சக்குலாண்ட் மலையின் மீது மலை ஆடு ஊனா வசித்து வந்தாள்.
சக்குலாண்ட் ஒரு அற்புதமான நாடு. அது கடற்கரையிலிருந்து காடு வரைக்கும் பள்ளத்தாக்கிலிருந்து மலை வரைக்கும் பரவியிருந்தது.
அங்குள்ள விலங்குகள் சக்குலாண்டை நேசித்தன.
முயல்களுக்கும் மான்களுக்கும் வேண்டிய புல், பறவைகளுக்கும் கரடிகளுக்கும் உணவாக பூச்சிகள், முதலைகளுக்கும் காட்டுப் பூனைகளுக்கும் மீன் என்று எல்லாம் இருந்தன. எல்லோருக்கும் சுத்தமான, குளுமையான குடிநீர் கிடைத்தது.
ஊனா மலையின் உச்சியில் எல்லோருக்கும் மேலே வசித்து வந்தாள்.
பாறைகள் நிறைந்த மலை மீது ஏறி இறங்குவது, அதிக நேரம் பிடிக்கும் சிரமமான ஒரு வேலை. அதனால் ஊனா மற்ற விலங்குகளுடன் அதிக நேரம் செலவழித்ததில்லை. தனிமை பழகிவிட்டது. சொல்லப்போனால் அவளுக்கு தனிமை பிடித்திருந்தது. மனதுக்குப் பிடித்ததை வேண்டிய நேரத்தில் செய்துகொள்ள முடிந்தது.
மற்றவர்களின் செயல்கள் சிலசமயம் ஊனாவுக்கு வேடிக்கையாக இருந்தன. ’ஏன் எப்போதும் எல்லாவற்றையும் சேர்ந்தே செய்கிறார்கள்? தனியாக ஓடைக்குச் செல்ல முடியாதா? என்னால் முடியுமே’ என்று நினைத்தாள்.
எல்லா விலங்குகளுக்கும் அவரவர் செயல்களைச் செய்ய விருப்பமான வழிகள் இருந்தன. ஆனால் ஊனா தன் வழிதான் சிறந்தது என்று எண்ணினாள்.
மெதுவாக சக்குலாண்டின் பருவநிலை மாறத் தொடங்கியது. ஆனால் அது விலங்குகளின் கவனத்தை ஈர்க்கவில்லை.
எப்பொழுதும் சக்குலாண்டின் நீர்நிலைகளில் வருடத்தின் பெரும்பாலான பகுதியைக் கழிக்கும் திமிங்கலங்கள் ஒரு நாள் வேறொரு இடத்தில் வசிக்கப் போவதாகத் தெரிவித்தன.
“ஏன்? இங்கு நன்றாகத்தானே இருக்கிறது” என்று கேட்டன ஆமைகள்.
“இங்கு தண்ணீர் கொஞ்சம் சூடாக மாறிவிட்டது. இன்னும் வடக்குப்பக்கம் சென்றால் குளுமையான நீர் இருக்கும்” என்றன திமிங்கிலங்கள். திமிங்கிலங்களுக்கு குளிர்ந்த நீரில் வசிக்கப் பிடிக்கும். சக்குலாண்டின் தண்ணீர் இப்போது சூடாகிவிட்டது.
திமிங்கிலங்களின் அருமையான பாடல்களை ஆமைகளால் இனி கேட்கமுடியாது. ஆனால், அதைப்பற்றி ஆமைகள் அதிகம் கவலைப்படவில்லை.
“நமக்கு பிரச்சினை ஒன்றும் இல்லை” என்று நினைத்தன ஆமைகள். “ரொம்பத்தான்! சூடோ குளுமையோ நான் கவலைப்பட மாட்டேன். என்னை மாதிரி அவங்களும் இருக்கணும்” என தனக்குள் முணுமுணுத்தாள் ஊனா.
சில நாட்களில் எல்லோரும் திமிங்கிலங்களை மறந்து விட்டார்கள். ஆனால், ஒருநாள் ஆமைகளும் இடம்மாறத் தயாராகின.
"ஏன்? இங்கு நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாககத்தானே இருந்தீர்கள்?" என்று கேட்டன காட்டுப்பூனைகள்.
"இப்பொழுது எங்களுக்குத் தேவையான மணல் இங்கு இல்லை"என்றன ஆமைகள். அவை தங்கள் முட்டைகளை கடற்கரை மணலில் இட்டன.
"மணல் எல்லாம் எங்கே போச்சு?" என்று கேட்டன காட்டுப்பூனைகள்.
"முன்பெல்லாம் அந்த பெரியபாறை அளவுக்கு மணல்மேடுகள் இருந்தன. இப்போது அவை பெரியதாகவே தெரியவில்லை. ஏறக்குறைய தண்ணீரில் மூழ்கிவிட்டன" என்று சொல்லியது ஒரு பெரிய, வயதான ஆமை.
"பாவம்! ஆமைகளுக்கு கஷ்டம்தான். ஆனால், நமக்கு பிரச்சினை ஒன்றும் இல்லை" என்று நினைத்தன காட்டுப்பூனைகள்.
ஆமைகள் வெளியேறுவதை பார்த்துக்கொண்டிருந்தாள் ஊனா.
’மணல் எல்லாம் தண்ணீரில் மறைந்துவிட்டால், அதில் எனக்கென்ன பிரச்னை! எங்கே வசிப்பது என்பதை என்னைப் போல புத்திசாலித்தனமாக ஆமைகளும் யோசித்திருக்க வேண்டும்’ என நினைத்தாள்.
ஊனா சாப்பிட புல்லைத் தேடிச் சென்றாள்.
ஆமைகளின் விஷயத்தை மொத்தமாக மறந்துவிட்டாள்.
பின்னர், ஒருநாள் ஓடைநீரில் ருசியான மீன்களைப் பிடிக்க வழியில்லாமல் போய்விட்டது.
இப்பொழுது ஓடையில் நீர்ப்பெருக்கே இல்லை என்று காட்டுப்பூனைகளும் வெளியேறின.
"பாவம்! காட்டுப்பூனைகள். ஆனால் எனக்கு பிரச்சினை ஒன்றும் இல்லை!" என்று எண்ணியது மான். ஊனா
தண்ணீர் ஓடையைப் பார்த்தாள். "இந்த காட்டுப்பூனைகள் உறுதியானவைதான். ஆனால், என்னளவு அதிக உறுதியானவை இல்லை."
ஒருநாள் ஊனா ஒரு வினோதத்தைப் பார்த்தாள்.
ஒவ்வொரு வருடமும் மலையிலிருந்து பனி உருகி ஓடையை நிறைக்கும். இப்பொழுது பனி குறைந்திருந்தது.
"ஒருவேளை இன்று மட்டும் இப்படி இருக்கிறதோ!" என்று நினைத்தாள் ஊனா.
பின்னர், வினோதமான மிருகங்கள் சக்குலாண்டுக்கு வரத்தொடங்கின.
எல்லோரும் அங்கு வந்த பசுக்களுடன் நட்புடன் இருக்க முயன்றார்கள். ஆனால், அந்தப் புதிய பசுக்கள் இவர்களைக் கண்டுகொள்ளாமல் புல்லைக் கடித்து மென்று கொண்டிருந்தன. அவை எண்ணிக்கையில் அதிகமாக இருந்தன.
புல் குறையக்குறைய மான்களுக்கு வருத்தமாக இருந்தது. கொஞ்ச நாளில் மான்களும் சக்குலாண்டை விட்டு அவைகளுக்கு பிடித்த புல்லைத் தேடிக்கொண்டு சென்று விட்டன.
"ம்... ம்... நான் சிலசமயம் என்ன சாப்பிடுகிறேன் என்பதைப் பார்த்தால் இவர்களுக்கு புரியும். சிலசமயம் பாறையின் மேலுள்ள பாசியை நக்கவேண்டி உள்ளது. அதில் சுவையே இல்லை" என்று ஊனா நினைத்துக் கொண்டாள்.
சாப்பிட உணவோ குடிக்க நீரோ போதுமான அளவு இருக்கவில்லை. ஆனாலும், ஊனா மலையின் மீது எத்தனை நாள் முடியுமோ அதுவரை தங்கியிருந்தாள்.
கடைசியில் பசி, தாகத்துடன் சிரமமான மலைப்பாதையின் வழியே கீழே இறங்கினாள். வழியில் மலையில் கிடைத்த புல்லைச் சுவைத்தாள். ஆனால், அது ஊனாவுக்கு பிடித்த மாதிரி இல்லை.
பள்ளத்தாக்கில் ஒரு ஓடையைப் பார்த்தாள்.
ஆனால், அதில் இருந்த தண்ணீர் முன்பு குடித்த தண்ணீர் போல அத்தனை சுவையாக இல்லை.
விலங்குகள் எல்லாம் ஏன் வெளியேறின என்று இப்பொழுது ஊனாவுக்கு புரிந்தது. ஒவ்வொருவருக்கும் ஏற்ற நல்ல உணவும் அருகிலேயே குடிக்க தண்ணீரும் இருக்க வேண்டியது அவசியம்.
விலங்குகள், தங்களுக்குப் பிடித்தமான உணவு எளிதில் கிடைக்காததாலும், தாகமாக இருந்தபோது சுவையான நீரைத் தந்த ஓடையில் கலங்கிய நீர் குறைவாக வந்ததாலும், அவர்களுடைய வீடுகளான மரங்கள் வெட்டப்பட்டு அவற்றை மற்றவர்கள் வீடு கட்ட உபயோகித்ததாலும்தான் வெளியேறின என்பது ஊனாவுக்கு புரிந்தது.
ஊனாவும் அவளது நண்பர்களும், பருவநிலை மாற்றம் மற்றவர்களை பாதித்தபோது, ”எனக்கு பிரச்சினை ஒன்றும் இல்லை” என்று இருந்தார்கள். கடல்கள் சூடானபோது, திமிங்கலங்கள் குளிர்ந்த நீரை தேடிச் சென்றன. அப்போது ஆமைகளோ மான்களோ ஊனாவோ அதைப்பற்றி கவலைப் படவில்லை.
ஆனால் பிறகு ”நமக்கும் இது பிரச்சினைதான்” என்று ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.
நண்பர்கள் அருகில் இருப்பது நிச்சயம் தேவை என்ற அறிவு இப்பொழுது ஊனாவுக்கு வந்தது. மற்றவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க அவள் மனதில் உறுதி செய்து கொண்டாள்.
எனக்கு ஒன்றும் இல்லையேசக்குலாண்டில் வசிக்கும் ஊனாவும் அவளது நண்பர்களும் நம்மைப் போலவே பருவநிலை மாற்றத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. மனிதகுலம் அதிக அளவில் பைங்குடில்(Greenhouse) வாயுக்களை உருவாக்குகிறது.
நிலக்கரி மற்றும் எண்ணையிலிருந்து கரியமில வாயு வெளிவருகிறது. மரங்களை வெட்டும்போதும் கரியமில வாயு வெளிவருகிறது. பண்ணைகளில் வசிக்கும் பசுக்கள் ஏப்பம் விடும்போது மீதேன் வாயு வெளிவருகிறது. கார் மற்றும் பிற வாகனங்களிலிருந்து நைட்ரஸ் ஆக்ஸைடுகள் வெளிவருகின்றன.
இந்த பைங்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் சேர்ந்து பூமியை வெப்பமாக்கி, பருவநிலை மாறக் காரணமாகிறது. இவற்றால் வளிமண்டலத்தில் அதிக வெப்பம் சிக்கிக் கொள்வதால், துருவங்களில் உள்ள பனி உருகுகிறது. கடல் மட்டம் அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் வெப்பமாகவும் கோடைக்காலத்தில் குளிராகவும் வழக்கமான பருவமழை வராமலும் போகிறது. இவை அனைத்தின் பலனாக வானிலையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுதான் பருவ நிலைமாற்றம் என்பது.
இந்தப் பருவநிலை மாற்றத்தினால்... காடுகளில் மரங்கள் வெட்டப்படும்போது, அவை வளிமண்டலத்தில் அதிக கரியமில வாயுவை சேர்க்கின்றன. விலங்குகள் தங்கள் வீடான காட்டை இழந்து, உணவைத் தேடி வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. ஒழுங்கற்ற மழைப்பொழிவால் விவசாயிகள் சரியான முறையில் பயிர்செய்ய முடிவதில்லை. விதையை விதைத்த பின்னும் மழை வருவதில்லை. அதனால் பயிர் வளர்வதில்லை. மழை இல்லாததினாலோ அல்லது அதிக மழையாலோ பயிர்விளைச்சல் பாதிக்கப்பட்டு, மாம்பழங்களோ சாக்லேட்டோ கிடைக்காமல் போகும் நிலையை எண்ணிப் பாருங்கள். ஊகிக்க முடியாத வானிலை மனித குலத்தையும் பாதிக்கிறது. உதாரணமாக, புயல், வெள்ளம் அல்லது வறட்சியால் மக்கள் வீடுகளை இழக்கிறார்கள். வளிமண்டலத்தில் உள்ள மாசு நம் உடல்நலத்தை பாதிக்கிறது. அதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறோம். பருவநிலை மாற்றங்கள் மனிதர்கள், பூமி மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் பாதிக்கின்றன.