vowaal pipsqueak kaetta ethiroligal

வெளவால் பிப்ஸ்க்வீக் கேட்ட எதிரொலிகள்

வெளவால் பிப்ஸ்க்வீக் இரவு உணவாக கொசுக்களைச் சாப்பிட விரும்புவான். சில சமயம் நண்பர்களோடு கொசுக்களைப் பிடிக்க போட்டி நடக்கும். அவர்களுக்கு அது எளிய வேடிக்கை! எப்படி அவர்களால் சிறந்த பூச்சி வேட்டையாளர்களாக இருக்க முடிகிறது? ‘எக்கோ லொகேஷன்’ என்கிறார் மருத்துவர் உல்லா. அதைப் பற்றி அவர் பிப்ஸ்க்வீக்கிற்கு விளக்குகிறார். வருகிறீர்களா, கேட்போம்!

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அது ஒரு குளிர் மிகுந்த இரவு. ஆனால் பிப்ஸ்க்வீக் இன்னும் வீட்டிற்குத் திரும்பத் தயாராக இல்லை. அவனது நண்பர்கள் மந்த்ரா மற்றும் பெடோமியுடன் தெரு விளக்குகளைச் சுற்றிப் பறந்து சென்ற போது, அவனது பிரகாசமான கண்கள் ஜொலித்தன. அந்த லேசான மழைத்தூறல், சுற்றிப் பறந்த பூச்சிகளுக்கு, இடைஞ்சலாகத் தோன்றவில்லை.

பூச்சிகளை சாப்பிடும் இளம் வெளவால்களுக்கு இது மிகவும் உதவியாக இருந்தது. பிப்புக்கு இரவு உணவிற்கு கொசுக்களைச் சாப்பிடப் பிடிக்கும். “யம் யம் யம்! எனக்கு இன்னும் ஒன்னு!” என்று அவன் பாடினான். மூன்று நண்பர்களும், ஒரு மணி நேரத்தில் யாரால் அதிக கொசுக்களைச் சாப்பிட முடியும் என்றுபோட்டி வைத்துக்கொண்டிருந்தனர்!

அரைமணி நேர வேட்டைக்குள், பிப்ஸ்க்வீக் நூற்றைம்பது பூச்சிகளைப் பிடித்துத்தின்றுவிட்டிருந்தான். ஆஹா! இது ஒரு நல்ல இரவாக இருக்கப் போகிறது.

திடீரென்று, அவனது காதுகளுக்குள் ஒரு சத்தம் கேட்டது. அவன் தரையை நோக்கி விழத் தொடங்கினான். பெரிய வெளவாலான பெடோமி, அவனது பக்கமாகப் பறந்தாள்.

“என்ன விஷயம், பிப்? நீ நலமாக இருக்கிறாயா?” என்று கேட்டாள்.“இல்லை! என் காது! ஆ!” பிப் சங்கடத்தில் அழுதான். அருகிலிருந்த கிளைக்குச் சுழன்று சென்று, அதில் தலைகீழாகத் தொங்கினான். “ஆ... வலிக்கிறது!”

பிப்ஸ்க்வீக்கின் தாயை அழைத்து வர மந்த்ரா கிளம்பினாள். பெடோமி பிப்பிற்கு ஆறுதலாக பக்கத்தில் இருந்தாள். பிப்ஸ்க்வீக் மிகவும் வித்தியாசமாக உணர்ந்தான். மயக்கமாக இருந்தது. அவனது காதுகள் இழுத்துக் கொண்டன. ஒவ்வொரு இழுப்பும் மிகுந்த வலியைத் தந்தது.

பெடோமி தன் சக்தி வாய்ந்த காதுகளைப் பயன்படுத்தி பிப்ஸ்க்வீக்கின் தாயைத் தேடினாள். பறவைகள், தவளைகள், ஊர்வன மற்றும் காயமடைந்த வெளவால்களைத் தின்னும் லைரா என்னும் வெளவால், மயங்கி விழுந்து விட்ட பிப்பைத் தாக்கக்கூடும் என்று அவள் அஞ்சினாள். ரோமம் மிகுந்த தனது சிறகினால் அவனைப் போர்த்தி மூடினாள்.

விரைவில் மந்த்ரா பிப்பின் அம்மாவுடன் திரும்பினாள். அவர் பிப்பை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.

மருத்துவர் உல்லா அவனது காதுகளைக் கூர்ந்து பார்த்தார். அவர் தலையை ஆட்டிக் கொண்டு, “உன் காதுகள் மிகவும் குளிர்ந்து விட்டன. ‘பிபிஸ்ட்ரெல்’களான நமக்கு மழை நல்லது இல்லை என்பது உனக்குத் தெரியாதா பிப்?” என்றார்.

“அது வெறும் தூறல்தான், மழை ஒன்னுமில்லை...” என்று பிப்ஸ்க்வீக் முணுமுணுத்தான்.

மருத்துவர் அவனது வாயில் வலிக்கான சில மாத்திரைகளைப் போட்டார். பின்னர் அவர் ஒரு விளக்கப்படத்தை வெளியே எடுத்தார்.

“நமது காதுகள் நமக்கு மிகவும் முக்கியம், பிப்ஸ்க்வீக்! உணவிருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க நாம் எதிரொலியை திசைகாட்டியாகப் பயன்படுத்துகிறோம். அப்படி என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா?”

பிப் இல்லையெனத் தலையை அசைத்தான். அதற்குள் வலி கொஞ்சம் குறைந்து விட்டிருந்ததை அவன் உணர்ந்தான்.

“பூச்சி தின்னும் வெளவால்களான நாம் மூக்கு வழியாக சமிக்கைகளை அனுப்புகிறோம். இந்த சமிக்கைகள் பொருட்கள் மீது பட்டுத் திரும்பி எதிரொலியாகிறது. அந்த எதிரொலிகள் திரும்பி வந்து அந்தப் பொருள் என்ன என்பதை நமக்குத் தெரிவிக்கிறது” என்று தொடர்ந்து சொன்னார் மருத்துவர்.

“ஓ, ஆமாம்! இந்த எதிரொலிகள் வெவ்வேறு விதமானவை. அவை ஒரு பூச்சி இருப்பதைக் காட்டினால், அதைப் பிடித்து நாம் சாப்பிடுவோம். ஆனால் எதிரொலிகள் ஒரு மரம் அல்லது ஒரு சுவர் என்று காட்டினால், அதை நோக்கிப் பறக்க மாட்டோம்” என்று பிப் உற்சாகமாகக் கூறினான்.

“நம் காதுகள் ‘ரேடார்’களைப் போல இருக்கிறது என்று சொல்கிறார் அம்மா!” என்று சந்தோஷமாகச் சொன்னான் பிப்ஸ்க்வீக். அவனுக்கு இப்போது வலிக்கவில்லை. மேலும் அந்தச் சிறிய பாடத்தை அவன் விரும்பினான்.

“ஆமாம். மனிதர்கள் ‘ரேடார்’களை விமான நிலையங்களிலும், கப்பல்களிலும், நீர்மூழ்கி கப்பல்களிலும் பொருட்களைக் கண்டுபிடிக்க பயன்படுத்துகிறார்கள். நாம் உணவைக் கண்டுபிடிப்பதற்கு நம் உணர்வுகளைப் பயன்படுத்துகிறோம். நமது மூக்கும், காதுகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதால் நாம் நம் கண்களை அதிகமாகப் பயன்படுத்தத் தேவையில்லை. அதனால்தான் நமக்கு இத்தனைச் சிறிய கண்கள் உள்ளன. இது உனக்குத் தெரியுமே!” என்றார் மருத்துவர்.

“ஓ! இதனால்தானா மனிதர்களை நாம் நெருங்கிச் செல்லும்போது அவர்கள் கூச்சலிடுகிறார்கள். அவர்கள் நம்மைக் குருடர்கள் என்றும், அதனால் நாம் அவர்களின் தலைமுடியில் சிக்கிக் கொள்வோம் என்றும் நினைக்கிறார்கள் போலும்! ஹஹ்ஹா! நன்றி, டாக்டர்” என்று சிரித்தான் பிப்.

“நல்லது, பிப். ஞாபகம் வைத்துக் கொள்! இன்றைய வேட்டை போதும்! இனி நாளைக்கு உன் கொசுவேட்டைச் சாதனைகளைச் செய்யலாம்” என்று சிரித்தார் மருத்துவர் உல்லா.

பிப்ஸ்க்வீக் மற்றும் மந்த்ரா

பிப்ஸ்க்வீக்கும் மந்த்ராவும் மிகச் சிறிய வெளவால்கள். அவைகளின் அறிவியல் பெயர்கள் முறையே ‘பிபிஸ்ட்ரெல்லஸ் டெனுஈஸ்’ மற்றும் ‘பிபிஸ்ட்ரெல்லஸ் கோரோமந்த்ரா’ ஆகும். இவை கட்டிடங்களின் பிளவுகள், கூரை ஓடுகளின் கீழே, ஜன்னல் தடுப்புகளுக்கு அடியிலே, புகைப்படச் சட்டங்களின் பின்னால் மற்றும் மரத்துளைகளில் என்று மனிதர்களோடு நெருக்கமாக வசிக்கின்றன.

பெடோமி

பெடோமி என்பது இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் உள்ள காடுகளில் காணப்படும் ‘குறைவான ரோமம் கொண்ட குதிரை லாட வெளவால்’ ஆகும். அதன் விஞ்ஞான பெயர் ‘ரைனோலோபஸ் பெட்டோமெய்.’

லைரா

‘மெகாடெர்மா லைரா’ எனப்படும் வௌவால்கள் குடும்பத்தைச் சேர்ந்தது லைரா. இந்த மாமிசப் பட்சிணிகள் ‘ஃபால்ஸ் வாம்பயர் பேட்ஸ்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

மருத்துவர் உல்லா, வௌவால்களின் வர்க்கமான பிபிஸ்ட்ரெல்லஸின் அனைத்து வகைகளையும் குறிக்கும் பிரதிநிதி ஆகும்.

நாம் அவற்றின் குரலைக் கேட்க முடியாது

வெளவால்கள் மனிதர்களால் கேட்க முடியாத சொடுக்கு ஒலிகளை உண்டாக்குபவை. விஞ்ஞானிகள் ஒரு வெளவாலின் உச்ச ஸ்தாயி அழைப்பைக் கேட்க ஒரு உணரும் உபகரணத்தை கணினியில் பயன்படுத்துகின்றனர். வௌவால்கள் உருவாக்கும் ஒலி அலைகள், திடப் பொருட்களின் மேல் பட்டுத்திரும்பி எதிரொலிகளை உருவாக்குகின்றன. பிப்ஸ்க்வீக்கைப் போல, நீர்மூழ்கிக் கப்பல்களின் ராடார்கள் கடலுக்கடியில் பயணிக்க இந்த ‘எக்கோ லொகேஷன்‘ முறையைப் பயன்படுத்துகின்றன.

ஒலியானது காற்றில் பயணிப்பதைவிட கடல் நீரில் நான்கு மடங்கு வேகமாகப் பயணிக்கும். ஆச்சரியம் தரும் வகையில், பார்வை இழந்த சிலர்கூட தங்கள் கேட்கும் உணர்வை மேம்படுத்தித் தங்கள் பாதையைக் கண்டுபிடிக்க‘எக்கோ லொகேஷனை’ உபயோகிக்கிறார்கள்.

நமக்கு நம் வெளவால்கள் தேவை பறக்கும் பாலூட்டிகள் வெளவால்கள் மட்டுமே. மொத்தம் 1,116 வௌவால் இனங்கள் உள்ளன. அவை அனைத்தும் ‘கிரோப்டெரா’ இனத்தின் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளன. இந்த கிரேக்க மொழி வார்த்தைக்கு ’கை இறக்கை’ என்று பொருள். வெளவால்களில் பூச்சிகள் உண்ணுபவை மற்றும் பழம் உண்பவை என இரு வகைகள் உண்டு.

உலகெங்கிலும் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் வெளவால்கள் காணப்படுகின்றன. பிப் மற்றும் அவனுடைய நண்பர்கள் விளையாடும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் 52 வகை வெளவால்கள் இருப்பதை நாம் அறிவோம். வெளவால்கள் பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு உதவுகின்றன. மேலும், அவை விதைகளைப் பரப்பி மரங்களின் வளர்ப்புக்கும் உதவுகின்றன.

துரதிருஷ்டவசமாக, வெளவால்கள் இனம் அழியும் ஆபத்தில் உள்ளது. மக்கள் அவைகளை பூச்சிகள் என்று தவறாக நம்புவதே இதற்குக் காரணம். விஞ்ஞானிகள் ‘சிவப்பு மதிப்பீட்டு பட்டியலை’ உருவாக்கி, அதன் மூலம் எந்த விலங்குகள் அழியும் அபாய நிலையில் உள்ளன என்றும், அவற்றை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்றும் உணர்த்துகிறார்கள்.

1. ரைனோலோபஸ் பெட்டோமி - புகைப்பட உதவி: டாக்டர் சஞ்சய் மொலூர் 2. பிபிஸ்ட்ரெல்லஸ் கோரோமந்த்ரா - புகைப்பட உதவி: டாக்டர் மைக் ஜோர்டன் 3. மெகோடெர்மா லைரா - புகைப்பட உதவி: பார்கவி ஸ்ரீனிவாசலு 4. பிபிஸ்ட்ரெல்லஸ் கோரோமந்த்ரா - புகைப்பட உதவி: ஆதித்யா சீனிவாசலு.