who won the competition

போட்டியில் வென்றது யார் ???

கோடை விடுமுறையைக் கொண்டாட கிராமத்தில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு சென்றனர் நிலாவும் கலாவும். அங்கு இருவருக்கும் அவர்களின் தாத்தாக்கள் ஒரு போட்டி வைக்கின்றனர். இருவரில் யார் போட்டியில் வென்றது? கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்! இந்த போட்டியில் நீங்களும் கலந்து கொள்ளலாம் நண்பர்களே!

- Revathi Siva

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

கோடை விடுமுறையைக் கொண்டாட கிராமத்தில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு சென்றனர் நிலாவும் கலாவும்.

இருவரும் நல்ல தோழிகள். இவர்களைப் போன்றே இவர்களின் தாத்தாக்களும் நீண்டநாள் தோழர்கள்.

ஒருநாள் இருவரையும் அழைத்த  அவர்கள், “நிலா,கலா உங்கள் இருவருக்கும் ஒரு போட்டி வைக்க போறோம், இதில் யார் வெற்றி பெருகிறீர்களோ? அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு உண்டு “ என்றுகூறினர்.

அதைக் கேட்ட , நிலாவும் கலாவும் ஹெஹேய்.... என்று கூச்சலிட்டு மகிழ்ந்தனர். இருவரும் அவர்களிடம் சரி என்று கூறினர்.

இருதாத்தாக்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொன்டே,போட்டியின் விதிமுறைகள் மற்றும் போட்டி குறித்து கூறஆரம்பித்தனர்.“இருவரையும்  ஒருத்தர் மற்றவரை பார்க்கமுடியாதபடி,ஆளுக்கு ஒரு தோட்டத்தில் விட்டுவிடுவோம். கேள்விகள் கொண்ட பேப்பர்ஒன்றை , தனித்தனியாக உங்ககிட்ட நாங்ககொடுப்போம். அதில் இருப்பதை யார் முதலில் முடித்து, விடையைக் கையோடு கொண்டு வரீங்களோ? அவங்களுக்குத்தான் பரிசு! என்ன, இரண்டுபேரும் தயாரா?”என்றுகேட்க, இருவரும் ஆர்வம் கலந்த புன்னகையோடு தலையாட்டினர்.

பேப்பர் இருவரிடமும் கொடுக்கப்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறி பிரிந்து சென்றனர்.

நிலா முதலில் தன் கையில் உள்ள தாளைப் பிரித்தாள். முதல் கேள்வி,

“ பார்க்கபார்க்ககவரும்நிறம்எனக்குண்டு

பருத்துபோனால்பட்டணம்போகமாட்டேன்

தலையில்கிரீடம்உண்டு

ஆனால்அரசன்அல்ல – நான் யார்?”

நிலாவைப் போலவே கலாவும் பிரிக்க, அதில் இருந்த முதல் கேள்வி இதுதான்,   “ வெண்பிஞ்சு விரலுக்கு சொந்தக்காரி

பசுமை நிறத்துக்கு சொந்தக்காரி

ஒல்லியாய் இருக்கும்வரை ஊர் போற்றும்     மாகராணி      –   நான் யார்?”

இருவரும் யோசித்தனர்!..

ஒன்றும் புரியாததால், அடுத்த கேள்வியைப் பார்ப்போம்! என்று இருவரும் மீண்டும் அதில் இருப்பதைப் படிக்க ஆரம்பித்தனர்.இரண்டாவதுகேள்வி,

நிலா,

“மூக்குக்கும் எனக்கும் சம்பந்தம் உண்டு

மழை இல்லையென்றாலும்

குடையுண்டு என் பெயரில்- நான் யார் ?”கலா,

“ வெயிலுக்கு ஏற்றவன்

அழகுக்கும் வேண்டியவன்

நீர் கொண்டவன் ஆனால்

பெயரில் நீர் இல்லை – நான் யார் ?”

மீதம் உள்ள கடைசிக் கேள்வியையும் பார்த்துவிடலாம் என்கிற முடிவுடன், அதையும் படித்தனர்.

நிலா,

“ மூன்று பேரில் முதலானவன்

மூன்று சுவைகளும் கொண்டவன்

சிறியவர் முதல் பெரியவர் வரை

அனைவரும் விரும்புவர் என்னை- நான் யார்”

கலா,

“சிவப்பு நிறத்துக்கு சொந்தக்காரி

அடங்காமல் ஆட்டம் போட்டால்

நசுங்கிப்போகும் விந்தைக்காரி– நான் யார்”

இருவரும் புதிர்களின் பதில்களைத் தேடி சென்றனர்.

நிலா,  அந்ததோட்டத்தில் உலவியப்படியே , புதிர்களின் விடைகளாக கத்தரிக்காய், குடைமிளகாய் மற்றும் வாழைப்பழத்தைக் கையோடு கொண்டு சென்றாள். அவள் சென்ற பின், சிறிது நேரம் கழித்தே, அவ்விடத்திற்கு கலாவும் வந்துசேர்ந்தாள்.

இருவரின் பதில்களையும் பார்த்த தாத்தாக்கள் , கலா வென்றதாக கூறினர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதைக் கண்டு, சிரித்தபடியே அவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

“ உங்க  இரண்டு பேரில் நிலா முதலாவதாக வந்தாலும், அவளின் ஒரு பதில் தவறாக உள்ளதால், தாமதமாக வந்தாலும் அனைத்து பதில்களும் சரியாக உள்ளதால், இப்போட்டியில் வென்றது கலா. உங்களின் முயற்சியைப் பாராட்டி, இருவருக்கும் இந்த பூச்செடியைப் பரிசாகத் தருகிறோம்.”

சரி, இப்போது கேள்வி பதில்களின் விளக்கம் பார்க்கலாம்!

“முதலில் நிலாவுடையது, பார்க்க கவரும் ஊதா நிறம் கொண்ட தலையில் தொப்பிப் போன்ற காம்பைக் கொண்டது கத்தரிக்காய். இந்த காய் முத்தினால் கடையில் யாரும் வாங்கமாட்டார்கள்.இரண்டாவது, மூக்குக்கு சம்பந்தம் கொண்ட, பெயரில் மட்டும் குடை உடையது குடைமிளகாய். மிளகாய் போன்று மூக்கு சிவந்துள்ளது! என்று கூறும் வழக்கம் நம்மிடையே உள்ளது.

மூன்றாவது, முக்கனிகளில் (மா, பலா, வாழை) முதன்மையானது மா. பிஞ்சாக இருக்கும் போது துவர்ப்பும், காயாக இருக்கும்போது புளிப்பும், பழமாக இருக்கும் போது இனிப்பும் என்று மூன்று சுவைகளும் கொண்டது.மாங்கனியை அனைவரும் விரும்புவர்.

இப்பொழுது கலாவுடையது,

பச்சை நிறம் கொண்ட, பெண்களின் விரலுக்கு ஒப்புமைப்படுத்தப்படுவது வெண்டைக்காய். பிஞ்சாய் இருக்கும் வரை மட்டுமே இதை பயன்படுத்துவர். முற்றினால் குப்பையில் போட்டு விடுவார்கள்.

இரண்டாவது, வெயிலுக்கு மிகவும் ஏற்றது வெள்ளரிக்காய். இது அழகுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதில் நீர் உண்டு ஆனால் பெயரில் நீர் இல்லை. (எ.கா.இளநீர்)

மூன்றாவது, சிவப்பு நிறம் கொண்ட தக்காளி, சிறிதாக ஆடிக் கீழே விழுந்தாலும் நசுங்கிவிடும்! ஏனெனில் நீர்தன்மை அதிகம் கொண்டதால் எளிதில் அழுகிவிடும்.”

இருவரும்நன்றாகஅறிந்துகொண்டனர்.

நிலாவும் தன்னுடைய தவறைத் தெரிந்து கொண்டாள். தோழிகள் இருவரும் செடிநடுவதற்கு மகிழ்ச்சியோடு சென்றனர்...