we are numbers

நாங்கள் எண்கள்

இது எண்கள் பேசும் கதை. ஒன்றில் இருந்து ஒன்பது வரை உள்ள எண்கள் யார் பெரியவன் என்று உரையாடுகின்றன. பூஜ்ஜியத்தின் மதிப்பை அறியாமல்.

- அகரன்

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு நாள் ராஜு தூங்கும் பொழுது கனவு கண்டான்.

கனவில் அன்று அவன் கணித வகுப்பில் கற்ற எண்கள் வந்தன.

அந்த எண்கள் ஒன்றுக்கொன்று பேசிக்கொண்டன. அவைகளுக்குள் யார் பெரியவன் என்ற போட்டி உண்டானது.

அப்பொழுது ஒன்றாம் எண் கூறியது  “பூமியும் ஒன்றே.

நிலாவும் ஒன்றே. எனவே நான்தான் பெரியவன்” என்று!

பின்பு இரண்டாம் எண் “ மனிதனுக்கு கண்கள் இரண்டு.

காதுகள் இரண்டு. எனவே நான்தான் பெரியவன்” என்றது.

மூன்று “ தமிழ் மூன்று வகைப்படும்,  வேந்தர்கள் மூவர்.

எனவே நானே பெரியவன்.” என்று கூறியது.

இதைகேட்ட நான்கு “ இல்லை மூன்றே, இந்த உலகில்

திசைகள் நான்கு, வேதங்கள் நான்கு. எனவே நானே மிகப் பெரியவன்” என்றது.

உடனே ஐந்து “ உங்கள் நால்வரை விட நானே பெரியவன். ஏனெனில் நிலங்கள் ஐந்து மற்றும் பூதங்கள் ஐந்து” என்றது.

ஆறு ஐந்தை பார்த்து “ஐந்து அவர்களே, அறுசுவை இல்லாமல் யாரும் இருக்க முடியாது.” எனவே நானே பெரியவன் என்றது.

“இவ்வுலகமே ஏழு கண்டங்களால் ஆனது. இசையில் ஏழு ஸ்வரங்கள் உள்ளது. அதனால் நானே அனைவைரையும் விட பெரியவன்.” என்றது ஏழாம் எண் .

எட்டாம் எண் நானும் சளைத்தவன் இல்லையென “எட்டு தொகை போன்ற ஒரு நூல் கிடைக்குமா? எனவே நானே பெரியவன்.” என்றது.

“கோள்கள் ஒன்பது, தானியங்கள் ஒன்பது. எண் மதிப்பிலும் உங்கள் எல்லாரையும் விட நான் அதிகம் என்பதால்,”  நானே அனைவரை விட மிகப்பெரியவன் என்றது ஒன்பதாம் எண். பூஜ்ஜியம் மட்டும் அமைதியாக இருந்தது. மற்ற எண்கள் பூஜ்ஜியதிடம் அதன் மதிப்பை கூற சொன்னன.

பூஜ்ஜியம் அமைதியாக பதிலளித்தது. “நண்பர்களே எனக்கு எந்த மதிப்புமில்லை. ஆனால் நான் உங்களுடன் சேர்ந்தால்தான் உங்கள் மதிப்பு பலமடங்கு உயரும்” என்றது. இதைக்கேட்ட மற்ற எண்களும் சற்று யோசித்து விட்டு “ஆமாம்” என்றது. "எனவே நான் இல்லாமல் உங்களுக்கு மதிப்பு இல்லை."

"எனவே நான்தான் பெரியவன்." என்றது. மற்ற எண்களும் பூஜ்ஜியத்தை அனைவரையும் விட பெரிய எண்ணாக ஆமோதித்தன.  ராஜுவிற்கு விழிப்பு வந்தது. தன் அப்பாவிடம் கனவில் வந்த பூஜ்ஜியத்தை பற்றி கூறினான்.  அவன் அப்பாவும் “ஆம், பூஜ்ஜியமே பெரிய எண்" என்றார்.

“ராஜு, எப்படி புஜ்ஜியத்திற்க்கு மதிப்பு இல்லையென்றாலும், அது பிற எண்களோடு சேரும்பொழுது அதன் மதிப்பு உயருகிறதோ, அதேபோல நாமும் பிறரோடு சேர்ந்து ஒற்றுமையோடும், அன்போடும் வாழும் பொழுது நமது மதிப்பு உயரும்.” என்றார்.

ராஜுவும் அவர் தந்தை கூறியபடியே நண்பர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து, வாழ்விலும் உயர்ந்து கணக்கிலும் நூற்றுக்குநூறு வாங்கினான்!

-நன்றி.