அப்பா, ஒரு விளம்பரப் பலகை ஓவியர். வீடு முழுக்க சாய டப்பிகள் குவிந்துகிடக்கும். அப்பா வரைவதை பக்கத்தில் உட்கார்ந்து, பார்த்து ரசிப்பேன்.
அன்று அப்பா, ஒரு விளம்பரப் பலகையை எழுதிக் கொண்டிருந்தார்.
''என்னப்பா எழுதுறீங்க?'' என்று கேட்டேன்.
''எழுத்துக் கூட்டி நீயே படிச்சுப் பாரு'' என்றார்.
அப்போது, அவரது கைப்பேசி ஒலிக்க, எங்கோ அவசரமாக புறப்பட்டுச் சென்றார்.
எல்கேஜி படிக்கும் எனக்கு, உயிரெழுத்துகள் மட்டும்தான் தெரியும்.
அதில் ஒன்றுகூட இதில் இல்லை.
அதனால், ஈச்சமாறு குச்சி ஒன்றை ஒடித்தெடுத்து உட்கார்ந்தேன்.
சாய டப்பியைத் திறந்து, குச்சியால் தொட்டு எடுத்தேன். விளம்பரப் பலகையில் இருந்ததைப் பார்த்துப் பார்த்து, இடது கையில் எழுதிக்கொண்டேன்.
அப்போது, வானம் இருட்டிக் கொண்டுவந்தது. வீட்டுக்குள் இருந்து வந்த அம்மா, "மழை வரப்போகுது உள்ளே வா'' என்று சொல்லிவிட்டு, விளம்பரப் பலகையை எடுத்து உள்ளே வைத்தார். நானும் உள்ளே வந்துவிட்டேன்.
வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. ஜன்னலை ஒட்டி ஏதோ முனகல் சத்தம். எட்டிப் பார்த்தேன். அங்கே, ஒரு காலியான சாய டப்பியின் மூடிக்குக் கீழே, விசித்திரமாக ஏதோ மின்னியது. ஆவலோடு அருகில் சென்று பார்த்தேன்.
'தயவுசெஞ்சு என்னைக் கொஞ்சம் தூக்கிவிடேன். மேலே இருந்து தவறி விழுந்துட்டேன். இந்த மூடி, காற்றில் பறந்துவந்து மேலே விழுந்துவிட்டது' என்ற அது, பல வண்ணங்களில் இருந்தது.
மூடியை எடுத்த நான், ''நீ யாரு, உன் பேர் என்ன?'' என்று கேட்டேன்.
''என்னோட பேரை, உன் கையில எழுதி இருக்கே. நான்தான் வானவில்'' என்று சொல்லிவிட்டு, சிரிப்புடன் மேலே சென்றுவிட்டது.
வீடு திரும்பிய அப்பாவை வாசலிலேயே நிறுத்தி, ''அப்பா, அந்தப் பலகையில் எழுதி இருக்கிறது 'வானவில்''' என்றேன். ''அட! சரியா சொல்லிட்டியே எப்படி?'' என ஆச்சர்யமும் சந்தோஷமுமாக, அப்பா என்னை தூக்கிக்கொண்டார்.
ஆகாயத்தில் இருந்த வானவில் சிரித்தது.