ஒருநாள், அவணி சமையலறை மேடையில் உட்கார்ந்தபடி, அம்மா சமைப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மா குக்கரில் எல்லாவற்றையும் போட்டு தயார் செய்துகொண்டிருந்தார்.“அவணி, அந்தப் பட்டாணியைக் கொடு” என்றார் அம்மா.
மேடையில் இருந்த காய்ந்த பட்டாணிக் கிண்னத்தை எடுத்து அம்மாவிடம் கொடுத்தாள் அவணி.
ஒரு பட்டாணி மட்டும் அதிலிருந்து கீழே விழுந்தது. அதை அம்மா, அவணி ரெண்டு பேருமே பார்க்கவில்லை.
அந்தப் பட்டாணி மேடையில் விழுந்து எம்பி, தரையில் விழுந்து, மேசைக்கு அடியே உருண்டு சென்றது.
பூனைக்குட்டி சிக்கி அதைப் பார்த்தது.
சிக்கி பட்டாணியைத் தொட்டுப் பார்த்தது, உருட்டியது, நக்கிப் பார்த்தது.
பட்டாணி உருண்டு சமையலறைக் கதவிடம் சென்றது.
சிக்கி அதை மறுபடி உருட்டியது. அதுவும் உருண்டு, உருண்டு... தோட்டத்துக்குப் போனது.
பட்டாணியைப் பார்த்த ஒரு மைனா அதைக் கொத்தியது. ஆனால் அது காய்ந்து இறுகியிருந்தது.
மறுபடியும் கொத்தியது மைனா. பட்டாணி சட்டெனப் பறந்துபோய் மண்ணில் விழுந்தது. அது விழுந்த இடத்துக்குப் பக்கத்தில் ஒரு தக்காளிச் செடி இருந்தது.
மண்ணுக்குள்ளிருந்து ஒரு மண்புழு எட்டிப் பார்த்தது. பட்டாணி அதுக்குப் பெரிசாக சுவாரசியமான பொருளாக படவில்லை. திரும்பி மண்ணுக்குள் புகுந்துகொண்டது. இப்போது மண்ணில் ஓட்டை உருவாகிவிட்டது.
பட்டாணி நழுவி ஓட்டையில் விழுந்தது. சுற்றியிருந்த மண் சரிந்து அதை மூடியது. ஈரமான, இருட்டான மண்ணுக்குள் அது பத்திரமாக இருந்தது.
நாட்கள் கழிந்தன. மழை வந்தது.
பட்டாணி நனைந்தது, மெல்ல உப்பியது. உப்பியது. இன்னும் உப்பியது.
அதற்கு ஒரு வால் முளைத்தது, தலையில் ஒரு கிரீடமும் முளைத்தது.
அந்த கிரீடம் வளர்ந்து மண்ணுக்கு வெளியே எட்டிப் பார்த்தது. பின் சூரியனை நோக்கி வளரத் தொடங்கியது.
கொஞ்சம் உயரமானது, இன்னும் கொஞ்சம். நிறைய உயரமாக வளர்ந்தது பட்டாணியின் கிரீடம்.
தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த அவணி அதை கவனித்தாள்.
“அம்மா இங்க பாரேன்” என்றாள்.
“பட்டாணிச் செடி!” என்றார் அம்மா.
இருவரும் பட்டாணிச் செடியை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
”நீதான் இத நட்டியா?” என்று அம்மா கேட்டார்.
“இல்லையே, நீ நடலையா?” என்று கேட்டாள் அவணி.
“அப்போ யார் நட்டது? யார் வேலை இது?” என இருவரும் வியந்தனர்.
ஆனால், உங்களுக்கும் எனக்கும் யார் நட்டதெனத் தெரியுமே!
செய்துபார்!
1 ஒரு பானையில் செடி வைத்து தினமும் தண்ணீர் ஊற்று
2 பானையை ஈரமான இருட்டான இடத்தில் வைத்தால் செடி வளர்கிறதா?
3 முளைகட்டிய பயறுகளும் விதைகளும் பெரும்பாலும் நம் உடல்நலனுக்கு நல்லது.உனக்கு எந்த பயறுகளை சாப்பிடப் பிடிக்கும்?