yaanaipparavai

யானைப்பறவை

கிராமத்தில் ஒரு குதிரையைக் காணவில்லை. யானைப்பறவைதான் அதைச் சாப்பிட்டிருக்கும் என்று எல்லாரும் நினைக்கிறார்கள், அந்த யானைப்பறவையைக் கொன்றுவிடத் தீர்மானிக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு சிறுமிமட்டும் தைரியமாக அவர்களை எதிர்த்துநிற்கிறாள், 'யானைப்பறவை குதிரையைச் சாப்பிடவில்லை' என்கிறாள். உண்மையில் குதிரை எங்கே போனது? யானைப்பறவை உயிர் தப்பியதா? தெரிந்துகொள்ள இந்தக் கதையைப் படியுங்கள்.

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரே ஒரு ஊரிலே, ஒரு குதிரை வண்டி இருந்தது.அந்தக் குதிரை வண்டியை இரண்டு குதிரைகள் இழுத்தன. ஒரு குதிரையின் பெயர் வாயு, இன்னொரு குதிரையின் பெயர் துருத்.திடீரென்று ஒருநாள், வாயுவைக் காணவில்லை. அது எங்கே போனது என்று யாருக்கும் தெரியவில்லை.கடைசியாக வாயுவை ஏரிக்கரையில் பார்த்ததாக யாரோ சொன்னார்கள்.வழக்கமாக அந்த ஏரிக்குப் பக்கத்தில்தானே யானைப்பறவை திரிந்துகொண்டிருக்கும்? ஒருவேளை, வாயுவை அந்த யானைப்பறவை சாப்பிட்டிருக்குமோ?அதானியா என்ற அந்தக் கிராமத்தில் வாழ்வோருக்கு யானைப்பறவையைப் பலகாலமாகத் தெரியும். மிகப் பெரிய, ஒற்றைச் சிறகு கொண்ட பறவை அது. நினைத்தால் ஒரு குதிரையை அப்படியே சாப்பிட்டுவிடும். ஆகவே, எல்லாருடைய சந்தேகமும் யானைப்பறவைமீது திரும்பியது.ஆனால், அந்தக் கிராமத்தில் ஒரே ஒரு சிறுமிமட்டும், யானைப்பறவையை நம்பினாள். 'அது வாயுவைச் சாப்பிட்டிருக்காது' என்று நினைத்தாள். அவள் பெயர் முனியா.

அன்றையதேதிக்கு உலகில் வேறு எங்கும் யானைப்பறவைகள் இல்லை. அந்த இனமே அழிந்துவிட்டது என்றுதான் பல நிபுணர்கள் நினைத்தார்கள்.ஆனால், அவர்களுக்குத் தெரியாத விஷயம், ஒரே ஒரு யானைப்பறவைமட்டும் இன்னும் உயிரோடுதான் இருந்தது. அதானியா கிராமத்திற்கருகிலுள்ள காட்டில் அது வாழ்ந்துவந்தது!அந்த யானைப்பறவையின் சிறகுகள் பெரும்பாலும் உதிர்ந்துவிட்டன, ஒரே ஒரு சிறகுமட்டும் மீதமிருந்தது.கிராமவாசிகள் யானைப்பறவையிடமிருந்து ஒதுங்கியே வாழ்ந்தார்கள். அதுவும் அவர்களை நெருங்குவதில்லை.ஆனால், முனியாவுக்குமட்டும் தைரியம் அதிகம். அவ்வப்போது காட்டுக்குள் சென்று யானைப்பறவையை ஒளிந்திருந்து பார்ப்பாள்.

பகல்நேரமானால், யானைப்பறவை ஏரிக்கரைக்கு வந்துவிடும். சிறிதுநேரம் சூரியவெளிச்சத்தில் விளையாடும், அதன்பிறகு, ஏரியில் தண்ணீரை அங்குமிங்கும் தெளித்தபடி குளிக்கும்.சில நேரங்களில், ஏரிக்குள்ளிருந்தபடி யானைப்பறவை தலையைமட்டும் நீட்டிப்பார்க்கும், மற்ற நேரங்களில் அது எங்கே இருக்கிறது என்றே தெரியாதபடி காட்டுக்குள் எங்கோ காணாமல் போய்விடும்.அந்த யானைப்பறவை மிகவும் உயரமானது, நீளமான, உறுதியான கழுத்து, மரங்களையெல்லாம் எளிதில் எட்டிப்பிடித்துவிடும், பெரிய கால்கள், அவற்றின் முனையில் கூரான நகங்கள், கனமான, ஈட்டிபோல் கூரான தலை, பயமுறுத்தும் தோற்றம்.

ஆனால், முனியாவுக்கு அதைப்பார்த்துப் பயம்வரவில்லை. அது கொஞ்சம் கூச்சமான பறவைதான் என்பதை அவள் கண்டுகொண்டாள்.அந்த யானைப்பறவை எப்போதும் இலைகளைதான் தின்னும். ஆகவே, அதுவொரு தாவர உண்ணி என்று முனியா கண்டுபிடித்துவிட்டாள். ஆகவே, அதைக்கண்டு அவள் அஞ்சுவதில்லை.முனியாவுக்கும் அந்த யானைப்பறவைக்கும் ஓர் ஒற்றுமை உண்டு: யானைப்பறவையால் பறக்கமுடியாது, முனியாவால் ஓடமுடியாது!கிராமத்திலிருந்த மற்ற பிள்ளைகளெல்லாம், முனியா தத்தித்தத்தி நடப்பதைக் கேலி செய்வார்கள், அவளைத் தங்களுடைய விளையாட்டில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். ஆகவே, அவள் தனியாக விளையாடப்பழகிவிட்டாள்.

தினந்தோறும், முனியா தன் தாய்க்கு உதவியாகப் பல வேலைகளைச் செய்வாள், கிராமக்கிணற்றிலிருந்து மூன்று குடம் தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பாள், அவருடைய சமையலுக்காக விறகுகளைச் சேகரித்துக்கொடுப்பாள்.அதன்பிறகு, அவள் எங்கோ ஓடிச்சென்றுவிடுவாள், நெடுநேரம் கழித்துதான் திரும்பிவருவாள்.முனியா மற்ற பிள்ளைகளுடன் விளையாடுகிறாள் என்று அவளுடைய தாய் நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் உண்மையில், அவள் காட்டுக்குள் சென்று யானைப்பறவையைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஒருநாள், முனியா அந்த யானைப்பறவையிடம் பேச விரும்பினாள். ஒளிந்திருந்த இடத்தைவிட்டுத் தைரியமாக வெளியே வந்தாள்.யானைப்பறவை அவளைப்பார்த்தது. ஆனால், ஆர்வமில்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டது.முனியா அந்த யானைப்பறவையையே ஆவலுடன் பார்த்தாள். தான் இருப்பதை அதற்கு உணர்த்துவதுபோல் தரையில் காலால் உதைத்தாள்.திடீரென்று, யானைப்பறவை தன் காலைத் தூக்கியது. பயத்தில் அலறிய முனியா ஆற்றுக்குள் விழுந்துவிட்டாள்.சிறிதுநேரம்கழித்து, அவள் எப்படியோ தட்டுத்தடுமாறிக் கரைக்குவந்தாள், அவளுடைய உடலெல்லாம் நனைந்துபோயிருந்தது, குளிரில் நடுங்கினாள் அவள்.இதைப்பார்த்த யானைப்பறவை, விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தது.

இதனால், முனியாவுக்குக் கோபம் வந்தது, 'என்னைப்பார்த்துச் சிரிக்கிறாயா?' என்று கேட்டபடி அங்கிருந்து செல்ல முயன்றாள்.அப்போது, பொத்தென்று அவள்மீது ஒரு பழம் வந்து விழுந்தது. அதை அந்த யானைப்பறவைதான் தூக்கி எறிந்திருந்தது.உடனே, முனியா அந்தப் பழத்தை எடுத்து யானைப்பறவையின்மீது எறிந்தாள். அது தன்னுடைய அலகுகளால் அதைக் கச்சிதமாகப் பிடித்தது.இப்படியாக, அவர்கள் பழத்தைக்கொண்டு பந்து விளையாடினார்கள், அதன்மூலம், இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டார்கள்.இத்தனைநாளாக, முனியாவுக்கு நண்பர்களே இல்லை. இப்போதுதான் முதன்முறையாக ஒரு நண்பன் கிடைத்திருக்கிறான்.இந்த நிலைமையில், திடீரென்று வாயுவைக் காணவில்லை. எல்லாரும் 'யானைப்பறவைதான் வாயுவைச் சாப்பிட்டிருக்கும்' என்று சந்தேகப்பட்டார்கள்.

கிராமவாசிகள் வாயுவை எல்லா இடங்களிலும் தேடினார்கள், கிடைக்கவில்லை.ஆகவே, அவர்கள் ஒரு பழைய ஆலமரத்துக்குக்கீழே கூடினார்கள். 'யார் வாயுவைத் திருடியிருப்பார்கள்?' என்று பேசினார்கள்.'நம் கிராமத்தில் திருடர்கள் யாரும் கிடையாது' என்றார் ஒருவர், 'இங்கே எல்லாரும் நல்லவர்கள்தான்!''ஏரியைநோக்கி வாயு ஓடுவதை நான் பார்த்தேன்' என்றார் பால்காரர். 'அதன்பிறகு, வாயுவைக் காணவில்லை. அநேகமாகக் காட்டுக்குள் உள்ள ஏதோ ஒரு மிருகம்தான் வாயுவைச் சாப்பிட்டிருக்கவேண்டும்.''வேறு யார்? அந்த யானைப்பறவைதான்!'எல்லாரும் ஒரே குரலில் அதனை ஏற்றுக்கொண்டார்கள். 'ஆமாம், ஆமாம்!''அந்த யானைப்பறவை பார்ப்பதற்கு அப்பாவிபோல் நடித்திருக்கிறது. இன்றைக்கு நேரம்பார்த்து நம் வாயுவைச் சாப்பிட்டுவிட்டது!' என்றார் ஒருவர். 'இனிமேல் அந்தப் பறவையை நாம் விட்டுவைக்கக்கூடாது, உடனடியாக அதைக் கொன்றுவிடவேண்டும்!'

அவர்கள் பேசுவதையெல்லாம் முனியா அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். 'யானைப்பறவை வாயுவைச் சாப்பிட்டிருக்காது' என்று அவள் சொல்ல விரும்பினாள். ஆனால், அவளுக்குப் பயம், ஆகவே, மௌனமாக இருந்துவிட்டாள்.ஒருவேளை அவள் பேசினாலும், யார் அவளை நம்புவார்கள்?'அந்த யானைப்பறவையை விட்டுவைத்தால் நம் ஊருக்கே ஆபத்து' என்றார் முனியாவின் தந்தை, 'இன்றைக்குக் குதிரையைச் சாப்பிடும் யானைப்பறவை, நாளைக்கு நம் குழந்தைகளைச் சாப்பிடாது என்று என்ன நிச்சயம்?'கிராமவாசிகள் எல்லாரும் ஆவேசமாகக் கத்தினார்கள், 'ஆமாம், ஆமாம், நாம் அந்தப் பறவையைக் கொல்லவேண்டும்!''அது ஒரு பிரமாண்டமான பறவையாக இருக்கலாம். ஆனால், நாம் எல்லாரும் சேர்ந்து தாக்கினால், அதைக் கொன்றுவிடலாம்' என்றார் கிராமத்தலைவர்.

'அருமை' என்று கிராமவாசிகள் ஒரே குரலில் கத்தினார்கள், 'அந்த யானைப்பறவையைக் கொல்வதுதான் சரி!'அப்போது, முனியா எழுந்து நின்று பேசத்தொடங்கினாள், 'எல்லாருக்கும் வணக்கம், நான் சொல்வதைக்கேட்டுக் கோபித்துக்கொள்ளாதீர்கள், யானைப்பறவை வாயுவைச் சாப்பிடவில்லை! எனக்கு அது நிச்சயமாகத் தெரியும்.'அங்கிருந்த எல்லாரும் முனியாவை வினோதமாகப் பார்த்தார்கள், 'பெரியவங்க பேசிகிட்டிருக்கும்போது உனக்கு என்ன இங்கே வேலை? போய் விளையாடு!' என்றார்கள்.'வாயு காணாமல்போனபோது, நான் யானைப்பறவையோடுதான் இருந்தேன். அது வாயுவைச் சாப்பிடவில்லை', மென்மையாக, ஆனால் உறுதியாகச் சொன்னாள் முனியா, 'யானைப்பறவை என்னுடைய சிநேகிதன், அது இலைகளைதான் சாப்பிடும், விலங்குகளை, மனிதர்களைச் சாப்பிடாது!'முனியா இப்படிச் சொன்னதும், 'இவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது' என்றார்கள் சிலர். மற்ற குழந்தைகள் அவளைப்பார்த்துச் சிரித்தார்கள்.ஆனால், யார் என்ன சொன்னாலும் முனியா அந்த இடத்தைவிட்டு நகரவில்லை, 'யானைப்பறவை வாயுவைச் சாப்பிடவில்லை' என்று திரும்பத்திரும்பச் சொன்னாள் அவள்.

'முனியா, உனக்குத்தெரியாத விஷயங்களில் தலையை நுழைக்காதே' என்று கோபப்பட்டார் முனியாவின் தந்தை, 'பேசாமல் இங்கிருந்து ஓடிவிடு. எனக்குக் கோபம் வந்தால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது!'அப்போதும், முனியா அழவில்லை, ஓடவில்லை. கிராமவாசிகள் எல்லாரையும் பார்த்தபடி மீண்டும் சொன்னாள், 'அந்த யானைப்பறவை என்னுடைய நண்பன். அது வாயுவைச் சாப்பிடவில்லை.''அவள் கிடக்கிறாள், விடுங்கள்' என்றார் கிராமத்தலைவர், 'நாளை காலை நாம் யானைப்பறவையைக் கொல்கிறோம். அவ்வளவுதான். இப்போது கூட்டம் கலையலாம்!'

இப்போது, முனியாவுக்கு மிகவும் கவலையாகிவிட்டது. ஒரே ராத்திரிக்குள் யானைப்பறவையைக் காப்பாற்றியாகவேண்டும். எப்படி?அன்று இரவு முனியா சாப்பிடக்கூட இல்லை, தொடர்ந்து இதையே யோசித்துக்கொண்டிருந்தாள், 'ஏரியைநோக்கி வாயு ஓடியதைப் பார்த்ததாகப் பால்காரர் சொல்கிறார். ஏரிக்குச் சற்றுமுன்பாக, அந்தப்பாதை பக்கத்துக்கிராமத்தை நோக்கித் திரும்புகிறது. ஒருவேளை, வாயு அந்தப்பக்கம் சென்றிருக்குமோ?'இந்த எண்ணம் தோன்றியதும், முனியாவுக்குள் புதுவேகம் பிறந்தது, ஒரு விளக்கைத் தூக்கிக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே வந்தாள்.

விளக்குவெளிச்சத்தில் முனியா தன் கிராமத்தைத்தாண்டி நடந்தாள், விறுவிறுவென்று பக்கத்துக்கிராமத்தை நோக்கிச் சென்றாள்.திடீரென்று, எங்கிருந்தோ ஆந்தையின் குரல் கேட்டது, நரி ஊளையிடும் சத்தம் கேட்டது, மரங்களின் நிழல்கள் அசைந்தாடிப் பயமுறுத்தின.ஆனால், முனியா எங்கும் நிற்கவில்லை. காட்டில் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கும் யானைப்பறவையை நினைத்தபோது, அவளுக்குத் தைரியம் தானாக வந்தது. எப்படியாவது அதைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்துடன் வேகமாக நடந்தாள்.

மறுநாள் காலை, அவளுடைய கிராமத்தில் எல்லாரும் தடிகள், கூரான கற்கள், நீளமான சமையல் கத்திகளை எடுத்துக்கொண்டார்கள். காட்டை நோக்கி நடந்தார்கள்.அவர்கள் காட்டுக்குள் நுழைந்தபோது, யானைப்பறவை ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. சூரிய வெளிச்சத்தில் அதன் ஒற்றைச்சிறகு மின்னியது.கூட்டத்தைப்பார்த்ததும், யானைப்பறவை எழுந்து நின்றது. அதன் அளவைப்பார்த்துப் பயந்த கிராமவாசிகள் சற்றுத்தொலைவில் நின்றுவிட்டார்கள்.ஒரு நிமிடம் கழித்து, கிராமத்தலைவர் பேசினார், 'எல்லாரும் தயாராகுங்கள்'.உடனே, கூட்டத்தினர் ஆவேசமாக உறுமினார்கள், யானைப்பறவைமீது ஆயுதங்களை வீசத் தயாரானார்கள்.

'நிறுத்துங்கள்!'முனியாவின் குரலைக் கேட்டு எல்லாரும் அதிர்ந்தார்கள். சிரமப்பட்டு நடந்துவந்த அவள், யானைப்பறவைக்கும் கூட்டத்துக்கும் நடுவே நின்றுகொண்டாள். 'உங்களைக் கெஞ்சிக்கேட்கிறேன், என்னுடைய சிநேகிதனைத் தாக்காதீர்கள். அவன் வாயுவைச் சாப்பிடவில்லை.''இந்தப் பெண் எங்கிருந்து வந்தாள்?' கிராமவாசிகள் வியப்போடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.'முனியா' என்று கோபமாகக் கத்தினார் அவளது தந்தை, 'உடனே இங்கே வந்துவிடு! இல்லாவிட்டால்...''அவளைப் பிடியுங்கள்' என்று இன்னொருவர் கத்தினார். அதற்காகச் சிலர் முன்னே வந்தார்கள்.இதைப்பார்த்த யானைப்பறவை இரண்டு அடிகள் முன்னே வந்தது. பயந்துபோன கிராமவாசிகள் அங்கேயே நின்றுவிட்டார்கள்.'வேறுவழியில்லை, யானைப்பறவையோடு அந்தப்பெண்ணையும் தாக்கவேண்டியதுதான்!' என்று கிராமத்தினர் தீர்மானித்தார்கள். மறுபடி ஆயுதங்களைத் தூக்கினார்கள்.

'கொஞ்சம் பொறுங்கள்' என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப்பார்த்தால், ஒரு தாடிக்காரர் நின்றிருந்தார். அவர் பக்கத்தில் ஒரு குதிரை.அந்தக் குதிரை... வாயு!'சாரதி!' என்று ஆச்சர்யத்துடன் கூவினார் கிராமத்தலைவர், 'நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்? வாயுவை எங்கே கண்டுபிடித்தீர்கள்?'

சாரதி சிரித்தார், 'சில வருடங்களுக்குமுன்னால், வாயுவை நான்தான் உங்களுக்கு விற்றேன். நேற்றைக்கு, நான் உங்களுடைய கிராமப்பக்கமாக வந்துகொண்டிருந்தேன். அப்போது, என்னுடைய வண்டியை வாயுவின் சகோதரர்களான ஜப்ருவும் கப்ருவும் இழுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களைப்பார்த்தவுடன், வாயு எங்கள் பின்னாலேயே வந்துவிட்டான்போலிருக்கிறது.''ஆனால், வாயுவை எனக்கு அடையாளம் தெரியவில்லை. இந்தக் குதிரை எங்கிருந்து வந்தது என்று குழம்பிக்கொண்டிருந்தேன்.''அதன்பிறகு, இன்று காலை இந்தப் பெண்ணைச் சந்தித்தேன், ஒவ்வொரு வீடாகச்சென்று காணாமல்போன ஒரு குதிரையைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தாள். அப்போதுதான் எனக்கு விவரம் புரிந்தது. இந்தக் குதிரையை உங்கள் கிராமத்துக்கே அழைத்துவருகிறேன்!'

கிராமவாசிகள் இப்போது அவமானத்தில் தலைகுனிந்தார்கள். 'அடடா, அநாவசியமாக யானைப்பறவைமீது சந்தேகப்பட்டுவிட்டோமே' என்று எண்ணினார்கள்.முனியாவின் தந்தை ஓடிச்சென்று அவளைத் தூக்கிக்கொண்டார். அவள் மகிழ்ச்சியாகச் சிரித்தாள்.அதன்பிறகு, முனியாவை யாரும் கேலிசெய்வதில்லை. எல்லாப்பிள்ளைகளும் அவளோடு நண்பர்களாக இருக்கவே விரும்பினார்கள், அவளைப்போல் யானைப்பறவையையும் நண்பனாக்கிக்கொள்ளவேண்டும் என்று நினைத்தார்கள்.முனியாவின் கதை பல கிராமங்களுக்குப் பரவியது, யானைப்பறவையின் தோழியான அந்தத் தைரியமான பெண்ணை எல்லாரும் பாராட்டிப் புகழ்ந்தார்கள்.

யானைப்பறவை என்பது வெறும் கற்பனையல்ல. உண்மையிலேயே அப்படியொரு பறவை இருந்திருக்கிறது. அதன் அறிவியல் பெயர் ஏபியோர்னிஸ் மாக்ஸிமஸ். மடகாஸ்கர் தீவுகளில் வாழ்ந்த இந்தப் பறவைதான் உலகிலேயே மிகப்பெரியது!மடகாஸ்கரில் பல மக்கள் குடியேறத்தொடங்கியபோது, அங்கிருந்த காடுகள் அழிக்கப்பட்டன. அதனால், கிபி 1700வாக்கில் இந்தப் பறவைகள் முழுவதுமாக அழிந்துவிட்டன.