what happened to juno

ஜூனோவுக்கு என்ன ஆச்சு !

வித்யாவிற்கு பரிசாக நாய்க்குட்டியை அவள் பெற்றோர் கொடுத்தனர். பெயர் ஜூனோ. வித்யா அன்பாக ஜூனோவைப் பார்த்துக் கொண்டாள். ஒரு நாள், அதனால் குரைக்க முடியவில்லை. ஏன் என்று பார்ப்போமா!

- Vanathi Devi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

வித்யாவுக்கு 10வது பிறந்த நாள் அன்று. அவள் பெற்றோர்,  அழகான கருப்பு ஆண் நாய்க்குட்டியை பரிசளித்தனர்.

அதற்க்கு ஜூனோ என்று பெயரிட்டனர். வித்யா மகிழ்ச்சியில் குதித்தாள். ஜூனோ தான் அவளுக்கு இப்போ எல்லாமே!

அவள் பள்ளி திரும்பி வரும் வரை ஜூனோ வீட்டின் முன்புறம் தான் உட்கார்ந்து இருக்கும். வித்யா வந்ததும், துள்ளிக் குதித்து ஓடி வரும். ஆசையாக வந்து அவளிடம் ஒட்டிக் கொள்ளும்.

ஒரு நாள், ஜூனோ எதையோ வாயில் வைத்து இழுத்துக் கொண்டிருந்தது. என்ன என்று பார்த்தாள் வித்யா. அது ஒரு பிளாஸ்டிக் பை. வேகமாக சென்று, அதை வாங்கினாள்.

அம்மாவிடம் சென்று சொன்னாள். அவள் அம்மா, "அது எப்படி ஜூனோவிடம் சென்றது" என்று கேட்டார்.

வித்யா, "தெரியவில்லை! நீங்களும் பிளாஸ்டிக் பை இனிமேல் உபயோகப்படுத்தாதீர்கள்" என்று சொன்னாள்.

சரி, அவசரத்திற்காக சில பைகளை எடுத்து வைத்திருக்கிறேன். அதை குப்பையில் போட்டுவிடலாம் என்று அம்மா சொன்னார்.

மறுநாள், வித்யாவை அழைத்துக் கொண்டு கோவில் சென்று இருந்தனர். திரும்பி வந்ததும், ஜூனோ ஓடி வராமல் அமைதியாகப் படுத்திருந்தது. வித்யா வந்து ஜூனோவை அழைத்தாள். அது எழுந்திருக்கவில்லை.

அப்பா, அம்மா தூங்குகிறது என்று சொன்னார்கள்.

வித்யா ஜூனோவைத் தூக்கி மடியில் படுக்க வைத்தாள். அது ரொம்ப கஷ்டப்பட்டு, குரைக்க முயற்ச்சி செய்தது. வித்யா அழ ஆரம்பித்தாள்.

அப்போது, அம்மா பக்கத்தில் இருந்த குப்பை போடும் டப்பா கீழே விழுந்திருப்பதைப் பார்த்தார். அதில், வித்யா சொன்னதால் வீட்டில் இருந்த அனைத்து பிளாஸ்டிக் பைகளையும் எடுத்துக் கட்டி வைத்திருந்தார். அதில் இருந்த பிளாஸ்டிக் பைகள் இரைந்து கிடந்தன.

அம்மாவிற்கு புரிந்துவிட்டது. உடனே, மருத்துவமனை  சென்றனர்.

மருத்துவர், அறுவை சிகிச்சை செய்து பிளாஸ்டிக் பையை ஜூனோ வாயிலிருந்து வெளியே எடுத்தார்.

ஜூனோ நன்றாக குணமடைந்து வர, பல வாரங்கள் ஆனது. வித்யா நல்ல படியாக அதைப் பார்த்துக் கொண்டாள்.

வித்யா தன் பெற்றோரிடம், “ஜூனோவை நாம் காப்பாற்றிவிட்டோம். ஆனால், வீதியில் இருக்கும் பைகளால் எத்தனை விலங்குகள் கஷ்டப்படும்!” என்று வருத்தப்பட்டாள்.

அப்பா சொன்னார். “ நாம் துணிப்பையை உபயோகப்படுத்த வேண்டும். முடிந்தவரை கண்ணில் படும் பிளைஸ்டிக் பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் போட வேண்டும். நீ இதை உன் தோழிகளுக்கும் சொல்லலாம்.”

வித்யா கண்டிப்பாக செய்வேன்  என்று சொன்னாள்.