மாறனும் அவனுடைய நாய் வீரனும் மலை மேலுள்ள ஒரு கிராமத்திற்கு பாட்டியைப் பார்க்க சென்றார்கள்.
அவனிடம் பாட்டி "மாறா, சமீப காலமாக தோட்டத்திலிருந்து ஏதோ விநோதமான சத்தம் கேட்கிறது. அதனால் வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு விளையாடிக்கொண்டிராதே, பத்திரம்" என்று அக்கறையுடன் எச்சரித்தார்.
உடனே மாறன் தன்னுடைய துப்பறிவாளனுக்கான பையை எடுத்து அதிலிருந்து இருகண் நோக்கி (பைனாகுலர்) ஒன்றினை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றான்.எதற்காக என்று உங்களுக்கு தெரியுமா?
மாறன் தான் ஒரு துப்பறிவாளன் ஆயிற்றே, பாட்டி சொன்ன சத்தம் பற்றி கண்டுபிடிக்கவேண்டாமா, நீங்களே சொல்லுங்களேன்.தோட்டத்திலிருந்த ஒவ்வொரு மரம், செடி, கொடியினையும் மிகவும் கவனமாகப் பார்த்தான் ஏதாவது துப்பு கிடைக்குமா என.
அப்படித் தேடியதில் தோட்டத்தின் ஒரு மூலையில் ஒரு தேன்கூடு இருக்க கண்டான்.
உடனே மாறன் பாட்டியிடம் ஓடி வந்து, "பாட்டி, அந்த நாவல் மரத்தைச் சுற்றி எவ்வளவு தேனீக்கள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன தெரியுமா, அது தான் நீங்க கேட்ட சத்தம்" என்றான்.
"அப்படியா, ஆனாலும் ஆயிரம் தேனீக்கள் சேர்ந்து ரீங்காரமிட்டாலும் அவ்வளவு பெரிய சத்தமாக கேட்காதே கண்ணா" என்றாள். உடனே "இது யாரோ திருடனாகவோ... இல்லைனா பூதமாகவோ இருக்கும்" என்றாள் பாட்டி.
மாறன் ஒரு நீண்ட தடியினை எடுத்துக்கொண்டு தோட்டத்தை நோக்கி மீண்டும் நடந்தான்.
அவனுடன் கூடவே சென்ற வீரனும், அங்கிருந்த புல்தரையைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டு எதையோ முகர்ந்து மோப்பம் பிடித்தது.
"வீரா, உன் சேட்டையை நிறுத்து, புல்தரையை வீணாக்காதே" என்று கடிந்து கொண்டான் மாறன்.
ஆனாலும் வீரன் தன் வாலை ஆட்டிக்கொண்டு மீண்டும் வட்டமடித்தவாறே சுற்றிக்கொண்டிருந்தது.
ஆஹா! வீரன் எதையோ காட்டி குறிப்பு கொடுக்க முனைகிறான் என்றவாறே கீழே குனிந்து புல்தரையைப் பார்த்தான்.
அங்கு பெரிய பெரிய கால் தடங்கள் தெரிந்தன.
"இவையாவும் கரடியின் கால் தடங்கள்" என்றான்
"நல்லது வீரா, நீ கரடியை கண்டு பிடித்து விட்டாய், சபாஷ்!" என்றான்.
இருவரும் பாட்டியிடம் இவ்விசயத்தை பகிர்ந்து கொள்ள ஓடோடி வந்தனர்.
"
"அது திருடனோ கொள்ளைக்காரனோ பேயோ பூதமோ அல்ல" என்றான் மாறன்.
நாங்க கண்டு பிடித்துவிட்டோம், ஒரு கரடி தான் நம்ம தோட்டத்திற்கு வருது! கரடிக்கு தேனும் நாவல் பழங்களும் மிகவும் பிடிக்கும்!!