாவின் மிக அறிவார்ந்த வானிலை ஆய்வாளர்களில் ஒருவரானார்.
அவருக்கு வயதாகி, பிரபலமான பின்னரும் அவரது
நல்ல நண்பர்களின் கூட்டம்
அவருடன் அப்படியே இருந்தது.
புத்தகங்கள், புத்தகங்கள், மேலும் நிறைய புத்தகங்கள்!
அன்னாவின் வாழ்வும் காலமும்: ஒரு காலவரிசை
23 ஆகஸ்ட், 1918 - அன்னா மணி கேரளாவின் பீர்மேடு என்னும் ஊரில் பிறந்தார்.
1940 - பெங்களூரு சிவி ராமன் சோதனைக்கூடத்தில் பணியாற்ற உதவித்தொகை பெற்றார்.
1945 – வானிலை ஆய்வியல்(meteorology) படிக்க இங்கிலாந்து சென்றார்.
1948 - அங்கிருந்து திரும்பி வந்து பூனாவிலிருக்கும் இந்திய வானிலை ஆய்வியல் துறையில் சேர்ந்தார்.
1962 - ஓஸோன் உணரி திட்டத்தில் பணியாற்றத் தொடங்கினார்.
1976 - இந்திய வானிலை ஆய்வியல் துறையின் துணை டைரக்டர் ஜெனரல் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்.
1980களில் (சரியான வருடம் தெரியவில்லை) - அன்னா தனது கருவிகளை உருவாக்க ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.
16 ஆகஸ்ட் 2001 - அன்னா மணி கேரளாவில் காலமானார்.
அற்புதமான வானிலை வார்த்தைகள்
வானிலை ஆய்வாளர்(Meteorologist - இதை இப்படிச் சொல்லுங்கள் ‘meet-your-all-o-jist) : இவர், ஒரு பிரதேசத்தின் வானிலையையும் தட்பவெட்பத்தையும் ஆராய்ச்சி செய்யும் ஒரு விஞ்ஞானி. அன்னா மணி அவர்கள் தலைசிறந்த வானிலை ஆய்வாளர்களில் ஒருவர்.
ஓஸோன் உணரி(ozonesonde - இதை இப்படிச் சொல்லுங்கள்: “oh-zone-sond’) : இவை வானில் உயரப் பறக்கும் பலூன்கள். இந்த பலூன்களில் காற்றிலிருக்கும் ஓஸோன் வாயுவின் அளவை அளக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஓஸோன் படலம் சூரியனிலிருந்து வரும் தீய கதிர்களை தடுப்பதால் அது மிகவும் இன்றியமையாயது. வானின் உயரத்தில் ஓஸோன் குறைவாக இருந்தால் நமக்கு பிரச்சனை என்று அர்த்தம்!
நீங்கள் விஞ்ஞானியாக முடிந்தால், என்ன படிக்க விரும்புவீர்கள்?
இப்புத்தகத்தைப் பற்றி ஒரு குறிப்பு
இந்தக்கதை விஞ்ஞானி அன்னா மணி அவர்களின்
உண்மை வாழ்க்கையைத் தழுவி புனையப்பட்டது.